பரிசுத்தமான கல்யாணம்

சயகாமுராடா தமிழில் : கண்ணையன் தட்சிணாமூர்த்தி

பகிரு

வாஷிங் மெஷினின் சுழற்சிகளின் முடிவில் எழுந்த ‘பீப்’ ஒலிகளால் தூக்கம் கலைந்து, படுக்கையறையிலிருந்து வெளியே வந்தார் என் கணவர். “குட்மார்னிங்... சாரி, ரொம்ப நேரம் தூங்கிட்டேன், இனி நான் பார்த்துக்கறேன்”.

வாரக்கடைசியில் துணிகளை வெளுப்பது அவருடைய வேலை. வங்கியில் நேரம் கடந்து வேலைசெய்துவிட்டுக் கடைசி ரயிலில் அவர் வீடு திரும்பியிருந்ததால், அன்று அந்த வேலையை நானே செய்து விடுவதென்று தீர்மானித்திருந்தேன்.

“பரவாயில்லை, நானே பார்த்துக்கிறேன்” என்றேன்.

“உங்களோட பச்சைக்கலர் சட்டையைத் துவைச்சிட்டேனே, அதைப் பொருட்படுத்த மாட்டீங்கதானே?”

“ நிச்சயமா நன்றிதான் சொல்வேன் ”

துவைத்த துணிகளைப் பால்கனியில் நான் உலர்த்திக்கொண்டிருந்தபோதே, பாத்ரூமில் தனது வேலைகளை முடித்துவிட்டு, உடுத்திக்கொண்டும் விட்டார். டோஸ்டரில் பிரட்டை வைத்துவிட்டு, சாப்பாட்டு மேஜையைத் துடைத்து, காலைச் சிற்றுண்டிக்காக அமர்ந்தார். என்னுடைய கணவருடன் வாழ்வதென்பது, ரொம்பவும் சுத்தமான ஓர் ஆந்தையுடன் வாழ்வதைப்போன்றது. சுத்தமான பிராணி வீட்டில் இருப்பது நல்லதுதானே! எங்களுடைய மூன்றாண்டுகாலக் கல்யாண பந்தத்தில் அது மாறவேயில்லை. நான் கல்யாணம் செய்துகொண்ட அதே காலகட்டத்தில், காதலித்துக் கல்யாணம் செய்துகொண்ட தோழி ஒருத்தி, தன் கணவன் மீது முகாந்திரமற்ற வெறுப்பு ஏற்பட்டுவிட்டதாகக் கூறுகிறாள். என் கணவர் சாப்பாட்டு மேஜையில் நாசுக்காக இருப்பார். டாய்லெட்டிலோ, பாத்ரூமிலோ உடல் திரவங்களையோ, கழிவுகளையோ வெளியேற்றிய அடையாளங்களை ஒருபோதும் அவர் விட்டு வைத்ததில்லை. வீட்டு வேலைகளை எங்களுக்குள் பகுத்துக்கொண்டபோது, சுத்தப்படுத்தும் வேலைகளை அவருக்கு ஒதுக்கியிருக்கக் கூடாதோ என்று சில சமயங்களில் நினைத்துக்கொள்வேன்.

துவைக்கிற வேலை முடிந்தபிறகு இதைப்பற்றி அவரிடம் சொல்லிவிட்டுச்சிரித்தேன்.

“ரூம்பா1 மாதிரி இருக்கிறேன் என்கிறாய்?”

“ஆனா, மிஸுகி, நீ ஒரு முயல் மாதிரியோ, இல்லாட்டி அணில்மாதிரியோ, சாந்தமா இருக்கிறாய்; சின்னச் சத்தம் கேட்டாலும் திடுக்கிட்டுப் போகிறாய். ஆனாலும் துள்ளிக்குதிச்சு என்மேல விழுந்தது கிடையாது. எப்பவுமே நீ நிதானத்தை இழந்ததும் கிடையாது”.

“அணில்கள் எப்பவுமே நிதானத்தை இழக்கிறது இல்லையா? அவை அப்படி இருக்கும்ன்னு நான் நினைக்கவில்லை. ஆனா நீயும் நானும் பரிசுத்தமான பிராணிகள், பரஸ்பரம் மத்தவங்க விஷயத்தில மூக்கை நுழைக்கிறது இல்லை. அது நல்ல விஷயம்தானே?”

நிச்சயமாக அது நல்ல விஷயம்தான். ஆனாலும் டாய்லட் பேப்பர்ரோல் காலியாகிறதுக்கு முன்பாகவே புதுரோல் வைக்கிறது, கழுவவேண்டிய பாத்திரங்களை எண்ணெய் பிசுக்கு தராதாரப்படி தனித்தனியா நான் விரும்புவது மாதிரி பிரித்து வைக்காமல் அவற்றின் வடிவத்திற்கு ஏற்றவாறு அவர் பிரித்து வைப்பது போன்ற சின்னச்சின்ன விஷயங்களில் அவரிடம் எனக்கு மனக்குறை உண்டு. ஆனால் அவற்றால் எனக்குக் கவலை ஏற்படாதபடிக்கு எங்களிடையே உகந்த இடைவெளியும் இருந்தது. வாழ்க்கைத்துணை ஏற்படுத்தித் தரும் இணையதளம் மூலமாகத்தான் நாங்கள் சந்தித்தோம்.

‘அன்பான குடும்பத்தை உருவாக்க விரும்புகிறேன்’ அல்லது ‘நிறையக் குழந்தைகள் பெற விரும்புகிறேன்’ என்பது போன்று ஆண்கள் தெரிவித்திருந்த லட்சியக்கல்யாணக் காரணப் பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தபோது, ‘பரிசுத்தமான கல்யாணத்தைத் தேடுகிறேன்’ என்ற வாசகம் கண்ணில் பட்டது. அதைக் குறிப்பிட்டிருந்த ஆடவனின் விவரக்குறிப்புகளை ஆராய்ந்தபோது, ‘தினப்படி காரியங்களைச் செய்துகொண்டு, இணக்கமாக வாழக்கூடிய ஒருவரை, கலவிக்கு அடிமையாகாமல் சகோதர – சகோதரி போலச்சேர்ந்து வாழக்கூடிய ஒருவரைத் தேடுகிறேன்’ என்று கண்டேன். எனக்கு ஆர்வம் மேலிட்டது.

1 வீடுகளில் பயன்படும் சுத்தப்படுத்தும் ரோபோ. தன்னுடைய கழிவுகளையும் தானே சுத்தப்படுத்திக்கொள்ளும் வசதி கொண்டது.

செய்திகளைப் பரிமாறிக்கொண்டபிறகு, கடைசியாக நேரில் சந்திக்க முடிவெடுத்தோம். அவருடைய வெள்ளி பிரேமிட்ட கண்ணாடி, அவரைப் பதட்டப்படுகிறவராய்க் காட்டியது. ‘பரிசுத்தமான கல்யாணம்’ என்பது ‘எப்போதும் சுத்தத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பதோ’ என்று நான் நினைத்தேன். நாங்கள் பேச்சை ஆரம்பித்த பிறகுதான், ‘பரிசுத்தம்’ என்பது முற்றிலும் வேறான விஷயம் என்று புரிந்துகொண்டேன்.

“குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கணும்னு நினைக்கிறேன். ஒரே அறையில் தங்கியிருக்கும் சக அறைவாசிக்கு வழங்கும் சுதந்திர வெளியைப்போல, அல்லது, பெற்றோர்கள் வெளியே சென்றிருக்கும்போது, பிரியமான இளைய சகோதரியுடன் இணக்கமாக இருப்பது போல வாழவேண்டும்.”

“ஓ! நீங்கள் சொல்வது புரிகிறது”

“சொல்லப்போனால், சிருங்காரப் பிணைப்புகளின் நீட்சிதான் குடும்பம் என்ற அபிப்ராயமே எனக்கு அசௌகரியமாக இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல் உணர்வுக்கும் குடும்பம் என்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்கக்கூடாது. குடும்பம் என்பது சாதாரணமாகக் கூட்டு வாழ்க்கை”.

“எனக்குச் சம்மதம்” என்றேன். “பல ஆண்களோடு நான் வாழ்ந்திருக்கிறேன் என்றாலும், பிளவு ஏற்படுவதற்கு எப்போதுமே ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. நாங்கள் குடும்பமாக இருந்திருக்க வேண்டும்; ஆனால் அவர்களோ நான் பெண்மணியாகவும், புரிந்துகொள்ளும் தோழியாகவும் இருக்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். அது முரணாக இருக்கிறதல்லவா? நான் மனைவியாக, தோழியாக, தாயாக இருக்கவேண்டும்… அதைவிடச் சகோதர சகோதரியாக வாழ்ந்து விடுகிறேனே!”

“அதுதான், அதைத்தான் நான் சொன்னேன். ஆனால் யாருமே புரிந்து கொள்ளவில்லை - வாழ்க்கைத் துணை ஏற்படுத்தித் தரும் இந்த இணையதளம் கூட. ஆணுக்கு வருமானம் என்ன, பெண்ணுக்கு எதைச் சமைக்கப் பிடிக்கிறது, என்றெல்லாம் கேட்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அதெல்லாம் குடும்பம் ஆகாது. எனக்கு ஒரு பங்காளி தேவை. ஆண் பெண் சமாச்சாரங்கள் அல்ல.”

உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதால் வியர்த்துபோன அவர், நீலக்கோடு போட்ட கைக்குட்டையை எடுத்து நெற்றியைத் துடைத்துக்கொண்டார். பிறகு ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரே மடக்கில் குடித்துவிட்டுப் பெருமூச்சு விட்டார்.

“நான் என்ன நினைக்கிறேன் என்று நீ புரிந்துகொண்டிருப்பது சந்தோஷம். ஆனால், அது சற்றுக் கற்பிதம் போலத் தெரியலாம்...”

“அதெல்லாம் இல்லை. முயற்சித்துப் பார்க்காதவரை நமக்கு எதுவும் தெரியாதே”

“அப்படியா?”

மீண்டும் தண்ணீரைக் குடித்துவிட்டு, கண்ணாடியை மூக்குக்கு மேலே ஏற்றிக்கொண்டார். நேராக அவருடைய கண்களைப் பார்த்துக் கேட்டேன்:

“என்னோடு கலவி இல்லாத கல்யாண வாழ்க்கைக்கு நீ தயாரா?”.

“நாம கிளினிக்குக்குப் போகணுமில்லையா?” பிரட் டோஸ்ட்டைத்தின்று கொண்டே படித்துக்கொண்டிருந்த பேப்பருக்கு மேலே தலையைத் தூக்கிக் கேட்டார் என் கணவர்.

“ஆங்... அந்தக் கிளினிக்...”

“உனக்கு ஏற்கனவே முப்பத்தி மூணு வயசு ஆயிடுச்சு மிஸூகி. இப்பவாவது நீ ஒரு கருமுட்டையை உயிர்ப்பிக்கணும்”.

“ஆமாம், அது சரிதான்” என்னுடைய தேநீர்க்கோப்பையில் மிதந்துகொண்டிருந்த எலுமிச்சைத் துண்டை உற்றுப் பார்த்தபடியே தலையை ஆட்டினேன். நானும் அதைப் பற்றித் தான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

“இப்ப ஆபீஸ் வேலை நெருக்கடி குறைஞ்சிட்டது. இதுதான் சரியான நேரம்னு நினைக்கிறேன்”

“அடுத்த வாரம் அப்பாய்ண்மெண்ட் வாங்கிடட்டுமா?”

“ஒரு நிமிஷம் பொறுங்க. நான் இப்பவும் மாத்திரை எடுத்துக்கிட்டு இருக்கிறேன். நாளைக்கே நான் அதை நிறுத்திட்டாலும் கருமுட்டையை உருவாக்குவதற்கு என் உடம்புக்கு சில நாள் தேவைப்படலாம்”.

“ஓ, அப்படின்னா, அடுத்தவாரம் சரியா இருக்காது” என்றபோது, விவரிக்கமுடியாத அசௌகரிய தோரணையில் இருந்தார்.

“முதல் தடவை போனதுமே கருமுட்டையை உயிர்ப்பிக்கும் காரியத்தைச் செய்துவிடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

உனக்குச் சில டெஸ்ட்கள் எடுக்கவேண்டியிருக்கலாம். உனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதும் அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடலாமா?”

“ஓ. கே”

மாத்திரை எடுப்பதை நிறுத்தும்போது பொதுவாக எனக்கு இரண்டு மூன்று நாட்கள் ரத்தப்போக்கு இருக்கும். வழக்கமான மாதவிலக்கின்போது இருப்பதைவிடக் குறைவாகவே கசிவு இருக்கும். இதை என் கணவரிடம் எடுத்துரைத்த பின்னர், இரண்டு வாரம் கழித்து வரும் சனிக்கிழமையில் அப்பாய்ண்ட்மெண்ட் பெறத் தீர்மானித்தோம். பாலுறவு இல்லாத கல்யாண பந்தம் என்பது நான் நினைத்திருந்ததைவிட மிகவும் சௌகரியமாக இருந்தது. நான் ஆண்டுக்கு 40 லட்சம் யென் சம்பளம் பெற்றேன். என் கணவருக்கு 50 லட்சம் யென்.

இருவரும் மாதந்தோறும் தலா ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் யென் வீட்டுச் செலவுக்கான கணக்கில் செலுத்திவிட்டு, எஞ்சியதை தனித்தனியாக அவரவர் வங்கிக் கணக்கில் வைத்துக்கொண்டோம், இந்த மூன்று லட்சம் யென் எங்கள் வாழ்க்கைச் செலவுக்குச் சரியாக இருந்தது. இருவரும் கூட்டாகச் சேர்ந்து வீடோ அல்லது வேறு சொத்துக்களையோ வாங்குவதில்லை என்றும் முடிவு செய்திருந்தோம். வீட்டுச் செலவுக்குச் சம அளவில் பணம் தந்ததால், வீட்டு வேலைகளையும் பிரித்துக்கொண்டோம்.

பணத்தைச் சமமாகப் பிரித்தது போல் வீட்டுவேலைகளைச் சரிசமமாகப் பிரிக்க முடியவில்லை. எனினும், என் கணவர் நன்றாகச் சமைக்கிறவராதலால், அதை அவர் பார்த்துக்கொள்ள, துணி வெளுப்பதையும், சுத்தம் செய்கிறவேலையையும் நான் எடுத்துக்கொண்டேன். வார நாட்களில் இருவருக்குமே பணியிடத்தில் காலந்தாழ்ந்ததால், இரவு உணவு அவரவர் பொறுப்பு. இந்த ஏற்பாட்டால் எனக்கு வீட்டு வேலைச்சுமை அதிகம் என்பதால், வாரக்கடைசி நாள்களில் துணி வெளுக்கும் வேலையை அவர் ஏற்றுக்கொண்டார். இந்த அளவுக்கு எல்லாம் சுலபமாக இருந்தது. பாலுறவு விஷயங்களில்தான் சிரமம். வீட்டில் எந்தவிதமான பாலுறவு நடவடிக்கைகளும் கூடாது என்பது கணவருடைய விருப்பம். எனக்கும் அதில் உடன்பாடுதான்.

“என்னைப் பொறுத்தவரையில் செக்ஸ் என்பது நீ தனியாக, உன் அறையில், அல்லது வெளியிடத்தில் ஈடு படவேண்டிய ஒன்று. சில வீடுகளில், வேலைக்குப் போய்க் களைத்துத் திரும்பும் தம்பதிகள், சேர்ந்து செக்ஸில் ஈடுபடுகிறார்கள். அது எனக்குச் சுத்தமாகப் பிடிக்காது” என்றார் அவர்.

“எனக்கும்தான்” என்றேன் நான். “காதலிக்கிற ஆரம்ப காலகட்டத்தில் செக்ஸ் நல்ல விஷயம்தான். ஆனால், அதெல்லாம் கடந்து ஒரே வீட்டில் சேர்ந்து வாழுறபோது, நாம தூங்கிக்கிட்டு இருக்கும்போது நமது பார்ட்னருக்கு மோகம் வந்துட்டாலும் அல்லது நாம ஓய்வெடுத்துக்கிட்டு இருக்கும்போது பார்ட்னர் நம்ம மேல் வந்து விழுந்தாலும் செக்ஸ் பயங்கரமான விஷயமாயிடும். என்னுடைய செக்ஸ் அபிலாஷைகளை எனக்குப் பிடித்தமான தருணங்களில் எழுப்பிவிடவோ, முடக்கிப் போடவோ என்னால முடியனும்னு விரும்பறேன். வீட்டுக்குள்ள சுத்தமா முடக்கிப் போடுவேன்”.

“அதேதான் நானும் நினைக்கிறேன். நான் மட்டும் இயல்புமீறியவனாக இல்லை என்று தெரிகிறபோது எனக்கு ஆசுவாசமாக இருக்கிறது”. அவ்வாறாக, ஆரம்பத்தில் இருந்தே கலவியற்ற, பாலுறவற்ற கல்யாணபந்தமாக இருந்து வந்தது. ஆனால், இருவருக்குமே அசௌகரியமான வகையில் இப்போது குழந்தை வேண்டியிருக்கிறது. கல்யாணம் செய்து கொள்ளும்முன் குழந்தை வேண்டும் என்கிற ஓர்பால் உறவினர், பாலுறவின்றிக் கருவுற விரும்புகிறவர்கள், செயற்கைக் கருத்தரித்தலுக்குச் செலவழிக்க முடியாதவர்கள் போன்றோர் அணுகும் பாலியல் கிளினிக் ஒன்றை இருவரும் சேர்ந்து இணைய வெளியில் தேடிக் கண்டுபிடித்தோம். தொலைபேசியில் பேசியவள், “குழந்தை வேணும் என்று நீங்கள் முடிவெடுத்தால், எங்களை வந்து பாருங்கள்; உங்களுக்கு உதவுவதில் எங்களுக்குச் சந்தோஷமே” என்றாள்.

“ம், ஆனால் நாங்கள் பாலுறவு கொள்ளாத தம்பதியர்...”

“அது ஒன்றும் பிரச்சினையில்லை. உங்களைப் போன்ற பலருக்கு இங்கே நாங்கள் சிகிச்சை அளித்திருக்கிறோம். வழக்கத்திற்கு மாறான சகலவிதமான விருப்பங்களும் சந்தர்ப்பங்களும் கொண்ட, தம்பதியர் எங்களிடம் வருகிறார்கள். அம்மாதிரியானவர்களுக்குச் செக்ஸையே ஒரு மருத்துவச் சிகிச்சையாக நாங்கள் அளிக்கிறோம்”.

செக்ஸையே மருத்துவச் சிகிச்சையாக அளிப்பதென்றால் என்னவென்று எங்களுக்குப் புரியவில்லை. இருந்தாலும், எங்களுக்கும் குழந்தை பெறுவதற்கு வேறுவழிகள் இருப்பதை அறிந்து நிம்மதி அடைந்தோம். டோஸ்டை தின்று முடித்த என் கண்வர் வீடியோ கேம் ஒன்றை ஆடத் தொடங்கினார். அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காகக் கிளினிக்கின் எண்ணை சுழற்றிக்கொண்டே அந்த ஆட்டத்தில் அவரது முன்னேற்றத்தைக் கவனித்தேன்.

பிரத்யேகமான அயோமா ஏரியாவில், சகலவிதமான நவீன வசதிகளுடன் ஒரு வெள்ளைக் கட்டடத்தில் கிளினிக் இருந்தது. காத்திருப்போர் கூடத்தில் சொகுசான மெத்தென்ற நாற்காலிகள் வரிசையாகக் கிடக்க, பின்னணியில் இதமான இசை தவழ்ந்தது. எங்களைத் தவிர, வேறொரு பெண்மணியும் அங்கிருந்தாள். ரிசப்ஷனிஸ்டிடம் மருத்துவக் குறிப்புகளைப் பெற்றுக்கொண்டு அவளும் போய் விட்டாள்.

“மிஸ்டர் அண்ட் மிஸஸ் தகஹாஷி, வாங்க” என்று ரிசப்ஷனிஸ்ட் அறிவித்ததும், குட்டையான தலைமுடியுடன் இருந்த பெண்மருத்துவரிடம் எங்களை அனுப்பினார்கள்.

“பரிசுத்தமான கருத்தரிப்பு சிகிச்சைக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருக்கிறீங்க, இல்லியா?”

“எக்ஸ்க்யூஸ் மீ, என்ன சொல்றீங்க?”

“அதாவது எங்களுடையது பரிசுத்தமான கருத்தரிப்புச் சிகிச்சை. சிகிச்சை முறையின் பெயரிலேயே இருப்பது போலவே மிகமிகப் பரிசுத்தமான முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள வழிசெய்வோம். நாங்கள் தருகிற செக்ஸ் மருத்துவச் சிகிச்சையின் நோக்கம் புலன் இன்பம் தருவது அல்ல.”

“ஓ!”

நாங்கள் நிரப்பித் தந்திருந்த மருத்துவக் கேள்வி நிரல் படிவத்தை மேலோட்டமாகப் பார்த்துக்கொண்டே அந்த டாக்டர் பலமுறை தலையை மேலும் கீழுமாக ஆட்டிக்கொண்டார்.

“ஓ. கே,

ஓ.கே, எனக்குப் புரியுது... ‘கல்யாணத்திற்குப் பிறகு எத்தனை நாளைக்கு ஒரு தடவை கலவி, பூஜ்யம்’.  ‘பரிசுத்தமான கருத்தரிப்புச் சிகிச்சையில் ஆர்வம் காட்டக் காரணம். எங்களுக்குக் குழந்தை வேண்டும்’. அதுக்காகத்தான் இன்னைக்கு வந்திருக்கீங்க, சரிதானே?”

“ஆனா நாங்க இன்னும் முடிவுபண்ணல... அதாவது, பரிசுத்தமான கருவுறும் சிகிச்சை என்றால் என்ன என்றோ, அல்லது அந்தச் சிகிச்சை எப்படிச் செய்யப்படும் என்றோ எங்களுக்குத் தெரியவில்லை. தயவு செஞ்சு அதைப்பத்தி நீங்களே விளக்கமா சொல்லிடுங்களேன்” என்றார் என் கணவர்.

கால்மேல் கால் போட்டவாறே டாக்டர் தலையை அசைத்தார்.

“எங்களோட இணையதளத்தின் முகப்புப் பக்கத்திலேயே அதைப்பற்றி எல்லா விவரமும் கொடுத்திருக்கிறோம். ஆனாலும் உங்களுக்காகத் திரும்பவும் சொல்றேன்”.

“இப்ப எல்லாம் தங்களோட பார்ட்னருடன் செக்ஸ் வச்சுக்க முடியாதபடியான மன நலப் பிரச்சினைகள் பல பேருக்கு ஏற்படுது. செக்ஸ் அனுபவத்தை நல்லபடியா தர்ற நபரோட குடும்பம் நடத்த முடியறது இல்லை. நல்லவிதமா குடும்பம் நடத்த முடியிற நபரோடு சிறப்பா செக்ஸ் வச்சுக்க முடிய மாட்டேங்குது. ஒரு குடும்பத்தை ஆரம்பிக்கறதுக்கு வேண்டிய வழக்கமான காரணங்கள் மிகச்சரியாக இருக்கிற நபரோடு செக்ஸ் வச்சிக்கிறதுக்கு, உணர்ச்சிகள் பீறிட்டுக் கிளம்புவது இல்லை… குழந்தை கருக்கொள்ளனும்னா தம்பதிகள் கலவியில் ஈடுபடனும்கிற பழமைச் சிந்தனை வழக்கொழிந்து போய்விட்டது. கால மாற்றத்திற்கு ஏற்றமாதிரி அந்தச்சிந்தனை மாறாமலேயே இருக்கிறது. இன்ப நுகர்ச்சிக்காகக் கலவி என்பதும், தாய்மை அடைவதற்காகக்கலவி என்பதும் முற்றிலும் வேறுவேறான விஷயங்கள். இரண்டையும் சேர்த்துக் குழப்பிக் கொள்வது முட்டாள்தனம்.” இப்படிச் சொல்லிவிட்டு ‘பரிசுத்தமான கருத்தரிப்பும் புதிய குடும்ப அடையாளமும்’ என்ற தலைப்பிட்ட கையேட்டினை எங்கள் இருவரிடமும் தந்தார் அந்த டாக்டர்.

“கலவிக்கு இணக்கமா அனுசரித்துக்கொள்வதென்பது இப்பொழுது பலவிதமாக மாறிவிட்டது,” டாக்டர் தொடர்ந்தார்.

“இளம்பெண்களைப் பார்த்து ஈர்க்கப்படுகிற ஆடவனுக்கு, முப்பத்தைந்து வயதான மனைவியை நெருங்கும்போது குறி விறைக்குமா? இருபரிமாண ஆடவர்களால் காமம் கிளர்ந்து எழப்பெறுகிற பெண், முப்பரிமாண ஆணுடன் வலியில்லாமல் கலவியில் ஈடுபடமுடியுமா? இப்போதெல்லாம்,  பார்ட்னர் என்பவர் செக்ஸ் கர்த்தாவாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.

இதுதான் அதிஅற்புதமான முன்னேற்றம். அதாவது, பிறப்புறுப்புகளின் வழி சிந்திக்காமல், மூளையின் வழிச் சிந்திக்கும் பகுத்தறிவினால் குடும்பத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும். எங்களிடம் வரும் தம்பதிகள் எங்களுடைய நிபுணர்களின் சேவையைப் பெற்று தமது உயர்தரமான ஜீன்களை, பரிசுத்தமான கருவுறும் சிகிச்சைமூலம் அடுத்தத் தலைமுறைக்கு வழங்கமுடியும்...”

டாக்டர் நீட்டி முழக்கிக்கொண்டிருந்தபோதே, கையேட்டின் பக்கங்களைப் புரட்டினேன். ‘புதிய தலைமுறை தம்பதியர்’, ‘அருள் நிறைந்த, காமசுகம் அற்ற எமது அதி நவீன தொழில்நுட்பம்’ என்பதான எண்ணற்ற சொற்றொடர்கள் அதில் நிரம்பியிருந்தன.

“கேள்விநிரல் படிவத்தில் நீங்க சொல்லியிருக்கிறதைப் பார்க்கும்போது, கல்யாண பந்தத்திற்கு முந்தியே செக்ஸ் வேறு, கல்யாணம் வேறுன்னு முடிவு பண்ணிட்டீங்கன்னு தெரியுது. அதுவே அற்புதமான விஷயம். அதைத்தான் நாங்களும் அதிநவீன கல்யாணம் என்கிறோம்”.

“அது ஒண்ணும் அவ்வளவு விஷேசமானது அல்ல”,

அந்த டாக்டரைப் போன்ற பெண்களை எனக்கு நிஜமாகவே பிடிக்காததால், எனக்கு அசௌகரியமாகப் படவே, என் கணவரை ஏறிட்டேன். அலுப்புத்தட்டிப்போன அவரும், டாக்டர் தன் விரல்களில் சுழற்றிக்கொண்டிருந்த பால் பாய்ண்ட் பேனாவை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.

“எங்களுடைய பரிசுத்தமான கருவுறுத்தும் நவீன சிகிச்சைமுறை உங்களைப் போன்ற தம்பதியருக்கு மிகவும் ஏற்றது. ஆனால் இந்தச் சிகிச்சைக்கு தேசிய இன்ஷ்யூரன்ஸ் வசதி கிடையாது. ஒரு தடவை சிகிச்சைக்கு 9500 யென் கட்டணம். மிஸஸ் தகஹாஷி, உங்களுடைய சாதாரணமான உடல் வெப்பநிலையைத் தொடர்ந்து நீங்க கவனிச்சு வரணும். கருமுட்டை வெளிப்படுற சமயத்தில சிகிச்சை பண்ணுவோம். பல தடவைகள் சிகிச்சை செஞ்சும் நீங்க கருவுறவில்லை என்றால், செயற்கைக் கருத்தரிப்பு பற்றி ஆலோசனை சொல்லுவோம். நீங்க இன்னும் இளமையாக இருக்கிறதனால, பரிசுத்தமான கருவுறல் சிகிச்சையிலேயே உங்களுக்குப் பலன் கிடைச்சிடும்.

செயற்கைக் கருத்தரிப்பு வேண்டியிருக்காது. ஆனாலும், சிகிச்சையை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நீங்க விருப்பப்பட்டா, உங்களுடைய கருவுறும் வாய்ப்புகள் பற்றியும் ஒரு டெஸ்ட் பண்ணிடலாம்”.

“ஏகப்பட்ட பணம் செலவாகும் போல இருக்கே”, ஆயாசப்பட்டார் என் கணவர். டாக்டர் அவரைப்பார்த்துப் புன்னகைத்தார்.

“மிஸ்டர் தகஹாஷி, இன்றைக்கு இருப்பதிலேயே மிகமிக நவீனமான சிகிச்சை முறை எங்களுடையது. ஜப்பானிலேயே மிகச்சில மருத்துவமனைகளில் தான் இந்த வசதி இருக்கிறது. எங்களால் ஈடு கொடுக்கமுடியாதபடி அநேகம் பேர் இந்தச் சிகிச்சையைத் தேடி வருகிறார்கள். டொடாரி நகரத்தில் இருந்து இதற்காகவே நேற்று வந்த ஒரு தம்பதி, எங்களது சிகிச்சையைப் பற்றித் தெரிந்ததும் எவ்வளவு சந்தோஷப்பட்டார்கள் தெரியுமா? நீங்க உங்களோட முதல் அப்பாய்ண்ட்மெண்டை எப்பொழுது வச்சுக்கிறீங்க? நீங்க விருப்பப்பட்டா இப்பவே ஆரம்பிச்சுடலாம், அப்படி ஆரம்பிக்கிறதுன்னா, அந்தக் காரியம் நடக்கிறபோது எந்த இசையைத் தவழவிடணும்னு நீங்க தெரிவு செய்யனும். பொதுவா, கருமுட்டை வெளியாகிறதை உங்க உடல் உஷ்ணம் காட்டுறபோது அதைச் செய்வோம். ஆனாலும் மற்ற நாள்களிலும் கூடக் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கு…”

“ஆலோசனைக்காகத்தான் இன்னைக்கு வந்தோம்”, விஷயம் மேலே போவதற்கு முன்பாக நான் இடைமறித்தேன்.

“என் கணவரோடு பேசிவிட்டுச் சொல்கிறேன்”. மெல்லச் சிரித்துக்கொண்டே டாக்டர் தலையசைத்தார்.

“சரி, நல்லாப் பேசி முடிவு பண்ணுங்க. ஆனா ஒண்ணுமட்டும் ஞாபகத்தில வச்சுக்குங்க. பரிசுத்தமான கருவுறுத்தும் சிகிச்சையை ரொம்பபேர் நாடி வருவதனால். உங்களுக்குக் கருமுட்டை வெளிப்படுகிற தினத்தில் அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்காம போயிடலாம். தற்சமயம் எல்லாம் நார்மலா இருக்குது. அதனால சீக்கிரமா முடிவு பண்ணிடுங்க”.

“புரியுது டாக்டர், நாங்க பேசிட்டு திரும்பவும் வர்றோம்” முகத்தில் எரிச்சல் படர என் கணவர் எழுந்துகொண்டார். மருத்துவரின் ஆலோசனை அறையிலிருந்து துரிதமாக அவரைப் பின் தொடர்ந்தேன். அயோமா ஏரியா எங்களுக்குப் பரிச்சயம் இல்லாததினால், கிளினிக்கில் இருந்து வெளியே வந்ததும், ஓமோடேசாண்டோவை நோக்கி நடந்தோம். எதிர்பட்ட முதலாவது கபேக்குள் சென்றோம்.

“உங்களுக்கு என்ன வேணும்?” சூடான பால் காபி குடிக்கிற வழக்கமுள்ள என் கணவரைப் பார்த்துக்கேட்டேன்.

“எல்லாமே ஏதோ ஏமாத்து வேலை மாதிரி இருக்குது இல்லியா?” முகம் சுளித்தவாறே அவர் பதில் சொன்னார்.

“பரிசுத்தமான கருவுறுத்தும் சிகிச்சை அது செயற்கைக் கருத்தரிப்பு முறையாக இருக்க முடியாது. நாமே அதைச் செஞ்சுக்கலாம் போலத் தெரியுதே!”

“எனக்கும் அதுதான் யோசனையா இருக்கு” ஆள்காட்டிவிரலால் தேநீர்க் கோப்பையை மெல்லத்தட்டிக்கொண்டே பெருமூச்சு விட்டேன்.

“ நாம என்ன பண்ணலாம்?”

“என்ன சொல்ற?”

“நமக்குக் குழந்தை... நாமே பண்ணிக்கிட்டா? நம்ம ரெண்டுபேரும் வீட்ல?” நான் பேசிமுடிப்பதற்குள்ளாகவே என் மீது ஓர் எதிர்ப்பு அலைமோதியது. தலையை நிமிர்த்தாமலேயே, எங்கள் இருவருக்கும் நடுவே இடைவெளியை அதிகப்படுத்தும்விதமாக என்னுடைய நாற்காலியில் சாய்ந்து கொண்டேன்.

“ம்ஹும்... நான் மாட்டேன்”

என் கணவரும் அதே மாதிரிதான் நினைத்திருக்கிறார் என்பது, மேஜைக்குக் கீழே நான் பார்த்தபோது அவசரமாகத் தனது கால்களை உள்ளிழுத்துக்கொண்டு பார்வையில் படாதபடி வைத்துக்கொண்டதில் இருந்து தெரிந்தது. எதிர்ப்பு அலையை அவரும் எதிர்கொண்ட இந்த அடையாளத்தினால் மனம் திடப்பட்டு அவரை ஏறிட்டபோது முகத்தைச் சுளித்தார்.

“செயற்கைக் கருத்தரிப்பு சிரமமா இருக்கலாம்”,  என்று சொன்னவர், “அதை முயற்சி பண்ணி பார்க்கலாம். கலவியில் ஈடுபடாத தம்பதிகள் அதைத்தான் செய்கிறார்கள். புரிந்துகொள்கிற டாக்டர்கள் அங்கே இருக்கலாம். 9500 யென் செலவாகும்னு யோசிச்சா, அந்த வழியைத்தான் பார்க்கணும்” என்றார்.

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்”. ஒரு வழியாக, காபிக் கோப்பையிலிருந்து தன் கண்களை உயர்த்தியவர், ஜன்னலுக்கு வெளியே பார்வையை விட்டார். தன் நாயை நடத்திக்கொண்டிருந்த பெண், கடிகாரங்களைச் சரி பார்த்துக்கொண்டு அலுவலுக்கு விரைந்து கொண்டிருந்தவர்கள், கைபேசிகளை நோண்டிக்கொண்டிருந்த இளைஞர்கள் எனப் பலரும் தெரிந்தனர். இவர்களில் எத்தனை பேர் பரஸ்பரம் அன்பு கொண்டு கலவியில் ஈடுபட்டபோது வெளியேறிய விந்தினால் உருவாகியிருப்பார்கள்? கருமுட்டை வெளிப்படும் நாள் பற்றிய சிந்தனை ஏதுமில்லாத சூழலில் கருக்கொண்டிருப்பார்களோ? செயற்கைக் கருத்தரிப்பினால் பிறந்திருப்பார்களோ? அல்லது கற்பழிப்பினால்?... என்று யோசித்தேன்.

கருக்கொண்ட சூழல் எதுவானாலும், விந்து கருமுட்டையை அடைந்து, கருக்கொண்டு, வளர்ந்து மனித உருவாகியிருக்கிறது. மீண்டும் மேஜைக்குக் கீழே பார்த்தேன். என் கணவருடைய கால்கள் இன்னமும் கண்ணில் படாமல் உள்ளிழுத்தவாறே இருந்தன. அலுவலகத்தில், பகலுணவுக்குப் பிறகு லேடீஸ் ரூமில் பல் துலக்கிக்கொண்டிருந்தபோது கைபேசி ஒலித்தது. பரிச்சயம் இல்லாத எண்ணிலிருந்து அழைப்பு. ஒரு கணம் தயங்கியபின் எடுத்தேன்.

“நீங்க மிஸுகி தகஹாஷிதானே?” கேட்டது ஒரு பெண்குரல். அப்படி நேரடியாகக் கேட்டதால் எரிச்சலடைந்த நான்,

“யாரு பேசறது?” என்றேன்.

“ நான் நொபுஹிரோவின் தோழி” என்று பதில் சொன்னாள்.

“ஓ, அவருடைய காதலிதானே நீ?” என்றேன் முட்டாள்தனமாக.

என் கணவரும் நானும் எங்களுடைய திருமண பந்தத்திற்குள் பாலுறவை தள்ளியே வைத்திருந்தாலும், எங்களுக்குக் கலவி வேட்கை கிடையாது என்று அர்த்தமில்லை. எங்குபோயும் யாரோடு வேண்டுமானும் கலவி இன்பத்தை அனுபவிக்க இருவருக்கும் சுதந்திரம் இருந்தது. விடலைப் பருவத்து சகோதர சகோதரிபோல ரகசியக் கலவித் துணைவர்களை வைத்துக்கொண்டு, அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள் போலப் பாசாங்காக இருந்தோம்.

வெளியிலிருப்பவர்களுக்கு எங்களது பாலுறவுச்செயல்கள், பரஸ்பர துரோகம் என்று தோன்றலாம். எங்களைப் பொறுத்தவரையில் அது முற்றிலும் இயல்பானது. இரண்டு மாதங்களுக்கு முன்வரை எனக்கும் ஒரு ஆள் இருந்தான். முகநூலில் அறிமுகமான அவனுடன் என் கலவி நுகர்ச்சி சலிப்படையாவிட்டாலும் கூட, நாங்கள் பிரிந்துவிட்டோம். கைபேசியில் அழைத்த இந்தப் பெண்ணுடன் தனக்கு இருக்கும் உறவை முறித்துக்கொள்ளவே, நாங்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஒரு கருவியாக என் கணவர் பயன்படுத்துகிறார் எனத் தெரியவந்தது.

கருமுட்டைக்கு நான் சொந்தக்காரியாக இருக்க, வேண்டிய அளவுக்கு அவர் விந்தைப் பீச்ச வேண்டியதுதானே, அதில் என்ன இருக்கிறது என்று அவர் ரொம்பவும் சீரியஸாகப் பேசியபோது நினைத்த எனக்கு, தொலைபேசியில் வந்த இந்தப் பெண்ணின் படபடப்பைக் கண்டதும், அவளிடம் இருந்து அறுத்துக்கொள்ளவே என்னை அவர் பகடைக்காயாய்ப் பயன்படுத்துகிறார் என்று புரிந்தது.

“என் மீது வழக்குப் போடுவியா?” கோபமாகக் குமுறினாள்.

“போடு, எல்லாரும் உன்னைப் பார்த்துத்தான் சிரிப்பாங்க, என்னை இல்லை”

“நான் உன்மேல வழக்கும் போடமாட்டேன். அவரையும் விட்டுப் போகமாட்டேன். நீயே அவர்கிட்ட நேரடியா பேச வேண்டியதுதானே?

உங்களோட உறவுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை”. கவலைப்படாத என் தொனியைக் கேட்டு அவளுடைய கோபம் எகிறியது.

“நீங்க ரெண்டுபேரும் சேர்ந்து கலவி பண்றதில்லைதானே? என்ன மாதிரியான பொம்பிளை நீ? நான் எப்பவுமே அவரைத் திருப்தி பண்ணுறேன், நாங்க பரஸ்பரம் நேசமா இருக்கிறோம்”.

“அதனாலென்ன? நீ அவரோட காதல் துணை, அப்படிச் செய்வாய். ஆனா நாங்க குடும்பமா இருக்கிறோம், அதனால சேர்ந்து கலவி பண்றது இல்லை. என்னோட லஞ்ச் டயம் முடிஞ்சிட்டது, இதுக்கு மேல என்னால பேசிக்கிட்டு இருக்க முடியாது”.

“ஏன்னா, அவருக்குப் பிடிச்ச மாதிரியான செக்ஸை உன்னால தரமுடியாது. உன்கிட்ட இருந்து அந்தக் கலவி சுகத்தை அவரால பெறவே முடியாது”.

“ஆமாம், அப்படித்தான், அதனாலதான் நாங்க குடும்பமா வாழறோம்”. போனை கட் பண்ணிவிட்டு, அவளது நம்பரையும் பிளாக் செய்துவிட்டேன்.

“மிஸூகி, என்னாச்சு?” மொபைலைக் கையில் வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து, பாத்ரூமிலிருந்து வெளியே வந்தபடியே என் கணவர் கேட்டார்.

“இப்ப எல்லாம் எந்நேரமும் போனையே பார்த்துக்கிட்டு இருக்கிறியே?”

“ம், இப்ப எல்லாம் நிறைய ஸ்பாம் மெயில் வருது. என்னுடைய இமெயில் அட்ரஸை மாத்தனும்னு நினைக்கிறேன்.”

“செட்டிங்ஸை அட்ஜஸ்ட் பண்ணினா அதை எல்லாம் தடுத்திடலாமே. இது மாதிரி எதாவது டெக்னிக்கல் பிரச்சினை என்றால் நிஜமாகவே நீ சோர்ந்து போயிடுற”.

அந்த மின்னஞ்சல்கள் யாவும் என் கணவனின் காதல் துணையிடம் இருந்து வந்தவை. அவருடைய போனில் இருந்து என் மின்னஞ்சல் முகவரியைக் கண்டுபிடித்திருக்கவேண்டும். தினமும் மெயில் அனுப்பிக்கொண்டிருக்கிறாள். ஆரம்பத்தில் அந்த மெயில்களையும் பிளாக் பண்ணிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக எனக்கே அதில் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், அவர்கள் இருவரும் கலவி புரியும் படங்களை அவள் அனுப்பிவந்தாள்.

அவற்றைப் பார்த்தபோது, என்னுடைய இளையசகோதரன் சுய மைதுனம் செய்வதைக் கண்டுவிட்ட மாதிரி உணர்ந்தேன். என் கணவர் குழந்தைப் பாத்திரம் ஏற்று நடிப்பது போல் அவளுடைய முலைகளைச் சப்பிக்கொண்டு அல்லது இடுப்புத்துணியை மாற்றுவதுபோல இருந்தார். அவர் நேராகத் திரும்பி இருந்ததால், குறி விரைத்து நிற்பது துணிக்குள்ளும் தெளிவாகத் தெரிந்தது. அப்போதுதான் முதன் முறையாக அந்த அளவுக்கு அவருடைய ஆண் குறியைப்பார்த்தேன்.

படங்களுடன், ‘நான் மட்டுமே அவருடைய கலவித்துணையாக இருக்க முடியும்’ அல்லது, ‘என் பிருஷ்டத்தை நிமிண்டுகிறார், அவருக்கும் அதுமாதிரி செய்யுமாறு என்னிடம் கெஞ்சுகிறார்’ அல்லது ‘பெண்களிலேயே துரதிர்ஷ்டக்காரி நீதான்’ என்றெல்லாம் அவள் அனுப்பியிருந்த செய்திகளும், காமத்தாலும் கலவியாலும் அவள் சித்தம் கலங்கிவிட்டாளோ என்று எண்ணத் தூண்டின. மண்டிபோட்டுத் தவழ்ந்தபடி வாயில் பீடிங் பாட்டில் நிப்பிளை வைத்துக்கொண்டு, டயாபர் அணிந்தவாறு இருந்த என் கணவரின் படங்களைப் பார்த்தபோது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஆனால் அவருடைய கலவித்துணையாக நான் இல்லையே என்றும் நிஜமாலுமே சந்தோஷப்பட்டேன்.

“இங்க பாருங்க…” நான் ஆரம்பித்தேன். தலையைத் துவட்டிக்கொண்டே தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர், திரும்பி என்னைப்பார்த்தார்.

“ம், என்னது?”

“நான் எல்லாத்தையும் பத்தி யோசிச்சேன். ஒரு தரம் முயற்சி பண்ணி பார்க்கலாமா?”

“என்ன முயற்சி?”

“அந்தக் கிளினிக்ல சொன்ன சிகிச்சை. சொல்லப்போனா, செயற்கைக் கருத்தரிப்புக்கு இன்னும் அதிகமாகச் செலவாகும். அதோட நம்ம நிலைமையைப் புரிஞ்சிக்கிற டாக்டரை கண்டுபிடிக்கிறதும் சுலபமா இருக்காது. அந்தக் கிளினிக்கைப் பொறுத்தவரைக்கும் டாக்டரைப் பத்தி நாம கவலைப்பட வேண்டியதில்லை. மருத்துவப் பரிசோதனைக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்காது. அவங்களோட சிகிச்சை, கிட்டத்தட்ட இயல்பான கலவி மாதிரிதெரியுது. அதுதான் என் உடம்புக்கும் ஈஸியா இருக்கும்”.

“நிஜமாவே சொல்றியா? பெண்களோட உடல் சுமைகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதனால நீ சொல்றதை நம்பறேன்.” சற்றே அசௌகரியப்பட்டவராக அவர் தெரிந்தாலும், என்னுடைய யோசனையை நிராகரிக்கிற அளவுக்கு அந்தப் பெண் டாக்டர் மீது பெரிய அளவுக்கு அதிருப்தியைக் காட்டியவராகவும் தெரியவில்லை.

“அன்னைக்கு அந்த டாக்டரைப் போய்ப் பார்த்து வந்ததில் இருந்து, என்னுடைய உடல் உஷ்ணத்தைக் கவனிச்சுக்கிட்டு வர்றேன். அடுத்ததாகக் கருமுட்டை வெளிப்படுற தினத்தில அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிடுவோமா? என்ன ஆவுதுன்னுதான் பார்ப்போமே”.

“ஆல்ரைட். அன்னைக்கு எனக்கு லீவு கிடைச்சதுன்னா போகலாம்” விடுவித்துக் கொள்வதுபோலத்தலையை ஆட்டிக்கொண்டே மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் திரும்பிக் கொண்டார். அதிர்ஷ்டவசமாக, அடுத்து எனக்குக் கருமுட்டை வெளிப்பட்ட நாள் ஒரு சனிக்கிழமையாக இருந்தது.

இருவரும் சேர்ந்து கிளினிக்கிற்குப் புறப்பட்டோம். எங்களை வரவேற்ற செவிலிக்கு உடலை வளைத்து வணக்கம் தெரிவித்துவிட்டு, “நாங்க அந்தச் சிகிச்சையை எடுத்துக்க விரும்பறோம்” என்றேன். என் கணவரும் அவசர அவசரமாக அப்படியே சொன்னார்.

“உங்க உடைகளைக் கழட்டிவிட்டு, இதைப் போட்டுக்குங்க” என்றவாறே, எங்களிடம் தனித்தனியாக ஒரு வெள்ளை கவுனைக் கொடுத்தாள் செவிலி. “எல்லா உள்ளாடைகளையும் கழட்டிடுங்க. விலைமதிப்புள்ள சாமான்கள் இருந்தா லாக்கர்ல வைங்க. தயாரானதும் எனக்குச் சொல்லுங்க”.

எங்களுக்குக் காட்டப்பட்ட தனித்தனி தடுப்பறைகளுக்குள் சென்று திரைச்சீலையை இழுத்துவிட்டு, கவுனை மாட்டிக்கொண்டோம். நீளமான கைகளும், நீண்ட ஸ்கர்ட்டும் சேர்ந்த பெண்களுக்கான அந்தக்கவுனில் இழுத்து மூடிக்கொள்ளும் வசதி எதுவுமில்லாதது ஆச்சர்யமாக இருந்தது. கவுன் இப்படியா இருக்கும் என்று நான் நினைத்தாலும் எதையும் பேசவில்லை.

“நல்லது, மிஸ்டர் தகஹாஷி, இந்தப்பக்கம் வாங்க” என்று ஒரு செவிலி சொல்வது கேட்டது. திரைச்சீலையை அகற்றிவிட்டு வெளியே வந்தபோது, என் கணவரும் என்னைப்போலவே ஒரு கவுன் போட்டிருப்பதைப் பார்த்தேன். அந்த ஸ்கர்ட் அவருக்கு அசௌகரியமாக இருந்ததுபோல் தோன்றியது. செவிலியைப் பின்தொடர்ந்து அறைக்குள் போனபோது தன்னுடைய அந்தரங்க உறுப்பைக் கைகளால் மறைத்துக்கொண்டார். ஜன்னல்கள் அற்ற வெள்ளை வண்ணம் பூசிய அந்த அறையில், பல்மருத்துவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலிகளை விடச் சற்றே பெரியதான இரண்டு சாய்வு நாற்காலிகள் எதிரும் புதிருமாகப் போடப்பட்டு இருந்தன. அவற்றின் பக்கத்தில் அறுவை சிகிச்சையின்போது அணிந்து கொள்ளும் முகமூடிகளைப் போட்டிருந்த இரண்டு செவிலியர்கள் நின்றிருந்தனர். சாஸ்திரிய இசை பின்னணியில் தவழ லெவண்டர் மணம் காற்றில் பரவியிருந்தது. “சாய்வு நாற்காலியில் படுத்துக்குங்க”.

எதிரில் இருந்த நாற்காலியில் என் கணவரைப்படுக்க வைத்தார்கள். சாய்வு நாற்காலி என்றாலும் கிட்டத்தட்ட அது படுக்கைவசத்தில் இருந்ததால், கட்டிலில் படுத்திருப்பது போலவே அவர் இருந்தார்

“மிஸஸ் தகஹாஷி, நீங்க இந்தப்பக்கம்” அவர்கள் சொன்னபடி, என் கணவருடைய நாற்காலிக்கு எதிராக இருந்த வெள்ளை நாற்காலியில் நான் உட்கார்ந்தேன். மெத்தென்று இருந்ததுடன், அவருடைய நாற்காலியைவிடச் சற்றே உயரமாக இருப்பதாகவும் தோன்றியது.

“உங்க கால்களை இங்கே வச்சுக்குங்க” அவர்கள் அறிவுறுத்தியபடி சாய்வு நாற்காலியின் இருபுறமும் இருந்த பாதந்தாங்கிகளில் வைத்ததும், பெண்ணுறுப்புப் பரிசோதனைக்குத் தயாராவது போலக் கால்கள் அகட்டிக்கொண்டன. போட்டிருந்த கவுன் நீளமாக இருந்ததால் எனக்குச் சங்கடம் ஏற்படவில்லை.

“இப்பொழுது மிஸ்டர் தகஹாஷி விந்தை உற்பத்தி செய்வார்” எங்களை அந்த அறைக்கு அழைத்து வந்த செவிலியும், துணியாலான முகமூடியைப் போட்டுக்கொண்டாள். மூன்று செவிலிகளும் அறுவை சிகிச்சைக்குத் தயாராவது போல் மெல்லிய கையுறைகளை அணிந்துகொண்டு, பரஸ்பரம் தலையை ஆட்டிக்கொண்டு, என் கணவரின் நீண்ட கவுனுக்குள் கைகளை நுழைத்தார்கள். அவருடைய ஆண்குறியைப் பிடித்துவிட்டது போல் தெரிந்தது.

“இப்படி இருப்பது ஓகே தானே மிஸ்டர் தகஹாஷி? சிறப்பாகச் செயல்படுங்கள்”. என் கணவர் தன்னுடைய கண்ணாடியைக் கழட்டிவிட்டிருந்தார். கண்களை இறுக மூடிக்கொண்டு, செவிலியர்களின் செயலுக்குப் பணிந்துபோன அவர் முகம் வெளிறிக்கிடந்தது. கடைசியாக அவர்களில் ஒருத்தி, புனித அறிவிப்பைச் செய்வதுபோலச் சொன்னாள்: ‘உயிர்ச்சத்து உங்கள் கணவரின் உடலில் ஓடத் தொடங்கிவிட்டது’. அவள் என்ன சொன்னாள் என்று நான் புரிந்து கொண்டபோது, என்னிடம் வந்து. “மிஸஸ் தகஹாஷி. அதை உங்களுக்குப் பூசுவோம்” என்றாள். கையுறை போட்டிருந்த அந்தச் செவிலியின் கரம், என் கவுனுக்குள் அகண்டு கிடந்த கால்களுக்கு இடையில் நுழைந்து மூலிகை வாசனை வீசிய ஏதோ ஜெல்லியை என் யோனியைச் சுற்றிப் பூசியது. அந்தச் சில்லிப்பில் நான் முகம் சுளித்தாலும், பெண்ணுறுப்புப் பரிசோதனையைவிட எதுவும் வித்தியாசமாக இல்லாததால், அருவருப்பாக நான் உணரவில்லை.

“உயிர்ச்சத்து ஓட்டத்தைக் கருமுட்டையுடன் இணைக்க இப்பொழுது ஏற்பாடு செய்வோம்” என்று செவிலியர் அறிவித்துவிட்டு, ஒருமுனையில் மின்சார ஒயர் மாதிரி இணைக்கப்பட்டதுபோல் தெரிந்த வெள்ளிக் குழாய் ஒன்றை எடுத்தார்கள். கொஞ்சநேரமே கண்ணில் பட்ட அந்தக் குழாய் ஜெல்லி போன்ற ஒரு வஸ்து நிரப்பப்பட்டதாகத் தெரிந்தது. சுய மைதுனத்துக்கான கருவியாக இருக்கும் என நினைத்துக்கொண்டேன்.

மருத்துவச் சிகிச்சையில் பழகிய நளினத்தோடு அந்தச் செவிலி என் கணவரின் கவுனை அகற்றிவிட்டு, அவருடைய ஆண்குறியை அந்தக் கருவிக்குள் சொருகிவிட்டாள்.

“மிஸ்டர் தகஹாஷி, உயிர்சத்து வெளியேறும் போது எங்களுக்குச் சொல்லுங்கள். உங்கள் கையை உயர்த்தினால் போதும். புரிகிறதா?”

பேச்சற்றவராக என் கணவர் தலையை ஆட்டினார். கவுனின் விளிம்பை இறுகப் பற்றிக்கொண்டிருந்தவரின் முகம் மேலும் வெளிறியது.

“மிஸ்டர் தகஹாஷி, மின்காந்த அலைகள் மூலமாக உங்கள் உயிர்ச்சத்து ஓட்டத்திற்குத் துணை செய்கிறோம். உங்களுக்குப் புரிகிறதுதானே?”  செவிலி விளக்கினாள். ஆனால் அவளுடைய கை அசைவுகளைக் கவனித்தபோது, அவருடைய ஆண் குறியைச் சொருகியிருந்த வெள்ளிக்குழாயை அவள் தான் மேலும் கீழுமாக அசைத்துக்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. அந்தக் கருவி சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. உற்றுப் பார்த்ததில், ‘பரிசுத்தமான கருவுறுத்தும் கருவி’ என்று அதில் பொறிக்கப் பட்டிருந்ததையும் கண்டேன் அந்தச் செவிலி தன் காரியத்தில் மூழ்கியிருந்தபோது, ஒயர் அசைந்து கொண்டிருந்தது. அதிலிருந்து ஜில்லென்ற ஜெல்லி வழிந்து என் காலில் விழுந்தது.

“இது மிகவும் லேட்டஸ்ட் மாடல், மிஸ்டர் தக ஹாஷி. இது கொஞ்சம் ஜில்லுன்னு இருக்கும்னு நினைக்கிறேன், அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க” மட்டுமீறி வியர்த்துப்போன என் கணவர், வலுக்கட்டாயமாக அவருடைய விந்து உறிஞ்சப்படுவது போல அவ்வப்போது முனகிக் கொண்டார்.

“மிஸ்டர் தகஹாஷி உங்கள்ட்ட இருக்கிற எல்லாத்தையும் வெளியேத்துங்க. எந்தக் கணப் பொழுதிலயும் வரலாம்! உயிர்ச்சத்து பொங்கிப்பெருகுது... ”

“மிஸஸ் தகஹாஷி கொஞ்சம் கிட்டவாங்க, அவர் கையைப் பிடிச்சுக்குங்க, ஆங், அது மாதிரிதான்” மனம் குழம்பிப்போன நான், முன்பக்கமாகச் சாய்ந்து, என் கணவர் சோர்வுடன் நீட்டிய அவருடைய கையை இறுகப் பற்றினேன்.

“இதுதான் கடைசி, வேகமாத் தள்ளி வெளியேத்துங்க மிஸ்டர் தகஹாஷி”, என்று கூச்சலிட்டவாறே அந்தச் செவிலி அவருடைய ஆண்குறியிலிருந்து அந்தக் கருவி மூலம் பீச்சியடிக்க முயன்றாள்.

“உங்களுக்கு வந்துடிச்சி அன்பே!” என்று அந்தக் கூச்சலோடு என் குரலும் சேர்ந்தபோது, நடுங்கியவாறே அவர் தனது இடதுகையை உயர்த்தினார்.

“உயிர்ச்சத்து வெளியேற்றப்பட்டுவிட்டது” என்று செவிலி இரையவும், என் சாய்வு நாற்காலியின் முதுகுப் பகுதி சரிந்து, நாற்காலி நகர்ந்தது. அறையின் விதானத்தைப் பார்த்துக்கிடந்த எனக்கு என்ன நடக்கிறது என்று கவனிக்க முடியவில்லை. எல்லாமே கணப் பொழுதில் நடந்துவிட்டது. இந்த உலகத்திலேயே நான் இல்லையோ என்று தோன்றியது. இன்னமும் கால்களை அகட்டிக்கொண்டே வைத்திருந்த என்னை என் கணவனை நோக்கித் தள்ளிச்செல்கிறார்கள் என்று புரிந்தது. நகர்ந்து கொண்டிருந்த நாற்காலி நின்றதும், எதையோ வைத்து அடைப்பதுபோல் என் யோனிக்குள் ஏதோ ஒன்று சொருகப்பட்டது. ஜெல்லி பூசியதால் ஏற்பட்ட சில்லிப்புக் குறையாததால் என் கணவரின் ஆண்குறிதான் என்னுள் நுழைகிறது என்ற தெளிவில்லாத உணர்ச்சி ஏற்பட்டாலும், அவருடைய விந்தை ஒரு கருவிதான் என்னுள் அனுப்புவதை உணர்ந்தேன். விந்து வெளியேற்றம் நிகழ்ந்துவிட்டது. எனது இனப்பெருக்கப் பகுதிகளில் தெளிவில்லாத வெதுவெதுப்பான ஓர் உணர்ச்சி ஏற்பட்டது. என் கணவர் விந்தை வெளியேற்றிவிட்டார்.

“வெல்டன் மிஸ்டர் தகஹாஷி”

“கன்கிராஜூலேஷன்ஸ் மிஸஸ் தகஹாஷி” விதானத்தைப் பார்த்தவாறு வெறித்துக்கிடந்த எங்களை மென்மையான இதமான துணியைக் கொண்டு செவிலியர் துடைத்து விட்டனர்.

“இதைப் பயன்படுத்திக்குங்க” என்று சொன்ன ஒருத்தி, ஒரு துண்டை நீட்டினாள். என் நிக்கரை மாட்டிக் கொண்ட நான், அந்தத் துண்டையும் உள்ளே வைத்துக்கொண்டேன். மற்ற இரு செவிலியரும் என் கணவருக்கு வாழ்த்துச் சொல்லிக்கொண்டே, அவர் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தனர்.

அவரே ஒரு குழந்தையைப் பெற்றுவிட்டதுபோலவும், அவருடைய வாரிசை நான் ஏற்றுக்கொண்டது போலவும் இருந்தது.

“தேவைப்பட்டா இன்னொரு துண்டையும் உபயோகியுங்க. பிறப்புறுப்பை இப்போதைக்குக் கழுவாதிங்க. வேணும்னா, வீட்டுக்குப் போய் ஒரு சின்னக்குளியல் போட்டுக்குங்க. இன்னைக்கு அவ்வளவுதான் மிஸஸ் தகஹாஷி”.

எல்லாமே சப்புன்னு போய்ட்டமாதிரி உணர்ந்த நான் தலையை ஆட்டினேன். கிளர்ச்சி ஏற்படாமலேயே விந்தை வெளியேற்றும்படி நிர்பந்திக்கப்பட்ட என் கணவர் பெருமூச்சுவிட்டுக்கொண்டு மிகவும் களைத்துப் போனவராகத் தெரிந்தார். “ஒன்பதாயிரத்து ஐந்நூறு யென் இதுக்கு, என்ன மாதிரியான ஏமாத்துவேலை” வீடு திரும்பும் போது என் கணவர் குமுறினார். பரிகாசச் சிரிப்பை நான் அடக்கிக்கொண்டேன்.

“நிஜமாலுமே வினோதமா இருந்துச்சு இல்லியா?  உடலுறவு பண்ற மாதிரி நான் எதுவும் செய்ய வேண்டியிருக்கலை... ஓகே தானே?”

“என் வாழ்க்கையில இதுமாதிரி என்னை யாரும் ஏமாத்தினது இல்லை. எனக்கு வயாகரா கொடுத்தாங்க. அதை நான் எடுத்திருந்திருக்கலாம்”. மேலும் கோபம் அதிகரிக்கவே, “உன் யோனிக்குள்ள நுழைக்கிறதுக்கும், அந்த வினோதமான கருவிக்குள்ள நுழைக்கிறதுக்கும் எந்த வித்தியாசத்தையும் என்னால சொல்ல முடியலை. உனக்குள்ளேதான் நுழைச்சேனா அல்லது அந்தக் கருவிக்குள்ளதான் நுழைச்சேனான்னு இப்பவும் எனக்குத் தெரியலை” என்று முணுமுணுத்தார்.

“ஆனாலும் அது நல்லதுதானே? நம்ம கல்யாண பந்தத்தைக் கலவி இல்லாததா காப்பாத்த முடிஞ்சிருக்குதே”

“ஆமாம், ஆனாலும்...” வழியிலிருந்த சிறிய பூங்காவுக்குள் சென்றோம்

“நான் டாய்லட்டுக்குப் போய்ச் சானிட்டரி டவல் மாத்திட்டு வந்துடறேன்”

“ம், போய்ட்டுவா” என்று வினோதமாக என்னைப் பார்த்துத் தலையசைத்தபோது, என் உடம்பிலிருந்து அவருடைய விந்து கழிந்து வழிகிறது என்ற உண்மையினால் அசௌகரியமானவர் போலத் தோன்றினார்.

பூங்காவில் இருந்த பொதுக் கழிப்பறைக்குப் போய் என்னுடைய நிக்கரைக் கழற்றியபோது என் கணவரின் விந்து சானிடரி டவல் முழுக்கப் பரவியிருந்தது. வெள்ளைத் திரவமாக மாதவிலக்கு ஏற்பட்டது போலிருந்தது அது. டவலை மாற்றிக்கொண்டு வெளியே வந்தபோது ஒரு பெஞ்சில் எனக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

“ரொம்ப நேரம் ஆயிடலையே”

“இல்லை, இல்லை, எல்லாம் ஓகேதானே?” அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டேன்.

“நான் நல்லாத்தான் இருக்கிறேன், ஆனா கொஞ்சம் களைப்பா இருக்குது. வீட்டுக்குப் போறதுக்கு முன்னால கொஞ்சம் ரேஸ்ட் எடுத்துக்கலாமா?” பூங்காவை நோட்டமிட்டவாறு சற்றுநேரம் உட்கார்ந்திருந்தோம். அங்கே நிறையச் சின்னப் பிள்ளைகள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

“அது ஒண்ணும் ரொம்ப மோசமான அனுபவமா இருக்கலை”

“என்னது? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரொம்பக் கொதிச்சுப் போய் இருந்தீங்க?”

“ஆமாம், ஆனா உன்னோட நான் எந்தவிதமான பாலுறவும் வைத்துக் கொள்ளவில்லை என்பது நல்ல விஷயம்தானே. நம்முடைய கல்யாண பந்தத்தில கலவிக்கு இடம் இல்லைதானே” என்று மணல் குழியில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியைப் பார்த்தவாறே மென்மையாகச் சொன்னார்.

‘’நமக்குக் குழந்தை பிறந்தா ஆணா இருக்குமா? பெண்ணா இருக்குமா?”

“பெண்குழந்தையா இருக்கலாம். ஆண் குழந்தையா இருந்தாலும் நல்லதுதான். ஆனா பெண்ணா இருக்கணும்னுதான் ஆசைப்படறேன்”.

“ஓஹோ”

கண்களைப் பாதி மூடியவாறே, மணல்குழியிலிருந்து எழுந்து நின்ற சிறுமி ஓடுவதை அவர் கவனித்தார். ‘அம்மா!’ என்று அச்சிறுமி கூப்பிடவும், புன்முறுவலுடன் ஓர் இளம்தாய் அங்கே தோன்றினாள். அந்தத் தாய் வாஞ்சையுடன் தன் மகளின் தலையை வருடுவதையும், சிறுமி சிரித்தவாறே தாயை அணைத்துக்கொள்வதையும் கவனித்துக்கொண்டிருந்தார். அவர்களை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அவருடைய நெற்றியில் வியர்வை முத்துக்கள் அரும்ப, பேயறைந்தவர் போலத் தெரிந்தார்.

“என்னாச்சு?” அவர் பதில் சொல்லவில்லை. திடீரென்று வாயைக் கையால் இறுக மூடியவாறே மண்டியிட்டு உட்காந்து ‘உவ்வே’ என்றார். காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால், பித்த திரவம் மட்டும் வெளியேறியது. அவர் மண்டியிட்டுக் குமட்டியதைப் பார்த்தபோது, கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் காலை நேரக் குமட்டல் போலத் தெரிந்தது எனக்கு. ‘அம்மா, அம்மா...ம்மா’ சிறுமியின் கள்ளங்கபடற்ற குரல் பூங்கா முழுதும் எதிரொலித்தது. என் கணவருக்குக் குமட்டல் அதிகரிக்கவே, முதுகுப்பக்கம் நடுங்கியது. அவருக்கு ஆறுதலாக ஒரு கரத்தை நீட்டினேன். அந்தக் கணத்தில், என் யோனியிலிருந்து அவருடைய விந்து வெளியே வழிவதை உணர்ந்தேன்.

சயகா முராடா

2014 ம் ஆண்டு ஜப்பானிய மொழியில் வெளியான மூலக்கதையை எழுதியவர் சயகா முராடா (sayak murata)(பிறப்பு - 1971) என்ற எழுத்தாளர். 2003 முலைப்பாலூட்டுதல் என்ற புதினத்தின் மூலம் எழுத்துலகத்தில் அடியெடுத்து வைத்த அவருக்கு ஜப்பானின் அறிமுக எழுத்தாளர்களுக்கான இன்ஸோ பரிசு வழங்கப்பட்டது. சமூக ஒழுங்குகளுக்குள் ஒத்திசையாத ஆண் பெண் வாழ்க்கையில் பாலுறவு, பெற்றோராதல், பாலினம் சார்ந்ததான பணிகள் முதலானவற்றில் எதிர்கொள்ள நேரிடும் சிக்கல்களைப் பற்றி நுணுக்கமாக எழுதிவருகிறார். திருமண பந்தத்திற்குள்ளேயே விரும்பியும், விரும்பாமலும் பாலுறவு தவிர்த்து வாழ்தல், பாலினம் சாராமல் பல்வேறு நிலையிலும் சமூகத்தில் அங்கீகரிக்கப்படுதல் போன்ற விஷயங்களும் இவருடைய படைப்புகளில் பிரதான இடம் பெறுகின்றன. பல்பொருள் அங்காடியின் பணிப்பெண் என்ற இவருடைய பணியனுபவம் சார்ந்த புதினம் (2016) பரவலான வாசக கவனம் பெற்றதுதுடன் அகுட்டாகவா (agutagawa) என்ற சிறப்பான விருதையும் பெற்றது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer