நேர்காணல்: நித்யானந்த் ஜெயராமனுடன் ஒரு உரையாடல்

சந்திப்பு: பாலசுப்ரமணியம் முத்துசாமி

பகிரு

1990க்குப் பிறகு, தமிழகம் பொருளாதாரத்தில், தொழில்துறையில் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. வறுமை குறைந்து, தமிழகப் பொருளாதாரம் இந்தியாவின் இரண்டாவது பெரும் பொருளாதாரமாக உருவெடுத்தது. ஆனால், இதற்கொரு பக்க விளைவும் இருந்தது.

நிலத்தடி நீர் மாசுபடுதலும், ஆறுகளில் மணல் அள்ளப்படுவதும் என, தமிழகம் சூழலியல் சமன்பாட்டுச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்தப் பின்னணியில், சூழலியல் சொல்லாடலின் தோற்றம், வரலாறு மற்றும் இன்றைக்கு அதனுடைய முக்கியத்துவம் பற்றிய ஒரு நேர்மறையான ஒரு அறிமுகத்தைச் செய்வதே இந்த நேர்காணலின் நோக்கம்.

எனவே, தமிழகத்தின் சூழலியல் சிந்தனையாளர், செயற்பாட்டாளர்களுள் ஒருவரான திரு.நித்யானந்த் ஜெயராமன் அவர்களைச் சந்தித்து உரையாடினோம்.

1968 ல் புதுக்கோட்டையில் பிறந்த நித்யானந்த் அவர்களின் ஆரம்பக்கல்வி தந்தையின் மத்திய அரசுப்பணி காரணமாக, டெல்லி, குஜராத், பெங்களூரூ, மதுரை, என்று அமைந்தது. பள்ளி இறுதி மற்றும் தொழில்நுட்ப  கல்வியைக்  கோவையில்  நிறைவு செய்த நித்யானந்த் பி.எஸ்.ஜி.யின் முன்னாள் மாணவர் என்பது  குறிப்பிடத்தகுந்தது.

பள்ளி, கல்லூரிக்கு வெளியேதான் தான் படித்ததாகவும், அதுதான் தன்னில் ஆதிக்கம் செலுத்தியதாகவும் கூறும் நித்யானந்த் அவர்களுக்குச் சார்லஸ் டிக்கன்ஸ், டேவிட் காப்பர் ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட் ஆகியோரது ஆக்கங்கள் வழி தொடக்க நிலை வாசிப்பு அமைந்தது. மேலும் கல்லூரியில் வாசித்த கௌபாய் கதைகள் குறிப்பாக Louis L’amour இயற்கையைப் பற்றிய வர்ணனைகள்... செவ்விந்தியர்களுக்கும் வெள்ளையர்களும் நிகழும் பண்பாட்டு மோதல்களைக் குறித்த அறிமுகத்தை அது தந்ததாகவும் அவர் கூறுகிறார்.

இசைக் குறித்தான அறிமுகத்திற்கு அந்தக் காலத்தில் எங்கும் எல்லாமும் இளையராஜாவாகவே இருந்தது என்றும் வீட்டில் முகமது ரஃபி, முகேஷ் போன்ற இந்திப்பாடல்களின் அறிமுகம் இருந்தது எனவும் கூறுகிறார்.  உலகளாவிய சூழலியல் இயக்கம், தமிழ்நாட்டின் அணுகுமுறை, அரசுகள் செய்ய வேண்டியவை என்ன? என விரிவாக...

பாலா: சுற்றுச்சூழல் பத்தின ஒரு அறிதல் எங்கே இருந்து ஆரம்பிச்சுது? கல்லூரியிலா இல்ல அதுக்கு முன்பேவா?

நி.ஜெ: அவேர்னஸ்ங்கறது முன்னாடியே இருந்துருக்கும். மதுரையில, என்னோட பள்ளி, ஒரு கம்மாய்க்குள்ள இருந்துச்சு. மழை வந்துட்டா, ஸ்கூலுக்குள்ள தண்ணி வரும். பாம்பு, தவளை, மீனெல்லாம் புடிப்போம்... அதே மாதிரி நாங்க இருந்த பி.டி.ராஜன் ரோடு, பி.என்.டி. காலனி, இந்தப் பக்கமெல்லாம், நிறையக் கம்மாய்ங்க இருக்கும். அங்க மீன் பிடிக்கக் காண்ட்ராக்ட் விட்டிருப்பாங்க. அங்கே திருட்டுத்தனமா மீன் பிடிக்கறதுங்கற மாதிரி குறும்பெல்லாம் பண்ணியிருக்கோம். அதெல்லாம், மனசுக்குள்ள என்ன சிந்தனைகளை உருவாக்குச்சுன்னு சொல்ல முடியாது. சூழலியல் அவேர்ன்ஸ்ங்கறது சூழலப் பாதுகாக்கறது மட்டுமில்ல. சூழலோட உங்களுக்கு ஏற்படற உறவும்தான்.

சூழலியல் செயல்பாடுங்கறத நவீன வாழ்முறையோட ஒரு வெளிப்பாடாத்தான் நான் பாக்கறேன். ஆனா, ஒரு பழங்குடி இனத்தைப் பாத்தீங்கன்னா, அவங்களோட மரபு, மதம், நம்பிக்கை, பொருளாதாரம் எல்லாமே ஒன்னோட ஒன்னு இணைஞ்சு பிணைஞ்சு இருக்கும். ஆனா, நாம, பொருளாதாரம் தனி, சூழலியல் தனின்னு பிரிச்சு கம்பார்ட்மெண்டுக்குள்ள போட்டு வச்சுருக்கோம். அதுதான் பிரச்சினை.

என்னோட சூழலியல் செயல்பாடுங்கறது காலேஜில தான் வந்துச்சு. 1988ஆம் ஆண்டுல ரஷியாவோட ப்ரீமியர் கோர்பச்சேவ் இந்தியாவுக்கு வந்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்குக் கையெழுத்துப் போட. அதை எதிர்த்துக் கல்லூரியில் இருந்து 350 கையெழுத்தோட ஒரு மனு போச்சு. நானும் நண்பர்களும் இணைந்து செய்தோம்.

பாலா: அதை எதிர்க்கணும்னு உங்களத் தூண்டியது எது?

நி.ஜெ: 1984ல போபால் கேஸ் விபத்து நடந்துச்சு. 1986ல ரஷ்யாவில செர்னொபில் அணு உலை விபத்து நடந்துச்சு. அது பத்தி அப்போ யாருமே இங்கே பெரிசா பேசல. இந்தப் பின்னணியை வெச்சிப் பாக்கும்போது, கூடங்குளம் திட்டம் ஒரு அபாயமான திட்டமாத் தோணுச்சு. எனவே நண்பர்கள்ட்ட பேசி, இத எதுத்து 350 கையெழுத்தோட ஒரு மனு அனுப்பி வச்சோம்.

பாலா: அந்த இடத்துல இருந்து, இன்னிக்கு நாங்க பாக்கற நித்யானந்த் ஜெயராமன் எப்படி உருவாகி வந்தார்? இந்தப் பாதையில முக்கியமான நிகழ்வுகள் என்னன்னு சொல்ல முடியுமா?

நி.ஜெ: கல்லூரியில் படிச்ச 4 வருஷம் மிக முக்கியமான காலமா இருந்துச்சு. என்ன பண்ணக்கூடாதுன்னு தெளிவாத் தெரிஞ்சிருச்சு. அதே சமயம், எல்லா மத்திய வர்க்கத்துப் பசங்களுக்கு இருக்கற மாதிரி, அமெரிக்கா போகும் சூழல் அழுத்தமும் ஆசையும் இருந்துச்சு. உலகத்தப் பாக்கக் கூடிய ஆர்வம் ரொம்ப இருந்துச்சு. நான் படிச்ச கதைகளெல்லாமே - லூயி லாமோர் எழுதின இடங்கள் அரிஸோனா, நெவாடா மாதிரி இடங்களைப் பாக்கணும்னு ஆசையா இருந்துச்சு. நேஷனல் ஜியாக்ரபி புஸ்தகம்... சில சமயங்கள்ல பாத்த டேவிட் ஆட்டன் பரோவோட படங்கள்... ஸோ, வெளியே போகனும்னு ஒரு ஆர்வம் இருந்துச்சு. ஆனா, இஞ்சினியரிங் படிச்சா வெளியே போக முடியாது. ஊர்சுத்தற மாதிரி ஒரு துறை இருந்தால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. எனக்குக் கொஞ்சம் எழுதறதுல - ஆர்வம்னு கெடையாது, எழுதுவேன். அதச் சார்ந்த ஒரு படிப்பை எடுப்போம்னு ஜர்னலிஸத்தை ட்ரை பண்ணேன். ஒஹையோ யுனிவர்சிட்டில ஸ்காலர்ஷிப்போட இடம் கிடைத்தது. அந்தப் பல்கலைக்கழகத்துல இருந்த காலம், சூழலியல் பற்றிய எனது சிந்தனைகளை மாத்துச்சுன்னு சொல்லலாம். அப்போ எனக்குத் தெரியாது... ஆனா, இன்னிக்குத்திரும்பிப் பார்க்கும்போது புரியுது.

1990ல அலாஸ்கா போகனும்னு ஒரு ஆசை... துருவக்கரடி, கடல் நாய், அங்கே வாழ்ற திமிங்கிலங்கள், பெரும் பனிப்பாள வெளின்னு கேள்விப்பட்டு அங்கே போகணும்னும் ஆசை. கோடை காலத்துல அங்கே மீன் பிடித்தொழில் ரொம்பப் பிரசித்தம். அதிலும் ஸால்மன் மீன் பிடித்தல் ஒரு பெரும் தொழில். ஸால்மன் மீன்கள் கடலில் வாழும் மீன்கள். ஆனால், முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்க, நல்ல நீரைத் தேடிவரும். கடலில் இருந்து, நதியை நோக்கி வரும். சுத்தமா,தூய்மையாக் கண்ணாடி மாதிரி இருக்கும் நீரில் அதன் இனப்பெருக்கம் நிகழும். அது கிட்டத்தட்ட ஆறுகள் உற்பத்தியாகும் இடத்துலதான் இருக்கும். அப்படி ஸால்மன் மீன்கள் போகிற வழியை மறித்துக்கொண்டு மீன்பிடி நிறுவனங்கள் தங்கள் படகுகளை நிறுத்திக் கொண்டிருக்கும்.

அந்த மீன்பிடிக் கப்பலில், நான் மூணு வாரம் வேலை செஞ்சேன். அது ஒரு லாட்டரி மாதிரி. அதுக்கு எட்டாயிரம் டாலர் ஊதியம் கெடச்சுது. அது அப்போ, பெரும்பணம். வந்த வேகத்துல செலவழிச்சுட்டேன் - அது வேற விஷயம்.

அந்த வேலை, மிகக் கடினமான வேலை - ஒரு நாளைக்கு 18 - 20 மணிநேரம் வேலை செய்யனும். ஏன்னா, மீன் கிடைக்கறப்போ, அத மட்டும்தான் நீங்க செய்யறீங்க. இது மாதிரி ஆயிரக்கணக்கான இயந்திரப்படகுகள் அங்கே இந்தத் தொழிலில் ஈடுபட்டிருக்கும். அது ஒரு பெரும் இண்டஸ்ட்ரி. நம்ம ஊர்ல இருப்பது போல சிறு தொழில் கிடையாது. டன் கணக்கில் மீன்கள் பிடிக்கப்படும்.

இப்போ பசிஃபிக் ஸால்மன் மீன் பிடித் தொழில் ஒட்டு மொத்தமா அழிஞ்சிருச்சு... அதுல என்னோட ஒரு சிறு பங்கும் இருக்குதுன்னு சொல்லிக்கலாம்.

வயித்துல முட்டைய வெச்சிகிட்டு, இனப்பெருக்கம் செய்ய வரும் மீன்களை, ஆற்றின் முகத்துவாரத்துல மறிச்சு, வலை கட்டி, டன் கணக்குல பிடிச்சு அழிக்கிறது - destructive form of fishing.

தவிர, நான் படிச்ச காலேஜ், ஒரு முற்போக்கு சிந்தனையுள்ள இடம். உலகத்துல பல்வேறு நாடுகள்ல இருந்து வரும் மனிதர்களச் சந்திச்சேன்... ஆனா, அங்கியுமே, வகுப்பறைக்கு வெளியிலதான், பல விஷயங்களைக் கத்துகிட்டேன்.

பாலா: நீங்க சரியாப் படிக்கலேன்னு சொன்னாக் கூட, தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான பி.எஸ்.ஜி காலேஜ் ஆஃப் டெக்னாலஜில படிச்சிருக்கீங்க. அப்புறம் ஒஹையோ பல்கலைக்கழகத்துல இதழியல் படிச்சிருக்கீங்க.. அங்கிருந்து, அப்படியே ஒரு உயர்வர்க்க கார்ப்பரேட் வேலையைத் தேடிட்டுப் போயிருக்கலாமே? எது உங்களை இந்தச் சூழலியலை நோக்கி இழுத்துச்சு? மாசா மாசம் கவலையில்லாம கெடைக்கற மாசச் சம்பளத்தை விட்டுட்டு, இப்படி ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கீங்க. இது உங்களுக்கு ஒரு மனஅழுத்தத்தைக் கொடுக்கலியா?

நி.ஜெ: இது ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்கற வழி.எனக்கு அமெரிக்காவில, காலேஜ் வாழ்க்கை ரொம்பச் சந்தோஷமா இருந்துச்சு. ஆனா, காலேஜுக்கு வெளியே, ரொம்ப impersonal. அது எனக்குப் பிடிக்கல. அதனால,அங்கேயிருந்து எப்டி சீக்கிரம் பொட்டியக் கட்டிட்டு கௌம்பலாம்னு யோசிச்சிட்டிருந்தேன். காலேஜ் முடிக் கும்போதே, கேம்பஸ் இண்டர்வியூல, ஹாங்காங்ல ஒரு வேல கிடச்சுது. ஏஷியன் ஸோர்ஸ்ஸ் மீடியா க்ரூப்புன்னு உலகத்துலேயே பெரிய வியாபாரப் பதிப்பகம். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். அவங்களோட கொள்கைன்னு பாத்தீங்கன்னா, “உலக வணிகம்; உலக அமைதி”. அது சும்மா குண்டுதான். சும்மா அப்படிச் சொல்லிக்கறது.

அங்கே 2.5 வருஷம் வேல செஞ்சேன். அப்போ ஒரு விஷயம் ரொம்பத் தெளிவாயிருச்சு... இந்த வேல நமக்கு ஒத்து வராதுன்னு. ஏகப்பட்ட சம்பளம். வேலையும் அதிகமாக் கெடையாது. மொத வருஷம் ரொம்ப ஜாலியா இருந்துச்சு... மத்யானம் 2 மணிக்குக் கௌம்பிப் போயிடலாம்... ஸ்விம்மிங் போலாம்... ஹாங்காங்ல சாப்பிட நெறய ரெஸ்டாரண்ட்ஸ் இருக்கு... பீச் இருக்கு...உல்லாசமாப் பொழுது போக்கிட்டுப் போயிடலாம். ஒன்றரை வருஷம் கழிச்சுத்தான் புரிஞ்சுகிட்டேன் - நம்மகிட்ட ஒரு சாதாரணத் தரத்தைத்தான் அவங்க எதிர்பாக்கறாங்கன்னுட்டு. அந்தத் தரத்துக்குத்தான் இந்தச்சம்பளமும். அதுவும் ஒரு நல்ல அனுபவம்தான். ஆனா,ஒரு கட்டத்துல, அங்க இருக்க முடியல. நம்ம ஊருக்குப் போகணும்னு தோனுச்சு. 1994ல அந்த வேலைய விட்டுட்டேன். வீட்டுல பயங்கரமா சத்தம் போட்டாங்க. ‘மடையனா நீ... மாசம் ஒரு லட்சம் சம்பளத்த விட்டுட்டு வரேன்னு..’. ஆனா, என்னோட பிரச்சினை என்னன்னா, என்னால அங்க இருக்க முடியல. பணம் தேவைக்கு அதிகமா இருந்தாக் கூட,ஏதோ மிஸ்ஸிங்... 94ல வந்துட்டேன். இங்கே வந்ததுக்கப்பறம், என்னோட முழுக் கல்வியும், இந்தியத் தெருக்கள்ல... வாய்க்கால்கள்ல... கடலோரத்துல, சாதாரண மக்கள்கிட்ட இருந்து எனக்குக் கெடச்சுது.

பாலா: இந்தியாவில ஏதும் வேலைல சேந்தீங்களா? இல்ல, சும்மாவே சுத்தினீங்களா?

நி.ஜெ: வரும்போது, என்கிட்ட கொஞ்சம் சேமிப்பு இருந்துச்சு. தனிப்பட்ட செய்தியாளரா வேலை செய்யலாம்னு ஒரு எண்ணம். ஆனா, இந்தியச் செய்தித்தாள்கள்ல அப்படி வேலை செஞ்சா பைசா கிடைக்காது. அதனால, அங்கிருந்து கௌம்பும் போதே, Far Eastern Economic Review அப்படீங்கற ஒரு பத்திரிகைக்கு அப்பப்போ இந்தியச் செய்திகள எழுதற தனிப்பட்ட செய்தியாளரா வேலை செய்யற மாதிரி ஒரு ஏற்பாட்டைச் செஞ்சிருந்தேன்.

அடுத்த 2-3 வருஷங்கள், அவங்களுக்கு, Asian Wall street Journal இன்னும் சில வெளிநாட்டுப் பத்திரிகைகளுக்கு, சின்னச் சின்னக் கட்டுரைகள் எழுதினேன். அவங்க ஒரு 100 டாலர் குடுத்தாங்கன்னா, எனக்கு 1 - 2 மாசச் செலவுக்கு ஆகும். அப்போ எனக்கு எங்காவது போகணும்னா - ஒதிஷாவுல சில்க்கா ஏரியப் போய்ப்பாக்கணும்னு தோணுச்சுன்னா, அதப் பத்தி கொஞ்சம் ரிசர்ச் பண்ணிட்டு, யாருகிட்டையாவது ஃபிக்ஸ் பண்ணிட்டு, போயிட்டு வந்து ஒரு கட்டுரை எழுதிருவேன். அவங்க செலவுல அந்த எடத்தப் போயிப் பாத்துட்டு வந்துருவேன்.

பாலா: அந்த இடத்துல இருந்து, இப்போ நாங்கள் பார்க்கும் நித்யான்ந்த ஜெயராமன் எப்போ உருவானார்?

நி.ஜெ: நான் அப்பவே ஆரம்பிச்சிட்டேன். என்னோட முதல் வேலையே இறால் பண்ணையப் பத்தினதுதான்.இங்க வந்த உடனேயே, மெட்ராஸ்லா இக்ஷா (ICSA) மையத்துல ஒரு கூட்டம் நடந்தது. CASA - Campaign Against Shrimp Industry ன்னு ஒன்னு நடந்துச்சு. இன்னிக்கி என்னோட தோழர்களா இருக்கற சிலர், அப்போ, இத எடுத்து நடத்திட்டு இருந்தாங்க. அப்போ, ஜெகன்னாதன் கிருஷ்ணம்மாள் அவங்களோட போராட்டம் இறால் பண்ணைக்கெதிரான பெரிய போராட்டமா இருந்துச்சு.

இந்தச் சமயத்துல, தஞ்சாவூர்ல, எங்கப்பாவோட 60 ஆம் கல்யாணம் திருக்கடையூர்ல நடந்துச்சு. அத முடிச்சிட்டு, பக்கத்துல தஞ்சாவூர்ல இருக்கற ஒரு இறால் பண்ணைக்குப் போயிட்டு, அதப் பத்தி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கம்பெனிக்காரங்க கூட்டிட்டுப் போயி சுத்திக்காட்டினாங்க... பண்ணையைத் தாண்டி, ஊருக்குக் கக்கூஸ் கட்டிக் குடுத்திருக்கோம்... பில்டிங்குக்குச் கூரை போட்டுக் குடுத்திருக்கோம்னு சொன்னாங்க... நான் ரொம்ப இம்ப்ரெஸ் ஆயிட்டேன். அதை அப்படியே கட்டுரையா எழுதி, அந்த ஊர்ல இருக்கற ஒரு அம்மாகிட்டே காமிச்சேன்.

அந்த அம்மா கேட்டாங்க, ‘இதென்னப்பா இப்படி எழுதிருக்கே? இது உனக்கே நல்லாருக்கா’,ன்னு. நான் கேட்டேன், ‘ஏன் பாட்டி? நான் சரியாதானே எழுதியிருக்கேன்? அவங்க செய்ற தொழில்ல சில பாதிப்பு இருக்கதான் செய்யும்... அதுக்குப் பரிகாரமா ஊருக்கு சில நல்லது செய்றாங்கதானே? அதுக்கு அந்தம்மா கேட்டாங்க, ‘நாங்க உன்ன கக்கூஸ் வேணும்னா கேட்டோம்? குடிநீர் இல்லாம செஞ்சிட்டு,கக்கூஸ் கட்டிக் குடுத்து என்ன பிரயோசனம்’,னு இப்படிப் பல அனுபவங்கள்தான், ஒரு பிரச்சினையை, பல்வேறு பார்வைகள்ல பாக்கற ஒரு மனநிலைய எனக் குள்ள உருவாக்குச்சு. அங்கிருந்துதான், என் பயணம் மாறுச்சு.

பாலா: சுற்றுச் சூழல் பற்றிய அக்கறை, உலகளாவிய அளவில எப்போ / எங்க இருந்து துவங்குச்சு?

நி.ஜெ: இதன் துவக்கம் காலனியாதிக்கம் துவங்கின காலத்துல இருந்துன்னு சொல்லலாம். காலனி ஆதிக்க சக்திகள் உள்ளூர் மக்களின் நிலங்களைப் பிடிக்கத் துவங்கிய காலகட்டத்தில் ஏற்பட்ட மோதல்கள்ல இருந்தே அது வெளிப்பட்டுச்சுன்னு சொல்லலாம்.

நவீன சுற்றுச் சூழல் இயக்கம்னு பாத்தாக்கா, 1962ல ரேச்சல் கார்ஸன் எழுதின Silent Springனு சொல்லப்படுது. மனிதர்கள் ஓரு இடத்துல நிகழ்த்தும் ஒரு வினை, உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தறப்பத்திப் பேசுது. மௌன வசந்தம்கற அந்த நூல்ல அவங்க பேசியிருக்கறது, மனிதர்கள் உபயோகிக்கும் செயற்கையான ரசாயனப் பூச்சிக்கொல்லிகளைப் பத்தி. அவை உயிர்களின் உடலுக்குள் சென்று, அவற்றின் இனப்பெருக்கத்தைத் தாக்கக் கூடியவை. காற்று, நீர் வழியாகப் பரவி, பல்லுயிர்ப்பெருக்கை அழித்து, நம் உணவுச்சங்கிலியைப் பாதிக்கக் கூடிய விஷங்கள். இதை, ஒரு நாட்டுச் சட்டத்தின் மூலம் மட்டுமே தீர்க்க முடியாது. எனவே, உலகளாவிய அளவில இயக்கங்கள் தோன்ற ஆரம்பிச்சுது. இந்தப் புத்தகம் விவாதங்களை எழுப்பினப்பவே அதற்கு எதிராக வலுவான குரல்கள் எழுந்தன. இவர்கள் மனித முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள், தேச விரோதிகள்னு பலர் இவங்க மேல முத்திரைக் குத்தினாங்க.

(Rachel Carson என்பவர் ஒரு அமெரிக்கக் கடல் உயிரியல் விஞ்ஞானி. The Sea around us, The Edge of the Sea and Under the Sea Wind என்னும் மூன்று முக்கியப் புத்தகங்களை எழுதியவர். இவை அமெரிக்காவில் பெரும் வரவேற்பைப் பெற்றன. 1950 களின் இறுதியில், ரேச்சல், தன் கவனத்தை, சூழலியல் பாதுகாப்பை நோக்கித் திருப்பினார். வேளாண்மையில் உபயோகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் சூழலைப்பாதிக்கின்றன என நம்பினார். அவரது ஆராய்ச்சியின் விளைவாக, 1962 ஆம்ஆண்டு, The Silent Spring என்னும் புத்தகம் வெளியாயிற்று. இந்தப் புத்தகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பூச்சி மருந்துக் கம்பெனிகள் இதை எதிர்த்தன. இதன் விளைவாக டிடிடி (DDT) போன்ற பூச்சிக்கொல்லிகள் தடை செய்யப்பட்டன. இந்தப் புத்தகம் தந்த எழுச்சியில் பல சூழலியல் பாதுகாப்புக் குழுக்கள் உருவாகின. அமெரிக்க அரசாங்கம் சூழலியல் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க நேர்ந்தது - பாலா).

அதுக்குப் பின்னாடி, 1972 ல வந்த Stockholm Convention (United Nations Convention on Human Environment) அதை உலகளாவிய பேசு பொருளாக்கிச்சு. உலகநாடுகள் எல்லாம் ஒண்ணாச்சேந்து, இந்தப் பிரச்சினைய எப்படி அணுகலாம்கறதுக்கான அஸ்திவாரம்தான் அந்த மாநாடு.

பாலா: 1962 ல வந்த மௌன வசந்தம் ஏற்படுத்தின தாக்கத்தோட இயல்பான அடுத்தபடின்னு 1972 ஸ்டாக் ஹோல்ம் கன்வென்ஷனைச் சொல்லலாமா?

நி.ஜெ: அப்படீன்னும் சொல்லலாம். அதே சமயம், 70 கள்ல, போர்களுக்கு எதிரா, குறிப்பா வியட்னாம் போருக்கு எதிரா இளைஞர்கள் எழுச்சி பெரிசா இருந்துச்சு. ராக் இசை, இந்தச் சுற்றுச் சூழல் பிரச்சினைகள் பற்றிய நிகழ்வுகள்ல ஒரு முக்கிய அங்கமா இருந்துச்சு. சுற்றுச்சூழல் பிரச்சினைகள உருவாக்கும் அதிகார வர்க்கத்தைக் கேள்வி கேக்கும் பெரும் சக்தியா எழுந்து வந்தாங்க. அவங்களுக்கு உலகளாவிய ஆதரவு இருந்துச்சு. ஸ்டாக்ஹோல்ம் கன்வென்ஷனின் பின்னணியில் இவையும் இருந்தன.

பாலா: இப்போ மறுபடியும் நீங்கள் இதுக்கு முந்தைய கேள்விக்குச் சொன்ன ஒரு பதிலப் பத்திப் பேசலாம். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி - நார்மன் போர்லாக் - இந்திய பசுமைப்புரட்சிக்கு இவரோட பங்களிப்பு மிக முக்கியம். அவர், இந்திரா காந்தியின் புகழ்பெற்ற ஸ்டாக்ஹோல்ம் கன்வென்ஷன் உரையை வாழ்த்தி எழுதிய கடிதத்தில், சூழலியல் பாதுகாப்புக்காக இயங்குபவர்களை, ‘சூழலியல் தீவிரவாதிகள்’, எனக் குறிப்பிடுகிறார். நீங்கள் சொன்ன மாதிரி, ரேச்சல் கார்ஸன் போன்றவர்கள், சூழலியல் பாதிப்புகளை, அறிவியற்பூர்வமான ஆதாரங்களை முன்வைத்துதானே வாதாடினாங்க?

அரசோ, அல்லது அரசுத் தரப்பு விஞ்ஞானிகளோ, சூழலியல் பாதுகாப்புத் தரப்புகள் முன் வைத்த தரவுகளை, அறிவியற்பூர்வமாக எதிர்கொள்ளாமல், அவர்களுக்குத் தீவிரவாதிகள் பட்டம் சூட்டியது எந்த அளவுக்குச் சரி?

நி.ஜெ: இதுக்கு உதாரணமா, கூடங்குளம் போராட்டத்த எடுத்துக்கலாம். 2013 தொடங்கி, பல வருஷமா நடந்துகிட்டு இருக்கு. இதை எதுக்கற மக்கள், ஒரு சாதாரணக் கேள்வியத்தான் கேட்டாங்க. இங்க, விபத்து நடந்தா,எங்கள எப்படிப் பாதுகாப்பீங்கன்னு. அணு மின் நிலையத்துல விபத்து நடக்காதுன்னு யாராலயும் உறுதி கொடுக்க முடியாது. அவங்ககிட்ட இதுக்குப் பதில் இல்லை.

அப்போ அந்த விவாதத்துக்குள்ளயே இறங்காம, உங்களுக்கு ஒரு முத்திரையக் குத்தி, திசை திருப்பிடறதுதான் சுலபமான வழி. நாங்க கேட்டது, விபத்து நடந்தா, எங்களுக்கு என்ன பாதுகாப்புன்னு. அவங்க பதில், உங்க போராட்டத்துக்கு அந்நிய நிதி வருது. நீங்க சிஐஏ, மாவோயிஸ்ட்’ங்கறது.

நான் கேட்ட கேள்வி அது இல்லையே. அவங்க அதுக்குப் பதில் சொல்ல ரெடியா இல்லை. சொல்லி மக்களை ஒத்துக்கொள்ள வைக்கும் பக்குவமும் அவங்க கிட்ட இல்ல.

பாலா: இப்படிச் சொல்லலாமா? புதுசா ஒரு தொழில் நுட்பம் வருது. அதோட எல்லா விளைவுகளையும் முழுசாத் தெரிஞ்சுக்காமலேயே, அதை மக்கள் மேலே திணிக்கற ஒரு மூர்க்கத்தனம்னு?

நி.ஜெ: எல்லா எல்லைகளையும் அறிய முடியாது. அந்த அளவுக்கு மனுஷன் புத்திசாலி கிடையாது. ஆனா,அறியமுடியாதுங்கறது தெரியற அளவுக்குப் புத்திசாலிங்க தான்... ஆனா, அத ஒத்துக்கறதுக்கு ரெடியா இல்லை.

நம்ம நாட்டோட ஒரு முக்கியமான விஞ்ஞானி அப்துல்கலாம் ஐயா. அவர்கூடக் கூடங்குளத்துல, சொல்லக் கூடாத ஒன்ன சொல்லிட்டுப் போனாரு. இது 100% பாதுகாப்பானதுன்னு. 100% பாதுகாப்பு என்பது அறிவியல் தொழில் நுட்பச் சாத்தியமற்ற ஒன்று.

இதுல ரெண்டு விஷயம் இருக்கு. ஒரு தொழில் நுட்பம் வருதுன்னா, அதுல நன்மைகள் தீமைகள் என்னன்னு தெரியணும். ரெண்டாவது, இதன் நன்மைகள் யாருக்குப்போகுது, தீமைகள் யாருக்குப் போகுதுன்னு தெரியணும். அது அரசியல். அது தொழில் நுட்பம் இல்ல. அந்த அரசியல்லதான் நமக்குப் பிரச்சினை வருது.

பாலா: சூழலியல் பத்தின ஒரு அறிதலை ஊடகங்கள் எந்த அளவுக்குப் பொதுமக்கள்கிட்டக் கொண்டு போயிருக்குன்னு நெனக்கறீங்க?

நி.ஜெ: பெரும்பாலும், இதுல இருக்கற அடிப்படைப் பிரச்சினைகள யாரும் பேசறது கிடையாது. இன்றைய உலகச் சூழலியல் பிரச்சினைகளுக்கு நம்ம பொருளாதாரத்தோட வடிவமைப்புதான், முக்கியக் காரணம். உலகச் சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணனும்னா, பொருளாதார வடிவமைப்பை மாத்தியாகணும். அதைப் பத்தி யாரும் பேசறது கெடையாது.

அதுக்குப் பதிலா என்ன பேசிட்டிருக்கோம்னா... நீ குப்பைய இங்க போடு... நீ சைக்கிள் ஓட்டு... நீ மாமிசம்திங்கறத நிப்பாட்டு... இது மாதிரியான தனிமனிதத் தீர்வுகள் உலகப்பிரச்சினைக்கு முடிவாகாது.

இப்ப காந்திஜிய எடுத்துக்குவோம். அவர் ஒரு எளிமையான வாழ்க்கைய முன்வச்சார். அது அவரது அரசியல். சமூகமே இந்த மாதிரி இருக்கணும்கற மாதிரியான ஒரு முழுமையான பார்வை. அந்த மாதிரி ஒரு எளிமையா வாழக்கூடிய சூழ்நிலை, இயல்பா வரணும்னு நெனக்கறேன். எடுத்துக்காட்டா, நெதர்லாண்ட் மாதிரி. அந்தநாட்டுக்குப் போனீங்கன்னா, பிரதமரும் அங்க சைக்கிள்ளதான் போறார்... அது மாதிரி. அப்படிப் போறது பெரிய தியாகம் கிடையாது. அப்படிப் போற மாதிரி ஒரு சூழல் அமைச்சிருக்காங்க. எனவே, சரியான வழிகளைச்செய்யற மாதிரி ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்கறதுதான் நல்ல அரசியல்.

பாலா: அடுத்தக் கேள்விக்கு வர்றேன் - மிக முக்கியமான சூழலியல் அறிஞர்கள் / செயல்பாட்டாளர்களை அறிமுகப்படுத்த முடியுமா?

நி.ஜெ: நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிக்கலாம். 18 ஆம் நூற்றாண்டுல, மத்திய இந்தியாவில் இருந்த பிர்ஸா முண்டா அப்படீங்கற பழங்குடியினத் தலைவர். வெள்ளையர்கள் வனப்பாதுகாப்பு சட்டம்னு ஒன்ன கொண்டு வந்து, வனப்பகுதிகளை, அங்கே இருந்த பொது இடங்களைக் கையகப்படுத்த ஆரம்பித்தார்கள். அப்ப, அதை எதிர்த்து ஒரு பெரும் குரலாக எழுந்தது பிர்ஸா முண்டாவோட குரல். அதுக்கடுத்து காந்தியைச் சொல்லலாம். அவங்க யாருமே புலியைக் காப்போம், திமிங்கிலத்தைக் காப்போம்னு பேசியவர்கள் கிடையாது. ஒரு அரசியல் பேசியவர்கள். அந்த வகையில மிக முக்கியமானவர் காந்தி. அப்புறம் அவருக்கு உந்துசக்தியாக இருந்த ஹென்றி டேவிட் தோரோவ (Henry David Thoreau) சொல்லலாம். அவர் walden’, ‘Civil Disobedience’, போன்ற முக்கியமான புத்தகங்களை எழுதியவர். அவர் அரசுக்கு வரிகட்டுவதையே ஒரு தவறான விஷயம்னு எதிர்த்துச் சிறை சென்றவர்.

அவருடைய நண்பர், ‘என்னப்பா ஜெயிலுக்கு உள்ளே என்ன செஞ்சிகிட்டிருக்கே’, ன்னு கேட்டதற்கு, ‘நீ ஜெயிலுக்கு வெளியே என்ன செஞ்சிட்டிருக்கே? நல்லவன்லாம் உள்ளே அல்லவா இருக்கவேண்டும்’, எனக் கேட்டவர். அந்த civil disobedience -ன் கருத்தியலைத்தான் காந்தி தன் வழியில் செயல்படுத்தினார். அதே போல, தொழிற்புரட்சி நடந்த நூறாண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்தில் நடந்த back to the lands இயக்கத்தச் சொல்லலாம். அதுக்கடுத்ததா, ச்சிக்கோ மெண்டிஸ் (Chiko Mendes) ங்கற பிரேஸில் நாட்டுக்காரர். அவர் ஒரு ரப்பர் பால் சேகரிக்கும் தொழிலாளி. துவக்கத்துல பணியாளர்களோட நன்மைக்கும், பின்னர் அமேஸான் காடுகளைப் பாதுகாப்பதற்கும் போராடியவர்.

(At first I thought I was fighting to save rubber trees, then I thought I was fighting to save the Amazon rainforest. Now I realize I am fighting for humanity - Chico Mendes)

அடுத்து கென் சரோ விவா (Ken Saro Wiva) ன்னு சொல்லிட்டு, ஒரு நைஜீரியர். ஒரு முக்கியமான சிந்தனையாளர். நைஜீரியாவில் நைஜர் டெல்டா - நம்ம காவிரிடெல்டா மாதிரியான ஒரு இடம் - அங்கே பூமியில் இருந்து எண்ணெய் தோண்டியெடுப்பதை எதிர்த்துப்போராடியவர். பெரும் பன்னாட்டு எண்ணெய்க் கம்பெனிகள் - ஷெல் போன்றவை. அங்கே ஒகோனின்னுஒரு சமுதாய மக்கள் பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்கிறாங்க. அவர்களின் தலைவராக இருந்தவர்தான் இந்தக் கென் சரோ விவா. அவரை அங்குள்ள ராணுவ ஆட்சி ஒருநாள் தூக்கில் போட்டது.

இங்கே, இந்தியாவில சூழலியல் போராட்டங்கள் பல நடந்துள்ளன. சுந்தர்லால் பகுகுணாவோட சிப்கோ இயக்கம் , தேரி அணைக்கெதிரான போராட்டம். நர்மதை அணைக்கெதிராக மேதாபட்கர் நடத்திய போராட்டம்.  தேசிய மீன் தொழிலாளர் குழுமத்தை அமைத்து அவர்களுக்காகப் போராடிய ஃபாதர் தாமஸ் கொச்சேரி . அதே போலத் தமிழகத்துல நம்மாழ்வார் ஐயா அவர்கள். இயற்கை வேளாண் வழிமுறைகளை முன்வைத்து, அநேக இளைஞர்களை அந்தப் பாதைக்குத் திருப்பியவர்.

பாலா: ஐரோப்பாவில் நிகழ்ந்த தொழிற்புரட்சி, நவீனத்துவம் போன்ற மாற்றங்களை இந்தியா ஒரு அடிமை நாடாக இருந்ததனால், பின் தங்கியது. ஆனால், சூழலியலைப் பொறுத்தவரையில், இந்தியாவில், உலகெங்கும் நிகழ்ந்தது போல, இங்கும் நிகழ்ந்திருக்கிறது. இந்தியா சூழலியல் மாசுபாடுகளுக்கெதிரான போராட்டத்தில், மிக முக்கியப்பங்கு வகித்திருக்கிறது எனச் சொல்லலாமா?

நி.ஜெ: நிச்சயமாச் சொல்லலாம். அதைச் சூழலியல் போராட்டம்னு சொல்றத விட, வாழ்வியல் போராட்டம்னு சொல்லலாம்.

பாலா: நீங்கள் சொன்னதில் ஒன்றை நான் கவனித்தேன். சூழலியல்ங்கறது, தனித் தனிப் பிரச்சினையாக அணுகப் பட வேண்டிய ஒன்றல்லன்னு சொன்னீங்க.. அதாவது புலியை மட்டும் காப்பாத்தறது அல்லது சிங்கவால் குரங்கை மட்டும் காப்பாத்தறதுன்னு அதை அணுகக் கூடாது. மொத்த வனத்தையும் காப்பாத்தறதா நம் அணுகுமுறை இருக்கனும்னு சொன்னீங்க. முக்கியமான வாதம் அது. இந்த முழுமையான அணுகுமுறை, நவீனகாலத்துல, காந்தியில இருந்து துவங்குதுன்னு சொல்லலாமா?

நி.ஜெ: அது காந்திக்கு முன்னாடியே இருந்துது. ஆனா, காந்தி அதை ஒரு பெரும் இயக்கமாக வெளிப்படுத்தினார். பிர்ஸா முண்டா, சாந்தலி இனத்தினர் போராட்டம்னு முன்பே பல போராட்டங்கள் எழுந்துள்ளன. எப்போது வணிகத்துக்காக, நிலக்கரி தோண்ட ஆரம்பித்தார்களோ, அப்போது இருந்தே இது துவங்கிவிட்டது. பிர்ஸா முண்டா இருந்த இடமான சைபாசா என்னும் இடத்தில், நிலக்கரித் தோண்டும்போது, போராட்டம் துவங்கியது. பிர்ஸா முண்டா காலத்திலும் நடந்தது. இன்னும் சுரங்கங்கள் இருக்கின்றன. இன்றும் முண்டா இன மக்கள் போராடிக்கிட்டுத்தான் இருக்காங்க. அங்கேதான் இப்போது யுரேனியம் சுரங்கங்களும் இருக்கின்றன.

பாலா: உலகில் இன்று முக்கியமான விஷயம் - மக்கள்தொகை. 7.4 பில்லியன் மக்கள் இன்று உலகில் இருக்கிறார்கள். இவர்களின் உணவுத் தேவைக்காக, அடர் வனங்களைக் கொண்ட பிரேஸில், இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில், அடர் வனங்கள், வேளாண்மைக்காக அழிக்கப்படுகின்றன. இதைச் சூழலியர்கள் எதிர்க்கிறார்கள். ஆனால், மக்களின் உணவுத் தேவைக்காக வனங்களை, மாற்றி உபயோகிப்பதில் என்ன தவறு?

நி.ஜெ: முதல்ல ஒரு கேள்வி இருக்கு. இந்த உணவுத்தேவைங்கறது அடிப்படைத் தேவைக்கா? உல்லாசத்துக்கா? இல்ல ஆடம்பரத்துக்காங்கறது. இப்போது நமது உற்பத்தி, தேவைகளுக்கு அதிகமாகத்தான் இருக்கிறது. உணவுப்பிரச்சினை என்பது, மனிதர்களின் தேவைகளினால் உருவாகவில்லை. அதீத நுகர்வுக்கலாச் சாரத்தினால், குறிப்பிட்ட சதவீத மக்கள், மிக அதிக மான உற்பத்தியை நுகர்வதனால் வருவது. அந்த அதீத நுகர்வுக்காகக் காடுகள் அழிக்கப்படத் தேவையே கிடையாது.

பாலா: நம்முடைய உணவு உற்பத்தி தேவைக்கு அதிகமாக இருக்கிறது என்னும் வாதத்தை முன்வைக்கிறீர்கள். அது சரியா?

நி.ஜெ: உணவு உற்பத்தியல்ல பிரச்சினை, விநியோகம்தான். உணவை விநியோகம் செய்வதில் ஏகப்பட்டபிரச்சினைகள் இருக்கு. வங்காளப் பஞ்சமும், சென்னையில் வந்த பஞ்சமும், உணவு பற்றாக்குறையினால் வந்ததல்ல. திட்டமிடல் போதாதாலும், சரியாக விநியோகம் செய்யாததாலும், இயற்கையைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் நமது பொருளாதாரத்தை அமைத்ததாலும் வந்தது. கிராமங்களில் உள்ள உற்பத்திக்கான கட்டமைப்புகள் கைவிடப்பட்டதும் பெருங்காரணம்.

உலகத்தில் இருக்கும் சூழலியல் பிரச்சினைகளில், ஒரு சிறு சதவீதம்தான் நம் அடிப்படைத் தேவைகளினால் ஏற்படுது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் உண்ணப்படாமல் வீணடிக்கப் படுகின்றன. எனது நண்பர்கள் வீடுகளில், குளிர்சாதனப் பெட்டிகளில், அலமாரிகளில், ஏகப்பட்ட உணவுப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கும். இதெல்லாம், நமக்குத் தேவையான உணவுன்னு சொல்லி நாம சேர்த்து வைக்கிறோம்.

இரண்டாவது - உலகத்துல பெரும் செயல்திறன் கொண்ட தாவரம் எண்ணெய்ப்பனை. ஏன் உலகம் முழுவதும் அதன் எண்ணெயைச் சாப்பிடனும்? அந்தந்த ஊர்களில் கிடைக்கும் எண்ணெயை உபயோகிக்கலாமே?

தமிழ்நாட்டுல ஒரு எண்ணெய்; கேரளாவில ஒரு எண்ணெய்; மேற்கு வங்காளத்துல ஒரு எண்ணெய்னு இருக்கற ஒரு அமைப்பை அழித்து, ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் பாமாயிலா (பனை எண்ணெயாக) homogenise செய்யறோம் - இது இன்னொரு பிரச்சினை.

பாலா: பாமாயிலப் பத்திப் பேசறப்போ, homogenization அப்படீன்னு ஒரு வாதத்தை வைக்கறீங்க. ஆனா, அரசு மற்றும் நிறுவனங்கள் தரப்பில் என்ன சொல்றாங்கன்னா, அது செயல்திறன் மிக்கத் தாவரம். உதாரணத்துக்கு, கடலைப் பயிர் ஒரு ஹெக்டருக்கு 600 கிலோ எண்ணெய் கொடுக்கும்னா, பாமாயில், ஒரு ஹெக்டருக்கு 5 டன் ஆயில் கொடுக்கும். இதுபோன்ற ஒரு முயற்சியை முன்னெடுக்கும்போது, உற்பத்தி அதிகமாகி, பொருள் விலை குறைந்து, அது மலிவாக எல்லா மக்களுக்கும் கிடைக்கும். இது மக்களுக்கு, குறிப்பாக ஏழைமக்களுக்குப் பயன் தரும் வழின்னு ஒரு வாதம் முன்வைக்கப்படுது. அந்த வாதம் சரிதானே? ஒரு புறம் பார்த்தால், தேவைக்கதிகமா உணவு உற்பத்தி செய்யறோம்னு சொல்றீங்க... ஆனால், அந்த உணவு எல்லோருக்கும் கிடைக்காமல் போகிறது. நம் ஊரிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும், 30 - 40% மக்கள் சரிவர உணவுகிடைக்காமல் இருக்கிறார்கள். எனவே இது போன்ற திட்டங்கள் அவசியம்... இந்த முரணை எப்படிப் பாக்கறீங்க?

நி.ஜெ: இதில முரண் ஒன்னும் இல்லை. இது தப்புக்கணக்குப் போடறதுனால வர்ற விஷயம். நீங்க விலை மலிவு அப்படீங்கற ஒரு வாதத்தை முன்வைக்கும்போது, அந்தக் கணக்கை எப்படிப் பாக்கறீங்கன்னு ஒரு விஷயம் இருக்கு. பாமாயிலுக்காக, அடர்த்தியான மழைக்காடு அழிக்கப்படும்போது, ஒரு மதிப்பு அழிகிறது. அதற்கு ஒரு விலை இருக்கிறது. அதை நாம் பாமாயில் உற்பத்தி விலையோடு சேர்த்துக் கொள்கிறோமான்னு ஒரு கேள்வி இருக்கிறது. முதல்ல அந்த அழிவின் மதிப்பை நாம் கணக்கிட முடியுமா என்பதை யோசிக்கணும்.

நீங்கள் ஒரு சாதாரணமான ஒரு மனிதன். உங்கள் முன்பு இருக்கும் காடு ஒரு மாபெரும் சூழல். அது கொடுக்கும் பொருட்கள் ஒன்றிரண்டல்ல. பல கோடி. அது உங்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. பலவிதமான உயிர்களுக்கும் சொந்தமானது.

பாலா: இந்தப் புள்ளியில் இருந்துதான் நாம் பேசுவதில்லையோ? இன்றைய நவீன உலகம் மனிதனை மைய மாக வைத்துப் பேசுகிறது. உலகம் எல்லா உயிர்களுக்கும் சொந்தமானது என்னும் ஒரு பார்வையும் இருக்கிறதே.

நி.ஜெ: மனிதனை மையமாக வைத்துப் பேசுவதில் தவறில்லை. ஒரு பழங்குடி சமுதாயம் கூட மனிதனை மையமாக வைத்துதான் பேசுகிறார்கள். ஆனால், மனிதன் நீடிச்சு வாழணும்னா, வண்டு, பட்டாம் பூச்சி, தேனி, பாம்பு இவையெல்லாம் வேணும் என்பதை அவங்க நல்லாப் புரிஞ்சு வச்சிருக்காங்க.

இப்போ இருக்கற பிரச்சினை மனுஷங்கள மையமா வச்ச கண்ணோட்டம் கிடையாது. ஆனா, அது, இப்ப வாழற மனுஷங்கள மட்டும் மையமா வச்ச ஒரு கண்ணோட்டமா இருக்கறதுதான் பிரச்சினை. எதிர் காலத்தை நாம் கணக்கிலேயே எடுத்துக்கல.

எதிர்கால மனுஷங்கள நாம கணக்குல எடுத்துக்கிட்டோம்னா, இன்றிலிருந்து ஏழாம் தலைமுறையைக் கணக்கில் எடுத்துகிட்டோம்னா, கண்டிப்பா, இப்ப நாம செய்யறதைச் செய்ய மாட்டோம்.

இன்னிக்கு எனக்கு என்ன லாபம்னு பாக்கற ஒரு குறுகிய கண்ணோட்டம். அது துரதிருஷ்டவசமானது. அதற்கு நம் அரசியலும் ஒரு காரணம். தலைவர்களின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள் தான். அதுக்குள்ளேயே அவர்கள் தங்கள் சாதனைகளைச் செய்து விட வேண்டும். 20 வருஷம் கழிச்சு, நல்லது நடக்கும்னு சொன்னா, அவருக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள். அதனால, அரசியல் தலைவர்களும் ஒரு நீண்ட கால நோக்கில் யோசிப்பதில்லை.

பாலா: நகரமயமாக்கல், நுகர்வைப் பல மடங்கு அதிகரிச்சிருக்கு. அடிப்படைத் தேவைகள் தாண்டி, நகரங்கள் கேளிக்கைகளுக்கு, பல மடங்கு சக்தியைச் செலவழிக்கின்றன. இந்தப் பின்னணியில், உலகின் பெரும் நகரங்களில், ஏதேனும் ஒன்று, நாம் செல்லும் திசை சரியில்லை. நமக்கான சக்தித் தேவையை, ஒரு நீடித்து நிலைக்கும் வகையில் உற்பத்தி செய்து கொள்ளவேண்டும் என முயற்சிகள் செய்திருக்கின்றனவா? உதாரணங்கள் உண்டா?

நி.ஜெ: நிறைய நகரங்களில் செய்கிறார்கள். ஆனால், அடிப்படைப் பிரச்சினையைப் பேசாமல், இந்த உதாரணங்களைப் பற்றிப் பேசுவதில் பலனில்லை. பல நகரங்கள் முன்னெடுப்புகளைச் செய்யறாங்க. குப்பையைத் தரம் பிரிக்கறாங்க. மக்கும் குப்பையை மக்க வைக்கிறாங்க. தண்ணீர் உபயோகத்தைக் குறைக்கறாங்க. இந்த மாதிரி பல நல்ல விஷயங்களச் செய்யறாங்க. ஆனா, அடிப்படையான பிரச்சினையான அதீத நுகர்வு இன்னும் மாறல.

இந்தச் சுழல்ல நாம எல்லோருமே மாட்டிக்கிட்டு இருக்கோம். இதை மாற்றாமல், நீடித்த தீர்வு சாத்தியமில்லை.

பாலா: இதோட தொடர்புடைய இன்னொரு கேள்வி. பல ஐரோப்பிய நாடுகள் - உதாரணமா ஸ்வீடன், டென்மார்க் போன்ற நாடுகள் தங்கள் சக்தித் தேவைகள்ல 30 - 40% வரை, மாற்று வழிகள் - காற்று, சூரிய ஒளி போன்ற வழிகளில் பூர்த்திச் செய்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில், இந்தத் துறைகளில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. புரட்சின்னே சொல்லலாம். இந்த வழிமுறைகளோட சாத்தியங்கள் என்ன? எல்லைகள் என்ன?

நி.ஜெ: அவங்க 30 - 40% மாறியிருக்காங்கறது தவறான விஷயம். நாம் ஆற்றல் அல்லது சக்தின்னு சொல்றது வெறும் மின்சாரம் மட்டும் கிடையாது. நான் சாப்பிடும் உணவும் ஒரு ஆற்றல்தான். அதை உற்பத்தி செய்யும் மண் அதற்கு மூலப்பொருள். அந்த மண் வளத்தைப் பாதுகாத்தால்தான் எனக்கு உணவும், அதிலிருந்து வரும் சக்தியும் கிடைக்கும்.

எனவே மின்சாரம் மட்டுமே சக்தி கிடையாது. மின்சாரம் மட்டும்னாக்க, அதில சூரியனைப் பயன்படுத்தி, காற்றைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கிறதுங்கறது ஒரு பக்கம். இப்ப மின்சாரத்தை மட்டுமே பேசுவோம் - மிக அடர்த்தியான ஆற்றல் கொண்ட நிலக்கரி, யுரேனியம் இவை மூலமாத் தயாரிக்கும் அளவுக்கு மின்சாரத்தை இந்த மாற்று வழிகள்ல இப்போ இருக்கற தொழில்நுட்பத்தக் கொண்டு தயாரிக்கச் சாத்தியமில்லை

பாலா: ஏன்?

நி.ஜெ: ஏன்னா, தேவையான சக்தியை உற்பத்தி செய்யும் அளவுக்கு இடம் இல்லை.

பாலா: ஐரோப்பிய நாடுகள்ல, வீடு, கட்டிடங்களின் கூரைகள் போன்றவற்றையெல்லாம் உபயோகிச்சு மின்சாரம் உற்பத்தி செய்கிறார்களே...

நி.ஜெ: அப்படி அனைத்து வழிகளை உபயோகித்தாலும், இன்றைய அதீத நுகர்வுத் தேவைகளுக்கு அவைபோதாது. ஸோ... மின்சாரம் எதில் இருந்து வருதுங்கறது மட்டுமே தீர்வு அல்ல. அது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்கப் போவதில்லை. அந்த மின்சாரத்தை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். சூரிய ஒளி அல்லது காற்றிலிருந்து வரும் மின்சாரத்தை நீங்கள் அடிப்படைத் தேவைகளுக்கோ அல்லது பொருள் உற்பத்திக்கோ பயன்படுத்துவது வேறு - ஒரு மாலுக்கோ அல்லது ஐ.பி.எல் மேட்ச் போன்ற ஆடம்பரத்துக்கோ பயன்படுத்துவது வேறு. ஆடம்பரத்துக்குப் பயன்படுத் தறதுக்கு, மின்சாரம் எந்த வழியில் வருகிறது என்பது முக்கியமில்லை. இந்தக் குறைபாடுள்ள ஒரு அமைப்புக்கு, மின்சாரம் காற்றில் இருந்து வந்தால் என்ன? அணு மின்நிலையத்தில் இருந்து வந்தாலென்ன?

பாலா: ஸோ, மாற்று வழி மின் உற்பத்தியினால் பெரிதான மாற்றங்கள் வராதுன்னு சொல்றீங்க...

நி.ஜெ: சின்னச் சின்ன மாற்றங்கள் வரும். அடிப்படைப் பிரச்சினையை உடனே மாற்ற முடியாது. மாற்றுவதற்கான கால அவகாசத்தை இந்த மாற்று மின் உற்பத்தி வழிகள் நமக்குக் கொடுக்கும்.

பாலா: பிரச்சினைகளைத் தற்காலிகமாகத் தள்ளி வைக்க இவை உதவும்னு சொல்லலாமா?

நி.ஜெ: பிரச்சினைகளைத் தள்ளிவைக்கல... இன்னும் நாம் பிரச்சினையை அங்கீகரிக்கவேயில்லை. இன்னும் பழைய கதையவேதான் சொல்லிக்கிட்டு இருக்கோம். மின்சாரம் இல்லாதவங்களுக்கு மின்சாரம் கொடுக்கறோம்னு சொல்ற அதே நாட்டுல, மாதம் 76 லட்சம் மின் கட்டணம் செலுத்தும் செல்வந்தர்கள் இருக்காங்க.

பாலா: சமீபத்துல, க்ரேட்டா துன்பர்க் - னு ஒரு ஸ்வீடன் நாட்டுப் பள்ளிச் சிறுமி, சூழலியல் செயல்பாட்டாளார, ராக்ஸ்டார் மாதிரி கிளம்பி வந்திருக்காங்க. Fridays for Future -னு ஒரு இயக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க.. சில மாதங்கள் முன்னாடி, ஒரு ஐ.நா மாநாட்டுக்காக, ஐரோப்பாவில இருந்து அமெரிக்காவுக்கு, மாற்று சக்தியில இயங்கற ஒரு படகிலப் பயணம் போனாங்க. ஒரு பதின் பருவச் சிறுமியை, 53 வயதான நித்யானந்த் ஜெயராமன் ஏன் கொண்டாடறார்?

நி.ஜெ: நான் முன்பே சொன்ன மாதிரி, நம்மிடம் எதிர்கால மனிதர்களை முன்வைக்கும் பொருளாதாரம் கிடையாது. இன்னிக்கு வாழும் மனிதர்களை மட்டுமே முன்வைக்கும் பொருளாதாரம் மட்டுமே இருக்கிறது. அதற்கு மாறாக, அவர் எதிர்காலத்தின் பிரதிநிதியாக நம் முன்னால வந்து நிற்கிறார். ஏன்னா, எதிர்காலத்தின் பிரதிநிதியாக நம்முடன் பேச யாருமில்லை.

இது மிகவும் முக்கியமான விஷயம். குழந்தைகளை இதற்குள் கொண்டு வரும்போது - அவர்களுடைய எதிர்பார்ப்பும் இதற்குள் வருகிறது. இப்போ கொள்கை முடிவுகளை எடுப்பவர்கள் யாரும் இன்னும் 10 - 15 வருஷத்துக்கு அப்புறம் இருக்கப்போவதில்லை. அப்போது வருங்காலத்தைக் கவனத்தில் கொள்ளாமல் முடிவுகளை எடுக்கும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தாங்கன்னு கேக்கறது ரொம்ப முக்கியம். இந்தக்கேள்வியை நான் கேட்கலாம். ஆனால், அது அவ்வளவு Effective - ஆ இருக்காது. அப்படி ஒரு கேள்வியை ஒரு பள்ளிச் சிறுமி கேட்பது மிகவும் சரியாக இருக்கும். அந்தச் சிறுமி, தானாக எழுந்து இந்த முக்கியமான கேள்வியை எழுப்பியிருக்கிறார். பின்னாடி பல பேர்வந்து உதவியிருக்காங்க. தப்பே கிடையாது. அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டும்.

பாலா: அவங்களோட அந்தப் படகுப் பயணத்தை நீங்கள் எப்படிப் பார்க்கறீங்க?

நி.ஜெ: நல்ல விஷயம். ஏன்னா, இதை விமர்சிக்கறதுக்கு ஆயிரம் பேர் இருக்கிறாங்க. அவர் ஏரோப்ளேனில் போயிருந்தா, பெரிசா சூழல் போராளியா இருந்துக்கிட்டு, ஏரோப்ளேனில் போகிறார்னு சொல்லியிருப்பாங்க. அவங்க படகுல போனதுனால, உலகத்தைக் காப்பாற்றவில்லை. அது ஒரு செய்தியைச் சொல்வதற்காகச் செய்யப்பட்டது.

காந்தி அரையாடையை அணிந்துகொண்டு, எட்டாம் ஜார்ஜ் மன்னருடன் நின்றது மாதிரி. என்னிடம் செல்வமும், ஆயுதமும் இல்லையென்றாலும், என் மக்களின் பிரதிநிதியாக, உன்னுடன் சரிக்கு சரி நின்று பேச வந்திருக்கிறேன் எனச் சொல்லும் அரசியல் ஸ்டேட்மெண்ட்.

பாலா: இதுவும் அதே மாதிரியான ஒரு ஸ்டேட்மெண்டா?

நி.ஜெ: அதே மாதிரின்னு சொல்லமாட்டேன். ஆனால், ஒரு முக்கியமான ஸ்டேட்மெண்ட்.

பாலா: இன்னொரு தலைப்புக்குச் செல்வோம். சமீபத்துல சமூக ஊடகங்கள்ல எழுப்பப்படும் சர்ச்சை இது. இறைச்சி, குறிப்பாக மாட்டு இறைச்சி உண்பது, பூமி வெப்பமயமாவதற்கு ஒரு முக்கியக் காரணம் என்பது. ஆனால், கால்நடை இறைச்சி உபயோகம், இந்திய ஆப்பிரிக்க நாடுகளில், வேறு மாதிரி உள்ளது. ஆப்பிரிக்காவின் பெரும் புல்வெளிகளில், மாடுகள் வளர்க்கப்படு கின்றன. அவை, அந்தப் பகுதி மக்களின் உணவுத்தேவைகளுக்காக மட்டுமெ இன்றுவரை கொல்லப்படு கின்றன. அவர்கள் ஏற்றுமதி செய்வதில்லை. இந்தியாவின் கதை வேறு. இந்தியாவில் பெரும்பாலும் கால்நடைகள் இன்று பாலுக்காக வளர்க்கப்படுகின்றன. பால் வற்றிய பின்பு, பொருளாதார ரீதியாக அவை பயன் இழந்த பின்பு அவை இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன. அந்த இறைச்சியும், தோலும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், ஐரோப்பிய / தென் அமெரிக்க நாடுகளில் அப்படியில்லை. இறைச்சிக்காக மட்டுமே மாடுகள் தொழிற் சாலை முறையில் வளர்க்கப்படுகின்றன. இந்த இரண்டையும் ஒரே மாதிரி பார்ப்பது சரியா? இதில், சைவம் - அசைவம் என்னும் வாதங்களும் வைக்கப்படுகின்றன. இதை எப்படிப் பார்க்கறீங்க?

நி.ஜெ: நான் திரும்பவும் சொல்கிறேன் - சுற்றுச் சூழல் என்பது தனியாக இயங்கும் ஒரு தளமல்ல. அது பொருளாதாரத்துடன், மக்கள் நம்பிக்கைகளுடன், மரபுகளுடன் பின்னிப் பிணைந்து நிற்கும் ஒன்று. ஆனால், ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் கால்நடைகள் வளர்க்கப்படுவது வெறும் வணிக நோக்கத்துடன் மட்டுமே செய்யப்படுவது. அது மக்களோட வாழ்க்கையில், மரபுகளில் இணைந்ததல்ல. அது விற்பனைக்காகத் தயாரிக்கப்படும் ஒரு பொருள். அதோட சூழல் தாக்கம் மிக அதிகம். அது உண்மையான ஒரு விஷயம்தான்.

இறைச்சியை விடுத்து, சைவ உணவை ஒருவர் சாப்பிடலாமான்னா, செய்யலாம். ஆனா, இதுதான் ஒரே வழி, புரட்சின்னு சொல்றது - உள்ளூர்ல இருக்கற அரசியல், மரபு பற்றிய புரிதல் இல்லாத சமூகம் பேசும் பேச்சு.

இப்போது, இந்தியாவில், இந்தக் காலகட்டத்தில், உயர் சாதி ஆதிக்கம் செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், சைவம் - அசைவம் என்னும் வாதம் ஒரு அரசியல் பேச்சாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.

குறிப்பாக அடித்தட்டு மக்களுக்கான புரதத் தேவையை இன்னும் முழுமையாகப் பூர்த்திச் செய்யாமல், அதற்கான வழிவகைகளைச் செய்யாமல், உண்ணும் உணவுகளை நிறுத்துவது சரியல்ல. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யாமல், உண்ணும் உணவை மாற்றுவதால் ஒன்றும் நிகழப்போவதில்லை. இங்கே அதை மாற்ற முடியாது என்பதே உண்மை.

நமது ஊரில், கால்நடைகள், வாழ்நாள் முழுதும் உழைத்து, அவை பொருளாதார ரீதியாகப் பயன் தருவது நின்ற பின்பு, இறைச்சிக்காகப் பயன்படுகிறது. அல்லது அவ்வாறு பயன்படாத காளைக்கன்றுகள் இறைச்சிக்காக உபயோகப்படுகின்றன. இதைச் சுற்றி ஒரு பொருளாதாரம் இயங்குகிறது. இது பன்னாட்டு நிறுவனங்கள் போன்ற ஒரு பொருளாதாரமல்ல. பொருளாதாரத்தின் அடித்தட்டு மக்கள் இயங்கும் பொருளாதாரம். மாடுகள் பயன் தருவது நின்ற பின்பு, அவை பொருளாதார ரீதியாகப் பயன்படுவதே சரியானது. எல்லா மாடுகளுக்கும், ரிட்டயர்மெண்ட் இல்லங்கள் கட்ட முடியாது. அது பெரும் செலவைக் கோரும் செயல். நம்ம நாட்டில் இருக்கும் ஜாதீய ஒடுக்குமுறைகளையும், வேளாண் பொருளாதாரமும் புரியாதவர்கள் இது மாதிரிப் பேசறாங்க.

பாலா: மறுபடியும் இந்தியச் சூழலுக்கு வருவோம். இந்திய சூழலியல் இயக்கங்களின் முக்கியத் தலைவர்கள், வரலாற்று நிகழ்வுகள் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்.

நி.ஜெ: ஒரு தலைவரைப் பத்தி நான் ஏற்கனவே பேசிட்டேன் - பிர்ஸா முண்டான்னு. அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில பிறந்தவர். மிகச் சின்ன வயதிலேயே இறந்துட்டார். 25 வயசு இருக்கும். அவ்வளவுதான்.  வெள்ளையர்களை எதிர்த்து ஒரு மிகப் பெரிய போரைத் தொடர்ந்தார். அதுக்கு முக்கியமாகப் பல காரணங்கள் இருந்தன. முண்டா இனம் என்பது ஒரு செழிப்பான இனம். வனத்துக்குள் வாழ்ந்தவர்கள்.  வெள்ளையர்கள் வந்தவுடன், நிலக்கரிச் சுரங்களுக்காக, வன நிலங்களும், பொதுவெளிகளும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டன. அப்போ அங்கே இருக்கும் பழங்குடியினரிடம், உங்களுக்கு வேறு இடம் தருகிறோம். அங்கே வேளாண்மை செய்ய முடியும் எனச் சொல்லி, அவர்களுக்கான மாற்று நிலம் கொடுக்கப்பட்டது.

பழங்குடியினரின் வேளாண்மை வழிகள் வேறு. வனத்தையும் நம்பிருக்கும் முறை. சமவெளியில், பழங்குடியினர் வேளாண்மை செய்யத்துவங்கும் போது, அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உரசல்கள் ஏற்பட்டன. சமவெளியில், பழங்குடியினர், ஜமீந்தாரி முறைக்கு அவர்கள் வரி கொடுக்க வேண்டியிருந்தது. அந்த முறையில், பழங்குடியினர் பலர் தங்கள் நிலங்களை இழந்தனர். நிலமும் இல்லாமல், வனமும் இல்லாமல், பெரும்பாலான பழங்குடியினர் தங்கள் அடையாளைத்தையே இழந்தனர். அந்த மாதிரியான ஒரு காலத்தில் பிறந்தவர்தான் பிர்ஸா முண்டா.

அந்தச் சமயத்தில இந்திய வனச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதில் வனம் மட்டுமல்லாமல், அதில் உள்ள புறம்போக்கு இடங்கள், வனத்தை ஒட்டியிருந்த விளைநிலங்கள் எல்லாமே கையகப்படுத்தப்பட்டன.

எப்படி, மலேசியாவில், பாமாயில்/ரப்பர் எஸ்டேட் களுக்காக, வனங்கள் அழிக்கப்பட்டனவோ, அதே போல, மரங்களுக்காக, இங்கே வனங்கள் அழிக்கப்பட்டன. வந்தவர்கள் அனைவருமே ஐரோப்பிய சூழலில் வன மரங்கள் வளர்ப்பில் திறன் பெற்றவர்கள். அவர்களில் முக்கியமானவர்,  டீட்ரிச் ப்ராண்டிஸ்ங்கற (Dietrich Brandis) ஜெர்மானிய மரவளர்ப்பு நிபுணர் (syliviculturist). அவருடைய நிபுணத்துவம் என்பது ஜெர்மனி போன்ற சூழலில் இருந்து பெறப்பட்ட நிபுணத்துவம். அங்கே உள்ள காடுகளில், பல சதுர கிலோமீட்டர்களுக்கு, ஒரே மர வகை வளரும். ஆனால், இங்கேயோ, ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில், பல்வேறு மர வகைகள் வளரும் சூழல். அப்போ, அவர்கள் என்ன செய்கிறார்கள் - செயல்திறனை மேம்படுத்த, வனத்தை மொத்தமாக அழித்துவிட்டு, அதில் ஒரு வகை மரத்தை மட்டும் நடும் ஒரு தொழில்முறையைப் புகுத்துகிறார்கள். அது தைல மரமாக (Eucalyptus) இருக்கலாம் அல்லது டக்லஸ் ஃபிர் (Douglas fir) போன்ற மரங்களாக இருக்கலாம்.  இந்தத் திட்டத்திற்கான நிலம் தேடும் போதுதான், இந்த நிலங்களின் மீதான மோதல் வருகிறது.

பிர்ஸா முண்டா, ஆங்கிலேயேர்களின் கொள்கைகளுக்கு எதிராகப் போராட்டம் துவங்குகிறார். இரண்டு ஆண்டுகள் நீடித்த ஆயுதப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு இறந்து போகிறார்.

இன்றும் அவர் பெயர் பொதுமக்களால் நினைவு கூரப்படுவதாக உள்ளது. அவர் பற்றிய வீரகதைகளும், நாடோடிப்பாடல்களும் உள்ளன. அவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகமும் உள்ளது.

1857 ஆம் ஆண்டுச் சிப்பாய்க் கலகத்துக்குச் சில வருடங்கள் முன்பு, சந்தால் பழங்குடியினர் எழுச்சி ஒன்று நிகழ்கிறது. முர்மு (murmu) என அழைக்கப்படும் முர்மு சகோதரர்கள் இதை முன்னெடுக்கிறார்கள்.   கிட்டத்தட்ட 10 ஆயிரம் வீரர்களைத் திரட்டி அவர்கள் போராடுகிறார்கள். இந்தியாவில், சூழலியல் பிரச்சினை என்பது, அது 8 வழிச் சாலையானாலும் சரி, கூடங்குளமானாலும் சரி, அடிப்படையில், அது நிலப்பிரச்சினை தான். வளங்களைப் பகிர்ந்து கொள்ளும் பிரச்சினைதான்.

பாலா: இப்போ, சமீப காலப் போரட்டத்துக்கு வருவோம். இங்கே கேரளாவில நடந்த அமைதிப்பள்ளத் தாக்குப் போராட்டத்தைப் பத்திக் கொஞ்சம் சொல்லுங்க

நி.ஜெ:  இது எனக்கு மிகவும் பிடித்த போராட்டங்கள் இரண்டு. ஒன்று அமைதிப் பள்ளத்தாக்கு, இன்னொன்று கோயல் கரோ (Koel Karo). ஏன்னா, இவை இரண்டுமே தலைவர்களில்லாத போராட்டங்கள். 1950/60 கள்ல இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்தப் பள்ளத்தாக்கில் ஒரு அணை கட்டப்பட்டு, இங்கிருந்து மின் உற்பத்தி செய்து, கேரள மாநிலத்தின் உபயோகத்துக்காக என முன்வைக்கப்பட்ட திட்டம் அமைதிப்பள்ளத்தாக்குத் திட்டம். வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் சிலர், அந்தவெளியில் வாழும் சிங்கவால்க் குரங்குகள் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள், இதைப்பற்றிப் பேசத்துவங்கினார்கள். நம் சென்னையைச் சேர்ந்த வன உயிரியல் காவலர் ராமுலஸ் விட்டேக்கர் (Romulus whitaker) - அப்போது இளைஞர் - அவர், அங்குள்ள பாம்புகள் மற்றும் பல உயிர்கள் பற்றியும் விரிவாக எழுதினார்.  பாம்பே இயற்கை வரலாற்றுக் குழுமம் (Bombay Natural History Society), உலகப் புகழ்பெற்ற பறவையியலாளர் - சலீம் அலி தலைமையில், ஒரு குழு அமைக்கப்பட்டு, பல்லுயிர்ப் பாதுகாப்பு என்னும் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு, இந்த அணைக்கு எதிரான அறிவியல்பூர்வமான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சூழலியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வு. அறிவியல் அறிஞர்களே, செயல்பாட்டாளர்களாக மாறிய ஒரு அற்புதமான தருணம். வழக்கமாக அரசு விஞ்ஞானிகள் முதுகெலும்பில்லாத ஆட்களாகத்தான் இருப்பார்கள். அரசு திட்டங்களுக்கு எதிராக எதுவும் பேச மட்டார்கள்.

எம்.எஸ் ஸ்வாமிநாதன் இதை ஆய்வு செய்து, இந்த இடம் பல்லுயிர்ப் பூங்காவாக மாற்றப்பட வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறார். (பேராசிரியர் எம்.ஜி.கே மேனன் தலைமையில், மாதவ் காட்கில் போன்ற சூழலியல் அறிஞர்கள் ஒரு குழு அமைக்கப்பட்டு, இந்தத் திட்டம் பரிசீலிக்கப்பட்டு, அதன் பாதகங்கள் அறிக்கையாக வெளியிடப்பட்டன - பாலா). இது இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு திட்டமாக மாறியது. கேரளாவில் பல போராட்டக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கலைஞர்களும், கவிஞர்களும் இதில் இணைந்து, பெரும் மக்களியக்கமாக, அர்பன் போராட்டமாக மாறுகிறது. எப்படி மெரினாவில், ஜல்லிக்கட்டுக்காக, ஜல்லிக்கட்டையே பார்த்திராத இளைஞர்கள் அதற்காகப் போராடினார்களோ அதே மாதிரி.

இந்தத் திட்ட காலத்தில் பல பிரதமர்கள் வந்து போனார்கள், சரண்சிங்கில் துவங்கி. மொரார்ஜி தேசாய்,இந்தத் திட்டத்துக்குப் பெரும் ஆதரவாளர். ஆனால், இறுதியில் இந்திரா காந்தி வந்த பின்பு, அவர் இதில் தலையிட்டு, விஞ்ஞானிகளின் பரிந்துரையின் பேரில், இந்தத் திட்டத்தைக் கைவிட முடிவெடுத்தார். அதன் பின் பலகாலம் கழிந்து, இது அதிகாரபூர்வமாகக் கைவிடப்பட்டது.

பாலா:  1972 ஸ்டாக்ஹோம் மாநாட்டுக்கான ஆயத்தங்கள் நிகழ்வதைக் கண்ட காந்தியின் சீடர் மீரா பென், இந்த மாநாட்டில், இந்தியாவின் குரல் வலுவாக ஒலிக்க வேண்டும் என இந்திரா காந்திக்குச் செய்தி அனுப்பினார். அதற்கான முதல்படியாக, இந்தியாவில் முதன்முறையாகச் சுற்றுச் சூழல் பற்றிய முதல் அறிவியல் கருத்தரங்கை விண்வெளி ஆராய்ச்சித் தலைவரான விக்ரம் சாராபாய் ஒருங்கிணைத்தார். அதன் பின் ஸ்டாக்ஹோம் மாநாட்டில் இந்திரா காந்தி பங்கு பெற்று, புகழ்பெற்ற அந்த உரையை நிகழ்த்தினார். அதற்குப்பின் தான் இந்தியாவில், தேசியப் பூங்காக்கள் நிறுவப்பட்டு, வனப்பாதுகாப்பு முறையாக முன்னெடுக்கப்பட்டது என்று முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சரான ஜெய்ராம் ரமேஷ், “Indira - A Life in Nature”, அப்படீங்கற புத்தகத்தில் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல், சிப்கோ இயக்கம், அமைதிப்பள்ளத்தாக்கு, தேரி அணை போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு எழுகையில், இந்திரா காந்தி, அதிகாரிகளைத் தாண்டி, அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பையும் எடுத்துச் செயல்பட்டார்னு சொல்றார். இதுபற்றிய உங்கள் கருத்து என்ன?

நி.ஜெ:  இப்ப இருக்கற தலைவர்களோடு ஒப்பிடுகையில், இந்திரா காந்தி, நிச்சயமாக அறிவியல் அறிஞர்களின் பார்வைக்கும், மக்களின் குரலுக்கும் இந்த விஷயங்களில் மதிப்பு கொடுத்தார்னு சொல்லலாம். அமைதிப் பள்ளத்தாக்குப் பிரச்சினையில், அறிஞர்களின் பரிந்துரையை மதித்து அந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அது நல்ல விஷயம் அதே நேரத்தில், ஸ்டாக்ஹோம் போய் வந்த பின்பு, வன விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தார். அந்தச் சட்டத்தின் அடிப்படையில்தான், தேசியப் பூங்காக்களும், வன விலங்குச் சரணாலயங்களும் அமைக்கப்பட்டன. இதுபோன்ற திட்டங்கள், அமெரிக்கா போன்ற நாடுகளில் தோன்றியவை. அங்கே அவற்றுக்கான உண்மையான காரணம், செவ்விந்தியர்களைப் பல இடங்களில் இருந்து அகற்றி, அந்தச் சூழலைப் பாதுகாக்கப் போகிறோம் என்னும் போர்வையில் கொண்டு வரப்பட்டவை. அதாவது, மனிதர்களும், இயற்கையும் ஒன்றிணைந்து வாழ முடியாது என்னும் ஒரு தவறான கண்ணோட்டத்தில் பிறந்த திட்டங்கள் அவை.

என்னைப் போல ஆட்கள், இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்தல் கடினம்.  ஆனால், வனங்களில் வாழும் பழங்குடியினம், அந்த இயற்கையோடு இணைந்து மட்டும்தான் வாழ முடியும்.

இந்தத் தேசியப்பூங்காக்கள், சரணாலயங்கள் எல்லாமே, வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட திட்டங்கள். இறக்குமதி என்பதாலேயே, அவை தவறு எனச் சொல்ல மாட்டேன். நல்ல விஷயங்களும் உள்ளன.

ஆனால், இந்தத் திட்டத்தில் உள்ள பிரச்சினை என்னன்னா, இதில் பங்களிப்பு செய்த அறிவியல் அறிஞர்கள். நாம் அறிவியல் என்றாலே, ஒரு குறிப்பிட்ட வகை மனிதர்களை - கல்லூரியில் படித்தவர்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்கிறோம் - ஜெய்ராம் ரமேஷின் புத்தகத்தை நானும் படித்தேன் - இந்திரா காந்தியைச் சுற்றி இருந்த அதிகாரிகள் / அறிஞர்கள் பலரும் சென்னையைச் சேர்ந்த, ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுக்கு வனப் பாதுகாப்பைப் பற்றி என்ன தெரியும்?

இந்தத் திட்டங்களைத் தீட்டுகையில், அங்கு வாழ்ந்த பழங்குடியினரின் தொழில்நுட்பங்களை, வனவியல் அறிவை நாம் கணக்கில் எடுத்தோமா? அதற்கு மதிப்புக் கொடுத்தோமா என்றால் - கண்டிப்பாக இல்லை.

நேர்மாறாக, இந்தச் சட்டத்தின் மூலம் உருவான, வனத்துறைதான் வனப்பாதுகாப்புக்குப் பெரும் எதிரியாக உருவெடுத்தது.  வனத்துக்குள் வசிக்கும் பழங்குடியினருக்கு, அரசு என்றாலே, காக்கிச் சீருடை அணிந்து, கையில் லத்தி வைத்திருக்கும் ஒரு வில்லன். இந்தச் சட்டம்தான், பழங்குடியினரை வனச்சூழலில் இருந்து வெளியேற்றும் ஒரு போக்கைத் துவங்கி வைத்தது. ஒரு பெரும் கொடுமை அவர்களுக்கு நிகழ்ந்தது. அவ்வாறு செய்ய வேண்டும் என அந்தச் சட்டம் சொல்லவில்லை. ஆனால், அதை நிறைவேற்றிய விதத்தில், அந்தக் கொடுமைநிகழ்ந்தது.

அந்தச் சட்டத்தினால், வன எல்லைகள் பாதுகாக்கப்பட்டன. அதனால், பொதுச்சமூகம் பலனடைந்திருக்கிறது. ஆனால், அதுவரை வனங்களின் ஒரு பகுதியாக இருந்து, அதோடு ஒன்றிய ஒரு வாழ்க்கை முறையை, அந்தச் சூழலைப் பாதுகாத்து வந்த மக்களை, அந்தச் சட்டம் நிராகரித்து வெளியேற்றிவிட்டது. இது மிகப் பெரும் அநீதி.

பாலா: ராஜஸ்தானில், ராஜேந்திர சிங் என்பவர், இதுவரை, 9 ஆறுகளை மீட்டெடுத்து, அவற்றில் நீரோட்டத்தை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்னு சொல்றாங்க.  ராஜஸ்தான், இந்தியாவில் மிகக் குறைவாக மழை பெறும் மாநிலம். அங்கே, இதுபோன்ற ஒரு நேர்மறை நிகழ்வு நடந்திருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

நி.ஜெ: அது சாத்தியமான ஒன்றுதான். நதிகளில் மீண்டும் நீர் ஓட வைக்கணும்னா, அதற்குத் தேவையான, முன்பிருந்த  சூழல்களை மறுஉருவாக்கம் வேண்டும்.  இதைச் செய்து, ராஜேந்திர சிங் வெற்றியடைந்திருக்கிறார் என்பது உண்மைதான்.

இதில் முக்கியமான பிரச்சினை என்னன்னா, நாம் ஆற்றில் இருக்கும் நீரைச் சுரண்டி எடுத்து விடுகிறோம்.  ஆற்றின் வழியில், பெரும் அணைகள், தடுப்பணைகள் எனக் கட்டி, ஆற்று நீரை வெளியேற்றிவிடும் போது, ஆற்றில் நீரோட்டம் எப்படி இருக்கும்? இதெல்லாம் செஞ்சிட்டு, நீங்க மரம் நட்டாலோ, பஸ்ஸை எரித்தாலோ, ஆற்றில் நீர் ஓடாது. ஆற்றில் நீர் ஓட வேண்டுமெனில், விவசாயத்துக்கு எடுத்து உபயோகப்படுத்தப்படும் நீரை, எடுக்காமல் அல்லது மிகக் குறைவாக எடுத்துக் கொண்டு, மீதமுள்ள நீரை ஆற்றில் ஓடவிடவேண்டும். விவசாயத்துக்கு, மிகக் குறைந்த நீர் உபயோகிக்கும் வழிகளைக் கையாள வேண்டும். நாம விவசாயம் செய்யும் முறைகளை மாற்றாமல், நம் பொருளாதார அமைப்பை மாற்றாமல், காவிரியில் தண்ணீர் ஓடாது.

பாலா: ஏழை மக்கள், தங்கள் அடிப்படைத் தேவைகளை அவர்கள் நிறைவேற்றும்போது, சூழலியல் பிரச்சினைகள் ஏற்படுகின்றன எனச் சொல்கிறார்களே? சென்ற வாரத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில், கடற்பாசி சேகரிக்கும் பெண்கள், சென்னையில் ஒரு விழாவில், எப்படி அவர்கள் சூழலியலைப் பாதிக்காமல் கடற்பாசி சேகரிக்கிறோம் எனச் சொன்னார்கள். ஏழைகள் Vs சுற்றுச்சூழல் பாதிப்பு என ஒரு மோதல் உருவாகிறது. அவர்களால்தான், சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமாகிறது என ஒரு கருத்து இருக்கு. இதை நீங்க எப்படிப் பாக்கறீங்க?

நி.ஜெ: சுற்றுச்சூழலைப் பாதிக்கும் அளவுக்கு ஏழைகளிடம் சக்தி இல்லை என்பதுதான் உண்மை. எடுத்துக்காட்டாகத் தீபாவளிப்பண்டிகையின்போது, எந்தத் தெருவில் அதிகமாகக் குப்பை இருக்கும் எனப் பார்த்தாலே தெரிந்துவிடும். அதிகமாகப் பணம் இருக்கும் தெருவில் தான் அதிகமாகக் குப்பை இருக்கும். இன்றைய பணம் நாளைய குப்பை. சூழல்கேட்டிற்கு மிக முக்கியமான காரணம் அதீத செல்வம். இன்றைய சூழல்கேட்டுக்கு மிக முக்கியமான காரணம் பணக்கார நாடுகள்தான். அதே போல்தான் நீங்கள் இந்த விஷயத்தையும் பார்க்க வேண்டும்.

ஏழைகள் தாங்கள் வசிக்கும் சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்க மாட்டார்கள் எனச் சொல்லமாட்டேன். ஆனால், அந்தச் சூழலுக்குக் கேடு விளைந்தால், அதன் முதல் பலி அவர்கள்தான். நமக்கு, பத்துப்படிகள் தாண்டிதான், அதன் பாதிப்பு வரும்.

இந்தக் கடல்பாசி சேகரிக்கும் பெண்களுக்கு, கடல்பாசி என்பது வங்கி மாதிரி. அதில் இருக்கும் செல்வத்தை முழுவதும் வழித்து எடுத்துவிட்டால், அவர்களுக்கு அடுத்த நாளுக்கு ஒன்றும் இருக்காது. அவங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்ல வர்ல. புத்திசாலிகள். அவங்களுக்கு நாளைக்கும் வருமானம் வேணும்கறதுக்காக, அந்தச் சூழலை நீடித்து நிலைக்கும் வகையில், தங்கள் கடற்பாசி சேகரிக்கும் முறைகளை மாத்தி அமைச்சிக்கிட்டாங்க. இவங்க ஒரு சிறு குழுதான். இவங்களை விட்டிருவோம். ராமநாதபுரத்தில் இருப்பவர்கள், ராமநாதபுரத்தில்தான் இருப்பாங்க.

இப்போ ஸ்டெர்லைட் போன்ற ஒரு தொழிற் சாலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுக்கும் தூத்துக்குடிக்கும் என்ன தொடர்பு?  தூத்துக்குடியில் பிரச்சினை எனில், இன்னொரு இடத்துக்குப் போக முடியும். ராமநாதபுரம் கடற்பாசி சேகரிக்கும் பெண்களால் இடம் பெயர முடியாது. அவங்களுக்கு அதுதான் ஒரே வழி. அந்தச் சூழல் ஒழுங்காக இருந்தால்தான் உயிர்வாழ முடியும். பன்னாட்டு வணிகத்துக்கும், உள்ளூர் வணிகத்துக்கும் இதுதான்  முக்கியமான வித்தியாசம். உள்ளூர் வணிகம், அந்த இடத்துடன் வேரூன்றிய ஒரு வணிகம். எனவே அது இருக்கும் சூழல் அழிந்தால், அந்த வணிகம் அழியும். மக்களும் அழிவார்கள்.

பாலா: இந்த நேர்காணலின், ஒரு சரடாக, நீங்கள்தொடர்ந்து ஒன்றைச் சொல்லி வருகிறீர்கள். இந்த உலகத்தில் மக்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியாகிறது. அதன் பகிர்வுதான் பிரச்சினை.  உணவுப் பற்றாக்குறை என்னும் பிரச்சினை கூட, அது ஆடம்பரத்துக்கும் உல்லாசத்துக்கும் செலவிடப்படும் போதுதான் வருகிறதுன்னும் சொன்னீங்க. இந்த இடத்துல. காந்தியின், மிகப் புகழ்பெற்ற வாசகமான, ““The world has everyone’s need; But not enough for one man’s greed”, நினைவுக்கு வருகிறது. நவீன உலகில், சூழலியல்வாதம் காந்தியில் இருந்து துவங்குகிறதுன்னு சொல்லலாமா?

நி.ஜெ: நிச்சயமாகச் சொல்லலாம்.  கொஞ்சம் நகைச்சுவையாகச் சொல்லணும்னா, அவர் வடிவேலு மீம்ஸ் மாதிரி. எல்லா விஷயத்தைப் பத்தி, எல்லாத்தையும் சொல்லிட்டார். மிக முக்கியமான விஷயம் என்னன்னா, மிக ஆழமான கருத்துக்களை, மிக எளிமையாகச் சொல்லியிருப்பதுதான். அவரது சூழலியல், பொருளாதார அடிப்படையைக் கொண்டது. Economic Perspective வைக் கொண்டதுதான், அவரது சூழலியல்.

ஜே.சி.குமரப்பா எழுதிய Economics of  Permanence இதைத்தான் சொல்கிறது. அவரது எழுத்துகளில், சூழல் என்னும் வார்த்தை வருவதில்லை. ஆனால், அவர் சொல்லும் ஒவ்வொரு வாதத்திலும், சூழலும், அதன் பாதுகாப்பும் (நீடித்து நிலைக்கும் தன்மையும்) பின்னிப் பிணைந்திருக்கிறது.

பாலா: தமிழகத்தில், நம்மாழ்வார் மாதிரி, இயற்கை வேளாண்மையை முன்னெடுத்த ஒருவரை, அவரின் பங்களிப்பை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நி.ஜெ: அவரது பங்களிப்பை இரண்டு விதமாகப் பார்க்கமுடியும். இன்றைய தமிழ் இளைஞர்களுக்கு, தமிழ் மரபு / பண்பாடு என்றால் என்ன என்பதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை உண்டாக்கினார்.

பாலா: அது ஏன் முக்கியம்?

நி.ஜெ: ஏன் முக்கியம் என்றால், வேர் முக்கியம். வேரில்லாமல், எல்லோரும் எல்லா இடங்களிலும் சுற்றித்திரியும் வாழ்க்கையில் இருந்தால், சூழலைப் பாதுகாக்க ஒருவரும் இருக்கமாட்டார்கள். இப்ப, தமிழகம் என்பது நமக்குச் சொந்தமான மண்.  இந்த இடத்தில் வாழும் மனிதர்களுக்கு முக்கியமான மரபுகள் / பண்பாடுகள் முக்கியம். நம்மாழ்வார், நமது விவசாயம், உணவு, பொருளாதாரம், கலாச்சாரம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்வியலைப் பேசினார்.  தமிழ் தமிழ் என மார்தட்டிக் கொள்ளும் அடையாள அரசியல் அல்ல அது.

இரண்டாவது, அந்தப் பார்வையை அவர் யார்முன் வைத்தார், எந்தக்கட்டத்தில் இதைச் செய்தார் என்பது.அவர் உள்ளே வரும்போது, இங்கே தகவல் தொழில் நுட்பம் ஒரு பெரும் பாய்ச்சலில் இருந்தது. ஊரக, வேளாண் பின்னணியில் இருந்து, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில், வேலை செய்யத் துவங்கி, பொருளாதார ரீதியாகப் பயன்பெற்ற காலம். அவர்களில், பலர், சில காலம் வேலை செய்யத் துவங்கியபின், பொருளாதார ரீதியாகப் பயன்பெற்றிருந்தாலும்,  ஏதோ ஒன்று குறைவதாக உணர்ந்தார்கள்.  சைபர் உலகக் கூலியாக வேலை செய்வதன் பொருளின்மையைப் பலர் உணர்ந்தார்கள். அவர்கள் தங்கள் வேலையைத் தாண்டிய ஒரு தேடலில் இருந்த காலக் கட்டத்தில் நம்மாழ்வார் ஐயா வந்தார்.

முன்னே சொன்ன மாதிரி, 60களில் ராக் ம்யூசிக் எப்படி எழுந்து வந்ததோ, அப்படி எழுந்து வந்த ஒரு ராக்ஸ்டார் தான் இவரும். இந்தப் பாதிப்பில், இன்னும் பல நூறு இளைஞர்கள், வருடத்துக்கு ஒருமுறை வானகத்துக்குச் சென்று வருகிறார்கள். பல ஆயிரம் பேர், அவர் வழியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

பாலா: அவர் மீது, தமிழக அறிவியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் உர / விதை / பூச்சி மருந்து நிறுவனங்கள் தரப்பிலிருந்து பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அவர் வாதங்கள் அறிவியல் பார்வைக்குப் புறம்பானவை. பல விஷயங்களை அவர் அறிவியலற்ற விதமாகப் பேசினார்னு சொல்கிறார்கள். அதை நீங்கள் எப்படிப் பாக்கறீங்க?

நி.ஜெ: அறிவியலை எப்படி வரையறுக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது. பி.எச்.டி படிப்புதான் அறிவியலா? வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து வெளியே வருபவர்கள் மட்டும்தான் அறிவியல் அறிஞர்களா?  அப்படீன்னா, ஒரு உழவர் அறிவியல் அறிஞராக இருக்க முடியாதா? ஒரு மீனவர் மீன் துறை அறிஞராக இருக்க முடியாதா?  என்னும் கேள்விகள் எழுகின்றன. நீங்கள் முறையான கல்வி முறையில் படிப்பது மட்டுமே அறிவியல்னு சொன்னீங்கன்னா, அப்போ, அவர்கள் சொல்வது சரியாக இருக்கலாம்.

என் பார்வையில் அப்படி இல்லை. தரவுகள் மூலம் நிருபிக்கப்படும் அறிவியல் மட்டுமே போதுமானதல்ல. இத்துடன் மரபுகளும் சூழலும் இணைந்துள்ளன.  விவசாயம் என்பது, ஒரு தொழிற்சாலை போல, மண்ணில் இடுபொருள் இட்டு, தானியத்தை மட்டும் அறுவடை செய்வதல்ல. அதை நான் தானியம் மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாகப் பார்க்கவில்லை. அந்த மண் வளம் காக்கப்படனும். அதில் தானியமும் விளையனும். அதை நம்பியிருக்கும் மற்ற உயிர்களும் காக்கப்படனும். நெல் விளையும் பூமியில், நெல் மட்டுமே விளைவதில்லை. அதில் நண்டு இருக்கும், மீன் இருக்கும். அதைப் பிடித்து உண்பவர்களும் இருக்கிறார்கள்.  பூச்சி மருந்துகளின் உபயோகத்தால், அதில் உள்ள மற்ற உயிரினங்கள் இல்லாமல் போய் விடும். குட்டையான நெல் ரகங்கள் வந்த பின்பு, அதன் வைக்கோல் அளவு குறைந்து, மாட்டுக்கான தீவனம் கிடைப்பது குறைந்துவிடுகிறது.  ஆடுமாடுகளின் கழிவுகளை நாம் உரமாகப் பயன்படுத்துகிறோம். அந்த ஒரு சுழற்சி பாதிக்கப்படுகிறது. தானிய உற்பத்தியை மட்டுமே நோக்கும் ஒரு குறுகலான கண்ணோட்டத்தில், இந்த அறிவியல்துறை செயல்படுகிறது. நம்மாழ்வார் சொல்லும் வழி, பரவலான கண்ணோட்டத்தைக் கொண்டது. அந்தப் பொருளாதாரம், வழக்கமான பொருளாதார பிரமிட் அமைப்பைக் கொண்டிருக்காது. அது, தட்டையாக இருக்கும். அதன் பொருள் என்னவெனில், உற்பத்தியின் மதிப்பு, பொருளாதார அடித்தட்டிலேயே இருக்கும்.  அதன் உபரி, மற்ற துறைகளில் நிகழ்வதுபோல சில தொழிலதிபர்களிடம் சென்று சேராது.

பாலா: காந்தியும் சரி, நம்மாழ்வாரும் சரி - நிலத்தைத்தானியம் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையாக மட்டுமே பார்க்காமல், நிலத்துடன், மக்களுடன் இணைந்த ஒரு முழுமையான  சூழலாகப் பார்க்கிறார்கள். ஆனால், இன்று உலகம், தனித்தனி கம்பார்ட்மெண்ட்களாகப் பிரிந்திருக்கிறது. Specialization என்பதே இன்று வழக்கமாகி விட்டது. இந்தச் சூழலில், மக்கள் திரும்பவும் ஒரு முழுமையான வாழ்க்கை முறைக்குத் திரும்புவது சாத்தியமா?

நி.ஜெ: அந்த முழுமையான நிலைக்குப் போக முடியாது. ஆனால், அந்தக் குறிக்கோளை அடைய நாம் புதிய வழிமுறைகளைச் சமைக்க முடியும்.  அங்கே போக முடியுமா முடியாதான்னு ஜோசியர்தான் சொல்ல முடியும்.  நான் என்ன சொல்கிறேன் என்றால் - அது சாத்தியமா இல்லையான்னு கூட இன்று தெரியாது. ஆனால், இன்று நாம் சென்று கொண்டிருக்கும் திசையில் பெரும் சிக்கல் உள்ளது என்று சொல்கிறேன். எனவே, இங்கே நம்மாழ்வார் முன்வைக்கும் வழி இதற்கான மாற்றாக இருக்கலாமா என்பதை யோசிக்கலாம். இதுமட்டும் தான் வழி என நான் சொல்லவில்லை.  ஆனால், ஒரு மாற்று வழிக்கான தேடலில் நாம் இறங்கியே ஆகவேண்டும்.

பாலா: தமிழகத்தைப் பாதிக்கும் பெரும் பிரச்சினைகள் என்னென்ன? நீங்கள் தமிழகத்தின் பொருளாதாரத்தைத் திட்டமிடுபவராக இருந்தால், அவற்றை எப்படி அணுகுவீர்கள்?

நி.ஜெ: எல்லா நிலைகளிலும் சமத்துவமும், ஜனநாயகமும்தான் அடிப்படைத் தேவை.  உதாரணமாகச் சொல்லனும்னா, நான் வசிக்கும் இந்தத் தெருவில் குப்பை இருக்கிறது. என்னுடைய பார்வையில், அதற்கான தீர்வு,அதை அப்புறப்படுத்துவது. அந்தக் குப்பை அப்புறப்படுத்தப்பட்டுக் கொடுங்கையூர் செல்கிறது. கொடுங்கையூர்வாசிக்கு, என் தீர்வு, பிரச்சினையாக மாறுகிறது. என்னைப் போன்ற ஒரு மனிதருக்கு இருக்கும் அதிகாரம், கொடுங்கையூரில் வசிக்கும் ஒரு சாதாரண மனிதருக்கும் இருந்தால், இந்தத் தெருவில் இருக்கும் குப்பை கொடுங்கையூருக்குப் போகாது. இந்த நிலை வரும்போது, சுற்றுச்சூழல் பிரச்சினைக்கான தீர்வுகளை நாம் காணமுடியும். இன்னிக்கு நாம் தீர்வுன்னு சொல்ற விஷயங்கள் எல்லாமே, நம்ம பிரச்சினைகளை இன்னொருவர் தலையில் கட்டுவதாக உள்ளன.  வனத்தைப் பாதுகாக்கனும் - பழங்குடியினரை தூக்கி வெளியில் போடு. எனக்கு அணுமின் நிலையம் வேணும் - கூடங்குளத்தில் ஏற்படுத்து. எட்டு வழிச்சாலை வேணும் - இன்னொருவர் வாழும் நிலத்தில் அமைத்துக் கொள். இப்படி ஒரு திட்டம் அமைக்கையில், அதை வேண்டும் எனச் சொல்லும் உரிமையும், வேண்டாம் எனச் சொல்லும் உரிமையும் இருக்கவேண்டும். இப்போது வேண்டும் எனச் சொல்லும் குரல் மட்டும்தான் ஓங்கி ஒலிக்கிறது. அது மாறனும். அவை ஜனநாயக முறையில் அனைத்துத் தரப்பாலும் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படவேண்டும். அப்படிஎட்டப்படும் முடிவுகளையே முன்னெடுக்க வேண்டும்.

பாலா: பொறுமையாக உரையாடியமைக்கு மிக்க நன்றி.

நி.ஜெ: நன்றி.

--

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer