“என் படைப்புகளில், வண்ணங்களைப் பிரயோகிப்பது பற்றி ஒருபோதும் நான் பயப்படுவதில்லை. அதனால்தான், பொதுவாக இயற்கையுடனும் நிலப்பரப்புகளுடனும் பாரம்பரியமாகத் தொடர்புபடுத்தப்படாத சேர்க்கைகளை நான் அடிக்கடி பரிசோதிக்கிறேன். இந்தத் துணிச்சல், இயற்கையை ஒரு வகையில் என் படைப்பு மனதால் புனிதப்படுத்துதல் என்று உணர்கிறேன்.”
- கிளேர் பிரெம்னர் (Clair Bremner, Australia)
பொதுவாக, சில நூற்றாண்டு கால ஓவியங்களில் ‘கேன்வாஸ்’ என்பது தவிர்க்கவியலாத ஒரு பொருளும் சொல்லும் ஆகிவிட்டிருக்கிறது. அதே சமயம் அந்தக் கேன்வாஸ், ஒவ்வொரு ஓவியர்களால் பயன்படுத்தப்படும் வண்ணங்களோடும் வண்ணங்களைச் செலுத்தும் பொருட்களின் வழி உறவுகொண்டு பார்வையாளர்களான நம் எதிரில் காட்சிக்கு வருகிறது. அப்படி வரும்பொழுது நம் அனுபவத்தின் அடிப்படையில் ‘அந்த ஓவியம்’ என்ற கருத்தாக்கத்தையும் அமைப்பினையும் நாம் நெருங்குகிறோம். மேலும் அந்த அமைப்பினை வளர்த்தெடுக்கும் நம் பயணத்திற்கு, பார்வை மற்றும் தொடுதல் ஆகிய இரண்டு புலன்களால் ஊக்கம் பெறுகிறோம். அந்தச் சுதந்திர ஊக்கமே, வளர்ச்சியுற்று நமக்குள் ஆழ்ந்த உணர்வை அனுமதிக்கிறது. அப்போது, கேன்வாஸ் என்பது மறைந்து உணர்பொருள் வளர்கிறது.
இதனடிப்படையிலேயே உலகெங்கிலும் உள்ள பல கலைஞர்கள் தங்கள் அகத்தூண்டல்களைப் பார்ப்பவருடன் உரையாடலாக்க, தான் வினையாற்றும் புறப்பரப்பில் வெவ்வேறு வண்ண வினியோக முறைகளையும் புதிய பல பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். அவ்வகையில் தமிழ் ஓவியப்பரப்பிலிருந்து வளர்ந்து இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாட்டு ஓவிய ஆர்வலர்களின் கவனம் பெற்றவைதான் ஓவியர் கயல்விழியின் படைப்புகள்.
கயல்விழி, புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடம் எனும் பெயரில் அமைந்த நுண்கலைக் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் (Visual Communication) சிறப்புப் பாடமாகப் பயின்றவர். தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசிக்கிறார். கல்லூரிக் காலங்களின் இறுதியில் தன் சுயத்தேடலாகப் பாடப்பகுதியைத் தாண்டி, ஓவியம் தீட்டுவதைத் தொடர்ச்சியாக்கிக் கொண்டவர். அன்றிலிருந்து தன் கலைப்படைப்பை பல்வேறு படிநிலை அனுபவங்களுக்கு உட்படுத்திக் கொண்டபடி உறுதியுடன் தொடர் படைப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு லட்சிய நபர்.
“என் படைப்பில் மேலோங்கியிருக்கும், கற்பனைத்தன்மை என்பது, எனது பள்ளிக் காலங்களில், பார்த்த, பயணித்த கிராமங்களும் அதன் உள் அடுக்கு மனிதர்களும் அவர்தம் வண்ணங்களும் கதைகளும் அசைவுகளுமே ஆகும். அந்த ஞாபகத்தின் நம்பகத்தன்மையை ஒன்று திரட்டி வெவ்வேறு ஒளி வீச்சின் மதிப்புகளை இன்றைய நாட்களில் கண்டடைவதே என் ஓவியங்கள்.” என்று தீர்க்கமாகத் தன் சிறு வயது நினைவுகளைப் படைப்பின் சாட்சியாக வைத்துக்கொண்டு, படைப்பின் வழங்குமுறையில் சில புதிய அணுகுமுறைகளைக் கண்டெடுத்து, பார்வையிடும் நம் குழந்தைமையையும் மீண்டெழச் செய்துகொண்டிருக்கிறார்.
இவரின் அண்மைக்கால ‘அமைதி’ (Transquility) எனும் தலைப்பில் பெங்களூருவில் நிகழ்ந்த கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள், நாம் நம் பூமியின் வேர்களைத் தொட்டுப்பார்க்கும் வாய்ப்புக்கு ஈடான ஒரு உணர்வை உரையாடல்களாக்கியது. அந்த உரையாடலின் மையம் என்பது, தொடக்கத்தில் குறிப்பிட்டது போல ஒவ்வொரு ஓவியங்களிலும் கேன்வாஸ் என்பது மறைந்து உணர்பொருள் வளர்கிறது.
நாம் அந்த வெளியிலேயே இருக்கிறோம், அந்த வெளி நமக்குள் இறங்கியதாய் இருக்கிறது, அப்பரப்பில் அசையும் மலர் மொட்டுக்களின் கனம் நமக்குக் கிடைக்கிறது, பல நேரம் அந்த நீர்ச்சுனை கலங்கி வண்ணம் மாறி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகிறது. இந்த உரையாடல் சாத்தியங்களைத் தரவல்லதாய் அப்படைப்புகளில் அவர் கட்டமைக்கும் வண்ணங்களின் விநியோக முறைகள் (Color Distribution method) விளங்குகிறது. குறிப்பாக, வண்ணங்களைப் பிரஷ் தவிர்த்து கத்தி, உடைந்த சீப்பு, கரண்டி, பஞ்சு மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றினைக் கொண்டு தீட்டியும் வைத்தும் குழைத்தும் எனப் புதுப்புது சொல்லாடல்களை நமக்குத் தந்திருக்கிறார். இந்த அனுபவத்தின் வழி பின்னோக்கிச் சென்று அவரது ஆரம்பகால ஓவியங்களைப் பார்க்கும்பொழுது, பொருண்மைகளில் சில மாற்றங்களோடு இப்போது கிடைக்கும் இந்த உணர் படிமங்களை அப்போதிலிருந்தே தேடத் தொடங்கியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.
கயல்விழியின் ஆரம்பக்கால ஓவியங்களில் மனிதர்கள் அசையும் கிராமத்தின் நிலப்பரப்புகள், சிறுவர் விளையாட்டுக்கள் மற்றும் உயிரினங்களின் இருப்பு நிலைகள் நிறைந்தவையாய் இருக்கின்றன.
அதே சமயம், அவை வெளிப்பாடு கொள்ளும் வழிகளில் அந்த நிலத்தின் பிரதான பாத்திரங்களை அந்த நிலத்தின் உணர்வு வண்ணங்களைக் கொண்டு கட்டமைக்கும் வழி கண்டடைந்தவராய் இருக்கிறார். அதன் தொடர்ச்சியாக அவர் தன் அடுத்த வரிசைப்பயணத்தில், நகரத்தின் இயந்திரச்சூழலில் கடிகார முள்ளின் விரட்டலுக்குள் அல்லல் படும் மனிதர்களின் வாழ்வியலைத் தீட்டியதிலும் தொடர்ந்திருக்கிறார்.
அப்படித் தொடர்ச்சியாக அவர் தன் செயல்பாட்டு ஊடகத்தில் வினையாற்றியபடியே இருப்பதன் வழி, ஓவிய உருவாக்கத்தில் சில தெளிவுகள் பெற்றவராகியிருக்கிறார். அத்தெளிவு, அமெரிக்காவின் அரூப ஓவியர் மார்க் ரோட்கோ (Mark Rothko)வின் பார்வையோடு ஒப்பு நோக்கத்தக்கதாய் இருக்கிறது.
அது, “நான் கண்டடைந்த தெளிவின் துணையுடன், எனது வெளிப்பாட்டுத் தடைகள் அனைத்தையும் நீக்குவதே என் படைப்புக்கள். அதற்கென நான் என் வாழ்வியல் நினைவகம் மற்றும் அனுபவ வரலாற்றின் வழி தேர்ந்தெடுக்கும் ஓவிய ஊடக வடிவவியலைக் கண்டடைகிறேன், அவை என் காலத்தில் என்னால் உருவாகும் சதுப்பு நிலங்களாகக் கலை ரசிகர்களின் வசத்தில் உயிர் பெறுகிறது.”
எனவே, அத்தகைய ‘ஓவிய ஊடக வடிவவியல்’ என்பதனை தமிழ் கலைப்பரப்பில் வைத்து உரையாடும்போது அது, பல தளங்களைத் திறந்து வைத்து புதுவழிகளைக் காட்டுகிறது. அவ்வகையில் கயல்விழியின் படைப்புக்களும் அவ்வழியில் நம்மைக் கூட்டிச் செல்கிறது. முதலில், அவருடைய, ‘பாரம்பரிய நுழைவுவாயில்’ (The Heritage Entrance) என்ற தலைப்பிலான ஓவியத்தைப் பார்த்த அனுபவத்தைப் பகிர்கிறேன்.
அதில் வினை புரியும் நிறமானது அந்தப் புராதன வரலாற்றை, அதனுள் இருக்கும் வரலாற்றுத் துயரங்களை, மேலும் அதனுள் பொதிந்து இருக்கும் மனித வாழ்வின் சிதைவுகளின் உண்மைகளை என நம்மை வாழ்வியலின் இருத்தலின்மையை நோக்கி அழைத்துச் செல்கிறது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ளவே உண்மையில் நான் தலைப்பை நோக்கிச்செல்ல தூண்டப்படுகிறேன். இந்த உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத் தொடங்குவோமெனில் அந்தப் படைப்பு தரும் அனுபவமே நம் உரையாடலாய் வளரும். அவ்வகையில் இப்படைப்பில் மௌனம் என்பது கோடுகளே.
ஆம் சிதைவுற்ற ஒரு வீட்டின் துக்கம், அதன் அமைப்புக் கோடுகள் சரிந்து வண்ண ஓட்டத்தில் கலந்து விடுவதுதானே! அவற்றைத் தன் புறப்பரப்பு மொழியால் பேசுகிறது இந்த ஓவியம். இன்னொரு படைப்பான ‘வழிபாடு’ எனும் ஓவியத்தில், மௌனத்தை வழிபடும் மனிதர்களிடத்தே வைத்து அம்மௌனத்தில் எழும் அதிர்வை கோயில் கொடி மரத்திலும் கோபுரத்திலும் கோடுகளால் உரையாடிப் போகிறார்.
“எனது கேன்வாஸில் உள்ள ஒவ்வொரு பாணியும் அதனதன் தேவையைப் பொறுத்து என்னைப் பல நுட்பங்களுடன் சித்தரிக்கத் தூண்டுகின்றன.” என்று கயல்விழி சொல்வதை, அவரது படைப்புகள் நமக்குக் காட்சி மொழியால் உணர்த்துகின்றன.
இறக்கும் மரபுகளின் மீது தன் பரிதவிப்பை பல்வேறு படிநிலைகளில் வெளிப்படுத்தும் படைப்புகளாக அவருடைய ‘சிறுவர் விளையாட்டுகளை’ மையமிட்ட ஓவிய வரிசைகளைச் சுட்டலாம். அதேசமயம், ஓவியங்களைப் பார்க்கும் நமக்கு அந்தந்த விளையாட்டுக்களுக்கு ஏற்றவாறு அந்த நிலப்பரப்புத் தன்னை மாற்றிக்கொள்ளும் பண்பை, உணர்வாக்கித் தருபவராக இயங்குகிறார். அதன் வழி, தன் தனி மொழியைக் கண்டடைந்தவராகவும் இவர் வளர்ந்திருக்கிறார். அதுவே அவரை நிலம் வழிச்சென்று, எவர் மீதும் குற்ற உணர்வை அள்ளித் தெளிக்காமல் எஞ்சியுள்ள புத்துணர்வின் சக்தியை கொடுத்து அனுப்பும் மாண்பை பெற்றவராய் மாற்றியிருக்கிறது.
அதற்குச் சான்றாக ‘கிராமவீதி’, ‘பிரதிபலிப்பு’, ‘அறுவடையின்போது’, ‘விவசாயக் களத்தில்’, ‘சமையலுக்கான விறகுகள்’ போன்ற தலைப்பிலான ஓவியங்களைக் குறிப்பிடலாம். குறிப்பாக, ‘சமையலுக்கான விறகுகள்’ (Wood for cooking) ஓவியத்தில் இடம் பெற்றிருக்கும் விறகு சுமக்கும் மூன்று கருத்த பெண்களின் நடை அசைவுகளே நிலமாய் மாறி நம்மிடையே நேர்மறையான தொடர் உரையாடல்களுக்கு வழி வகுக்கிறது. தூரத்துப்பச்சை, நடுநிசி வெய்யில், அவர்கள் நம்பிக்கை, மெல்ல நம் உடலில் இருந்து வியர்வையாய் வெளியேறுவதைப் போன்ற உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது. இந்த மாயங்கள் நம் உடலில், உணர்வில் ஏற்படுவதென்பது கயல்விழி அப்படைப்பின் செயல்கிரமத்தில் முன்னெடுக்கும் வண்ணங்களின் வழங்கு முறையே மிக முக்கியக் காரணியாய் இருக்கிறது என்பது தெளிவாகிறது.
மேலும், ‘குடிசைக்கு அருகில்’, ‘வேலைக்குப்போதல்’ ‘ஆடு’, போன்ற ஓவியங்கள், நம்மை அச்சூழல் மற்றும் அவ்வுயிர்கள் பற்றிய தேடலை மேற்கொள்ளத் தூண்டுகின்றன. அந்த உணர்வுத் தூண்டலை அந்த ஓவியங்களின் வண்ணங்களில் கயல்விழி ஏற்படுத்தித் தரும் ஓர் உலர்நிலைத் தன்மையே முக்கியக் காரணமாகிறது. குறிப்பாக அந்த உலர் நிலை வழங்குமுறை ‘ஆடு’ ஓவியத்தில் பெரும் செயலாற்றியிருக்கின்றன.
அந்நிலை தான், அந்த ஆடு புழுதி படிந்ததொரு நிலமாய் மாறிப்போகும் ஒரு கணத்தை அவரால் நமக்குக் கொடுக்கவும் செய்திருக்கின்றன. அந்த உருவாக்கப் பண்பானது, இயற்கையில் காணப்படும் நிகழ்வுகள் மற்றும் உயிர் இயக்க நுட்பங்களுக்கு இடையிலான தொடர்புகளையும் அனுதாப சாரங்களையும் ஆராய்கின்றன. நம்மையும் ஆராயத் தூண்டுகின்றன.
மேலும், சமநிலை மற்றும் சமச்சீரற்ற உணர்வை கயல்விழி தன் படைப்புகளில் திறம்பட வெளிப்படுத்தும் முயற்சிகளின் வழி, சமீபத்திய படைப்புகளில் மனிதர்கள், விலங்கினங்கள் போன்ற நிலைத்த பண்புகளைத் தவிர்த்து நிலமெனும் மையத்திலிருந்து இயற்கையை உரையாடலாக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த ஓவியங்கள் நமக்கு, அதன் கட்டமைப்பிற்குள் நம்மை உணர்வின் அடிப்படையான நம் உடலுடன் கவர்ந்திழுக்கின்றன.
அதன் வழி நம் உடலில் தொற்றும் பதற்றம் மீண்டும் வெளியேறும்போது ஆரோக்கியமான அழகியல் விளைவுகள் பெற்றவர்களாக்கி நம்மை வழியனுப்புகிறது. அந்த அழகியல் விளைவுகளே கயல்விழி நம் முன் வைக்கும் கலைமொழியும்கூட. அந்த மொழியில், அவர் தற்காலங்களில் கண்டெடுக்கும் படைப்புகள் பெரும்பாலும் பெரிய நிலப்பரப்பின் ஏகாந்தத்தைத் தேடிக் கண்டடைவதாய் இருக்கிறது. சில படைப்புகளில் அந்த ஏகாந்தம் ஓடையாகவும் நீர் மலர்கள் நிறைந்த குளமாகவும் தோன்றுகிறது. குறிப்பாக, ஒரு ஓவியம் நிலம் தொடும் வானத்தின் சந்திப்பில் நிகழும் பேரதிசயத்தை நமக்குக் காட்சியாக்குகிறது.
இப்படிக் கயல்விழியின் சமீபத்திய ஓவியங்களில், நெருக்கமாக அளவிடப்பட்ட வண்ணக் கலவையின் அளவு மற்றும் உருவாக்கும் மேற்பரப்பு ஆகியவை மிகவும் குளிர்ந்த உணர்வை வெளிப்படுத்துகின்றன.
அவை பெரும்பாலும் நுட்பமான அமைதியான தொனி மற்றும் எளிமையான அசைவுகளை அவர் பயன்படுத்துவதன் மூலம், அந்தப் படைப்புகள் ஒரு பிரதிபலிப்புத் தொனியில் பாதிக்கப்பட்ட ஒரு வகையான கதைப்பாடல் சுருக்கத்தை அளிக்கின்றன, அதே சமயம் நம் அருகாமையை மிக நுட்பமாகத் தூண்டிவிடுகின்றன, அதன் மூலம் நாம் நம் அன்றாடங்களின் வேகத்தில் கடந்து சென்ற இடமான இயற்கையின் மௌனங்களிடம் அழைத்துச்சென்று நிறுத்திப் பார்த்து ரசிக்க வைக்கிறது. அதே சமயம், இப்படைப்புகளின் வழி உலகில் உள்ள பொருள்கள் மற்றும் இடங்கள் மற்றும் வெப்பநிலை மற்றும் ஒளியின் குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றி நம்மிடையே பேசத் தொடங்குகிறார் என்பதே உண்மை.
அதனால் அந்த ஓவியங்கள் உடனடியாகவும் நேரடியாகவும் நிலப்பரப்புகளாக அடையாளம் காணப்படுகின்றன. பார்வையாளர்கள் அனைவரும் நெருக்கமாக அந்த உண்மையின் பக்கம் இழுக்கப்படுகிறார்கள். அது பற்றிக் கேட்கும்போது, அவர் சொல்வதானது, “இயற்கையின் யதார்த்தத்தை அதனை நான் சார்ந்த ஓவிய ஊடகத்தில் எனது கலையென ஒவ்வொரு நிமிடமும் விவரிக்கிறேன்.
அதற்கென என் பயணமெங்கிலும் காணும், நீர் நிலைகளின் அமைதியின் அழகைக் கண்டு நான் மயக்கமடைந்து போகிறேன். அதை, எல்லோரும் அமைதியுடன் பார்வையிடும் அரங்கில் தருகிறேன். அந்த அமைதியே, பார்ப்பவர்களிடம் எண்ணற்ற துடிப்பான உரையாடலாக மாறுகிறது. அது பல நேரம், பச்சை தாவரங்களால் அலங்கரிக்கப்பட்ட இயற்கை எனும் பொதுத்தன்மையின் கீழ் நின்று பேச வாய்ப்பளிப்பதாக நம்புகிறேன்.” என்பதன் வழி அவருடைய படைப்புத் தீவிர அணுகுமுறையையும் அதன் நோக்கமும் நமக்குத்தெளிவடைகிறது. அந்தத் தெளிவு, ஓவியக் கலையின் வளர்நிலையில் தனக்கான ஒரு இடத்தையும் நிறுவத்தொடங்கியிருக்கின்றன.
அந்த வளர்ச்சியை அவரின் தொடர் கண்காட்சிகளும் அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களினுடைய அனுபவப் பகிர்தலும் உறுதிச் செய்கின்றன. இறுதியாக, பார்வையாளர்களில் ஒருவனாகக் கயல்விழியின் படைப்புகளின் வழி நான் அடைந்த உணர்வு என்பது, ‘தேங்கி நிற்கும் நீரைப் பருகுவது, அதன் அருகாமையின் பச்சையத்தில் கரைந்து போவது, அந்த நிலப்பரப்பின் தூரம் தரும் சுதந்திரம், மௌனமாய் ஆன்மாவில் கலக்கும் பூக்களின் மொட்டுக்கள் என அன்றாட வாழ்வின் எதார்த்தம் துரத்த ஓடும் என் பார்வை வெளியின் அழகியல் சக்தியை பெருக்குவதாய் மாற்றும் வல்லமைத் தருவதாய் இருக்கிறது’ என்பதே உண்மை.
இப்படி, நாம் இன்று உழன்றுகொண்டிருக்கும் அச்ச உணர்வு திரண்ட காலத்தில், சிறு நேரம் கொடுத்து கயல்விழி எனும் படைப்பாளிகளுக்கே உரிய மொழியை நம் மொழியுடன் உரையாடவிடுவதால் வறண்ட நம் வெறுமைகளில் பசுமையை ஒளிரச் செய்கிறது.
நீங்களும் அவர் படைப்பின் உணர்வை நேரில் கண்டுணர்வீர்கள் என்றால் நீங்களும் உங்கள் மனதின் குளிர்ச்சியை மீட்டு அதில் சஞ்சரிக்கலாம்.