நிர்வாண நீராவிக் குளியல்

பயணக்கதை
எம்.டி.முத்துக்குமாரசாமி

பகிரு

மெர்ரி வீடியோ காலில் கூப்பிட்டாள், “ஹெல்சிங்கி வருகிறாயா நான் உனக்கு இட்லி செய்து தருகிறேன்” அவள் கைகளில் அவள் புதிதாக வாங்கியிருந்த இட்லிப்பானை இருந்தது. நான் ஜெர்மனியில் வுர்ஸ்பர்க் நகரில் தங்கியிருந்தேன். வார இறுதி நாட்களை ஒட்டிய திங்கட்கிழமையும் பொதுவிடுமுறை தினமாதலால் மூன்று நாட்கள் தொடர்ந்தாற்போல் விடுமுறை. பல்கலையில் மாணவர்களும் ஆசிரியர்களும் அவரவர்களுக்கு என விடுமுறைத் திட்டங்கள் வைத்திருந்தார்கள். நான் மட்டும் தனியே மூன்று நாட்களை வுர்ஸ்பர்க்கில் கழிக்கவேண்டும் போல இருந்தது.

மெர்ரியும் நானும் பல வருடங்களாக நண்பர்கள். பல வருடங்களுக்கு முன்பு மெர்ரி ஓஸ்லோ பல்கலையில் நான் தங்கியிருந்த விருந்தினர் குடிலில் எனது பக்கத்து அறையில் இருந்தாள். விருந்தினர் குடில் ஓஸ்லோ பல்கலைக் கழக வளாகத்தினுள்ளேயே இருந்தது. நடக்கும் தூரத்தில் நூலகம், கருத்தரங்க அறைகள் என வசதியாக இருந்தது. குடிலில் நான்கு ஐந்து அறைகள் இருந்தன; எல்லோருக்கும் பொதுவாய் ஒரு சமையலறை. நானும் மெர்ரியும்தான் கொஞ்சம் அதிக காலம் தங்கியிருந்தோம். மற்ற அறைகளுக்கு வருபவர்கள் ஒரு நாள் இரண்டு நாள் இருந்துவிட்டு கிளம்பிவிடுகிறவர்களாக இருந்தார்கள். மெர்ரி பின்லாந்து நாட்டைச் சேர்ந்தவள். என்னைவிட நல்ல உயரமாக இருப்பாள். பொன்னிறக் கூந்தலும் நீலநிற விழிகளுமாய் இருப்பாள்; அவளைப் போன்ற பேரழகிகளை பின்னிஷ் மொழியில் Elovena-tyttö என்று அழைப்பார்கள். மெர்ரியும் நானும் சமையலறையில் காலை சந்தித்துக்கொள்ளும்போது இரவு உடைகளில்தான் இருப்போம்; உடை சம்பிரதாயமற்றதாக இருந்தாலும் பேச்சுவார்த்தை என்பது ஹாய், பை என்பதாக சம்பிரதாயமாக இருந்தது. அவள் தனக்குள்ளேயே அடங்கி இருக்கக்கூடியவள் போலத் தோன்றியது.

ஒரு நாள் நள்ளிரவுக்கு மேல் மெர்ரி என் அறைக்கதவைத் தட்டினாள். ஓஸ்லோவில் நள்ளிரவு பகல் எல்லாம் நாமே வைத்துக் கொள்வதுதான் என்றொரு முடிவுக்கு நான் வந்திருந்தேன். முக்கால்வாசி நாள் இருட்டாகத்தான் இருக்கும். காலை மூன்று மணி வாக்கில் லேசாக சூரியவெளிச்சம் வரும் மறுபடியும் அந்தி போல வெளிச்சம் குறைந்துவிடும்.

வெளியே குளிர் மைனஸ் 17 டிகிரியில் இருந்தது, காலையில் பார்த்தால் எங்கேயும் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில் இருப்பது போல வெள்ளை வெளேர் என்று எங்கும் பனி கொட்டிக்கிடக்கும்.
மெர்ரியின் அறையில் ஹீட்டர் பழுதுபட்டுவிட்டது; அவள் பலமுறை பல்கலைக் கழகத்திற்கு உதவிக்கு போன் பண்ணி பார்த்துவிட்டு யாரும் காலை வரை வருவதற்கில்லை என்பது தெரிந்த பிறகுதான் என் அறைக்கதவைத் தட்டியிருக்கிறாள். நான் அவள் அறையிலிருந்த ஹீட்டரைப் போய்ப் பார்த்தேன்; என்னாலும் ஒன்றும் செய்வதிற்கில்லை என உடனடியாகத் தெரிந்துவிட்டது. காலை நேரத்
திலேயே குளிரைத் தாக்குப்பிடிக்க ஆறடுக்கு உடை அணியவேண்டும். கம்பளி முழு நீள உள்ளாடை அதற்கும் கீழே மெல்லிய பருத்தி உள்ளாடை அணியாவிட்டால் தோலில் கம்பளி ஆடை குறுகுறுப்புடன் சங்கடமாயிருக்கும். மேலே பிளாஸ்டிக் அல்லது நைலான் மேலங்கி அணிந்தால் காற்றுப் புகாமல் உள்ளே வியர்க்கும். நான் வெளியே போகும்போதெல்லாம் பனிக்கரடி போல ஆறடுக்கு உடை, குல்லா, மப்ளர் சகிதம் மூக்கு வாய் கண்கள் மட்டுமே வெளியே தெரியும்படி செல்வேன். அதற்கே கடுங்குளிரில் மூக்கு நுனி சிவந்துவிடும்; மூக்கு வாயிலிருந்து பெரிய சுருட்டைப் பிடிப்பது போல புகை வரும். எப்போதடா உடைகளை எல்லாம் கழற்றி வீசி அம்மணமாய் அலையலாமென்றிருக்கும். இப்படிப்பட்ட குளிரில் நள்ளிரவில் ஹீட்டர் பழுதுபட்டால் என்ன செய்வது?

மெர்ரியும் நானும் அந்த விருந்தினர் குடிலில் வேறு எந்த அறையின் சாவியாவது கிடைக்குமா என்று தேடிப்பார்த்தோம். எங்கள் இருவரைத் தவிர வேறு யாரும் குடிலில் இல்லை அறைச்சாவிகளை பல்கலை அலுவலகத்தில் அலவலக நேரத்தில் நாளைதான் வாங்க முடியும்.

மெர்ரிக்கு ஹீட்டர் வேலை செய்யும் என் அறையில் இரவைக் கழிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. அவள் படுப்பதற்கு அவள் அறையிலிருந்த மெத்தையைத் தூக்கி வர முயற்சி செய்தோம்; இருவராலும் தூக்க முடியாதபடிக்கு அது கனமாக இருந்தது. அது மரக்குடில் என்றாலும் தரையில் விரிப்பில் எல்லாம் படுத்துத் தூங்க முடியாது. மெர்ரி என்னுடைய நாற்காலியில் அமர்ந்து எழுத்து மேஜையில் தலை கவிழ்த்து தூங்கட்டுமா என்று கேட்டாள். இது
சங்கடமான நிலைமைதான் என்றாலும் சரி என்று சொல்லிவிட்டேன். என்னுடைய அறையில் ஹீட்டரை நான் ப்ளஸ் 28 டிகிரியில் வைத்திருந்தேன் அப்போதுதான் நம்மூர் மார்கழி மாதம் போல 23 டிகிரி போல இருக்கும். மெர்ரி அறையின் வெப்பம் மிகவும் அதிகமாக இருப்பதால் அதை 15 அல்லது 18 டிகிரிக்கு வைத்துக்கொள்ளலாமா என்று கேட்டாள். சரியென்றுவிட்டேனே தவிர குளிர் எனக்குத் தாங்க
முடியவில்லை. நான் இரவு உடையாக வழக்கம்போல நாலுமுழம் கதர் வேட்டியும் மெல்லிய முழுக்கை கதர் சட்டையும்தான் அணிந்திருந்தேன். கம்பளிப் போர்வையை இழுத்து மூடிக்கொண்டு நான் தூங்கிவிட்டேன். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தபோது யாரோ என்னுடன் கட்டிலில் படுப்பதுபோலத் தோன்றியது. ஓரளவு நல்ல அகலமான கட்டில்தான். அந்த இரவின் ரகசியம் என்னவென்றால் என்னைப்போலவே மெர்ரியும் படுத்த இடத்திலேயே அசையாமல் படுத்து எழுந்திருக்க கூடியவளல்ல, படுக்கை பூராவும் தூக்கத்தில் புரளக்கூடியவள் என்று தெரிந்துகொண்டதுதான்.

மறுநாள் பல்கலைக் கழகப் பணியாளர்கள் மெர்ரியின் அறை ஹீட்டரைச் செப்பனிட்டுவிட்டார்கள். மெர்ரி முன்புபோல இல்லாமல் எங்கள் சமையலறை சந்திப்புகளின்போது சகஜமாகப் பேச ஆரம்பித்தாள். மாலை நடைக்கு இருவரும் சேர்ந்து போகலானோம்.

மாலை நடையின்போது மெர்ரி என் தோளைச்சுற்றி அவள் கையை வைத்துக்கொள்வாள். நான் அவளைவிட குள்ளம் என்பதால் நடப்பதற்கு நான் நல்லதொரு ஊன்றுகோல் என்று பாராட்ட வேறு செய்வாள். பனிக்கரடி போல உடையணிந்து, பனிக்கட்டியில் வழுக்கி விழுந்துவிடாமல் இருக்க குழந்தைபோல நடை பழகிக்கொண்டிருந்த எனக்கு அவள் தோள் மேல் கை போட்டு நடப்பது பெரும் ஆதரவாக இருந்தது. எங்கள் நடையின்போது நான் ஏதாவது சொன்னால் மெர்ரி அவளுடைய பொன்னிற கூந்தலை நளினமாக, மெலிதான புன்னகையுடன் விலக்கி என் வாயருகே அவள் காதைக் கொண்டு வந்து கேட்பது மிகவும் ரம்மியமாக இருக்கும். அவள் ஒரு அன்னப்பட்சி என்றே நான் நினைத்தேன்.

எங்கள் சமயலறை சந்திப்பின்போது நான் என் மனைவி, குழந்தைகள் புகைப்படங்களை மெர்ரியிடம் காட்டினேன். அவள் அவளுடைய நான்கு சகோதரிகள், பெற்றோர், தோழிகள் புகைப்படங்களைக் காட்டினாள். மெர்ரி தன்னுடைய ஒவ்வொரு வார்த்தையையும் அளந்து மெதுவாக உளமார, நாணயமாகப் பேசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பின்லாந்தின் தேசிய காப்பியமான கலேவலா பற்றி நான் அவளிடம் பேசியது அவளுக்கு மிகவும் சந்தோஷமளித்தது. நாட்டுப்புறவியல் துறையில் இருப்பவர்கள் கலேவலா பற்றி தெரிந்து வைத்திருப்பார்கள் என்றும் 1994இல் கலேவலா ஆர்.சிவலிங்கத்தினால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்றும் அவளுக்கு நான் சொன்னேன். எங்கள் நட்பு மேலும் வலுவாகியது.

நான் சென்னைத் திரும்பிய பிறகும் மெர்ரி அவ்வபோது வீடியோ காலில் கூப்பிட்டு அரட்டை அடிப்பாள். வருடங்கள் உருண்டோடுகையில் அவளுடைய இரண்டு காதல் தோல்விகள், அவள் சாப்பிடும் உணவின் புகைப்படங்கள், அவள் வாங்கிய சைக்கிள், அவள் விடுமுறைக்குச் சென்ற இடங்கள் - என அவள்
வாழ்க்கை எளிதான பட்டியலில் அடங்கிவிடுகிறதே என நான் நினைப்பேன். நான் அவளுடன் பகிர்ந்து கொண்டதை வைத்து இட்லிதான் என் வாழ்க்கை என அவள் நினைத்திருக்கவேண்டும்.

வுர்ஸ்பெர்க்கிலிருந்து ப்ராங்க்பர்ட்டுக்கு ரயிலில்போய் அங்கிருந்து ஹெல்சிங்கிக்கு விமானத்தில் சென்றேன். என் வயதை ஒத்த இந்திய நாட்டுப்புறவியலாளர்கள் ஒருமுறையாவது பின்லாந்துக்கு அங்கே நடக்கும் கோடைகால சர்வதேச பயிற்சிப்பட்டறைக்கு வந்திருப்பார்கள் நான்தான் இப்படி தனி அழைப்பின் பேரில் வந்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்க மெர்ரி வந்திருந்தாள். ஜெர்மனியைவிட இங்கு குளிர் அதிகம் என்று அங்கேயே கையோடு கொண்டுவந்திருந்த கம்பளி மேலங்கியை அணிவித்தாள். “இட் இஸ் குட் டு சீ யூ முட்டூ’ என்று சொல்லி இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். பெரும்பான்மையான ஐரோப்பியருக்கும் அமெரிக்கருக்கும் ‘த’ எழுத்தின் உச்சரிப்பு ‘ட’ என்றுதான் வரும். மெர்ரி என்னை ‘முட்டூ’ என்று கூப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

மெர்ரி வீட்டில் எனக்கான அறையில் ஹீட்டர் 28 டிகிரியில் வைத்திருப்பதைப் பார்த்து புன்னகைத்தேன்.பயண அலுப்பு தீர ஓய்வெடுத்து உடைமாற்றி நான் வெளிவந்தபோது மெர்ரி எனக்காக ஆவி பறக்கும் இட்லி செய்து வைத்திருந்தாள். மாவை இந்தியன் ஸ்டோர்சில் வாங்கியிருப்பாள்போல; குளிருக்கு மாவு புளிக்காமல் இட்லி கல்லுக்குண்டாட்டம் இருந்தது. தொட்டுக்கொள்ள விதவிதமான Sauces வைத்திருந்தாள். நான் மிகவும் அதிக காரமான பச்சை மிளகு சாஸைத் தொட்டு சாப்பிடுவதை கண் கொள்ளாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அவளுக்கு இந்தியாவிலிருந்து கொண்டுபோயிருந்த சந்தன வாசனைத்திரவியத்தைப் பரிசளித்தேன். அப்போது அவள் என் மனைவி வீட்டில் அணிவது போன்ற சாரோங்கை அணிந்திருப்பதைப் பார்த்தேன். அவள் வீடியோ
காலில் என் மனைவியை சந்தித்திருப்பதும் அவள் என் மனைவியின் சாரோங்கைப் பற்றி விசாரித்ததும் நினைவுக்கு வந்தது.

ஹெல்சிங்கியை எனக்குச் சுற்றிக்காட்டும்போது எங்கள் ஓஸ்லோ தினங்கள் போலவே மெர்ரி என்தோள்மேல் கை போட்டு நடந்து வந்தாள். நான் ஏதாவது சொல்ல வாயெடுக்கும்போது அதே ஒயிலுடன் கூந்தல் விலக்கி காதை என் வாயருகே கொண்டு வந்தாள். அவள் என் மனைவியுடையது போலவே ஜிமிக்கி அணிந்திருப்பதைப் பார்த்தேன். அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர ஓஸ்லோ தினங்களுக்கும் ஹெல்சிங்கிக்கும் இடையில் இருந்த வருடங்கள் எங்கே போயின என்று தெரியவில்லை.

மெர்ரி எனக்கு ஹெல்சிங்கி நகரத்திலிருந்த பொது நீராவிக் குளியலை (Public Sauna) காட்டித்தந்தாள். அங்கே “இங்கு உள்ளாடை அணிந்து குளிக்க அனுமதி வாங்கவேண்டும்” என்ற அறிவிப்பு இருந்தது. மெர்ரி பின்லாந்தில் நீராவிக்குளியல் என்பது அந்நாட்டின் பண்பாட்டில் மிக முக்கியமான அம்சமென்றும் பொதுவிலும் சரி வீட்டிலும் சரி ஆணும் பெண்ணும் சேர்ந்து நிர்வாணமாகக் குளிப்பார்கள் என்று விளக்கினாள். பின்லாந்தில் இரண்டரை மில்லியன் நீராவிக் குளியலறைகளுக்கு மேல் இருக்கின்றன. தமிழர்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும் அங்கே ஒரு முருகன் கோவிலைக் கட்டுவதுபோல பின்லாந்தியர்கள் வேறெந்த நாட்டுக்குச் சென்றாலும் நீராவிக் குளியலறையை கட்டிவிடுவார்கள். வீடுகளிலுள்ள நீராவிக் குளியல் அறைகள் மரத்தாலானவை. அமர்வதற்கு பல அடுக்கு பெஞ்சுகள் கேலரி போல இருக்கும். அறையின் ஒரு ஓரத்தில் பெரிய தொட்டி நிறைய பெரிய பெரிய கிரானைட் கற்களை வைத்திருப்பார்கள். அந்தத் தொட்டி கீழேயுள்ள அறையிலிருந்து மின்சாரம் மூலமோ, கரியை எரிப்பதன் மூலமாகவோ சூடாக்கப்படும். அந்தக் கற்தொட்டி கொதி நிலையை அடைந்தவுடன் அதில் நீரை விசிறியடிக்க அறை முழுவதும் நீராவி பரவும். அறையின் வெப்பம் நூறு டிகிரிவரை செல்லலாம். நீராவியில் நன்றாகக் குளித்து வியர்த்தபின் பின்லாந்தியர் குளிர்ந்த நீரில் குளிப்பார்கள். நீராவிக் குளியலறையில் நீண்ட நேரம் இருப்பதற்கு பியர் அல்லது ஷாம்பெய்ன் அருந்துவது உதவும். பின்லாந்தியர் ஒருவரை வீட்டின் நீராவிக்குளியலுக்கு அழைக்கிறார்கள் என்றால் அவர்கள் அவரை மிக மிக நெருக்கமானவராக மதித்து கௌரவிக்கிறார்கள் என்று அர்த்தம்.

மெர்ரி வீட்டுக்குத் திரும்பியதும் நாளை என் பெற்றோர் வீட்டுக்கு நீராவிக்குளியலுக்குப் போகிறோம் என்றாள் சாதாரணமாக. எனக்கு வெலவெலத்து விட்டது. அவள் அவ்வளவு தூரம் நீராவிக்குளியல் பற்றி சொல்லியிருக்கும்போது அவள் அழைப்பை மறுக்க எனக்கு வாய் வரவில்லை. இந்த மாதிரியான இக்கட்டான சமயங்களில் எனக்கு உதவும் இலக்கியங்கள் ஏதும் நினைவுக்கு வரவில்லை. நிர்வாணம் பற்றி எழுதியிருக்கும் ஆலென் கின்ஸ்பெர்க், சார்ல்ஸ் புக்கோவ்ஸ்கி கூட துணைக்கு வரவில்லை. வெள்ளம் தலைக்கு மேல் போன பின் நான் உள்ளாடை அணிந்திருந்தால் என்ன, அணியாவிட்டால் என்ன?

மெர்ரியும் நானும் ஆடைகளைக் களைந்துவிட்டு நிர்வாணமாக நீராவிக் குளியலறைக்குள் நுழைந்தபோது நான் சங்கடத்தில் நெளிவதை ஓரக்கண்ணால் பார்த்த மெர்ரி இந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் ஆணின் தசை எழுச்சி சாதாரணமானதுதான் என்றாள். குளியலறையில் மெர்ரி அவளுடைய பெற்றோர், நான்கு சகோதரிகள் இரண்டு மூன்று கனவான்கள் இன்னும் சில பெண்கள் எல்லோருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தாள். யாரும் பொட்டுத் துணிகூட அணிந்திருக்கவில்லை. நான் ஏதோ கோட்டும் சூட்டும் அணிந்திருப்பதான பாவனையில் எல்லோருடன் கைகுலுக்கினாலும் அவர்களுக்கு என்னைப் பார்க்க வேடிக்கையாக இருந்திருக்கவேண்டும். எனக்கு உள்ளுக்குள் உதறலாக இருந்தது. நான் யாரும் அதிகமும் என்னைப் பார்க்காதபடிக்கு படிக்கட்டுகளின் மேற்படியில் போய் உட்கார்ந்துகொண்டேன். அறையில் சந்தன திரவியத்தின் வாசனைப் பெருகியது. மெர்ரி என் கையில் ஒரு பியர் கிளாசைக் கொடுத்தாள். மேற்படிதான் முதலில் மிகவும் சூடாகும் என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கொஞ்ச நேரத்திலேயே நான்
சூடு பொறுக்க முடியாமல் படபடவென்று கீழே இறங்கி வந்தேன். வந்த வேகத்திலேயே நான் மல்லாக்க கீழே வழுக்கி விழுந்துவிட்டேன். கீழே கிடந்த என்னைச் சுற்றி அறையிலிருந்த அத்தனை பேரும்
கூடிவிட்டார்கள்.

கீழே விழுந்து நான் பார்த்த காட்சியைப் பற்றி நான் இன்று வரை கவிதை ஏதும் எழுதவில்லை. மெர்ரியுடன் நட்பு நீடித்து இருக்கிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer