நந்தினி தர் கவிதைகள்

தமிழில்: - விவேகானந்த் செல்வராஜ்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்
கலாப்பாடம்
பக்கத்தின் வலப்புறம் முக்கோணம் வரையுங்கள்
 அதன் நேர் கீழ் ஒரு செவ்வகம், இதுதான் உங்கள் வீடு
 ஜன்னல்கள் வேண்டுமிடம் சதுரமிடுங்கள், கதவுக்கான இடத்தில்
 இன்னொரு செவ்வகம்
 இடது புறம் மரங்களை ஒட்டுங்கள்
 இலைகள், அப்பிக்கிடக்கும் கிரேயான் பச்சைகள்
 முன் களத்தில் மேலும் சில குச்சி உருவங்கள்
 குச்சி அம்மா, குச்சி அப்பா, குச்சி மகள்
 அவரவர் குச்சிக்கைகளை கோர்த்தவாறு
 ஹேப்பி ஹேப்பி ஹேப்பி
 அரை நிலா புன்சிரிப்புகள்
 இந்த வீட்டுக்குள் அறைகள் வரைய
 உங்களுக்கு யாரும் சொல்லித்தந்திருக்கவில்லை
 ஆனால் உங்களுக்குஏற்கனவே ஒரு கிராமம் வரையத்தெரிந்திருக்கிறது
 கிராமம் = ஒரு குடிசை வீடு + ஒரு ஆறு
 நீங்கள் இதுவரை அப்படி ஒரு குடிசையில் வசித்ததேயில்லை
 எந்தக்கிராமத்தையும் கண்டதுமில்லை
 உங்களுக்கு இதுவரை தெரியாது, அறைகள் வரைவதென்பது
 மறுபடிகளை வரைவதென்று. மறுபடிகள் வண்ணங்களற்றவை
 எல்லா கற்றுக்குட்டிகளைப்போல நீங்களும்
 சமையல் கட்டு வரைய விரும்புகிறீர்கள்
 ஏனெனில் அங்குதான் வெள்ளரிகள் பேசும் கிளிகளாயும்
 சீவப்பட்ட கத்தரிகள் பொரியும் எண்ணெயில் தாளக்கருவிகளாயும்
 மடைமாற்றம் செய்யப்படுகின்றன
 இந்த நோஞ்சான் உடலிகள் தமக்குள்ளுறை ஆழிகளுக்கு
 ஈடுகொடுக்க இயலுமா என்று தெரிந்துகொள்ள நினைக்கிறீர்கள்
 அது மந்திரமா இல்லை கண்கட்டி வித்தையா என்று கேட்கிறீர்கள்
 கடையில் வாங்கிய சொப்புகளில் நாட்டமில்லை இப்போது உங்களுக்கு வயது ஆறு
 மின்னும் எந்த பொருளிலும் துருப்பிடித்தலின் கால்தடங்களை
 கண்டுகொள்ளப் பழகிவிட்ட உங்களுக்கு
 சேகரிக்க உகந்தவை உடைந்த தேனீர்க்கோப்பைகள், தீப்பெட்டிப்படங்கள்
 மற்றும் தூக்கியெறியப்பட்ட சிகரெட் பெட்டிகள்
 ஏனெனில் உருக்குலைவுதான் உங்களுக்கு மிகவும் பிடித்தமானது
 அவற்றை கட்டிலுக்கடியில் பெட்டிகளில் சேகரிக்கிறீர்கள்
 அவற்றிலிருந்து எண்ணெய்ப் பிசுக்கையோ புகைக்கரியையோ செய்வதெப்படி
 என்று இன்னும் தெரியாது உங்களுக்கு நிச்சயமாக பரிச்சயமானது 
 என்னவோ இணையொட்டுப்படங்கள் உருவாக்கும் வித்தைதான், அவை 
 ஒவ்வொன்றிலும் கையில் ஒரு கரண்டியுடன் வெற்று சட்டியை ஆட்டியவாறு
 வாயு அடுப்பு முன் நிற்கிறாள் அம்மா தூக்கத்திலும் கூட அவற்றை 
 உருட்டாமல் இருக்க முடிவதில்லை அவளால் நீங்கள் வரைந்த வீட்டை 
 எரித்துச் சாம்பலாக்கவே 
 தினம் தினம் சபதமிட்டு வருகிறாள் அவளது மார்ச்சட்டையில் 
 எண்ணெய்ப்பிசுக்கு காகிதங்களை கொக்குகளாய் மடிக்க விரும்புகிறாள் 
 கோபமாய் இருக்கிறாள் 
 ரொம்ப ரொம்ப ரொம்ப கோபமாய்
 இந்த அம்மாவை வரைய யாரும் இதுவரை உங்களுக்கு கற்றுத்தரவில்லை
 ஆனாலும் நீங்களாகவே வரைகிறீர்கள் உங்கள் பென்சில் தீட்டும்
 கோடு ஒவ்வொன்றிலும் காலண்டர் பக்கங்களிலிருந்தும்
 நூல் அட்டைகளிலிருந்தும் சேர்த்துவைக்கப்பட்ட இதழ்களிலிருந்தும்
 அம்மா வெளியேறிக்கொண்டிருக்கிறாள்
 அவள் கைகால்களை, எலும்புகளை, விலாக்களை ஒவ்வொன்றாக உடைக்கிறீர்கள்
 அவள் எலும்புகள் உடையும் சத்தம் உங்களுக்கு போதையூட்டுகிறது
 உடைந்த அவள் துண்டுகளை எண்ணும்போது
 அறைகளை வரைவதெப்படி என்று ஒருவழியாக கண்டுபிடித்துவிட்டதாகக்கூட
 உங்களுக்குத்தோன்றுகிறது
 அதிலும் குறிப்பாக சமையல்கட்டு வரைவது
 பென்சிலின் சாம்பல் கோடுகள் கொண்டுதான் மறுபடிகள்
 வரைய முடியும் (ரொம்ப தடியாக அல்லது ரொம்ப ஒல்லியாக)
 உங்களுக்கு வயது ஆறு ஆனால் அதற்குள்
 உங்களுக்கு எது சிறப்பாக் செய்ய வருமோ
 அதை செய்யத்துவங்கிவிட்டீர்கள்
 அம்மாவை உடைத்துபோடுவதன் மூலம்
 அவளை மீட்டெடுக்கிறீர்கள் -பொசுக்கமுடியாத, கையளிக்க முடியாத, உண்ணத்தகாத
 ஒரு பரிசாக. 
இலீஷ் மீன் முள்
பாட்டியிடம் கற்றுக்கொண்டது அதனால்தான்
 — பருப்போ புடலங்காயோ கத்திரிக்காயோ தாமரை வேரோ —
 எதைச்செய்தாலும் அதில் இலீஷ் மீன் முட்களைப்போடுகிறாள்
 அம்மா
 ஒரு இலீஷ் என்ன இருந்தாலும் தமக்கை போன்றவள்
 தினம் சந்திக்காத போதும் நெடுங்காலம் நிலைக்கும்
 அவள் சுவடுகள்
 அதைக் கரண்டியால் நோண்டும் ஒவ்வொருத்தரமும்
 நினைவிலிருந்து தொலைந்த அவள் கிராமம் பெருத்து
 கடாயை நிரப்புகிறது
 ஒரு இலீஷ் என்ன இருந்தாலும் ஒரு கசக்கப்பட்ட மல்லியல்லவா
 சருமம் நீங்க மறுக்கும் அதன் வாசம்
 மரக்கறிகளைத் தழும்பிடும் ஒவ்வொரு இலீஷ் முள்ளுக்கும்
 இன்னும் இன்னும் ஊதி வீங்குகிறது
 ஏற்கனவே பெருத்துக்கிடந்த அவள் கிராமம்
 ஒரு இலீஷ் என்ன இருந்தாலும் விடுதலை கீதம் பாடும்
 கொரில்லாவீரன் ஆயிற்றே, உடைய மறுக்கும்
 கொண்டை ஊசிக்கூர்மைகள் அதனது
 என் தாத்தாவிடம் கற்றுக்கொண்டது ஆகவேதான் அம்மாவின் பற்கள்
 இலீஷ் முள் ஒவ்வொன்றையும் இரண்டு துண்டாக்குகின்றன
 ஒரு இலீஷ் என்ன இருந்தாலும் மாற்ற இயலாத ஒரு வரலாறு
 ஆகவே தான் நாளொரு மேனி வதந்திகளால் மீட்டுருவாக்கப்படுகிறது
 சாறனைத்தையும் உறுஞ்சியபடி ஒரு இலீஷின் முதுகெலும்பை
 மெல்லும் நேரம் அம்மா உண்மையில் மெல்லுவது
 போதியவரை பெருத்திருந்த அக்கிராமத்தில் தமையர்களுடன்
 அவள் தந்தை உணவருந்த அமரும் தருணம்
 அவர்கள்தட்டுகளிலிருந்து துள்ளிக்குதிக்கும்
 எட்டு இலீஷ்களைப் பற்றிக் கதைக்கும்
 அவர் குரலையும்தான்
 அந்த எட்டு இலீஷ்களும் சாப்பிடத்தயாராக
 ஆற்றின் சிற்றலைகளினின்று நேரே அவர் தட்டுகளில் விழுந்தன
 அவளது வாயசைய அசைய அவளது குரல் தடிக்கிறது
 மாற்றி வரையப்பட்ட ஒரு வரைபடத்தை திருத்தி எழுதும்
 வித்தையை நாவிற்கு பயில்வித்தவாறு. 
நந்தினி தர்

நந்தினி தர் இந்திய ஆங்கிலக்கவிஞர். Historians of redundant moments என்ற முழுத்தொகுப்பும் Occupying my tongue என்ற குறுந்தொகுப்பும் வெளிவந்துள்ளது. தற்போது ஓ. பி. ஜிந்தால் கிளோபல் பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரியும் இவர், ஒரு சிறந்த இலக்கிய ஆய்வாளராகவும் களப்பணியாளராகவும் பணிபுரிந்து வருகிறார். குறிப்பாக, அடிமை வாணிகம் மற்றும் தோட்ட அடிமை முறை சார்ந்த வரலாறுகளைப்பேசும் நாவல்களைப் பற்றியும் ஒரு பெரும் வணிகச்சந்தையாக மாறி விட்ட உணவு ஊடகத்தின் பின்புலத்தில் உணவுசார்ந்த நினைவுக்குறிப்புகள் பற்றியும் அவரது ஆய்வுப்பணிகளில் கவனம் செலுத்துகிறார். ஆங்கிலம் வங்காளம் இருமொழியிலும் வெளிவரும் இணைய இதழான ஆய்னா நகர் - ஐ தொடங்கி நடத்தி வருகிறார்.

இந்த இரண்டு கவிதைகளும் Occupying my tongue என்ற அவரது my chapbook லிருந்து எடுக்கப்பட்டவை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer