மூங்கில் முறத்தில் சிறு மண் கலயங்களிலும் தொன்னைகளிலும் இளம் மஞ்சளாய் இறுகி ஒளிரும் தயிர்க் கட்டிகளோடு வாசலில் நின்று கூவியழைக்கிற வெள்ளையம்மாக் கிழவி விளக்கு மாடத்தினருகே வரைகிற தயிர்க்கோடுகளில் கறிவேப்பிலை மணக்கும் இருண்ட அதிகாலையில் கோமாரியின் உக்கிரத்தில் எருமை சாக கூடவே செத்திருந்தாள் கிழவி அடைக்காத கடனின் அடையாளமாக பூவரசு இலை கொண்டு குறுக்கே அடிக்காமல் இன்னும் இருக்கிறது தயிர்க்கோடு வெள்ளையடித்த பின்னும். அச்சிற்றுந்தின் ஏறும் வழி அருகிலுள்ள முதல் இருக்கை முழுவதும் அமர்ந்திருக்கிறாள் நிறைசூலி அவளது கைகளில் ஒரு காதறுந்த பச்சைத் துணிப்பைக்குள் தேடித் தேடி வாங்கிய விதையுள்ள பன்னீர் திராட்சைகள் பெருமூச்செறியும் அவ்வன்னை முகமறிந்த ஓட்டுநர் ஒலிக்க விடுகிறார் மொட்டையின் குரலில் “வீணைக்கு வீணைப்பிஞ்சு நாதத்தின் நாதப்பிஞ்சு … விளையாட என்று வரப் போகுது” சிரித்தபடியே ஊதலை விரலிடுக்கு மாற்றி ஊதும் நடத்துனருக்கு பன்னீர் திராட்சைகளில் ஒன்றை கனிவுடன் தரும் அவளின் அன்படர்ந்த முகத்தின் ஒளிக்கீற்றே அனைத்துப் பயணிகளின் வீடு திரும்பும் வழி விளக்காகிறது.