தி.ஜா.வின் பயண நூல்கள்:
‘கருங்கடலும் கலைக்கடலும்’ நூலை முன் வைத்து

க.பஞ்சாங்கம்

பகிரு

மதிப்புரை

I

தரை, கடல், வான் எனச் சாலைகளும் ஊர்திகளும் பெருகிவிட்ட சூழலில் உள்நாட்டிற்குள் மட்டுமல்ல, உலக நாடுகள் பலவற்றிற்கும் பயணம் செய்து பரவசம் அடையக்கூடிய வாய்ப்புகள் பின்காலனித்துவச் சமூகத்தில் வளர்ந்துவிட்டன.

இன்று பூமிக்கு வெளியே விண்வெளிச் சுற்றுலாப் பயணம் போய் வருவதும் நடந்துகொண்டிருக்கிறது; பழக்கப்பட்ட காட்சிகளைவிட மேற்கண்ட பயணங்களில் எதிர்கொள்ள நேரும் பழக்கப்படாத, அதிசயத்தில் ஆழ்த்தும் காட்சிகளாலும் மனிதர்களாலும் உள்ளத்தில் ஏற்படும் எல்லை இல்லாப் பரவசத்தையும் களிப்பையும் மற்றவர்களோடும் பகிர்ந்து இன்பம் காணத் துடிக்கும் ஒரு மன அமைப்பில் இருந்து பிறந்ததுதான் இந்தப் பயண இலக்கியம் எனக் கருதலாம்.

தமிழ் இலக்கிய மரபில் ஆற்றுப்படை இலக்கியங்கள் தொடங்கி ஐம்பெருங் காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகிய பலவற்றிலும் இந்தப் பயணம் என்பது ஒரு நிகழ்வாக இணைக்கப் பட்டுள்ளது.

(சிலப்பதிகாரத்தில் பயணங்கள் - என்றே இக்கட்டுரையாளர் ஒரு சிறுநூல் எழுதியுள்ளார்.) காப்பியத்தில் பயின்றுவரும் உறுப்புகளில் செலவு - அதாவது பயணம் என்பது ஒன்று என வகுத்தவர்களின் இலக்கிய அறிவைப் பாராட்டத் தோன்றுகிறது; ஆனாலும் 20ஆம் நூற்றாண்டின் காலனித்துவச் சமூகத்தில்தான் தனித்ததொரு இலக்கிய வகை எனச் சொல்லும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது; எனவே தொடக்கக் காலப் பயண இலக்கிய நூல்களாகச் சிலவற்றைச் சுட்டிக் காட்ட முடிகிறது.

வீராசாமி ஐயர் எழுதிய ‘காசி யாத்திரை’ (1832) முதல் தமிழ்ப் பயண நூலாகக் கருதப்படுகிறது; தொடர்ந்து சேலம் நரசிம்மலு நாயுடு எழுதிய ‘ஆரிய திவ்விய தேச யாத்திரையின் சரிதம்’ (1885), துரைசாமி மூப்பனார் எழுதிய ‘கங்கா யாத்ரா ப்ரபாவம்’ (1887), கொ.சண்முகச்சுந்தர  முதலியாரின் ‘காசி ராமேஸ்வர யாத்திரை’(1903) முதலிய நூல்கள் தமிழில் பயண இலக்கியம் என்கிற வகை உருவாகத் தொடக்கமாக அமைந்தன.

தொடர்ந்து ‘உலகம் சுற்றிய தமிழர்’  என்று 1940களிலேயே அறியப்பட்ட ஏ.கே.செட்டியார் (அண்ணாமலை கருப்பன் செட்டியார்) (1911-1983) ஏறத்தாழ பத்துப் பயண நூல்கள் எழுதியதோடு 1850க்கும் 1925க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட பலருடைய  கட்டுரைகளைத் (ஏறத்தாழ 140) தேடித் தொகுத்து,  ‘பயணக்கட்டுரைகள்’ என்று ஆறு தொகுதிகளை வெளியிட்டார்.

இன்னும் திரு.வி.க. (இலங்கைச் செலவு), சி.சுப்பிர மணியன் (நான் கண்ட சில நாடுகள்), கவியோகி சுத்தானந்த பாரதியார் (நான் கண்ட ரஷ்யா), மு.வரத ராசனார் (யான் கண்ட இலங்கை), ம.பொ.சி. (மாஸ்கோ விலிருந்து இலண்டன் வரை), சாலை இளந்திரையன் (எங்கள் பயணங்கள்) எனப் பலரும் இதில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

பயண நூல் எழுதுவதற்காகவே உலகம் முழுவதும் பயணம் செய்த ‘இதயம் பேசுகிறது’ என்ற இதழை நடத்திய மணியன், 12 தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். 1885 தொடங்கி 2008 வரை 600 பயண நூல்கள் வந்திருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூகுள் கட்டுரையில் பதிவாகியுள்ளது.

இத்தகைய பயண இலக்கிய நூல் வரிசையில் எழுத்தாளர் தி.ஜானகிராமனின் (1921-1982) நான்கு பயண இலக்கிய நூல்களும் தனித்து விளங்குகின்றன.

மேன்மையான ஒரு புனைகதையை எழுத்தாளருக்குரிய மொழிநயமும் நுட்பமான அவதானிப்பும் அங்கதம் வந்து அப்பும் நடையும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை அள்ளி வழங்குபவையாக அமைகின்றன.

இந்திய வானொலி நிலையத்தின் நிர்வாகம் ஜப்பான் நாட்டு வானொலி நிலையத்தின் செயல் முறைகளை அறிந்து வர தி.ஜா.வை ஜப்பானுக்குச் சென்றுவரப் பணிக்கிறது.

அப்பொழுது தான் கண்ட ஜப்பானை, சுதேசமித்திரன் இதழில் தொடராக எழுதியுள்ளார்; தொடர்ந்து 1967இல் ஐந்திணைப் பதிப்பகம் ‘உதய சூரியன் - ஜப்பான் பயணக் கட்டுரைகள்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

‘நடந்தாய் வாழி காவேரி’ என்ற பயணக் கட்டுரைகளைச் சிட்டியும் தி.ஜா.வும் சேர்ந்து எழுதியுள்ளனர். 1971ஆம் ஆண்டில் புக்வெஞ்சர் (Book Venture) என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தி.ஜா.  நடை  அவ்வளவாகப்  புலப்படவில்லை.

அரசின் பண்பாட்டுப் பரிமாற்றத் திட்டத்தின் கீழ், ரொமானியாவுக்கும், செக்கோஸ்லவாகியாவுக்கும் சென்று வந்த பயண அனுபவத்தைக் கணையாழியில் தொடராக எழுதியுள்ளார்; 1974இல் புத்தகமாக வெளி வந்துள்ளது; வாசகர் வட்டம் வெளியிட்டுள்ளது, ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற தலைப்பில்.

பத்து அதிசயங்களைக் கொண்ட ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’ என்ற பயண நூலைச் சாவி இதழ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இது ஆஸ்திரேலியாவுக்குச் சர்வதேசக் குழு ஒன்றுடன் சேர்ந்து சென்று வந்த அனுபவத்தைப் பேசுகிறது.

இந்த நான்கில் தி.ஜா.வின் நூற்றாண்டு விழாவை ஒட்டிய இந்தக் கருத்தரங்கிற்காகக் ‘கருங்கடலும் கலைக்கடலும்’ என்ற முக்கியமான ஒரு பயண நூலை மட்டும் மையப்படுத்தி இக்கட்டுரை தயாரிக்கப்பட்டுள்ளது.

II

எடுத்துரைப்பின் அழகியலை அணுஅணுவாய் உணர்ந்து அறிந்த ஒரு கைதேர்ந்த கதைசொல்லி என்பதால், தொடக்கத்திலேயே வியக்கும்படியாக ரொமானியா

(ருமேனியா, உருமேனியா, உருமானியா, Romania )-வில் கண்ட காட்சியைப் பற்றிப் பேசுகிறார். வாசிக்கத் தொடங்கினால், காணாத ஒரு காட்சியைப் பற்றிப் பேசுகிறார். அது ஒரு சிகிச்சை விடுதி - ஆரோக்கிய விடுதி - பற்றியது. “அந்த விடுதியில் ஒரு மாதம் தங்கினால் கட்டிளங்காளையாகத் திரும்புவீர்கள்” என்றொரு ‘கவி’ பரிந்துரை செய்கிறார்.

“அந்த அளவிற்கு எங்களுக்கு நேரமும் இல்லை; டாலரும் இல்லை.” என்று தன்னிலையைப் பதிலாகச் சொல்லுகிறார். இந்தக் காயகல்ப சிகிச்சை விடுதிக்கு அமெரிக்கா, ஸ்வீடன், இங்கிலாந்து முதலிய பல நாடுகளில் இருந்து வருகிறார்கள் என்ற தகவலையும் தருகிறார்.

இப்படியான தான் செல்லாத இடத்தைக் குறித்த ஓர் உரையாடல் மற்றும் கதை மூலமாகச் சுற்றுலாப் பயணிகளைச் சுற்றி வளைக்க நடக்கும் விளம்பர உத்தி இவையெல்லாம் என்பதைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் தி.ஜா.

அவருடைய புனைவெழுத்துகளிலும் நீக்கமற இடம்பெறும் இத்தகைய சொல்முறை இந்தப் பயணநூலிலும் பரவிக்கிடப்பதால் கவனமாக வாசிக்கிறவர்களுக்கு வாசிப்பு இன்பம் பெருகிவரும் என்பது உண்மை.

ஐரோப்பிய நாடுகள் இரண்டாம் உலகப் போரை எதிர்கொண்ட வடுக்களால் நிரம்பிக் கிடப்பவை. தி.ஜா. வுக்கும் அந்த வடுக்கள்தான் முதலில் கண்ணில் படுகின்றன.

ப்ராஹாவில் தங்கியிருந்தபோது ஸாவர்னா என்ற உணவு விடுதிக்குச் சென்றால், உண்டு கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலோர் 60 - 70 வயதுதான கிழவர்கள்.

காரணம் கேட்டால், “இரண்டாம் உலகப் போரில் இளைஞர்களும் நடுவயதுக்காரர்களும் போர்முனையில் மாண்டுவிட்டனர்; இளைஞர்கள் இனிதான் பெருகவேண்டும்” என்றுபதில் கிடைக் கிறது; பதில் சொன்ன அந்த நண்பரிடம்தன்னுடைய டில்லி நண்பர் ஒருவர், “நாற்பது வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் போர்முனைக்குப் போகவேண்டும்; பட்டாளத்தில் சேர்க்கப்படவேண்டுமென்று உலக அளவில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டால் போரே இந்த உலகத்தில் தோன்றாது” என்று சொன்னதைச் சொல்லுகிறார்; பதிலுக்கு அந்த நண்பர்,

“அருமையான யோசனை! உண்மைதான். உலகம் முழுவதும் அரசியல் நடத்துபவர்கள் பெரும்பாலும் நடுவயது அல்லது கிழத்தடியர்கள்தான். சண்டையைத் தொடங்குபவர்கள் அவர்கள்தான்.

ஆனால் அவர்களுடைய மடமைக்கும் வெறிக்கும் போர்க்களத்தில் பலியாகிறவர்கள் இளைஞர்கள்தான்” (ப.14)

என்று சொன்னதாகப் பதிவு செய்கிறார்; தொடர்ந்து அந்த நண்பரே ‘ஐக்கிய நாடுகள் இளைஞர் ஸ்தாபனம்’ என்று தனியாக இருக்கவேண்டும்; அல்லது இருக்கிற ஐ.நா. சபையே இளைஞர் ஸ்தாபனமாக மாற்றி அமைக்கப்படவேண்டும்; அப்பொழுதுதான் போர் ஒழியும்; அப்போதும்கூட வயதானவர்கள் வந்து சூழ்ச்சி செய்து இளைஞர்கள் மனதைக் கலைத்து விஷவித்துக்களை ஊன்றாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்” என்று கூறினாராம். இவ்வாறு தி.ஜா.,

போர் ஒழிப்புக் குறித்துத் தனது சிந்தனையைத்தான் இப்படியொரு நாடகப் பாங்காகப் புனைந்து கூறுகிறார். அவர் ஓர் அரசு ஊழியர். தன் செலவில் பண்பாட்டுப் பரிவர்த்தனை என்ற பேரில் அனுப்பி வைத்திருக்கிறது என்பதையும் இந்த இடத்தில் பொருத்திப்பார்க்கும்போதுதான், தி.ஜா. என்கிற பேராண்மையின் பெருமை புலப்படும்.

உணவு விடுதியில் முதியவர்களே உட்கார்ந்திருக்கும் அந்தக் காட்சி தொடர்ந்து அவருக்குள் தொல்லைப்படுத்திச் சிந்தனையில் ஆழ்த்துகிறது. இப்படி எழுதுகிறார்:

“என் ஊர், என் ஜில்லா, என் ராஜ்யம், என் தேசம் - இந்த எல்லா ‘என்’களும், நமது உலகம் என்ற பெரும் கலத்துள் முரண் இன்றி, உதைப்பின்றி அந்தந்த இடத்தில் ஆங்காங்கு அமர்ந்திருந்த கிழவர்களையும் கிழவிகளையும் பார்த்தோம். இத்தனை ‘என்’களுக்கும் தங்கள் வயிற்றில் பிறந்த இளைஞர்களை இரையாகக் கொடுத்தவர்கள் இவர்கள்” (ப. 14)

மேலும் இரவு வந்தால் திரைப்படம் போகலாமென்று அழைத்துச் செல்லுகிறார்கள். அங்கேயும் போர் விளைவித்த கொடூரமான கதைகள்; காட்சிகள்; ஓரிடத்தில் ‘அமைதியான காட்சிகள் நிறைந்த படங்களை எங்களுக்குக் காட்டுங்களேன்’ என்று தி.ஜா. வாய்விட்டுக் கேட்கும் அளவிற்குப் போரின் கொடூர நினைவுகள் எங்கும் நிறைந்து கிடக்கின்றன; உலகப்போர் முடிந்த 1945-களுக்குப் பிறகு ஐ.நா. என்றும் உலக அரசாங்கம் என்றும் மானுட சமூகத்தில் போரே நடக்கக்கூடாது என்றும் (ஏறத்தாழ 5 கோடி மக்களைப் பலி கொடுத்த பிறகு) பெரும்பேச்சாகப் பேசப்பட்டது.

ஆனால் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டுதான் கழிந்திருக்கிறது; அதற்குள் உலகம் முழுவதும் அமெரிக்கா உட்பட, மீண்டும் தேசிய வெறிகள், ஆக்ரமிப்புகள் தலைவிரித்தாடத் தொடங்கி விட்டன; மனித இனத்திற்கு விமோசனம் என்பதே இல்லையா என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒரு மேன்மையான கலைஞனுக்கே உரிய கருணைக் கண்களைப் பெற்றவர் தி.ஜா. என்பதால் அதைக் கண்டுகொள்ளுகிறார்; அது குறித்த தன் சிந்தனையை இப்படியொரு நாடகப்பாங்கில் பதிவு செய்துகொண்டு போகிறார்; பொதுவாகவே தி.ஜா.வின் பயணக் கட்டுரைகள் முழுவதும், வெளிநாட்டில் தான் காணும் ஒரு காட்சி, தனக்குள் தூண்டிவிடும் சிந்தனைகளை உரையாடலாக வெளிப்படுத்துகிற முறையிலேயே அமைந்துள்ளது.

ரொமானியாவின் எழுத்தாளர்கள் சந்திப்புக் குறித்த பதிவில் இன்றியமையாத பல கருத்துக்களை முன் வைக்கிறார்; அங்கே எழுத்தாளர்கள் ‘டாக்டர் அல்லது இன்ஜினியரைவிட’ மூன்று மடங்கு வருவாயோடு நல்ல நிலையில் இருக்கிறார்கள்; எந்த நூலானாலும் குறைந்த பட்சம் 15 ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கிறார்கள்; எல்லாம் ஓராண்டில் விற்றுவிடுகின்றன; காரணம் நூற்றுக்கு நூறு படித்தவர்கள். “பொதுவாகச் சோஷலிஸ்ட் நாடுகளில் புத்தகப்பசி அதிகம்” என்று பதிவு செய்கிறார்; புத்தக ஆக்கம் குறித்துப் பேசும் போது, அவருக்கே உரிய அங்கதம் மேலெழுந்து நமது பரிதாப நிலையைப் படம் பிடித்துவிடுகிறது.

“(அங்கே) புத்தக விலையும் மலிவு, புத்தகத்திற்குப் பயன்படும் காகிதங்கள் உயர்ந்த ரகம். மேலட்டைகளில் நவீன ஒவியக்கலை ஓங்கியிருக்கிறது. பெண்களின் முகத்தையோ, மற்ற அங்கங்களையோ பெரிதுபடுத்தி அட்டையில் போட்டால்தான் விற்கும் என்ற அவசியம் இல்லை.

பஞ்சாங்கக் காகிதங்களும், நைந்துபோகும் காகிதங்களும் ஒரு தடவை படித்ததும் அக்கக்காகக் கலையும் கட்டும், அச்சுப் பிழைகளும் இல்லை” (ப. 35)

இப்படியான அங்கதம் நூல் முழுவதும் பரவி கிடக்கிறது; அங்குள்ள துப்புரவான நகரம், சுத்தமான ரயில் நிலையம் முதலியவற்றைப் பார்க்கும் போதெல்லாம், அவருக்குள் நினைவுகள் குறுக்கே பாய்ந்து நம்மூர் கும்பகோணத்தையும் டில்லியையும் முன்னிறுத்தி அவர் எழுதிச் செல்லும் அங்கதம் அனைத்தும் தி.ஜா. என்ற மாபெரும் கலைஞனுக்குப் பெருமை சேர்க்கக் கூடியனவையாகும்.

ரொமானியாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். க்ளூஷ் எழுத்தாளர் சங்கத்தில் சந்தித்த இளம் எழுத்தாளர்கள் வாஸிலே ரெப்ரியானு, அகஸ்டின் புஃபூரா யாய் செஃப், அயன் லுங்கு, (ப.95) இலக்கிய ஒப்பியல் விமர்சகர் டாக்டர் ஃடிஃபான பிட்டான், கவி வர்ஜில் தியோட ரெங்கு, கவி ட்யூடர் அர்கேசி, நாட்டுப்பாடல் வகைகளில் ஒன்றான தோய்னா - என்று பலவாறு பேசும்போது, அர்கேசியைப் பற்றி,

“ஐரோப்பிய கவிதை வரலாறு ஒன்று எழுதப்படுமானால் அர்கேசியின் பெயர் அதன் மகாகவிகளில் ஒன்றாக நிற்கும். ஐரோப்பிய இலக்கியத்திலேயே ஒப்பற்று ஜொலிக்கும் புதிய உருவகங்களைப் படைத்துக் குவித்திருக்கிறார்” (ப.103) என்று எழுதிவிட்டு தி.ஜா. தனக்கே உரிய பாணியில் இப்படி எழுதுகிறார்:

“அர்கேசி போன்ற ரொமானியாவின் இலக்கிய மேதைகள் நமக்குத் தெரியவில்லை. இன்னும் பல சிறிய நாடுகளின் தனிப்பட்ட அழகுகளை நாம் காணவில்லை. வல்லரசு நாடுகளின் படைப்புகள்தான் பிரபலமாகின்றன.

இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, ரஷ்யா. இப்படித் தன் அழகைக் காட்ட ஒவ்வொரு நாடும் வல்லரசாக ஆக முயலவேண்டும் போல் இருக்கிறது” (ப.103) என்று கிண்டலாக எழுதுகிறார்; மற்றொரு இடத்திலும் இதே கருத்தை வேறொரு விதமாகப் பதிவு செய்கிறார்:

“ஃபுக்கின் நாவல்களும் சரி, மற்ற செக் ஆசிரியர்களின் படைப்புகளும் சரி - இந்தியாவில் வரவில்லை. முன்பு கூறியவாறு நம் வரலாற்றில் ஏற்பட்ட வினை. ஆங்கில இலக்கியம்தான் மேற்கத்திய இலக்கியத்தின் உச்சம், பிரதிநிதி என்ற மயக்கம்  இன்னும்  நம்மை  விடவில்லை” (ப. 125)

இவ்வாறு காலனித்துவத்தின் செல்வாக்கு ஒரு சிறிதும் குறையாமல் இங்கே இலக்கியத்துறையிலும் நீடிப்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

ரொமானியாவிலிருந்து செக் நாட்டின் ‘ப்ராஹா’ வந்து தான் முதலில் இறங்குகிறார். அந்த நகரத்தின் இசையின் பெருமை பேசுகிறார்; இசைமேதை மோட்ஸா இதன் எழிலைக் கண்டு போதைகொண்டு விட்டான் என்றெழுதுகிறார்.

சிறுபத்திரிக்கை வாசகனான எனக்கு ‘ப்ராஹா’ என்றவுடன், அங்கு வாழ்ந்த பிரான்ஸ் காஃப்கா (1883-1924) குறித்துத் தி.ஜா. என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவலோடு வாசிப்பில் வேகம் கூடியது.

செக் எழுத்தாளர் சங்கச் சந்திப்பில் திருமதி ஷெர்மா யானோவா என்ற நாவலாசிரியையைச் சந்திக்கிறார். “நான் சந்தித்த முக்கியமான எழுத்தாளர் இவர்” என்ற அறிமுகத்தோடு காஃப்கா குறித்து அவர் சொன்ன கருத்தாக இப்படி எழுதுகிறார்:

“காஃப்காவை உண்மையான செக் எழுத்தாளர் என்று நான் கருதுவதில்லை. அவருக்குக் காசநோயைத் தவிர, மனநோயும் அதிகம். தம்மையே தனித்துக் கொண்டு வலுவிழந்த மனத்தைச் சுமந்து துயர்பட்டவர்.

அவர் உலகைப் பார்த்த பார்வையும் மனப்பாங்கும் ஒருவித அச்சத்தின், மன அசௌக்யத்தின் அடிப்படையில் உருவானவை. ஆனால், செக் மக்கள் உல்லாசமானவர்கள். ஆரோக்ய உள்ளம் படைத்தவர்கள்; அதனால்தான் உண்மையான செக் படைப்பாளன் என்று காஃப்காவைக் கருத விருப்பமில்லை எனக்கு.

நாட்ஸிகள் யூதர்களைப் படுத்திய பாடும் கொடுமையும் காஃப்காவை அளவுக்கு மீறி உயர்த்த மறைமுகமாக உதவின.”

இப்படிச் சொன்ன அந்த நாவலாசிரியையிடம் தி.ஜா. கேட்கிறார்,

“இதனை எங்கள் நாட்டுச் சோதனைப் படைப்பாளர்களிடம் சொல்வீர்களா?”

அதற்கு அந்த அம்மையார், “சொல்லுகிறேன். என் தோலை உரித்துவிடுவார்கள். அவ்வளவுதானே. இங்கேயே அந்த மாதிரி பலர் இருக்கிறார்கள்” என்று பதில் சொன்னாராம்; இந்த உரையாடல் முழுவதும் அப்படியே தி.ஜா.வின் தனித்தன்மையை, மொழியை வேலை வாங்கும் ஆளுமையைக் காட்டும் ஒரு சிறு துணுக்காகும்.

சோதனையைச் சோதனைக்காகச் செய்வது சரியல்ல (ப.127) என்ற தமிழ் சோதனை எழுத்தாளர்கள் குறித்த தன் விமர்சனத்தைத்தான் மேற்கண்டவாறு நாடகப் பாங்காகப் புனைந்து காட்டுகிறார்.

மொழிபெயர்ப்பாளர் நியாகு என்பவரோடு ரயிலில் பயணம் செய்துகொண்டிருக்கிறார். ‘டான்யூப்’ நதி வரப்போகிறது என்கிறார் அவர், தி.ஜா.வுக்குள் இருக்கும் குழந்தை வெளியே வந்துவிடுகிறது; அதன் முழுப் பிரவாகத்தையும் மயங்கிப்போய்ப் பார்த்துக்கொண்டேயிருந்த ஞாபகம் என்கிறார்;

மேலும் “நதிகளை வர்ணிக்க வார்த்தைகள் கிடையாது; கடல், மலை, வயல் காட்சிகளுக்குச் சொற்கள் உண்டு. எனக்கு நதிகளை வர்ணிக்க முடிவதில்லை;

சும்மா பிரமித்துப் போய்ப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்; ஒரு தாயை, கடவுளைப்போல நேரில் காண்கிற பிரமை. மன ஓட்டத்தை நிறுத்திவிடுகிற உயிர்க் காட்சி.

கடவுள் இல்லை என்று சொல்லு என இங்கர்சால் போன்ற பெரியார்கள் என்னைக் கட்டி வைத்து அடித்தாலும், கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாலும் நான் இல்லை என்று சொல்லமாட்டேன்.

கரை தவழும் வெள்ளத்தைச் சுமந்து செல்லும் ஆறு ஒரு மக்கள் கூட்டம், ஒரு உயிர் கூட்டம், அருள் கூட்டம் என்று மட்டும் சொல்கிறேன்” (ப.68) என்று கவிதை எழுதுகிறார் தி.ஜா. காவிரி ஆற்றின் குழந்தை  அல்லவா அவர்!

இந்த இடத்தைப் போலவே வாய்ப்புக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் பகுத்தறிவு இயக்கத்தினர்க்குக் ‘கொட்டு’ கொடுத்துக்கொண்டே போவதைப் பார்க்க முடிகிறது. ஓர் உரையாடலின் போது ஒரு நண்பரின் நண்பர், உங்களுக்குச் சமஸ்கிருதம் தெரியுமா, வால்மீகி ராமாயணம், கீதை படித்ததுண்டா? வேதங்களைப் பற்றித் தெரியுமா? இப்படிப் பல கேள்விகள்; உடன்பாடான பதில் கொடுத்துக்கொண்டிருக்கிறார்; அப்படி என்றால், “நீர் பிராம்மணரா?” என்ற கேள்விக்கு “இல்லை” என்று கூறுகிறார்; ஏன்? என்ற அடுத்தக் கேள்விக்கு “பிராமண யோக்யதை ஒன்றும் கிடையாது. பிறந்தது அந்த ஜாதியில்.

ஆனால் பகுத்தறிவுவாதிகளும் அரசாங்க - கல்லூரி அதிகாரிகள் எல்லாம் என்னைப் பிராமணன் என்றுதான் கூறுகிறார்கள். பகுத்தறிவுவாதிகளுக்குக் கூட மூடநம்பிக்கைகள் சாத்தியம்” (ப.54) என்று ஒரு குட்டு வைக்கிறார்.

“உச்சிக் குடுமியை ஒழிக்கும் கோஷம்” (ப.15) என்று ஓரிடத்தில் சுட்டிச் செல்லுகிறார். இதுபோலவே மொழி அரசியலைப் பற்றிப் பேசும்போதும் தன் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்கிறார்.

“மொழி உணர்ச்சி நெருப்புப்பெட்டி; விளக்கும் ஏற்றலாம்; வீட்டையும் கொளுத்தலாம். எங்கள் மொழி உயர்த்தி என்று பல முட்டாள்கள் சொல்வதால்தான் உலகில் மொழிச் சண்டைகள், அதன்மூலம் நாட்டு - இனச் சண்டைகள் மூள்கின்றன... சுயநலக்காரர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் உதவுகிற கோடரிகள்” (ப.122) என்றெல்லாம் ரொமானியாவிலுள்ள செக் - ஸ்லோவாக் என்ற இருமொழிகளைக் குறித்துப் பேசும் பின்புலத்தில் இதையும் பேசுகிறார்.

மற்றொரு இடத்தில் குழந்தைகள் பேசும் மொழி உலகமெங்கும் ஒன்றாகவே இருக்கிறது. அவர்கள் செய்வது எல்லாம் உலகம் எங்கும் ஒரே அச்சுதான்; வளர்ந்து ‘பாஷைகளாகக்’ கற்றுக்கொள்ளும்போது தான் பாஷைகளின் பின்னுள்ள சுவர்களும் எழுகின்றன என்கிறார்.

“இந்த ஒலிகளே எங்கள் மொழியில் கிடையாது” என்று ஷ, ஜ, ஸ போன்ற எழுத்துகள் அடங்கிய புத்தகங்களையே தடை செய்கிற டாக்டர் பேராசிரியர்களின் நினைவு வருகிறது.

‘இந்த ஒலி எங்களுக்குக் கிடையாது’ என்று சொல்லுவதைக் கேட்டால் நமக்கு “அடித்துக் கொண்டு அழ அறுபது கைகள் ஏன் இல்லை என்று குறைபட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது”.

இவ்வாறு தூரத்தில் எங்கோ சென்று யார் யாரோடோ உரையாடும்போதும் தமிழ் நாட்டில் பகுத்தறிவு இயக்கம் நிகழ்த்திக் காட்டிய செயல்பாடுகள் கூடவே வந்து அவரைத் தொந்தரவு படுத்துவதையும் தி.ஜா. நினைவுகூர்கிறார்.

ஓரிடத்தில் தான் பாடும்போது ஏற்படும் முகக் கோணலைக் கண்டு, இரண்டு ரொமானியப் பையன்கள் சிரிப்பது தெரியாமல் சிரித்தார்களாம். அப்பொழுது “தம்பி, ஓடற பாம்புக்குக் கால் எண்ண வேண்டா” என்று தமிழில் சொன்னதாகப் பதிவு செய்கிறார்.

உண்மையிலேயே அவ்வளவு நுட்பமான பல பார்வைகள் இந்தப் பிரதி முழுவதும் விரவி கிடக்கின்றன. ஜார்ஜ் டான் என்ற ரொமானிய கப்பல் ஓட்டும் துறையிலிருந்து ஓய்வு பெற்றவரைக் குறித்துச் சொல்லும்போது மிக நுட்பமாக அவர் முகபாவத்தைக் கவனித்துப் பதிவு செய்கிறார். அவருக்கு, “ஆங்கிலம் தெரியாது. பிரஞ்சுதான் தெரியும்.

எனவே மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துச் சொல்வதற்கு முன்னமே அவர் முகம் துடியாய்த் துடிக்கும்; என்ன இத்தனை நேரம் காக்க வேண்டியிருக்கிறதே என்று ஒரு பரபரப்பும் குறையும் முகத்தில் கூத்தாடும்” (ப. 52) என்கிறார்.

ஒருநாள் வுல்த்தாவா (செக் நாட்டில்) நதிக்கரை ஓரமாக இருக்கும் பெத்ஸ்லோவா - என்பாரின் வீட்டிற்குப் போகிறார். அந்த நிகழ்வை இப்படிப் பதிவு செய்கிறார் தி.ஜா. “குளிர் காற்றைத் தடுப்பதற்காக ஆற்றையும் அதன் மீதுள்ள வீதியையும் நோக்கும் பெரும் சாளரத் திறப்பை மூடப் போனார் அவர்; அப்போது அடிவானம் செக்கரும் ஓரிரண்டு விண்மீனும் மோனமுமாகத் தவமிருந்தது.

மூச்சை நிறுத்தும் வனப்பாக அங்கு அந்தி மயக்கம் கண்மூடும் சமயம். பெத்ஸ்லோவாவும் அதைப் பார்த்துச் செயலற்று நின்றார். ஐந்து நிமிடம் கழித்துத்தான் திரையைத் தொங்கவிட முடிந்தது அவரால்” (ப.126)

இதுபோலவே ஐரோப்பிய ஆலயங்களில் இளைஞர்களைக் காண முடியவில்லை என்பதை அவதானித்துச் சொல்லுகிறார்; மேலும் “கண்ட கண்ட இடத்தில் எந்த உணவையும் தயார் செய்யும் அவசர யுகத்தில் ‘சுவை நஷ்டம்’ எற்படத்தான் செய்யும்.

ஓய்வின், அமைதியின் குறியீடுகளையும் பரபரப்பின் சின்னங்களையும் ஒரே சமயத்தில் அடைய முடியாது. கூழோ, மீசையோ - ஒன்றுதான் தேறும்” (ப.84) என்றெல்லாம் எழுதிச் செல்லும்போது கைதேர்ந்த எழுத்தின்  வலிமையை  உணரமுடிகிறது.

இன்னும் அங்கே உள்ள அரூபக் கலை, கிராம மியூசியம், கண்ணாடிச் சிற்பக் கூடம், ஓவியக் கூடம், இசைக் கூடம், கருங்கடல் காட்சி, நோய்க்கு மருந்தாகப் பயன்படும் நீர் ஊற்றுமலைகள், ஏரிகள் மறைந்து கட்டிடங்கள் எழும்பிய கதை, எலும்பைப் பதம் பார்க்கும் குளிர், இனக்காப்பு வரலாறு, போர்களால் அலைக்கழிக்கப்பட்ட மக்களின் மன நிலை, நாட்டுப்புறப் பாடல்கள், சூன்யமாகத் தெரியும் உள்ளொடுங்கிய தெருக்கள், வெங்காய வடிவக் கோபுரங்கள், பல்வேறு நூலகங்கள் எனப் பலவற்றையும் வெறுமனே வரிசை கட்டிச் சொல்வதிலிருந்து மாறுபட்டு, அந்த வேற்றுப் புலத்தில் வித்தியாசமான காட்சிகளால் தனக்குள் இருந்து புறப்பட்டு வந்த எண்ணங்களையும் சிந்தனைகளையும் தனக்கே உரிய நக்கலும் கிண்டலும் அங்கதமும் கூடிய புனைவுமொழியில் எடுத்துரைத்துள்ளார்  தி.ஜா. இதே பாணியிலேயே ரொமானியாவுக்கும் செக் நாட்டிற்கும் போய் வந்து ஓராண்டு கழித்து எழுதிய இந்தப் பதிவு குறித்தும் இப்படி எழுதுகிறார்.

“ஒரு ஆண்டுப் பூட்டி வைத்த மளிகைக் கடையைத் திறந்து பார்த்தால், என்னதான் காற்றுப் புகாமல் மூடியிருந்தாலும் புளி விறைத்திருக்கும், பருப்பில் சற்று புழு அந்துக்கள் விளையாடியிருக்கும். கற்பூரம் கரைந்திருக்கும், இல்லாவிட்டால் இப்படி மூடிவிட்டான்களே எனக் கோபக்கார இளம் எலிகள் சாக்குகளையாவது மர டப்பாக்களையாவது பல்லால் அறுத்திருக்கும். பூசணம் இருக்கும். எண்ணெய் பிசுக்கு வெடி சேர்ந்திருக்கும். நினைவும் அப்படித்தான். அப்படி அப்படியே இருந்து விடாது.

ஆனாலும் எத்தனையோ நினைவுகள் பசுமையாக, ஒரு அசைவு, மணம், ஓசை விடாமல் இருக்கின்றன. அப்படி மிக மிக ஓங்கி நிற்பது தெருக்களின் சூன்யம்” என்றும் எழுதுகிறார்.

இப்படி ஓர் அழகான உருவகம் மூலம் தன் எழுத்தின் தன்மையைப் போக்கைத் தானே விமர்சனம் செய்து கொள்ளும் மேன்மையான கலைஞராகத் தி.ஜா. உயர்ந்து நிற்கிறார்.

துணைநூல்கள்:

1. தி.ஜா., ‘கருங்கடலும் கலைக்கடலும்’ (மு.ப.1974), காலச்சுவடு, டிச.2017, நாகர்கோயில் - 629001.

2. தி.ஜா. நினைவு நூற்றாண்டுக் கருத்தரங்கில் வாசித்த கட்டுரை - சேலம் பெரியார் பல்கலைக்கழகம், சாகித்திய அகாடெமி, அக்.5, 6, 2021.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
manalveedu@gmail.com
Copyright © 2022 Designed By Digital Voicer