தியாகராஜன் கவிதைகள்


பகிரு

அழகியல் பற்றி என்னால் பொய் சொல்ல முடியாது
என் அதிகாரி மனைவியின் கள்ள உறவைத் தெரிந்துகொண்ட அன்றும்
தவறாமல் வேலைக்கு வந்தவன்
என்ன இது என்பதற்குள் எல்லாம் வாயை வைத்து
எச்சில் ஊறச் சுவைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்
தான் இருபத்தைந்து வருடங்கள் இதில் கைதேர்ந்தவன் என்கிறார் வயதானவர்
அவருக்கு தான் அங்கே அதிக சம்பளமாம்
இது ஏதோ என்று சொல்வதற்குள் அனைவருக்கும் பதட்டம்
அவர்களால் தலைவலியைப் பொறுக்க முடியாது
எதுவும் இடம் மாறி விடக் கூடாது
கடைவாய்,பல், நாக்கு எல்லாவற்றிலும் ஒழுக ஒழுக செய்துகொண்டு
எப்படியவர்கள் எங்களுக்கு ஊம்பவே பிடிக்காதென
சொல்கிறார்களென்பதுதான் புரியவில்லை.

சிரிக்கச் சொன்னார்கள்
கையை மேலே தூக்கித் தட்டச் சொன்னார்கள்
எனக்குப் பிடித்த கதையைக் கேட்டார்கள்
அருமையான கதைக்கருவெனப் பாராட்டினார்கள்
இத்தனை நாள் போலிருக்காது நிச்சயம்
இந்த முறை நான் விலைபோகப் போகிறேனென நினைத்தேன்
ஆயிராமாவது முறையும் முளைக்கும் இதன்மீது எனக்கே ஆச்சர்யம்
கூடிப் பேசியவர்களின் முகத்தைப் பிரகாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்
ஒரேயொரு மின்னல் வெட்டுதான்
என் மலர் கீழே விழுந்த நொடி கூடத் தெரியவில்லை
அந்த வெற்றியின் களிப்பு என் எதிரிலேயே பகிர்ந்துகொள்ளப்படுகிறது
எதையும் கூடுதலாகவும் நம்புவதில்லை
ஆனால் கைகளை மட்டும் தட்டிக்கொண்டேயிருக்கிறேன்.


எப்படியாவது ஒரு கடன் அடைந்துவிடுவது போலில்லை
எப்போதாவது அனைத்துச் செல்வாக்குடன் தூங்கப் போவது
இந்த வழியைக் கடக்க நிற்பதற்குள்
ஒரு குழந்தை எழுந்து ஓடியாடி என்னருகிலேயே
சமமாக ரோட்டைக் கடக்க நின்றுவிடுகிறது
கொஞ்சம் நிதானித்துப் பார்க்கும் கண்களுக்கு
கோட்டைவிட்ட இடமெல்லாம் தெரிகிறது
எழுந்து ஓடியாடிய குழந்தை என் காதலியின் மகள்
இவளுக்குச் சாக்லேட் வாங்கிக் கொடுப்பதால்
தூங்கப் போக முடியாது
ஒரு பச்சைக் கையெழுத்தைப் போல் யார் யாரோ
சான்றிதழ் அளித்துப் போகிறார்கள்
ஏன் எல்லாவற்றிற்கும் ஒரு பதிலி உள்ளது
ஆனாலென்ன நான் விடியப்போகும்போதுதான் கண்ணயர்கிறேன்
இந்த ரோட்டை என்னுடன் கடக்க நிற்பவர்கள் நிஜமாகவே
அந்தப் பக்கம் போய்விடுகிறார்கள்.

எட்டிப்பார்த்தேன் இந்த முறையும் யாருமில்லை
வெளியில் ஒரே நிசப்தம்தான்
நடுக்கத்துடன் வந்து படுத்துக்கொண்டேன்
மீண்டும் மணியழுத்தப்படும் சப்தம்
ஒரு பூனை மட்டும்தான் அங்கிருந்து ஓடியது
மறுபடியும் வந்து படுக்கும்போது ஒரே சிரிப்பாக இருந்தது
யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்
விடிந்த பின்னும் கூட நான் அதை அழுத்திக்கொண்டே இருக்கலாம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer