பழுத்த மதவாதக் கட்சியை ஒன்றிய அரசில் இருந்து ஆட்சி பண்ண மீளவும் உட்கார வைத்திருக்கிறோம். நமது அறிவு விழிப்பு குறித்து ஐயப்படாமலிருக்க முடியவில்லை. அறவழிப்பட்ட செல்நெறிகளை அறிந்தவர்கள், அடிப்படையான மனித மாண்புகள் பண்புகள், வாய்க்கப்பெற்றவர்கள், சமூகச் சிந்தனையும், மக்கள் நலனில் அக்கறையும் உள்ளவர்களுமா அரசியலில் களமாட வருகிறார்கள்?
இன்றைய அரசியல் தளத்தில் தொண்டில் பழுத்துத் தொங்குகின்ற பேர்கள் ஆர் ஆர்?
காசு கொழுத்த பெரும் முதலாளிகள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், கல்விக் கொள்ளையர்கள், வீட்டுமனைகள் விற்கும் வியாபாரக் காந்தங்கள், பவுசுக்கெட்ட சினிமாக்காரர்கள்.
இவர்கள்தாம் இப்பொழுது வாண்டட்டாக
வண்டியிலேறுகிறவர்கள்.
இந்த எலிகள் ஏன் அம்மணத்தோடு ஓடுகின்றன?
அறங்கெட்ட வழியில் திறம் கெட்டு சம்பாதித்ததைக் காபந்து பண்ணத்தான் இங்கே இவர்கள் கொட்டை போடுகிறார்கள். இவற்றையெல்லாம் அறியாத பேர்களா நாம்.
அறிந்தும் கெட்டால் அதற்குப் பெயர் என்ன?
கம்பளியில் சோற்றைப் போட்டுவிட்டு
யவனடா
மசிர் மசிர் என்றலறுவது.
ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்காரர்களை நினைத்தால் நகைப்பாக இருக்கிறது. வார நாட்களில் ஒன்பது டூ ஐந்தரை பொதுப்பணிமுறைகளில் அவரவர் வயிற்றுப்பாட்டுக்காக வேலைக்குப் போகிறார்கள். அதைப்பற்றிக் காரியமில்லை, உழைத்துச் சம்பாதிப்பது நல்லதுதானே. மிச்ச நேரங்களில் தொடுதிரை மேய்ச்சல், காண் ஊடகங்களில் காட்சி கொடுப்பது, உரையாடுவது, உரையாற்றுவது போல் உளறுவது, புத்தகக் கண்காட்சிகளில் இளையராஜா பாட்டு பாடுவது...
விடுப்புத் தினங்களில் செய்வதொன்றே அது சொறிந்துவிடுவது அப்புறம் சொறியச் சொல்வது.
இங்கு எங்காவது வாசிப்பது, படைப்பது என்ற ஒன்று இருக்கிறதா?
அப்படியாயின் இவர்கள் எந்தச் சந்தில் சாறு காய்ச்சுகிறார்கள்?
உன்னத இலக்கியத்தை அவர்கள் எந்த ஒழிந்த வேளையில் படைக்கிறார்கள்?
அதெல்லாம் கிடக்கட்டும் ஒருபக்கம், அவரவர் சுதந்திரம் என்றே அளப்பார்கள். ஆனால் அங்கே போட்டுவிட்டு இங்கே வந்து துழாவுகிறார்களே அதுதான் உதைக்கிறது.
விருதுழல் காதை
எழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு இளவலொருவர் பெரும் மடத்து விருதொன்றைப் போய் வாங்கி வந்தார் பெருமையாக. தனக்குத் தகுதியில்லா இடத்தில் ஏனடா தம்பி வலிந்து கையேந்தி அவ்விருதை வாங்கினாய் என்று நாங்கள் வினவ, அத்துணைப் பெரியவர் வலிய கைப்பிடித்திழுத்து கேட்கும் பொழுது எப்படி மாட்டேன் என்பது என்றான் மலிவான சிரிப்பொன்றைச் சிரித்து...
நான்காண்டுகளுக்கு முன்பு இன்றைய காந்தியாகத் தன்னை உருவகித்துக்கொள்ளும் அன்பரொருவர் உயர் இலக்கியச் சங்கி மடம் உவந்து வீசிய எழும்பொன்றை கவ்வியிருந்தார், அவ்வளவு சிலேட்டமான அந்தக் கதை தொகுப்புக்கு. ஏற்பது இகழ்ச்சி என்று இடித்துரைக்க வந்த பிரதியிலேயே வல்லிய பிரதி என்னுடைய பிரதிதான் என்றார் இறுமாப்பாக.
இப்பொழுதிந்த இரண்டாயிரத்து இருபத்தி நாலிலே உப்பு புளி உறைப்பில்லாத சங்கிபண்டத்திற்கு மீண்டும் யுவ புரஸ்கார் விருதளந்திருக்கிறது ஒன்றிய அரசு.
ஆக விருது வழங்குகின்றவர்க்கு அது யாராக இருந்தாலும் எதற்கு விருது வழங்குகிறோம், ஏன் வழங்குகிறோம், யாருக்கு வழங்குகிறோம் எதற்காக வழங்குகிறோம்? உரியவருக்குத்தான் வழங்குகிறோமா? ஒரு கலையாக்கத்திற்கு உரிய அங்கீகாரம், மரியாதை செய்யும்பொழுது தெரிவு, தேர்வு, பொருத்தப்பாடு இவற்றைக்குறித்துக் கொள்ளவேண்டிய சீர், சிரத்தை, பொறுப்புணர்வு கொள்ளப்பட்டதா என்பது பற்றியெல்லாம் எள்ளளவு கருக்கடை இல்லை, கேட்டுக்கேள்வி, கட்டுடுப்பு எதுவுமே இல்லை.
தெரிவுக்குழுவில் ஆட்டங்கட்டி, அடம் பிடித்து உட்காரும் இலக்கிய ஆகிருதிகள், (காகிதப்புலிகள்) தமிழ்ப்பண்டித மொழிக்காவலர்கள் (வாய்ப்பந்தல்காரர்கள்) இவர்களுக்கும் நவீன தமிழ் நடப்பிலக்கியத்திற்கும், அங்கு உருப்பெற்று எழுந்திருக்கும் இலக்கியப்போக்குகள், பரிசோதனைகள், பங்களிப்புகள் இவற்றிற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. இலக்கியத் தளத்தில் இன்றைய நிலை என்ன என்பது பற்றி ஒரு வாப்பாடும் தெரியாது. முகநூல் வம்பளப்புகள், அங்கலாய்ப்புகள், அரைகுறை அபிப்பிராயங்கள், எடுப்புத் துடுப்புகள் பரிந்துரைகளைக் கல், உமி பொறுக்காது அப்படியே தின்று கழியும் அஜீரணக்கோளாறுகள். ஆசனம் கிழிய ஆங்கே காத்து புரியுமே தவிர இலக்கிய விசாரந்தான் ஏது?
விருதை ஏற்பவர்கள் தாம் ஏற்க அந்த விருது தகுதி உள்ளதுதானா, தாம் அந்த விருதுக்குத் தகுதியானவர்தாமா? விருதொன்றை பெறும்வகைக்கு நாம் படைத்தளித்தவை எவ்வளவு? என்ன தரம்? என்ன பயன்? என்றெல்லாம் ஆஞ்சி ஓய்ஞ்சி பார்க்காமல் உட்காரச்சொல்லும் முன்னமே ஓடிப்போய்ப் படுத்துக்கொள்வது சுயமுள்ள ஒரு படைப்பாளி செய்யும் காரியமல்ல.
கூரை மேல் சோறிட்டால் அள்ளித்திங்க ஆயிரம் காக்காய் என்பதுதான் விருது வழங்குகிற பேர்களின் இயங்கு செல்நெறி. நாம் மான அவமானம் கருதுகிற மனிதரென்றால், அதுவும் சத்தியமென்றால் இந்த மனிதக்கீழ்மைகளை அறவே புறந்தள்ளவேண்டும்.
வழிப்பாதை குரங்குகளுக்கு வாழைப்பழம் இடுவது போலாகிவிட்டது இந்தக்காலத்தில் பிள்ளைகள் அரசு உத்தியோகத்திற்குப் போவது. படித்துப் பட்டம் பெற்று வாழ அவர்களாகப் பொருள் தேடும் வழிவகை அறிந்து அவ்வண்ணம் தேடுவது, தான் தேர்ந்த வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்கள், மேடுபள்ளங்கள் உணர்வது, நேரும் இடர்பாடுகள் எதிர்கொள்வது, அவற்றால் பெற்ற படிப்பினையில் வாழ உரம் பெறுவது என்றில்லாமல் அவர்களை அரசு குமாஸ்தாக்களாக்கிச் செக்குமாடுகளாகவே ஆயுள் பரியந்தம் உழல வைக்கத்தான் பெற்றோர்கள் திட்டம் செய்கிறார்கள்.
வர வர பெண்களைப் பெற்ற புண்ணியவான்கள் ரொம்பப் படுத்துகிறார்கள். மணமுடிக்கப் பெண் கேட்டு சென்றால் பெண் கொடுக்க அவர்கள் வைக்கிற விதிமுறைகள் மாப்பிள்ளை வீட்டார்களுக்கு முழியை மட்டுமல்ல விரைகளையுஞ் சேர்த்துப் பிதுக்குவதாகவே இருக்கிறது. அரசு உத்தியோகமாக மட்டும் தான் இருக்க வேண்டும், அதுவும் வருடத்திற்கு ஆறு லட்சத்திற்கும் குறையாமலிருக்கவேண்டும். அப்பா, அம்மா, பெத்து, பிறப்பு, நாத்தி, நங்கை, தாத்தா, பாட்டி வீட்டில் யாருமிருக்கக்கூடாது. அன்றாடம் ஒரு இட்டிலிக்கு மேல் செலவிருக்கக்கூடாது, சத்தம் போட்டுப் பேசக்கூடாது, இருமக் கூடாது, தும்பக் கூடாது, குறட்டை விடக் கூடாது இப்படிப் பல கூடாதுகள். மாப்பிள்ளை வீட்டுச் சார்பில் மணமகன்கள் சொல்லிக் கொள்வதாவது வாஸ்தவம் தான் பெண்ணைப் பெற்ற தகப்பன்மார்கள் தங்கள் புத்ரிகளைத் தண்ணியுள்ள இடத்தில்தான் தாரை வார்த்துக்கொடுக்க நினைப்பார்கள். பத்துலட்சம், பதினைந்துலட்சங்கள் ஆளுங்கட்சிக்கு லஞ்சம் அவிழ்த்தாவது நாங்கள் அரசுப்பணிகளில் அமர்ந்து விடுகிறோம்.
மங்களநாண் பூட்டி மணமகள் புக்ககத்தில் அடிவைக்கும் நாள்தொட்டு
அரசு வழங்கும் ரேஷன் அரிசி பருப்பில்தான் அவர்கள் உலை வைக்கவேண்டும்.
ரேஷன் சீலைகள்தான் உடுத்திக்கொள்ளவேண்டும்.
காந்தி பார்சோப்பிலேதான் துணி அலசி காய வைக்கவேண்டும்.
தலைவலி காய்ச்சல் என்றால் த/அ மாத்திரைகள்தான் விழுங்க வேண்டும்.
போக்குவரத்துக்கு அரசுப் பேருந்துகளைத்தான் பாவிக்கவேண்டும்.
இல்லறம் சிறந்து பிள்ளைகள் உண்டானால் பேறுகாலத்தை
அரசு மருத்துவமனைகளிலேதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.
வாரிசுகளை அரசு பள்ளிகளிலே படிக்க வைத்து தான் வளர்த்து ஆளாக்கவேண்டும்.
சரி என்றுதான் தோன்றுகிறது.
மணவாழ்க்கை, குடும்ப அமைப்பு இவற்றின் மீதான விழுமியங்கள் வலுவிழந்து வரும் இக்காலக்கட்டத்தில் அவற்றை நாம் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யவேண்டியது அவசியமாகிறது.
கள்ளச்சாராயத்திற்குப் பல உயிர்கள் பலியாகியிருக்கின்றன. நகர மத்தியிலிருக்கிறது சட்ட ஒழுங்கு கேந்திராலயம். அதன் பின்பக்க சந்திலேதான் எத்தனால் கலந்த சாராயம் விற்கப்பட்டிருக்கிறது. ஒரே வதிவிடத்திலிருந்து பெருங்குழு ஒன்றின் உயிர்கள் மாய்க்கப்பட்டிருக்கின்றன. அரசதிகாரம் அறியாது நேற்று தொடங்கியிருக்காது உயிர் கொள்ளும் மலின சாராய வியாபாரம். உயிரிழப்புக்கு முன் உரைப்புது எதுவுமில்லை. நிவாரணங்களுக்கு முன்னர் அளிக்கப்படவேண்டியது நீதி.
மற்றொன்று...
உட்கொள்ளும் / நுகரும் யாதொன்றின் மீதும்ஓர் ஓர்மை வேண்டும் நமக்கு
இவண்
மு.ஹரிகிருஷ்ணன்