வணக்கம்
பேரிடர் உழல் காதை
ஈழவிடுதலைப் போரின்போது அதன் நிமித்தமாக மேலை நாடுகளில் உருவான சந்தைகளும் புழங்கிய பணப்புழக்கமும் ஏராளம்… அவற்றில் பத்தில் ஒரு பங்கு நிதி கிடைத்திருந்தால் கூட போர் வெற்றி முகம் கண்டிருக்கும் என்றுவோர் ஈழ நண்பர் மனம் கசந்தோர்முறை அங்கலாய்த்தார். ஒரு இன விடுதலைப்போரை தங்களுக்கான ஆதாயங் கொழிக்கும் சந்தையாக மாற்றும் ரசவாதம் தெரிந்த பேர்கள் எம்மனோர் போன்றோர் எவருமிலர்.
அந்தப்படியே பேரிடர் வந்து உறுத்தும் இத்துயர்காலத்திலும் உரியவற்றை காலத்தே செய்யாது, வாளாவிருந்துவிட்டு, அறிவு விழிப்பற்ற பலவீனமான மக்களை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பரிசோதனைக் கூட எலிகளாக்கி பணம் பண்ணும் அரசு அதன் அமைப்புகள், நிலைமையை சாதகமாக்கி பாட்டாளிகள் வாயில் மண் இட்ட சர்க்கார் பால் குடித்து வளரும் நிறுவனங்கள் கீழ்மையை என்னவென்று சொல்ல?
o
தருமபுரி ஏரியூர் செல்லமுடி பகுதியைச் சார்ந்த நண்பர் கிருஷ்ணன் சேலம் சீலநாயக்கன்பட்டியில் சொந்தமாக கம்பெனி வைத்து ஜவுளி ஏற்றுமதிச் செய்துவருகிறார். பொது முடக்க காலத்தில் பொம்மை அலங்காரத்திற்கு துணி வாங்க அவர் காரியாலயம் சென்றிருந்தேன். இருபதுக்கு மேற்பட்ட தொழிலாளிகள் அங்கே சிச்சிறு வேலைகள் செய்துகொண்டும் ஓய்வாகவுமிருந்தார்கள். கார்பரேட் நிறுவனங்களெல்லாம் தங்கள் பணியாளர்களை எடுத்துப்போட்டு கழுத்தை முறித்துக்கொண்டிருக்க நீங்களெப்படி இத்தனை பேர்களை வைத்துக்குப்பைப் போடுகிறீர்களென்றேன். உண்டான வேளையில் நாளைக்கு இரண்டு பணிமுறை வேலைப்பார்த்து சம்பாதித்துக் கொடுத்தவர்களை இடுங்கட்டில் வைத்தாதரிக்கவேண்டாமா என்றார் அமைதியாக.
அகண்ட பாரதம் மட்டுமல்ல உலகெலாம் தமிழ் மணம் பரப்பி உள்நாட்டில் ஏழு லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்த ஆ. வி பத்திரிகை நிறுவனம் தனது பர்த்தாக்களை சமயம் பார்த்து நட்டாற்றில் கைகழுவி விட்ட நேர்த்தியை, இழைத்த அநீதியை கண்டித்து ஓர் வார்த்தை தானும் உதிர்க்க எழும்பாத நம் நாக்கு (நக்குகிறபோது நாவெழும்புவதேது) மேடைதோறும் குச்சி மைக்கைப் பிடித்து அறம்பாடி என்ன? அரசியல் எழுதி என்ன? பொங்கும் நம் சத்தியாவேசம் பொட்டணம் மிச்சருக்கு அடங்கி விடக்கூடியதுதானே!
o
மக்கள் அரசு மக்களுக்காகவே… எனில் நெருக்கடி நேரத்தில் மருத்துவ படிப்பு விவகாரத்தை ஆய்ந்தோய்ந்து வல்லுநர்கள் சொல்லுமாப்போலே இடைநிறுத்தி நிபந்தனை ஏதுமில்லாமல் பரிசீலித்தால் என்ன. முறையானது இதுதான் என்றால் இத்தனை பதட்டம் எதற்கு? உத்தமர்க்கும் ஒசுப்படி தப்பிலிக்கும் பத்திர ஓலை எதற்கப்பனே?
o
நேயமுள்ள இதயங்கள் பலவற்றை நேரில் தரிசிக்க முடிந்தது இப்போது. கருணையோடு அவர்கள் நிவாரணங்கள் வழங்கும் செயற்பாடுகளில் காத்திரமாக இயங்கிக்கொண்டிருக்க நம் ஆட்கள் இணைய வெளியே நாறும்படிக்கு வாயில் கழிந்து கொண்டிருந்தார்கள். விளம்பரம் பண்ணாதவன் கொடும்பாவி என்றமானிக்கு இவர்கள் வழி நெறி பிறழ சுயமோகம் தவிர பிறிதொன்றும் காரணமில்லை. எண்ணெய் செலவாகிறதே ஒழிய பிள்ளைப்பிழைக்கிற வழியைக் காணோம்.
o
நிலைய வித்துவான்கள் இங்கு நிறைய பேர்களிருக்கிறார்கள். தகைமை சார்ந்து பல சர்வகலா சாலைகளில் அத்தக்கூலிக்கு அவர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். வள்ளல் பெருந்தகைகளின் சூத்துக்கு பிரமனையாய் இருப்பது போக விஞ்சிய நேரமெல்லாம் தன் சிந்தையில் வைத்துச் (அவர்கள் வெகு பாடுபட்டு) சிந்திக்கும் ஒரே சிந்தனை, இந்த தளம் குறித்து அதன் மேம்பாடு குறித்து மட்டுமே அன்றி வேறொன்றுமில்லை. விளைகிற பிரதிகள் எல்லாம் அவர்கள் கண்டு சொன்னவைதாம். பாருங்கள் இரண்டாயிரத்து பதினொன்றில் சபரிநாதனின் ‘களம் காலம் ஆட்டம்’ வெளியாகி இரண்டாயிரத்து பதினாறில் ‘வால்’ வெளியாகியது. பத்தொன்பதில் இரண்டாம் பதிப்பும் கண்ட அப்பிரதி முன்னிட்டு தளத்தில் குறைந்த அளவில் ஆன விவாதங்களும் நடைபெற்றது. இடையில் அவரது மொழியாக்க பிரதியொன்றை ‘கொம்பு’ கொண்டு வந்தது. ஆகிருதிகள் என்று போர்டு மாட்டிக்கொண்டு திரியும் பேர்வழிகள் பழம் தின்று கொட்டைப் போட்ட பதிப்பு செம்மல்கள் தன்னோடு இலக்கியம் உசாவுகிறபொழுது, நடப்பு இலக்கியம் என்கிற பொருண்மையில், புதியவர்கள், ஆக்கங்கள், புதிய பதிப்புகள் பதிப்பது குறித்து வாய் திறக்கமாட்டார்களா? விலையில்லா அவர்தம் சொல்லுக்கு அங்கே மதிப்பு இல்லையென்றால் அங்கே நமக்கென்ன ம . பி வேலை ?
o
தனி நபர்கள் மீதான பிரேமை காரணமாக இலக்கியத்தரம், படைப்பு உயிர்ப்பு என்பதையெல்லாம் கொண்டு கூட்டி மதிப்பீடு செய்வதோடு விருது அங்கீகாரம் என்கிறபோது மன்றம் ஏறி தயங்காது பொய்சாட்சி சொல்லும் இலக்கியப்போலிகள் விளைவிக்கும் சூழல்சீர்கேட்டுக்கு ஏற்ற மீட்பு நடவடிக்கையாக முழுமுற்றான இலக்கிய திறனாய்வை முன்னெடுக்கவேண்டியது இன்றியமையாதது.
மணல்வீட்டின் இணை இணைய இதழாக ‘ரசமட்டம்’ கலையிலக்கிய விமர்சன சஞ்சிகை மாத இதழாக வரும் அக்டோபரில் இருந்து (முழுமையான விமர்சன இதழாக) வெளியாக இருக்கிறது. சமரசமற்ற விமரிசனம் இதழின் பிரதான செயல் நோக்கமாகும். அன்பர்கள் மனமுவந்து படைப்பு வகைமை எதுவென்றபோதிலும் பிரதியின் மீதான விமர்சன கட்டுரைகள், ஆய்வு கட்டுரைகள், நூலறிமுகம் என்ற பொருண்மைகளில் எழுதி அனுப்பி பங்களிக்கவேண்டுகிறோம். வலை இதழ்களில் வெளியாகும் படைப்புகள் குறித்த உரையாடல்கள், விவாதங்கள், சிறு சஞ்சிகைகள் அவற்றின் நோக்குபோக்கு, அவையெடுக்கவேண்டிய முன் எடுப்புகள் , இலக்கியதளம், அதன் தரம், மேம்பாடுகுறித்த தனி நபர் / குழு இவற்றின் ஆலோசனைகள், பிரதியாக்கம் செய்யவேண்டிய படைப்புகள், காத்திரமாக எழுதும் புதிய படைப்பாளிகள், மறு பதிப்பு செய்யவேண்டிய நூல்கள், மொழியாக்கம் செய்யவேண்டிய நூல்கள் என ஜீவனுடன் படைப்பு தளம் இயங்க என்னென்ன ஆலோசனைகள் உள்ளனவோ இவற்றோடு அவை எல்லாமும் வரவேற்கப்படுகின்றன.
o
மணல்வீடு அச்சு இதழ் எண் நாற்பதுடன் கவிஞர் செல்வசங்கரனின் ‘சாலையின் பிரசித்திபெற்ற அமைதி’ என்ற கவிதைப்பிரதி அதன் பிறகான அவகாசத்தில், கறுத்தடையான் அவர்களின் ‘கோட்டி’ நாவலும், சர்வோத்தமன் சடகோபன் அவர்களின் ‘முறையிட ஒரு கடவுள்’ சிறுகதைப் பிரதி, கவிஞர் விவேகானந்தன் அவர்களின் ‘சுதந்திரம் ஒரு டப்பா’ கவிதைப்பிரதி, கவிஞர் ரபேல் கிறிஸ்டி செல்வராஜ் அவர்களின் ‘மார்வளையங்கள்’ கவிதைப்பிரதி, கவிஞர் நெகிழன் அவர்களின் ‘பூஜ்ய விலாசம்’ கவிதைப்பிரதி, சிவசித்து அவர்களின் ‘உவர்’ சிறுகதைப் பிரதி ஆகியன வெளியாக இருக்கிறது. வேண்டுவோர் முகவரி அனுப்பி பெற்றுக்கொள்க .
நன்றி நவில்தல்
உற்ற நேரத்தில் இணைய நேரலை நிகழ்வு வாய்ப்பு தந்ததோடு தொடர்ந்து நிகழ்வுகள் நடத்த ஏதுவாக வெப் கேமரா, மடிக்கணினி வாங்கித் தந்து கலைஞர் பெருமக்கள் வாழ்வாதாரம் முற்றிலும் நசிந்து போகாதபடிக்கும் யாசகம் எங்கும் கேக்காமல் தங்கள் பிழைப்பை தாங்களே பார்த்துக் கொள்ளும்படிக்கும் வழிவகை செய்த சாஸ்தா தமிழ் பவுண்டேசன் நிறுவனர் திருமிகு வேலுராமன் அவர்களுக்கு, சாக்ரமண்ட்டோ தமிழ் மன்றம், சான் பிரான்சிஸ்கோ பாரதி தமிழ் சங்கம், வளைகுடாப்பகுதி தமிழ்மன்றம் (வட அமெரிக்கா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு) அதன் தோழமை தமிழ்ச்சங்கங்கள், அவற்றை நிர்வாகிக்கும் தமிழ் உணர்வாளர்கள், முகநூல் நண்பர்கள் யாவற்ற பேர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகிறேன்.
இவண்
மு. ஹரிகிருஷ்ணன்