பத்மநாபனின் நாபியில் முத்தமிட்டாள் பானு. அவனது தாடையில் உதடுகளில் கன்னத்தில் அவளின் இதழ் பதித்தாள். ரவீந்திரனுக்கு மட்டும் தனியான அழைப்பு ஒலியை வைத்திருந்தான் பத்மநாபன். தன் உடலின் மீது படுத்திருந்த பானுவை மெத்தையில் படுக்குமாறு சைகை செய்தவாறு அவளை விலக்கி படுக்கையிலிருந்து எழுந்து அலைபேசியை எடுத்தான். உடைகளைச் சுருட்டிக் கொண்டு அறையிலிருந்து வெளியே சென்று சோபாவில் அமர்ந்தாள் பானு.
“ரவீந்திரன் வரச் சொல்றாரு. நான் கிளம்பனும்”. பத்மநாபன் அறையிலிருந்து சத்தமாகச் சொன்னான்.
“இப்போவேவா”
“ஆமா”
“ஏன்... ரவீந்திரன் பொண்டாட்டிக்கு ஏதாவது அவசரமாப் போயிச் செய்யனுமா”
அறையில் சட்டையின் பொத்தான்களை மாட்டிக்கொண்டிருந்தவன் பானுவை அடிக்க அவள் அருகில் ஓடி வந்தான். அவன் ஒரு விலங்கு போலப் பற்களைக் காட்டிக்கொண்டு ஓடிவருவதை எந்தச் சலனமும் இல்லாமல் வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் பானு. கையை ஓங்கியவன் அடிக்காமல் அவள் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தான். தண்ணீர் பாட்டிலை எடுத்து குடித்துவிட்டு பத்மநாபனுக்கு நீட்டினாள் பானு. பத்மநாபன் பாட்டிலை வாங்கிக் கீழே வைத்தான்.
“அவங்களப் போயி அப்படிச் சொல்ற. அவங்க புண்ணியவதி டீ”
“நான் தேவிடியாவா”
“ஏன் இப்படிப் பேசுற பானு”
“இத முத தடவ கிடையாது பத்து. நீ இன்னிக்கு நாம வெளிய போலாம்னு சொன்ன”
“நாளைக்குப் போலாம்”
“நாளைக்கு ரவீந்திரன் கூப்படமாட்டானா”
“நீ கிளம்பு”
“எங்க”
“உங்க வீட்டுக்கு.”
“ஏன்”
“நீ இங்க இருந்தா நான் உன்னைய ஏதாவது பண்ணிடுவேன்”
“என்ன பண்ணுவ”
“ஏண்டீ அசிங்கமாப் பேசற. ரவீந்திரனப் போயி அவன் இவன்னு சொல்றே. அவரு யாரு தெரியுமா”
“உன் அப்பாவா”
எழுந்து அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை தூக்கி அவள் மீது ஏறியப் பாய்ந்தான். மறுதிசையில் கிடாசினான்.
“ப்ளீஸ். நீ கிளம்பு.” போ என்று சைகை செய்தவாறு அங்கிருந்து பால்கனியில் போய் நின்றுகொண்டான்.
பானு அதற்குபின் எதுவும் பேசவில்லை. உடைகளை அணிந்துகொள்ள அறையினுள் சென்றாள். உடலில் சுருண்டிருந்த துணிகளைக் களைந்தாள். உடைகள் ஏதுமின்றி உறைந்து நின்றாள். கண்களில் நீர் சொரிந்தது. தனது மார்பை இடையைக் கைகளால் மெல்ல பற்றினாள். பத்து என்றாள். ஜீன்ஸ் பேன்ட்டும் கருநிற டீசர்ட்டும் அணிந்துகொண்டு தன் உடைகளை ஒரு பையில் எடுத்து வைத்துக்கொண்டாள்.
கருப்பு நிற டீசர்ட் உன் செந்நிற உடலுக்கு அழகாய் இருக்கிறது என்று பத்து ஒரு முறை சொன்னதை நினைத்துக்கொண்டாள். கூந்தலை அவிழ்த்து தலைவாரி வாயில் பற்றியிருந்த கிளிப்பை எடுத்து மாட்டிக்கொண்டு கிளம்பினாள். வெளியே வந்தபோது பத்மநாபன் நாற்காலியில் அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். அவனிடம் எதுவும் சொல்லாமல் வெளியே சென்றாள்.
ஜெமினி சிக்னலில் நன்கு பருத்திருந்த வெள்ளைத் தோல் மத்திய வயதினன், அவனைப்போலவே பருத்திருந்த அவனது மனைவி, பத்து வயதை கடந்த இரு ஆண் குழந்தைகள் அனைவரும் கியரற்ற இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தனர். இருவருக்கும் நடுவில் இருந்த குழந்தை பிதுங்கிக்கொண்டிருந்தது. முன் பக்கம் அமர்ந்திருந்த ஆண் குழந்தை ஒரு டெய்ரி மில்க் சாக்லெட்டை முழுதாகத் தின்றுகொண்டிருந்தது. சிக்னல்மாறி அந்த வண்டி அவனுக்கு முன்னே இடது பக்கம் திரும்பியது. பத்மநாபன் தன் மோட்டார் சைக்கிளில் நேராகச் சென்றான்.
அவர்கள் இந்த மாலைபொழுதில் கடற்கரை நோக்கி செல்லக் கூடும். அவர்கள் அங்கே பாய் விரித்து அமரக்கூடும். அந்தியில் அவர்கள் அன்றையைப் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கக்கூடும். பானுவும் அவனை எங்காவது வெளியே அழைத்துச்செல்லக் கேட்டாள். ரவீந்திரன் அழைத்திருக்காவிட்டால் ஒரு வேளை அவளை அழைத்துச் சென்றிருக்கக்கூடும். ரவீந்திரனின் மனைவியைப் பற்றிப் பானு ஏன் அப்படிப் பேசினாள். அவரது மனைவி அழகானவர்தான். ஓர்மையற்று ஒரு நாள் அவரது உத்ரா என்ற பெயரை பானு இருக்கும்போது உச்சரித்துவிட்டதும் உண்மைதான். எப்போதும் வெண்ணிறத்தில் அழுத்தமான நிறங்களாலான பார்டர்கள் கொண்ட பருத்தி புடவைகளையும் பார்டர் நிறத்திலான பிளவுஸையும் அணிந்திருப்பார். மெட்டல் வளையல்களும் காதணிகளும் பெரிய பொட்டும் இட்டிருப்பார். மெல்லிய காலடி சத்தத்தோடு அவர் நடந்து வருவது ஒரு பறவை சிறகடிக்காமல் பறந்து வருவது போல இருக்கும். சன்னமான குரலில் பேசுவார்.
தன் தாய் தந்தையரை சிறு வயதிலேயே இழந்துவிட்ட ரவீந்திரன் சுயமாக உழைத்து படித்து முன்னேறியவர். ஒரு ஐஸ் பேக்டரியில் வேலை செய்துகொண்டே படித்தவர் ரவீந்திரன். வழக்கறிஞர். சமூக ஆர்வலர். எப்போதும் ரவீந்திரன் அடர்த்தியான நிறங்களிலான ஜிப்பாவுடன் அப்போதுதான் சவரம் செய்து லோஷன் இட்ட முகமுமாகத் தோன்றுவார். நீதிமன்றங்களில் வெண்ணிற முழுக்கைச் சட்டையுடன் கறுப்பு கோட்டும் அங்கியுமாகக் கம்பீரமாகக் காட்சியளிப்பார். அவர் தன்னைத் தினமும் உடற்பயிற்சி செய்யச் சொல்வதும் தன்னால் அது இயலவில்லை என்பதையும் நினைத்து எரிச்சல் கொண்டான் பத்மநாபன். ரவீந்திரன் ஒரு குட்டிபயில்வான். ஆறடிக்கும் மேலான உயரம். எந்தக் கூட்டத்திலும் ரவீந்திரன் தனித்துத் தெரிவார். விரிந்த தோள்பட்டைகள், ஒடுங்கிய வயிறு, கூன் விழாத முதுகு, தாடையில் கை பொதித்துச் சிந்திக்கும் தோரணை, பெரிய மீசை, மெல்ல மெல்ல கால்களை வைத்து வேகமாக அவர் நடக்கும் பாங்கு, வசீகரிக்கும் அவரது குரல், நீதிமன்றங்களில் அவர் வாதங்களை முன்வைக்கும் விதம், எல்லாவற்றிலும் இருக்கும் தெளிவு, அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமை. ஏதேனும் அரசியல் கட்சியில் சேர்ந்தால் ரவீந்திரன் விரைவில் அந்தக் கட்சியின் முக்கியப் பொறுப்புக்கு வந்துவிடுவார். எந்தப் பெண்தான் ரவீந்திரனை காதலித்திருக்க இயலாது. பணக்கார பெண்ணான உத்ரா அவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது ஆச்சரியமில்லைதான். பத்மநாபன் வண்டியை அணைத்தான்.
இரண்டு இரு சக்கர வாகனங்களுக்கு மத்தியிலிருந்த குறுகிய இடத்தில் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு அரங்குக்குள் சென்றான் பத்மநாபன். புத்தகத்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ் வெளியிடுவார், நீ அதைப் பெற்றுக்கொள்ளவேண்டும், சரியாக ஆறு மணிக்கெல்லாம் கவிக்கோ மன்றத்திற்கு வந்துவிடு என்று ரவீந்திரன் அழைத்திருந்தார். நேற்று அழைப்பிதழைக் கொடுக்கும்போது இதைச் சொல்லவில்லையே என்று அவர் தொலைபேசியில் அழைத்து சொல்லும்போது நினைத்துக்கொண்டான். அழைப்பிதழிலும் அவன் பெயரில்லை. ஆனால் கேட்க நினைத்து கேட்கவில்லை. அவன் அரங்கினுள் செல்லும்போது தொகுப்பாளர் மேடைக்கு வர வேண்டியவர்களின் பெயரை அழைக்க ஆரம்பித்திருந்தார். பத்மநாபன் மேடை ஏற எளிதாக இருக்கும் என்று முன் வரிசையில் சென்று அமர்ந்தான்.
மேடைக்கு வரவேண்டிய அனைத்து பெயர்களையும் சொல்லி முடித்துவிட்டார் தொகுப்பாளர். அவன் பெயரை சொல்லவில்லை. அரங்கிலும் மேடையிலும் நிறைய கூட்டம் என்பதால் ஒரு வேளை புத்தகம் வெளியிடப்படும்போது அழைக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டான். அந்தப் பெண் தொகுப்பாளரை இதற்கு முன் ஏதோ ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறோமே என்று குழம்பிக்கொண்டிருந்தான். அவன் குழம்பிக்கொண்டிருந்த நேரத்தில் புத்தகத்தை முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ் வெளியிட மனித உரிமை ஆர்வலர் ரகோத்தமன் பெற்றுக்கொள்வார் என்று அந்தப் பெண் தொகுப்பாளர் அறிவித்தார். பத்மநாபன் வயிற்றில் ஒரு ஓட்டையை உணர்ந்தான். இப்போது எழுந்து அரங்கை விட்டு வெளியேச் சென்றால் நன்றாக இருக்காது என்று கருதினான். பானு ரவீந்திரன் உன் அப்பாவா என்று கேட்டது அவனது நினைவுக்கு வந்தது. ரவீந்திரன் மேடையிலிருந்து பத்மநாபனை பார்த்து புன்னகைத்தார். பல ஊடகக்காரர்கள் நிழற்படங்களை எடுத்துக்கொண்டிருந்தனர். ரவீந்திரனின் மனைவி உத்ரா மேடைக்கு அருகில் வந்து தன்செல்பேசியால் போட்டோ எடுத்தார். திரும்பும்போது பத்மநாபனை பார்த்துப் புருவம் தூக்கி புன்னகைத்துக்கடந்தார். ரகோத்தமனுக்குச் சமீபத்தில் மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கலந்துகொண்டிருப்பதால் ஒரு வேளை ஊடகக்காரர்கள் அதிகம் வந்திருக்கலாம். அவரின் பெயர்தான் அழைப்பிதழில் கூட இருந்தது. ஆனால் தன்னை ஏன் இன்று வரச்சொன்னார், ஏன் இறுதியில் ரகோத்தமனே வாங்கிக் கொள்கிறார் என்று எதுவும் பத்மநாபனுக்குப் புரிய வில்லை.
நீதிமன்றம், காவல் நிலையம் என்றாலே பொது மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் நீதிமன்றங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் தங்கள் புகார்களைக் கொண்டுவரவே பாதிக்கப்பட்டவர்கள் தயங்குகிறார்கள். வறியவர்கள், பெண்கள், எந்த அரசியல் கட்சி பின்புலமும் அமைப்பு பின்புலமும் இல்லாதவர்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்டவர்கள் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்ட வேண்டும். தட்டினால் நீதி கிடைக்கும். அதற்கு அவர்களுக்குக் காவல் நிலையங்கள் பற்றி, குற்றவியல் நீதிமன்றங்கள் பற்றி, உரிமையியல் நீதிமன்றங்கள் பற்றி, எப்படி ஒரு வழக்கை நீதிமன்றத்தில் நடத்துவது என்பது பற்றி, ஐபிசி, சிபிசி, சிஆர்பிசி, இந்திய அரசியல் சாசனம், இந்திய சாட்சி சட்டம், வாயிதா, ரிட் என்று அனைத்தையும் பற்றி அடிப்படை புரிதல் இருக்கவேண்டும். நீதிமன்றங்கள் நீதியை நிலை நாட்ட இருக்கும் அமைப்பு. அங்குச் செல்ல அஞ்ச வேண்டியதில்லை. அறிய அறிய அச்சம் அகல்கிறது. அப்படி அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்று மிகவும் உழைத்து ரவீந்திரன் இந்தப் புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கிறார். ரவீந்திரனை சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் அனைவரும் நன்கு அறிவர். உழைப்பாளி. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர். அவருக்கு இருக்கும் வேலைகளுக்கு மத்தியில் இந்தப் புத்தகத்தை அவர் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவரை நான் நன்கு அறிவேன் என்பதால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை, அவருக்கு வாழ்த்துக்கள் என்று சொல்லி தன் உரையை நிறைவு செய்தார் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஜவாஹிரூல்லாஹ். அவருக்கு நன்றி சொன்னார் தொகுப்பாளர்.
எரிந்து எரிந்து அணையும் விளக்கு போலக் கை குலுக்கல்கள், முகமன்கள், வாழ்த்துகள், புன்னகைகள் என்று கூட்டம் மெல்ல கலைந்து சென்றது. அரங்கின் வேலையாட்கள் நாற்காலிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்திருந்தனர். பத்மநாபன் அருகில் வந்து அமர்ந்தார் ரவீந்திரன். அவனிடம் புத்தகத்தின் பிரதியை நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டான். அவன் தோளில் கை போட்டு வெளியே அழைத்துச் சென்றார். சைக்கிளில் டீ விற்றுக்கொண்டிருந்தவரிடம் இரண்டு கப் டீ வாங்கிபத்மநாபனிடம் ஒரு கப்பை நீட்டினார். அவன் வாங்கிக்கொண்டான். உத்ராவை காரை எடுத்துச்செல்லச் சொல்லிவிட்டேன், நாம் இருவரும் உங்கள் பைக்கில் என் வீட்டிற்குச் செல்லலாம் என்று ரவீந்திரன் சொன்னார். பத்மநாபன் பதில் எதுவும் சொல்லவில்லை.
நூலகத்தில் சிலர் செய்திதாள்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எம்.என்.ராய் எழுதிய இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலகட்டம் பற்றிய புத்தகத்தை எடுத்துக்கொண்டு அமர்ந்தான் பத்மநாபன். நூலகங்களுக்கு என்று சுழலும் வேகத்தில் காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன. தமிழகத்தில் இருக்கும் ஜாதிகள், அவர்களின் பிறப்பு, திருமணம், இறப்புச் சடங்குகள் பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒரு பெரிய புத்தகம் மேஜையில் இருக்கவும் அதை எடுத்துப் புரட்டினான். ரவீந்திரன் எந்த ஜாதியைச் சேர்ந்தவர், இத்தனை வருட பழக்கத்தில் அவரை இதுவரை கேட்கவில்லை, கேட்கவேண்டும் என்று தோன்றவில்லை, இன்று முதல் முறையாக அந்த எண்ணம் வந்ததை நினைத்துப் புன்னகைத்துக்கொண்டான்.
அவர் தனது முற்பகுதி தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எப்போதும் ரகசியம் காத்தார். ஒரு எல்லைக்கு மேல் அது குறித்து யாருக்கும் தெரியாது. நூலகத்தின் அருகிலிருந்த பிரிட்டீஷ் கவுன்சில் அலுலகத்தில் பானு பணிபுரிந்தாள். அவளை சந்தித்து மன்னிப்பு கேட்டுவிட்டு அலுவலகத்திற்கு சென்று கேஸ் கட்டுகள், கவுன் பை எடுத்துக்கொண்டு சைதை நீதிமன்றம் செல்ல வேண்டும். தேனாம்பேட்டையிலிருந்து அசோக் பில்லரில் இருக்கும் அலுவலகம் சென்று அங்கிருந்து சைதை செல்ல நிறைய நேரம் ஆகிவிடும். மணி ஏற்கனவே பத்தரை ஆகிவிட்டது. காலிங் அவர்ஸ் தொடங்கியிருக்கும். ரவீந்திரன் தனக்காகக் காத்திருப்பார். அழைத்தபோதும் எடுக்கவில்லை. எரிச்சல் அடைந்திருக்கக்கூடும். ஆனால் பானுவை இன்று சந்திக்கவில்லை என்றால் பின்னர்ச் சந்திக்க இயலாமலே போய்விடக்கூடும். பானுவை தொலைபேசியில் அழைத்தால் எடுக்க மறுக்கிறாள். அவள் இன்னும் அலுவலகத்திற்கும் வரவில்லை. மறுபடியும் எல்எல்ஏ பில்டிங்கில் இருந்த நூலகத்திலிருந்து வெளியே வந்து பிரிட்டீஷ் கவுன்சில் அலுவலகம் சென்றான். வெளியே வாகன நிறுத்துமிடத்தில் அவளது இரு சக்கர வாகனம் நின்றது. அவள் வந்துவிட்டாள் என்பது அவனுக்கு மேலும் பதற்றத்தை அளித்தது. பாதுகாவலர்கள் அவனைச் சோதனை செய்தனர். அடையாள அட்டையைப் பரிசோதித்த பின் உள்ளே செல்ல அனுமதித்தனர். உள்ளே சென்று அவள் பெயரை சொல்லி அவளைப் பார்க்கவேண்டும் என்றான். பத்மநாபனை அமரச் சொன்னார் வரவேற்பாளர். லாபியில் அமர்ந்தான். தொண்டையில் பெரிய உருண்டை திரண்டிருந்தது. வர மறுத்து விடுவாளோ என்று சிதறியபடி இருந்தான்.
செல்போனில் எதையோ பார்ப்பது போல அவன் அருகில் வந்தாள் பானு. அவனிடம் எதுவம் பேசாமல் அமைதியாக அருகில் அமர்ந்தாள். காபி குடிக்கலாமா என்று கேட்டான். அவள் எதுவும் சொல்லவில்லை. அவன் எழவும் அவளும் எழுந்தாள். இருவரும் லாபியிலிருந்து வெளியே வந்து கேபிடீரியா சென்றார்கள். பத்மநாபன் இருவருக்கும் காபி வாங்கிக்கொண்டு வந்தான். இரண்டு கைகளையும் தாடையில் பொதித்து மேலே கண்ணாடி சட்டகங்களின் வழி விழுந்த வெயிலை பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.
“இனி இப்படி நடக்காது பானு”
அவள் எதுவும் சொல்லாமல் காபியை பருகினாள். அவள் அவனைப் பார்க்கவில்லை. மறுபடியும் அதையே சொன்னான்.
“நேத்து நான் பேசினதுக்கு ஸாரி பத்து”
இப்போது பத்மநாபன் எதுவும் சொல்லாமல் இருந்தான்.
“நான் நேத்து போயிருக்கவே தேவையில்ல”
“இட் யிஸ் ஒகே. உனக்கு நேரமாகலயா. மணி பதினொன்னு ஆகுது. கோர்ட்டுக்கு போகல”. அவள் முந்தைய தினம் எதுவுமே நடக்காதது போல பேசினாள்.
“போகனும். உன்னைய பாக்கனும்னு தோனிச்சு”
“ம்”
“பானு”
“உனக்கு என்னைய நிஜமாவே பிடிச்சிருக்கா பத்து. எனக்குப் பயமாயிருக்கு”
பத்மநாபன் பானுவின் கைகளைப் பற்றினான். பானு பத்மநாபனை பார்ப்பதை தவிர்த்து கண்ணாடிக்கு திரைக்கு மறுபக்கம் இருந்த நூலகத்தில் ஒரு குழந்தை புத்தகம் ஒன்றை எடுத்துத் தீவிரமாகப் புரட்டுவதைப் பார்த்தவாறு இருந்தாள். அவளது கண்களில் நீர் கோர்த்திருந்தது. தலையைக் குனிந்து மெல்ல கண்களைத் துடைத்தாள்.
“சரி நீ கிளம்பு. நாம அப்புறம் பேசுவோம் பத்து”.
பெங்களூரில் உள்ள தேசிய சட்டப்பள்ளியில் பத்மநாபனுடன் படித்த எல்லா நண்பர்களும் ஏதேனும் கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்ந்தார்கள். பத்மநாபன் எந்த நிறுவனத்திலும் சேரவில்லை. சென்னைக்குச் சென்று ஒரு நல்ல வழக்கறிஞரிடம் ஜூனியராகச் சேரவேண்டும் என்று முடிவு செய்திருந்தான். ரவீந்திரன் இ.பி.டபிள்யூவில் நீதிமன்றங்களில் நீதிபதி ஒரு சமூகத்தின் எந்த வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற கேள்வியை எழுப்பிய ஒரு கட்டுரை அவனுக்குப் பிடித்திருந்தது. அவரைப் பற்றி அவன் அறிய வந்த செய்திகள் அனைத்தும் இனியவையாக இருந்தன. அவர் நடத்தி வெற்றி பெற்ற குற்றவியல் வழக்குகள், உரிமையியல் வழக்குகள், பொதுநல வழக்குகள், சிலமுறை இரு தரப்பையும் அழைத்து அவர் செய்யும் பஞ்சாயத்துகள் குறித்துத் தெரிய வந்தபோது அவன் உவகைக் கொண்டான்.
முக்கியமாக ஒரு வீட்டில் வேலை செய்த பெண் அந்த வீட்டில் சில சேலைகள் திருடுப் போய்விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் காவல் நிலைய விசாரணையில் இறந்து போன வழக்கில் தீவிரமாகப் போராடி அந்தக் காவல் நிலையத்தின் குற்றவியல் எஸ்.ஐ மற்றும் ஏட்டு ஆகியோருக்குச் சிறை தண்டனை பெற்று தந்த வழக்கு பற்றி அறிய நேர்ந்தபோது அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டான். அவர் பதில் மின்னஞ்சல் அனுப்பி நேரில் வந்து சந்திக்கச் சொன்னார். பத்து வருடங்கள் கடந்துவிட்டது. வயதும் முப்பத்திரெண்டு ஆகிவிட்டது. சைதாப்பேட்டை நீதிமன்றம், எழும்பூர் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் என்று பெரும்பாலும் இந்த மூன்று நீதிமன்றங்களிலேயே இந்தப் பத்து வருடங்கள் ஓடிவிட்டது. நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள், ரவீந்திரனின் இல்லம், உதயம் தியேட்டருக்கு எதிரே இருந்த காம்ப்ளக்ஸில் இருந்த ரவீந்திரனின் அலுவலகம் இவைதான் அவன் உலகம்.
ரவீந்திரனுடன் தொடர்பு இல்லாமல் அவன் வாழ்வில் இணைந்துகொண்ட ஒரே விஷயம் பானு. இன்றைய பொழுது இனிதே கழிந்தது என்பது போல எல்லாம் நன்றாகத்தான் இருந்தது. பத்மநாபன் சென்றுகொண்டிருந்த இரு சக்கர வாகனம் போல அவன் வாழ்க்கையும் சென்று கொண்டுதான் இருந்தது. ஆனால் சில நேரங்களில் அவன் தலையற்ற முண்டமாகவே உணர்ந்தான். அவனில் ஏதோ ஒன்று குறைவதை ஏதோ ஒன்று நெருடுவதை ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியாமல் விளங்கிக்கொள்ள இயலாமல் அவதியுற்றான். பத்மநாபன் ரவீந்திரனின் ஜூனியராக மட்டுமே இப்போதும் அடையாளப்படுத்தப்படுகிறான். இத்தனைக்கும் சில வழக்குகளில் ஜாமீன் பெறுவதிலிருந்து வழக்கை நடத்துவது, வாயிதாபெறுவது, சாட்சிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்குச் சொல்லித்தருவது அனைத்தையும் அவனே முழுமையாகச் செய்தான்.
ரவீந்திரன் முந்தைய நாள் எழுதி வெளியிட்ட புத்தகத்தில் நிறையத் தரவுகளுக்கு அவன் உதவியிருந்தான். தட்டச்சுச் செய்து கொடுத்தான். மெய்ப்புப் பார்த்தான் திருத்தங்கள் கூறினான். ஆனால் முன்னுரையில் கூட அவன் பெயரில்லை. அழைப்பிதழிலும் அவன் பெயர் இல்லை. புத்தகம் வெளியிடும் நாளில் அழைத்து அவமானப்படுத்தினார். ரவீந்திரன் நன்றாகப் பேசுவார். மேன்மையாக நடந்துகொள்வார். துயரப்படும் குரலற்ற மனிதர்கள் மீது உண்மையான அக்கறையுடன் இருந்தார். ஆனால் எங்கோ தனக்கான பிம்பத்தை உருவாக்கியபடியே இருந்தார். ஊடகங்களுக்குத் தேவையான முகத்தை தயாரித்தபடியே இருந்தார். சமமாக நடத்துவார். கருத்துகளைக் கேட்பார். ஆனால் அவர் அது மட்டுமல்ல. ஏதேனும் உக்கிரமான உரையாடலின் போது கானகத்தில் யாருமற்ற தனிமையில் நடந்து செல்லும்போது சட்டென்று பெரும் ஒலியுடன் தாக்க வரும் வனவிலங்கு போல எதிர்பாராமல் தாக்குவார். நிலைகுலைந்தபின் மிருகத்தின் அங்கியை கழற்றிவிட்டு வெளிச்சம் அருளி பருக நீரும் தருவார். அப்போது வேறு ஒரு ரவீந்திரன் காட்சி தருவார்.
பானுவிடம் பேசி விடைபெறும்போது மதியம் பன்னிரெண்டு ஆகிவிட்டிருந்தது. சைதை நீதிமன்றத்திற்குச் செல்வதில் இனி பொருளில்லை என்று எண்ணி தேனாம்பேட்டையிலிருந்து தி.நகர் வழி அசோக் பில்லரில் இருக்கும் அலுவலகம் சென்றான். சேலை அணிந்திருந்த மாந்தளிர் மத்திய வயது பெண் அலுவலகத்தின் வெளியே அமர்ந்திருந்தாள். அந்தப் பெண்ணின் இடது கையில் மூன்று விரல்களைக் காணோம்.ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் இருந்தது. யாரோ வெட்ட வரும்போது தடுக்க முனைகையில் விரல்கள் அறுபட்டு போயிருக்கக்கூடும். உள்ளே நுழைந்தான். ரவீந்திரன் அவனைப் பார்த்துவிட்டு தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.
“வெளிய ஒரு பொம்பள உக்காந்திருக்காங்க”
“ம்”
“பாத்துட்டீங்களா”
“ம். இன்னிக்கி கோர்ட்டுல காலிங் அவர்ஸ்ல நீங்க இல்ல.”
“ஒரு முக்கியமான வேல”
“கருணாமூர்த்திக் கேஸ்ல இன்னிக்கி ரெண்டு விட்னஸ் வந்திருந்தாங்க. அவங்க வரலனுதான் போன தடவ இன்னிக்கி டேட் வாங்கினோம். ஆனா இன்னக்கி நீங்க இல்ல. என்கிட்டயும் சொல்லல. கோர்ட்டுல நீங்க இல்லனு போன் பன்னப்பையும் எடுக்கல”
“சாரி சார்”
ரவீந்திரன் எதுவும் பேசாமல் கேஸ் கட்டை மடித்து C.C.No. 365/19 என்று எழுதினார். இந்திய சாட்சிய சட்டம் புத்தகத்தைத் திறந்து மடித்திருந்த பக்கத்தை எடுத்து தன் டைரியில் குறிப்பெடுத்தார்.
“வெளியில ஒரு பொம்பள உக்காந்திருக்காங்களே”
“திருமுல்லைநாதன் பத்தி சொல்ல வந்திருந்தாங்க”
“திருமுல்லைநாதன் பத்தி என்ன” பத்மநாபன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“அவங்க விரலப் பாத்திங்களா”
“ஆமா மூனு விரலு இல்ல”
“திருமுல்லைநாதன்தான் காரணம்”
“அவங்க விரல பாத்தா அவங்களுக்கு வெட்டுப்பட்டுப் பல வருஷம் இருக்கும்போல இருக்கே சார்”
“ஆமா அதுல அவர் அக்யூட் ஆகிட்டாரு. அப்பீலுக்குப் போயிருக்கனும். போகல. இது நடந்து பதினைஞ்சு வருஷம் மேல ஆகிடுச்சு”
திருமுல்லைநாதன் இப்போது புழல் சிறையிலிருக்கையில் அவரை ஜாமீனில் எடுக்க ரவீந்திரன் முயன்று கொண்டிருக்கும் இந்த நிலையில் வெளியில் அந்தப் பெண் அமர்ந்திருக்கிறார் என்பதையும் ரவீந்திரன் அந்தப் பெண்ணிற்காகப் பரிவாகப் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதையும் முடிச்சு போட பத்மநாபனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
“அவரு ஜாமீனுக்கு மறுபடியும் நாமதான் அப்ளை பண்ணியிருக்கோம். அப்பிடினா அவருக்கு வர மண்டே ஜாமீன் எடுக்க நாம ஆஜராகலையா”
“இல்ல”
“இது பச்ச துரோகம் சார்” பத்மநாபனின் உதடுகள் துடித்துக்கொண்டிருந்தது.
“அந்தப் பொம்பள இதபத்தி எப்படியும் இன்னிக்கி இல்ல நாளைக்கி மீடியால சொல்லுவாங்க. நாம அந்த மாதிரி ஆள் கேஸ்ல ஆஜராகறது சரியில்ல”
“சார், அப்ப என்ன நடந்தது, அதுல எவ்வளோ உண்மை இருக்கு, நமக்கு எதுவுமே தெரியாது சார். ஆனா இப்போ அவரு சம்பந்தப்பட்டிருக்கிறது ஒரு பொதுநல வழக்கு. ஒருத்தன கோபத்துல கமினாட்டினு திட்டுனதுக்குக் கொலை செஞ்சிருக்காங்க. செத்து போனவன் எஸ்.சி. அந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டவங்கள அரஸ்ட் பண்ணச் சொல்லி கோஷம் போட்ட திருமுல்லைநாதன் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறார்னு கைது செய்றாங்க. ஏற்கனவே இரண்டு தடவ அவருக்கு ஜாமீன் கிடைக்கல. இதப்பத்தி நமக்கு நிச்சயமா தெரியும். இதுல உண்மை இருக்குனு தெரியும். நாம அவரு கூடச் சேந்து நிக்கவேண்டிய நேரம் சார் இது. இதுல எதுக்கு சார் இந்தப் பொம்பள விஷயத்தை இணைக்கனும். அவ்ளோ முழுமையானவங்கனு இங்க யாருமில்லையே சார்.”
“வேற யாரையாவது வைச்சுப் பாத்துக்கச் சொல்லி அவர் வைஃப் கிட்டச் சொல்லிடுங்க”
“நீங்க முடிவு பண்ணிட்டீங்களா சார்”
“எஸ்” தலையாட்டினார் ரவீந்திரன். இதற்கு மேல் இது குறித்துப் பேச விரும்பவில்லை என்பது போல மறுபடியும் குறிப்பெடுக்க ஆரம்பித்தார்.
பத்மநாபன் எழுந்து வெளியே வந்தான். அந்தப் பெண் அங்கேயே அமர்ந்திருந்தார். இவளை ஏன் இன்னும் அமரச் சொல்லியிருக்கார் என்று புரியாமல் அவளைக் கடந்து சென்றான். அருகிலிருந்த டீக்கடையில் நின்றுகொண்டு அந்தப் பெண்னைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பெண் யாருக்கோ அழைத்துப்பேசினாள். பின்னர் ரவீந்திரனின் அலுவலக அறைக்குள் சென்றாள். அவள் வெளியில் வரும்போது வாகை சூடியிருந்தாள். அவள் செல்வதையே பார்த்தவாறு இருந்தான். பத்மநாபன் டீக்கடையிலிருந்து அலுவலகம் நோக்கி சென்றான். உள்ளே செல்லாமல் மறுபடியும் டீக்கடைக்குச் சென்றான். டீ குடித்தான். மறுபடியும் அலுவலகம் சென்றான். சாலையில் வாகன இரைச்சல். அவன் முழுதும் குவிந்திருந்தான். எதையோ முணுமுணுத்துக் கொண்டான். படபடப்பாக உணர்ந்தான். அவனது கைகள் வியர்த்தது. கர்சீப்பை எடுத்து கைகளைத் துடைத்துக் கொண்டான். உள்ளே நுழைந்தான்.
“சார், நான் திருமுல்லைநாதன் கேஸ்ல ஆஜர் ஆகுறேன் சார்”. அவன் தனக்குள் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகள் அவனது வாயிலிருந்து வெளியே வந்துவிட்டது.
“இல்ல பத்மநாபன். வேற யாரையாவது பாத்துக்கச் சொல்லி அவங்க வைஃப் கிட்ட சொல்லிடுங்க”
“இல்ல சார் நான்தான் ஆஜர் ஆகப்போறதா அவங்க வைஃப் கிட்ட சொல்லப் போறேன்”
“அந்தப் பொம்பளக்கிட்ட இப்பத்தான் சொல்லி அனுப்பிச்சேன். உங்கக்கிட்ட சொல்லிட்டுச் சொல்லலாமுனு அந்தப் பொம்பளைய வெயிட் பண்ணச் சொல்லியிருந்தேன். நான் இந்தக் கேஸ்ல இனிமே இன்வால்வ் ஆக விரும்பல”
“சார் நீங்க இன்வால்வ் ஆக வேணாம் சார். ஆனா நான் ஆகப்போறேன். திருமுல்லைநாதன் இந்த விஷயத்துக்கு எவ்ளோவு போராடினாரு உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்”
“இத விடமாட்டீங்களா பத்மநாபன்” சூழல் நாற்காலியிலிருந்து எழுந்து கத்தினார் ரவீந்திரன். இப்படி அவர் கத்துவது மிகவும் அரிதானது.
“எனக்கும் எல்லா அக்கறையும் இருக்கு. அந்தப் பொம்பள சொல்றதுல உண்மை இருக்கு. நாம இதுல இன்வால்வ் ஆக வேணாமனு சொன்னா ஒரு அர்த்தம் இருக்கும். விடுங்க. அவ்ளோதான்” சொல்லிவிட்டு ரவீந்திரன் தன் நாற்காலியில் அமர்ந்தார்.
“சார், நாம இல்ல சார், ரவீந்திரன் இல்ல சார், ரவீந்திரன் ஜூனியர் இல்ல சார், நான் சார், நான் பத்மநாபன் சாராங்கபாணி இந்தக் கேஸ்ல திருமுல்லை நாதனுக்கு ஜாமீன் வாங்கிக் கொடுப்பேன் சார். அதுதான் சார் நியாயம்.” பத்மநாபனின் நா தழுதழுத்தது. அவனது உடல் ஆடிக்கொண்டிருந்தது.
ரவீந்திரன் எதுவும் பேசாமல் பத்மநாபனை குழப்பமாகப் பார்த்தார். அவர் தன்னைத் திரட்டிக்கொண்டு எதையோ சொல்ல முயன்றார். பத்மநாபன் அதற்குள் தன் கோட், கவுன் ஆகியவற்றை எடுத்துப் பையில் வைத்தான். வேறு எதையாவது எடுத்து வைக்கவேண்டுமா என்று யோசித்தான். அவனால் கோர்வையாக யோசிக்க முடியவில்லை. இப்போதும் அவன் உடல் ஆடிக்கொண்டிருந்தது. எல்லாம் வேகமாகச் சுழன்று கொண்டிருப்பது போல இருந்தது.
“இந்த உலகத்துல யாருமே முழுமையானவங்க இல்ல சார். நீங்க கூட”
அவரின் பதிலுக்குக் காத்திருக்காமல் வெளியே வந்தான். வெளியில் பக்கத்துக் கடைக்கார்கள் அலுவலக வாசலில் நின்றுகொண்டிருந்தார்கள்.
“என்ன சார் ஒரே சத்தம்”. பத்மநாபன் பதில் சொல்லாமல் பையை வண்டியில் வைத்து வண்டியை கிளப்பினான்.
பொன்னிற சித்திரங்கள் நிரம்பிய நீல வண்ணப் புடவையை அணிந்திருந்தாள் பானு. நெற்றியில் சின்னதாகச் சிவப்பு நிற ஸ்டிக்கர் பொட்டு. காதில் நீல நிற மணிகள். மிக மெல்லிய தங்கச் செயின். நீல நிற பிளாஸ்டிக் வளையல்கள். சோபாவில் தளர்வாக அமர்ந்திருந்தாள் பானு. தனது கைப்பேசியிலிருந்து ஏதோ ஒரு திரைப்படத்தைத் தொலைக்காட்சிக்குக் காஸ்ட் செய்துவிட்டு சமையலறைக்குச் சென்றிருந்தான் பத்மநாபன். படத்தின் தலைப்பு நசீர் என்று இருந்தது. அந்த நடிகர் சேகர் கபூர் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
ஆனால் படத்தின் கதை திரைக்கதை எதுவும் அவளுக்குப் புரியவில்லை. அதைக் குறித்து அவள் அலட்டிக் கொள்ளவும் இல்லை. ஆனால் படத்தில் ஒளி மிக அற்புதமாக கையாளப்பட்டுள்ளதை கவனித்தவாறு இருந்தாள். ஒவ்வொரு காட்சி சட்டகமும் வண்ண ஒவியம் போல உயிர்பெற்றிருந்தது. காட்சிகள் மெல்ல நகர்ந்தன. பானு கதையைத் தொடரும் முயற்சியை முழுதும் விட்டு ஒவ்வொரு ஷாட்டையையும் உன்னிப்பாகக் கவனித்தாள். பத்மநாபன் இருவருக்கும் தேநீரும் ஒரு பச்சை நிற பீங்கான் தட்டில் ரஸ்க்குகளையும் எடுத்து வந்தான். அவள் தேநீரை எடுத்துக் குடித்தாள்.
“படம் பிடிச்சிருக்கா”
பானு வெறுமனே புன்னைகத்தாள்.
“மணி கௌல் டைரெக்ட் பண்ணது”
“ம். பேரு போடும்போது பாத்தேன். இது சேகர் கபூர் தான”
“ம்”
“எலிசபெத்னு ஒரு படம் இந்தாளு எடுத்ததுதானே”
“ம்”
“பண்டிட் குயின்னு கூட ஒரு படம் எடுத்தாரு”
“ம்”
கழுத்தில் கைகளை வைத்து சோம்பல் முறித்தாள் பானு. பத்மநாபன் தொலைக்காட்சியை அணைத்தான். எழுந்து நின்று பானுவின் கரங்களைப் பற்றி இழுத்தான். அவள் எழுந்து அவனில் சாய்ந்தாள். சட்டென்று அவளை பக்கவாட்டாகத் தூக்கினான். தாயை அரவணைத்துக் கொள்ளும் சேயை போல அவள் அவனது தோள் பட்டைகளைப் பற்றிக்கொண்டாள். எடையற்ற தோகை போல அவனில் இரு கரங்களில் அவள் இருந்தாள் .ஒரு கூழாங்கல்லை நதியில் விடுவது போல அவளை அவன் மெல்ல படுக்கையில் விட்டான். அவள் மெத்தையில் பொதிந்தாள். பத்மநாபன் பானுவின் நெற்றியில் முத்தமிட்டான். பானு பத்மநாபனின் முகத்தை வருடினாள். அவனது தாடையில் கன்னங்களில் இதழில் தன் இதழ் பதித்தாள். பானு பத்மநாபனின் நாபியில் முத்தமிட்டாள். பத்மநாபனின் நாபியிலிருந்து கமலம் உதித்தது. பிரபஞ்சம் சிருஷ்டித்தது.