சொப்பனத்தில் கோழி வளர்க்கும் மோட்டுக்கிழவி
கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் உடனான செவ்வி

மின்னஞ்சல் வழி உரையாடியவர் : செல்வ சங்கரன்
ஓவியம் : நெகிழன்

பகிரு

ராஜன் ஆத்தியப்பன்

தற்காலக் கவிஞர்களில் தனித்துவமானவராக அறியப்படுகிறார். அதிகம் பிரகடனப்படுத்திக்கொள்ள விரும்பாத இவரது இயல்பே கவிதைகளுக்கும் இருக்கின்றன. வேளாவேளைக்கு மனித யத்தனங்கள் செய்கின்ற கபடத்தனங்களிலிருந்து விலகி, வீசியெறிந்த வெற்று மதுக்குப்பிகளில் உறைந்த ஒரு மௌனம் கூடப் போதுமென வாழுகின்றவர். மாயலோகத்தில் உயிரற்ற ஜடப்பொருள்களும், அஃறிணை உயிர்களுமே முக்கி யஸ்தர்கள். வழியெங்கும் பாவிக் கிடக்கிற அவைகளை அள்ளி, அதன் கதகதப்பு தரும்  இதத்திலேயே   வாழ்நாள் மொத்தத்தையும்  கழிக்க  விரும்புகிறார்.

அறைக்குள்ளேயே வாழ்ந்துகொண்டு அங்கிருந்தே வீடுபேறடையும் மார்க்கத்தையும் காட்ட விழைகிற இவர், அந்நேரங்களில் பூச்சிகளுக்கும், பறவையினங்களுக்கும் கதவு திறந்துவிடுவதுபோலத் தெரிந்தாலும் ஏதொன்றிலும் சிக்கிக்கொள்ளாத அதீத சுதந்திர விரும்பியாக அவைகளிடமிருந்தும் விலகி வேற்றுலகிற்குப் பறந்தவண்ணம்  இருப்பதாகவே  இவரைப்  புரிந்துகொள்ள முடிகிறது.

எளிய மொழியில் எளிய வடிவில் அழுத்தமான ஒரு மனோநிலையைப் படரவிடுவதே இவரது கவிதை பாணியாகக் கொள்ளலாம். நாகர்கோயிலை வசிப்பிடமாகக்கொண்ட ராஜன், ஒரு கட்டிடத் தொழிலாளி. ‘கடைசியில் வருபவன்’ (2014), ‘கருவிகளின் ஞாயிறு’ (2016) என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். தொடர்ந்து சிற்றிதழ்களிலும், சமூக ஊடகங்களிலும் கவிதை எழுதி வரும் இவர், தனக்கும் அன்றாடங்களுக்கும்  இடையிலிருக்கும்  ரூபங்களை  அரூபங்களாக்கி  மகிழ்ந்துகொள்கிறார்  எனலாம்.


உங்களது முதல் கவிதைத் தொகுப்பான ‘கடைசியில் வருபவன்’ தொகுப்பிற்கும் ‘கருவிகளின் ஞாயிறு’ - தொகுப்பிற்கும் ஏறக்குறைய இரண்டாண்டு கால இடைவெளி. முதல் தொகுப்பிலிருந்து இரண்டாவது தொகுப்பு எந்தளவு நகர்ந்து வந்துள்ளது?

திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கழிவதற் குள்ளே ‘வீட்ல ஏதும் விசேசமுண்டா’ என்று கேட்கும் அதே நாக்கின் இன்னொரு சம்பிரதாயமான பேச்சுதான் நான்கு கவிதை எழுதுவற்குள்ளே ‘தொகுப்பு போட்டாச்சா’ ‘இன்னும் இல்லியா’ ‘சீக்கிரம் போடவேண்டியதுதானே’ என்பதாக இருக் கிறது. எனக்கும் நானெழுதுவதைப் புத்தகமாகப் பார்க்கும் கிளுகிளுப்பு முதலில் இருந்தது. ஆனால் ஏனோ அந்த மோகம் தொடரவில்லை. ‘தொகுப்பைக் கையில் பிடித்தபடிதான் நம்மைக் கவிஞனென்று அடையாளப்படுத்த வேண்டுமா? நான் கவிஞனென்று என்னை உணர்கிறேன் அதுவே போதும்’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வேன். ஆனால் சிறு மனத்தளர்ச்சியும் அப்போது இருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். எப்படியோ ஒருவழியாகத் தொகுப்பு வந்தது. லஷ்மி மணிவண்ணனால் தான் அது நிகழ்ந்தது. தயங்கி நிற்பவனைக் கையைப் பிடித்து இழுத்து முன்னிருத்தும் அவரது கவிமனத்தால் விளைந்தது. தொடக்கத்திலிருந்தே ஆர்வமுடன் நான் கொண்டு செல்லும் கவிதைகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தாமல் சொல்ல யத்தனிக்கும் ஒளிக்கூடுகளை அவதானித்துக் கவித்துவத்தின் மீது இன்னும் விசையுற இயங்கச் செய்யும்படியான அவரது உரையாடல் கவிதைமேல் வாக்கியங்களை அடுக்கடுக்காக அணிவித்துச் சிலாகிக்கும் எனது செய்கையைத் திருத்தியது எனலாம்.  ஒரு சிறந்த கவிதை என்னிலிருந்து வெளிப்படும்போது லஷ்மி மணிவண்ணன் என்கிற கவி ஆளுமைக்கும் அதில் பங்கு உண்டு.

சில கவிதைகளில் லஷ்மி மணிவண்ணனின் சாயல் இருப்பதாக நண்பர் பாலா கருப்பசாமியும் விக்கிரமாதித்யன் அண்ணாச்சியும் சொன்னார்கள். நான் அதை மறுக்கவில்லை. மூத்தவர்களின் சாயலின்றிச் சுயம்புவாக ஒரு படைப்பாளி எழுந்திருக்கிறான் என்று சொன்னால் என்னால் நம்பமுடியாது. படைப்புச் செயல் என்பதே காலாதீதமான பெருந் தொடர்ச்சிதானே. இதில் சாயல் என்பது வந்து போவது. பிரதி எடுப்பதுதான் செய்யக்கூடாதது.

முதல் தொகுப்பு இரண்டாவது தொகுப்பு என்று கவிதையில் நகர்வதற்கு ஒன்றுமில்லை என்றே நான் நினைக்கிறேன். வார்த்தைகளின் நீளம் குறைத்தல் வடிகட்டிய சொற்களை இறக்குதல் போன்ற சில வித்தைகள் பொதுவானவை. எதைக் கவிதைக் கலையாக்குகிறோம் என்கிற அவதானிப்பின் கூர்மையை அடைவதுதான் கவிஞனின் நகர்வாக இருக்கமுடியும். நான் முயல்கிறேன். கவிதைகளில் படியும் பாசாங்கை விடுவிக்கவேண்டும். அதற்காக பாசாங்கற்ற கவிதைகள் மட்டுமே நான் எழுதியிருக்கிறேன் என்று எந்தக் காலத்திலும் பொய் சொல்லமாட்டேன். ஆனால் பாசாங்கற்ற நிலை நோக்கியதாக எனது கவிதைச் செயல்பாடு அமையும்படி முயன்றிருக்கிறேன். எழுதி  எழுதி எனது பிம்பத்தை வடிவமைப்பதல்ல எனது நோக்கம். எழுதி எழுதி எனது பிம்பத்தை அழித்துக்கொண்டேயிருப்பது.

கவிதைகளுக்கான சில வரையறைகளை வைத்துக் கொண்டு கொண்டாடுகின்றனர் அல்லது குப்புறத் தள்ளுகின்றனர். இவை எந்த அளவிற்குச் சரியானது? கவிதைகளுக்கு எதுவும்  வரையறை  இருக்கிறதா?

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொற்றொடர் கவிதையா கவிதையில்லையா என்றால் இரண்டுக்குமே ஆம் சொல்ல முடியும். உலகை நோக்கி ஒரு இனம் உரைத்த மாபெரும் அறைகூவல் என்றும் சொல்லலாம். இப்படி நாலைந்து திசைகளில் அந்த வார்த்தையை இழுத்துச் செல்ல முடிகிறபோது அதன் நிலைத்த வகைப்பாடு என்பது என்னவாக இருக்கும்.

கவிதையின் சிறப்பே அது உங்களுக்கொன்றாகவும் எனக்கொன்றாகவும் இருப்பதுதான். எல்லாருக் கும் ஒன்றாக இருப்பதன் பெயர் கவிதையாக இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் கவிதைத் தனித்துவ மானது. எனவே கவிதையுணர்வின் முழுக் குத்தகைக்காரரென  யாரையும்  சுட்ட  இயலாது.

கவிதை குறித்துப் பத்துபேரை எழுதச் சொன்னால் அது பத்துவிதமாகவே இருக்கும். வரையறை என்பது எழுதுபவர் தனக்குள்ளே வைத்திருக்கும் சில எல்லைக் கோடுகள். அதையே பின்பற்றும் ஒரு சிலரின் கவிதைகளை ஆதரிப்பதன் மூலம் அவர் தனது படைப்பைத்தான் மீண்டும் மீண்டும் படமெடுத்துக்கொண்டிருக்கிறார். புடைப்பான்களே இல்லாமல் வளர நேர்ந்தால் சிறு காற்றும் தன்னைச் சரித்துவிடும் என்பது வாழைமரத்திற்குக்கூடத் தெரிகிறது.

சிலர் கவிதைகளை வரிவரியாகப் பிரித்து மேய்கிறார்கள். எப்படியும் தங்கள் அபிப்ராயச் சட்டிக்குள் தான் அந்தப் படைப்பைக் கவிழ்க்கப் போகிறார்கள் என்று அவர்களுக்கே தெரிந்தும் எதற்கு அப்படியொரு ஆய்வு? நியாயமாக இருக்கிறார்களாம். கவிதை, காழ்ப்புணர்வற்ற விருப்பு வெறுப்பற்ற உரையாடலை விரும்புகிறது. மௌனமான வாசிப்பில் தன்னை மேம்படுத்திக்கொள்கிறது.

நான்குபேர் கூடி கவிதையியலை விவாதிக்கத் தொடங்கும்போதே கவிதை அறைக்கு வெளியே சென்று விடுகிறது.

கவிதை உரைநடைக்கு வந்து வெகுகாலமாகிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னால் பாரதியே முயன்று பார்த்து விட்டார். உங்கள் கவிதை மொழியை முழுக்கவே உரைநடை என எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும் உரைநடை வழியாக ஒரு விசேஷ மொழியில் விசேஷ சொல்லாக்கத்தில் கவிதையை எடுத்துச் செல்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் எழுதும் இந்த நடையை எப்பொழுது கைக்கொண்டீர்கள். வடிவ ரீதியாக நீங்கள் இங்கு வந்த சேர்ந்த பாதையைக் கூற முடியுமா?

வழக்கமான கதைதான். செய்யுள் எழுதிப்பார்த்து புதுக்கவிதை எழுதிப்பார்த்துக் கடைசியில் வந்து சேர்ந்த இடம் இது. பத்தாவது படிக்கும்போதே பாடப் புத்தகங்களில் கிறுக்கத் தொடங்கிவிட்டேன். ‘நீதானடி வென்றாய் பிறகு ஏன் தலைகுனிந்து செல்கிறாய்’ போன்ற பாவனை வரிகளை உருவாக்குவதில் மனக்கிளர்ச்சியோடு இருந்தேன். ஒன்றி ரண்டு நண்பர்களின் காதல் கடிதங்கள் என்னால் எழுதப்பட்டது.

திருமண வாழ்த்து மடலுக்காக நான் தேடப்பட்ட காலமொன்றிருந்தது. ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதில்லை சொர்க்கத்தை நிச்சயப் படுத்துவது’ என்கிற வரிகள் அநேகமாக எல்லா வாழ்த்துமடல்களிலும் இடம் பெற்றிருக்கும். கவிதை எனக்குள் தங்குதடையின்றிப் பொங்கி பிரவகிப்பதாய் எண்ணி எனக்குள்ளே ரகசியமாகச் சிலிர்த்துக்கொள் வேன். வேறு வேறு புனைப்பெயர்களில் கவிதை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினேன். யாரும் சீண்டவில்லை.

மனந்தளராத முயற்சிக்குப் பிறகு ‘ஒட்டக்கூத்தன்’ என்ற புனைபெயரில் வாரமலர் இதழில் ஒரு கவிதையும் ‘தேவவிரதன்’ என்ற புனைபெயரில் ஓம் சக்தி மாத இதழில் ஒரு கவிதையும் வந்தது. இதற் கிடையே நாகர்கோயில் வானொலி நிலையத்தின் இளைய பாரதம் நிகழ்ச்சியில் கவிதை வாசிக்கும் வாய்ப்பும் நாலைந்து மாதத்திற்கு ஒருமுறை கிடைத்தது. அப்போது நான் கோட்டாறில் ஒரு அரிசிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்தேன். வெள்ளிக் கிழமை பஜார் விடுமுறை. எங்கள் கடையைக் காலை பத்துமணி வரையில் திறந்து வைத்திருந்து பின் அடைப்பது வழக்கம். அடைத்தபின் பக்கத்துக் கடையில் ஆறேழு வெள்ளைப் பேப்பர் வாங்கிக்கொண்டு அருகிலிருக்கும் அஞ்சல் நிலையத் துக்குச் செல்வேன். அங்குக் கடிதம் எழுதுவதற்காக இடப்பட்டிருக்கும் பெஞ்சில் அமர்ந்து எழுதத் தொடங்குவேன். இடி மின்னலுடன் காகிதத்தில் ஒரே கவிதை மழைதான். மதிய சாப்பாடு இல்லை. யார் என்னைப் பார்க்கிறார்கள் என்ன பேசிக்கொள்வார்கள் எதுவுமே எனது கவனத்தில் தட்டுப்படுவதில்லை. எழுதி முடித்து வானொலி நிலைய முகவரிக்கு அங்கேயே அஞ்சல் செய்துவிட்டு வெளியே வந்தால் மனிதர்களெல்லாம் எறும்புகளைப்போலச் சாலையில் சென்றுகொண்டிருப்பார்கள். வீட்டி னிலோ அம்மாவின் கேள்விகளுக்கு ஒழுங்காய் பதில் இராது. நாவினில் கவிதைக் கொழுப்புக் கனத்திருக்கும்.

புதிய நண்பர்கள் புதிய புதிய புத்தகங்கள் என்று தொடர்புகள் விரிவடைந்தபோது மெல்ல மெல்ல சொற்களின் மீதுள்ள கவர்ச்சி வடியத் தொடங்கியது. நண்பன் கிருஷ்ணகோபால் கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு அழைத்துச் சென்றான். லஷ்மிமணிவண்ணன், என்.டி.ராஜ்குமார், ரசூல் அண்ணன், முஜீப் ரஹ்மான் சொக்கலிங்கம் அண்ணாச்சி, ஜீ.எஸ். தயாளன், நட.சிவகுமார், பிரேம்குமார் ஆகியோரின் உரையாடல்களும் கட்டுரைகளும் கவிதை குறித்த கருத்துகளும் வேறு வடிவில் எழுதிப்பார்க்கத் தூண்டியது. இப்போது நான் நிச்சயிக்கப்பட்ட எந்த வடிவிலும் எழுதுவதற்கு விரும்பவில்லை. ஆனால் மொழிப் பழக்கத்தின் வாசனையை மறைப்பது பெரும்பாடு. இதோ நான் இங்கேதான் இருக்கிறேன் என்று தன்னை  அது  காட்டிக்  கொடுத்துவிடுகிறது.

உரைநடைக்கும் கவிதை நடைக்கும் சிறிய வேறுபாடும் நெடுந்தொலைவும் இருப்பதாகக் கருதுகிறேன். உரை நடையில் வரும் வாக்கியம் அதன் முன்பிருக்கும் வாக்கியத்தின் ஓர்மையைக் கொண் டிருக்கவேண்டும் இல்லையெனில் ஒரு இணைப்புச் சொல் தேவைப்படும். கவிதையில் அப்படியல்ல. உலகைச் சுற்றி ஞானக்கனி பெறுவதற்கும் அம்மை அப்பனைச்சுற்றி ஞானக்கனி பெறுவதற்குமான வேறுபாடு. கவிதைக்குள்ளேயே அந்தக் கவிதையை விளக்க முற்படும்போது தன்னிச்சையாக எழுத்து உரைநடையில் சரிந்துவிடுகிறது. என்னுயை சில கவிதைகளிலும் அந்த விபத்து நடந்திருக்கிறது. பாசி பிடித்த சப்பாத்து இது. வழுக்காமல் ஏறுவது வித்தைதான்.

முகநூலில் அவ்வப்பொழுது கவிதைகளைப் பதிவேற்றம் செய்கின்றீர்கள். விவாத மேடையில் எல்லாரும் வரிந்து கட்டி ஆடுகிறார்கள். நவீனக் கவிதைகளைப் பரவலாக்கும் முயற்சிக்கு இது உதவுகிறதா? இல்லைஅடையாள நிலைநிறுத்தலுக்கான வீண் ஜம்பங்களைத் தோற்றுவிக்கிறார்களா?

முகநூல் ஒரு விசாலமான மேடை. பார்வையாளருக்கான தனிவெளி என்பது இங்கு இல்லை. சிலர் ஒதுங்கி நின்றுகொள்கிறார்களே தவிர தங்களின் உடன்பாட்டு வினைகளின் மூலம் தாங்களும்அவ்வப் படைப்புகளில் பங்கு பெறுபவர்களாகத் தானிருக்கிறார்கள். நேரடியாக இதில் எழுத விருப்பமற்றவர்கள் தவிர அநேகமாகத் தங்கள் கவிதையைத் திருடிவிடுவார்களோ என்கிற களவு பயமற்ற எல்லோரும் முகநூலில் எழுதுபவர்களாகத்தானிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கையாகச் சிலர் இதழ்களில் வெளிவந்த பிற்பாடு பதிவேற்றுவதுண்டு (கண்காணிப்பு  வசதி  கிடைத்துவிட்டது).

முகநூலின் வரவால் பலரின் கவிதைச் செயல்பாடு விரைவாகியிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் கவிதைகள் மிகவும் லேசான வாசிப்பிற்குத் தள்ளப்பட்டுவிட்டன. எளிதாகக் கடக்கப்படுகிறது. கும்பலாக ஏதோ ஓரிடத்தில் குவிகிறார்கள். உபசார வார்த்தைகளைப் பெருக்குகிறார்கள். இங்கே தீவிரத் தன்மையும் இருக்கிறது தீவிரத்தன்மை பாவனையாகவும் இருக்கிறது. விவாதங்களென்று அதிகமாக ஒன்றும் நடைபெறுவ தில்லை. அகந்தைகளுக்கிடையே அது நசுங்கிவிடு கிறது. தன்னை நிறுவுவதற்குக் காட்டும் முனைப்பு தான் பிரதானமேயொழிய விசயத்தின் சாரமன்று. பக்குவமற்ற சொற்களைச் சுடுதண்ணீரைப் போல் முகத்திலடிப்பதும் அவர்களுக்குத் தாளமடிக்கும் ‘குத்துங்க எசமான்’ கோஷ்டிகளும் பெருஞ்சோர்வு. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் நிறைந்த மேடை யிது. நாலு பேர் பார்க்கும்  நிலையில்  திரிவது  தகுமா  என்ன.

பொதுவாக எழுத்தாளர்களின் எழுத்தில் பால்யங்கள் வெளிப்படையாகவோ அல்லது மறைந்தோ நின்று பெரும்பங்காற்றும். தங்களின் ‘ராணி லக்கி பிரைஸ்’ கவிதைகள் தனித்துவமானது. தங்களது பால்யங்களை நீங்கள் அந்தக் கவிதையின் வாயிலாக எடுத்து தொட்டுப் பார்த்துக்கொள்கிறீர்கள் என்று சொல்லலாமா? உங்க ளுக்குக் கவிதை எழுதுவதற்கான மனநிலையை எது உற்பத்தி செய்கிறது?

நான் கவிஞன் என்னும் முழுமுற்றான பிரக்ஞை மாத்திரமே கவிதை எழுதுவதற்கான உந்து விசையாக இருக்கிறது. நினைவுகளில் கவிதை நிகழ்கிறது. பத்தில் ஒன்றை எழுதுகிறேன். மறதியில் சிக்கிக்கொள்பவை பல. வேறொன்றை முயலும்போது தனது இருப்பைக் காட்டும் கவிதையுமிருக்கிறது. எழுதியடையும் கவிதைகளைவிட அடைந்தபின் எழுதப்படும் கவிதைகள் அதற்கான தோற்றத்தில் மலர்ச்சியுடையவை.

சில கவிதைகளுக்கு மொழி மிகவும் அலுப்பூட்டக் கூடியதாக அமைந்தாலும் என்ன செய்வது அந்த வழியேதான் செல்லவேண்டியிருக்கிறது.

கை வைத்தவரை மொய்க்கும் தேனீக்களைப் போல் சொற்கள் மொய்த்துத் துரத்திட எழுத முனைந்த ஆரம்பகாலக் கவிதைகளின் யத்தனங்கள் காமத்தைப் போல உடலையே ருசிக்கச் செய்த நாட்கள் நினைவிலெழுகின்றது. ஒரு தேகத்திலிருந்து எழுவது ஒரே ஒரு கவிதைதான். முடிவற்ற இறப்பற்ற தெளிவற்ற கவிதை. அதன் கரைகளற்ற பெரும்பரப்பை அங்கங்கே அடையாளப்படுத்துவது போல்  எழுத்து காலைப்பனி துளிர்த்திருக்கும் செம்பருத்திப் பூவை சந்திக்கையில் என்றேனும் ஒருநாள் மலரின் நிறையும் எனது நிறையும் சமநிலைக்கு வரும் அருங்கணத்தைப் போன்று இசையைச் சிற்பத்தை ஓவியத்தை அவலத்தைப் பசியை நோயை மகிழ்ச்சி யைக் காதலை சாவை அதனதன் நேர்கோட்டில் எனக்குள் பூர்த்தியாக்கும் பொழுதுகளில் சற்று விசேசமான மொழியில் நழுவிவிழுகிறது மனம். எழுத்தில் வார்க்கையில் அது கவிதையாகவும் இருக்கக்கூடும்.

‘கனவு ஒரு பீங்கானாக உடைகின்ற அசுர கணத்தைத் தாங்க முடியாது கடிகாரச் சிறுமுள்ளின் மீதேறிச் சுழலுகிறதென் ஆவி’ என்று ஒரு கவிதையில் நீங்கள் சொல்லுகிற இடத்தில், தன்னைக் குறித்த நிலையிலாகக் கவிஞனுக்கு வரும் எல்லாப் பதற்றங்களையும், பதைபதைப்புகளையும் உச்சநிலையில் காட்டியிருந்தீர்கள். தனக்குள் இருக்கின்ற மயக்கங் களை அதிலிருந்து சற்று விலகிய பிறழ்வுகளைச் சொல்லுகிற இடங்களிலெல்லாம் எல்லாக் கவிஞர்களுமே புகுந்து விளையாடுகிறார்கள். அதுதான் வரலாறு. புனைவு வகைகளில் ‘தான்’ என்ற ஒன்று கவிஞர்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முக்கியமான தாயுள்ளது?

‘பூமியே பாதமாச்சு வானமே தலையாச்சு
வெளியெல்லாம் மேனியாச்சே சிவனே ஐயா’

வைகுண்ட சாமி எழுதிய சாட்டு நீட்டோலையில் மேற்கண்ட கண்ணி வருகிறது. உணர்கையில் உடல் சிலிர்க்கும். பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் ஒரு பேருருவம். அதை பிரபஞ்சத்திலிருந்து வேறு படுத்திச் சொல்ல முடியாது. அகமும் புறமும் அற்ற தொலைவும் விரிவும் அற்றதும் உள்ளதுமான சுட்டுஞ்சொல்லும் அழிந்திருக்கும் ‘அதை’ தானாக உணர்தலின்  ஞான  உச்சம்  இந்த  வரிகள்.

கிட்டத்தட்ட கவிஞர்களும் இந்த ‘தான்’ என்பதைப் பிரபஞ்சத்தின் எல்லாக் கூறுகளிலும் பொருத்திப் பார்க்கிறார்கள். நேற்று மைதானத்தில் பந்தடித்துக் கொண்டிருந்த கவிதையின் கால்கள் இன்று குறுகிய தெருவொன்றின் சாக்கடையடைப்பைத் தள்ளி விட்டபடி நடக்கலாம். அப்பால் எங்கோ நிகழும் யுத்தமொன்று கவிஞனின் தலையில் தீயாய்ப் பிடிக்கிறது. உடல் தின்னும் மூர்க்கங்களைக் கேட்கை யில் பெருங்குற்ற உணர்வில் சுருங்கிவிடுகிறது கவியுள்ளம். களவு செய்தவரை விசாரித்து ஒரு கூட்டத்தின் விழிகளை ஆராய்ந்தால் அதில் பாவமேயறியாத கவிஞனும்   அகப்படக்கூடும்.

கவிதையுள்ளம் ‘தான்’ நிரம்பித் ததும்பும் கலனாக இருக்கிறது. சுயஇன்பமும் சுயஅவஸ்தையும் இரைச்சலை அமிழ்த்திய கள்ள மௌனமும் கலனைத் திறந்து திறந்து மூடுகின்றன. ‘தான்’ வெளியே புனையப்படுகிறது. அல்லது புனைவில் பரிமாறப்படுகிறது.

உங்களுடைய ‘கடைசியில் வருபவன்’ தொகுப்பில் அநேக இடங்களில் ஒருவித கலக்கத்தைக் கசிய விட்டுள்ளீர்கள். ஒன்றுமில்லாத வெறுமையும், ஒன்று இருந்துகொண்டேயிருக்கிற இரைச்சலும் மாறி மாறி கவிதைகளில் புகைந்துகொண்டிருக்கின்றன. கவிதை கள் ஏன் பெரும்பாலும் கொண்டாட்டத்திற்கு அப் பாற்பட்டவைகளையே தனக்குரிய பாதைகளாகத் தேர்ந்தெடுக்கின்றன?

எனக்குக் கவிதை தொழிலல்ல. யாரோ ஒருவர் என் கவிதைகளுக்காகக் கால்கடுக்க நின்று கொண்டிருக்கிறார் என்கிற கற்பனையும் இல்லை. மேலும் கவிதை எழுதி புரட்சியையோ மறுமலர்ச்சியையோ கொண்டுவரும் எண்ணமும் சத்தியமாக எனக்கில்லை.

எழுதுகிறேன். அவ்வளவுதான்.

சில கவிதைத் தொகுப்புகளைப் படிக்கும்போது பழைய தமிழ் சினிமாக்களைப் பார்ப்பது போலிருக் கிறது. சமூகம், காதல், நகைச்சுவை, அறம், உறவு, அறைகூவல் எனக் கவிதைகளை அடுக்கியிருக்கும் செய்நேர்த்தி அப்படியே சினிமாதான். எனக்கு அப்படி வரிசைப்படுத்தவோ அதற்கான கவிதைகளை உருவாக்கவோ தெரியவில்லை. அந்தக் காலத்தில் என் கவிதைகள் அப்படியிருந்திருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். அழும்போது சிரிக்காத கவிதைகள்.

தொகுப்பில் கொண்டாட்டமற்ற தன்மையை நீங்கள் தொடர்ந்து உணர்வதற்கு எனது மொழியும் ஒரு காரணமாக இருக்கலாம்.

‘ஆற்றில் நான் குளித்த வெள்ளம் என்ன ஆனதென்று தெரியவில்லை’ என்ற ஒற்றை வரியில் நூலினும் மெல்லிதான உங்களது குணவாகைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு இலக்கியவாதிக்கான அடிப்படைக் குணமிது. இந்த மெல்லியலாளர்கள் நாம் பார்க்க வழியில் எங்கேனும் இப்பொழுது தென்படுகிறார்களா? எதார்த்த வாழ்வில் கவிஞர்களது மென்தன்மையின் டவுசர் எந்தளவு கிழிபடுகிறது?

கவிஞர்கள் மென்மையானவர்கள் என்று எண்ணுவதற்கோ சொல்வதற்கோ எனக்குத் தெரிந்து நான் உட்பட யாருமில்லை. மென்மை ஏதேனுமொரு பக்கமாக ஒருவேளை இருக்கலாம். கவிஞர்களின் பிரத்யேகக் குணமாக மென்மையைக் குறிப்பிடுவது நாடகத்தனமானது. கழிவிரக்கத்தை விரும்புவது. கவிஞர்களென்றில்லை எல்லாருமே மென்மையாகத் தொடங்குகிறார்கள் பிறகு தோல் தடித்துக் காய்ப்பேறிவிடுகிறது. சகமனிதனின் சக உயிரியின் சலனங்களையறியாத மரத்த தன்மை அல்லது சுருங்கிய எல்லைகளுக்குள்ளான கனிவு. நீடித்த மென்மை என்பதை அறச்சார்பு நிலையிலும் அழகியலோடும் அர்த்தப்படுத்துவதை என்மனம் எனக்குள் திருத்தவே விழைகிறது. நீங்கள் உணர்த்தும் கிழிந்ததும் கிழியாததுமான மெல்லிய டவுசர்கள் என்னிடமும் ஒரு காலத்தில் குவிந்திருந்தன. அளவில் சிறியவை. அதில் கிழியாமலிருப்பதை மகன் அணிந்து நடப்பதைக் காண்கிறேன்.

‘விற்கப்படுவதற்கொன்றுமற்ற பெட்டிக்கடை’ எனத் துவங்கும் ஒரு கவிதை ‘கருவிகளின் ஞாயிறு’ தொகுப்பில் வருகிறது. பெட்டிக்கடை குறித்தான அத்தனை படிமங்களையும் அந்த ஒற்றை வரி எங் கெங்கோயிருந்து எடுத்து உள்ளே சொருகுகிறது. எனக்கென்னவோ அந்த ஒற்றை வரியிலேயே கவிதை முடிந்துவிட்டது என்றே தோன்றுகிறது. இவ்வாறு ஒற்றைவரி கூட ஒரு கவிதையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம் போல. ஆகக் கவிதை என்பதொரு விடயமா? அதை எடுத்துச் செல்லும் விவரணையா? மொழியில் பயின்று வந்திருக்கும் கவிஞனின் விசேட மனநிலையா? ஒன்றை எடுத்துக் காட்டுகிறபோது கட்டக் கடைசியில் அதை முடித்து வைக்கும் யுக்தியா? இல்லை பெட்டிக்கடையில் உள்ளது போல் ஒற்றை வரியா? அல்லது இது எல்லாமுமா? இல்லை இது எதுவுமே  இல்லையா...?

எழுதி ஆறேழு மாதங்கள் கடந்த கவிதையொன்றை அரங்கில் வாசித்தபின் தோழரொருவர் கேட்டார் ‘இந்தக் கவிதையை விளக்க முடியுமா இது என்ன சொல்ல வருகிறது?’ திணறிவிட்டேன். சொல்லத் தெரியவில்லை. காற்றில் நறுமணம் வீசுகிறது என்றால் புரிந்துவிடும். ஆனால் நறுமணத்தை மட்டும் சொற்களில் பிரதியெடுக்க முனையும்போது பழக்கமற்ற சொற்சேர்க்கை தோன்றுவதைத் தவிர்க்க முடியாதல்லவா. இதில் விளங்குதல் என்பதைவிட ஊறிப் பரவுதல் என்பதே சரியாக இருக்கும்.

‘நீ எழுதின கவிதையை உனக்கே விளக்கத் தெரிய லேன்னா  மற்றவர்கள்  எப்படிப்  புரிந்துகொள்வது?’

கவிதைகளின் தோற்றக்கணங்கள் நிரந்தரமாக ஞாபகத்தில் நிற்பதில்லை. சில கவிதைகளின் முன் நானும் புதியவனாகத்தான் நிற்கிறேன். எனவே அதைத் தூக்கித் தலையில் சுமந்துகொண்டு திரியவோ பொறுப் பேற்கவோ என்னால் முடியாது.

இப்போதெல்லாம் உன் கவிதையில் ஒன்று மில்லை என யாரேனும் சொன்னால் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நான் எழுத விரும்புவதும் அந்த ‘ஒன்றுமில்லை’யைத்தான். அதன் ருசியற்ற மொழியில் பின்னிய வலையில் எனது கவிதையை ஊஞ்சலாட்டிப் பார்த்திருப்பேன்.

உங்களது அடுத்தத் தொகுப்பு எப்பொழுது என்ற கேள்வி ஒரு கவிஞனுக்கு நெருக்கடியை உருவாக்குமா? அல்லது கவிஞர்கள் அதைப் பெருமையாக எடுத்துக் கொள்ளவேண்டுமா?

எழுதிய கவிதைகளைக் கிழித்தெறியாமல் ஒரு தொகுப்பாகக் கொண்டுவருவது நல்லசெயல். தனது கவிதைகளின் தேவநிலை குறித்த கற்பனையேனும் உடையக் கூடும் அல்லது தனது பத்தாவது தொகுப் பிலும் முதல் கவிதையை முனைந்துகொண்டிருக்கும் பரிதாபமும் வெளிப்படக்கூடும். எனவே அடுத்தத் தொகுப்பு எப்போது என யாரேனும் கேட்பது நெருக்கடியான விசயம்தான். இனியேனும் ஒரு கவிதையைப் படிக்கத் தரமாட்டாரா என்கிற தொனியும் அதில் இருக்கிறது.

உங்களது பெரும்பான்மையான கவிதைகளில் அரூபங்களை வைத்து ஒரு நடனம் ஆடுகின்றீர்கள். ஒரு சித்திரம் தீட்டுகின்றீர்கள். உதாரணத்திற்குச் சொப்பனத்தில் கோழி வளர்க்கும் மோட்டுக்கிழவி கவிதை. கவிதைகளின் அளப்பரிய மதிப்பார்ந்த ஒன்று அரூபம். அரூபம்தான் கவிதைகளின் அந்தராத்மா என்று சொல்வது சரியாக இருக்குமா?

நான் தெய்வங்களை ஆன்மாக்களை நம்புகிறேன். கனவுகளின் விந்தைகளை அன்றாடங்களில் பிணைத்துப் பார்க்கிறேன். ஒரு கௌளி சத்தத்தில் அதன் திசையை அனுமானித்து என்னருகே நிற்கும் சாமியையோ சாத்தானையோ உணர்கிறேன்.

புதனின் ஆதிக்கத்தால் இல்லாததையெல்லாம் என் மனம் கற்பனை செய்துகொள்கிறது என்பதை ஒத்துக் கொள்கிறேன். இவையெல்லாமே அரூபங்களோடு பழக்கப்பட்ட விசயங்கள். கலை சிறந்த சிற்பத்தைத் தொடும்போது ஆயிரம் வருடத்திற்கு முந்தயச் சொரசொரப்பான உள்ளங்கையை நான் தடவுகிறேன் அழுத்திப்  பிடித்திருக்கிறேன்.

சில நிழல்களுக்கு வேறொரு தோற்றத்தில் நீடித்த காலம் கிட்டிவிடுகிறது. கவிதை மொழியும் அருவங்களின் பொம்மைகளை ஏற்றிக்கொண்டு அர்த்தமின்மைக்கும் அர்த்தத்திற்கும் இடையே கடந்தபடியிருக்கிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer