கட்டில்கள் மனிதர்களைக் கட்டில் வடிவத்திற்குத் தாங்குகிறது
கட்டில் வடிவத்தில் படுக்கிறார்கள் கட்டில் வடிவத்தில் புரளுகிறார்கள்
விழுந்தாலுமே பழக்கதோசத்தில் கட்டில் வடிவத்திலேதான்
விழுந்து கிடக்கிறார்கள்
எல்லாவற்றையும் கட்டிலுக்கேயான படுக்கை வசத்தில்
செய்துகொள்கிறார்கள்
குன்றுகள் மாதிரி உட்கார்ந்திருப்பவர்களைக் கட்டில்கள் இருக்கவிடாது
இரண்டு கைகள் நீட்டி செல்லங் கொஞ்சும்
மறுப்பேதும் சொல்லாமல் அவர்களும் கட்டில் வடிவத்தோடு சேர்ந்து
கொனட்டிக் கொள்வார்கள்
அதுவொரு மகா கொனட்டல்
எழுந்து போகையில் கட்டில்களையும் சேர்த்துத் தூக்கிப் போகிறார்கள்
புங்க மரத்தடியின் தரையைத் துண்டால் உதறி பிறகு
அந்தக் கட்டிலை அங்கே விரித்துக்கொள்கிறார்கள்
முதுகுக்குக் கீழே அவர்கள் வரைந்த கட்டில் அது
அவர்கள் வளர்த்த சொந்தக் கட்டில்
கட்டில்களும் இங்கிதத்துடன் நடந்துகொள்கின்றன
எழும்போது தங்கள் கால்களைத் தாங்களே மடக்கிக்கொள்கின்றன
படுக்கையில் தங்களைத் தாங்களே விரித்துக்கொள்கின்றன
பேருந்துப் பயணத்திலும் யாரையும் தொந்தரவு செய்வது கிடையாது
மிகுந்த நாசூக்கு அது
தன் பிரச்சினையைத் தானே பார்த்துக்கொள்கிறது
எங்கென்றாலும் அவர் சுயநலத்திற்கு அவர் விரித்து
அவர் படுத்துக்கொள்கிறார்
நமக்கு ஏன் இந்தப் பொச்சுக் காப்போ.
தரையிலை
தன்னுடைய மர வாழ்க்கையை முடித்துக்கொண்டு
எப்படியும் ஒரு இலை வீழுமென்பதால்தான்
இந்தத் தரை இவ்வளவு அகலம் போகிறது
அழுகின்ற குழந்தையைச் சமாதானம் செய்வித்தலில்
இந்த அகலம் போதவில்லையென்ற கசப்பு அனுபவம்
ஏற்கனவே தரைக்கு உண்டு
எனவே இந்த அகலத்தை நாம் மெச்சிக்கொண்டால்தான் உண்டு
இலைக்கேயான மிகச் சிறிய இடத்தைத் தாங்கி
இவ்வளவுதான் நானென
தரைக்கு இருப்பதெல்லாம் சாக்ஷாத் அந்த அவையடக்கமே
மற்றபடி மேலே போய் இலையைத் தாங்கவேண்டுமென்பதுதான்
தரையின் நீண்ட நாளைய கனவு
இதைச் சொல்லவில்லையே
வழியில் அந்தரத்தைப் புரட்டுவதுபோல
தரையையுமே அப்படி ஒருநாள் புரட்ட வேண்டுமென
இலைக்குமே ஒரு கனவு உள்ளது
ஒன்று இன்னொன்றுடையதை எங்கே பலிக்கவிடுகிறது
எப்பொழுதும் ஒரே மல்லுக்கட்டல்தான்
ஒரு இலை இப்பொழுது தரையில் கிடக்கிறது.
கட்டுக்கோப்பு
அந்தக் கதையில் இருட்டறையின் வழியாக ஒரு படிக்கட்டு தெரிய
எல்லாரும் அதில் இறங்க ஆரம்பித்தனர்
ஒரு இருட்டிற்கும் இன்னொரு இருட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை
ஆனால் இருட்டுகளுக்குக் கீழேயும் இருட்டுகளே இருப்பதால்
பயமாகத்தான் இருக்கிறதெனப் பேசிக்கொண்டே இறங்கினர்
யார் பேசியதெனத் தெரியவில்லை
கதையில் வருகிறவரின் குரலா இது என்ற குரலையுமே
அதனால் சந்தேகப்பட்டனர்
அந்தரத்தில் இருப்பது இருட்டா இல்லை நானா என்று
ஒரு குரல் வந்தது
குரல்கள் முதலில் இறங்கட்டுமென அதற்கு எல்லாரும் வழிவிட்டனர்
மேலும் இறங்க நினைத்தவர்கள் இருட்டின் கைகளைப் பிடித்து
மெதுவாக இறங்க
அங்கிருந்து கிளம்ப நினைத்தவர்கள்
இருட்டுகளின் கால்களைப் பிடித்துக் கெஞ்சிக்கொண்டிருந்தனர்
எல்லாருமே இருட்டில் படிக்கட்டு வழியாக இறங்கிக்கொண்டிருக்கிறோம்
இதுதான் நிஜம்
ஆமோதித்துத் தலையை ஆட்டிய ஒருவர்
இருட்டைத் தெரியாமல் மேலும் கீழும் அசைத்துவிட
மொத்த இருட்டும் தலையில் சரிந்து விழுந்திடுமோ என்ற பயத்தில்
எல்லாரும் ஒரு கணம் அப்படியே உறைந்து நின்றனர்
இன்னும் எவ்வளவு நேரம் அய்யா உறைந்து நிற்கவேண்டும்
என்று ஒருவர் கேட்டுவிட்டார்
இந்த இடத்தில் கதையின் கட்டுக்கோப்புச் சத்தம் போட்டுச் சிரித்துவிட்டது
இருட்டறையின் வழியாகத் தெரிந்த படிக்கட்டில் எல்லாரும்
முதலிலிருந்து இறங்கினர்.
பெரிய கத்தி
மரத்தின் நூற்றுக்கணக்கான இடங்களிலிருந்து
நூற்றுக்கணக்கான பறவைகள்
ஒரே நேரத்தில் எழுந்து ஒரே மாதிரி பறந்தன
கத்தி மாதிரி என்பார்களே அப்படி
அப்படியொரு கத்தியை அதற்கு பின் நான் பார்க்கவேயில்லை
அதனால்தான் அதை நாமே பழகிக்கொள்ளலாமென
ஒரு இலையைப் பிடித்து ஆட்டத் துவங்கினேன்
பத்துப் பதினைந்து இலைகள் கொண்ட ஒரு இனுக்கை
இனுக்குகள் இனுக்குகளாகச் சேர்ந்த சிறிய கொப்பை
சிறிய கொப்புகளாக ஆன ஒரு பெரிய கிளையை
எல்லாத் திசைகளுக்கும் முளைத்த ஒரு மரத்தையே
ஆட்டிக்கொண்டிருந்தேன்
இவ்வளவும் செய்ய எனக்கு ஒரு நொடிதான்
விலக்கும்பொழுதுதான் இவ்வளவு நீளமாக உள்ளது
மற்றபடி வழக்கம்போல உள்ள நொடியே
பிடித்து ஆட்டுவது இப்பொழுதெல்லாம் அலுத்துவிட்டது
அதனால் பறவைகளைப் பார்த்தவாறு பறங்களென மட்டும் சொல்கிறேன்
அவை கத்தியை விரித்துக்கொள்கின்றன
தாணிப்பாறைச் சுனை மருங்கிருந்த ஒரு மரத்திடம் அன்றைக்குச்
சற்று பலத்துச் சொல்லிவிட்டேன் போல
சுற்றி நின்றுகொண்டிருந்த மரங்களெல்லாம் சேர்ந்து
தரையிலிருந்து விருட்டெனப் புடுங்கிக்கொண்டு பறக்க ஆரம்பித்தன
அப்புறமென்ன
அந்தரத்தில் நல்ல வாகான மரங்களாகப் பார்த்து ஏறிக்கொள்ளுங்களென
பறவைகளை அதில் ஏற்றிவிட்டேன்.