பிணக் கூறாய்வு மேடையில்
கிடப்பதைப் போலப் படுத்திருக்கிறாள்
கண்களுக்குத் தெரியாத ஆயுதங்களால்
அறுத்துக்கொண்டிருந்தவன்
சோர்ந்து போய் விழுகிறான்
என்றாவது ஒருநாள்
உயிர் எழுதல்
நம்பிக்கையில்
புரண்டு தள்ளிப் படுக்கிறாள்
வியர்க்காத உடல் எரிகிறது.
வேட்டை
காலடிகள் உருவாக்கிய பாதை
பருத்த பாம்பெனக் கிடக்கிறது
பாதையில் இளைப்பாறிப் பின்
இரைதேடி நடக்கும் முயலுக்கு
முளைக்கின்றன பாம்பின் பற்கள்
அது
என்னவாகவோ இருக்கட்டும்
மேலிருந்து இறங்கும் பசித்த நகங்களுக்கு
அன்றைய
முதல் இரை சிக்கியது.
முகம் பார்க்கக் கூசுபவன்
அறுத்துக் கட்டிக் கொடுத்து
அனுப்பியாகிவிட்டது
மேடையைக் கழுவியபடி
ஆயுதங்களை ஒழுங்குசெய்கிறான்
மிகக் கூர்மையான ஆயுதங்களைத் தேர்ந்து
கூர் மழுங்கியவற்றை
ஒதுக்கி வைப்பவன் முகத்தில்
கருணையின் ஒளி
ரத்தக் கவிச்சியோடு வெளியேறும்
நீர்ப்பாதையில் அவன் நட்டுவைத்த
செடியில்
பூக்கள் பூத்திருக்கின்றன
உடல் அலுப்போடு
வாசலில் அமர்பவன் காலடியில்
உறங்கிக்கொண்டிருக்கிறது
முன்பொரு நாள்
அநாதைப் பிணத்துடன்
சேர்ந்து வந்த நாய்
அந்தரத்தில் ஒலிக்கும் பாடலோடு
பார்த்த முகங்களைத்
தூர வீசுகிறான்
குறிகளைக் கூடக் கூச்சமின்றிப் பார்க்கும்
அவனால்
பிணங்களின்
முகங்களைப் பார்க்க முடிவதில்லை.