சிவகுமார் அம்பலப்புழா - கவிதைகள்

மலையாளத்திலிருந்து தமிழில்
Dr.பாரதி சீனிவாஸ்

பகிரு

கே எல் 21 பி 2288

தொடர்ந்து விரையும் வாகனங்கள்
பச்சை சிவப்பு அல்லது ஆரஞ்சு வண்ணவிளக்குகள்
இவை அனைத்துமே நாய்களுக்கு ஒன்றுதான்
வரிக்கோட்டுச் சாலையை
கடப்பதற்குக் காத்திருக்கிறது
ஒரு வெண்ணிற முடுவலும் ஒரு கருங்குட்டியும்
அந்த 8:30 விமானத்தின் நெரிசலைத் தவிர்க்க
அந்தத் தென்றல் வானில் ஒரு பருந்து
சறுக்கி வட்டமிட்டுகிறது
அதே விமானத்திலிருந்து
தரையிறங்கும் ஒருவரை
அழைத்து வருவதற்குப் போகும்
அந்த மகிழ்வுந்து கே எல் 21 பி 2288
அந்த முடுவலும் குட்டியும் கடப்பதற்கு
இடைவெளிவிட்டு நிற்கிறது
அபாயச் சங்கை ஊதி விரைகிறது அவசர ஊர்தி
மயிரிழையில் தப்பிவிட்ட நாய்க்குட்டி
வாயடைத்து நிற்கிறது
அந்தப் பருந்து லேசான காற்றில் சறுக்கி
உயரே வட்டமிடுகிறது
அந்தச் சாலையின் குறுக்கே
விடுதியின் பின்புறம்
வெண்ணிற முடுவலும் கருங்குட்டியும்
எதயோ சாப்பிடுகிறது
அந்த மகிழ்வுந்து கே எல் 21 பி 2288
தரையிறங்கிய ஒருவருடன்
வேகமாக விரைகிறது வீட்டை நோக்கி
நடு வானிலே அந்தப் பருந்து
இன்னமும் மிதக்கிறது
பேரோசையுடன் அந்த அவசர ஊர்தி இப்பொழுது
இறந்த அந்த நோயாளி மனிதனைத்
தாங்கித் திரும்புகிறது
புகைவண்டி முற்றத்திற்குத் திரும்பிச் செல்ல
அந்த வரிக்கோட்டில் நிற்கிறது
வெள்ளை முடுவலும் கருங்குட்டியும்
அந்த அவசர ஊர்திக்கு வழிவிடப் பாய்ந்த
மகிழ்வுந்து கே எல் 21 பி 2288 க்கு கீழே
அந்த முடுவல் இறுதியாய் நடுங்கியது
அப்படியே நின்ற அந்தப் பருந்து
சறுக்கி வட்டமிட்டு
உயரே உயரே பறக்கத் துவங்க
அந்த 8:30 விமானத்திலே மோத
கரும்புகை விண்ணிலே சுருள்சுருளாகியது
அவசர ஊர்திகள் அலறுகிறது
எரிந்த பறவையிறகுகளின் துர்நாற்றம்
அந்தக் காற்றில் நிரம்பியலைகிறது
சாலைகள் சந்திக்கும் அந்த முனையின்
நடுவிலே இப்பொழுது கருப்பு மேலுடுப்பில்
வெந்நிறக்கோடுகள் பளபளக்கும் ஒரு நாய்
அனைவரும் சாலையைக் கடக்க உதவுகிறது.

ஆவிகளால் பயமில்லையென்றால்

சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தை விரித்து
அதைச் சமீபத்தியக் கவிதையென்று அறிமுகப்படுத்தி
இதற்கு முன் எங்கும் வழங்கப்படவில்லை என்று
அந்தக் கவிஞர் வாசிக்கத் துவங்கினார்
என் அருகில் வந்து அமர்ந்த மனிதர்
நேரத்தைக் கேட்டுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்
அதே கவிதையின் மேலும் சில வரிகளை
அவர் சொல்லிக்கொண்டிருந்தார்
வெளியே கொட்டும் மழையின் எதிரொலி போல்
மேடையிலே அந்தக் கவிஞர்
மீண்டும் மீண்டும் அதையே வாசித்தார்
அந்த மனிதர் முடிவுரையாற்றும்பொழுது
இறுதி வரிகளில் அந்தக் கவிஞர்
மூச்சுவாங்கிக் கொண்டிருந்தார்
நான் கேட்காமலே அவர் தனது பெயரைச் சொன்னார்
அந்த மனிதர் மழையில் மறைந்தபொழுது
அந்தக் கவிதை மின்னலாய்
மர உச்சிகளில் பிரகாசித்தது
தகரக் கூரையில் மழைத்துளிகள் அலற
அந்தத் தூறலில் ஒரு புல் அசைந்தாடியது
அசைந்தது ஒரு ஊசல் போல
அவரது பெயரை நினைவுகூர்ந்து
அருகிலிருந்த மனிதரிடம் கேட்டேன்
அந்த மனிதர் பிரபலமாக இருந்திருக்கிறார்
பழுது பார்ப்பதில் கைதேர்த்தவர்
பழங்காலக் கடிகாரமோ அல்லது மணிகாட்டியோ
புத்துயிர் பெறும் அவரது கைவண்ணத்தில்
தொலைதூரத்திலிருந்தும் மக்கள் வருகின்றனர்
அவரது கடையைத் தேடி
அனால் இப்பொழுது அவர் இறந்து
மூன்று வருடங்கள் ஆகிறது
இரவிலே தூக்கம் தொலைத்து
பிரிந்து செல்லும் முன்
அவர் கூறிய பெயரை
கூகுளில் நிறையத் தேடியபொழுது
அந்தப் பெயருக்கான விடை கிடைக்க
தொங்கியது பிரௌசர்
இறந்த முகம்தெரியாத யாரோ ஒருவரின்
எழுதப்படாத புதையுண்ட சிறந்த கவிதை              
வாழ்பவரால் எழுதப்படவேண்டும்
உங்கள் காதுகளைக் கல்லறையில
வைத்துக் கேளுங்கள்
ஆவிகளால் உங்களுக்குப் பயமில்லையென்றால்.

முயல் உரோமத் தூரிகை

அந்த முயல் உரோமத் தூரிகைக் கொண்டு
நான் வர்ணம் தீட்டிக் கொண்டிருக்கிறேன்
எனது செல்ல முயல்
அவனது இணையின் மேல்
அந்த முயல் உரோமத் தூரிகை இப்பொழுது
காற்றின் கூர்முனையில் கிழிந்த
அந்த ஆடைக்கு வர்ணம் தீட்டுகிறது
என் செல்ல முயலின்
அந்தத் துடிக்கும் நாசியிலிருந்து வரும்
மூச்சின் ஓசையை என்னால் கேட்க முடிகிறது
நான் சிவப்பு மஞ்சள் வர்ணங்களை
அந்தப் பழரசச் சாவடியின்
ஆரஞ்சுத்தோல் குவியலுக்காக
கலக்கிக் கொண்டிருக்கிறேன்
தொட்டிலில் துடிக்கிறது
அந்த முயலின் வால் நுனி
ஒரு ஆமைக்கும் ஒரு முயலுக்கும்
ஒரு யானைக்கும் ஒரு சிங்கத்திற்கும்
நான் இப்பொழுது வர்ணம் தீட்டவேண்டும்
அந்த ஆமையின் கண்களுக்காக
முயலின் காதுக்காக
யானையின் துதிக்கைக்காக
மற்றும் அந்தச் சிங்கத்தின் கோரைப் பற்களுக்காக
இப்பொழுது நான் வர்ணங்களைக்
கலக்கிக்கொண்டிருக்கிறேன்
பெண் முயலை விட்டு வந்த செல்ல முயல்
தடுமாறியது நிலைச்சட்டத்தில்
ஆமையால் தோற்கடிக்கப்பட்டதும்
சிங்கத்தைக் கிணற்றுக்குள் குதிக்கவைத்ததும்
யானை மீது ஏறியதுமான கதைகளைக் கூறி
ஓவியத்துடனே நெருக்கமாய் வாழ்கிறது
மிக மிக நெருக்கமாய்
நிலைச்சட்டத்தின் மீது அவன்
ஓவியத்தில் இருந்த
அந்தப் பெண் முயலை மறைக்க
அந்த முயல் உரோமத் தூரிகையைக் கூர்தீட்டி
பெயர் அறியா வர்ணங்களில் தோய்த்து
ஓவியத்திலுள்ள அந்தப் பெண் முயலுக்கு
வர்ணம் தீட்டுகிறேன் நான் இப்பொழுது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer