பொறித்த மீனை தட்டில் வைத்து
நீர்விட்டு பிசைந்த சோற்றில்
கை வைக்கப் போகிறேன்
உப்பின் சுவையுணர்ந்த மீனோ
மீண்டும் கடலில் விழுந்தோமென நினைத்து
என் சுட்டுவிரலைக் கடித்துவிட்டு
தட்டைச் சுற்றி நீந்தத் துவங்கியது
ஒவ்வொரு பருக்கைகளாய்
தின்று பார்த்துவிட்டு
சுடுசோற்றின் சுவை பிடித்திருப்பதாய்
வால் ஆட்டியது
புரட்டியெடுக்கப்பட்ட
மிளகாய்த்தூளின் எரிச்சல் தீர
தண்ணீரை குடித்துவிட்டு
கடைசியாய் தட்டில் தலைமோதி உயிர் நீத்தது
அலை ஓய்ந்த கரையின் நிச்சலனத்தோடு
இமைகளை மூடுகிறேன் முடியவில்லை
நாளை இரையாக போகும்
மீனனென பயம் தொற்றிக்கொள்ள
பேரிருளில் விழிகளை
உருட்டியபடி சாய்ந்திருக்கிறேன்
மீன்கள் வேறு என்னைப் போலவே
இப்படி விழித்துக்கொண்டே உறங்குமாமே.
வித்தை
வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்திற்கு நடுவே
சாட்டையால் விளாசிக்கொள்ளும்
வித்தைக்காரன் நிற்கிறான்
ஆங்காங்கே ரத்தம் கட்டி நிற்கும் அவன் உடலில் விழும் ஒவ்வொரு அடியும்
அந்தரங்கம் வரை நடுங்க செய்கிறது
மூக்கொழுக உடன் நிற்கும் சிறுமி
உருமி கொம்பை உரசித் தேய்கிறாள்
உச்சக்கோபத்தில் சண்டைக்கு நிற்கும்
காளையின் செறுமல் சத்தம்
அதரங்களைக் கிழித்துப் பாய்கிறது
கொதிக்கும் சாலையில்
துண்டை விரித்து மகனைப் படுக்கச் செய்து
இடுப்பிலிருந்து உருவிய குறுங்கத்தியை
காட்டியவன்
கைகளை நீட்டி மேலாக கிழிக்கின்றான்
பொங்கும் குருதி அவன் மகன் மீது
விழுகையில்
பசி கொண்டெழும் நாக்குகள்
பார்வையில் ருசிப் பார்க்கின்றன
எல்லாம் முடிந்தபின்
நழுவுகின்றவர் மத்தியில்
மனிதாபிமானியான ஒருத்தர் மட்டும்
என்ன தருவது என யோசித்து
ஒரு முடிவுக்கு வந்தவராய்
சலனமேதுமில்லாமல் கேட்கிறார்
முதல் தர சாட்டையும் கத்தியும்
என்ன விலை வரும்?
கவண்
நான் பிறக்கும்போது எங்கள் முதுகில்
பாலத்தின் பாரம் சுமத்தப்பட்டது
என் தகப்பன் பழைய தகரத்தகடு
வெட்டி சீழ்ப்பிடித்து இறந்து போனவன்
என் தாயோ பிறந்ததிலிருந்து
என்னிடத்தில் பேசத் துணியாதவள்
வெளிச்சத்திற்கு வராது
இருளுக்கென பழக்கப்பட்ட எங்கள் கண்களில்
பயம் மட்டும் வடியாதிருக்கப் பணிக்கப்பட்டோம்
கைக்குழந்தையாய் இருந்த என் தங்கையை
வெறிநாயொன்று தூக்கிச் செல்ல நேரிட்டதை
வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்கும்படியாகிற்று
இது போதாதென இருள் நதியென புரளும்
அதனடியில் சதாசர்வகாலமும்
பெருச்சாளிகளுடன் சமர் செய்கிறோம்
கள்ளச்சந்தையில் விற்கும் எலிப்பொறிகளுக்கு
மசிய மாட்டோமென
அச்சுறுத்தும் அதன் சிறுத்த கண்கள்
எங்களை வேவு பார்த்தவண்ணமிருக்கின்றன
சிறுவயதில் என்னையும் கூட
ஒரு முரட்டு பெருச்சாளி இழுத்துச் சென்றிருக்கிறது
சாட்சியமாய் என் மர்ம ஸ்தானத்தில்
தழும்பிருக்கிறது பாருங்களேன்
ஒரு பின்னிரவில் எல்லாமும் மாறிவிட்டது
முக்கிய பிரமுகர் வருகைக்காக
பாலத்தினடியில் இருந்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட போதுதான்
அம்மா கேட்டாள்
உன் தங்கையை தூக்கி சென்ற நாயை
ஏன் நீ கல்லால் அடிக்கவில்லை.
பிரார்த்தனை
வீடு அமைதியாய் இருக்கிறது
எதுவும் அசைவதாய் இல்லை
கடிகாரத்தின் நொடிமுள் ஓசை
மௌனித்திருக்கும் தசைநார்களை ஊடுருவிச் செல்கின்றன
மூச்சுவிடும் ஓசையைக் காது கூர்ந்து
அவதானிக்கிறேன்
மூளை வீடெங்கும் ஓடித்திரியும் எலியென
சரசரத்துக்கொண்டிருக்கிறது மண்டைக்குள்
நேற்று என்ன தின்றோம் என
திரும்பத் திரும்ப வயிறு கேட்டுக்கொண்டே இருக்கிறது
தின்பதற்கு எதுவுமில்லாத நேற்றைய இரவைதான்
கடைசியாக நான் உண்டிருக்கவேண்டும்
தரித்துப் போட்ட கால்களை விட்டு
மெல்ல ஊர்ந்து சுவரேறும் சிலந்திப்பூச்சியை
பரிதாபத்திற்கு இடமின்றி தூர எறியும் என் கைகளால்தான்
என் எதிர்காலம் நோக்கி பிரார்த்தித்துக்கொண்டிருக்கிறேன்
கதவு தட்டும் ஓசைக் கேட்டு ஓடிச் சென்று திறக்கையில்
பக்கத்து வீட்டிற்கு ஆர்டர் கொண்டு வந்திருக்கும் பையன்
என்னைப் பார்த்துச் சிரிக்கின்றான்
அவன் கடவுளேதான்
ஆனால் என் கடவுள் அல்லவே.