அந்தியில் உதிரும் வர்ணங்கள்
இப்படித்தான்
இரவின் இளம் பச்சை நிறத்தினை
அவிழ்க்கத் தொடங்கினேன்
தீராத வர்ண வெளியாக
என் இரவுகள் நீண்டபடியே இருந்தன
அலகுகளால் வர்ணங்களைக் கொத்திச் செல்லும்
பறவைகளின் நிழலின் வர்ணம் எது?
இரவுகள் காய்க்கத் தொடங்கும்
அந்தியில் இல்லாத வர்ணங்களா
கோடையின் தகிப்பை வரைகின்றது?
எப்படியோ
தூரத்தில் வானத்தைத் தடவும் மலைகள்
சூரியனின் வர்ணங்களைத் தின்றுவிடுகின்றன
அருவிகளால் அடங்கா தன் தாகத்தை
காடுகள்
வர்ணங்களைத் தின்றே போக்குகின்றன
நான் இரவின் இளம் பச்சை நிறத்தினை
அவிழ்க்கின்றேன்.
நட்சத்திரங்களைப் போல
மெல் ஒளி சிந்தும் ஒரு கீதம்
இரவின் மையத்திலிருந்து கசிகிறது
புராதனமான அந்த இசை
அத்தனை வர்ணங்களின் சாயல்களையும்
என்னில் பரவ விடுகின்றது.
இரவு
இளம்பச்சை
மாய இசை
இரவு காய்க்கும் அந்தி
காடுகள்
மலைகள்
யாவற்றையும் நான் கடந்தேகுகின்றேன்
வர்ணங்களாலானதுதான்
வாழ்வென்னும் பாதாளம்.
பரிநிர்வாணம்
கனவை உடுத்தபடி
இரவிலசையும் நதி
தன் பூர்வீகமான சதுக்கத்தில் தேங்கியபின்
நான் வெளியேறிவிடுகிறேன்
துக்கங்களிலிருந்து தூக்கங்களுக்கும்
தூக்கங்களிலிருந்து துக்கங்களுக்கும்
தூங்காமையின் அதிரூபமான அசைவுகள்
உறையும் சாஸ்திரவெளியில்
புணர்ச்சியின் உச்சத்தை உணராதவளின் வலியுடன்
திரும்புகிறாள்
நூறாவது முறையும் கைவிடப்பட்டவள்
காமத்தின் மெல்லிசை மணக்கும் காற்றில்
கைகளாய் அசையும் இலைகளைமென்றபடி
வியர்வைப் பொருக்குலர்ந்த ஆடைகளை
மோகித்திருப்பவன்
இப்போதும் மறுதலிக்கிறான்
புணர்ச்சியின் முனகல்களில்லாத
அத்தனை பொழுதுகளையும்
காமத்துக்கும் வசீகரத்துக்குமிடையில்
நீளும் கோடுகளில்
புத்தனின் ஞானஉணர்ச்சியும்
யசோதரையின் காம அணுக்கமும் முயங்கும்
கணத்திலொரு பிலாக்கணம்
தீ பற்றி எரிவதைக் கண்டவர்கள்
தங்களின் நிர்வாணங்களை
இல்லாத ஆடைகளால் மூடுகிறார்கள்
கூடுங் கூட்டத்தில்
காமம் மறைத்த சம்பாசணைகள் யாவும்
எரிநட்சத்திரங்களானதை
பின்னொருநாள் கண்டபோது
யசோதரையின் நிர்வாணத்தில்
புத்தர் பரிநிர்வாணமடைந்திருந்தார்
மழைப்பாடல்
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.
சுடரழியும் சூரியனின் பொழுதில்
அவிந்தடங்கிய மெழுகுதிரியென இருந்தேன்.
அந்திகளின் மீது
தினம் அழுகிச் சிதையும்
செம்பழுப்புநிற முகில்களை
கடலின் கவிச்சை கவியும் காற்று
என் நாசியின் மீது கொட்டிச் சிந்துகையில்
சாமகானங்களின் பேதத்தை
முதல்முறை உணர்ந்தேன்
பறவைகள் தீ பிடித்து வானெங்கும் அலைகின்றன
எனது கானம்
மந்திரச் சொற்களாலானது
அது மழையைப் போலவே ஈரம் கசிவது நான் யாருக்காக
இசைத்தேன் அதை
எஞ்சிய காலத்தின் சிறகுகளை
அவை தரும் வலியை
இசைக்க முடியாதிருந்த காலத்தில்
சுடரழியாச் சூரியனே வானத்தை
முழுமையும் நிறைத்திருந்த காலத்தில்
வருடா மலரின் நறுமணத்துடன்
எனக்குள் பூத்திருந்தன பாடல்கள்.
யாரையும் தீண்டாத வார்த்தைகளின்
நீள் அடுக்குகளில்
மழை பொழிந்தது
மழையின் கடைசி இறகும்
கனக்கும் படியாக
மவுனத்தில் விரிந்துகொண்டிருந்தன மலர்கள்.
யாரினதும் மனதையும் வருடாத மலர்கள்
மீண்டும் ஒரு மழைக்காலத்தை
நோக்கிச் செல்கின்றேன்.