கோமரத்தாடி

சு.வேணுகோபால்

பகிரு

சிறுகதை

ஒன்பது கவை கொண்ட கல்மூங்கிலை வலது தோளில் சாய்த்து பிடித்தபடி முன்னால் நடந்தார் சாமியாடி சின்னப்பன், முதுகில் தொங்கிடும் தோல் பைக்குள் ஏழு பிரம்புகுச்சிகள் பளபளப்போடு நீட்டிக்கொண்டிருந்தன.

சின்னத் தொங்குகொண்டை பிடறியைத் தொடுகிறது. கரையின் இருபுறமும் நொச்சி மரங்கள் அடர்ந்திருக்கின்றன. மரங்களின் நிழல்களை மேற்கில் நீட்டி படுக்கவைத்திருக்கிறான்.

அந்த நிழல்களின் மீது மனித நிழல்கள் நகர்ந்தன. சின்னப்பனுக்குப் பின்னால் பெண்களும், பெரியவர்களும் வந்தார்கள்.

பேரன் காளிராசு வலது கையில் பொங்கல் செம்பையும், பூஜைபொருட்கள் இருக்கும் பையை இடது கையில் பிடித்தபடியும் ஓடை மணல் பாதங்களில் நெறநெறத்துப் பிதுங்க தாத்தாவின் பின்னால் பெருமிதத்தோடு நடந்தான்.

பூக்கள் நொச்சிக்கிளைகளின் நுனியெல்லாம் பூத்திருக்கின்றன. சின்னச் சின்னப் பூக்கள் மயில் விரிக்கும் தோகைபோல நீல நிறத்தில் மின்னின.

செம்மறியாடுகளும், வெள்ளையாடுகளும் கரைகளில் நுழைந்து ஏறி இறங்குவது வழக்கம் என்பதால் கொலைக்கொம்பு நொச்சியின் அடிக்கால்களில் பின்னியிருக்கவில்லை நொச்சிக் குச்சியை எந்த இடத்திலும் பிடித்து ஓடைக்கு வெளியில் வரும்படி சந்துகள் நிறைந்திருந்தன.

ஆடுகளின் மிதியடிகளில் உருண்ட கூழாங்கற்கள் சிவந்த மண்ணோடு கரையின் அடியோரம் கிடந்தன.

கருங்கல் பாலத்திற்குச் சற்று முன்னால் ஓடைக்கரையின் வலது பக்கம் சாய்வாக ஏறிச்செல்லும் பாதையில் சின்னப்பன் ஏறினார்.

இன்னும் உழாத செங்காட்டில் கால் வைத்ததும் நான்கு கல்தூண்களுக்கு மத்தியில் கிழக்கு பார்த்து கருப்பசாமி நிற்பது தெரிந்தது.

கையில் வைத்திருந்த ஆளுயர கல் மூங்கிலைத் தூக்கிக் காட்டினார். முப்பத்தேழாவது வயதாக இருக்கும்போது தன் ஐயா மாரியப்பன் கேரளாவில் நெடுங்கண்டத்தில் இருந்த கணபதியா பிள்ளையைப் பார்க்க அழைத்துப் போனார்.

நெடுந்தூரம் சென்று வந்தது அதுதான். ஐயாவிற்கும் வயதாகிக்கொண்டிருந்தது. அவர் வாலிபமாக இருக்கும் காலத்திலேயே ஊரில் இருந்த ஏழுகுடி பிள்ளைமார்களும் மெல்ல கேரளாவிற்குக் குடிபெயர்ந்து விட்டனர்.

மறவர்களும், நாடார்களும் சரிபாதியாக இருக்கும் ஊரில் இருபது பறையர்குடிகள்  இருந்தாலும் பல வேலைகளில் ஈடுபட்டார்கள். அவர்களது வீடும் சின்னக் கோயிலும்  கிழக்கோடியில் இருப்பதில் சில வசதிகளும் இருந்தன.

முக்கியமாக வெளிக்கிப் போவதற்குச் சின்னக் கம்மாய் இருந்தது.

கணபதியாபிள்ளை ஊரில் இருந்த காலத்தில் மாரியப்பன், செந்தட்டிச்செடிகள், பாப்பரங்காய் கொடிகள், நெருஞ்சித்தொட்டுக்கள் அடர்ந்திருக்கும் செடிகளைக் கொடை நாளில் செதுக்கித் தள்ளி சுத்தம் செய்து வைப்பார்.

பந்தல்கால் கொண்டுவருவது, வாழைமரம் கொண்டு வருவது, நான்கு முழ வேப்பிலைத் தோரணம் கட்டுவது என ஆட்களோடு சேர்ந்து செய்வார்.

கோயில் காரியம் முடியும் வரை எடுபிடி வேலைகள் அனைத்தும் மாரியப்பன் செய்வார். பின்னால் கருப்பசாமிக்கு கொடை விழா நடத்த ஆள் இல்லாமல் அப்படியே போட்டு விட்டார்கள், மாரியப்பன் இருந்தவரைக்கும் வருடம் ஒருமுறை விளக்குப் போட்டுவந்தார்.

மழைக் காலம் முடிகிற சமயம், குளிர்காற்றுக்கு வீட்டு முற்றங்களில் தூங்க முடியாது சாக்குகளைப் போர்த்திக் கூரைக் குடிலுக்குள் படுத்தால்தான் குளிருக்கு அடக்கமாக இருக்கும்.  தூக்கம் வரும்.

மந்தைத் தோட்டத்தை ஒட்டிப் பிள்ளைமார் வீடுகள் மேல் கடைவீடு சொக்கலிங்கம் பிள்ளை வீடு. அப்படியே பின்னால் தோட்டம், அவனுக்கு மூன்று பெண்பிள்ளைகள், மூன்றுவயது பிராயத்தில் பையனோடு, மேலும் தங்கம்மாள் இரண்டு மாத சூல் கொண்டிருந்தாள்.

இரவு மணமணக்க கருவாட்டுக் குழம்பைத் தொட்டு கேப்பக்களியை விழுங்கிவிட்டு முன்வராந்தாவிற்கு வந்து படுத்தார்கள்.

விடிவதற்கு இன்னும் நேரம் இருந்தது. மூத்திரம் போக எழுந்தவள் டிடிங் டங்கென்று அடுக்களையில் பாத்திரம் விழும் ஓசை கேட்டதும், கருவாட்டுக் குழம்பு வைக்கிற நாளில் இந்தப் பூனைகள் எங்கிருந்துதான் மோப்பம் பிடித்து வருமோ இப்படிபோட்டு உருட்டுது என்று ஜலதாரிக்குக்கூடப் போகாமல் அரிக்கேன் விளக்கைத் தூண்டிவிட்டு எடுத்துக்கொண்டு வந்தாள்.

அடுக்களையின் தெற்குச்சுவரில் பெரிய குகை வாயில்போல ஓட்டை விழுந்திருந்தது. தட்டுக்களில் பாத்திரபண்டங்கள் ஒன்றுகூட இல்லை, கேழ்வரகும் கம்பும் தரையெல்லாம் சிந்தியிருப்பதால் பார்த்ததும் பக்கென்றது.

மேல்சுவரில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலக்கும்பா மட்டும் புட்டியோரம் விழுந்து கிடக்கிறது. பதினேழு ரூபாய் வைத்திருந்த கடுகு டப்பாவும் போய்விட்டது.

‘ஐயோ கள்ளன்’ என்று அலரவும் முன்பக்கம் படுத்திருந்த சொக்கலிங்கம் தடியைத் தூக்கிகொண்டு அடுக்களைக்குள் நுழைந்தார்.

அரிக்கேன் விளக்கு ஆட்டத்தில் சொக்கலிங்கத்தின் நிழலுரு பெரிய கரிய பூதம்போலச் சுவரின் இருபுறம் அசைவது இன்னும் பயத்தைக் கொடுத்தது.

கன்னக்கோல் வைத்த மண்சுவரின் அந்தப் பக்கம் இருட்டு கருத்து அடர்ந்திருக்கிறது. மோசம் போய் விட்டதைக் கண்டதும் தெருவிற்கு ஓடி ‘கள்ளன் கள்ளன்’  என்று கத்தினார்.

ஏழு வீட்டு பிள்ளைமார்களும் அடுத்தத் தெருவில் இருந்த நாடாக்கமார்களும், பொன்னு ஆசாரியும் தேவர்களும் ஏத்தகுடி முந்திதான் நடந்திருக்கிறது.

கேகேவென்று ஆட்கள் கம்பும் தடியுமாக மந்தைத்தோட்டத்தில் திமுதிமுவெனப் புகுந்து தேடத்தொடங்கினார்கள். வானமெங்கும் வெள்ளிகள் வெள்ளை வெளேரென்று ஜொலிக்கின்றன.

நிலவு இல்லை, வரகின் மேற்பரப்புக் கடல்தளம் போலக் கருத்து விரிந்து கிடக்கிறது. வெகுதூரத்தில் நிற்கும் புளியமரக் கருத்தச் சின்னமலை அடுக்குபோலத் தெரிகின்றன.

வரகு பூட்டைவிடும் பருவத்தில் ஏகமாக நெஞ்சு உயரத்தில் தோகைவீசி நிற்கிறது. கண்ணருகாமை தாண்டியனால் கரம்பைக்காட்டு மேடுபோல விரிந்து தெரிகிறது, எங்கும் ஆள் அலுக்கு பலுக்குத் தென்படவில்லை, ஆனால் பிடி பிடிபிடிவென்று வரப்புகளின் வழியே சத்தமிட்டபடி வேகமாக முன்னேறிப் போனார்கள்.

கிழக்கில் சாம்பல் நிறமும் மெல்ல வருவதுபோலத் தெரிகிறது. விடிகிறது என்றாலும் கருமை வெளுத்துத் தோட்ட மெல்லாம் ததும்பி இருக்கிறது.

வீரபத்திர நாடார் பையன் பன்னீர் ‘அந்தா தெரியுது’ என்றான் எல்லோரும் தூரத்தில் தெரியும் வேப்பமரம் பக்கம் பார்க்கவும் சாம்பல்நிறமாக விடிந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கருத்த பெரிய குண்டுக்கல் போல வரகின் மேற்பரப்பில் நகர்ந்துபோவது தெரிந்தது.

‘அந்தா அந்தா’ சத்தமிட்டுக்கொண்டு அதனை நோக்கி ஓடினார்கள். கல் வேகமாக விரைந்து சென்றது. இந்தப் பக்கம் பாருங்க இன்னொன்று நகர்ந்து போகுது,

இடதுபக்கம் பார்க்க அந்தக் கல்லுக்கு ஐந்துகோல் இடைவெளியில் இந்தக் கல் நகர்ந்து. வரப்பு வழியாக நழுவி விழுந்தார்கள் எழுந்து துரத்துகிறார்கள் பின்தங்கி பெண்களும் துரத்திக்கொண்டு வந்தார்கள்.

கருது பரியும் பருவத்து வரகுவாசம் ஆவிபோலப் புடைகளிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது. இளஞ்சூட்டோடு பச்சை மணம் தாக்கியது. வேகத்தில் சாம்பல் நிறம் வடிந்துகொண்டிருக்கிறது.

துரத்த துரத்த இரண்டு பாறைகளும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. இருட்டை துரத்த துரத்த அது புகையைபோல மாயமாகிக்கொண்டிருப்பதைப் போல நகர்ந்து போவது பாறையல்ல சாக்குமூட்டைகள் என்று தெரிய ஆரம்பித்தன.

‘அந்தா போறான் திருடன்’ அப்படி வளச்சுவா, இப்படி வளச்சுவா, ஒருமுகமாக ஓடினார்கள்.

நெருங்கநெருங்க கிழக்கால் பாதை வந்தது, திடுக்கென மூட்டையைச் சாலையோரம் போட்டுவிட்டு சட்டை போடாத கருத்த மனிதன் எழுந்தான்.

கருத்துப் பளக்கிறது உடம்பு “டேய் எவன் வந்தாலும் வெட்டிப் பொலி போடுவேன், வாங்கடா தாயோளிகளா” வீச்சருவாளைத் தூக்கி ஓங்கினான். மற்றொருவன் சற்றுத் தள்ளி எழுந்தான் வேர்வையால் நனைந்த திடகாத்திரமான நடுக்கட்டு வயதுக்காரன், அறுவாளைக் காட்டி “இந்தச் சாக்கு மூட்டையில் தலையை வெட்டிக் கொண்டுபோவேன் வாங்கடா என்னடா செஞ்சிருவீங்க, வாங்கடா தலையோட சுண்ணியையும் வெட்டி எடுக்கிறேன்” வாய்க்குவந்தபடி திட்டத் தொடங்கினான்.

பைசல் பாண்டித் தேவருக்கு முன் கம்போடு வந்துகொண்டிருந்த பாலுத் தேவர், “அவனுக கெட்டபயலுகளா இருக்கானுக. குன்னக்கோல் பயலுக ரெண்டு பொருள் போனா போகுது, களசானிப்பயலுக உசுர எடுத்திடுவாங்க, அந்தளவில வாங்கப்பா அப்பறம் பார்த்துக்கிடலாம்” என்றபடி அப்படியே நின்றார்.

விரட்டிக்கொண்டு முன்னால்போன சிவக் கொழுந்தை நோக்கி திருடன் அறுவாளை ஓங்கிக் கொண்டு ஓடிவந்தான், துரத்தி வந்த பெண்கள் ஐயோவென்று கத்தினார்கள். சிவக்கொழுந்து திரும்பி ஓடவும் துரத்தி வந்தவர்களும் திரும்பி ஓடினார்கள், வரகு காட்டில் தொலைவில் அங்கங்க நின்றவர்கள் திரும்புவதுபோலத் தோல்பட்டையைத் திருப்பினார்கள்.

திருடன் நின்றபடி “இன்னக்கி ரத்தப்பொலி போடுறேன்டா” பூமியில் கொத்துவதுபோலக் கொத்தினான். சிலர் நகராமல் அங்கங்கே நின்றார்கள்.

“டேய் பொன்னு ஆசாரி நீ எங்க ஊருக்குள்ள வாடா தலைய எடுக்கிறேனா இல்லையான்னு பாரு உன் முண்டம் ஓடையில் கெடக்கும்” கையில் வைத்த இரண்டு முழ குச்சியோடு பொன்னு ஆசாரி வரகு பயிரடியில் அப்படியே பதுங்கி ஊரை நோக்கி தலைதெரியா வண்ணம் வெள்ளாமைக் காட்டுக்குள் குனிந்தபடி ஓடத்தொடங்கினார்.

“டேய் நாடானுக்குப் பேர் சொல்லமாட்ட” என்றாலும் பன்னீர் மெல்லத் திரும்பிப் பார்த்து நடக்கத் தொடங்கினான்.

அங்கங்கு நின்றிருந்தவர்கள் தங்கள் பெயர்களைக் கண்டுபிடித்துவிட முடியாத வண்ணம் சட்டென வரகுத்தாளடியில் குனிந்து ஊரை நோக்கி ஓடத் தொடங்கினர்.

வெகுதூரத்தில் சத்தம் கேட்டு வந்து நின்றவர்கள்கூட வெளிக்கு வந்ததுபோல அமர்ந்தார்கள்.

பக்கத்து ஊர்க்காரன்தான், துரத்தத் துரத்த பிடரியில் சாக்கு மூட்டையைப் போட்டு குனிந்தபடி சாரைப்பாம்பு போல ஓடியவர்கள் ஒரு எல்லை வரவும் திருடர்கள் மூட்டையைப் போட்டுவிட்டு மூர்க்கமாக எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்,

“இந்தாபாரு பொட்ட பிள்ளைக வச்சிருக்க எவனும் நிம்மதியா தூங்க முடியாம பண்ணிருவேன் கூதிகளா” வசைபாடத் தொடங்கினான் பின் சென்ற இரண்டாவது திருடன்.

ஊருக்குள் திருடிய பொருளோடு பயந்தோடி ஒளிவது அவமானம் என்றோ, இதற்குமேல் ஓடினால் பிடித்துவிடுவார்கள் என்றோ அரிவாளை எடுத்து நின்றுவிட்டார்கள்.

பின்தங்கி வந்த தங்கமணி “கன்னம் வச்சவன் நாசமா போவான் அவனுக்கப் பெண்டுபிள்ளைக வைசூரி கண்டு சாவாளுக, போற வழியில நல்லபாம்பு கடிச்சு சாவீங்கடா, சரியான ஆம்பளையா இருந்தா ஒன் சாதிசனத்தில் கொள்ளவையிடா பாப்போம் கொறஞ்ச சனமன்னு பார்க்கிறயா.

அந்தா நிக்கிறாண்டா கருப்பசாமி உன் சாமானத்த அறுத்து எடுக்க” ஆவேசமாகத் திட்டினாள்.

அவிழ்ந்த கொண்டையைச் சுழற்றி இறுக்கிக் கட்டிக் கொண்டு சொக்கலிங்கத்தின்  கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு போனாள்.

பங்குனி உத்திரம் நாளில் கருப்பசாமிக்கு கடைசி வரைக்கும் ஒரு திரியையேனும் ஏற்றிவைத்து சென்றவர் கணபதியாபிள்ளை வீட்டம்மாள் தான், முதல் நாள் கோயில் களத்தைச் சுத்தம் செய்துவைக்கிற மாரியப்பனுக்கு ஐந்து ரூபாய் தருவார்.

ஆனால் கொடை எல்லாம் நடக்காது, தொடர்ந்து வந்து கொண்டிருந்தவர்களெல்லாம் அப்படியப்படியே நின்றுவிட்டார்கள், அதெல்லாம் அப்போதே நின்று விட்டது.

இருந்த மூனுகுடி பள்ளர்கள் கூட ஐந்துமைல் தூரத்தில் இருந்த காரமரத்தூருக்குப் பெயர்ந்து விட்டார்கள், பள்ளர்கள் செல்வாக்கு அதிகம் இருந்த ஊர் அது.

நெடுங்கண்டம் மோகன்ராஜ் எஸ்டேட்டிற்குக் கணக்குப் பிள்ளையாகப் போனார் கணபதியாபிள்ளை. வயதானபின் அவர் மகன் சாமிநாதப் பிள்ளைக்குப் பொறுப்பைத் தந்தார்கள்.

முந்தின வருசம் பங்குனி உத்திரத்திற்கு வராததால் மாரியப்பன் மகன் சின்னப்பனை அழைத்துக்கொண்டு கணபதியா பிள்ளையைப் பார்க்க நெடுங்கண்டம் போனார்.

“கருப்பசாமியை இனி நேரில் வந்து பாத்து திரும்பமுடியாது மாரியப்பா, இனி மனசில வேண்டிக்கிட வேண்டியதுதான். பிள்ளைகளும் விரும்புறதில்ல. வயசான காலத்தில அதிகப் பிரசங்கித் தனம் செய்யாம வீட்டில இருங்கன்னு திட்டுறாங்க, இனி ஒரே ஒருவாட்டி வந்து கருப்பசாமியை பாத்து வணங்கணும்னு நினைக்கிறேன்.

ஆனா நடக்காதுபோல, எங்க தாத்தா கட்டுனது. எங்க குடிக்கு ஒரு குலதெய்வம் மாதிரி, எப்படி விட்டுட்டு இருக்கிறதுன்னு தெரியல” கையைத் தொட்டி பக்கம் காட்டினார்.

வாழை இலையில் நல்ல சாப்பாடு போட்டு பேருந்து செலவிற்குப் பதிமூன்று ரூபாயும் கைச் செலவிற்கு ஏழு ரூபாயும் கொடுத்தார். வழி அனுப்பும் முன் ஆளுயர கல்மூங்கிலை வீட்டிலிருந்து எடுத்துவந்து அதற்குத் திருநீறு பூசி வணங்கி, “நான் வந்தா இந்தக் கம்பக் கருப்பனுக்கு முன்னால வச்சு ஒரு திரிபோடு” என்றார்.

மேற்கூரை இல்லாது கருப்பன் பீடத்தில் கம்பீர மாக நிற்கிறார். வலதுகையில் ஓங்கியபடி இருக்கும் வீச்சறுவாள்.

முழிதிரட்டி மிரட்டும் பெரிய கண்கள், புளி ஓடுபோல இருபுறமும் திருகி இருக்கும் மீசை. காலில் தண்டை இடது இடுப்பில் தொடை பக்கம் சாய்ந்து இருக்கும் சூரிக்கத்தி, உருட்டித் தார்பாய்ச்சிக் கட்டிய வேட்டி வலது பிடரியில் கொண்டை கைப் பிடிக்குஞ்சம் இடது நெற்றிக்குமேல் எகிறி இருக்கக் கட்டிய முண்டாசு, மார்பும் வயிறும் இன்னொன்று இருக்கும் திடகாத்திரம், முகத்தில் தெரியும் ஆக்ரோசம் எல்லாம் துடிப்போடு இருக்கின்றன.

தனியாக யார் வந்து கருப்பன் முன் நின்றாலும் பயம் ஏற்படும், உடம்பில் எண்ணெய் மினுமினுப்பு இல்லாது காய்ந்து வெளிறிய கருப்பாக நிற்கிறார், உழுகிற காலத்தில் செம்மண் பூசிக்கொள்வார், மழைக்காலத்தில் அதைப் போக்கிக்கொள்வார்.

மேற்கூரை இல்லாது நான்கு தூண்கள் மட்டும் அடக்கமற்று நிற்கும் அலோதியான வெளி அச்சத்தைத் தந்தது, அதன் மேல் இருந்த இரு கருங்காலி விட்டங்களால் கூரை குப்பிற கவிழ்ந்தது.

முக்காலுக்கு முக்காலடி கொண்ட கனமான விட்டங்கள் மரத்தை அறுத்து விட்டமாகப் போட்டிருந்தால் இருந்திருக்கும் முற்றத்தைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கிறார் சின்னப்பன்.

வில்வமரத்தில் மெல்லியதாக வெண்மைபடர்ந்த குண்டுகுண்டான இளம்பச்சை காய்கள் தொங்குகின்றன. சுத்தம் செய்தபின்பும் மரத்தடியில் ஏழெட்டுக் காய்கள் கிடக்கின்றன.

கொஞ்சம் வாய் விட்டு காய்ந்து கிடக்கும் காயில் இரண்டு கட்டெறும்புகள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன. வலது பக்கம் இலைகளை உதிர்த்துப் பட்டை பட்டை யான மஞ்சள் நெற்றுக்கள் காற்று வீசும்போது கிலுகிலுக்கின்றன. கிளைகள் நல்ல இடைவெளியோடு நாலாபுறமும் வான்நோக்கிச் செல்கின்றன.

சென்றவருடம் அதற்கு முந்தின வருடமும் கருப்பன் வேடம் தரித்து மறையாற்றில் தீர்த்தம் எடுத்து பறையர் தெருவழியாக ஆடிவந்தார். இந்த வருடத்தைச் சிறப்பாகக் கொண்டாட குறி கேட்க நினைத்தார்.

வேட்டையாடி நீரெடுத்து நடுத்தெரு வழியாகக் கருப்பன் கோலம் கொண்டு ஊரே வணங்கி கொண்டாடும்படி செய்யவேண்டும் என்று நினைத்தார்.

தூரத்தில் துணியில் சுற்றிய குழந்தையை மார்போடு அணைத்து தாயும் பெற்றெடுத்த மகளும் இளைஞனும் வருவது தெரிந்தது.

கோயிலைச் சுற்றிலும் நிலங்கள் உழாமல் தரிசாக விரிந்து கிடக் கின்றன. பழைய தட்டை தாள்களில் கரையான்கள் ஏறிக் கிடக்கின்றன.

அங்கங்கே வரப்பில் கருவேல மரங்களும் வேப்ப மரங்களும் நிற்கின்றன. வானில் கிரீச்சென்று கத்திக் கொண்டு செல்லும் செம்பருந்தை கண்ட பெண்களும் பெரியவர்களும் பெருமாளே என்று வணங்கினர்.

கருப்பசாமிக்கு ஏழடி முன் நிற்கும் விளக்குக் கல் குழியில் சின்னப்பன் மகள் வரதம்மா ஈயச் சொம்பிலிருந்து விளக்கெண்ணையை ஊற்றி திரி ஏற்றினாள். சின்னப்பன் தன் கொண்டையை அவிழ்த்து விட்டார்.

கணபதியாபிள்ளை பல வருடங் களுக்கு முன் தந்த கல் மூங்கிலை ஏழு படியையும் தொடும்படி வைத்தார்.

படியின் முன் அமர்ந்து தீபத்தை வணங்கினார். மரத்தடியில் அமர்ந்திருந்த அங்காளி பங்காளிகளும் பெண்களும் குழந்தைகளும் எழுந்து சின்னப்பன் பின்னால் வந்து நெருக்கமாக அமர்ந்தார்கள்.

சின்னப் பனின் மீசை உதட்டோரம் இறங்கி கன்னத்தில் மேலேறுகிறது, சின்னப்பனைப் பார்த்தால் கண்ணுக்குள் உடனே பதிவது மீசையும் மூக்குத் துவாரங்களும் கண்களும்தான்.

மூக்குத்தண்டு நெற்றியிலிருந்தே எழுந்து வருவதால் அப்படிக் கவனிக்க வைக்கிறதோ என்னவோ நரைத்த மீசை என்றாலும் வெள்ளை வெளேர் என்று இல்லை, கருமை மங்கிய சாம்பல் நிறமும் மஞ்சள் ஏறிய வெள்ளை மயிர்களிலும்ஊடாடி இருந்தன. தலைமுடியைப் பின்னால் கோதி விட்டார்.

கொண்டு வந்திருந்த நவதானிய துணிப்பொட் டலத்தைப் படியில் பிரித்து வைத்தார். மடியிலிருந்து மல்லிப்பூ, ஊதாநிற சங்குப்பூ, ஆவாரம்பூ மூன்றையும் எடுத்து வெற்றிலையில் வைத்தார்.

சாணியைப் பிட்டு மூன்று உருண்டைகள் உருட்டி செய்தார். ஒவ்வொன்றுள்ளும் ஒவ்வொரு பூக்களை வைத்து இதழ் தெரியாவண்ணம் இன்னும் சாணியை அப்பி மறுபடி உருட்டினார்.

இரு உள்ளங்கையில் மூன்றையும் போட்டு உருட்டினார். இரு உள்ளங்கைகளால் மூடியும் உருட்டினார், ஒவ்வொரு உருண்டையும் படியில் எடுத்து வைத்துவிட்டு கைகளைக் கழுவினார்.

தட்டில் திருநீற்றைப் பரப்பிச் சூடத்தை வைத்து சுடர் ஏற்றினார். சுடரை வணங்கி நெற்றியில் திருநீற்றைப் பூசிக்கொண்டார். கைப்பிரம்பு கட்டை எடுத்து ஆராதனைக் காட்டி படியில் வைத்தார். கண்மூடி வணங்கினார்.

புறங்கையால் விரல்களைக் கோர்த்திருந்த கை களைச் சுடருக்குமுன் விரைப்பாக நீட்டி, மணிக்கட்டை பின்புறம் சுழற்றி உள்ளங்கைகள் வெளியே தெரியவிரல்களை இறுக்கினார். சடக் சடக்கெனச் சொடக்குகள் போட்டன.

முதுகின் தசைகள் இறுகின. பற்கள் நறநறத்தன. விழிகளை உருட்டி செருக்கடிக்கும் காளை போல மூச்சை பட்டெனவிட்டு தலையை உலுக்கினார். விரல் கோர்த்து கைகளை நீட்டியபடி உடம்பு இடவலமாகச் சுழன்றதும் ‘அய்ய்ங்’ என்று நாக்கை சுடரைப் பார்த்து துருத்தினார்.

கண்களைத் தேனையால் இறுக்கி பல்லைக்கடித்தார், கோர்த்த கைகளை மேலே தூக்கி தலையைஒரு உலுக்கு உலுக்கினார். அந்த உலுக்கில் நெற்றியில் வைத்த திருநீறு மூக்கில் உதிர்ந்து படிந் திருக்கும். திரேகம் கிடுகிடுவென நடுங்கியது, கருப்பா சொல்லு நான் என்ன செய்ய அரற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அவரையே பார்த்தார்கள்.

படியில் கொத்து கொத்தாக வைத்திருந்த பிரம்புகளின் தூர்பக்கம் பற்றி எடுத்து வில்லாக வளைத்து விடப் பிரம்புகள் ஆடி அதிர்ந்தன.

வலக்கையில் இறுகப் பற்றித் தன் முதுகில் சடார் சடார் என அடிக்கத் தொடங்கினார். வெறிகொண்டு அடிக்கப் பின் இருந் தவர்கள் தங்கள் கண்களில் பிரம்படி பட்டுவிடும் என்பதால் தலையைப் பின்சாய்த்து எழுந்தனர்.

துரோகம் செய்த கொடூரனை அடிப்பதைபோலத் தன் முதுகில் தானே அடித்தார். பிரம்புகளின் அடிபட்டு பட்டு குறுக்கு மறுக்காகத் தடிப்புகள் சிவந்தன. இரண்டு மூன்று முறைகள் பிரம்படிகள் முதுகில்பட்டபோது வித்தியாசமாகப் பார்த்தவர்கள்.

நிறுத்தாமல் தொடர்ந்து அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து எப்போது நிறுத்துவார் என்பது போல மிரண்டார்கள். இருக்க இருக்க அடியின் வேகமும் கூடியது. பிரம்பின் நுனிபட்ட இடங்களில்தோல் கந்தி ரத்தம் கசிந்தது.

ஒரு சந்தர்ப்பத்தில்சங்கம்மா கிழவி “போதும்சாமி உன்னை நம்புதோம், நாங்க என்ன செய்யனும்னு சொல்லுசாமி” “கொடை எடுக்கணும்லா” “சரி அதுக்கு வழிகாட்டு சாமி” “மஞ்சள் பூ வந்தா கொடைக்கு வழி, மத்த பூ வந்தா கொடைக்குத் தடைலா” அமர்ந்தபடி வில்லாகக் குதித்தார். இரு ஆடவர்கள் பின்னால் விழாதபடி பிடித்தனர்.

சின்னப்பன் உடம்பு முழுக்க வேர்வை மினுமினுத்து வழுக்கியது. பாப்பாத்தி மகள் மருதாயியை அழைக்க அவள் நடுவிலிருந்த சாணி உருண்டையை எடுத்துப் பிரித்துக் காட்டினாள்.

அது மஞ்சள் நிறம் கொண்ட ஆவாரம்பூ அதைப் பார்த்ததும் பின்னால் அமர்ந்திருந்த ராமாயிக்கு சாமி வந்து கைகளை முறுக்கி எழுந்து குதித்தாள். கருப்பன் உத்திரவாதம் தந்தாலும் சின்னப் பனுக்கு மேனி முழுக்க ஜூம்ம் என்று சிலிர்த்துவிட்டது. ராமாயியைப் பெண்கள் ஓடிப் போய்ப் பிடித்தனர்.

நழுவி இறங்கிய சீலையை வாரி எடுத்துச் சொருகினால் மஞ்சள் பூ வந்ததும் எல்லோரும் பய பக்தியோடு விழுந்து வணங்கினார்கள்.

வெள்ளை வேட்டியை நான்காக மடித்துப் போட்டு அணைத்துக் கொண்டு வந்திருந்த ஒருமாத பெண் குழந்தையைத் தன் தாயிடமிருந்து வாங்கி வந்து சின்னப்பன் காலடியில் வைத்தாள் பெற்றவள் காமாட்சி.

அவளது கணவனும் விலகி முன் வந்தான். இருவரும் மண்டியிட்டு வணங்கினர். திருநீறு தூவி வாழ்த்தினார் சின்னப்பன். வண்ணாரகுடியைச் சேர்ந்த காமாட்சிக்குத் திருமணமாகி ஐந்தாண்டுகள் குழந்தைகள் இல்லாமல் வேதனைப்பட்டவள்.

சென்ற ஆண்டுச் சின்னப்பன் மீது கருப்பன் இறங்கி ஆடிவந்தபோது காமாட்சி விழுந்து வணங்கினாள், அவளது வேண்டுதல் வீண்போகாதபடி கருப்பன் கண் திறந்தார். காமாட்சியை முன்விட்டுப் பெண்கள் பின்னே போவாடியாகப் பேசிய பேச்சுக்களை அழித்துக் காட்டியதிலிருந்து அவளுக்குச் சாமியாடி சின்னப்பன் மீது மரியாதையும் அன்பும் ஏற்பட்டது.

தான் மலடி இல்லை என்பதை நிரூபித்துவிட்ட பெருமை இந்தச் சிசு, அதற்கு அருளை வாங்கிட பின்தொடர்ந்து வந்திருக்கிறாள். இந்தக் கருப்பசாமி மீது அவளுக்கு அந்தரங்கமான ஒரு பற்றும் பக்தியும் ஏற்பட்டது.

தன் கையாலாண்டதைச் செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

கருப்பனின் படியில் வைத்திருந்த நவதானியங்களை அள்ளிக்கொண்டு காடு நோக்கி நடந்தார். உழாத காட்டில் கிழக்குப் பார்த்து நின்றார்.

போன வெள்ளாமையின் தட்டை தாள் அங்கங்கே நொறுங்கிப்போய் கிடந்தன. குப்பைமேனி செடிகளும்கொளுஞ்சி செடிகளும் குத்துக்குத்தாகக் காடெங்கும் தெரிகின்றன.

“மேகம் கூடனும் களிஞ்சு பொழியனும், காடெல்லாம் பச்சை தளிர்க்கனும், ஆடும் மாடும் கூடும் குருவியும் தேடும் இரை திசையெல்லாம் கெடைக்கணும், மனுசங்க கூடனும், குடும்பத்த உயர்த்தனும் நாடு செழிக்கனும், நல்ல மழை பொழியனும்” முணுமுணுப்பை மீறி ராகமாகவே பாடி நவதானியங்களை நாலாதிசைகளிலும் வீசி விதைத்தார்.

காக்கி டவுசர் தெரிய வாரி சுருட்டிக்கொண்டு மஞ்சள் வேட்டி, மணிகோர்த்த இடுப்புவார், தலையில் பின் படிந்து இறங்கும் தொங்கு கொண்டை, கழுத்தில் சின்னச் செவ்வந்தி மாலை, ஒரு கையில் சாட்டை, ஒரு கையில் வீச்சறுவாள் ஏந்தி ஆடிவருகிறார்.

ஒரு கொட்டு ஒரு தவில் இரண்டின் அடிக்கு நீர்ச் சொட்ட சொட்ட சாமியாடி வருகிறார். திடும் திடும் திடும் திடும் திடுதிடுதிடுதிடு திடும் திடும் திடும் ரண்டக்கணக்க ரண்டக்கணக்க ரண்டக் கணக்க டங்க டங்க டங்க டங்க ரண்டக்குணக்கு ரண்டக் குணக்க முன்னடியும் பின்னடியும் தாளத்திற்கேற்ப போட்டுச் சுழன்றாடச் சுழன்றாடப் பெண்கள் உலுலல உலுலலவெனக் குலவைப் போட்டனர்.

கோட்டுக்கு முன் தலைமுடி லொக் லொக்கெனத் தோளில் குதிக்கச் சின்னப்பன் மனைவி வேம்பம்மா சாமிகுதிப்பாக ஆடிச்  சென்றாள்.

பெண்கள் கொண்டுவரும் குடத்து நீரை ஊற்ற குனிந்து கொடுத்த சாமியாடி அப்படியே பின்எழுந்து முழிதிரட்டி தொங்கு கொண்டை இடத் தோளிலும் வலத்தோளிலும் பட்டென்று நீர் தெளிக்க தலையாட்டி குதிரைபோல வலக்காலை எகிறிப்போட்டு ஆடுகிறார்.

வீச்சறுவாளின் நுனிவேல் மூக்குபோல எட்டுத்திசை நோக்கி வெடுக் வெடுக்கெனத் திரும்புகிறது. முனியப்பனுக்குச் சாமியாடி வரும்போது வெளிப்படாத துடிப்பும், உற்சாகமும் மிரட்டலும் அடி விசையும் கலகலவென உடம்பதிர பீறிட்டுக் கிளம்பின.

மருமகனிடம் வீச்சருவாளைத் தந்துவிட்டு சாட்டையால் சுழற்றி படீர் படீர் என்று உடம்பில் அடித்து முறுக்குகிறார்.

சாட்டையை முதுகுப்பக்கம் போட்டு பிடித்து முன்னும் பின்னும் சென்றபடியால் சலங்கை குலுங்க வந்தபோது நாவிதர்சண்முகம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங் கினார்.

அவருடைய மகன் வேலாண்டி கைகட்டி நின்றிருந்தான் பெரிய பத்து படித்தும் வேலை இல்லாமல் தன்னுடன் குலத்தொழில் செய்துகொண்டிருக்கும் மகனுக்கு வேலை கிடைக்குமோ என்று பூமியை நோக்கிக் கேட்டார் சண்முகம்.

குதித்துச் சூறாவளி சூழல்வதுபோல உடம்பை சுழற்றினார். சாட்டையால் படீர் படீர் என்று அடித்தார். கிடுகிடுவெனத் திரேகமே “உண்டு மைய்யா உண்டு, நல்லகுறி சொல்லுது கருப்பன், ஐந்து விரல்விட்ட விரலி மஞ்சள் மூன்று, கிள்ளி வச்ச சுண்ணாம்போடு அரைச்சு மூன்று நாள், மூணுவேளை தண்ணியில கலந்து தலைக்கு ஊத்து, அப்புறம் வேட்டைக்குப் போகச் சொல்லு, வேட்டை விழும், கோட்டை புகும்,கருப்பன் சொல்றான்.

போமைய்யா போ” திருநீறு போட்டார்.

கருத்தரிக்க விடாது புகுந்த உதிரகாட்டேரி பேய் களுக்குச் சுடுகாட்டில் ரத்தச்சோறு படையலிடச் சொன்னார். வேண்டுதலுக்கு வாக்குகளைச் சொல்லி ஆவேசங்கொண்டு சாமியாடிச் சென்றார்.

கருப்பனே அருளாடிச் சென்றதாகப் பேச்சு எழுந்தது, சாமியாடி சின்னய்யன் கருப்பனசாமியாகவே மாறிப்போனார்.

வெள்ளாட்டுக் குட்டிகளின் பசிக்குரல் மெக மெக மெகமெகவெனப் பெரிய பஞ்சாரக் கூண்டுக் குள்ளிருந்து கிளம்பியது. எழ முயன்ற குட்டிக்கு முதுகு பஞ்சார வளையம் இடித்ததால் முன்னங்கால்களை மண்டிப் போட்டபடி கத்தியது.

ஆடுகளும் நான் இருக்கிறேன் என்று வாய் திறவாமல் ம்ம்மிக்கு ம்ம்மிக்கு வென மூக்குவழி குரல் கொடுத்தன. மூத்திரம் போன இடம் மஞ்சளாக இருந்தது. மடிகனத்துக் காம்புகள் புடைத்து பூமியை நோக்கி பாய்வது போல் இருந்தன.

பின்மடியில் ஒழுங்கோடு மயிர்கள் படிந்து மின்னுகின்ற, வேம்பாள் முகத்தை ஆடு பார்த்து, சோதிக்காதே என்பதுபோல அவள் முகத்தைப் பார்த்து முனகியது, அவளுக்குச் சிரிப்பு வந்தது. அந்தப் பக்கம் கட்டியிருக்கும் இளஞ் சினையாட்டின் பின்தொடை மயிர்களை வெட்டி விட்டிருந்த அடையாளம் கூட மறைந்து வந்தது.

வேட்டியை உதறிக் கட்டிக்கொண்டு வாசலுக்குச் சின்னப்பன் வந்தபோது வேம்பாள் பஞ்சாரத்தைத் திறந்துவிட்டாள். குட்டிகள் வாலை ஆட்டிக்கொண்டு தாய்மடி நோக்கி ஓடின.

பால்குடி மறக்கும் பருவத்தில் குட்டிகளை விற்றால் நான்கு காசுகள் கிடைக்கும். இளைய மகள் மயிலம்மாளுக்கு இலைத்தோடு எடுத்துத் தருவதாகக் கல்யாண சமயத்தில் சொன்னது, அந்தக் காரியத்தை இன்னும் முடிக்க முடியவில்லை, சமாதானப்படுத்தி வைத்திருக்கிறாள்.

சின்னப்பன் கழுத்தில் துண்டோடு வாசல்படி யோரம் அமர்ந்து குட்டிகள் முட்டி பால்குடிப்பதை பார்த்தபடி மடியிலிருந்து த.பி.சொக்கலால் பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். கொச்சைவாடை பீடி புகைக்குச் சற்று அடங்கியது.

வாலாட்டும் இடத்தில் முகர்ந்து பின் குட்டிகளின் முட்டலுக்கு இன்னும் சுரந்து தந்தது. மனம் முழுக்க அடுத்த ஆண்டுக் கருப்பசாமிக்கு இன்னும் மிகச்சிறப்பாக வேட்டையாடி, தீர்த்தம் எடுத்து ஊர்சுற்றி சாமியாட வேண்டும் என்பதிலேயே லயத்தது.

அலுப்பில் தாமாகத்தான் எழுந்தார்கள், இளம் வெயில் கூரைகள் எங்கும் படர்ந்து பளிச்சென ஆக்கியது.

“பீடிய பீடிய குடிச்சிட்டு அப்படியே உக்காந்திராத வெள்ளன போயி ரெண்டு கொலைகொம்பப் பறிச்சு கட்டிட்டு வா, தரை மேச்சல் எங்கயும் இல்ல, சும்மா அலச்சலுக்குத்தான் முடிக்கிட்டும் போகனும், மழைமாரி விழுந்து வேலி கீலி தரை பத்துத் தளிக்கட்டும், இதுகளும் வெடுக்வெடுக்கன்னு பிடுங்கி வாயில போட்டு ரொப்பும்”

“பாரு ஒரு வாரத்தில் மழைவிழுதா இல்லையான்னு. இந்தக் கோமரத்தாடி சொன்னா தப்பாது”“ஆமா எல்லாம் உன் வாக்குப்படி சரியாத்தான் நடந்திருக்கு ஒன் பொச்சுப் பவிசியதான் நொண நொணன்னு ஊரே சொல்லுதே” என்றாள் கிண்டலாக.

“தூ நாயே நான் யார் தெரியுமா” என்றார், ஓ இந்தச் சாமியாடிய கோமரத்தாடின்னு சொல்லனுமாக்கும் என்றவள் பேசாமல் விளக்குமாரை எடுத்து கூட்டத் தொடங்கினாள்.

பெரியவன் இசக்கிமுத்துப் பின்னால் ஒருவர் தாங்கித்தாங்கி நடந்து வந்தார். நெருங்கிவர சின்னய்யன் எழுந்து அவர் நடையையே கவனித்தார், ஏதோ முள்ளில் மிதித்துவிட்டவர்போல இடதுகாலை பொத்தினார்போல் வைத்து வைத்து வந்தார்.

அறுபத்தைந்து வயதிற்கும் மேல் இருக்கும், ஆள்நல்ல உடல்கட்டில் இருந்தாலும் நடையில் ஒருசலிப்பான தோற்றம் பூசியிருப்பதுபோல இருந்தது.நெருங்கி வந்தவர் வணக்கம் வைத்து “முத்லாபுரத்திலிருந்து வர்றேன், காலில் ஆணிகண்டு தீரவே மாட்டெங்கிது, இந்தமாதிரி சாமியாடி செஞ்சு தார செருப்பில சரியாயுடுதுன்னு மார்க்கையனூரில் சொன்னாங்க, சரி இதையும் ஒருதடவ பாத்திடலாமன்னு வந்தேன்”

“வரனும் சாமி” என்றான்.

உள்ளே போய்ப் பெரிய சாக்கை எடுத்துவந்து சுவரோரம் விரித்துப் போட்டார்.

“தொட்டியில்ரெண்டு பாதத்தையும் நன்றாகக் கழுவி வந்தா பெரிய தோல் பையில் கைச்சுத்தியல், ஊசி, நூல்கண்டு கையுளி, சிறுகத்தி, குறடு என என்னென்னவோ இருந்தன.

அவரை நிற்க வைத்து வெட்டிவைத்திருந்த தோலில் அவரது இடது பாதத்தை வைக்கச் சொன்னார், கையுளியால் பாதத்தைச் சுற்றியும் படம் போலக் கோடிழுத்து முடித்தார்.

விரல் நுனிகள் போலக் கோடு விழுந்திருக்கிறதா என்று ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

இசக்கிமுத்து ஆளை ஒப்டைத்துவிட்டு எழுந்துநழுவப் பார்த்தான். “மனுஷனுக்குள்ள மாயக் கோலங்கள கண்ணு முன்னாடி கத்துக்கண்ணு சாமி அனுப்பிவச்ச வரம்டா, குண்டிய வச்சு கவனிக்கணும்டா. ஆசையும் பொறுமையும் இல்லன்னு காங்க முடியாது. உன்ன சாமி ஏமாத்திட்டு போயிடும் இருந்து பார்றா” முகத்தில் கசப்பான கவலைப் படர்ந்தது.

இசக்கிமுத்து ஒன்றும் சொல்லாமல் கவனிப்பது போல நின்றவன், மெல்ல நழுவினான். சாக்கில் அமர வைத்தார். இடது கால்பாத ஈரத்தை தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து நன்றாகத் துடைத்தார், துண்டை மடியிலேயே போட்டுக்கொண்டார். பெருவிரலுக்கு அடுத்தப் பாதமேட்டில் வெள்ளையாகப் புற்றுசதை ஏறியிருந்தது.

“ஆஸ்பத்திரியிலயும் காட்டிட்டேன், கொடஞ்சு எடுக்கிறாங்க மறுபடியும் வளந்திடுது, பாதத்த ஊன முடியல சுல்லுன்னு ஏறுது” என்றார். கத்தியின் நுனியால் ஆணி கண்ட இடத்தில் சதையை வட்டமாகப் பதித்துச் சீவி எடுத்தார் பெரிய ஊசி முனையால் கிளறி கிளறி பொதுப்பொதுவென விழுந்த வெண்ணிற சதைத்துகள்களை எடுத்தார்.

அடியாழத்தில் குருத்து முனைப்போலக் குழியைச் சுற்றிக் கீறிக்கீறிப் பக்குவமாக எடுத்தார்.

“சாமி உள்ளங்கை ரேகைபோலவே பாதத்திலும் ரேகை இருக்கு. அந்த ரேகையை சரியா வரஞ்சுட்டோமன்னா இந்தக் காலாணிபுத்து வராம பண்ணிறலாம் அதுக்கொரு மருந்தும் தடவிடனும்” அவரது பாதத்தை வலது துடைமீது தூக்கிவைத்து தன் விரல்

நுனியால் விரல்களிலிருந்து ரேகைகளைத் தடவித் தடவி குதிங்கால்வரை சென்றார். பின் பாம்பு விரலையும் மோதிரவிரலையும் பொருத்திக்கொண்டு மேலிருந்து பாதத்தில் ஓடும் ஒவ்வொரு ரேகையாகத் தடவித் தடவி அதன் நீளம் வளைவு நெளிவு தடிமன் எட்டுக்கால் பூச்சி நூலாகச் செல்லும் மெல்லிய தடங்கள், ரேகையின் ஆழ அகலங்கள் எல்லாவற்றையும் வைத்து தன் மனதில் ஒரு பாதத்தை வரைந்தார்.

பின் பாதங்களின் ரேகைகளைக் கண்ணால் பார்த் தும், மனதில் வாங்கியபடியும் இடதுபாதம் வரைந்த ரேகைகோடுகளைக் தோலில் கையுளியால் வரைந்தார்.

திரும்பத் திரும்பத் ரேகையையும் தடவிப் பார்த்தும் கண்ணால் கவனித்தும் சரிபார்த்து வரைந்தார்.

ஆணிக்கால் போட்டு வந்த செருப்பின் குதிங்கால் பக்கம் சமமாகத் தேயாமல் வெளிப்பக்கமாகத் தேய்ந்திருப்பதைக் கவனித்து மூன்று புள்ளிகளால் அடையாளமிட்டுக் கொண்டார்.

“உங்க குதிங்காலுக்கு தேயாத வண்ணம் செருப்பு ஏத்திக் கொடுத்து செய் யணும், இரண்டு குதிங்கால் பகுதியையும் பழக்கணும்” என்றார்.

ஆணி புற்று தழைக்கும் குறிப்பான இடத்தில் மூன்று புள்ளிகளை அடையாளப்படுத்திக்கொண்டார், தேங்காய் எண்ணெயைத் தொட்டு திரும்ப ரேகைகளை அடையாளங்கண்டு தோலின் வரைபடத்தோடு சரிபார்த்தபடி நகர்த்தினார்.

“சரி பண்ணிறலாம் சாமி, ரேகையோட பொருந்தி அமரும்படியாகச் செருப்பு செய்யனும் மருந்து தடவிக்கிடணும் ஏழுநாள் கழிச்சு வாங்க, உங்க பாதத்துக்கு அடிவாறு மேல்வாறு எல்லாம் வாங்கணும் வலதுகாலக் கொடுங்க” அதையும் விரல்களால் தடவிப் பார்த்தார்.

“இதில் ஒன்றும் குறை வராது” “நிஜமாசரியாயிடுமாப்பா.” “இந்தக் கோமரத்தாடி ஆகும்ன்னா ஆகும்பான் இல்லென்னா இல்லம்பான் சாமி. இது சரியாயிடும்.” என்றார்.

அவர் எழுந்து ஐம்பது ரூபாய்தாளைத் தந்தார்.

“இழுத்தடிக்கமாட்டியே” “நீங்க வர்றதுக்கு ஒரு நா முன்னமே செஞ்சுவப்பேன், எதுக்கும் ஒரு நா தள்ளிச் சொல்றது நல்லதுதானே சாமி” என்றார் அவர் தலையாட்டி வணக்கம் சொல்லி திரும்பி தாங்கி தாங்கி மிதித்துச் சென்றார்.

இரண்டு முழு அகலத்தில் இரண்டு முழுநீளத்தில் பிசிறு நீக்கி சுருட்டிவைத்திருந்த மாட்டுத்தோலைப் பார்த்ததும் பிடித்துவிட்டது.

நல்ல பக்குவத்தில் வந்திருந்தது. தொட்டதும் அதன் நெளுகல் தன்மைதெரிந்து, இறுகி விரைப்பில்லாமல் தொவளலாக நல்ல நிறத்தில் இருந்தது.

சில தோல்கள் கல்லைத்தொட்டதுபோலக் கடினமாகவும் விரைப்பாகவும் இருக்கும், நயமான தோல் கிடைக்க மெனக்கிட்டால் தான் முடியும். மருமகன் அம்மாசி ஓவுலாபுரத்திலிருந்து வாங்கி வந்திருக்கிறான்.

சொல்லாமலே இந்த மாதிரி செய்வான். மறுபடி சுருட்டி கட்டுவதற்குக் கயிற்றை எடுத்தார்.

இரண்டு பேத்திகளும் தாத்தாவின் தோளில் நெஞ்சை சாய்த்து தாத்தா கட்டுவதைப் பார்த்தனர். அடுத்தப் பிரசவத்திலாவது நடுவலவள் ஆண்டி யம்மாவிற்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கவேண்டும் என்று மனதில் வேண்டிக்கொண்டார் மடியிலிருந்து இரண்டு இருபது பைசாக்களை எடுத்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்தவர்.

பெரியவள் இருபதுபைசா என்றதும் மகிழ்ந்து தாத்தாவைப் பார்த்தாள். சின்னவள் தாத்தாவின் கழுத்தைக் கட்டி முத்தம் கொடுத்தாள். அதைப் பார்த்து பெரியவளும் முத்தம் கொடுத்தாள்.

பிள்ளைகளுக்கு ஆண்டியம்மாள் அடம் பிடிக்கிற முதுகில் இரண்டு அடியோடு ஐந்து பைசா தருவார்.

சோளக்கஞ்சியைத் தண்ணீரில் கரைத்து உப்பு போட்டு கலக்கி பெரிய ஈயக்கிண்ணத்தில் தந்தாள் ஆண்டியம்மாள்.

கஞ்சியைக் குடித்துவிட்டுத் துண் டால் வாயைத் துடைத்துக் கிளம்பத் தயாரானார், சுருக்குப்பையில் வைத்திருந்த இரண்டு வெற்றிலையை எடுத்துத் தந்தார், “அப்பா அடுத்த வருசம் கருப்பசாமிக்கு இன்னும் நல்லா கொடை நடத்தணும், எட்டு ஊருக்கு பேரும் புகழுமா போகனும்” “அதெல்லாம் பண்ணிறலாம்” மெல்லிதாகச் சிரித்தார்.

இருட்டுவதற்கு முன் கிளம்பினால்தான் கண் வெளிச்சத்திலே ஊர்போய்ச் சேர தோதாக இருக்கும். பேத்திகளை இருபுறமும் அணைத்து ‘போயிட்டு வரட்டுமா’ என்றார் வாயில் போட்டிருந்த இருபது பைசாவை எச்சிலோடு எடுத்து சரி என்றாள் சின்னவள்.

“வாயில காசபோட்டு பழகாதன்னு எத்தன தடவ சொல்றது” மூக்கில் குத்தப் போனாள். “சரிசரி விடு” என்றார்.

வெளியே வந்து கூரையைப் பார்த்தார், ராகித் தாள் கீற்று கருத்து துரும்புகளாக நொறுங்கிப் போய் கிடக்கிறது.

“ஒரு வண்டி ராகித்தாள் கிடைக்கட்டும், வந்து நானே பிரிச்சு மேஞ்சு விட்றேன்” என்றார்.

ஊரைத்தாண்டி மேற்குத் தடத்தில் நடையைக் கட்டும்போது சூரியன் மறைந்துவிட்டது. நன்றாகவே வெளிச்சம் இருந்தது. இடப்பக்கம் பீமன் கடவு மிக அருகில் இருப்பது போலத் தோன்றியது.

அதன் ஓடைகள் எல்லாம் சுத்துவாங்கி ஆற்றில் போய் இறங்கும். அடுத்த இரண்டு கரடுகளுக்குள் இடையே வாய்போல அகன்ற கடவு தெரிகிறது. இரண்டு கரடுகளுக்கு இடையே அந்தப் பக்கம் போனால் மார்க்கையனூர் வந்துவிடும்.

ஆண்டியம்மாளை தங்கை மகனுக்கே கொடுத்தார். வெங்கடாபுரத்தில் நாயக்கமார்கள்தான் அதிகம். அப்படி இப்படிச் சாராயம் குடிக்கிறான்தான் சோம்பேறித்தனம் கிடையாது. வீட்டில் ஒருநாள் நிற்கமாட்டான்.

எப்படியும் வேலையைத் தேடிப் போய் விடுகிறான் வளப்பிற்கு இடம் இருந்தால் ஒரு ஆட்டைக்கூட இவளுக்குக் கொடுத்துவிடலாம் என்று தோன்றியது.

குச்சனூர் செல்லும் பாதையின் வளைவில் நிற்கும் ஆலமரத்தில் மைனாக்கள் கெச்சட்டம் போடுவது கேட்டது. அடிமரம் தெற்காக வளைந்து விழுதுகளால் ஊன்றி நிற்கிற பழையமரம், பழனியப்பச் செட்டியார் தோட்டத்து வரப்போரம் தோதகத்தி மரத்தின்மேல் போட்டி சிறிய பரண் கூரையில்லாமல் இருக்கிறது.

வெள்ளாமை காலத்தில் காவலுக்குப் போட்டது. மரம் இலைகளை உதிர்ந்து இளம்பச்சையில் புதிய தளிர்கள் தளிர்ந்திருந்தாலும் குரங்கு பிடித்தது போல இலைகள் சுருண்டு சுருண்டு இருந்தன.

தோதகத்தி மரத்தின் கிளைகள் கரியத்துண்டாக நல்ல விசாலத்தோடு இருப்பதால் பரண்போடுவது எளிது.

பாதைப் புழுதியில் பாம்புத்தடத்தைப் பார்த்த தும் நின்றார். பருவெட்டாக இருக்கும்போல. வடக்கிலிருந்து தெற்காகச் சாலையைச் சற்றுமுன்கடந்திருக்கிறது. ஆடுகளின் குளம்படியோ, கவுதாரியோ மிதித்து அழிக்கவில்லை.

உள்ளங்கை அகலத்தில் புழுதியின் மேல் வழுவழுவென நெளிந்துநெளிந்து போகும் தடத்தைப் பார்த்தாலே பெரிய லகுடாக இருக்கும் என்று தோன்றியது. கட்டைவண்டிகள் சென்று சென்று இரு சக்கரத் தடங்களிலும் புழுதி படிந்து கிடக்கிறது. இரு கரிச்சான் குருவிகள் தலைக்குமேல் கத்தியபடி வட்டமடித்து இறையைத் தேடிப் போனது.

கொக்கி வெள்ளைச் சோளக்காட்டின் மேல் பறக்கும் பூச்சிகளைக் கரிச்சான்கள் பறந்து செல்லும் போக்கிலேயே லாவகமாக அலகால் கவ்வி வேட்டையை விழுங்கியது. சோளம் நல்ல பால் பருவத்தில் நிற்கிறது.

புதரிலிருந்து வெளிவந்த குள்ளநரி நடுபாதையில் நின்னு சின்னப்பனைத் திரும்பிப் பார்த்தது. சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல்ச்சுருளை இடது தோளில் வைத்துக்கொண்டு நரியைப் பார்த்தார்.

மிகக்குள்ளமான நரி எந்தப் பதட்டமும் இல்லாமல் முன்னால் உடம்பை அலட்டாமல் மெல்ல ஓடியது. ஊளையிட்டால் எங்கெங்கிருந்தோ பதில் ஊளை வரும் ஒன்றுகூடினால் ஆளையே குதறி எடுத்துவிடும். நரி கைஓடையில் இறங்கி மறைந்தது.

இந்த ஓடைவழி முதன்முதலாகப் போனதை மறக்கவே முடியாது அதுமெல்ல வளைந்து கரட்டின்அடிவாரத்திலிருந்து இறங்குவது தெரியும், கொடிக் கொம்பை பறித்து வரலாமென்று போனபோதுதான் பச்சைபசேல் என்று அருகம்புல் பெரிய நாற்றங்கால் அளவு விரிந்திருந்தது.

அதன் கரைபோல அரைவட்ட வடிவில் பெரிய பெரிய குண்டுபாறைகளும் கிடந்தன. அதன் அடியில் பிரண்டைகள் செழித்து வளர்ந்திருந்தன. இரண்டு பாறைகளுக்குஇடையில் நின்ற வேப்பங்குட்டையில் கோவைக் கொடி படர்ந்து அப்பி இருந்தது. முன்னால் பெரிய புல்தரை மண்டிபோட்டு அறுத்தால் நாலு கட்டு புல்வரும் பன்னருவாளை எடுத்து வந்து கை வைத்துவிடத் தோன்றியது. அருகம்புல்லில் மிதித்துக்கோவைகொடிக்குப் போகலாம் என்று காலை வைத்ததும் லவக்கெனத் தண்ணீருக்குள் விழும்படி ஆனது.

தொடையைத் தொடுகிற அளவு தெப்பமாகத் தண்ணீர் இருந்திருக்கிறது. பச்சை பசேல் என்று நிற்கும் அருகம்புல்அடியில் தண்ணீர் இருந்தது தெரிய வில்லை. இரண்டு நாட்களுக்கு முன் விழுந்த மழையில் இந்தப் பள்ளத்தை நிரப்பித் தெற்குப்பக்க கல்லிடுக்கில் நீர் கிடந்திருக்கிறது.

தண்ணீர் அலுங்காமல் புல் வயல் போல இருந்ததால் கால்வைத்து ஏமாந்தது நினைவிற்கு வந்தது. பள்ளத்தில் வண்டல் மண் படிந்து இருந்த வளம் அருகம் புல்லை நல்ல அடர்த்தியாகவும் உயரமாகவும் வளர்த் திருக்கிறது.

சோளக்காடுகள் இருபுறமும் செழிப்பாக இருந்தன. மாலை மங்கி இருட்டத் தொடங்கியது. இந்தப்பக்கம் இன்னும் கரண்ட் தொகுப்பு வரவில்லை,

கண்மாய்க்கரை ஏறியபோது கூகையின் அலறல்குளக்கருவேலா மரத்திலிருந்து வந்தது. மரங்கள்தூங்குவதற்கு இருட்டு தழுவும்போல மேற்பரப்புஅமைதியாக இருந்தது. குளத்தின் வெட்டுக் கிடங்குகளில் மட்டும் தண்ணீர் நிரம்பி இருக்கிறது.

நீர் வற்றி குளத்தின் மேற்புறம் தரையாக விரிந்துகிடக்கிறது. நட்சத்திரங்கள் மங்கித் தெரியத் தொடங்கின, வளர்நிலா உச்சியில் பாதியாகத் தெரிந்தது. நிலவு வெளிச்சமா மசங்கும் மாலை வெளிச்சமா என்பதுபோல மயக்கம் இருந்தது.

நிலவு வெளிச்சம் தனதாக்கிக்கொண்டிருப்பது நன்றாகத் தெரிந்தது.

கண்மாய்க்கரையின் வடக்குப்பக்கம் இறைப் பொட்டி போகும் சத்தம் வந்தது. நிலவு வெளிச்சம் இன்னும் பளீரென்று பொழியும். பந்தம் ஏற்றாமல் நீர் இறைப்பது தெரிந்தது. அமாவாசை நாட்களில்தான் மதகின் இருபுறம் பந்தத்தை ஏற்றிவைத்து இறைப்பார்கள், மதகின் கண்ணிற்குக் கீழ் குளத்து நீர் இறங்கிவிட்டால் நீர் மேடேறி வெளியேறாது.

கண்ணைச் சுற்றி பெரிய கிண்ணிபோலக் கரையைக் கட்டி நீரை இறைத்து அதில் ஊற்ற மதகு கண்ணார் வழி வெளியேறும். காற்று கண்மாய் நீரில் தடவி வந்து இதமாகக் தாக்கியது.

ஒரு நரியின் ஊழை தெற்கில் இருந்து கிளம்பியது. பதிலுக்குக் கண்மாயின் மேற்குகரை பக்கமிருந்து ஊளை ஒலி வந்தது. இரண்டு கொக்குகள் வடக்காகப் பறந்து போகின்றன. கரையின் சரிவுகளில் உள்ள செடிகளிலிருந்து கோட்டான்கள் கிரிச் கிரிச் கிரிச்சென்று சொல்லி வைத்தது போலக் கத்தின. சட்டென ஒரு நொடி சத்தம் நின்று மறுபடி கத்தத் தொடங்கின.

மதகின் தெற்குப் பக்கம் நின்றிருந்தவர் “யார்ரா” என்று மிரட்டலோடு கேட்டபொழுதே பரமத்தேவர் குரல் என்று தெரிந்துவிட்டது.

“சின்னயன் சாமி” “ஓரமா வந்து நில்றா” சின்னயன் எதற்கு என்று விளங்காமல் பாதையின் ஓரம் நின்றார். இறைத்துக் கொண்டிருந்தவர்கள் இறைப்பெட்டியைத் திரட்டிக் கட்டிய ஈரமடைமீது வைத்துவிட்டு இந்தா வர்றோம் என்றார்கள்.

இறைத்து இறைத்து அந்த இடம் எல்லாம் சேறாக இருந்தது. இறைப்பொட்டியிலிருந்து நீர் வடிந்துகொண்டிருந்தது.

“டேய் நீ சாமியாடியன்னா பெரிய புடுங்கி யாடா,  ஒன் சாதி மயிரு என்னடா”

“...........................”

“டேய் கேட்டதுக்கு வாயத்  தொறந்து சொல்லு”

“அண்ணே ஒரு அப்பு அப்பிக் கேளுண்ணே” சொல்லியபடி வேர்வை மினுங்க கரையேறி வந்தபடி கேட்டான்.

“சொல்றா கூதிமவனே”

“பறையன்”

“பறையன்தான. ஒனக்கும் அந்தக் கருப்பசாமிக்கும் என்னடா சம்பந்தம்”

“...........................”

“வாயத் தொறந்து பதில், சொல்லு. இல்ல அப்படியே குத்தி கொளத்தில் எறிஞ்சிடுவேன்”

“எங்க அப்பா காலத்திலிருந்து...”

“ஒங்க அப்பன் காலத்திலிருந்து சாமியாடியா? தோட்டி வேலை செஞ்சேன்னு சொல்லு”

“...........................”

“ஆமாவா இல்லையா”

“ம்ம்”

“ஏண்டா எடுபிடி, பிள்ளைமாரு கட்டுன கோயிலுக்கு  நீ  எப்படிடா  சாமியாட  முடியும்”

“சாமி அனாதரவா நிக்கிறத பாத்து...”

“அவங்க விட்டுவிட்டு ஊர காலி பண்ணி போயிட்டா நீ வேட்டை துள்ளுவியா நாயே. அதுவும் ஊராடி வர்ற ஒனக்கு குளிச்சிவிட்டுப் போச்சா, ஒன்னோட பறைச்சாதிக்கில்லடா ஆடனும். நீ வெள்ளாளனுக்கு பொறந்தியா, சொல்லுடா தாயோளி.”

சுண்டிப் போய் அவர்களையே பார்த்தார் சின்னப்பன்.

“கூதிமவனே இன்னைக்கு ராமுழுக்க நீ இறைப் பொட்டி போடனும், அந்தச் சாமி வந்து உன்ன எப்படிக் காப்பாத்துறான்னு பாக்கிறேன்.

ரா முழுக்க இறைப்பொட்டியில்தாண்டா நீ சாமியாடனும், அந்தமயிரு சாமிய இன்னக்கி நான் பாக்கனும்டா”

சின்னப்பன் கக்கத்தில் வைத்திருந்த தோல் உருட்டைப் பிடிங்கி பிடறியில் ஒரு அடி வைத்துப் பள்ளத்திற்குத் தள்ளினார் பரமத்தேவர்.

“மீசையை முறுக்கிவிட்டிருக்கத் தொங்க விடுடாபன்னி பரதேசி, நறுக்கிப் போடுவேன் நறுக்கி, யாருக்கு யாருடா சாமியாடுறது. நீ சாமியாடுனாபெரிய புழுத்தியா இப்ப ஆடு, உன்ன செருப்பால அடிக்கிறேன் அந்தசாமி, என் மயித்த தொடுறானான்னு பாக்குறேன்”

மறுபடியும் பிடரியில் அடித்துத் தள்ளினார். இறைப்பொட்டி போய்வரும் இடமெல்லாம் ஈரமாகஇருந்தது. கச்சல் மண்ணுக்கு ஈரம்பட்டால் வழுக்கும்.

“இறைப்பொட்டி கயித்த பிடி, இல்ல இங்கயே உன் தலைய பொங்க வைக்கிறேன். பறப்பயலுக்கு என்ன துணிச்சல், டேய் நீங்க ரெண்டுபேரும் மாறிமாறி கயத்தப் பிடிங்கடா அவன் தாவு தீரணும் எந்த ஜென்மத்துக்கும் அவன் சாமியாடக் கூடாது.”

சின்னப்பனுக்கு ஆத்திரமும் பயமும் பதட்டமும் நிராதரவும் லேசான நடுக்கத்தைக் கொடுத்தது. அவமானம் கூனிக்குறுக வைத்தது. இனி சாமியாட மாட்டேன் சாமி என்று காலைப் பிடித்துக் கெஞ்சலாமா என்று தோன்றியது.

கால்களைப் பிடித்தாலும் அவர்கள் விடப்போவதில்லை என்று தெரிந்தது. பகலாக இருந்தால் என்ன சின்னப்பா நீ இங்க என்று கேட்பார்கள் நியாயத்தைச் சொல்லலாம் மனைவிபிள்ளைகளாவது ஓடி வருவார்கள், ஆளம்போடு வரிந்து கட்டி நிற்கிறார்கள். பொறியில் மாட்டிக் கொண்ட எலியாக மனம் தவித்தது.

ஒரு நாதியும் வராத இரவாகிவிட்டது. ‘கருப்பசாமி நான் என்ன செய்ய, எதற்குப் பித்தேறி உன் காலடிக்கு வந்தேன்?’ எதிராளி கழுவத்தேவனுடன் இறைப்பெட்டி பிடித்தார்.

மதகின் மீது பரமத்தேவரும் சிவனாண்டியும் அமர்ந்து இறைப்பொட்டி வீசி நீரை முகர்ந்துகண்ணார் மடையில் ஊற்றுவதையே பார்த்தனர். அது சோளக்காட்டிற்குப் பாய்ச்சலாகப் போனது.

“கூதிமவனே, நாளைக்கு உதடு மொலுக்கண்ணு இருக்கனும். மீசைய வச்சா நீ வலியசாதியின்னு நெனப்பாடா உனக்கு, சாதிகெட்ட நாயி. பறையன்னா பறையன் மாதிரி இருக்கணும். இல்லையன்னா காணா பிணமாக்கிருவேன்.

நீ சாமியாடிங்கிற பேருல அந்த ரெண்டுகுழி கோயில் நெலத்தை அமுக்கப் பாக்கிறயா தேவிடியா சிறுக்கி மவனே, நீ எதுக்குச் சாமியாடுனன்னு தெரியாதா நாதாரிப்பயலே.”

கோயிலுக்கு நிலம் இருப்பது நினைவிற்கே வரவில்லை. நிலம் இருக்கிறது என்பது தெரியும். கணபதியாபிள்ளை இருந்த காலத்தில் உழுது விதைத்தார். கருவேலமரங்கள் முளைத்து தெற்கே கடலாகக் கிடக்கிறது அதன்மேல் நினைவே இல்லை, கைவிடப்பட்டு நின்ற கருப்பசாமி மட்டும்தான்எப்போதும் நினைவிற்கு வந்தார்.

இறைப்பொட்டி போடப் போட சின்னப்பனுக்கு மூச்சிறைத்தது. சின்னப்பன் வாலிபனாக இருந்தபோது போட்டது, கை சலிக்கத் தொடங்கியது. இரவு தன் அவமானங்களை வெளியில் தெரியாமல் மறைப் பதுபோல இருந்தது. உடம்பில் வேர்வை ஊற்றாகக் கிளம்பியது.

கழுவனுக்கு முப்பத்தைந்து வயதிற்கு உள்ளாகத்தான் இருக்கும். ஆளும் திடகாத்திரமாக இருக்கிறான். அவன் நீரை கவிழ்த்து பெட்டியைத்தூக்கி வெட்டுக்கிடங்கில் வீசுவதிலேயே வேகம் காட்டினான்.

முடியாமல் தோற்றவனை, திரும்பத் திரும்ப மல்லுக்கு அழைத்து வீழ்த்தி மிதித்துச் சுகம் காணுபவனைபோல “ம்ம்... இழுடா... ம்ம்... இழுடா” என்று கேலியோடு வேலைக்குள் இழுத்தான். “அள்ளி எறிடா போத்தி அடுத்த எடம் பாத்தி” இறைப்பெட்டி நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான்.

இறுக்கிப் பிடித்து நீர் இறைத்து ஊற்றிச் செல்லும் அசைவுக்கு ஏற்ப பாடினான், இறுக்கிப் பிடித்து நீர் அள்ள அள்ள உள்ளங்கை காந்தத் தொடங்கியது.

நீரை அள்ளி இறைப்பெட்டியை  மேலே இழுத்து வரும்போதெல்லாம் கால்களை இழுத்து கழுவனின் கால்கள் தடுமாறாமல் உறுதியாக நின்றன.

இந்த வயதில் கழுவனோடு இறைத்து சிவனாட்டி யோடு இறைத்து வலுவெல்லாம் இழந்து வீழப் போவதை நினைத்தாலும் கால்கள் நடுங்கின.

ஆனாலும் அகதிபலம் மிச்சம் மீதி இருந்ததால் நீரை அள்ளி ஊஞ்சல் போலக் கொண்டுவந்து கவிழ்த்தி அதே வேகத்தில் வீச முடிந்தது.

ஆதரவற்று நிற்கிற தனிமை, வேதனையைக் கொட்டுவதற்கு இல்லாத ஆதரவெல்லாம் வாழ்வ தற்கான ஆசையை அழிக்கத் தொடங்கியது. முடியாது என்று முரண்டு பிடித்திருந்தால் பெரிய மனிதன் என்று பாராமல் விழப்போகிற அடிகள் நெஞ்சுக்குள்திடுக்கிடச் செய்கிறது.

இறைத்தவண்ணம் அப்படியே செத்துப்போனால் நிம்மதி ஏற்படும் என்று தோன்றி யது. சாவு வரட்டும் என்று இறைக்கத் தொடங்கினார். குளம் மேலும் கீழும் அசைவதுபோல இருந்தது. நிலைகொள்ளாது ஒரு பக்கம் குளம் கவிழ்வதுபோல ஆடியது.

ஆள்மாறி ஆள்மாறி இறைத்தார்கள், பரமத்தேவர் பாய்ச்சலைக் கண்டு வந்து அமர்வதும் தொடர்ந்தது. சின்னப்பன் வைராக்கியமாக இறைத்தார் அவர்களில் ஒருவர் மாறி ஒருவர் தூங்கவும் செய்தனர்.

வானில் நட்சத்திரங்கள் கிழக்கில் மேலேற மேற்கில் நட்சத் திரங்கள் இறங்கின. இன்னார வெள்ளி, தார்க்குச்சி வெள்ளி, கட்டில்கால் வெள்ளி, கோலவெள்ளி காலத்தைக் கடத்திக்கொண்டிருந்தது.

விடியற் காலைஇறைக்க வலுவில்லாமல் சரிந்து விழுந்தார்,முட்டிகள் உடலைத் தாங்க முடியாது துவண்டன.தண்ணீரை அள்ளி குடித்துவிட்டு மீண்டும் இறைப் பொட்டி கயிற்றை வைராக்கியமாக எடுத்துப் பிடித்து வெட்டுக் கிடங்கில் வீசினார். கால்களை இறுக ஊன்றி இறைத்தார்.

வீட்டில் வந்து படுத்தவருக்குத் தூக்கம் வரவில்லை, கூரை முகட்டைப் பார்த்தபடி இருந்தார். உயிரோடு இருக்கவேண்டுமா என்ற வேதனை நெஞ்சை நிரப்பியது. முடியாது என்று ஓடிவந்திருக்க லாமா என்று தோன்றியது.

ஓடி வந்திருக்கவும் முடியாது. அப்படி முயன்றிருந்தால் அடித்து உதைத்து இழுத்து வந்து இறைப்பொட்டி போட வைத்திருப்பார்கள். அது இதைவிட அசிங்கமாகி இருக்கும். ஏனோ அந்தச் சமயத்தில் ஓடத் தோன்ற வில்லை, நான்கு இறைவைப் போட்டதும் போடா என்று அனுப்பிவிடுவார்கள் என்று ஒரு அற்பத்தனமும் தோன்றியது.

மீசையைத் தொட்டபோது முகமே துடித்தது, அடுத்த ஆண்டு வேட்டை துள்ளி துடியான சாமியாடியாகச் சுழன்று ஆடிவர நினைத்த கனவு கலைந்ததை நினைக்க நினைக்கக் கண்ணீர் வழிந்தது.

நான்கு நாளாக உண்ணுவதற்கு மனதே வரவில்லை, பெண்பிள்ளைகள் இரண்டுபுறம் அமர்ந்துசின்னய்யன் கையை நீவிவிட்டார்கள், சின்னவள்சாப்பாட்டுத் தட்டை மடியில் வைத்து “ரெண்டுவாய் சாப்பிடுப்பா” என்று கெஞ்சினான்.

அடிபட்டுவந்ததால் சாப்பிட்டிருந்தால் சாப்பிட்டிருக்கலாம் போகப்போகத் தன்னையே வெறுத்தார். உணவை உண்ண ரோசம் இடம் கொடுக்க மறுத்தது. பிள்ளைகள் பேரன் பேத்திகள் எவ்வளவோ கெஞ்சியும் சாப்பாட்டை வேண்டாம் என்றார், தான் இன்னும் உயிரோடு இருக்கவேண்டுமா?

பதினேழுவயதில் சாமியாடியாக எடுத்த இந்த வாழ்வை எப்படி விடுவது? அவமானம் மட்டுமே அழுத்திக்கொண்டுஇருந்தது. சாப்பாட்டில் மனமே செல்லவில்லை, சாப்பிட நினைத்தாலே நெஞ்சமெல்லாம் அதிர்ந்தது.

முடியாது என்று முரண்டு பிடித்திருக்கவேண்டும் அடித்துக் கொன்றிருந்தால் அந்த நேர வலியோடு அடங்கி நிம்மதியாகப் போயிருக்கும், நிம்மதியற்று இப்படிக் கிடக்க வேண்டியிருக்காது.

கோயில் நிலத்தை வெட்டி சுத்தம் செய்திருப்பதாகச் சொன்னார்கள், மறுகொடை விழா அடுத்தச் செவ்வாய்க்கிழமை எடுக்கப் போவதாக ஒரே பேச்சாக இருந்தது, அலுக்குப் பலுக்கு இல்லாமல் ஊர் அடங்கி இருந்தது.

தலைமாட்டில் அமர்ந்திருந்த வேம்பாளிடம் பெரியவனையும் சின்னவனையும் வரச் சொன்னார்.

இருவரும் வந்து அமர்ந்திருந்தார்கள், சின்னப் பனுக்குக் காது அடைத்தது விடவே இல்லை. மெல்ல “பெரிய சாதி இருக்கிற ஊருல சின்னசாதி வாழ்றது கஷ்டம்பா, டவுணுபக்கம் போயி நல்லபடியாபிழைக்கிறதுன்னா பிழைச்சுக்கோங்க, இனி இங்க நிம்மதியா இருக்க முடியாது” என்றவர் கண்மூடி மூச்சை இழுத்து விட்டார்.

நான்கைந்து மூச்சு வாங்கியப் பின் “கால் ஆணி கண்டவருக்குச் செருப்பு தச்சு தரமுடியல, வந்தாரன்னா ஊசி டப்பாவில அம்பது ரூவாயப் போட்டு வச்சிருக்கேன், எடுத்துத் தந்திடுங்க” என்றவர் பரணியில் வைத்திருந்த தோல் உருட்டைப் பார்த்தார். கண்களை மூடவேண்டும் போல் இருந்தது. சின்னவனைப் பார்த்து “யாரு கருப்பசாமிக்கு கோமரத் தாடியா வர்றது” என்றார்.

“கழுவன்” என்றான் மகன்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer