பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்


பகிரு

கொட


ஒரே குடையில் முட்டிக்கொண்டு நிற்பதுபோல்
தம்பியும் நானும்
ஒரே முலையில் பால்குடித்தோம்
கடித்திழுக்க முடியாதபடி
விறைத்திருந்தன குடையின் காம்புகள்
நீருக்குள் படகாக இருந்த உருளிகள்
தலைகீழாய்க் கரையேறிக்
குடையாகிக் கொள்கிறது
எழுத்துப்பிழைகளைத் திருத்திக்கொள்ளாதவரை
எவ்வளவு பெரிய ‘குடை’யானாலும்
நனைந்துகொண்டுதானிருப்பீர்கள்
இல்லையே,
குடையென்று எழுதினால் விரியும் அதேதான்
பேச்சுவழக்கில் ‘கொட’ என்றாலும் விரிகிறது
அதைச்சொல்லி ஒன்றுமில்லை
அந்தக் கைத்தடியில் அப்படியொரு பொத்தானைக் கண்டறிய
நமக்கு இத்தனை ஆண்டுகள் பிடித்திருக்கிறது.

பளிச்சென்ற தாமிரப் பற்களுக்கு


நீட்டிய விரல்கள்
தோட்டாக்களென வியனோக்கிப் பாய்கிறது
அவர்களால் மேலும் சில சப்தங்களை
செலவுசெய்ய முடிந்ததே தவிர
குலுங்கும் வயிற்றை ஒன்றும் செய்யமுடியவில்லை.
விரட்டுவதற்கு ஆரம்பித்தவர்கள்
பிற்பாடு சிரிப்பை அடக்கினாலே போதுமென்றாகினர்
வயிறு வலிக்க,
வாய் நோக,
பற்கள் தெறிக்க
தரையில் விழுந்து புரள்வதைக் கண்டு
உத்தரவிட்ட அதிகாரிகளில்கூட
ஒருசிலருக்கு
பொத்துக்கொண்டுதான் வந்தது
முக்கால்வாசி ஜனத்தொகை மூர்ச்சையான பின்னும்
சிரிப்பலைகள் எதிரொலித்துக்கொண்டேயிருந்தது
இவ்விளம்பரம் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகி
பார்த்தோரெல்லாம் ‘வாய்விட்டுச் சிரித்தனர்’
இவ்வளவுக்கும் காரணமானவன் எங்கே
அவன்தான் முதலில் ஆரம்பித்தவன்
அவனையும் குறைகூற இயலாதுதான்
பேச்சுவார்த்தை என்றழைத்துவந்து
அவ்வளவு பெரிய துப்பாக்கியை நீட்டினால்
யாருக்குத்தான் சிரிப்பு வராது.

திரி ஊதும் பூமி


முகம் கருகிய திரியைத் தூக்கியெறிந்ததுதான்
பெருந்தவறு
வானம்வெட்டும் சமயம் பார்த்து
துணிகாயப்போட்டவர்களைப் பயமுறுத்தும்
அதுதான்
ஊருக்குப் பொதுவாய் மாட்டிவைத்த மின்விளக்கு
ஒருவேளை எண்ணெய் தீர்ந்துவிட்டதோவென நிரப்புவதற்கு
உயரமான என்னை அழைத்தார்கள்
வரையப் பழகுவதாய்
விட்டத்தில் கோணல்மாணலாய் கோடு வரைவதும்
பின் அழிப்பதுமாய்
விளையாடிக்கொண்டிருந்தவனிடம்
திரியை நன்றாக நிமிர்த்திவிட்டு
சீக்கிரம் இறங்கி வா வென்று
எவ்வளவோ முறை அழைத்துவிட்டோம்
இப்போது வீட்டுக்குள் சரளமாய்
பேசிக்கொண்டிருந்த டியூப்லைட்டும்
திக்க ஆரம்பிக்கிறது
என் செய்வேன்
நம்பித்தானே நடுவீட்டில் மாட்டிவைத்தோம்
கொளுத்திய விளக்கு
காற்றில் முங்கியெழுவதைப்போல்
தன் கழுத்தையும் அசைத்துப் பார்க்கிறது
கொண்டைச்சேவல்
விளக்கினுள் உபரியாக விஞ்சிய
ஒளியை அள்ள
கைகள் போதவில்லை,
நேரம் ஆக ஆக
அறைமுழுதும் வழிந்தோடும் மெழுகுவர்த்தியை
மின்சாரம் வந்ததென ஓங்கி அறைகிறோம்
மிகுந்த எதிர்பார்ப்போடு
நெருங்கிய விட்டில்
வேறுவழியின்றி
அணைந்த தீக்குச்சியின் கரியை அள்ளி
முகத்தில் பூசிக்கொண்டு
முகம் கருகியதாய் கீழே விழுந்தது.

ஊர்ந்துபோகும் பருவம்


இளைஞனாக இடையில் நுழைந்ததாக
வசவுகள் வாங்கியபடி கடைசியில் வந்து நிற்கிறது குழந்தை
அதன் கன்னத்தைக் கிள்ளி
கையிலொரு மிட்டாயைத் திணிக்கிறாள் செவிலி
அது சப்பிக்கொண்டே வரிசையில் மெதுவாக
முன்னேறுகிறது
மேலும் முன்னே செல்லும் மூத்தவர்களை
வேகமாக நகரச்சொல்லி சத்தமிடுகிறது
வரிசையின் முதல் ஆளாக இருமிக்கொண்டே நிற்கும்
வயதானவரிடம்
மருந்தைத் தரும்போதுதான் பார்க்கிறாள்
தான் திணித்த மிட்டாயை
கிழவன் சூப்பிக்கொண்டிருப்பதை
அதைப்பிடுங்கி மீண்டும் அதே குழந்தையிடம்
ஒப்படைப்பதற்காகச் சென்றாள்
அதை அங்கே காணவில்லை
‘வரிசையென்பது முன்னோக்கித்தானே’
குழப்பம் அடங்காதவள்
இந்த மிட்டாய் எப்படி உன்கையில் வந்ததென
அந்த குழந்தையிடமே கேட்டாள்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2019 Designed By Digital Voicer