செவ்வணக்கம்!
தொண்ணூறுகளின் சிற்றிதழ்களை எமது சிற்றூருக்குத் தருவித்து வாசிக்கும் பழக்கம் இருந்தது. எத்தனைச் சிற்றிதழ்களை அறிகிறோமோ அத்தனைக்கும் சந்தா கட்டிவிடுவது வழக்கம். அக்காலத்தில் நானும், மவ்னம், என்றொரு சிறுகவிதையிதழ் ஒன்றை நடத்தியதால், ‘மாற்றுப் பிரதியாக’ பல இதழ்கள் எனக்குக் கிடைக்கப் பெற்றன.
அந்த வகையில் கவிதாசரண் என்ற பல்சுவை இதழ் ஒன்றும் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. பொதுவாக சிற்றிதழ்கள் என்பவை ஒரு மாற்றுப்பண்பாட்டுச் சிந்தனையை முன்னெடுக்கும் உண்மையான மாற்றுகள் என்று அப்போது நாங்கள் நம்பினோம். மேலும் சிற்றிதழாளர்கள் அனைவரும் தற்கொலைப் படைக்குச் சமமானவர்கள் என்று சுகன்
உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் நான் சொல்லிவந்தேன். அக்களத்தில் உருவான படைப்பாளர்களில் ஏராளமானோர். பின்னாளில் சிறந்த ஆளுமைகளாக மலர்ந்தனர். இத்தகைய மாற்றுச்சிந்தனை மற்றும் பண்பாட்டுக்குறிகளைக் கொண்டிலங்காத இதழ்களை சிற்றிதழ்கள் என்ற வகைமையில் தனிச்சுற்றுக்கு மட்டும் என வெளியிடப்பட்டாலும் - நாங்கள் ஏற்பதில்லை.
ஆரம்ப கால கவிதாசரணும் அங்ஙனமே வெளிவந்தது. ஆனால் அதன் ஆசிரியர் கவிதாசரண் தன் வயதையும் மீறி இளமைத்துடிப்புடன், கற்கும் பேராவலுடன் பல்துறை இலக்கியப் பள்ளிகளை ஆர்வமுடன் அறிந்துகொண்டே வந்தார்.
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கவிதாசரண் இதழில் கவிதாசரண் ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் ஒரே பாய்ச்சலில் அசலாக இந்த, மாற்று என்ற வெளிச்சத்திற்குள் வந்து விழுந்திருந்தார். அதன் பிறகு கவிதாசரண் ஒரு தீவிரமான மேலாண்மைகளின் எதிர்ப்பிதழாக மாறியது.
இந்த மாற்றத்திற்குப் பின்னரே தமிழகத்தின் முக்கிய படைப்பாளுமைகள் கவிதாசரணில் எழுதத் தொடங்கினர். நாங்களும் நிறைவான தோழமை கொள்ள இதுவே வழிவகை செய்தது. இப்படித் தொடங்கிய எங்கள் நட்பு உடனே பதில் கடிதம் எழுதவில்லையெனில் சிறு குழந்தையைப் போல் கோபித்துக்கொள்கிறீர்களே! என வளர்ந்து, எழுத்தாளர் சுஜாதாவை சந்தியுங்கள், அவர் உங்களது முதல் கவிதை நூலை அச்சிட உதவுவார் என்று
ஆற்றுப்படுத்தியதில் இன்னும் வலுவடைந்தது.
பின்னர் நான் பிழைப்பின் பொருட்டுத் தஞ்சைக்கு இடம்பெயர்ந்தேன். என் எழுத்தியக்கம் குறையத்தொடங்கியது. ஆனால் கவிதாசரண் ஒரு அசுர பலத்துடன் விரிந்து பரவத் தொடங்கியிருந்தது. எந்தச் சமரசங்களும் இன்றி தன் சொந்தப் பணத்தைச் செலவிட்டு, தொய்வில்லாமல் இதழ்களைக் கொண்டு வந்துகொண்டிருந்தார். இதழாய் எழுத்தியக்கமாய் என்கிற அறிவிப்போடு தன் வாழ்நாளின் இறுதிவரை அசல் மாற்றாக ஒடுக்கப்பட்ட அனைவரின் விடுதலையைக் கோரும் தொனிக்கும் படைப்புக்களமாக கவிதாசரண் தன் இதழை வளர்த்தியாக்கி வந்தார்.
இவற்றைத் தவிர, அதாவது இதழ் தொடர்பான செயற்பாடுகள் தோழமைகள் தவிர்த்து, கவிதாசரண் என்ற அந்த மாற்றுச் சிந்தனையாளர் குறித்தும் அவரின் தனிப்பட்ட வாழ்வு குறித்தும் அவரின் இயற்பெயர் உட்பட எதுவுமே எமக்குத் தெரிந்ததில்லை. கவிதா சரணின் திருமதி உடல் நலமின்மையால் அவதியுறுகிறார் என்றும், பின்னர் காலமான செய்தியும் வந்தன. வேலைச் சுமைகளால் எமக்குள் இறுக்கமான மௌனமே நிலவியது.
காலம் நிர்தாட்சண்யமாகத் தன் கடமையைச் செய்யும்தானே…? செய்தது. 22.08.2016 ஆம் நாளிட்டு எனக்கொரு மடல் கவிதாசரணிடமிருந்து வந்தது, அவரின் நூல் ஒன்றுடன். வணக்கம் கவிஞர் இலக்குமி குமாரன், தீரும் காலங்களில் தீராமையாகச் சில பெயர்களில் ஒன்று வந்து நெருக்கும். சில போதுகளில் கவிதைக்கான மானுடப்பெயரைச் சொல்லிவிட்டால்தான் என்னவென்று மனம் கிடந்து தவிக்கும். இரண்டுக்குமான பொதுமையாக இலக்குமி குமாரன் இருப்பதைப் பொருட்படுத்த நேர்ந்தமைக்கு மகிழ்ச்சி.
இந்நூல் இருமுறை அனுப்பப்பட்டு எனக்கே திரும்பிவிட்டது. இம்முறை உங்களுக்குக் கிடைக்கும் கிடைக்கவேண்டும்.
இதுபோலொரு நூல் எனது எழுதியல் திட்டமிடலில் ஒருபோதும் வடிவமைப்புக்கு வந்ததில்லை. என்னை மீறி வந்த கனவு என்னைத் தின்று தீர்த்த நினைவருக்கு, என்கலாமா? மனமும், உடலும், பொருளும் கந்தரகோலமான ஒரு தருணத்தில், வெறுமையில் அடையாளமற்றுப் போவதைவிட இந்த உப்புக்கரைசலில் நீந்திக் கரைசேர்வது தேவலையாக இருந்தது. அதனாலும் கூட இந்த நூல் வகைப்பாடில்லாமல் வந்தடைந்தது. இதன் கற்பிதத்துக்கும் எதார்த்தத்துக்கும் இடை வழியாக பட்டுப்பந்தின் அரூப இழையை நடைபாவாடையாக்கி நலங்கிட்டுப் பார்க்கலாம். இலக்குமி குமாரனிடம் இந்தத் தருணத்தில் இதனைக் கேட்கத் தோன்றுவது தப்பிதமாய் இருத்தலாகாது. அவர் இதை வாசிக்கட்டும். ஊடாக வரும் தனது மனப்பதிவை சார்பாகவோ, எதிராகவோ - குறித்தனுப்பட்டும். என்னை வந்தடைந்த சிறப்புக் குறியீடாக அது நேர்த்திசெய்து கொள்ளட்டும், இயலவில்லையெனில் அவர் பொருட்படுத்தாமைக்குள்ளாகட்டும்.
அன்புடன்
கவிதா சரண்.
தன்னால் தாள்களில் நேரடியாக எழுத இயலவில்லை என்றும், தட்டச்சு செய்ய மட்டுமே இயல்கிறது என்றும் தொலைபேசி உரையாடலின்போது சொன்னார். தான் திருச்சி வந்துவிட்டதனையும், தன் அந்திமத்தில் செய்யவேண்டிய பணிகள் குறித்தும் சிறிது சொன்னார்- அந்த உரையாடலில். அவர் அனுப்பித் தந்த, ‘அலர் எனும் மகா உன்னதம்’ என்ற தன்வரலாற்றுக் குறிப்புகள் நிறைந்த புதினத்தைப் போன்ற வகைமை சாராத - சற்றே நான் லீனியர் தன்மை கொண்ட - ஆக்கமாக அமைந்த அந்த நூல் பற்றி என்னிடம் எதிர்பார்த்த அந்தத் திறனாய்வுக்கட்டுரையை, என் மகன் பெருவிபத்தொன்றில் சிக்கியதால் அவர் கேட்டபொழுதிலும் மட்டுமல்லாமல் அவர் காலத்திற்குள்ளாகவும் என்னால் எழுத இயலாமல் போய்விட்டது. இது குறித்துப் பின்னாளில் தொலைபேசியில் சிறிது வருத்தமுற்றார்.
இருந்தாலும், நானும் கவிஞர் கவிஜீவனும் அவரை திருச்சியில் அவர் வீட்டில் சந்தித்தோம். மிகவும் தளர்ந்திருந்தார். உதவிக்கு அவரின் வயதான மாமன் மகள் உடனிருந்தார். அந்திமம் கவிழ்ந்திருந்த அந்த வீட்டின் தனிமையொளியில் நாங்கள் அனைவரும் இட்லியும் சாம்பாரும் உண்டோம். இன்னும் சில இதழ்கள் (கவிதாசரண்) கொண்டு வந்துவிடலாம் என்ற நம்பிக்கையுரைத்தார். மோசமான இழுப்பு நோயால் துன்புற்றவண்ணமிருந்தார். ‘அலர் என்னும் மகா உன்னதம்’ என்ற அந்தத் தன் வரலாற்று ஆவணத்தில் அவரைப் பற்றியும், அவரின் பால்யம் குறித்தும் விசாலமான தியாக வாழ்வு தொடர்பாகவும், அறிந்துகொள்ள இயல்கிறது. அதனினும் மேலாக தான் தன் வாழ்வில் தவறவிட்டிருந்த அலர் என்னும் அந்தப் பெண்மணியை - தனது 80வது வயதிலும் அவரின் 68வது வயதிலும் - தன் அந்திமத்தில் சந்தித்து வாழ்வில் பெற்றிராத பெரும் பேறுகளைப் பெற்றதாக மகிழ்கிறார் கண்ணீர் மல்க. அவர் பற்றிய நினைவுகளைச் சொல்லிச் செல்கிறபோதும், பின்னாளில் அவரைச் சந்தித்துப் பெற்ற அனுபவங்களையும் மனத்தவிப்புகளையும் பதிவு செய்கிறபோதும்தான் அந்நூல் ஒரு புதினத்தின் தன்மையைப்பெறுகிறது. வாசகரையும் தீராச்சோகத்தில் ஆழ்த்தும் அருமையான நேர்த்தியான கதைசொல்லல் அவர்க்குச் சாத்தியமாகியுள்ளதை வாசிக்கிற யாரும் உணர இயலும்.
அந்திமத்தில் அனைவர்க்கும் வருகிற விசனம்தான். என்ன வாழ்ந்தோம்… சரியாக வாழ்ந்தோமா எதற்கென வாழ்ந்தோம்… நமது வாழ்வின் செய்திதான் என்ன என்பன போன்ற கேள்விகள் முளைத்து விலா எலும்புகளைத் துளைக்கின்றன.
எனவே, அறுபது வயதைத் தொட்டவுடன் ஒரு விரைவு கூடிவிடுகிறது… அது போராட்ட வாழ்வாக இருந்தாலும் இலக்கிய வாழ்வாக இருந்தாலும். இப்படியொரு மனத்தவிப்பில் எழுதப்பட்ட வாக்குமூலமாக இந்த நூல் அமைந்துள்ளது. நிற்பது… காலங்கடந்து நிற்பது… காலத்தை ஊடறுத்துப் பயணித்து நின்று நிலைப்பது, என்ற லேசான சுயநலம் என்பது திட்டமிடப்படாமலேயே பொதுவெளியில் புழங்க வரும் ஒவ்வொருவருக்கும் இருக்கும்தான் இழையோடி… கல்லில் நிற்க இராசராசன்களும் இல்லை. பல்லவர்களும் எனப்படுவது மக்களின் சொல் - இந்தத் தூண்டல் தவிப்பாகிவிடுகிறது அந்திமத்தின் தொடக்கத்தில்… கவிதாசரண் தன்னை ஒடுக்கப்பட்டோரின் போராட்ட வரலாற்றில் கரைத்துக்கொள்ள முழுமனதுடன் விரும்பியே தன் வாழ்நாளைச் செலவிட்டார். அவரின் போர்குணமிக்க அறிவுத்தேடலை ‘அலர் எனும் மகா உன்னதம்’ எனும் அந்த நூலில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பதிவு செய்கிறார். அவரும் அவரது துணையராகிய கவிதா சரணும் உரையாடிக்கொள்ளும் ‘உலகத்து சாமானியனை விடவும் இந்தியச் சாமானியன் தீண்டாமையைப் பிடிமானமாகக் கொண்ட, சாதிங்கற கூடுதல் விலங்கைப் பூட்டிக்கொண்டிருக்கிறான், என்பதைத் தவிர மற்றபடி உலகம் முழுக்கவும் இன வேற்றுமை, நிறவேற்றுமை, மொழி வேற்றுமை, அதிகார அத்துமீறல், எளியோர் மீதான வன்கொடுமை, தேசிய இன எழுச்சிக்கான ஒற்றைத்துவ ஒடுக்குமுறை, உலகளாவிய பண்பாட்டுச் சீரழிவை முன்னெடுக்கும் ஊடக வாணிகம், நுகர்பொருள் வாணிக காலனியாக்கம், என பஞ்சைகளைக் குப்பை கூளமாக்குகிற வல்லடித்தாக்குதல்கள் எல்லாம் நடக்கத்தான் செய்கின்றன. ஒரு விலங்கு தன்னோட இரைக்காக மட்டுமே கொலை செய்கிறது. ஆனா மனுசன் மட்டும்தான் கொல்லுகிற சந்தோசத்துக்காகவே கொல்லுகிறவன். உலகத்துல சமத்துவத்த நிலைப்படுத்துகிற அதிகாரமோ, அதிகாரத்தை ஏவல் நாயாக்குகிற சமத்துவமோ இன்னும் எட்டாத கனவாத்தான் இருக்குது…’ என்ற பகுதி இதற்குச் சான்றாக அமைகிறது. மறுக்கும், மீறும், கலகம் செய்யும் படைப்புகளை ஆர்வத்துடன் தனது இதழ்களில் பதிவு செய்ததோடு மட்டுமில்லாமல் ஒடுக்கப்பட்டோருக்காகத் தன் சொத்துக்களைச் செலவிட்டு அறக்கட்டளை நிறுவ விழைவதாக இந்நூலில் ஒரு குறிப்பு வருகிறது. ‘என்னிடத்தில் ஒரு கோடியே முப்பத்திரண்டு லட்ச ரூபாய் முகமதிப்புள்ள நூல்கள் முடங்கியுள்ளன. எல்லாம் நானே எழுதி வெளியிட்ட நூல்கள். அவற்றை வெளியிடத் தெரிந்த அளவுக்கு விற்று முதலாக்கும் தந்திரத்தைக் கற்கவில்லை. விற்பனைக் கழிவு, போக்குவரத்துக் கட்டணம், அனாமத்துச் செலவு எனச்சுமார் 40% கழிந்து போனாலும், ஒரு எண்பது லட்ச ரூபாய்க்குக் குறையாமல் அதன் விற்பனை மதிப்புதேறலாம்.’
‘எனக்கொரு வீடு இருக்கிறது. நானாகச் சம்பாதித்துக் கொண்ட வீடு. எல்லாவற்றையும் கணக்கிட்டு ஒரு இரண்டு கோடி தேற்றினால், ‘ஒடுக்கப்பட்டோர் நலன்களை மதிப்பிடுவதற்கான அறக்கட்டளை’ ஒன்று நிறுவலாம். இந்திய சமூகத்தில் கூடியமர்ந்து கூச்சல் போடக்கூட ஒரு பொதுக்களம் இல்லை. என் அறக்கட்டளை அதற்கு உதவலாம்.’ என்ற பகுதியும் ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட கவிதாசரணின் மனம் வெளிப்பட்டு அவரை வணங்கச் செய்கிறது. அந்த அறக்கட்டளை நிறுவப்பட்டதா எனத் தெரியவில்லை. நிறுவப்பட்டிருக்கலாம். அலர் என்ற உன்னதம் அதனை நிர்வகிக்கலாம்.
‘இதழாய் எழுத்தியக்கமாய்…’ வாழ்ந்த கவிதா சரணின் வாழ்க்கையும், இதழ்ப் பணியும் ஒரு கனலும் தீக்கங்கு போல தமிழ் இலக்கிய / இதழியக்க வரலாற்றில் என்றும் நின்றெரிந்து; ஒடுக்கும் அனைத்து மேலாண்மைகளுக்கும் எதிராகக் காலத்தை ஊடறுத்து நின்று நிலைக்கும் என்றே நம்புகிறேன். அவர்க்கு எமது மற்றும் மணல்வீட்டின் வீரவணக்கம்.