கஞ்சித் தண்ணீர்

என். ஜம்புநாதன்

பகிரு

(திரு. நல்லசிவனின் Rice Water நாடகத்தின் தமிழ் வடிவம்)

நாடகப் பாத்திரங்கள்:

இரோம் ஷர்மிளா : ஆயுதப்படைக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கிய 1958 சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி கால வரையறை அற்ற உண்ணாவிரதத்தை மேற்கொண்ட, மணிப்பூரின் இரும்பு மனுஷி. இந்த நாடகத்தின் கதை உயிர் பெறும்போது, அதாவது 2010 இல் அவளது வயது 38.

இரோம் சாக்கி : ஷர்மிளாவின் தாயார். 2010 இல் 79 வயதானவள்.

காட்சி : 1

இரோம் ஷர்மிளாவின் தாயார் இரோம் சாக்கி ஒரு தாழ்வான முக்காலியில் அமர்ந்திருக்கிறாள். அவளுக்கு முன்னால் ஒரு மண் சொடி அடுப்பு. ஒரு பானைச் சோறு அதில் கொதித்துக்கொண்டிருக்கிறது. அடுப்பிற்குப் பக்கத்தில் ஒரு காலியான கிண்ணமும் ஒரு சிறிய கோப்பையும் இருக்கிறது. அவளுக்கு இடதுகைப் பக்கத்தில் ஒரு திரை. அவளது புதல்வி ஷர்மிளா திரைக்கு மறுபக்கத்தில் அமர்ந்திருப்பது தெரிகிறது. ஷர்மிளாவுக்கு உணவைச் செலுத்த அவளது மூக்கில் வெள்ளைக் குழாய் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. அவள் அமர்ந்திருக்கிறாள், கால்களைக் குறுக்கிட்டு, கைகள் தொடை மீது, உள்ளங்கைகள் தலைகீழாகத் திரும்பி மேற்புறம் பார்த்தபடி, ஏதோ தியானத்தில் ஆழ்ந்திருப்பது போல் அவளது விழிகள் தாழ்ந்து நோக்கிக் கொண்டிருக்கிறாள்.

கதை சொல்லி:

அது 2010ம் வருடம். ஆயுதப்படைக்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கிய சட்டத்தை ரத்துச் செய்யக் கோரி இரோம் ஷர்மிளா உண்ணாவிரதத்தைத் தொடங்கி 10 வருடங்கள் ஆகிவிட்டன. (10 வருடங்களாக உண்ணாவிரதமிருந்து வருகிறாள்.)

தற்கொலைக்கு முயற்சித்தார், ஆகவே செக்ஷன் 309ன் படி தண்டனை என்று கடந்த 10 வருடங்களாக நீதிமுறைக் காவலில் வைத்திருக்கிறார்கள் அவளை. இம்பாலில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவமனையில் போலீஸ் கஸ்டடியில் ஜீவித்து வருகிறாள். அங்கே அவளை உயிரோடு வாழ வைக்க வலுக்கட்டாயமாக உணவை ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அதிகபட்ச காவல்காலம் ஒரு வருடத்தில் முடிந்துவிடுவதால் ஷர்மிளாவை விடுதலை செய்துவிடுகிறார்கள். இரண்டொரு நாட்களுக்குப் பிறகு புது முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்துவிடுகிறார்கள். ஷர்மிளாவை மீண்டும் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிடுகிறார்கள். அவளது கண்களிலோ, இல்லை இந்த மணிப்பூரின் பார்வையிலோ, எந்தத் தீர்வும் தெரியாமல், முடிவே அற்றுப் போய் அவளது அவலம் வருடா வருடமாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் கதை அவளைப் பற்றியது அல்ல. அவளது தாய் இரோம் சாக்கியைப் பற்றியது. சாக்கிக்கு இப்பொழுது 79 வயதாகிறது. விசாலமான ஒற்றை அறை வீட்டில் அவளது பேரக் குழந்தைகளோடும் வாழ்ந்து வருகிறாள். குடும்பத்திற்குத் தேவையானவற்றைச் சமைப்பதில் தனது பெருவாரியான நேரத்தை செலவிட்டுவருகிறாள். ஏதோ சிலபேசப்படாத காரணங்கள். ஷர்மிளா உண்ணா விரதத்தைத் தொடங்கிய பின். ஷர்மிளாவும் சாக்கியும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. பேசிக் கொள்ளவும் இல்லை.

சாக்கி: ஷர்மிளா என்னுடைய கடைசிக் குழந்தை. என்னுடைய ஒன்பதாவது குழந்தை. அவள் பிறந்த பொழுது என்னுடைய முலைகள் (மார்பகங்கள்) வற்றிப் போயிருந்தது எனக்கு நினைவு இருக்கிறது. அவளுக்குப் பால் இல்லை என்னிடம். இம்பாலில் இருந்த எல்லா அம்மாக்களின் முலைப் பாலையும் உண்டு வளர்ந்தாள் அவள். அவள் மணிப்பூரின் புதல்வி. என் புதல்வி அல்ல. அதற்காக, என்னிடமிருந்து அவளை, மணிப்பூர் எடுத்துக்கொண்டுவிட முடியும் என்றா அர்த்தம்?

சிறிய மௌனம்

சாக்கி : (அவள் உண்ணாவிரதத்தைத் துவங்கிய நாள் எனக்கு நினைவில்லை. எல்லா நாட்களையும் போல் அதுவும்) பத்துவருடங்களுக்கு முன்னாள் ஒருநாள். அந்த நாள் காலை அவள் என்னிடம் வந்தாள். என்னுடைய ஆசீர்வாதத்தை வேண்டினாள். அவள் சொன்னாள், “நான் மணிப்பூருக்காக ஏதாவது செய்யப்போகிறேன்.” அவள் என்ன செய்யப்போகிறாள் என்பதை என்னிடம் சொல்லவில்லை. (அவள் எதைத் துவக்கப்போகிறாள் என்பது எனக்குத் தெரிந்திருந்தால்...) நான் அவளைத் தடுத்திருப்பேனோ?

சாக்கி சோறு உள்ள பானையை எடுத்து அதன் நீரை ஒரு கிண்ணத்தில் வடிக்கிறாள். சோற்றுப் பானையை அடுப்பின் மீது திரும்ப வைக்கிறாள். பார்வையாளர்களுக்கு அதில் என்ன உள்ளது என்பதைத் தெரிவிப்பதற்காக, கிண்ணத்தைத் தட்டுகிறாள்.

சாக்கி : இது ஷர்மிளாவுக்காக. அவள் கூந்தலைக் கழுவிக்கொள்ள இதை நான் வாரம் ஒருமுறை அவளுக்கு அனுப்பி வைக்கிறேன். எங்களுக்கிடையே எஞ்சிக் கிடப்பது இது ஒன்றுதான். கஞ்சித் தண்ணீர்.

பானையில் இருந்த சோறு தயாராகிவிட்டது. சாக்கி, சிறிது சோற்றை எடுத்து தனது தட்டில் பரத்திக் கொள்கிறாள். அதை மடியில் வைத்துக்கொண்டு ஒரு வெற்றுப் பார்வை பார்க்கிறாள். ஒரு கவளம் சோற்றை எடுத்து வாயருகே கொண்டு செல்கிறாள். வாயைக் கைகள் நெருங்கும்பொழுது நிறுத்திவிடுகிறாள். கையிலிருக்கும் சோற்றைப் பேராவலுடன் பார்க்கிறாள்.

சாக்கி : ஒவ்வொரு கவள உணவும் நாவை நெருங்கும் பொழுதும், ஷர்மிளாவின் உதடுகள், இந்தப் பத்து வரு8டங்களில் ஒரு உணவைக்கூடத் தொடவில்லையே என்பது என் நினைவுக்கு வரும். பிறகு எப்படி ஒரு தாய் இது தெரிந்த பிறகும் உண்ண முடியும்?.

சாக்கி உணவுத் தட்டை தரை மீது வைக்கிறாள். அவளது விரல்கள் இப்பொழுது தொடையின் மீது இடம் பெறுகின்றன.

சாக்கி: அவள் எப்பொழுதுமே மாறுபட்டவள். அசாத்திய பிடிவாதம். குழந்தையாய் இருக்கையில், ஒரு நாள், வெறும் மரக்கறி மட்டுமே தான் உண்ணப் போவதாக முடிவு செய்தாள். அவளை, ‘ஏன்? எதற்காக? என்றெல்லாம் எங்களால் கேட்டுவிட முடியாது. யாராலும் முடியாது.

பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு கல்லூரிக்குச் செல்ல மாட்டேன் என்று முடிவு செய்தாள். யாராலும் அவள் மனதை மாற்றி ஒத்துக்கொள்ள வைக்க முடியவில்லை. இவளைப் போன்ற குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு தாய் என்னதான் செய்யமுடியும்?

சாக்கி : எனக்கு இந்த ஆயுதப் படை, சிறப்பதிகாரச் சட்டம், AFSPA, இது, அது எதுவும் தெரியாது. நான் படித்தவள் இல்லை. இரும்பு மனுஷியின் தாய் ஒரு சாமானியப் பெண்மணி (சிரிக்கிறாள்). ஆனால், இந்த AFSPA எங்களுக்கு என்னென்ன இழைத்தது என்று தெரியும் எனக்கு. இழவு ஒலிகளைச் செவியுறாமல் ஒருவர் இம்பால் வீதிகளைக் கடந்து செல்ல முடியாது. மணிப்பூரில் வீசும் காற்று கூட அவர்களது துயரம் தோய்ந்த கதைகளைக் கேட்டு இழவு கொண்டாடுகிறது. தனித்தனியே கிழித்தெறியப்பட்ட குடும்பம், படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மைந்தர்... சீரழிக்கப்பட்ட பெண்கள். நானும் ஷர்மிளாவின் அப்பாவும் எங்கள் குடும்பத்திற்குத் துயரம் நேராமல் இருக்கப் பெரும்பாடு பட்டோம். ராணுவம் எங்களைக் கடந்து சென்றபொழுது தலை தாழ்த்தி நின்றோம். ஒளிந்து, மறைந்து வாழ கற்றுக்கொண்டோம். ஆனால் இன்று இதே மிருகத்திற்கு எதிராக என் புதல்வி போர்ப்பிரகடனம் செய்திருக்கிறாள் (பரிகாசம் ஏதோ செய்கிறாள்).

சாக்கி : எல்லா அம்மாக்களும் என்னிடம் வந்து சொல்வார்கள், ‘சாக்கி, உனது புதல்விதான் எங்கள் ரட்சகர்’ ‘சாக்கி, உனது புதல்விதான் மணிப்பூரை இருண்டகாலங்களிலிருந்து மீட்டெடுப்பாள்’. சில கணங்களில் நான் என்னைப் பற்றிப் பெருமையாக உணர்வேன். அப்பொழுது என் புதல்வியின் முகம் என் விழிகளுக்கு முன்னால் வந்துபோகும். ஒருகாலத்தில் இளமையாகவும், அழகாகவும் இருந்த முகம். ஆனால் இன்று இந்த மணிப்பூர் அளிக்கும் அழுத்தத்தால் அந்த அழகிய முகம் சுருக்கங்கள் விழுந்து... கடந்த பத்துவருடங்களில் ஒவ்வொரு நாளையும் அவள் மருத்துவமனையிலேயே கழித்திருக்கிறாள். அவர்கள் அவளுக்கு எப்படி உணவு ஊட்டுகிறார்கள் தெரியுமா? மூக்கின்வழியே, ஒரு குழாய் மூலம்.. அரைச் சாவு அடைந்து விட்ட பெண் போல்... (பார்வையாளர்களை நேரடியாகக் கேள்வி கேட்பது போல்)

இது உங்கள் பெண்ணாக இருந்தால் உங்கள் மனம் பெருமை கொள்ளுமா? ஷர்மிளா, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்பட்டால் அது சுயநலமாகிவிடுமா?

ஓய்ந்துபோன சாக்கி, சிறிய இடைவெளிக்குப் பின், துயரத்தில் தலை தொங்கிப் போகிறது. விளக்குகளின் ஒளி குறைகிறது.

உறங்கவேண்டும் என்பது போல் ஷர்மிளா உடலை சாய்க்கிறாள். சில விநாடிகள் கழித்துச் சாக்கி மெதுவாக, தலையை நிமிர்த்துகிறாள். பேச ஆரம்பிக்கிறாள் (ஆனால் இம்முறை ஷர்மிளாவை நோக்கி).

சாக்கி : உன்னைச் சந்திக்கப் பத்து வருடங்களாக எனக்குத் தைரியமில்லை. ஷர்மிளா, உன்னைச் சந்திப்பதால் நான் அழுதுவிடுவேன் என்று எனக்குத் தெரியும். அப்போது நான் உன்னிடம் கேட்க நினைத்திருந்த அத்தனைக் கேள்விகளையும் கேட்டிருப்பேன் (குரலை உயர்த்தி). மணிப்பூர் உனக்குப் பாலை ஊட்டியிருக்கலாம், ஆனால், உன்னை பத்து மாதங்கள் கருப்பையில் சுமந்தவள் நான்தானே? தன்னுடைய பெண் ஒரு முழுமையான வாழ்வு வாழவேண்டும் என ஒரு தாய் நினைப்பது தவறா? இல்லை, தியாகிகளின் அம்மாக்களுக்கு அந்த உரிமை கிடையாதா?

சாக்கி, சில விநாடிகள் மௌனமாகினாள். தன்னுடைய சினத்தை எண்ணித் தானே திடுக்கிட்டுவிட்டாற்போல. மறுபடியும் அவள் பேசத்துவங்கும் பொழுது குரல் பலவீனமடைந்திருக்கிறது.

சாக்கி : அப்பொழுது சரியான வார்த்தைகள் வாயில் சிக்காமல் போயிருக்கலாம். தேற்ற முடியாத அளவு நான் அழுதுத் தீர்த்திருக்கலாம். நீ அப்பொழுது என்ன செய்திருப்பாய் ஷர்மிளா? நீயும் அழுதிருப்பாயா? நீ அழுதிருப்பாய் என நான் நம்புகிறேன். உன்னுடைய தீர்மானம் அப்பொழுது பலம் குன்றிப்போயிருக்குமோ? நீ என்னுடன் வீட்டிற்கு வந்திருப்பாயோ? நீ வந்திருப்பாய் என நான் நம்புகிறேன். நம் இருவருக்குந்தான் அது தெரியும். மணிப்பூர் தன்னுடைய தலைவியை இழந்திருக்கும். அதனால்தான் நீ என்னைச் சந்திக்கவேயில்லை.

சிறிய இடைவெளி. மீண்டும் சாக்கி பேசத் துவங்கும் பொழுது குரலில் ஓர் அவசரம் தெரிகிறது.

சாக்கி : ஆனால் இன்று எல்லாம் முடிந்துவிடும். நான் உன்னைச் சந்திப்பேன். AFSPA சட்டம் ரத்தாகி விடும். என் கையால் உனக்குத் தேனை ஊட்டி உண்ணா விரதத்தை முடித்துவைப்பேன்.

சாக்கி தேன் பாட்டிலை எடுக்கிறாள். அவள் தனது முகத்துக்கு முன்னால் அதை உயர்த்தி, அதை ஒரு பார்வை பார்க்கிறாள். சில ஸ்பூன்கள் அளவு தேனே கிண்ணத்தில் ஊற்றுகிறாள். லேசாகக் கலக்குகிறாள். சாக்கி எழுந்திருக்கிறாள். அவளையும் ஷர்மிளாவையும் பிரித்து நிற்கும் திரையை நோக்கி நடக்கிறாள். அவளுடைய கரங்களில் தேன் கிண்ணத்தையும், கஞ்சித் தண்ணீரையும் எடுத்து வருகிறாள் மெதுவாக.

தயக்கத்துடன் திரையை நீக்குகிறாள். ஷர்மிளா தலையைத்திருப்பி வந்திருக்கும் அம்மாவை ஆச்சரியத்துடன் நோக்குகிறாள்.

ஷர்மிளா : அம்மா?

சாக்கி : ஷர்மிளா, இன்று முதல் நம்மைப் பீடித்திருந்த துயரங்கள் நீங்கிவிட்டன. AFSPA ரத்துச் செய்யப்பட்டுவிட்டது. நீ வென்றுவிட்டாய்.

ஷர்மிளா : அம்மா...

சாக்கி இடைமறிப்பு செய்கிறாள்.

சாக்கி : எதுவும் கூறாதே குழந்தையே. இன்று முதல் எனக்கு ஓய்வு...

சாக்கி ஷர்மிளாவின் தலையை எடுத்துத் தொடை மீது வைத்துக்கொள்கிறாள். அவள் ஷர்மிளாவின் நாக்கில் ஒரு ஸ்பூன் தேனை ஊட்டுகிறாள். ஷர்மிளாவின் உடல் நடுக்கம் கொள்கிறது. அவள் பத்து வருடங்கள் கழித்து ஓர் உணவை ருசி பார்ப்பதால். சாக்கி இன்னொரு ஸ்பூன் தேனை ஊட்ட ஷர்மிளா மகிழ்ச்சியோடு ருசிக்கிறாள். அவள் முகத்தில் புன்னகை பரவுகிறது.

சாக்கி : இப்பொழுது உறக்கம் கொள் என் அருமைக் குழந்தையே. உனது கூந்தலை நான் கழுவுவேன்.

சாக்கி, ஷர்மிளாவினது கேசத்தை எடுத்து கஞ்சித் தண்ணீர் உள்ள கிண்ணத்தில் மூழ்கடிக்கிறாள். ஒரு கோப்பையை எடுத்து பெரிய கிண்ணத்தில் உள்ள கஞ்சித் தண்ணீரை எடுத்து ஷர்மிளாவின் தலை முழுவதும் ஊற்றுகிறாள். ஷர்மிளா மெதுவாக ஒரு மெல்லிய உறக்கத்தில் ஆழ்கிறாள்.

சாக்கி கேசத்தைக் கழுவும்பொழுது உணர்வு உந்தலால் தடுமாறும் குரலில் பேசுகிறாள்.

சாக்கி : எங்களை மன்னித்துவிடு ஷர்மிளா! நாங்கள் வேறுபட்டவர்கள் (உன்னைப்போல் இல்லை) நானும் உனது தந்தையும் சின்னஞ்சிறு சராசரி மனிதர்கள். நாங்கள் தியாகிகள் இல்லை. ‘எங்கள் குடும்பம் ஒரு இயல்பான வாழ்க்கை நடத்தினால் போதும்’ என இருப்பவர்கள். நாங்கள் உன்னைப்போல் இல்லை. ஷர்மிளா, எங்களை மன்னித்துவிடு.

--திரை--

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer