எல்வினின் காதல்

நக்கீரன்

பகிரு

1

இலுப்பை மரங்கள் பூத்துவிட்டன. கிறக்கம் தரும் நறுமணத்தைக் காற்று களவாடி நகர்கிறது. எல்வின் முகரவில்லை. கண்கள் கலங்கியிருந்தன. குன்றிலிருந்து இறங்கிச் செல்லும் மேரியையே பார்த்தவாறு நின்றார். உடன் ஷாம்ராவும் செல்கிறார். அவள் மிகவும் நேசித்த குன்று இது. மேரிக்கும் தன்னைப் போல கண்கள் கலங்கியிருக்குமா?பைத்தியக்காரத்தனமான கேள்வி.

மேரி நேராக பம்பாய் சென்று, கப்பலில் ஏறி ஆஸ்திரியாவுக்கு பணிபுரிய செல்கிறாள். இறைப்பணியா அல்லது இயற்கைப் பணியா என்பது
முடிவாகவில்லை. ஆறு மாதங்களுக்கு முன்பு டிக்ரிடொலாவின் செயின்ட் ஃபிரான்சிஸ் ஆசிரமத்துக்கு அவள் வந்து சேர்ந்த நாள் நினைவில்
நிழலாடியது.

“கிறிஸ்தவ சேவா சங்கத்தில் இருந்து வருகிறேன். என் பெயர் மேரி கில்லெட்”.

எல்வின் மனதுக்குள் சிரித்துக்கொண்டார். அறிமுகமே தேவையில்லை. அவளை இங்கிலாந்திலேயே அவருக்குத் தெரியும். மீண்டும் புனேயில் காற்றில் தன் செந்நிற மயிர்ப் பறக்க சேலையணிந்து சைக்கிள் ஓட்டியபோதும் பார்த்திருந்தார். அதைச் சொன்னதும் விழிகளில் பூத்தாள்.

மேரிக்கு அவரது ஆசிரமம் பிடித்துப் போனதில் வியப்பில்லை. நீலவானம் மூடாக்கிட்டிருந்த மலைகளும், பள்ளத்தாக்குகளும், பழங்குடிகளின் பாடல்களும் ஆசிரியப் பயிற்சி முடித்திருந்த இளம் சோசலிசவாதிக்கு பிடிக்காமல் போயிருந்தால்தான் வியப்பு. சின்னக் குன்றின் மீதிருந்த ஆசிரமத்திலிருந்து கீழே பார்த்தால் அடிவாரத்தில் ஊர்த் தெரியும். காலையில் ஞாயிறு எழும்போதோ, மாலையில் நிலவு கண்படும்போதோ பிராத்தனைச் செய்ய உகந்த இடம். இரவில் தென்திசையில் தோன்றும் சிலுவைக்குறி உடுமீன் தொகுதிக் கண்டு தானும் சிலுவைக்குறி இடுவாள். மண் சுவரால் எழுப்பப்பட்ட ஆசிரமம் அவளுக்கு நிலத்துடன் உறவாடும் உணர்வைத் தந்தது. புவியின் மடியில் தாலாட்டப்பட்டாள்.

இருவாரங்கள் கழிந்ததும் ‘சகோதரி மேரி’யாக ஆசிரமத்தில் இணைந்தாள். பெண்களை ஆசிரமத்தில் சேர்ப்பது குறித்து எல்வினுக்கு முன்பே எச்சரிக்கை வந்திருந்தது. அதுகுறித்து அவர் மேரியுடனும் பேசினார். “பாபுஜியுடனும் மற்ற சகோதரர்களுடனும் இணைந்து மீராபென் வாழும்போது, நானும் ஏன் உங்களுடன் வாழமுடியாது? நீங்களே பார்ப்பீர்கள். உங்களுடனும் ஷாம்ராவுடனும் தூய தெய்வீகக்காதலுடன் வாழ்வேன்”.

தூய தெய்வீகக் காதல்!

மேரிக்கு நிமிர்ந்த உருவம். சுருள்முடி. அழகான முகம் என்று சொல்ல முடியாவிட்டாலும் இனிமையான தோற்றம். நல்ல குணமும்கூட. எல்வினைப் போலவே இயேசுவையும் ஏழைகளையும் நேசிக்கும் பண்பு அவளிடம் இருந்தது. வேறென்ன வேண்டும்?

ஒரு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி ராட்டையில் நூல் நூற்கும் மேரியைப் பார்த்தார் எல்வின். வெள்ளைச் சேலை அணிந்திருந்த மேரி ஏதேச்சையாக நிமிர்ந்து ஒரு புன்னைகையை தன் உதட்டில் தடவினாள். அவளது வெண் சேலை தோற்றம்; எல்வினின் கண்களுக்கு தேவாலயத்தில் திருமண உடையில் இருப்பதுபோலக் காட்சிப்பிழை. எல்வின் தன்னைக் கலைத்துக் கொண்டார்.

ஆனால் மேரியோ எல்வினை தன் உள்ளத்தில் ஒட்டிக்கொண்டுவிட்டாள். எல்வினுக்கு தொடக்கத்தில் தயக்கம் இருந்தது. பின்னர் ஈஸ்டர் திருநாள் கழித்து இருவரும் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஆசிரமத்திலேயே திருமணம். தேனிலவும் முடிவாயிற்று. சிற்றூர்களின் வழியே மாட்டுவண்டிப்பயணமே தேனிலவு. திருமணம் அவர்களின் ஆசிரம வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தாது. பழங்குடி மக்களுக்காக தொடர்ந்து வாழ்வோம்!

ஆனால் ஷாம்ராவ்தான் முதலில் எதிர்ப்பு தெரிவித்தார். இங்கிலாந்து அல்லது பாம்பே நகர வாழ்க்கையை ஈகம் செய்து எல்வினுடன் வாழும் அரிய ஆன்மா. அவர் தன் நண்பரை இழக்கக்கூடும் என்று அஞ்சினார். நியாயமான அச்சம். எல்வின் அவரைத்தேற்றி உறுதியளித்தார். ஷாம்ராவின் பொறாமையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தணிந்தது.

எல்வினுக்கு தான் பம்பாய் கடற்கரையோர வீடொன்றில் தங்கியிருந்த நினைவு வந்தது. அப்போது மதிய உணவு முடிந்திருந்தது. மீராபென் சன்னல்களை மூடத் தொடங்கினார். வெப்பம் மிகுந்த நாளில் அப்படிச் செய்வதற்கு எல்வின் தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். ஆனால் மீராபென் கடுமையாகப் பதிலளித்தார்.

“கடற்காற்றுடன் உப்புத்துகள்கள் வந்து உணவில் கலந்துவிடும். பின்னர் உங்கள் ஆசைகளைக் கட்டுப்படுத்துவது இன்னும் கடினமாகிவிடும்.”

நான் சன்னல்களை மூடவில்லையோ? மேரி உப்பாகிவிட்டாளோ? ஆனால் மனம் சுவையாக உள்ளதே!

பாபுஜியின் ஆசிரமத்தில் கணவன் மனைவியாகவே இருந்தாலும் பிரம்மச்சரியம் பின்பற்றப்பட வேண்டும். அதுதான் நடைமுறை. தம்பதியர்கள் சகோதர - சகோதரிப்போல சேர்ந்து வாழ்ந்தனர். பாலுணர்வு அத்துமீறலுக்கு மிகக் கடுமையான முறையில் தீர்வு காணப்பட்டது. எனவே, இறுதியாக பாபுஜிக்கு கடிதம் எழுதிவிடுவது என்று தீர்மானித்தார் எல்வின்.

“திருமணத்துக்குப் பிறகு எங்களால் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க முடியாது. இது உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கலாம். இதற்கு விலங்குணர்ச்சி காரணமல்ல. பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்கும் அளவுக்கு எங்களிடம் அறிவுபூர்வமான நம்பிக்கை இல்லை. அல்லது அதைக் கடைப்பிடிக்குமளவுக்கு ஞானம் இல்லை.”

2

கோண்டுப் பழங்குடிகளின் கராஞ்சியா மலைப்பகுதியில் ஆசிரமம் அமைப்பது எல்வின் எண்ணியது போல அவ்வளவு எளிதானதாக இல்லை. அவரை முதன்முதலில் பார்த்த கோண்டு ஒருவன் அவரைக் ‘கிறித்தவன்’ என்று அழைத்தான். அது உண்மைத்தானே என்று கடந்து சென்றார். பிறகுதான் தெரிந்தது அது கோண்டுகளின் மொழியில் ஓர் உச்சக்கட்ட வசைச்சொல் என்று.

அவர் கிறித்தவ சேவா சங்கத்திலிருந்து விலகி அங்குக் குடியேறியிருந்தார். பாபுஜியின் கொள்கைகளை ஏற்றுச் செயல்பட்டதால் கிறித்தவ நிறுவனங்களையும் பிரிட்டிஷ் அரசையும் ஒருசேர பகைத்தாகிவிட்டது. பகைக்கூடப் பெரிதில்லை. பாபுஜியைக்கோண்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் அவ்வளவு கடின வேலையாக இருந்தது.

ஒரு கோண்டு சிறுவனிடம் பாபுஜியின் படத்தைக்காட்டி ஆவலுடன் கேட்டார். “இவர் யார் தெரியுமா?”.

“யானைக் காதுகளுடன் இருக்கும் பைத்தியக்காரக் கிழட்டுக் கரடி”

ஓடிய சிறுவனைப் பார்த்து திகைத்து நின்றார். இது வேலைக்கு ஆகாது இனி பாபுஜி பற்றிய அறிமுகம் வேண்டாம். அவரது கொள்கைதானே பரவவேண்டும், அதைச் செய்வோம். அவர் ஆசிரமத்தில் ராட்டையில் நூல் நூற்பதைத் தொடங்க விரும்பினார்.

தன் ஆசிரமப் பணியாளரான கோண்டு மூதாட்டியை அவருக்கு மிகவும் பிடிக்கும். கற்பனை வளம் மிகுந்தப் பெண்மணி. எதைப் பேசினாலும் காவியநயத்துடன் பேசுவார். ஒருமுறை அடுப்பைப் பற்ற வைக்கையில் அந்த மூதாட்டிக் கேட்டார்.

“காய்ந்த மரத்தில் பூக்கும் பூ எது தெரியுமா?”

எல்வின் யோசித்தார். அந்த மூதாட்டி அவருடைய யோசனையை ரசித்தபடியே விறகை எரியவிட்டார். எவ்வளவு நேரம் யோசித்தும் அந்தப் பூவை அவரால் கண்டுப்பிடிக்க முடியவில்லை. தன் தோல்வியை ஒப்புக்கொண்டபோது அந்த மூதாட்டி சொன்னார்.

“கண்ணுக்கு எதிரிலேயே காய்ந்த மரத்தில் பூத்திருக்கு, பார்க்கலையா?”

காய்ந்த விறகில் எரியும் நெருப்பைச் சுட்டியபடியே சிரித்தார். எல்வினுக்கு வெட்கமாக இருந்தது. அவரிடம் ராட்டையில் நூல் நூற்கும் பணியைத் தொடங்க ஆட்களை அழைத்து வரச் சொன்னார். முதலில் வந்தவர்கள் பின் ஒவ்வொருவராக குறையத் தொடங்கினார்கள். பஞ்சு நூலாக மாறாது நைந்துக்கொண்டே வந்தது. மூதாட்டியிடம் காரணம் கேட்டார். அவர் எளிய பதிலை அவர் முன்பு அலட்சியமாகப் போட்டுடைத்தார்.

“கோண்டுப் பகுதியில் பருத்தி விளையாதபோது நாங்கள் ஏன் ராட்டையில் நூல் நூற்க வேண்டும்?”

நியாயமான கேள்வி. பின்னர் யோசித்து தையல் பயிற்சி பள்ளித் தொடங்கலாம் என்று தீர்மானித்தார். வகுப்பும் தொடங்கியது. ஆனால், தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த பெண்கள் திடீரென வருவதை நிறுத்திவிட்டனர். காரணம் தெரிந்துக்கொள்ளச் சென்ற ஷாம்ராவ் திரும்பி வந்தார்.

“தையல் வேலை செய்வதானால் தங்கள் கருப்பைகளையும் தைத்துவிடுவார்கள். பின்னர் குழந்தை பிறக்காது என்று அஞ்சுகிறார்கள்”.

எல்வினுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பாபுஜியின் அடுத்தக் கொள்கையை ஆண்களிடம் கொண்டு செல்வது என்று தீர்மானித்தார். கள் உண்ணாமை. கோண்டு ஆண்களோ எப்போதும் இலுப்பைக் கள் போதையில் திளைப்பவர்கள். அவர்களிடம் பதமாகத்தான் பேசவேண்டும். கள் குடிப்பது நரகத்துக்கு ஒப்பானது. இதைப் புரியும்படி வலியுறுத்தினால் கோண்டுகள் கட்டாயம் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்பினார். ஒரு கோண்டுவிடம் மெல்லப் பேச்சைத் தொடங்கினார்.

“உன்னைப் பொறுத்தவரை நரகம் எது?”

“ஓ சாகிப், சொல்கிறேன் சாகிப். இலுப்பை மரங்கள் இல்லாத இடமே நரகம்”

எல்வின் திகைத்தார். அந்தக் கோண்டு மகன் தொடர்ந்து பேசினார்.

“எனக்கொரு ஆசை உண்டு சாகிப். நான் இறந்துப்போனால் என்னை இலுப்பை மரத்தடியில் புதைக்கவேண்டும். இறந்த பின்னும் நான் அதன் வேர்களிலிருந்து அந்த இன்பத்தை உறிஞ்சவேண்டும்.”

ஒருநாள் அவசர அவசரமாக ஒரு கோண்டு பழங்குடி அவரது ஆசிரம மருத்துவமனைக்கு வந்தார். அவர் குரலில் நிறைய சலிப்பு.

”சாகிப், நச்சுக்கடிகளுக்கும், காயங்களுக்கும் மருந்து வைத்துள்ளீர்கள். ஆனால் அதுக்கு மட்டும் மருந்து இல்லையே ஏன்?”

“எதுக்கு?”

“பெண்கள் என்னை மதிப்பதே இல்லை சாகிப்”

அவர் அழத் தொடங்கினார்.

எல்வின், யோசனையுடன் அமர்ந்திருந்தார். அவர் அடுத்து பாபுஜியின் கொள்கையாக பிரம்மச்சரியத்தைத்தான் கோண்டுகளுக்குக் கற்றுத்தர நினைத்திருந்தார்.

3

ஆலா போச்சாவின் கண்களிலிருந்து நீர் வடிவது நிற்கவில்லை. அந்த இளம் பெண் மருத்துவரை ஆழமாக ஊடுருவி பார்த்தார் பாபுஜி. அவரது கையில் எல்வினின் கடிதம் இருந்தது. அதற்குள் எல்வினின் திருமணச் செய்தி அவரது ஆசிரமம் முழுக்க பரவியிருந்தது. ஆலா தேம்பியவாறு சொன்னாள். “எல்வின் என்னைத் திருமணம் செய்வதாக உறுதி அளித்திருந்தார். இதை எப்படிப் பொறுப்பேன் பாபுஜி?”

தான் விலங்குணர்ச்சிக்கு அடிமையாகிவிட்டதாக எல்வின் சொல்லியிருந்தால் ஒருவேளை பாபுஜி ஒப்புக்கொண்டிருப்பார். எளிதாக புரிந்தும் கொண்டிருப்பார். ஆனால் தனது பிரம்மச்சரியக் கொள்கையில் அவருடைய தொண்டர் ஒருவர் கருத்து வேறுபாடு கொள்வதை அவரால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. தற்போது அவருடைய எண்ணத்துக்கு வலுகிடைத்தது போல இருந்தது. அவர் எல்வினுக்கு எழுதினார்.

“உங்களுக்கும் மேரிக்கும் என் ஆசிகள். நீங்கள் ஆலாவுக்கு கொடுத்த வாக்கை மீறுவதற்கான சாத்தியம் கொஞ்சமேனும் இருக்குமானால் நீங்களும் மேரியும் மிகவும் பாரமான சிலுவையைச் சுமக்க வேண்டியிருக்கும்.”

எல்வினிடமிருந்து பதில் வந்தது.

“நானும் ஆலாவும் காதலித்தோம் பாபுஜி. ஒருவரையொருவர் தழுவிக்கொண்டோம். ஆனால் உடலுறவுக் கொள்ளவில்லை. இது முற்றிலும் தவறுதான். நான் அதற்காக பாவமன்னிப்புக்கேட்டேன். அப்போதே எங்களுக்குள் திருமணம் இருக்காது என்பதை தெளிவாக்கிக்கொண்டோம்.”

சென்ற ஆண்டில் ஆலா ஒருவரைத் திருமணம் செய்துக்கொள்ளப்போவது பற்றி இருமுறை பேச்சு அடிப்பட்டதை எல்வின் கடிதத்தில் பாபுஜியிடம் பகிர்ந்துக்கொள்ளவில்லை. மாறாக அவரிடம் மன்னிப்புக் கேட்டிருந்தார். மேரிக்கு தெரியாமல் கடிதப் பரிமாற்றம் தொடர்ந்தது. பாபுஜி தொடர்ந்து எழுதினார்.

“மேரிக்கும் புரியவேண்டும். கடவுளின் முன்னால் காமம் இல்லை. கடவுளின் முன்னால் நாம் எல்லோரும் பெண்கள். அவருடைய நிரந்தரமான இணைகள். நித்ய திருமணத்தின் அழகை அவள் உணர்ந்தால் மனித திருமணத்திலிருந்து அடைந்த விடுதலையை எண்ணி அவள் ஆனந்தக் கூத்தாடுவாள்”

எல்வினுக்கு புரிந்தது. அது மேரிக்கு புரியவேண்டும் என்று எழுதப்பட்ட கடிதமல்ல. அது ஞானத்தந்தையின் அறிவுரை. அவரிடம் சமாதானம் செய்துக்கொள்ளும் ஒரேவழி எதுவென்பது எல்வினுக்கு புரிந்தது. திருமணத்தை கைவிடும் திட்டத்தை மேரியிடம் சொன்னபோது அவள் எளிதாக சமாதானம் அடையவில்லை. இருவரும் அண்ணன்-தங்கையாக வாழ விதிக்கப்பட்டதுக் கண்டு மேரி வெதும்பினாள். .

மேரி எதற்காக அழுகிறாள் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் மேரியின் சோகம் மொழிக்கடந்து கோண்டு மூதாட்டியின் மனசைக் கவ்வியது. அவர் ஒரு கோண்டு மொழிப் பாடலை பாடத்தொடங்கினார்.

வீட்டுக்கு வெளியே பார்க்கிறேன்
ஞாயிறு, மலைக்கு மேலே மூங்கில் தண்டின்
உயரத்தில் இவ்வளவு தாமதமான பிறகு
நீ எங்கே போக முடியும்?

என்னை இதயத்தில் பிணைத்துக் கொண்ட
என் காதலா காற்றில் காய்ந்தசையும் வாழைச்சருகாய்
நீ எப்போதும் காற்றில் விலகுகிறாய்,
மீண்டும் நெருங்குகிறாய்

இவ்வளவு தாமதமான பிறகு
நீ எங்கே போக முடியும்?

எல்வினும் மேரியும் மீண்டும் ஆசையால் தூண்டப்படலாம் என்று பாபுஜி நினைத்தார். இருவரும் தனித்தனியாக வாழ்ந்து தங்களைச் சோதித்துக்கொள்வது நல்லது. இறுதியில் அவர் கடிதம் எழுதினார்.

‘மேரி என்னுடைய ஆசிரமம் ஒன்றுக்கு வந்து ஏன் தீண்டத்தகாதவர்களிடம் சேவை செய்யக்கூடாது?”

4

எல்வின் புனேவுக்கு வந்திருந்தார். ஷாம்ராவ் அப்போது மேரியைக் கப்பல் ஏற்றிவிட பம்பாயில் இருந்தார். எல்வினும் அங்கு சென்றிருக்கலாம்தான். ஆனால் மேரி பிரிந்துச் செல்வதைக் காணும் மனத்திடம் அவரிடம் கிடையாது. அவர் பாபுஜியை பார்க்க விரும்பினார். அவர் அப்போது தீண்டாமைக்கு எதிராக உண்ணாநோன்பு தொடங்கியிருந்தார். அதற்காக, மிக வசதியான ஒரு தொழிலதிபரின் மாளிகையில் தங்கியிருந்தார். எல்வின் புனேக்கு வந்தபோது அவருடைய உண்ணாநோன்பு முடிந்துவிட்டிருந்தது.

பாபுஜி தங்கியிருந்த மாளிகையைக் கண்டதும் எல்வின் திடுக்கிட்டார். அவருக்கு மண்ணாலானதன் செயின்ட் ஃபிரான்சிஸ் ஆசிரமம் நினைவுக்கு வந்ததைத் தடுக்க முடியவில்லை. உடனிருந்த பத்திரிக்கையாளர் நண்பர் ஃப்ராங்க் மொரேசிடம் சொன்னார்.

“இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்காக ரோல்ஸ்ராய் காரில் போகிறார்”.

“என்ன சொல்கிறாய்?”

இந்தப் பளிங்கு மாளிகையில் காந்தி உண்ணாநோன்பிருப்பது எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது”

எல்வின் எவ்வளவோ முயன்றும் அந்த மாளிகைக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவர் ஒரு கிறித்தவராக இருந்ததே மறுப்புக்கு காரணம். அவர் ‘சர்வண்ட்ஸ் ஆஃப் இந்தியா சொசைட்டி’ அலுவலகக்கட்டடத்துக்குச் சென்றார். அங்கு அவரைப் போன்ற
தீண்டத்தகாதவர்கள் எப்போதும் வரவேற்கப்பட்டார்கள். அங்கு அவர் சரோஜினி நாயுடுவைச்சந்தித்தார். பாபுஜியைச் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைச் சொன்னார்.

“நீங்கள் மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட இந்துக்களும் அங்கு அனுமதிக்கப்படவில்லை. எங்களை அனுமதித்தாலும் நாங்கள் பயன்படுத்திய மண் பாத்திரங்களை வீட்டு எஜமானி போட்டு நொறுக்கிவிட்டார்”.

“உங்களுக்குமா?”

“நாங்கள் போன பிறகு தனியாக தீட்டுக் கழிக்கும் சடங்குகள் வேறு செய்கிறார்”

“பிறகு ஏன் பாபுஜி அங்கே தங்கி இருக்கிறார்?”

அவர் பதில் சொல்லவில்லை. புன்னகையுடன் நகர்ந்தார்.

புனேயில் தொண்டர்களிடையே ஒரு வருத்தமான அமைதி நிலவியதை உணரமுடிந்தது. புதிய வைசிராய் தன்னைச் சந்திக்க மறுத்ததால் பாபுஜி அடுத்தக்கட்ட போராட்டத்துக்கு அணியமாகி வந்தார். அவருடைய தோழர்களுக்கு இன்னொருமுறை சிறைக்குச் செல்ல வேண்டியிருக்குமோ என்ற அச்சமிருந்தது. ஆனாலும் அவர்கள் பாபுஜியின் முழுக்கட்டுப்பாட்டுக்கு தம்மை ஒப்புக்கொடுத்திருந்தனர். உடன்படுவது தவிர வேறு வழியில்லை. அவர்கள் அனைவரும் வருத்தத்தில் இருந்தாலும் இருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் பாபுஜியின் கடைசி மகனான தேவதாஸ் காந்தியும் அவருடைய மனைவி லட்சுமியும். சிறைக்கு போகக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

சொந்த மகனுக்கு ஒரு சட்டம். இந்தத் தத்துமகனுக்கு ஒரு சட்டமா என்று நினைக்கவும் எல்வினுக்குத் தோன்றவில்லை. ஆனாலும் ஒரேயொரு கேள்வி மட்டும் முன்வந்து நின்றது.

“தேவதாசின் திருமணத்தில் ஏன் பிரம்மச்சரியம் அனுமதிக்கப்படவில்லை?”

5

எல்வின் கராஞ்சியாவுக்குத் திரும்பியபோது அவரது உடல் மிகவும் மெலிந்திருப்பதுக் கண்டு ஷாம்ராவ் பதற்றமடைந்தார். எல்வின், பாபுஜியின் சமாதான அழைப்பின் பேரில் அவரைச் சந்திக்கஅகமதாபாத் சென்றிருந்தார். அங்கு மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார். பம்பாயில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற வேண்டியதாயிற்று.

காமாலையைவிட கொடுமையாக இருந்தது பாபுஜியின் ஆலோசனைதான். அவர் எல்வினை இங்கிலாந்து சென்று தங்கி தம் கொள்கைகளைப் பரப்புமாறு கேட்டுக்கொண்டார். சூதுவாதற்ற கோண்டு பழங்குடிகளைப் பிரிந்து வேறெங்கும் செல்ல எல்வின் விரும்பவில்லை. கராஞ்சியாவுக்குத் திரும்பி வந்துவிட்டதை பாபுஜி தன் பதிலாகப் புரிந்துக்கொண்டிருப்பார்.

முற்றத்தில் வந்து அமர்ந்தார் எல்வின். அங்கு ராட்டை வைக்கப்பட்டிருந்தது. அந்த ராட்டையின் முன் அமர்ந்திருந்த மேரியை அவர் புகைப்படம் எடுத்தது நினைவில் மீண்டது. பம்பாயில் இருந்தபோது அய்ரோப்பாவின் உம்பிரியாவில் உள்ள நண்பர்களிடமிருந்து அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. “மேரியைக் கன்னியாஸ்திரியாக சேர்த்துக் கொள்ளலாமா?”

எல்வின் சினந்து பதில் எழுதியிருந்தார்.

“மேரி மிகுந்த விடுதலை உணர்வுடையவர். அவர் சமயப்பணி செய்வது என்பதிலிருந்து மனதை நீக்கிவிடவேண்டும். அவர் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என நான் விரும்புகிறேன்”.

மேரி அமர்ந்திருந்த கயிற்றுக் கட்டிலைப் பார்த்தார். ராட்டை தனிமைத் துயரில் உழல்வதுபோலத் தோன்றியது. ‘நூற்பது ஒருவகை தவம் அல்லது துறவியின் ஒழுக்கம்’ என்று பாபுஜி கூறுவது நினைவுக்கு வந்தது. தவத்தை முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. அப்போது அந்தப் பக்கமாக வந்த கோண்டு மூதாட்டியை அழைத்தார்.

“இந்த இடத்திலிருந்து ராட்டையை அகற்றிவிடுங்கள்”

அவர் திகைத்துப் போய் பர்த்தார். எல்வின் அதைப் புரிந்துக்கொண்டது போல பதில் சொன்னார்.

“நீங்கள் சொன்னதுதான் மிகவும் சரி. பருத்தி விளையாத இடத்தில் நூற்பில் என்னப் பயன்? நூற்பது கோண்டுகளுக்கு பொருத்தமான வேலையல்ல. இனி இந்த இடத்தில் ஒரு உரலையும் உலக்கையையும் கொண்டு வந்து வையுங்கள். நாம் இனி தானியங்கள் குத்துவதை முயற்சி செய்யலாம்”

அந்தப் பெண்மணி பளிச்சென்று சிரித்தார். எல்வினும்.

6

மாலையும் இரவும் தழுவிக்கொண்டபோது காற்று இதமாக வீசியது. ஆங்காங்கே உடுக்கள் மின்னத் தொடங்கின. தென்திசை சிலுவை உடுத்தொகுதி தெளிவாகத் தெரிய இன்னும் நேரமாகும். அய்ரோப்பாவின் ஒரு மூலையில் இருக்கும் மேரி அதைப் பார்த்து சிலுவைக்குறி இடுவாளா? இல்லை வாய்ப்பில்லை இப்போது அங்கு இரவாக இருக்காது. வேண்டாம், இந்தத் தனிமையைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது செய்வோம். கவிதை எழுதலாமா? இந்த நேரம் தோதாக இருக்கிறது. எழுதலாம்.

எதைப் பற்றி எழுதலாம்? இந்த இனிமையான இயற்கையைப் பற்றி? காட்டைப் பற்றி? காட்டில் வாழும் கோண்டுகளைப் பற்றி? கோண்டுகளின் காதலைப் பற்றி? காதலைப் பற்றி? முன்பு தானும் ஷாம்ராவும் சேர்ந்து தொகுத்த ‘காட்டின் பாடல்கள்’ நூல் நினைவுக்கு வந்தது. கோண்டுகளின் பெருநடனத்துடன் இணைந்த, ‘கர்மா’, ‘தாதரியா’ பாடல்கள் அதிலிருந்தன. காதலை நேரடியாகப் பேசும் அந்தப் பாடல்கள் எல்வினுக்கு எலிசபெத் காலக் காதல் கவிதைகளை நினைவூட்டும். அவற்றில் ஒரு பாடல் அவருக்கு மிகவும் பிடித்த பாடல். அதைப் பாடலாம் போலிருந்தது. வெளியே வந்து கயிற்றுக்கட்டிலை எடுத்துபோட்டு அமர்ந்து பாடத் தொடங்கினார்.

‘தேர்ந்த கற்களால் உருவான அரண்மனை
கதவுகளும் கற்களாலேயே’

ஒருமுறைத் திரும்பி தன் மண் ஆசிரமத்தைப் பார்த்தார். தொடர்ந்தார்.

ஒவ்வொரு மூலையிலும்
விளக்குகள் ஒளிர்கின்றன
ஆனால் ஒரு பெண் இல்லாமல்
உள்ளே எங்கும் இருள்
புதிய பாதையில் வேகமாக
உருளும் சக்கரங்கள்
அதுபோல உன்னை
என் இதயத்துள் இழுக்க முடியுமா?
உள்ளே, ஒரு பெண் இல்லாமல்
வீடு இருண்டிருக்கிறது.

இருண்ட ஆசிரமத்துள் ஒருகணம் மேரி வெண்ணிற உடையில் தெரிந்தாள். முதலில் வெண்ணிற சேலை, பிறகு வெண்ணிற மணநாள் ஆடை. அய்யோ!அவருக்கு அழுகை வருவது போல இருந்தது. அந்நேரம் சரியாக அந்தக் கோண்டு குடிமகனின் குரல் கேட்டது.

“பெண் இல்லாமல் வீடு இருளத்தான் செய்யும் சாகிப்” எல்வின் திரும்பிப் பார்த்தார். அவன் தள்ளாடியபடியே வந்தான். கையில் ஒரு கள் கலயம் இருந்தது. இலுப்பைக் கள். நெடி மூக்கைத் துளைத்தது. அவனும் தொடர்ந்துப் பாடியவாறே வந்தான்.

“நீங்கள் சாப்பிடலாம், நீங்கள் குடிக்கலாம்
ஆனால் பெண் இல்லாத வாழ்க்கை ரொம்ப வீண்
கோண்டுவைப் பாருங்கள்…”

எல்வினுக்கு முதன்முதலாக தன் புனித ஆளுமையை கழற்றி வைக்கலாம் என்று தோன்றியது.

“சகோதரா, இனி நான் கிறித்தவன் கிடையாது. காந்தியவாதியும் கிடையாது. எனக்கு… எனக்கு கொஞ்சம் இலுப்பைக் கள் கிடைக்குமா?”

“ஓ… தாராளமாக் குடியுங்கள் சாகிப்…”

எல்வின் குடித்தார்.

“இப்போதான் நீங்கள் ஒரு கோண்டு”

அவருக்கு ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து மறந்தும் கொண்டிருந்தது. விவிலியம், சுவிசேஷ செய்தி, காந்தி, ராட்டை, பிரம்மச்சரியம், மேரி, எல்வின் - மேரி, தேவதாஸ் -லட்சுமி, எல்வின் - தேவதாஸ்…

எல்வின் போதையில் கயிற்றுக் கட்டிலில் மல்லாந்தார். கோண்டு குடிமகன் பெருங்குரலில் பாடத்தொடங்கியிருந்தான்.

“கள்ளே நீ எங்களை மன்னர்கள் ஆக்குகிறாய்
உலகமே எங்களை மறந்தால் என்ன?
ஒரு கோண்டு கவர்னராக,
ஒரு குடுவை போதும்…”

எல்வின் ஒருமுறை எழுந்து உட்கார்ந்து உளறினார்.

“நான் கோண்டு… நான் கவர்னர்… ”

மீண்டும் மல்லாந்தார்.

வானம் விரிந்திருந்தாலும் மங்கித் தெரிந்தது. அவர் முகத்தின் இரு இலுப்பைப் பூக்களும் மெல்ல உதிர்ந்தன. அப்போது வானெங்கும் ஏராளமான எல்வினின் விழிகள் திறந்துக் கிடந்தன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer