உவர்

சிவசித்து

பகிரு

நேற்றைக்குத்தான் நீலமேக மாமாவுக்குத் தீயாத்து. அதற்கு முந்தியநாள் நாதியற்ற கருக்கிருட்டுச்சாமத்தில் “பேக்கொண்ட கழுத போல” வாசலில் இருந்த அழிப்பாச்சுன கம்பிக்கதவை அறைந்தபடி துட்டிச்செய்தி சொல்ல பழனி நின்றுகொண்டிருந்தான். அத்தை இறந்து முழுவதும் இரண்டு மாதம் முடியவில்லை. அன்று பொட்டுத்தூக்கம் இல்லாமல் முட்டைக் கட்டியபடி இரவெல்லாம் இருந்தவர்களில் நானும் ஒருவன்.

சத்தம் கேட்டு முதலில் முழிப்புத்தட்டியது என் வீட்டம்மாளுக்குத்தான். “யய்யா...யய்யா”யென்று என்னைப் பதட்டத்தோடு உலுக்கி உசுப்ப நானும் எழுந்துகொண்டேன். “ச்” யென்று எழும்போதே எரிச்சல் உச்சு முடியை பிடித்தது. “ஏத்தா... என்ன? கதவைத்தான தட்டுதாக” போர்வை உதறி எழுந்தமர்ந்தேன். “இரு பாக்கேன், ஓவ்... ஓ... னு அவயம் போட்டுக்கிட்டு...”. “நீங்க சொல்லுவீக நல்லா... ஊரே அடங்கிப்போச்சு இன்னியேரத்துல வந்து இப்புடி மட மடன்னு அடிச்சா கெதக்கு கெதக்குனு இருக்காது?”

“................”

எனக்கும் மெல்லியப் பதட்டம் படர்ந்தது. அண்ணாக்கயிற்றில் கைலியை முறுக்கி விட்டுக்கொண்டு “வாரன், வாரேன்” எனச் சடவாகச் சொன்னபடியே கதவைத் திறந்தேன். பழனிதான் நின்றுகொண்டிருந்தான். எடுத்த எடுப்பிலேய “ஒம்போனத்தூக்கி தூர எறி, எத்தன வட்டம் போடுதது! எடுத்துப்பேச ஒனக்கென்ன பேதியா எடுக்கு?” கண் நிறைந்திருந்த தூக்கச்சடவு வல்லுசாக வடிந்துபோயிருந்தது.

என் போனை எடுக்கும்படி உள்ளே திரும்பி பொம்பளயாளிடம் சைகை காட்டும்போதே, நடு வீட்டில் லைட் எரிந்தது. தலைமுடியை வரிக்கொண்டை போட்டு, சேலையைச் சரி செய்துகொண்டு போனை நீட்டிக்கொண்டே, “அண்ணன்தானோ, ஒரு நிமிசத்துல எனக்கு ஏதோ வடியா வந்துருச்சு”, சிரிக்கலாமா? என்ன செய்ய என்ற குழப்பத்தினூடே பழனியைப் பார்த்தாள். பதில் இல்லை. தலையை மட்டும் ஆட்டிக்கொண்டான்.

போனை வாங்கிப் பார்த்தேன் ஏழுமுறை கூப்பிட்டிருக்கிறான். இதுபோகச் சுகுமாரன் ஒருமுறை. “என்னாச்சுடா” என்றேன்.

அதற்குள் “தாத்தா போன எடுத்தியா?” என்று என் பேத்தியை மகள் வெரட்டத் தொடங்கினாள். பழனி வாசப்படியில் இருந்து ஒரு எட்டு பின்னவைத்து தாழ்ந்த குரலில் “தாய் வந்துருக்கா?” என்றான். “ம்”. “நீலமேகம் அண்ணாச்சி” என அவன் தொடங்கும்போது பெரும் பாதிப் புரிந்துவிட்டது. தலையை ரோட்டப்பாக்க திருப்பி வைத்துக்கொண்டு “மருந்தத் தின்னுட்டாரு”என்றான் நெஞ்சை பொத்திக்கொண்டு “என்னாச்சுண்ணே, என்னாச்சுண்ணே” என என் வீட்டுக்காரி கேட்டபடியே இருந்தாள்.

கலங்கிய நிழலுருவமாக ஒரு நொடி நீலமாமா என் முன்பு வந்து மறைந்து போனார். ‘பனாமாஸ் சீரட்டு, உவக்காடு, கெணறுவெட்டு, பீடி, பூப்போட்ட சாரம்,சுருட்டமுடி, ஒட்டுப்புருவம், இராசங்கப்பேரி, பாக்கியராஜ், உப்புவேர்வ, எழும்புக்கவிச்சுவாட, தங்கக்கலர் வாட்சு, மரகதம் அத்தை, சவ்வாது வாசம்’ இடைவெளியின்றிச் சிதறியது நீலமாமாவின் நினைவுகள்.

“என்னாச்சி, என்னாச்சுண்ணே” நிதானம் நழுவி உடைந்துபோன குரலில் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தவளிடம் “ஏம்மா... நீ சும்மா இரு” என்றேன். ஆற்றாமைக்கு வந்த கோவம். வாயை மூடிக் கொண்டாள். என் கண்ணுக்கதுப்பெல்லாம் நடுக்கம். “ஆஸ்பத்திரிக்கு தூக்கீட்டுப் போவக்குள்ள முடிஞ்சு போச்சு” என்றான்.

வழிய ஒரு தெம்பை வரவழைக்க முயன்றேன். போன் மறுபடியடித்தது. சுகுமாரன்தான். எடுத்ததும் “மாமா”வெனவேத் தொடங்கினான். “மருமனே தயவு செஞ்சு மலைக்காதீக வண்டியெடுத்துக்குட்டுத்தான வாரிக, தாயியென்ன செய்யுதா? இல்ல... இல்ல வேண்டாம்... இருக்கட்டும். பெறகூடச் சொல்லிக்கிடலாம். நீங்க பதறாம வாங்க... மாமா இருக்கேன்” சொல்லியும் சொல்லாமலும் துண்டித்தேன். “ஏம்மா... அந்தத் துண்ட எடு” என்று திரும்பியபோது “பெத்த புள்ளகிட்ட பேசுதமாரி ஏலே ஏதாயினு பேசுவாகளே இப்புடி தொடச்சு எடுத்ததுமாரி ஒரு மாயத்துல முடிஞ்சு போச்சுன்னு சொல்லுதீயலே” தேம்பி அழத்தொடங்கினாள்.

கொடியில் தொங்கிய துண்டை எடுத்துக்கொண்டு அரக்கப்பறக்க நிலையில் கை வைத்து இழுக்க வண்டிச் சாவி அகப்பட்டது. அவளைப் பார்த்து ஒப்புக்கு ஒரு சமாதானமாக “சரி நம்ம என்ன செய்ய முடியும்” என்று “ஏலாதவன்” சாயலில் சொல்லும்போது முடியாமல் கண்ணீர் வந்தேவிட்டது. சட்டெனத் துண்டையெடுத்துத் துடைத்துக்கொண்டேன். “சரி நீ போய்ப் படு, காலைலவருவயாம்”என்றேன். “ஏலேய் அம்மாள பாத்துக்கோடா, புள்ளைய திட்டிக்கிட்டு இருக்காத கதவ வந்து பூட்டிக்கோ” மகளிடம் திரும்பிப்பாக்காமலே சொல்லிவிட்டு நகரும்போது, செவிக்குள் இருந்து யாரோ அழைப்பதுபோல இருந்தது.

---

வழக்கமாகக் குளிக்குமிடம் கணபதியாத்துப்பாலம் தான். வறண்ட காலந்தவிர்த்து மீதி நாளெல்லாம் ஓரஞ்சாரத்தில் மண்டிய நாணல் அடி குறுத்து நனைத்து, தரகுப்புல் வாசத்தோடு ஓடு பாலத்தரையைப் பரசியபடி தண்ணீர் போகும். உள்ளூர் இளவட்டங்களின் மெனக்கிடலில் பாலத்திற்கு மேற்காகப் பத்தடிதூரம் ஒரு ஆள் மட்டத்திற்குக் கெடங்கு தோண்டி குளிக்கத் தோது செய்திருந்தார்கள்.

“ஊரிலாப்பட்ட கழுதகயெல்லாம் அங்கனக்குள்ளதாங் வந்து கும்மரிச்சம் போடுதுக. அதுக ஆடுதம்னு நம்மள தள்ளிவுட்டா காலம் போன கடைசில பெரிய எமாத. மேக்க நம்ம நீலமேகம் காட்டுக்கு விடுங்க”யென இன்று காலை தெருமுனையில் என்னை எதிர்பார்த்து நின்றது போல இருந்த முருகமாமா, வண்டியில் ஏறும்போதே சொல்லியிருந்தார். வயல் வந்ததும் அடைப்பைத் திறந்து கொண்டு முன்னே நடந்தவர், மோட்டார் சுவிட்சைப் போட்டார்.

வரப்பில் இருந்து வாய்க்காலில் இறங்கி நடந்தேன். சாண் அளவு நீர் கரண்டையை நனைத்தது. அடுத்த எட்டுக்குத் தண்ணீர் குதுரமெலியை மறைத்து வட்டங்கட்டிக் குளிரூட்டியது. கிழக்குவாட்டாக எழுந்த சூரியன் நாதகிரி மலையேறி இன்னும் ஒளி சிதறத் தொடங்கவில்லை.

கஜத்துக்கு முப்பதாயிரம் மேனிக்கு ஒன்னரை லட்சம் முதலை இறக்கி, நீலமாமா சமீபத்தில் வெட்டியது வீண்போகவில்லை எனக் கிணற்றைப் பார்த்ததும் நினைத்துக்கொண்டேன். விடிகாலை குளிருக்குக் கிணற்றுத் தண்ணீரில் இறங்கிக் குளிப்பதுதான் சுகம். குளிக்கக் குளிக்க மிதமான கதகதப்பு சொனக்காட்டும். கயிறு போட்டு ஏறும் காலம் கொஞ்சம் முன்னர்தான் வழுக்கியோடியிருந்தது. “முட்டிக்கிட்டு குனியனுமா?” வெறுமனே நெனைத்தாலே பெசம் ரெண்டும் தசையோறி விண்ணு விண்ணென்கிறது.

“படி வெட்டாம போனீக, பாடோட பாடா அதுவும் வெட்டியிருக்கலாம்லா, அது அந்தானைக்கு என்னத்த பெருசா கொண்டுட்டு போயிற போகுது” என்று நீலமாமாவிடம் கேட்டதற்கு “அவசியம்னா தொட்டில நாலு போனி எடுத்தூத்தி மேல அலசிக்கிடுதது. நல்ல ஒடம்புக்கு நாழித்தண்ணிபோதும் மருமனே” என்றார். “நாழித்தண்ணி குண்டி கழுவக் காணுமா?”

பம்புசெட் ஓடவும் நுரைத்து வந்த புதுத்தண்ணீர் மூன்று நாட்களாகத் தேங்கிக் கிடந்த தண்ணீரைத் தூரத் தள்ளி வரப்புகளில் இறங்கி ஓடி வயக்குண்டை தொட, புகைந்த உவர்க்காட்டு மண் வேக்காடெடுத்தடங்கியது. பெரு மூச்சுவிட்டுக்கொண்டேன். “மண் அப்படி யாரை நொந்து என்ன செய்ய?”

மயானக்கரையில் ஏனோ காரணமேயின்றிச் சுகுமாரன் கையைப் பிடித்தபடி இதையேதான் சொன்னேன். “வாஸ்தவந்தான் மாமா” யென்று புரிந்தவனாக அவனும் தலையசைத்துக்கொண்டான். இருவரின் பார்வையும் நீலமாமாவை விட்டு விலகாமல் குமிந்தது.

வைக்கோலும் சாண எருகும் அடுக்கி அதன்மேல் மண்குலைத்துப் பூசியிருந்தார்கள். நெஞ்சுக்கறியும், சப்பைச் சதையும் நின்று கொழுப்பெடுத்து எரிய சடலத்தின் மீது பிளந்துவைத்த தேங்காயும், உடைத்த ஆமணக்கு முத்தும் குவித்திருந்தனர். சுகுமாரன் குடம் உடைத்து தீ வைக்கும்போது ரெண்டுமடங்கு “செய்தி கேட்டதை” விட நெஞ்சடைத்துக்கொண்டது எனக்கு.

என் அம்மே ஒரு வளந்த கெழவி உண்டு. அவள் சொன்னதுதான் நேற்று தீயாத்தும்போது நினைவில் தட்டியது “மனுசமக்க வாழுத காலத்துலவும் சரி செத்த பெறவும் சரி தவிப்பார தந்தரைக்கு மேலவும் கீழவும் ரெண்டு ஆறு ஓடுது” இந்த ரெண்டும் ஆற்றாத தவிப்பையும் சூட்டையும் தீதான் ஆற்றும் போல, கலயச்சாம்பல் எடுத்ததும் கம்மிய குரலில் வீம்பாக ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு முருகமாமா சென்னார்,

“கூதியாங் ஆறி போனாங்”

--

முருகமாமா என்னில் இருந்து பத்து வயது மூத்தவர் என் தாய்மாமாவும் கூட. எங்கள் காட்டுக்குக்கொஞ்சம் கெழக்கிட்டு அவருடையது. நாலுக்கு ரெண்டு பழுதில்லாமல் கரும்பு வௌச்சல் பருவத்திற்குப் பதிவாக இத்தன லோடு கரும்பு என்று சுகர்மில்லுக்கு ஏத்தி காசு பாக்க அவர்பாடு தன்னக் கட்டிக்கொண்டு பிசகில்லாமல் ஓடிக்கொண்டிருந்தது.

குளித்துச் சில நிமிடத்தில் ஏறுவெயில் வர உடம்பு உனந்து காய்ந்திருந்தது. “கௌம்புவமா மாமா?”வண்டியை உதைக்கும்போது ஈர வேட்டியை பிழிந்துகொண்டு வண்டியில் ஏறி அமர்ந்தார். கணபதியாத்துப் பாலம் தாண்டி, மேலப் பிள்ளையார் கோவில் வருவதற்குள் கடந்துபோன பி.ஆர்.சி வண்டிக்கும் கரும்பு ஏத்தி வந்த டக்கருக்கும் என் வலதுதோளை அமுக்கி “மெல்ல.... மெல்ல..... பாத்து” என்று முணுமுணுத்துக்கொண்டார்.

“நிப்பாட்டும் மாப்ள! சாமி கும்புட்டு போவம்”. மாமா சொல்லவும் வண்டியை மேலப்புள்ளையார் கோவிலடியில் நிறுத்தினேன். முருகமாமா ஓர் ஆழ்ந்த பெருமூச்சோடு சாமி கும்புடை முடித்துக்கொண்டார். பிள்ளையார் கோவிலுக்கு இடதோரம் ஐயப்பசாமி கோவில் மதியம் இன்று குருபூசையென்பதால் அருகாமை கால்வாய் மறித்துத் தண்ணீரைத் திருப்பிப் புழக்கத்திற்கு விட்டிருந்தார்கள்.

பூவரசும், புளியமரமும் நெடுக வளர்ந்து பச்ச மூடாக்குப் போட, அடியில் ஒற்றைப்பிரியாக வளைந்தோடிய பாதையில் செல்லங்கொஞ்சுவது போலச் சலசலத்தபடி ஆறு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றையே பார்த்தவர், சட்டெனச் சுதாரித்துக்கொண்டு அவரே ஆரம்பித்தார்.

“நம்ம சோலராசு கோழிப்பண்ணைல கீரிப்புள்ள எறங்கி சக்கட்டிமேனிக்கு கோழிய காலி பண்ணீருச்சு, குருண மருந்து வச்சப்பம் ஒன்னுத் திங்கல, செத்த கோழிய திங்க நாயி கூட அந்த வாடைக்குக் கிட்ட வராது மருமனே, அதையும் தின்னுட்டு, தென்னமரத்து மாத்தரையையும் தின்னுருக்கான். நைட்டு தண்ணி பாச்ச வந்த சந்தானம் பயதாங் என்ன இன்னியேரம் மோட்டார் ஓடுது, லைட் வேற எரியுதுனு அண்ணாச்சி, அண்ணாச்சினு சத்தங் குடுத்துக்கிட்டே உள்ளபோய்ப் பாத்துருக்கான்”. எனும்போது அவர் குரல் கம்மியது. மாமா தரையை வெறித்தபடி இருந்தார். எசக்கத்து இளந்து போய்க்கிடந்த அவர் பெசத்தை அழுத்திப் பிடித்தேன். “கடைசியா உனக்குத்தான் பாக்க குடுத்து வைச்சுருக்கு! உங்கிட்ட எதும் சொன்னானாய்யா? இல்ல... கழுதப்பய குடிச்சுட்டாம்னா, அது கெடந்து அரிச்சு இல்லாத கிரித்திரியம் பண்ணி என்னத்தையாது பேச வைக்கும் அதுதாங்...”

இல்லையென்பது போலத் தலையாட்டிக்கொண்டேன். சொன்னால் மட்டும் “எமன் பழி ஏற்கப் போறானா?”

--

எனக்குப் பத்து பன்னெண்டு வயது இருக்கும்போது “மேக்க மழ புடிச்சு ஊத்துனா இராசிங்கபேரி கம்மா நெறஞ்சு போவும்லா?” என முருகமாமாவிடம் கேட்டதற்கு “இன்னைக்கு வேண்டாம் மாப்ள நானும் நீலமேகமும் வேற சோலியாப் போறோம்” என ஏதோ சமாளித்துக்கொண்டு ஓடினார். மறுநாள் நான் அடம் புடிக்க என்ன அழைத்துப்போக நீலமேக மாமாவையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார். முன்னால் உள்ள கம்பி யில் என்னை உக்கார வைத்துக்கொண்டு, முருகமாமாவை கேரியருக்கு விட்டு நீலமாமா உண்ணி மிதிக்கச் சைக்கிள் மின்னல் வேகத்தில் பூந்து கிளம்பியது. நினைவறிய நீலமாமாவை முதலில் பார்த்தது அன்றுதான். அவர் முருகமாமாவின் பள்ளிக்கூட்டாளி.

தவிட்டுச்சேற்றைக் குலைத்து விரவிய நச்சு மழை பெய்ஞ்சு தீர்த்த ஒரு சாயங்காலம்தான் முருகமாமா “அஞ்சடிச்சாம் முக்கு”அருகில் கடவாயில் ரெத்தம் வழிய,சட்டையும் சாரமும் நனைந்துபோய் முட்டுக் காலைக் கட்டிக்கொண்டு அரசமரத்தில் சாய்ந்து இருந்தார். “என்னாச்சு மாமா” பல முறை கேட்டும் பதில் இல்லை. ரெண்டு கண்களும் ரெத்தச்செவப்பு. வலதுகை முட்டுத்தோல் சிராய்ந்து உரிந்திருந்தது. பூசு பூசென்று மூச்சு வாங்க, துடித்துக்கொண்டு இருந்த கீழுதட்டை கடித்துக்கொண்டு ஏதோ முணங்கியபடியிருந்தார்.

சிறு அசைவுதட்ட சட்டென முருகமாமா எதிர்பாத்து நிமிரும்போது, மேக்க இருந்து சவதிக்காடு அடிச்சுத் தெரிக்க நீலமாமா ஓடிவந்தார்.

அவரைப் பார்த்ததும் இதுவரைத் தாக்காட்டி வைத்ததைத் தாமரிக்க முடியாமல் முருகமாமாவுக்குக் கண்ணீர் வந்துவிட்டது.

நடு நெற்றியில் நரம்பு புடைக்க, “ஏறுல வண்டில” யென நீலமாமா முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு சொன்னார். என்னைப் பார்க்காமலே எனது சைக்கிளை வாங்கியபடி “மருமனே வண்டிய எங்கிட்ட விட்டுட்டு நடங்க, நான் முருகன மந்த வரைக்குக் கூட்டு போய்ட்டு நானே கொண்டாந்து வீட்ல விட்டுறேன்” நீலமாமா சொல்லி முடிக்கும் முன்னமே சைக்கிள் நீலமாமாவின் கைக்கு மாறியிருந்தது. நான் நிதானப்பட்டு நாலு எட்டு வைக்கும்போது சைக்கிள் தெறிச்சு பறந்து கீழமந்தையை ஒட்டி வேகமெடுத்திருந்தது.

“என்ன சொல்லுதாக உம்ம மச்சுனரு சேக்காளிக எல்லாம்” மறுநாள் வாசலில் நின்றபடி முருகமாமாவிடம் சத்தங்கொடுத்த நீலமாமாவின் நெற்றியில் நாலு இலைத் தையல் விழுந்திருந்தது. வேட்டியை உதறி யெழுந்து குஷி பொங்க வாசலுக்கு வந்த முருகமாமா “இனி அட்டஞ்சுழிப்பானாக்கும் நம்மகிட்ட” என்றார்.

--

ஒரு நாளும் குளிச்ச கையோடு வீடு திரும்பியது கிடையாது. முருகமாமாவிடம் “டீ குடிச்சுட்டு போவமாமாமா” என்றேன். சரி என்றுதான் சொல்வார் என்றேகேட்ட கேள்வி. பதில் இல்லை. பின்னாடி உக்காந்தபடியே தலையாட்டியதாக உள்ளுணர்வு. கணேசன் கடையில் வண்டியை நிறுத்தி, ரெண்டு டீ, ஒரு கோல்டுபிலேக் எனக்கும், ஒரு சிசர்பில்டர் முருகமாமாவுக்கும். கேள்வியோ, பதிலோ, விளக்கமோ கிடையாது, கைய நீட்டுனா சீரெட் தன்னைப்போல வரும். இப்போது ஒரு சுண்டு சுண்டித்தான் கணேசண்ணே சீரெட்டை எடுத்தான்.

“ரெண்டு தானோ ஏதோ ஒரு நெனவுல பனாமாஸ்ல ஒன்னு உருவுதேங், அந்த ஒரு பாக்கெட்ட அவுகளுக்கு மட்டும் வாங்குதது” என்றான். சீரெட் அப்பமெல்லாம் ஒரு ரசனைதான். நம்மை நாமே ரசிக்க ஆரம்பித்த காலத்தில் தர்பாராக வந்து ஒட்டுன சரக்கு. தேட்டரில் புதுப்படம் எறங்கினால், மணிக்கு ஒருமுறை வரும் இராசபாளைய வண்டிக்கு (ஜெய்ராம் வண்டியோ, நாதகிரி வண்ணமயிலோ) சுளிவாகக் கிளம்பி பார்க்கவேண்டியபடத்தில் எத்தன பாட்டு என்று கணக்கு பண்ணி அதுக்குத் தக்கன பீடி, சீரெட்டை எடுத்துச் செல்வது.

“சும்மா எடுத்த எடுப்புல மானாங்கன்னியா பாட்ட போடுவானா மருமனே, அதுக்குனு ஒரு எடம் வரும்ல அத ஒரு ரசனையோட கேக்கனும். அதுக்குத்தான் தனியாசில மேப்படி யாவாரமெல்லாம் கைவசம் வச்சுகிடுறது”என்று நீலமாமா ஒரு சாதாச்சீரெட்டை நீட்டினார். லேசான புகைச்சலுக்குப்பின் பர்பர்ரென்று இழுவையைப்போட்டேன். சட்டெனத் தேட்டரில் லைட் எரிந்துஅமர்ந்தது. நீலமாமா சீரெட்டையும் என் சீரெட்டையும் அணைத்துச் சட்டை மேப்பித்தானை தொறந்து காலரைத் தூக்கி பின்ன இழுத்துவிட்டபடி “போலீஸ்கார பய வந்துட்டான்” என்றார். தேட்டர்களில் அது வாடிக்கையான சிக்னல்.

அந்த வருசம்தான் அம்மா ஊரான இராயப்பன்பட்டியில் தங்கி பனிரெண்டாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். “இங்கன பள்ளிக்கூடமா இல்ல? அங்க கொண்டு போடனுமா” என நீலமாமா கூடச் சடைத்துக்கொண்டாராம். வாரம் தவறாமல் அம்மாவின் கடிதம் வரும். ஒரு நாள் நீலமாமாவிடம் இருந்து கடிதம் வந்தது. ஏதாவது புதுப்படப் பாட்டுகள் பதிந்த கேசட் வாங்கி வரும்படியும், கூடவே சில பாட்டுகளும் எழுதி, அதைக் கட்டாயம் பதிந்து வரும்படியும் சொல்லியிருந்தார். பாட்டு வரிசையிலேயே, “மருமனே தெக்கூர் வண்டில, ஒரு நாளு காசி மச்சான் காட்டுல போட்டுருந்த பருத்தி மூட்டையை ஏத்தி விடப் போயிருந்தேன். ஏ... சிறுக்கிபுள்ள! அந்த வண்டிக்கார தாயிளியொரு பாட்டுப் போட்டாம் கேட்டுக்க”, என்ற குறிப்புடன் பாட்டு வரி வந்தது. “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி”. அந்த நேரம்தான் மதுரை தங்கம் தேட்டரில் “தூரல் நின்னு போச்சு” படம் பெரும்போடு போட்டுக்கொண்டிருந்தது.

ஒரு மூச்சுக்குக் கடை கன்னிலயும், கல்யாணச் சடங்குலயும் ஒரே “ஏரிக்கரை பூங்காத்தே, நீ போற வழிதென் கிழக்கே” பாட்டும் “தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி” பாட்டும்தான். கூட படித்தவர்கள் எல்லாம் ஆகா,ஓகோ என்று வாய்பிளக்க எனக்கும் ஆச கெடந்து அடிக்கத்தான் செய்தது. சரி எப்படியும் இராசபாளையத்தில் ஏதாவதொரு தேட்டரில் இறங்கியிருக்கும் என நிச்சயமாகத் தெரியும். நீலமாமாவுடன் போய்ப் பார்க்க வேண்டும் (ஒரு கணக்குத்தான்).

அடுத்த லீவுக்கு வரும்போது இராசபாளையம் மீனாட்சி தேட்டரில் அதே படம்தான் (தப்பீருமா இப்பம்?) “மருமனும் நானும் டவுனுக்குப் படம் பாக்க போறோம்”யெனச் சுதாரிப்பாகச் சொல்லிக்கொண்டு வந்தார். பெல்பாட்டம் பேண்ட்டும், இறுக்கிப் புடிச்ச சட்டையும் கழுத்தில் ஒரு மப்புலர் துண்டும் அணிந்திருந்த நீலமாமாவுக்குக் குஷி இன்னமட்டில் இல்லை.

“என்ன மாமா, ஒரு கோப்பு கட்டி வந்தது கணக்கா தெரியுதே, என்ன விசியம்” என்றேன். சிரித்துக் கொண்டார்.

வண்டி சிவகிரியை எட்டுனதுதான் தாமதம் நீல மாமாவுக்குப் பாட்டு தன்னைப்போல வந்தது. “காவல் நூறு மீறி காதல் செய்யும் தேவி உன் சேலையில் பூ வேலைகள் உன்மேனியில் பூஞ்சோலைகள்”. “இது எதுல உள்ள பாட்டு மாமா சட்டுனு நெனவுக்கு வரமாட்டேங்கு”யென்று ரெண்டு தடைவ கேட்ட பின்னாடி மப்புளர் துண்டின் ஒரு முனையைத் தோளில் தூக்கிப்போட்டபடி “தங்கச்சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ” பாடிக்கொண்டே புருவம் ரெண்டையும் கொக்கி போட்டது போல ஒரு தூக்கு தூக்கி என்னைப்பார்த்தார்.

“மருமனே, வரும்போது ஒரு பாட்டு புக்கு வாங்கிடனும் மறந்திராம”

“அதாங் மனப்பாடமா அடிக்கீக பின்ன என்னத்துக்கு”

“தெளிவா சொல்லு சீனி மாமா மவளுக்குன்னு” பின் சீட்டில் இருந்த முருகமாமா சத்தங்கொடுத்தார்.

“ஓவ்...! வெசக்கொள்ளுய்யா நீரு!” நான் சொல்ல, நீலமாமா சிரித்ததற்கு மொத்த பஸ்சும் திரும்பிப் பார்த்தது.

--

சீரெட்டை இழுத்துக்கொண்டே கடையின் கூரைச் சாப்புக்குள் இருந்து வெளியே வரும்போது வாசலில் என் வண்டியில் சாய்ந்தபடி பழனி, “இப்போம் எதுக்குச் சொல்லுதம்னா” என்று எதிராளிக்கு ஆதரவான முறையில் நேக்காகக் குனிந்து குறுக்கை வளைத்து,  “இப்பமே பதிஞ்சு வச்சுட்டம்னா நம்ம தேவைக்குத் தக்கன ஒரு லோனு கீனு போட வைக்க, சௌரியமா இருக்கும்ல என்ன சொல்லுதீக, நம்ம நமக்குத்தக்கன என்னத்தையாது போட்டு பெறக்கி காலந்தள்ளிக்கிட்டு இருப்போம். கரும்பு வௌஞ்சு வரைல என்ன செய்யனு தவதாயப்பட்டுக்கிட்டு, ஆல போட்ட காட்டுக்காரங்கிட்ட போயி தாயே தங்கமேனு கெஞ்சி எங்கரும்பயும் போட்டுக் குடுப்பானு நிக்கதுக்கு, கழுதய வௌஞ்சதா! சடசடனு வெட்டி சுகர்மில்காரங்கிட்ட வித்துட்டுத் தங்கமா காச வாங்கீட்டு, சூசுவானு இருந்துறல” யென வாசு அண்ணாச்சி தலையைக் கழுவிக்கொண்டிருந்தான். பக்கத்தில் தங்கப்பாண்டி இருந்தார்.

வாசு அண்ணாச்சிக்கு நம்ம வீச்சு புரியும். சட்டென்று அவரையும், பழனியயும் பார்த்ததும்; “சரித்தான் அதிகாரியவுக உக்கார வேண்டியதுதாங் நம்ம கூட்டாளிக அவுகளுக்குச் சரிக்கு சரியா உக்கார கூடுமா?” என்றேன். “தம்பி, நல்லவேள பாக்க தெரிஞ்சன் போங்க” எனச் சிரித்துக்கொண்டே “அதிகாரி ஒன்னும் சரி இல்லையே, இப்பம்தாம் நம்ம கரும்பக் கேக்காக அவுக சொக்காரவுகளுக்குன்னா இன்னும் வேகமா வேலையிருக்கும்” (இது தங்க பாண்டியனை குறிவைத்து) “அண்ணாச்சி நீங்க தேனுகீனு தடவி நீட்டிருக்கனும், வெத்துக்கொழல நீட்டுனா எப்படிச் செல்ப் எடுக்கும்? மாப்ளக்கு தேன் கொழல்னாத்தான் பிரியம்”. “அந்தக் கோளாரு நமக்குத் தெரியாம போச்சே!” என்றார் வாசு அண்ணாச்சி. சட்டை அடியை வாயில் பிடித்தபடி வேட்டியை இறுக்கிக்கொண்டே “பாண்டியம்ன்னா இன்னேரம் சோலிய பெறுக்கிருப்பாப்புல” என்றேன்.

தங்கப்பாண்டியன் “ஏ... சிறுபுள்ளையமாரி, என்ன பேசுதம்னு இல்லாம” என்று வேட்டியை உதறி இடத்தைவிட்டு நகண்டு கொண்டார். முருகமாமா, “என்னய்யா ஒரே வாக்கில எம்புள்ளைய கேலி பேசுதீக” முருகமாமாவுக்கும் சிரிப்பு வரத்தான் செய்தது.

பழனி, “விடுங்க சின்னையா, வெருவாக்கெட்ட பய கிட்ட போய்க்கிட்டு, அவம் பேசி அந்தானைக்குல, நமக்குநாலு வெரக்கட தேஞ்சு போவ போதாக்கும், இவனையும் வச்சு சோறு போடுதா பாருங்க எந்தங்கச்சி அவளத்தாங் சொல்லனும்”. “என்ன சொல்லனும்” சீரெட்டை அவனிடம் நீட்டினேன். பத்த வைத்து ஒரு இழுப்பு இழுத்துவிட்டு “இப்புடி கொள்ளக்கூட்டம்னு தெரிஞ்சும், கொணங்கானாத பயனு தெரிஞ்சும் சோறு போடுதாபாத்தயா! எங்க வளப்பு அப்புடி, என்ன சின்னையா” வென முருகமாமாவையும் துணைக்கு இழுத்தான். மாமா தலையாட்டிக்கொண்டே புகை விட்டார். பஞ்சுக்கு கங்கு வரவும் தூர எறிந்துவிட்டு “அது வந்துய்யா, இப்பம் ஊராபய இருக்கும்போதுதான் சொல்லக் கூடாது நமக்குள்ளனா நொந்துக்கிடலாம் பொதுவுல உள்ளதசொல்லுதக்கு என்ன, எம்மகன் பழனி ஒரு கிரிசு கெட்டபய, ஆனா எம்மருமக அவன ஆத்திப்போத்தி நடந்துகிடுதாள்ள, அப்ப எங்க வளப்பு கொறையானு மாப்ள கேப்பாகல்ல”என்று என்னை பார்த்து கண்ணடித்தார்.“இப்புடி சின்னையாமாரெல்லாம் இருந்தா! என்னீய? இருந்தாப்புள செடி மாதிரி பேசி விட்டுறுதது” நீலமாமா என்றால் மேலும் ரெண்டு உரண்டு வரும். “இன்னைக்கு ஒரு மூணு மணியப்போல வந்தா விசேசத்துக்கு சரியா வரும்ல” என்று முருகமாமாவிடம் கேட்டு உறுதி செய்துகொண்டான்.

--

நீலமாமா காடு உவக்காடு, அடிக்கொருதரம் வண்டியில் வண்டல் கொண்டு வந்து தரையை மெத்திபாடு பார்ப்பார். அப்படி வண்டல் அடிக்கப் போய் வந்துதான் சீனி மகளைப் பிடித்துப்போனதாக நீலமாமாசொல்லியிருந்தார். மாமா வழித்தெடுத்தது போலச் சாட்டையான தேகம் சதைப் பிடிப்புதான் குறையே தவிர நல்ல எழும்புத்தாக்கான மனுசன். “எவ்வளவு திங்க எங்கதாமுல போகுது” என்று சொல்லாத ஆள் கிடையாது. அன்று மாமா அழைத்ததால் எங்கள் வீட்டுக்கு நீலமாமா விருந்துக்கு வந்திருந்தார். மரகதம் அத்தை மாமாவைப்போல் அல்லாது நல்ல திரட்சியான உடல், பூரிப்பான உடலுக்கு ஏத்தபடி நல்ல சிவப்பு. சாப்பாடு முடிந்ததும், அத்தையிடம் நீலமாமா என்னைக் காட்டி,

“மருமன், நம்ம பெண்ணைத்தான் கட்டுவேன்னு கண்டிசனா சொல்லிட்டாக அதுதான் சரினு ஒன்ன கையோடு கூட்டு வந்து, இந்தா உம்ம அத்தகாரியாச்சு - நீராச்சு!னு விட்டுறததான், அப்புடியே உன்னய அணைச்சு உன்ன கொண்டாந்து சேத்தாச்சு”

அத்தை என்னைப் பார்த்து குழுங்கச் சிரித்தபடி “அதுக்கென்ன தாராளமா கட்டிக்கிறட்டும், இப்புடி மருமன் கெடைக்கனுமே! என்ன மருமனே பாத்துக்கிட்டீகளா என்னைய? என்ன கணக்காத்தான் எனக்கு மக பொறந்தா இருப்பா” என்றாள்.

“..............” வெறுமனே சிரித்தபடியே இருந்தேன்.

“என்ன மருமன் பேசுறதுக்குக் காசுக் கேப்பாகப் போல” என்று கேட்டபடி என்னைப் பார்த்தாள் மரகதம் அத்தை.

“ஏய்! சும்மா இரு மருமனுக்கு, கோவம் வந்துச்சி... யாரு என்னனு பாக்காம கை நீண்டு போகும்” நீலமாமா சொல்லவும் முருகமாமா வாயைப்பொத்தி என் முதுகில் தட்டிச்சிரித்தார். “சும்மா இருங்க மாமா” என்று மழுப்பிக்கொண்டே நான் வெளியே வந்துவிட்டேன்.

மாமா அவ்வாறு சொல்லுவதற்கு ஒரு கதை இருந்தது. இப்போது நினைத்தாலும் எப்படி நீலமாமாவினால் அதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிந்தது என்பது ஆச்சர்யம்தான். அப்படியான சம்பவம் நடந்தது நீலமாமா விருந்துக்கு வந்த நாளில் இருந்து ரெண்டு வருடத்திற்கு முன்பு, முருகமாமா கடவாயில் ரெத்தம் வழிய உட்காந்திருந்த நாளில் இருந்து ஒரு வருடத்திற்குப் பின்பு,

நானும், பழனியும் இராமனாதபுரத்தில்தான் பத்தாப்புப் படித்துக்கொண்டிருந்தோம். விளையாட்டாக நடந்ததைப் பழனி இவ்வளவு வன்மமாக எடுத்துக் கொள்வான் என்று எதிர்பார்க்கவில்லை. வேண்டுமென்று கபடியில் அவனை அடித்தது போல எனக்கு நினைவும் இல்லை. தளவாரம் ரெட்டை பாலத்தின் முன்புதான் அவன் அண்ணனோடு நின்றிருந்தான்.

நான் வீடு திரும்பும்போது ஆவலாதி கேட்டு முடியவில்லை. ஆவலாதி என்பதை விட ஆத்தாமையால் வந்த புலம்பல் என்றுதான் சொல்லவேண்டும்.

“தலநாள்ல பொறந்த புள்ளைய இப்படி எந்த வெருவாக்கட்ட பயலோ மறிச்சுக்கிட்டு அடிச்சுருக்கானே”அம்மா புலம்பிக்கொண்டிருக்க எரிச்சலில் வெளியே வந்த எனக்கு ஏனோ நீலமாமாவைத்தான் பார்க்க வேண்டும் என்று தோன்றியது.

“பழனின்னா... அந்தப் பூலிங்காபுரத்துப்பய தங்கத்தொர தம்பிதான மருமனே? அவன் அண்ணன்காரனப் போல இவனும் கேம்பேரி நாயா வந்து வாச்சுட்டானா?”

“உமக்கு இப்பம் எவனா இருந்தா என்ன? அவன் என்ன யானைக்கா பெறந்துருக்கான்? நீரு வாரேரா வல்லயா அதாங் இப்பம் கேள்வி”

“ஏ... என்னைய்யா பேச்சு இது? எடும் சைக்கிள, இப்பமே போவம்”

நீலமாமாவுக்குப் பழனியை பார்த்ததும் தன்னைவிடப் பத்துவயது இளையவனை அடிப்பதற்குத்தயக்கம் வந்ததை உணர முடிந்தது. பழனியுடன் இன்னும்ரெண்டு பேர் பரக்கபரக்க முழித்தபடி இருந்தனர்.

“என்னல ஆளக் கூட்டு வந்திருக்கயோ” என்று பழனி சொன்னதும் பளார், என்று என் கன்னத்தில் ஒரு அறை விட்டார் நீலமாமா.

“என்கிட்ட என்னமோ வீராவேசமா முறுக்குன, தாயிளி இவன் ஒரு ஆளு மயிருனு பேசிக்கிட்டு இருக்கான் ஆம்பளதான நீயி? அடிலே ஓத்தாக்கூதி அவன, வருதத பாத்துக்கிடுவோம்”.

பழனி தன் வாழ்நாளில் நான் குடுத்த அடியை வாங்கியிருப்பானாயென்று தெரியவில்லை. சட்டை கிட்டையெல்லாம் கிழிஞ்சு திரும்பி வரும்போது நீலமாமா “சவாசு............... மருமனே” யென்று சொல்லிக்கொண்டு வந்தார்.

அதற்கு எப்படித் தைரியம் வந்தது என்று தெரியவில்லை. ஊர்ப்பட்டபய நாலுபேர் முன்ன மாமாவால் அடிபட்டதும் வந்த வௌம் எல்லை தாண்டியிருந்தது. விறுவிறுவென்று போனவன் மாமாவின் கையை உதறிவிட்டு “தாயோளி! யாரலே ஆம்பளயானு கேட்ட” என்று நீலமாமா கன்னத்தோடு குடுத்த அறையில் அவர் மட்டும் இல்லை, அவர் சொல்ல கதைகேட்ட முருகமாமாவும் வெலவெலத்துப்போனார். தெசப்போக்கில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சாயங்காலம் வரை சுத்தியலைந்து விட்ட பிறகுதான் வீடு திரும்பினேன். அன்னைக்குச் சாயங்காலம் முருகமாமா கூடத் தயங்கியபடிதான் கேட்டார். “அவன் பெரியாளே திருப்பி அடிச்சா என்னத்துக்குல ஆவ? நீ வாட்டுல கை நீட்டுவியா?”. “ஆமா அவரு பெரிய இவரு... கத்திரிக்கோலு வச்சுருக்காரு அந்தானைக்குப் புடுக்கத் தரிச்சு விட்டுருவாரு”.

இரண்டு நாட்களுக்குப் பின்பு முருகமாமாவும், நீல மாமாவும் பெரிய மாரியம்மன் கோவில்கிட்ட உள்ள லாலா கடையில் நின்றுகொண்டு இருக்கக் கடந்து போன என்னை நீலமாமாதான் அழைத்தார். “மருமனே டீ குடிக்கீகளா”.

“இல்ல இருக்கட்டும்”

“சும்மா வாங்க மருமனே, நான் என்ன கத்திரிக்கோல இடுக்கிட்டா திரியுதன்” நீலமாமா சிரித்துவிட்டார்.

தயங்கி நான் வர, நீலமாமா என்தோளில் கையைப் போட்டுக்கொண்டு “மருமன் ஆம்பளதானலேனு சொன்னதுதான் தாமதம் தாயோளில வந்துச்சே வௌம்”

“பின்ன! மச்சானும் அக்காளும் குடுத்த ஊட்டத்துக்கு அம்புட்டுக்கூட இல்லைன்னா எப்படி” என்றபடி டீகிளாசை முருகமாமா என்னிடம் நீட்டினார். போன வாரம் வரை கூட மாமாவிடம் உருத்தாக நான் பேசிய அனைத்துக்குமே ஏதோ ஒருவகையில் அதுவே துடக்கமாக இருந்தது.

--

எடுத்த எடுப்பில் இன்னது தப்பு, இது சரியில்ல என்று அவரிடம் சிலர் மட்டும்தான் சொல்ல முடியும்.

அவரிடம் ஒரு துடியான சண்டித்தனம் உண்டு. எதிராளி பேச்சுக் கொஞ்சம் மாறினாலும் அருகில் இருப்பவர் இவர் குணமறிந்து சுதாரித்தால்தான் உண்டு. ஒரு மாயத்தில் சட்டை மடிப்பை முட்டுக்குக்கீழ் தெரச்சவிட்ட வேகத்தில் சடாரென்று அடி, துள்ளியவன் செவிட்டில் இறங்கியிருக்கும். ‘விறகுப்பேட்ட மணியரசன்’ கிட்ட நாலுவருசம் முன்ன சண்டை போட்டு ரோட்டில் உருண்டு பிறண்டபோது கூட “என்ன நெனப்புல நடமாடுதீக? என்ன அறியா புள்ளையா மாமா, சரி ஒருநாள் இல்ல ஒருநாளு சரியா வரும்னு விட, காலங்கடந்து போச்சு மாமா! அந்தச் சல்லிப்பயகிட்ட போய்க்கிட்டு சரி மல்லுக்கு நிக்கனுமா? ஒரு தரம் போல ஒரு தரம் இருக்குமா? ஏதோ ஒன்னுமாத்தி ஒன்னு நடந்து போச்சுனு வைங்க, என்னத்துக்காகும். அப்றோம் அவன மந்தைல விட்டுக்கிட்டு மிதிச்சாலும் அசிங்கம் அசிங்கந்தான மாமா” என்றதுக்கு, வேட்டியை சண்டிக்கெட்டுக் கட்டிக்கொண்டு “மருமனே என்னைக்கு இந்த வேட்டிய எடுத்துக்கெட்ட எசக்கத்து போவுதோ அன்னைக்குத்தான் உம்ம மாமன ஒருத்தன் மறிச்சு நிக்க முடியும்” யெனச் சிரித்துக் கொண்டார். அந்த மாமாதான் நாலு மாதமாக, மண்ணரிப்பு கண்ட கரையாக இளந்து போய் இருந்தார். அரிமானம் உடம்புக்கா?

காட்டில் ஆலை போட்டிருந்த அன்று கிளாசும்கையுமாக மோட்டார் ரூமின் அருகில் நீலமாமா உக்காந்திருந்தார். “என்ன வேல பாத்திக போங்க, நீங்களே இந்தச்சோலி பாத்தா ஊர் பய உள்ள வந்து ஒழப்பாம என்னீவாங்?” சடசடவென வேட்டியை எடுத்துக்கட்டியபடி பரட்டுபரட்டென்று வாயை துடைத்துக்கொண்டார். துடைப்பில் மாமாவுக்குத் தொங்குமீசை விழுந்தது.

“மாமா, உங்கள ஒன்னுங் குடிக்க வேணாங்கல நம்ம தோப்புல எங்கனக்குள்ள வேண்ணாலும் உக்காந்து உங்க மனம்போலச் சாப்புடுங்க, மாரி பயலனாலும் எளனி வெட்டித்தர அனுப்புதேன், மத்த நாள்னா கூடச் சரிங்களாம். ஆல ஓடுததுனால ஆளுக வந்துபோன மானைக்கு இருக்கும், போதாக்கொறைக்கு அந்த எழ வெடுத்தப்பய கடையும் வயலுக்கு நேர எதுத்தாப்புல வேற இருக்கா... சடக்குனு இங்கனதான் குடிக்க ஒதுங்கு வாங்க அதுனாலதாங், எதும் நெனச்சுக்கிடாதீக”

“அய்யோ, அதெல்லாம் கிடையாது மருமனே நான் பெத்த புள்ளமாரி நீங்க, நான் ஒன்னுங் நெனக்கல” என் கைகளைப் பிடித்தபடிச் சொன்னார். அவர் வார்த்தைகள் போலவே அவர் பிடியும் தளர்ந்திருந்தது. கடைசிக் கடைசியென அவர் பேசும் எந்தப் பேச்சுமே முடிவில் ஒரு விசும்பலை சுமந்திருந்தது. இன்னொரு நாள் எதையோ பேசப்போய் அங்க இங்க சுத்தி நீலமாமா இப்படிக் கொண்டு வந்துவிட்டார்.

“மருமனே, மனுசனுக்கு மொத்தம் மூணு மணியடிக்கும். முதமணி இருவது வயசுல, ரெத்தம் சூடேரி ஒடம்பும் கம்பா நிக்கும்போது நமக்கு அது தெரியாது. ரெண்டாது மணி நாப்பதுல, ஆகா! சரிதான்னு சுதாரிக்காம் பாருங்க, அவன்பாடு ஏதோ கொஞ்சந் தேவல! அதுல சுதாரிக்காத ஆளுக்கு மூணாது மணி அடிக்கும்போது என்னென்ன கழுதயெல்லாமோ வந்து நம்மள போட்டு அலக்களிக்கும். அந்த அலக்களிப்பு இல்லாதவனுக்குத்தான் நல்ல சாவுனு வச்சுக்கோங்க, ஒரு மாசமா உங்க அத்தையவே எடுத்துக்கோங்களேன் பாவம்! நேத்து என் கையப்புடிச்சுக்கிட்டு, யய்யானு ஒரே அழுக” மாமா கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார்.

பொதுவாக இப்படி எதாவது நடந்தால் முருகமாமா உள்ள விழுந்து மறிப்பார் “எப்பா...! உனக்குத்தெரியாதத ஒன்னும் நான் சொல்லப்போறதில்ல. நேரம்னு ஒன்னுஇருக்கு பாத்தியா? அது இல்லாத வேலையெல்லாம் செய்யவைக்கும், வம்பாடுபட்டு உழச்சும் ஒரு புடி கெடக்காம போன எத்தன ஆளுகல நம்ம பாத்துருக்கோம். அதுதான் கெரகக் கோளாறுக, அதுபுடிச்சு ஆட்டைல மனுசன் என்னத்துக்கு ஆவான் என்ன மாப்ள” என்று என்னைப் பார்த்தார். தலையாட்டிக் கொள்வேன்.

காட்டில் தேங்காய் உரிப்பு ஆளும் பேருமாக வேலை மும்முரமும் பேச்சும் போய்க்கொண்டிருந்தது, நீலமாமா எங்கூடத்தான் இருந்தார். அத்தைக்குப் பண்டுவம் பாக்கத் துடங்கியதில் இருந்து நடமாட்டம் சுருக்கம்தான். அத்தைக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டுவெளியே இப்படிக் கொஞ்சம் உலாத்துவார். பதிவாகக் காய் எடுக்கவரும் ராசு வண்டியை நிறுத்தி வாசப்படலை திறந்துகொண்டு உள்ளே வரும்போதே “அண்ணாச்சி அந்த வடக்குத்தெரு வாத்தியாரு தவறிப்போனாரு போல” என்றேன். ராசு மாமா இருந்ததைக் கவனித்திருக்கவில்லை. “சரி வயசான காலத்துல யார சொல்ல முடியுது” பேச்சுக்கு சொல்லிவிட்டு காய் எண்ணத் தொடங்கினேன்.

மாமா மெல்ல ராசுவிடம் சைகையில் கேட்டார். அவன் தடுமாறவும், ஊர்ஜிதப்பட்டுக்கொண்டு தலையசைத்தார்.

“மருமனே, ஒரு எட்டு போய்ட்டு வந்துருவமா?” வாத்தியார் ஊர் மாத்திப்போய்ப் பத்து வருசமிருக்கும். “அது என்னத்துக்கு மாமா மெனக்கட்டு எடுத்துக்கூட்டி அங்க போய்க்கிட்டு” தளர்ந்த குரலில் “போனதும் வந்துருவமே” என்றார். நான் மறுக்கவில்லை.

வழக்கமாகத் தோளில் துண்டை போட்டுக்கொண்டு இடதுகையைப் பின்னால் வேட்டியை தூக்கி குறுக்கோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டு வலதுகையால் நாடியை தேய்த்தவண்ணம் துஸ்டி வீட்டாட்களிடம் இணக்கமாகத் தலை சாய்த்து என்ன? எப்பம்? என்று பதமாக நடத்தும் விசாரணைகளை அன்று முதல் தான் நீலமாமா நிறுத்தினார் போல, கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம் கைப்பிடித்து விசும்பினார். வாத்தியாருக்கு யாரோ புள்ளையில்லா கொறைக்குத் தீ மூட்ட எரியும் சடலத்தின் முன்நின்று வெகுநேரம் அழுதார்.

--

முருகமாமாவை வீட்டில் விட்டுவிட்டு, என் வீட்டுக்கு வந்தேன். என் வீட்டம்மா, “விசேஷத்துக்குச் சுகுமாரனுக்கும் அவன் வீட்டம்மாளுக்கும் சேலத் துணி எடுக்கும்போதே நெனச்சேன் அவனுக்குத் துண்டுஎடுக்காம விட்டுப்போச்சு” என்றாள். “சரி எடுத்துற வேண்டியதுதான”. “அதாங் நீங்க வரவும் கேட்டுக்கிடுவோம்னு இருந்தேன்”. “எம்மா முக்காத்துட்டு பெறாதயாவாரத்துக்கெல்லாம் கேக்கணுமா, பெரிய விசயத்துக்கெல்லாம் கேக்கது கெடயாது”. சிரித்தேன். வக்கணங் காட்டிக்கொண்டே உள்ளே சென்றவள் ஏதோ நியாபகம் வர திரும்பி வந்தாள். “சுகுமாரு வந்துச்சு விஷேசன்னு சொல்ல, அப்பறம் அவன் வீட்டம்மாளுக்கு டாக்டர் நாளைக்குத்தான் கொழந்த பிறக்க நாள் குடுத்துருக்காராம்”. “அட, அப்புடியா நல்ல விசயம்தான் நீ என்ன சொன்ன?”. “இப்புடி ஒரு காரியம் நடந்த ஒடனே ஒரு நல்லதும் நடக்கும்யா, நீங்க ஒன்னும் நெனயாதீக உங்க சின்னையா சாமியா உங்க கூடவே இருப்பாருனே”. “அதான பெரியமனுசி வேணுங்கது”. சிரித்தாள்

“மனுசன் இருந்திருந்தா சந்தோசப்பட்டு இருப்பாரு”

எனக்கு அப்போதுதான் மகள் பிறந்திருந்தாள். அவளைப் புளியங்குடியில் பார்த்துவிட்டு கணபதிவண்டியில் வந்து இறங்கும்போது, நாலு பேரோடுநீலமாமா வடக்கப் பாக்க வேகமாகப் போய்க்கொண்டிருந்தார். நீலமாமாவின் முகம் கொஞ்சம் அரண்டுதான் இருந்தது. உடன் முருகமாமாவும் இருந்தார் என்னையும் முருக மாமா கவனித்து இருந்தார். வரவேண்டாம் என்பதுபோலப் பஸ்ஸில் இருந்து இறங்கிய என்னிடம் சைகை காட்டியபடி நடந்தார்.

மறுநாள் இதைப்பற்றிக் கேட்கலாமா என்ற யோசனையுடன் நீலமாமாவை எதிர்கொண்டேன். என்னைப் பார்த்ததும் எனது ரெண்டு கைகளையும் எடுத்து அவர் மார்போடு வைத்துக்கொண்டு “மருமனே! மக பொறந்திருக்காமே”, முருகன் சொன்னான் ரொம்பச் சந்தோசம்மருமனே, அத்த கேட்டான்னா ரொம்பச் சந்தோசப்படுவா” என்றார். நான் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.

எப்போதாவது கேட்கலாம் என்று எனக்குத் தோனும் போதெல்லாம் “வந்த புதுசுல நானும் என்னமோனு நெனச்சங்க, யாரு என்ன சொல்லுதது எனக்குத் தெரியாதா என் வீட்டுக்காரியப் பத்தினு நின்னாகப் பாத்தீகளா அதுதான் முக்கியம்” என என் வீட்டுக்காரி நீலமாமாவை மெச்சுவது நினைவில் வர கேட்காமலே இருந்துவிடுவேன்.

ஒன்றரை மாதத்திற்கு முன்பு அத்தை இறந்த செய்தி எட்டும்போது நானும் மாமாவோடுதான் இருந்தேன். குடித்துக்கொண்டு இருந்த டீ கிளாசை அப்பிடியே போட்டுவிட்டு “ஏம்மா” என கதறியபடி மூட்டித் தைக்காத கேரளா பூப்போட்ட சாரம் பாதையில் அவிழ்ந்து விழும் ஓர்மை கூட இன்றி ஓடினார். அவர் வேட்டியை எடுத்துக்கொண்டு பின்னாடியே நானும் ஓடினேன்.

--

அத்தை தவறிய மறுநாள் மாமாவுக்குக் கொஞ்சம் அதிகமாகவே போயிருந்தது. நிறைந்த போதையில் ஒட்டியும், வெட்டியும் நீலமாமா “கடைசிக் கடைசியா அவளும் வாஸ்தவம்தான்னு சொன்னா” என்று எதையோ சொல்ல வரவும் “சரிய்யா, சரி...... நீ சூசுவானு இரு” முருகமாமா தட்டிவைத்தார். அதற்குப் பின்பு நீலமாமா தவறிய நாளன்று சாயங்காலம் ஒரு ஏழுமணிப்போலத் தன்னுடன் வரமுடியுமா என்று என்னைக்கேட்டார். “இப்பமெல்லாங் நீங்க குடிக்கதில்லனு தெரியும், சும்மா எங்கூட மட்டும் வாங்க”. அன்று ஆலை போட்டிருந்த போது வெரட்டியது நினைவில் வந்தது. “சரி வாங்க”. கடைக்குப் போகும்போது, “மருமனே இங்கனக்குள்ள வேண்டாம் வாங்கீட்டு மேக்க நம்ம காட்டுக்கு போயிருவோம்”. “ஆட்டும் வண்டிய எடுங்க”. “இல்ல இது இங்கனே கெடக்கட்டும் நான் உம்ம கூட வாரேன்”. “முருகமாமாவுக்கு ஒரு போனப்போட்டு மேக்க வந்திர சொல்லட்டுமா” என்று போனை எடுத்தேன். “இல்ல வேண்டாங்”. சிறுக சிறுக இருட்டு கணமேறிபடி இருக்கக் காட்டை அடைந்தோம்.

--

“அந்த மோட்டார் சுச்ச போட்டுவிடுங்க மருமனே, செத்த நேரத்துக்கு ஓடட்டும். மேலு காலு அலசிட்டுப் போவம் ஒரே வேக்காடா இருக்கு” தன் வேர்த்து உப்பெறிந்து போன சட்டையைக் கழட்டி ஒரு மூலையில் போட்டபடி மோட்டார் ரூம் திண்ணையில் ஒரு பக்கமாகச் சாய்ந்தார். தொட்டியில் கிணற்று நீர் குழாய் வழி வந்து நிறைந்து உவர் மண்ணைத் தொடவும் மண்ணும் சிறிது பொங்கி வேக்காடெடுத்தடங்கியது. மாமா ரெண்டு கிளாஸ் குடித்தார்.

“மருமனே, இந்தக் கந்தன் கதைய கேட்டீகளா?” “ம்! ரெண்டு நாளைக்கு முன்னாடி இறந்து போனானாமே” எனக்குக் காரணம் தெரியாமலில்லை, இருந்தும் அதை இங்கு ஏதோ சொல்ல தேவை இல்லை என்று மனம் சொன்னது.

“அப்புராணிபய மாமா, என்னா தாலியோ அவன போய்க்கிட்டு” என்றேன். ஒரு வடியான சிரிப்புடன் நீலமாமா, “யாரு கந்தனா? கந்தன் புத்தி கவுட்டுக் குள்ளதான்னு வச்சுக்கோங்க! அம்புட்டுக்கிட்டான் நேரம்பாத்து பாண்டித்துரை வெட்டிட்டான்”

கண்களை இறுக்கி மூடியவாறு அடுத்தக் கிளாசைக் குடித்துவிட்டு ஒருநிமிட மௌனத்துக்குப் பின் “வடக்குத்தெரு வாத்தியார் இங்கன இருக்கைல ஒரு சங்கதி நடந்ததே நெனவிருக்கா மருமனே” அப்போது மாமாவின் கண்ணிலும் உதட்டிலும் சங்கடம் கலந்த சிரிப்பு இருந்தது.

“....................”

பின் மாமாவே “ஒரு மட்டுக்கு எங்க ஆத்தாக்காரியும் பாட்டா பாடித் தீத்தா...... அப்புடி கறி கேக்குதோ? அறுத்தா - கேக்குமா? எம்மவன் ஒரு வார்த்த உங்கிட்ட சடச்சு பேசியிருப்பான? அப்படி என்ன புடுங்குத சோலி இந்த முண்டைக்கு அந்த வாத்தியாங் வீட்டுக்குள்ள? பொழுதுக்கும் மினிக்கிக்கிட்டு பறப்பெடுத்த முண்ட,தலதலயா அடிச்சுக்கிட்டனே, மேட்டு நெலத்த வுழுவதவனுங்கெட்டான். மேனா மினுக்கிய கட்டுனவனும்கெட்டாம்னு” தெச வேற பக்கம் திரும்பவும் நான் ஏதோ சமாளிப்பதாக நினைத்துக் கொண்டு,

“அந்தக் கந்தன் பயல அதுக்குத்தான் வெட்டிப் புட்டானாக்கும்” என்றேன். நான் கேட்டதும்தான் இது இன்னும் சல்லையான கேள்வியெனப்பட்டது. “அவன கொன்னு என்னீய மருமனே, இல்ல அவன மட்டும் கொன்னு என்னீயங்கேன்”. உடம்பு ஒரு நொடி சிலிர்த்தடங்கியது. மரகதம் அத்தை இறந்த மறுநாள் மாமா போதையில் என்னிடம் என்ன பேசினார் என்று யோசிக்கத்தோன்றியது. “ச்ச... போச்சு” சர்வ நிச்சியமா அப்படி இருக்காது அதுவும் முட்டி ரெத்தம் வத்திய காலத்தில். சமாதானப்படுத்திக்கொண்டேன்.

“ஆனாலும் மாமா! உடம்பிறந்தவ, உடமப்பட்டவ, பெத்தவ - பெறந்தவ மேலயாச்சும் ஒரு நம்பிக்க வைக்கவேண்டாமா”. மாமா ஏதோ வாய்க்குள்ளே முனங்கியபடி தரையைப் பார்த்துக்கொண்டு சிரித்தார். பின்பு, “சரி ஏதோ ஒரு சொல் பொறுக்கமாட்டாம செய்றதுதான்” மாமா அவருடைய வழக்கமான பனாமாஸ் சிகரெட்டை பற்றவைத்து இழுத்து ஊதிவிட்டு “நான் பாண்டித்துரைய சொல்லுதேன்” என்றார்.

“உங்களவிடயா மாமா? ஒரு சொல்லு ஊராங் சொல்லீர பொறுப்பீகளா வாள்ள பாயிறமாறில்ல வருவீக”.இதை நான் ஏன் சொன்னேன்? ஒருவேளை என் உள்ளூர உள்ள ஆர்வம் அப்படிக் கேட்க வைத்ததா? உணர்வு மேலிட மனதில் உள்ளதை மாமா சொல்லிக்கேட்க உந்திய கேடுகெட்ட குறுகுறுப்புத் தவிர வேறென்ன!

மாமாவை அது பெரிய அளவில் ஒன்றும் உணர்ச்சி வசப்படுத்தவில்லை. “முருகனுக்குத் தெரியும் மருமனே” என்று மட்டும் நிதானமாகச்சொன்னார். “என்ன தெரியும்”.“ஊருக்கு மேக்கிட்டு ஒரு சோலியா போனம்னு சொல்லுவோம் பாருங்க நீருகூடத் தொயங்கட்டிக்கிட்டு சிறு புள்ளையா வாரன் வாரன்பீரு” எனக்குச் சிரிப்பு வந்தது இதைச்சொல்லும்போது மாமாவும் என்னைப்பார்த்துச் சிரிக்கத்தான் செய்தார்.

“அப்ப விவரம் தெரியாதுல்ல மாமா, நான் எந்தச்சோலினு கண்டேன், நீங்க மைனரு! தோனுத நேர மெல்லாம் பொம்பளயாளுகள தேடிப்போவீக”. மாமா வின் சிரிப்பு மெல்ல அமிழ்ந்துகொண்டிருந்தது. “மேப்படிச் சோலிக்காகத்தாங் ஒருத்திய நானும் உங்க முருக மாமனும் பாக்கப்போனம்னு வைச்சுக்கிடுங்களேன். அவள அதுக்கு அப்பறங்கூட ரெண்டோரு வட்டம் பாத்துருக்கேன், என்னைப் பாக்குதப்பெல்லாம் ஒரு வடியா சிரிப்பா, எனக்கு அப்ப வௌங்கல, ஆனா உம்ம மாமனுக்கு வௌங்கீட்டு, பாண்டித்துரையும் கொஞ்சம் யோசிச்சு இருக்கனும் மருமனே, தன் தரமென்ன தனக்கு எது ஏலும் ஏலாதுனு அவனுக்குல்லா ஓர்ம வேணும்”

மாமா தீர்மானமான பார்வையில் என்னைப் பார்த்துத் தொடர்ந்தார். “அழிகாட்டுல கூட ஏதோ ஒரு நேரம்வெள்ளாமைக்கு வழியிருக்கு. உவக்காட்டுல என்ன இருக்கு. மருமனே எத்தன தடவ வண்டல் கொண்டு வந்து கொட்டி மெத்துனாலும் தின்னு செமிச்சுட்டு உப்புப் பொறிஞ்சுபோய்த்தான் நிக்கும். கேவலம் மண்ணுதிங்க ஒடம்பு மருமனே, மனுசன் தின்னா தின்னுட்டுப் போறான்” என்று சொல்லும்போது மாமா கண்களிலும் உப்பு நீர்சுரந்தது.

“வாங்க மாமா வீட்டுக்கு போவோம்” என்று எழுந்தேன். இருக்கட்டும் மருமனே யாரு இருக்கா வீட்டுல அந்தானைக்கு நம்மல வரவேக்க, செ..... நீங்க போங்க மக என்ன காங்கலயேனு தவிச்சுக்கிட்டு கெடப்பா! பசியும் இல்ல இங்கன காத்தாடி இருக்குள்ள பேசாம இங்கனே படுத்துக்கிடுதேன். காலைல வேணும்னா இங்கிட்டாப்புள வாங்க.”

--

நேரமும் ஆச்சுதான் இன்று மூணு மணிக்கு நீல மாமாவுக்கு விஷேசம் என்று கிளம்பி நானும் அவளும் அவர் வீடு அடையும்போது மூலச்சோறு படைக்கத் தொடங்கியிருந்தனர்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer