மொஹ்ஸீனா, கொச்சி பன்னாட்டு விமானநிலையத்தில் இறங்கும் தினத்தன்று நான் மீண்டும் அப்பார்ட்மெண்டிற்கு வந்து சேர்ந்தேன். மூன்று வருடமாக எழுதவும் படிக்கவும் முக்கியமானவர்களைச் சந்திக்கவும் எஸ்.ஏ. சாலையிலுள்ள ஸ்கைஃபை அபார்ட்மெண்டில் சஞ்ஜீவனின் எழுநூற்றி இரண்டாம் அறையை என்னுடையதைப் போல பயன்படுத்தி வருகிறேன். இந்த அறைக்கு ராசிப்பொருத்தம் இருப்பதாக எனக்குத் தோன்றியதுண்டு. இங்கே அமர்ந்து எழுதி முடித்த நாவலுக்கு அகாதமி விருது கிடைத்தது. ஜன்னலைத் திறந்ததும் வானம். அதற்குக் கீழே கருமை நிறத்தில் மரங்களின் பசுமை. அதற்கிடையே தலையுயர்த்தி நிற்கும் சில கட்டடங்கள். சூரிய அஸ்தமனத்தின் சிவந்த மேகங்கள். மரங்களுக்கிடையிலூடே மறையும் கரிய பாதை. இரவுநேர நகரத்தில் எரியும் நியான் வெளிச்சத்தின் நிறங்கள். அறையிலிருந்தும் பார்க்கும் காட்சிகளை மொஹ்ஸீனாவுக்கு வாட்ஸ் அப் செய்து அனுப்பினேன். அவளது முதல் கேரள வருகையை முன்னிட்டு எனது அறைக்கு வெளியே தெரியும் கேரளம் என்கிற டேக்- ல் படங்களை அனுப்பினேன். மகிழ்ச்சியினுடைய, வியப்பினுடைய குறியீடுகளை அனுப்பித் தந்து அவள் மனம் திறந்தாள்.
மொஹ்ஸீனாவைச் சந்திக்கவேண்டும் என்கிற தீர்மானம் சட்டென ஏற்பட்டதல்ல. கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்யப்பட்ட ஒரு திரைப்படத்திற்கு அவளே கதாநாயகி என்கிற மின்னஞ்சல் அவளுக்கு அனுப்பப்பட்டது. அதற்காகத்தான் இந்தப் பயணம். மும்பை விளம்பரப் படங்களிலிருந்து ரவிச்சந்திரன் கண்டடைந்த இளம்பெண். அவள் ரவியின் காமிரா வழியாக முதலில் ஒளிர்ந்து வந்தாள். மிக்ஸட் காம்ப்ளக்ஷனில் ஒரு முகம், தேவையெனில் இதோ இங்கே இருக்கிறது என்று அன்றைக்கே சொல்லியிருந்தான். என் மேசையில், மூன்று நாட்களுக்கான பணிகளைத் தயாரித்து வைத்திருந்தேன். போட்டோ ஷாட், விரிவான திரைக்கதை வாசிப்பு, திரைப்படத்தின் முக்கியச் சம்பவங்கள் நடக்கும் மட்டாஞ்சேரியின் தெருக்களில் அலைந்து திரிய ஒருநாள். மற்றவை அவளைத் தீர்மானித்த பிறகு, கன்னியாகுமரிக்கு ஒரு கார் பயணம். ஏழு நாட்கள் அவள் எங்களுடன் இருக்கவேண்டும் என்கிற ஒப்பந்தம் மின்னஞ்சலில் இருந்தது. அதை அவள் நிறைந்த மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டாள்.
‘கிரேட் கிலாட்… பிகோஸ் ஐயம் ஸோ கம்ப்ர்ட்டபிள் வித் யூ…’
விமானம் மதியம் வந்து சேரும். இருப்பினும் பேக்கேஜ் கிளியர் செய்து வெளியே வர எப்படியும் கூடுதலாக ஒரு மணிநேரம் தேவைப்படும். எனவே சற்றுத் தாமதமானாலும் பரவாயில்லை. செல்ப் டிரைவ் செய்து முப்பத்தைந்து நிமிடத்தில் விமான நிலையத்தை எட்டிவிடுவேன். லிப்டில் கீழே வந்த போது அப்பார்ட்மெண்ட் மேலாளர் பார்க்க விரும்புவதாக வரவேற்பறை ஸெரீன் சொன்னாள்.
‘ஜெஸீந்தா லீவ் முடிச்சிட்டு வந்துட்டாங்களா…?’
‘மேம் ஆபீஸ்ல இருக்காங்க…’
‘அவசரமா…?‘
‘யெஸ் சார். எப்ப வந்தாலும் பார்க்கணும்னு மேம் சொல்லியிருந்தாங்க…?‘
ஜெஸீந்தாவின் அறையில் அவள் யாரிடமோ உரத்தக் குரலில் சண்டையிடுவதைப்போல பேசிக்கொண்டிருந்தாள். கதவைத் தட்டியபோது உரத்த பேச்சுக்கிடையிலும் ‘வாங்க..’ என்றாள். என்னைப் பார்த்ததும் போனில் பேசிக்கொண்டிருந்தவரிடம் ஏதோ காரணத்தைச் சொல்லி உரையாடலைத் துண்டித்துக்கொண்டாள். பிறகு அதே குரலில் என்னிடம் பேசினாள்.
‘இருந்தாலும் அனீஷ், நீங்க பண்ணின காரியம் சரியில்ல… எதுக்காக நீங்க சந்தோஷுக்குப் பணம் குடுத்தீங்க…?’
சட்டென எனக்கு எதுவும் விளங்கவில்லை.
‘என்ன நடந்துச்சு…?’
‘திரும்பி வந்தபோது, நீங்க அந்தச் செக்யூரிட்டிக்குப் பணம் ஏதாவது குடுத்தீங்களா…?’
‘ஆமாம்… குடுத்தேன்… போன தடவை நான் புறப்படற நேரத்துல கொஞ்சம் லக்கேஜ் இருந்துச்சு… காலைல கௌம்புறப்ப சந்தோஷை உதவிக்குக் கூப்பிட்டேன். அதுல ஏதாச்சும் தப்பு இருக்குதா…?’
‘தயவு செஞ்சு அனீஷ், அவனுங்களுக்கெல்லாம் பணம் குடுக்காதீங்க…’
‘என்ன ஜெஸீந்தா… என்ன ஆச்சு. நமக்கு உதவி பண்ணின ஒருத்தருக்குச் சந்தோசமா குடுக்கறோம் அவ்வளவுதானே…’
‘அனீஷ், நான் அனுபவிச்ச டென்சன் என்னன்னு தெரியுமா…’ ஜெஸீந்தாவின் குரல் சற்றுத் தணிந்தது. அப்போதும் அவளது குரலின் உச்சம் குறைந்திருக்கவில்லை. வழக்கமாக வேலை முடிந்ததும் ஒரு நிமிடம் கூட அங்கு நிற்காமல் கிடைக்கும் பஸ்ஸில் வீட்டுக்கு விரைவான். வீட்டில் அவனுக்கு இரண்டு குழந்தைகள். மனைவி லைஸா, இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்து, குளித்து முடித்த தொண்ணூறாம் நாள் வேலியருகில் வந்து கய்யும்மாவிடம் பேசிக்கொண்டிருந்தவள் பிற்பாடு காணாமல் போனாள். குழந்தை ஐந்து நாட்கள் இடைவிடாமல் அழுதுகொண்டிருந்தது. அப்போதெல்லாம் சந்தோஷின் அம்மா புட்டிப் பாலைக்கொடுத்து அழுகையை நிறுத்தினாள். சந்தோஷும் போலீஸ்காரர்களும் ஊர் முழுக்கத் தேடினார்கள். கடைசியில் ஐந்தாவது நாளன்று நான்குமணிக்குப்பிறகு, மண்ணெண்ணெய் வியாபாரத்திற்கு வரும் பேபிக்குட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டாள் லைஸா. தன்னை யாரும் கடத்திப் போகவில்லையென்றும், தனது விருப்பத்தின்பேரில் வெளியேறியதாகவும் சட்டப்படி சந்தோஷின் மனைவி இல்லையென்றும் தற்போது கோயில் எதிரிலும், குருமண்டபத்தின் எதிரிலும் நின்று பேபிக்குட்டியால் தாலி கட்டப்பட்ட தான் அந்த ஆளுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதாகவும் எழுதிக் கொடுத்தாள். போலீஸ் ஸ்டேஷனில் லைஸா இருப்பதை அறிந்த சந்தோஷ் ஓடி வந்தான். அப்போது அவன் கடும் வசைகளைத் தூற்றிக்கொண்டிருந்தான். வாயால் சொல்லக்கூடாத வார்த்தைகளைச் சொன்னதற்காகப் பாரா நின்றிருந்த குண்டு போலீஸ்காரன் ஒரு அடி கொடுத்தான்.
‘பொஞ்சாதி ஓடிப்போனதோட வருத்தம் சாருக்குப் புரியாது’ என்று கத்தியபடி லைஸாவையும் அவளுடன் நின்றிருந்த மண்ணெண்ணெய் வியாபாரி பேபிக் குட்டியையும் திட்டினான். பிறகு அவனுடைய தாய் தந்தையரையும் ஊரிலுள்ள மாற்றான் மனைவிகளைக் கடத்திச் செல்பவன்களையெல்லாம் திட்டித் தீர்த்தான். அதைக் கேட்ட போலீஸ்காரர்கள் வாயடைத்து நின்றார்கள். அவர்கள் சொல்வதைக் காட்டிலும் அதிகமான வசைகளைச் சொல்கிறான். அவையெல்லாம் தடித்த வார்த்தைகள் என்றும் ஒருமுறை கேட்டுவிட்டால் காதில் அறையவேண்டிய அவசியமில்லை. அந்த வசைகளைக் கேட்டாலே செவிப்பறை அடைத்துவிடுமென்று போலீஸ்காரர்களுக்குத் தோன்றியது.
ஏதோ ஒரு போலீஸ்காரன் அந்தக் கெட்டவார்த்தைகளை மொபைல் போனில் பதிவு செய்துகொண்டிருந்தான். கெட்ட வார்த்தைகளைக் கேட்ட பிறகும் எந்தக் கூச்சமுமின்றிச் சந்தோஷின் எதிரிலேயே போலீஸ்காரனிடம், ‘சார், எங்க கூடவே வந்து வண்டியில ஏறுறதுக்கு உதவிபண்ணுங்க.’ என்று லைஸா சொன்னபோது வாயைப் பிளந்து அவளது வேசித்தனத்தைச் சொல்லிக் கூச்சலிட்டான். சந்தோஷ் ஸ்டேஷன் எதிரில் மல்லாந்து படுத்தான். அப்போது அவனது குரல் உச்சத்தைத் தொட்டது. லைஸாவும் பேபிக்குட்டியும் சுற்றிலும் நடப்பது எதுவும் தங்களுக்குப் பாதகமில்லை, ஊர்க்காரர்கள் ஏதோ நாடகம் பார்க்கிறார்கள், நாங்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அல்லர் என்கிற தோரணையில் நிறுத்தப்பட்டிருந்த வாடகை காரிலேறிப் போனார்கள். போகும்போது யாருக்கும் தெரியாமல் போலீஸ்காரனின் கையை நன்றியுடன் பற்றினாள் லைஸா. அது கையூட்டு என்பதைப் படுத்தபடியே சந்தோஷ் புரிந்துகொண்டான்.
‘காசை வாங்கிட்டு பொம்பளையக் கூட்டிக் குடுக்கற போலீஸ்காரா’ என்று காதைக் கூச வைக்கும் வசையைச் சொன்னபோது போலீஸ்காரன் சந்தோசைத் தூக்கி நிறுத்தி ஓங்கி அடித்தான். சுயவுணர்வைக் கொண்ட ஒருவன், அந்த அடியில் அப்போதே செத்துப் போயிருப்பான். ஆனால் அனைத்தையும் இழந்த சந்தோஷ் மீண்டும் வீறுகொண்டு வசையின் அளவைக் கூட்டிக்கொண்டிருந்தான். இரண்டு போலீஸ்காரர்கள் சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனுக்குள் இழுத்துச் சென்றார்கள். அக்காட்சி நிறைவடைந்ததும் பொதுமக்கள் கலைந்து போனார்கள்.
பின்னர், சந்தோஷ் குழந்தைகளுக்காக மட்டும் வாழ்ந்தான். பிளம்பிங் வேலைக்காகவும் எலக்ட்ரிக் வேலைக்காகவும் யாராவது அழைத்தால் போய்ச் செய்து தருவான். கிடைக்கும் பணம் முழுவதையும் அம்மாவிடம் ஒப்படைக்காமல் கொஞ்சம் காசை பிவரேஜ்காரனுக்குக் கொடுத்து வாழ்ந்து வந்தான். அச்சமயத்தில் மீண்டும் மண்ணெண்ணெய் வியாபாரி பேபிக்குட்டியைப் பார்த்தான். அக்காட்சியை மற்றவர்களும் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனவே, இவர்களிருவரும் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இல்லையென்றால் இருவரில் ஒருவர் இறக்க நேர்ந்திருக்கும். அச்சம்பவத்திற்குப் பிறகு ஊர்க்காரர்கள் எல்லோரும் சேர்ந்து சந்தோஷை மது விடுதலை மையத்தில் சேர்த்தார்கள். சமுதாயத்திற்குப் பயன்படக் கூடியவன் சந்தோஷ் என்பதை மது விடுதலை மையத்தில் சேர்க்கும்போது பஞ்சாயத்து உறுப்பினரான சதாசிவன், அருட்தந்தையிடம் சொன்னான்:
‘சாராயம் குடிக்கற இந்தச் சந்தோஷ்; பாவம் பாதர். ஊர் ஆளுங்களுக்கு ரொம்பவும் வேண்டப்பட்டவன்… இவன் இல்லாம போனா அந்தக் கொழந்தைகளும் கெழவியும் ரொம்பக் கஷ்டப்படுவாங்க…‘ வழக்கமாக, குடிகாரர்களை இத்தகைய மையங்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்போது, உதறித்தள்ளி ஓட்டம் பிடிப்பார்கள். சந்தோஷ் அருட்தந்தையின் கையைப் பற்றி உள்ளே போனான். ‘இந்த வெகுளிக்குத் திருந்தவேண்டுமென்றும், இப்பாவத்திலிருந்து விடுதலை பெறவேண்டுமென்றும் ஆசை உண்டு. இவனை நானொரு சிறந்த பிரஜை ஆக்குவேன். கர்த்தரைச் சுற்றிலும் நன்மையின் தேவதைகளை நிற்க வைப்பேன்’ என்று அழைத்து வந்தவர்களிடம் சொல்லிவிட்டு அருட்தந்தை உள்ளே அழைத்துப் போனார். மக்கள் சந்தோஷின் கதையை மறந்து போனார்கள். மையத்தின் அருட்தந்தை சந்தோஷுக்கு ஒரு நிரந்தர வேலை இருக்கட்டும் என்று சொல்லி ஸ்கைஃபை அப்பார்ட்மெண்டில் ஒப்படைத்தார்.
‘இவனுக்குத் தெரியாதது எதுவுமில்ல. ஒரு வீட்டுக்குத் தேவைப்படற எல்லா வேலைகளையும் செய்வான். இவனைக் கூட வெச்சுகிட்டா உங்களுக்கு ஒத்தாசையா இருப்பான்’ என்று அருட்தந்தை சொன்னபோது ஜெஸீந்தா சந்தோஷை மேலாளரிடம் ஒப்படைத்தாள். ஒரே சபையைச் சேர்ந்த வாழ்க்கையில், வழி நடத்துபவனின் அனுமதியின் பேரில் காரியங்களை முன்னெடுத்துச் செல்பவள் ஜெஸீந்தா. வெறும் எளிய வார்த்தைகளால் பார்க்கலாம் என்று அருட்தந்தையைத் தட்டிக் கழிக்காமல் செக்யூரிட்டி வேலையை உறுதிப்படுத்தினாள். அவன் போனதும் அருட்தந்தை சொன்னார்: ‘ஜெஸீந்தா, அந்தப் பையனை நல்லா பார்த்துக்கணும். அவனொரு அப்பாவி… ஆனா, பணத்தை மட்டும் குடுத்திராதே. அதை அவனோட அம்மாகிட்ட ஒப்படைக்கணும். காசு கெடைச்சா சிலர் வழி மாறிப் போயிடுவாங்க… அந்தக் கசப்பான அனுபவத்தோட சாட்சியம் முடிச்சு, அதிலேர்ந்து மீட்டெடுத்து இவனை உன்கிட்ட ஒப்படைக்கிறேன். இருந்தாலும் அவனோட விஷயத்துல காசுங்கறது சாத்தானைக் கூடச் சேர்க்கற மாதிரி. என்ன நடக்கும்னு சொல்ல முடியாது. காசு கைக்கு வந்திட்டா அப்புறம் எந்தச் சிலுவையாலும் அவனைச் சரிப்படுத்த முடியாது. கொஞ்ச காலம் அந்த விஷயத்தைக் கவனத்துல வெச்சிட்டா போதும்.’ அருட்தந்தை சொன்னது உண்மையாக இருந்தது. தன்னுடன் வைத்துக்கொள்ளத் தகுந்த ஒரு வேலையாள் இத்தனை காலம் கிடைக்கவில்லை. பைப் வேலையாக இருந்தாலும், எலக்ட்ரிக் வேலையாக இருந்தாலும் அல்லது லிப்டாக இருந்தாலும் பழுது பார்த்துவிடுவான். ‘பழசையெல்லாம் மறந்து நிம்மதியாகப் போயிட்டிருந்தான். சம்பளத்தைச் சந்தோஷோட அம்மாக்கிட்ட குடுப்பேன். அவன் கையில் அதிகமான காசு வராம பாத்துக்குவேன். அப்பத்தான் அனீஷ் அவனுக்கு இருநூறு ரூபாய் குடுத்தீங்க… அது அவனுக்கு வெல்லக்கட்டி மாதிரி… குடியை நிறுத்தி நல்லபடியா போய்க்கிட்டிருந்தப்ப கைநெறய காசு கெடைக்குது…
கெடைச்சதும் செலவு பண்ணணுமே. டூட்டியில இருக்கற ரிசப்ஷன் பொண்ணு சொன்னா, ‘மேடம் சந்தோஷ் என்னமோ வழக்கத்துக்கு மாறா தெரியறான்… இன்னைக்கு அதிகமா சிரிக்கறான். போறவங்க வர்றவங்ககிட்டயெல்லாம் சும்மா ஒவ்வொன்னா பேசிக்கிட்டிருக்கான்…‘நான் கூப்பிட்டுக் கேட்டேன். ஆனா அப்பவும் அவன் குடிச்சிருக்கான்னு கண்டுபிடிக்க முடியல. பெறகு மதியம் வரைக்கும் எந்தப் பிரச்சினையும் கெடையாது… நாலுமணிக்குப் பெறகு அவனைக் கூப்பிட்டேன். அப்பவும் எந்தப் பிரச்சினையும் இல்ல. சாயங்காலம் வாட்டர் டேங்க்ல ஒரு ரிப்பேர் வேலைவந்தப்ப அதைச் சரிப்படுத்தறதுக்கு ஒரு ஆளை கூட்டிட்டு வர அனுப்பினேன். ஸ்கூட்டர் எடுக்கட்டுமான்னு கேட்டு அதையும் எடுத்திட்டுப் போனான். நேரம் அதிகமானதால வந்த ஆளைக் கொண்டு போய் விடறதுக்காக ஸ்கூட்டர் எடுத்தான். அதுக்குப் பெறகுத்தான் பிரச்சினை தொடங்குச்சு… அதெல்லாம் புலிவாலாயிடுச்சு… எந்தத் தகவலும் இல்ல… கெடைச்ச காசு எல்லாத்துக்கும் லிக்கர் வாங்கிக் குடிச்சிட்டு அவன் வண்டி ஓட்டியிருக்கான்னு போலீஸ்காரன் கூப்பிட்டுச் சொன்னப்பதான் எனக்குத் தெரிஞ்சது. அனீஷ் அந்த ஸ்கூட்டரைப் பார்க்கணும். அதைப் பார்த்த ஓட்டுனவனோட நெலைமையை ஊகிக்க முடியாது… ஆனா அவன் எப்படித் தப்பிச்சான்ங்கறது இப்பவும் எனக்கு ஆச்சர்யமா இருக்குது. அவனைக் காப்பாத்தறதுக்காக ஒதுங்கின ரெண்டு கார்லயும் ஒரு பைக்கலயும் பயணம் பண்ணினவங்க இப்பவும் ஆஸ்பத்திரில… அதோட கேஸ் வேற… இதெல்லாம் அனீஷ் குடுத்த அந்த இரு நூறு ரூபாவோட வேலை… ஸ்டேஷனுக்குப் போனப்பத்தான் அவன் பேர்ல வேற சில கேஸ்களும் இருக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன்…
‘சந்தோஷ் இப்ப எங்க… அவனுக்கு ஏதாச்சும்…’
என்னுடைய பதட்டத்தைப் பார்த்து ஜெஸீந்தா சற்றுப் பொறுமையடைந்தாள்.
‘அவனை வேலையை விட்டு நிறுத்திட்டேன். இந்த மாதிரியான ஆளுங்களை வேலைக்கு வெச்சா நமக்குப் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வர நேரம் இருக்காது…’
‘நல்ல ஒரு இளைஞனா இருந்தான்.’
‘அது நிஜம்தான்… ஆனா அவனை அனீஷ் வழி தவற வச்சிட்டீங்க… இனியாவது ஆளையும் தரத்தையும் பார்த்து எதையாவது பண்ணுங்க…’
மனுஷனோட குணத்தைத் தெறந்து பார்க்கமுடியாதே ஜெஸீந்தா…’
‘இல்ல… நான் சொன்னேன். அவ்வளவுதான்…’
விமான நிலையத்தை நோக்கி காரைச் செலுத்திக்கொண்டிருந்தபோது ஏதோவோர் அலைக்கழிப்பு என்னைச் சூழ்ந்துகொள்வதைப் போல. ஒவ்வொரு புராஜக்ட்டும் ஒரு படைப்பு. அதற்கான நகர்வுகளில் சில மனத்தடைகள் ஏற்பட்டு என் வழிகளைத் தடுப்பதுண்டு. மொஹ்ஸீனாவை நான் சந்திக்கச் செல்வது முதல்முறை. அந்தச் சந்திப்புக்கு முன்னர்ச் சற்றும் விரும்பத்தகாத செய்தி என்னை ஆட்டுவிக்கிறது. அல்லது நிகழக் கூடாத ஏதோ நடக்கப் போகிறது என்கிற பீதி என்னைக் கீழ்ப்படுத்துகிறது. விமான நிலையத்திற்கான திருப்பத்தைத் தாண்டியதும் ஸ்கூட்டர்காரன் ஒருவன் ஒருவழிப் பாதையை மீறி எனது காரை திடுக்கிட வைத்தான். நான் வெலவெலத்து போய் அவனைக் காப்பாற்றுவதற்காக வாய்விட்டு அலறி, பிரேக்கை மிதித்து நிறுத்தினேன். அந்நிமிடம் வானத்தில் மின்னலைப் போல ஒரு நெருப்புக்கோளம் வெடித்துச் சிதறியது. ஒளிரும் நெருப்புத் துண்டுகள் பெரிதாகி, தெறித்து விழுவதைக் காரிலிருந்து கவனித்தேன். நிறையப் பேர் என் காரை நோக்கி ஓடி வருவதையும் ஸ்கூட்டர்காரன் என் காரிலிருந்து தப்பித்து, சாலையின் நடுப்பகுதியைக் கடந்து, பாய்ந்து போவதையும் பார்த்தேன். ஆட்கள் என் காரைத் தாண்டி விமான நிலையத்தை நோக்கி விரைந்தார்கள். வானத்தில் ஒரு விமானம் தீப்பற்றி வெடித்தது என்று ஓடிக்கொண்டிருந்தவர்கள் சொல்வது எனக்குக்கேட்டது. நொடிப்பொழுதில் என்னெதிரில் சாலைத்தடுப்புகள் உயர்ந்தன.