பாதத்தில் ஈரம் படருவதைப் போலிருந்தது. உறக்கம் மெல்ல வடிந்து அசபு ஒருமுறை திரும்பிப் படுத்தான். கால் பெருவிரலால் போர்வையைத் தேடி னான். அகப்படவில்லை. அம்மாதான் இப்படிச் செய் வாள். குளிர்ந்த காற்றுப் பாதத்தைத் தழுவ அம்மாபோர்வையை எடுத்துச் சென்றிருந்தாள். அசபு கட்டிலுக்குக் கீழே பார்த்தான். அப்பா இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தார். அவரது தலையணைக்கு அடியில் ஒரு சிகரட் பாக்கட் நசுங்கிக் கிடந்தது. சீராகக் குறட்டை விட்டுக் கண்ணை மூடியிருந்தாலும் எதையோ பார்ப்பது போலப் பாவைகள் உருண்டுகொண்டிருந்தன. அசபு நெஞ்சுக்குக் குறுக்காக முழங்காலை உயர்த்தியபடி ஜன்னலை நோக்கி திரும்பிக் கொண்டான். சாம்பல் நிற அதிகாலை வானம்.இன்னும் ஒரேயொரு நட்சத்திரம் மட்டுமே எஞ்சி யிருக்கிறது. அதுவும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே மறைந்து விடுமளவு குறைந்த சரிகை வெளிச்சத்தையே பிரதிபலிக்கிறது. அசபு எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும், ஒரு நட்சத்திரம் வீட்டுக்குப்போய்விடுகிற கடைசித் தருணத்தைப் பார்க்கவே முடிந்ததில்லை. தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களிலிருந்து நீர் வடிந்து கொண்டிருக்கும் பிரச்சினை வந்த நேரத்தில் அப்பா இவனது கட்டிலை ஜன்னலையொட்டி நகர்த்தி வைத்து ஜன்னல் வழியான ஒரு உலகைக் காட்டினார். அந்தக் கட்டிலில் அசபு யாரையும் படுக்கவிடுவதில்லை. பழைய மரத்தாலான அந்த ஜன்னலின் வழியே ஒரு சதுரத்துண்டு ஆகாயம் அசபுவிற்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் கொண்டதா யிருந்தது. ஜன்னலின் கீழ்விளிம்பிலிருந்து தோன்றி மேல் விளிம்பில் சென்று மறையும் பறவைகள், அபூர்வமாகக் கடந்து செல்லும் எரிநட்சத்திரம் எனமுடிவில்லாத ஓவியங்கள் மாறுகின்ற கித்தானைப் போல் அந்த ஜன்னல் இருந்தது. இரவு நேரங்களில் ஆற்று மணலில் இருக்கின்ற காக்கைப் பொன்துகள் அளவிலான நட்சத்திரத்தை அசபு நுணுக்கி நுணுக்கிப் பார்த்து கண்டுபிடிப்பான். அம்மாவை கூப்பிட்டுக் காட்டுகையில் அவளால் அதைப் பார்க்கவே முடியாது. ஒரு கட்டத்தில் அவள் சலித்தபடி திரும்பிப் போய்விடுவாள். அப்போது, தன் கண்களுக்கு மட்டுமே தெரிகின்ற அந்தக் குட்டி நட்சத்திரத்தைப் பார்த்தபடி ஜன்னல் திட்டில் உறங்கிவிடுவான்.அசபுவிற்குப் பயமும் அழுகையும் வரும். மிகவும் தனியனாகிவிட்டதைப் போலவும் அம்மா வரமுடி யாத இடத்தில் சிக்கிக்கொண்டதாகவும் நினைத்து அஞ்சுவான்.
தானிய மண்டிகள் அடைத்துக் கிடக்கின்ற கிட்டங்கித் தெரு. நொதித்து அடங்கிக் கிடக்கும் திராவகத்தைப் போன்ற கலங்கலான அசூயை விரிகின்ற சகதிக்காடாகவும், அந்தச் சகதியிலேயே ஊறிக்கிடக்கின்ற தானிய முத்துக்களும், அவிழ்த்து விடப்பட்டு நடுரோட்டிலேயே உறங்குகின்ற திமிர்பசுக்களும், ஆங்காங்கு நிறுத்தி வைத்துச் சென்றுவிட்ட கைவண்டிகளும் கிட்டங்கித் தெருவிற்கு அசோபையை மட்டுமே தருகின்றன. தூசி படிந்த ஜன்னல் திட்டுகளில் கேவுகின்ற புறாக்கள் கிட்டங்கித் தெருவிற்குச் சாம்பல் நிறத்தை தங்களுடைய குரல்களால் கொண்டு வருகின்றன.
அசபு ஜன்னல் திட்டில் முகம் வைத்திருந்தான். கீழே சமையலறையில் அம்மா கத்தினாள்.
“அசபு, இன்னிக்கு போவப்படாது.”
அவள் கூறிய பிறகுதான் கிட்டங்கித் தெருவின் முனையை உன்னித்தான். பூட்டிக் கிடந்த சிமிட்டி கடை கிட்டங்கியின் முன் டூமன் நின்றிருந்தான். புகையைப் போல விரவிக்கிடந்த சிமிண்ட் படலத் தின் நடுவே சூம்பித் தனியாகத் தொங்கிய தனதுவலது காலை தூரிகை போலச் சுழற்றி வினோத வட்டங்களை வரைந்தபடி இருந்தான் அவன். மாடிஜன்னலிலிருந்து அசபுவிற்கு அவை பிரம்மாண்ட மான பூக்களைப் போலத் தோன்றின. சிமிண்ட்படலம் குளிர்கால ஏரியின் மேற்பரப்பைப் போலும், அதன் மீதான பூங்கொத்துகளின் வட்டத்திற்கு நடுவே மாட்டிக்கொண்டு அலைபவனாக டூமனும் தெரிந் தனர்.
டூமனால் கூற முடியாத முன் வரலாறு:
அவனுக்கு ஒரு பெயர் இருந்தது. எல்லா ஊர்களிலும் கொழுத்த குழந்தை ஒன்றிற்குப் பிரியமுடன் வைக்கப்படுகிற பெயர் அது. அவர்களது வீட்டிற்குப் பின்புறம் சிறிய வாரச்சந்தை கூடுகின்ற தினங்கள் கருவாட்டு மணம் மிகுந்திருக்கும் காலை வேளைகளைக்கொண்டவை. அந்தச் சிறிய வீட்டின் ஜன்னலைத் திறந்தால் வாரச்சந்தையின் எளிய காட்சிகள் ஊடாடும். அம்மாவிற்கு இவனது ஐந்து வயதுவரை சூம்பிய கால்மீது தீராத சோகமிருக்க, தெளிவான இவனது பேச்சுமொழி ஒன்றே அவளுக்கு ஆறுதலாயிருந்தது. ஆறுவயது சிறுவனின் மொழியானது கண்களால் பார்க்கப்படுகின்ற நிகழ்காலத்திலேயே இருக்கும் என்பதைப் பொய்யாக்கும் விதம் டூமன் ஏதாவதொரு புள்ளியில் லயித்தபடி இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் யூகமாகப் பேசும்போது அம்மாவிற்கு மேலும் அழுகையும் சிரிப்புமே வரும். வாசலில் கையேந்தும் யோகியர் அனைவரும் ஒச்சமான பிள்ளைக்குச் சூட்சுமத்தில் ஒரு கண் விழித்திருக்கும் என்பார்கள்.
டூமன், சந்தை நாட்களின்போது தவறாமல் சென்றமர்கிற இடம் சிச்சாபாய் மைதடவும் பேட்டை வாசல். சிச்சாபாய் வாசனைத் திரவியங்கள் விற்பவர்.அவரிடமிருக்கும் சின்னஞ்சிறிய சீசாக்களில் மிட்டாய் நிற திரவங்களை நிரப்பிக் கைக்குட்டையின் நுனியில் தேய்த்து வாசனையைச் சதா காற்றில் அப்படியும் இப்படியும் அசைத்து விரியச் செய்பவர். சிச்சா பாய்க்கு இன்னொரு தொழிலும் இருந்தது. அவர் வெற்றிலை மைதடவும் குறிகாரர். நீரிறைக்கும் வாளி காணாமல் போனாலும், கிடை விட்டிருந்த பட்டி ஆடுகளில் குட்டி ஒன்று குறைந்தாலும், அரக்கு நிரப்பப்பட்ட தண்டட்டியில் இரவோடு இரவாக ஒன்று குறைந்தாலும் அவரிடம் தெண்டனிட்டு மை போட்டு விடுவது கிராமவாசிகளின் வழக்கம். அப்போதெல்லாம் சிச்சா தனது நறுமணப்பெட்டியை மூடிவிடுவார். அந்தக் கைக்குட்டையை மடித்து வைத்து விடுவார். வேட்டை நாய் நாசி தூக்கிநுகர்வது போலச் சில நிமிடம் காற்றை நுகர்வார்.
“திரவிய வாடை போயிடுச்சா”வெனத் திரும்பத்திரும்பக் கேட்டுக் கொள்வார். அவரது நாசி மேலும்வானை நோக்கியே இருக்கும். சில கணங்களுக்குப் பிறகு அங்கே மெலிதாய் ஒரு கந்தக நெடி அல்லதுமூட்டமிடுகிற வாடை சூழும். முற்றிய வெற்றிலை யின் நடுவே, துளி கண் மையை வைத்து ஆட்காட்டி விரலால் வட்டமாகக் குழைத்தபடி சிச்சாவின் உதடுகள் கசந்த சிரிப்புடன் யாரையோ வரவேற்கும். சுற்றி அமர்ந்திருக்கும் கிராமவாசிகள் அப்போதுமூர்ச்சையான அளவிற்கு அமைதி காப்பார்கள். சிவந்து கலங்கிய கண்களுடன் சிச்சாவின் தலை அவருக்கு மட்டுமே கேட்கின்ற தாளமொன்றிற்கு அசைவது போல மை குலைக்கின்ற விரல் ஓட்டத்துடன் இணைந்தபடி லயம் பிடிக்கும். ஒரு கணத்தில் அவரது கண்கள் உறைந்துவிட்ட கண்ணாடிப் பாளம் போலாகி மெல்லத் தணிந்து வெற்றிலையின் வட்டக்கருப்பை உன்னிக்கும். அப்போது அவரது கண்களின் உயிர்ப்புச் சுத்தமாக இல்லாமலாகி நீர் உறைந்துவிட்ட குளத்தைப் போன்ற அசையாத கண்களுக்குள் ஏதோ ஒரு மர்மவிசாரணை நிகழ்வதைப் பார்த்தவாறிருப்பார்கள், சிச்சாவின் கண்களில் அப்போது ஒரு ஜன்னல் திறக்கும். சிச்சா அந்த ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பார். ஜன்னலுக்குக் கீழே செல்கின்ற எண்ணற்ற மனித தலைகளுக்கு நடுவே அவர் தேடி வந்திருப்பவனை அடையாளமிட்டு காட்ட வந்திருக்கும் அவரது பிரத்யேக ஒற்றன் வழக்கம் போலத் தனது முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு, குறிப்பிட்ட ஒருவனை அடையாளம் காட்டுவான். சிச்சா பணிவான குரலில் அவன்தானா என இருமுறை கேட்டு உறுதி செய்து கொள்வார். பின்னர் அந்த ஜன்னலை மூடிவிட்டு, தனக்குள் திரும்பி நடந்து வந்தவராகத் தலையை உதறிக்கொண்டு சுயநினைவிற்குத் திரும்புவார்.
எப்போதும்போல டூமன் அச்சமும் சுவாரசிய முமாகச் சிச்சாவைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தத்தினத்தில் வந்திருந்த பெண் அவரது காலைக் கட்டிகதற ஆரம்பித்தாள். அவளை எழுப்பிவிடச் சிச்சா முயலவே இல்லை. அமைதியாக நறுமணப் பெட்டி யை மூடி, கைக்குட்டையை வீசி எறிந்துவிட்டுத் தரையில் அமர்ந்தார். மார்பு துடிக்க அழுதவளின் முகத்தைப் பார்த்தவாறு, “ஒத்தை பிள்ளையல்லோ... ஒத்தை பிள்ளை” என அரற்றி விம்மத் தொடங் கினார். அந்தப் பெண்ணுடன் வந்திருந்தவன், சற்றுத் தூரத்திலேயே முழந்தாளிட்டு மண்ணில் முகம் கவிழ்த்தவாறு “ஐயா வழிகாட்டி கூட்டி வாங்கையா” எனக் கதறினான். சிச்சா தலையைஉதறி நிமிர்ந்தார். அந்தப் பெண்ணிடம் மச்சம் கேட்டார்.
அவள் சிறிய கால் தண்டையையும், பெயர் சொல்லாது கோர்த்த கைகாப்பையும் அழுதபடி எடுத்துநீட்டினாள். கைகள் நடுங்கியவாறு அதை வாங்கி நுகர்ந்தபடி கண்களை மூடிக்கொண்டார். தலைதன்னிச்சையாக நிமிர நாசி விடைத்தபடி கரி மணத்தைத் தேடியது. ஒவ்வொரு முறையும் சிச்சாதனக்குள் மூழ்கிச் சென்று திரும்புகின்ற முகச் சலனங்களைத் துளித்துளியாகப் பார்த்தபடி அதிலேயே ஊறிக் கிடக்கும் டூமனின் கண்கள் இன்று ஆவேசமாக நுகர்கின்ற நாசியிலேயே தேங்கிக் கிடக்கும்போது டூமனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. துளி அசைந்துவிடாத பார்வையுடன் அவன் தன்சூம்பிய காலை இழுத்தபடி சிச்சாவின் அருகில்சென்றான். காதில் எதுவோ சட்டென ஒட்டிஅடைத்து விட்டது போன்ற கூர்அமைதி மூளைக்குள் பரவியது. வெற்றிலையில் மை துலக்கிய சிச்சாவின் விரல்கள் நின்றன. அவரது முகம் தளர்ந்தது. கூசிய கண்களைத் திறந்தபடி அவர்தன் காலுக்குக் கீழே புதிய மிருகமெனச் சுற்றுகிற டூமனைப் பார்த்தார்.
மெல்ல அவனது தலைமயிரைப் பற்றி நிமிர்த்திக் கண்களைப் பார்த்தார். அவனது வாயிலிருந்து கர் கர் என்ற வினோத ஒலிக்கசிவு வந்துகொண்டிருக்க சிச்சா காதருகே குனிந்து ‘கரிமணம் வந்துட்டுதா’ என்றார். டூமன் கர் கர் என்றான். சிச்சா அந்த மச்சங்களை உள்ளங்கையில் குவித்து டூமனின் நாசி அருகில் நீட்டினார். டூமனின் நாசிகள் காற்றைக் கொத்துவது போல் விடைத்து அடங்கின. அவனது கண்கள் அல்லி மிதக்கும் ஒரு குளத்தின் பச்சையம் படிந்த ஆட்கள் இறங்காத மூலைக்குச் சென்றன. டூமனிடம் கொஞ்சமே மிச்சம் இருந்த தன்னிலை பதறியது. அதன் பச்சைய விரிப்புகளும், நீர் படலத் தின் மேல் சிறிய நாகங்களைப் போல் சுருண்டு வந்து கற்பாளங்களைக் கொத்துகின்ற அலைகளும் அதன் ஆழங்களைப் பீதியாகப் பிரதிபலித்தன. இவன் தன் கண்களை அங்கிருந்து விலக்க விரும்பினான். யாரோ டூமனின் தலையை நீருக்குள் அமிழ்த்தத் தொடங்கினர். நாசியில் பச்சையப் படலங்கள் ஓங்கரிக்கச் செய்கின்ற கசப்புடன் ஏறின.
அவன் கத்த முயன்றான். ஆனால் கண்கள் திறந்தபடி நீருக்குள் மூழ்க, அந்தக் கண்களுக்குள்ளேயே ஒரு நீர்க்குமிழிக்குள் அமர்ந்து செல்பவனைப் போல அவன் இருந்தான். அசைவற்ற ஆழநீர்ப்பரப்பின் கருமையினூடாக அவன் ஊறிக்கிடந்த ஒரு பொம்மையைக் கண்டான். அதன் கண்கள் பாதித் திறந்திருக்க உதடுகள் பாதிச் சிரிப்பில் நின்றிருந்தன. யாரோ டூமனின் தலையைப் பிடித்து உலுக்கினார்கள். சிச்சாவின் கண்கள்தான் முதலில் துலக்கமாகின. டூமனின் உடல் இன்னமும் உதறிக்கொண் டிருந்தது. விழித்தபடி கனவு காண்பவனைப் போல அவனது கண்கள் சிச்சாபாயிடம் பேசியபடி இருக்க உடல் அனிச்சையாய் வெட்டிக்கொண்டிருந்தது. சிச்சா அவனது பின்கழுத்தை அழுத்தி வருடினார். அவனது கண்கள் குளத்து நீரின் ஆழத்திலிருந்து மேலேறிக்கொண்டிருக்கும் உயிர்த்தவிப்பைக் காட்ட சிச்சா அவனது காதில் “மேலேறு மேலேறு” எனக் கத்தினார். டூமனின் கால்கள் வெறுந்தரையில் ஏதோநீருக்குள்ளிருந்து மேலேறுவது போலத் துடுப்பிட்டன. டூமன் பேசுவதை நிறுத்திவிட்ட பிறகு, அவனது கண்களுக்குள் சதா நீர்ப்படலம் ஒன்றை திரையாக்கி அதில் புறக்காட்சிகள் நடுங்கி நெளி வதை மட்டுமே பார்த்தான். அவனுக்கு எதிரிலிருக்கும் பொருட்களும் மனிதர்களும் அந்த நீர்த்திரையின் ஓட்டத்தில் பிம்பங்களாக உதிர்ந்து கொண்டேயிருந்தனர். ஆரம்பநாட்களில் இது மிகு அச்சம் தரும் காட்சியாக இருந்தது. ஏதோ தின்பண்டம் வாங்கி வருகின்ற அப்பா அந்தப் படலத்தில் கையை விரித்தபடி டூமனை நோக்கி வருகிறவர் ஒரு புள்ளியில் சரேலென நீர் வேகத்தில் இழுபட்டு மறைகிறார். பிறகு மிகச்சிறிய ஒரு புள்ளி வர்ண திட்டைப் போல உருப்பெறுகிறது. மெல்ல மெல்ல அதிலிருந்து ஓர் உடல் வளர்கிறது. சற்றே வயதான ஒரு மனிதனாக அது மாறுகிறது. அந்த மனிதன் எங்கோ பார்த்தபடி யாரையோ அழைக்கிறான். அவனது பற்கள் சிதைந்த வாயிலிருந்து கோழை வழிய, அதைக் கோணலாகத் துடைத்து முகமெங்கும் இழுவி கொள்கிறான். அவனது குரலை யாரும் பொருட்படுத்தியிருக்கவில்லை போல. இன்னமும் வயதின் ஆவேசத்துடன் மிளிரும் அவனது கண்கள் எல்லோரையும் எதிரிகளைப் போலப் பார்க்கின்றன. அவனது கண்கள் சீறச் சீற உடல் மேலும் தவங்குகிறது. சீற்றம் மட்டுமே எஞ்சிய முகத்தில் ஒரு வயதான நாகத்தின் குரூரம் எஞ்சுகிறது. அவனது கண்கள் நீர் படலத்தில் எரிந்தபடி மிதக்கும் கங்குகளைப் போலத் திரும்புகின்றன. அவை டூமனை நேருக்குநேர் எதிர்கொள்கையில் ஒரு கணம் துணுக்குறுகின்றன. அந்த விழிகளைத் தாண்டி வழிகின்ற குரோதத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் தடுமாற டூமனைத் தீண்டுகையில், டூமன் அந்தக் கண்களுக்குப் பின்னே ததும்ப முயன்று தோற்கின்ற பழைய கண்களைக் கண்டான். ஆ... அப்பா.
சட்டென டூமன் விழித்து எழுந்தபொழுது அம்மா அவனது காலை அமுக்கிவிட்ட கையை எடுக்காமல் உறங்கிக்கொண்டிருந்தாள். சற்றுத்தள்ளி சுவர் பக்கமாகத் திரும்பியபடி அப்பா ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தார். சீரான குறட்டை ஒலி அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டிருக்க, நுட்ப மான ஒரு சீறல் அதில் இருந்தது.
பின் வந்த நாட்களில், டூமன் முதலில் உளற ஆரம்பித்தான். அவன் காணுகிற கலைந்துகொண்டிருக்கும் புறக்காட்சிகள் பேச்சுமொழியைக் குளறச்செய்தன. அந்தக் காட்சிகள் சீராகி விடுகின்ற பொழுதில் அவன் தான் கண்ட காட்சிகளின் குழப்ப மான காலவரிசையை ஒழுங்குபடுத்துவதில் ஓர்மைகொள்ள முனைகையில் அவை அவனுக்கு நிகழ்காலத்தில் ஊமை எனப் பெயர் வரச்செய்தது. ஆம், அவன் தன் காலத்தைக் குழப்பியபடி அதன் முடிவற்ற நீர்வளையங்களுக்குள் அமிழ்ந்த ஒருவனா கினான்.
முன்னங்கால்களால் கம்பிக் கோடுகளைப் பற்றிநிமிர்ந்து நின்றிருந்த எலிக்கூட்டத்தோடு பொறி வெயிலில் வைக்கப்பட்டிருந்தது. எலிகளின் அழுகியவாசனை எப்போதும் உலவுகின்ற கிட்டங்கித் தெருவிலிருந்து எலிகள் கொத்துக் கொத்தாகப் பிடிபட்டு அந்த வாசனையைக் குன்றவிடாமல் காக்கின்றன. கம்பிகளைப் பற்றியிருந்த எலிக்குட்டிகளின் மூர்க்க முகங்களுக்குச் சம்பந்தமேயில்லாமல் அவற்றின் சிறிய நீர்த்துளி போன்ற கண்கள் இறைஞ்சி அழும் சாயலிலிருந்தன. காலையின்இந்த இளம்வெயில் கூடத் தாங்காமல் அவைகள் கூட்டம் கூட்டமாய்த் தங்களது உடலை நெருக்கிக் கொண்டு கூட்டிலிருந்து தப்பிக்க முயல்கின்றன. அப்போது பொறிக்குள் ஒரு குட்டிப்பன்றியைப் போன்ற சதைத் தொகுதி புரண்டது.
அசபு வாய்கொப்பளிக்காமல் டீ குடித்து விட்டிருந்தான். அவனுக்கு அதன்பிறகு நாவில் சுரக்கின்றபுளிப்புத்தன்மை பிடித்திருந்தது. வாய் கொப்பளித்துப் பல்துலக்கிய பிறகு தூக்க கலக்கம் காணா மல் போய்விடுவதை அசபு விரும்புவதில்லை. ஆனால் இதெல்லாம் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான். டூமன் குப்பை மேட்டிலிருந்து யாரோ கொட்டிவிட்டிருந்த ரப்பர் ஸ்டாம்பு குவி யலை அள்ளிவந்து பூட்டிய ஒரு கடையின் வாசலில்அமர்ந்து எச்சில் துப்பிச் சுவற்றில் பதித்துப் பார்த்த படியிருந்தான். பாதி எழுத்துக்கள் தேய்ந்துவிட்டிருந்த ரப்பர் ஸ்டாம்புகளில் அதன் எழுத்துப் பட்டையை உரித்தெடுத்துவிட்டு அதன் இரும்பு பாகங்களைத் தனியாக அடுக்கி வைத்திருந்தான். அசபுவிடம் இந்தப் பொறுமையான நுண்ணுணர்வு இருந்ததில்லை. அசபு அவனைப் பார்த்தபடி சச்சாளியில் ஒன்றுக்கடித்தான். சாக்கடையின் ஈரப்பரப் பெங்கும் அரிசிக் குருணைகள் இரைந்திருந்தன. பிறகு டூமனிடம் சாக்கு குடோன் போகலாமா எனக் கேட்டான். எப்போதும் இருள் அண்டிக்கிடக்கும் சாக்குக் குடோனின் மீது அசபுவிற்குப் பீதி கலந்த ஈர்ப்பு உண்டு. சாக்குக் கிட்டங்கிகளில் மேற்கூரை துளை வழியே குச்சிகுச்சியாய் வளர்ந்திருக்கின்ற சூரிய வெளிச்சக்கசிவுகளில் ஒரு திரைப்படத்தைப் போல அலைந்துகொண்டிருக்கும் தூசி நடனங்கள் வினோத அனுபவம் தருபவை. சாக்குக் கிட்டங்கி முழுவதும் சதா நிரம்பிக் கிடக்கின்ற புழுங்கல் வாசனைக்கு நடுவே அந்த ஒளிக்காட்சியில் தன்னை மறந்து அவன் நின்றிருக்கின்றான்.
அசபுவின் கைகளைச் சுரண்டி டூமன் கிட்டங்கித் தெருவின் கோடியை காட்டினான். அங்கே கருப்பு நிற ஆம்புலன்ஸ் நின்றிருந்தது. அவர்களிருவரும் அதை நோக்கி நடக்கத் துவங்கினார்கள். பூட்டிக்கிடந்த கிட்டங்கிகள் ஒவ்வொன்றையும் அவர்கள் கடக் கும்போது எலிகள் சரசரத்து ஒளிகின்ற தடங்கள் தோன்ற, பாழ் அமைதி நிலவுகிற கிட்டங்கிகளின் தானிய மூட்டைகளின் மேலே நிதானமாய் ஊர்கின்ற கரப்பான்கள் மீசைகள் விரிய ஒருமுறை நிமிர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்தன.
பவனத்தின் வாசலில் நின்ற கருப்புநிற வாகனத்தின் பின் கதவுகள் திறந்துவைக்கப்பட்டிருந்தன. சற்றுத் தள்ளியிருந்த திண்ணையில் வாசுதேவன் அமர்ந் திருந்தான். எப்போதும்போல வஞ்சனை மினுங் கும் முகம். அசபு வேனின் பக்கவாட்டில் கை வைத்து இழுத்தபடி சென்று நின்றான். சற்றுத் தூரத் திலேயே டூமன் நின்றுவிட்டான். வாசுதேவனின் கண்கள் மேலும் கடுமையாகின. அவனுக்கு டூமனைக் கண்டாலே வருகின்ற மிக மூர்க்கமான ஆவேசம் இப்போதும் கிளர்ந்தது.
டூமன் அவனைப் பார்க்காததுபோல இயல்பாகப் பவனத்தின் பாழடைந்த மாடி பால்கனியை பார்ப்பவனைப் போல நின்றான். ஒட்டடைகள் வழிகின்ற பால்கனி முழுவதும் புறாக்கள் குனுகும் ஓசை எதிரொலித்தது. சிறிய வட்டமான கண்களில் சிவப்பு நிற விளிம்புகள் கொண்ட பார்வைகளுடன் புறாக்கள் சிலுப்பித் திரிந்தன. வாசுதேவன் கால்பெருவிரலால் சிறிய கல்லை கவ்வி எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு சிரித்தான். டூமன் சட்டெனப் பயத்தை உணர்ந்தவனாக எதிர்புற கடையை நோக்கிச் சென்றான். அசபு இருவரையும் பார்த்தபடி பவனத்திற்குள் பார்வையை விட்டான். எப்போதும் இருட்டிலேயே கிடக்கின்ற பவனத்தின் உள் அறைகளில் இரண்டு மனிதர்கள் ஸ்ட்ரெச்சரை தூக்கியபடி வந்துகொண்டிருந்தனர். மிகவும் இரு ளான அங்கிருந்து அவர்கள் வரவர ஸ்ட்ரெச்சர் மீது ஒரு ஈரமான கந்தல் மூட்டையைப் போலக் கிடந்த பிரேதம் தெரிந்தது. ஸ்ட்ரெச்சரிலிருந்து வழிந்து கொண்டிருந்த அழுக்கு நிற திரவத்தில் லேசான சிவப்பு நிறமிருந்தது. வாசுதேவன் தனது கைலியின் நுனியால் மூக்கைப் பொத்தியபடி “உடனே மூட்டம் போட்டு கொல்லு” என்றான். ஸ்ட்ரெச்சரை வண்டியில் ஏற்றி உள்ளே தள்ளிவிட்ட பிறகு தனதுயூனிபார்மில் தெறித்திருந்த ஈரத்தை துடைத்துக் கொண்டு பிறகு அந்த விரல்களை நுகர்ந்து பார்த்தபடி, அந்த மருத்துவமனை பணியாளன், “ஏம் மொத லாளி, வெறச்சு ஊறி வழியுறவரையா கவனிக் கல? முதுகுத்தண்டு ஃபுல்லா புழு ஊறிக் கெடக்கு” என்றான்.
வாசுதேவன் தனது பையிலிருந்து ரூபாய்த் தாள்களை எண்ணி நீட்டியபடி, “இன்னும் ரெண்டுமட்டும்தான் இருக்கு. அதுகளுக்கும் சோறுதண்ணி நிப்பாட்டி மூணு வாரம் ஆச்சு. மாசி கழியறதுக்குள்ள மொத்தமா கழிச்சு விட்டுரலாம். பொறு” என் றான். பிறகு உள்ளே எட்டிப்பார்த்து, “யசோதே..” என்றான். கையில் அலுமினிய வாளியும் விளக்குமாறுமாக யசோதை மெதுவாக வந்தாள். முக்கால்வாசி வளத்தியுடன் நின்றுவிட்டிருந்த அவளதுஉடலோ முகமோ எல்லாப் பக்கத்திலும் வெறுமையையும் தரித்திரத்தையும் பிரதிபலித்தன. உறையத்துவங்கியிருந்த நீர்த்திட்டுகளின் மீது தண்ணீரைத் தெளித்தபடி விளக்குமாறால் அழுத்தித் தேய்க்க ஆரம்பித்தாள். வாசுதேவன் அவளருகே வந்துஅவளது காதருகில் சென்று, “மூலக்கரை போய்ட்டுவந்திர்றேன்” என்றபடி தனது அழுக்கேறிய பட்டுவேஷ்டியை உதறி முனையை வாயில் கவ்விய படி கட்டிக்கொண்டான். பெருக்குவதை நிறுத்திஅவனைப் பார்த்து தலையசைத்தாள் யசோதா.
வாசுதேவனுக்கு அப்படி ஒரு ஐஸ்வர்யம் இருந்தது. அவன் பிறந்ததிலிருந்தே சீரழிவின் பார்வை யாளனாக இருந்து வந்துள்ளான். இப்போதும்நகைக்கடை வீதிகளில் அவனை நினைவு கூர்பவர்களுக்கு அவன் அப்பாவியாகவும் கோமாளியாகவும் சூன்ய பொம்மையாகவும் தெரிகிறான். வாசுதேவனின் அப்பாவை மிகுந்த நைச்சியமான செட்டிஎன்று கூறுவார்கள். வாசுதேவனின் அம்மாவிற் கெனப் பலசரக்குக் கடைக்காரன் அடைமழைகாலத்திலும் கருப்பட்டிக் கட்டிகளை நசிந்து விடாதவாறு வைக்கோல் பொதி சுற்றி விற்பனை செய்ய வைக்குமளவிற்கு வாசுதேவனின் அப்பாவிற்குக் கூரிய மதிப்பிருந்தது. உச்சத்திற்குப் பின் வருவது எப்போதும் சரிவுதான். அதுதான் அழகும் கூட. வாசுவின் அப்பா ஒரு மானுடனுக்குத் தேவையான அளவிற்கு வெளியே தன்னையும் தனது அறிவையும் தனது வணிகத்தையும் விரித்திருந்தார். எதிர்பாரா அவரின் இறப்பிற்குப் பிறகு வாசுதேவனுக்கு முன்பிரம்மாண்டமான அவரின் வணிக அறிவு தன்னைவிரித்து நின்றது. நசுங்காமல் வளர்ந்த வாசுதேவனுக்கு இன்பம் என்பது ஒரு தட்டு பால்சோறும், ரோஜாஅத்தர் செண்ட் பாட்டிலும், தினசரி சிந்தாமணியில் இரண்டாவது ஆட்டமும் என்ற எளிய முகமாயிருக்கவும் எளிதில் வணிகத்தில் அவன் வெளி யேறினான்.
உமிப்பெட்டிகளை மேஜையில் வைத்துவிட்டு வேலைக்காரப் பெண்ணை வெளியேறச்சொன்னார் மூத்தவர். பழைய கருக்காய் பெட்டிகள். சுத்தமான உமிக்குவியல்கள் நிரம்பியிருந்தன. அருகிலிருந்த சோழவந்தான் வாத்தியார் தனது இடுங்கிய கண்களால் உமியின் மேற்பரப்பை கவனமாகப் பார்த்தபடி இருந்தார். அறையின் மூலையிலிருந்த இரும்பு கல்லாவிலிருந்து மூத்தவர் பொன்னாலான சிணுக்கரியை எடுத்து வந்தார். வாத்தியாரின் அருகில் வந்தவர், உமியினுள் சிணுக்கரியை சொருகி மெல்ல கிளறத் தொடங்கினார். சிறிய உமித்துகள்கள் மணலைப் போல நெளிந்து விலகின. முதலில் சிறியமூக்குத்தி மேலேறி வந்தது, பிறகு ஒரு முரட்டு தண்டட்டி, அடுத்து சிறியதும் பெரியதுமான பொன்ஆபரணங்கள் உமிப்பரப்பில் விளைந்து பெருக ஆரம்பித்தன. வாத்தியாரின் கண்கள் அவை ஒவ்வொன்றையும் வருடி வருடி விலகின. ஒரு ரகசிய விசாரணையைப் போல.
நெற்றியெங்கும் வியர்வை படிய, ஒரு கசந்த சிரிப்புடன் மூத்தவர், “மூணு தலைமுறை கையோட் டம் மிக்கக் குலம் வாத்தியாரே. நகக்கண் அளவு பொன்னா இதை வேரறுக்கப் பாக்குது?” என்றார்.
வாத்தியாரின் கண்கள் உமிப்பரப்பை விட்டு விலகாமலே, “பின்ன இதுகளுக்கு உயிரில்லைனு நினைக் கறீங்களா அப்புச்சி? பாருங்க ஒவ்வொண்ணும் கண்ணைத் திறந்து நிக்கிறதை. சாத்தானை கடவுள் ஏழேழு பாதாளத்துக்குள்ளேயும் நெரிச்சுப் பூட்டி வெப்பான்னு வாக்கு. ஒரு பெரும்பாறையோட எதோ ஒரு இடத்துல கொண்டுபோயி பின்ன இதை ஏன் மறைச்சி வைச்சான்? இதுக எல்லாமே விதியோட எழுத்துருக்கள் அப்புச்சி. நம்ம எடுக்கறதுல என்ன எழுதியிருக்கோ அதைச் செய்யாம விலகாதுக.”
வாத்தியாருக்கு பள்ளி வேலை தவிர இது போன்றவிசாரணைகளில் ஆர்வம் மிகுதி. ஊரில் அவரைஜோசியர் என்பவரும் சூனியக்காரன் என நினைப் பவரும் உண்டு. அவரது மனைவி இறந்துவிட்ட மூன்று நாள்வரை தனியாக அந்தப் பிணத்துடன் அமர்ந்து உயிர் நீங்கிய பிறகு அது வெறும் உடலாக எப்படி எஞ்சுகிறது எனத் தீவிரமாகத் தன் விசாரணையும் குழப்பமுமாய் அமர்ந்திருந்தவரை ஊரார் கண்டுபிடித்து உலுக்கும் வரை அவர் இந்த உலகிலேயே இல்லை.
வெளியே கதவு தட்டப்பட்டது. எரிச்சலில் வாத்தியாரின் கண்கள் இடுங்கின. மூத்தவர் மென்மையாகத் தாழ் நீக்கினார். சட்டெனக் கதவைத் தள்ளியபடி பவனத்தின் இளையவன் உள்ளே நுழைந்தான். உடலை மறைத்திருந்த போர்வை நழுவியது. உடல் முழுவதும் வெந்தபடி இருந்த சிவப்புப் புண்கள். பாதி அழுகிவிட்ட விரல்கள். உடைகள் ஏதுமில்லாத நிர்வாண உடலெங்கும் சதைகள் வெடித்திருந்தன. நிற்க முடியாமல் தரையில் விழுந்தவன் அச்சமான குரலில் கத்தினான்.
“அது இந்தப் பெட்டிக்குள்ளதான் இருக்கு வாத்தியாரே. எடுத்துபிடுங்கோ எடுத்துபிடுங்கோ. எனக்குக் கனவுல வந்து பாம்புக்கண் மாதிரி மின்னுது. அது எங்க வேர்ல விழுந்த புழு வாத்தியாரே. இப்ப திங்க ஆரம்பிச்சிருச்சு. ஒரு இலை விடாம திங்கப் போகுது.”
மூத்தவர் அழுகையும் பரிதவிப்புமாய் அவனைத் துணியால் மூடினார். வாத்தியாரின் கண்கள் இன்னமும் உமிப்பரப்பில் அலைந்தபடியிருந்தன. துளி நீரைப் போல மினுமினுத்த வைரத்துண்டுகளும் கோரமான மிருகமொன்றின் பல்லைப்போன்ற பொன் வடிவங்களும் மிகத் தீவிரமான மௌனத்துடன் விரவிக் கிடந்தன. காற்றில் அலைகின்ற விளக் கொளியில் ஒன்று மாற்றி ஒன்று மினுங்கி சீறி அடங்கின.
“இதுல ரொம்பச் சல்லிசான விலைக்குக் கிடைச்ச பொருள் எது அப்புச்சி?”
வாத்தியாரின் குரல் மிக இறுக்கமாக ஆழத்தில் இருந்து வந்தது, அவரது கையிலிருந்த சிணுக்கரி ஒரு வைரத்தை மெல்லத் திருப்பிப் பார்த்தது. அருகில் வந்த மூத்தவர், “இதுல கள்ளப் பொருள் ஏதுமில்ல வாத்தியாரே. எல்லாமே முறையான தரகருக்கிட்ட கைமாத்திக்கிட்டதுதான். அதுக்கு முன்னால அதுக எந்தக் குடிய கெடுத்து வந்துச்சுன்னு சத்தியமா தெரியாது.”
கண்களிலே நீர் வழிய மூத்தவர் இரண்டு உள்ளங்கைகளையும் நெஞ்சருகே பயப்படுபவராய் குறுக்கிக் கொண்டார்.
“பின்ன எப்படி..” யோசனையாய் வாத்தியார் கேட்க, இளையவன் தரையில் கிடந்தபடி கத்தினான். “பவனம் முழுக்க இதுமாதிரி அறுபது எழுபது உமிப்பெட்டி புதைஞ்சிருக்கு வாத்தியாரே.”
திடுக்கிட்ட வாத்தியாரைச் சுற்றியிருந்த சுவர்களுக்குள், வராந்தாக்களின் மிதியடிகளுக்குள், மாடிப்படிக்கட்டுகளின் ரகசிய குழிகளுக்குள், வீட்டு மையமாயிருந்த பழைய கிணற்றின் சுற்றுச்சுவர் விரிசலுக்குள், தேக்கு மரங்கள் உத்திரங்களாக நிற்கின்றமேல்ச்சுவர்களின் இடைவெளிக்குள் எனப் பவனத்தின் உடல் முழுவதும் உமிப் பொதிகளுக்குள்மறைந்திருந்த ஆயிரக்கணக்கான ஆபரணங்களுக்குள் ஒன்றே ஒன்று மட்டும் நாக்கைச் சுழற்றி மினுங்கியது.
ஒரு துளி ரத்தம். அதன் நடுவே கருமையான மணி ஒன்று. டூமன் அதைப் பார்த்தான். உயிரோட்ட மிக்க ரத்த துளியின் நடுவே நடுங்குகின்ற அந்தப்பார்வையை. அது அங்கும் இங்குமாக மெல்ல மெல்லப் பரவியது. டூமனின் பார்வை முழுக்க இப்போது ரத்த வட்டுகள். அதனடுவே ஒரு குரூரப் பார்வை. சட்டென அவைகளுக்குள்ளிருந்து குனுகு கின்ற முனகல் எழுந்தது. புறாக்கள் அமைதி யின்றிப் பவனத்தின் பால்கனி முழுவதும் அப்பித்திகைத்துப் படபடத்தன. டூமன் பார்க்கும்போதேஅவைகள் அர்த்தம் பெற்ற பார்வையுடன் அவனை முறைத்தன.
வாசுதேவன் அழுக்கு வேஷ்டியை இறுக்கியபடி, ஆம்புலன்ஸ் சென்ற பிறகு தெருவிலிருந்து வெளியேறினான். பவனத்தின் உள்ளிருந்து யசோதாடூமனையும் அசபுவையும் பார்த்துச் சிரித்தாள். அவ்வளவு கசப்பான புன்னகை. அடைமழை காலத்தில் ஊர் முழுக்க இருள்பரவி அப்பிக்கிடக்கும் மாலை வேளையில் ஆவேசமாய்ச் சுழித்து ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றின் கரைகளின் வழியே யசோதா ஒரு துர்தேவதையைப் போல முழுவதும் நனைந்தபடி, அதைச் சிறிது கூட உணராதவளாக எங்கேனும் போய்க்கொண்டிருப்பாள். நல்ல மழைக்கு நடுவே, வெறிகொண்டு பாய்கின்ற ஆற்றைப் பார்த்தாலே உயிர் விட்டுவிடுகின்ற இயல்புக்கு மாறாய் யசோதா அப்போதுதான் மிகச் சாதாரணமாகக் கூந்தல் நுனியெங்கும் மழைநீர் பிரிபிரியாய் இறங்க சென்று கொண்டிருப்பாள்.
யசோதா யாருடைய வாரிசாக அங்கே எஞ்சினாள் என்கிற விசயம் யாருக்கும் தெரியாது. கடும் நோயுற்ற வயதான மனிதர்கள் சிலர் இருளுக்குள் படுத்தவாறே மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் பவனத்தில் அவள் தன்னந்தனியே வளர்ந்தாள். யாருமே பேசுவதற்குக் கூட அஞ்சிய குடும்பத்தைச் சேர்ந்த அவள் பகல் வேளைகளில் எங்குமே செல்வதில்லை. இரவுகளில் வேகவேகமாகத் தீமையின் மலரைப் போல அவள் கடக்கின்ற வீடுகளில் விளக்குகள் சட்டென்று அணைக்கப்படும்.
பவனத்தின் நேரடி வாரிசுகளில் ஒருத்தியாக யசோதா மட்டுமே எஞ்சினாள். நீண்ட காலமாக யாருமே மணக்கலப்புச் செய்துகொள்ளத் துணியாத பரம்பரையின் இறுதி மனிதர்களாக யசோதாவும் வாசுதேவனும் பவனத்தின் நீண்ட வராந்தாக்களில் திரிந்துகொண்டிருந்தனர்.
சாபம் பெற்ற வீடு என யாரும் வராத பவனத்தில் டூமனும் அசபுவும் மட்டும் யசோதையின் சிறிய சினேகிதர்களாய் இருந்தார்கள். யசோதாவிற்கு இவர்களிடம் விளையாடுவதற்கான எந்த உத்திகளும் தெரியாது. ஒருமுறை சீத்தலைக் காளியின் கதையை இவர்களிடம் கூறிக்கொண்டிருந்தவள், நிர்வாணத்தை ஆவேசமாகச் சூடிக்கொண்ட காளியின் கதையில், குழந்தைகளுக்கு முலையூட்டுவதாக அழைத்துச் சென்று தலையைச் சிதறவிட்டுக் கொல்லும் இடத்தைக் கூறும்போது டூமனுக்கும் அசபுவுக்கும் லேசான இருளில் சிரித்தபடி ஆளுக்கொரு முலையை அவிழ்த்துக் காட்டினாள். கதையிலிருந்து வெளியேறிய இரண்டு சிறுவர்களும் அதைப் பார்த்து தங்களுக்குள் சிரித்துக்கொண்டபோது இருளுக்குள் ஏந்தியிருந்த முகத்தில் பல்வரிசை வெளிச்சம்மட்டும் தெரியும்படி இறுக்கமான குரலில் “ஹ்ம்ம்...” என அரற்றியவாறு முனகினாள்.
டூமனும் அசபுவும் வீடு முழுக்க நிறைந்து கிடந்த இருளில் மிதந்து மிதந்து வெளியேறி வீட்டின் அருகே நடுமுற்றத்தில் பளீரிட்ட வெயிலில் நின்றிருந்த யசோதையிடம் சென்றார்கள். செடிகள் மண்டிவிட்ட கிணற்றுக்குள் இருந்து நீர்வாரியபடி, “வாடைஎதுவும் அடிக்குதா?” என்றாள்.
அங்கே செல்கின்ற வேளைகளில் அவள் தருகின்ற மாவுப்பண்டங்கள் வயிற்றுக்குள் சென்று விநோதமாக உயிர்பெற்று குடலை கிழிப்பதாக அசபுவுக்குக் கனவு வரும். ஆனால் டூமனின் கண்கள் அவளை மிகக்கூர்மையாக எந்தநேரமும் விசாரித்தபடி இருக்கும். சிதிலமடைந்து விட்டவற்றின் ஆன்மாக்களில் அதன் தீர்வுகளை வினவுவதைப் போல.
டூமனை வாசுதேவனுக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணங்கள் தெரியவில்லை. ஒரு ஆழமான காயத்தின் மீது இவ்வளவு உயிர்களைப் பலி கொடுத்துத் தைலமாகத் தடவி தடவி அதனை உலர வைத்து இப்போது சிறிய தழும்புகளைப் போல எஞ்சி நிற்கின்ற வாசுவிற்கும் யசோதாவிற்கும் ஒருபரம்பரையைக் கடந்து வந்த ஞாபகக் களைப்பு இருக்கிறது. அவர்களுக்குத் தெரியும் அதன் கடைசிப் பலி தாங்கள் தானென்று. ஆனாலும் அதில் சிறியசந்தோஷமிருந்தது. நீண்ட இருளுக்குள்ளிருப்பவர்களின் பார்வையில் படுகிற சிறிய வெளிச்சத்தைப் போல. யசோதாவின் நாட்கணக்கு இப்போது தவறியிருந்தது. அவர்கள் களங்கமற்ற இயல்பான வானிலை கொண்ட நாட்களின் மேல் தங்களின் வாரிசை விட்டுச் செல்ல மனதார விரும்பிக்கொண் டிருந்தனர்.
கடந்த காலத்தின் எல்லாக் குறிப்புகளிலிருந்தும் தங்களைத் துண்டித்துக் கொள்ளும்விதமாக அந்தச் சிசுவின் வருகையை எதிர்நோக்கியிருந்தனர். காலுக்குக் கீழே பாதாளத்தைப் போலப் பவனத் தின் பூட்டிக் கிடக்கின்ற ஏதாவதொரு கதவின் முன் அமர்ந்து தன்னை மறந்து அதனை உற்று நோக்கிக்கொண்டிருக்கும் டூமனை அவர்கள் அஞ்சினர். வாய் பேசமுடியாத டூமனின் கண்கள் அந்தப் பழைய சுவர்களை ஊடறுத்து அந்தப் பழைய நாட்களின் கருப்பு வர்ணங்களை எங்கும் பரவச் செய்து விடுமோ எனும் அச்சம் யசோதாவை விட வாசுதேவனிடம் அதிகமிருந்தது. ஏனெனில்தீயவைகள் எப்போதும் நினைவில் கருக்கொண் டிருப்பவை.
நீண்ட மழைக்காலங்கள் கடந்துகொண்டிருந்தன.
அசபு இப்போது ஜன்னல் திட்டின் மரப்பிள விலிருந்து துளிர்த்து நிற்கின்ற நூலைப் போன்ற சிறிய தாவரத்திடம் ஸ்நேகமாயிருந்தான். அப்பா பெரும்பாலும் வேலைக்குச் செல்வதில்லை. அவ்வப் போது பீரோவிற்கு அடியிலிருக்கும் டானிக் பாட்டிலில் கொஞ்சம் குடித்துவிட்டுச் சிகரட் பற்ற வைத்தபடி இவனுக்கு ஏதாவது சொல்லிக்கொண்டிருந்தார். டூமனை அடிக்கடி சந்திக்க முடியாத இந்த மழை நாட்களினூடே தனது வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் அவனுக்கு அலுத்துவிட்டிருந்தது.
அசபு உறங்கிக்கொண்டிருந்தான். கீழே வீட்டு வாசலில் அப்பாவின் குரல் கேட்டது. பிறகு அம்மாவேகமாக விரைவதான கொலுசினோசை. அசபுவிற்குக் கண்ணைத் திறக்கக்கூசியது. இது மதியமாஇரவா எனத் தெரியவில்லை. எங்கிலும் கார்காலப் பகலின் சாம்பல் திரைகள். அசபு ஜன்னல் கம்பிகளை எக்கிப்பற்றிக் கீழே பார்த்தான். வாசலில் அப்பாவும் வாசுதேவனும் பேசிக்கொண்டிருந்தார்கள். அம்மா கதவோரமாக நிற்பாளென யூகித்துக் கொள்ள முடிந்தது. வாசுதேவன் சிகரட் துணுக்கை ஓடை நீரில் எறிந்துவிட்டு, “இன்னும் கோட்டைக் கேணிலதான் உடம்பு மிதக்குது. மழைல தண்ணி வேற பெருகிக்கிட்டே இருக்குல்ல. அதாம் யாரை யும் அங்கன போலிஸ் விடமாட்டேங்குது. ரெண்டு மணிநேரம் கழிச்சவாட்டி காட்டாஸ்பத்திரி மார்ச் சுவரிக்கு பாடி வரும். அப்ப போய்க்கங்க. அசபு வேணாம். விளங்கிட்டீங்களா” என்றவாறே எங்கோ நடந்தான். அப்பாவின் குரல் அம்மாவிடம், “இவனை வெளியில் விடாத. நேரஞ்சென்னு நான் போய்ப் பார்த்துட்டு வரேன்” என்றது.
வெகுசிலர் மட்டுமே குடைபிடித்தபடி நின்றிருந்தனர். மலையின் மீது பெய்துகொண்டிருந்த மழைபடலம் படலமாகக் கீழேயிருந்த சுனையில் சேகரமாகிக்கொண்டிருந்தது. கற்களால் பெருஞ்சதுரமாக நெரிக்கப்பட்டிருந்த சுனையின் பாசிபடர்ந்த நீர்மழைக்கு நடுவே தத்தளித்தபடி உயர்ந்து கொண்டிருந்தது. எங்கேயோ இருந்தெல்லாம் ஓடி வந்து அதில் இறங்குகின்ற நீரோடைகளுக்கு நடுவே பார்ப் பவர்களை நோக்கி நீர் உயர்ந்து வருவது போலச் சுனையின் சதுர முகம் பொங்கிக்கொண்டிருந்தது. சுனையும் மலைவிளிம்பும் சந்தித்துக்கொள்ளும் யானை மூலையில் டூமனின் உடல் குப்புற கவிழ்ந்து மிதந்துகொண்டிருந்தது. ஊறிப்போன உடலை ஆடை கள் நெரித்திருக்கக் குழந்தையொன்றின் அடம் போலக் கையும் காலும் விரிந்து உறைந்திருந்தது. ஆழமான நீருக்குள் எதையோ பார்த்தபடி அழுபவன் போல அவன் மிதந்துகொண்டிருந்தான். முனிசிபாலிட்டியின் பழைய கருப்புநிற வேன் குதிரைலாயம் அருகே நின்றுகொண்டிருந்தது. அதன்காக்கி நிற ஊழியர்கள் தீயணைப்பு வண்டி வரு வதற்காகக் காத்திருந்த நொடியில் வேனிற்குள் அமர்ந்து பீடி குடித்தபடி இருந்தனர். வேடிக்கை பார்த்த நபர்களைப் போலீஸ் விரட்டிவிட்ட பிறகு சுனைக்குச் செல்லும் பாதை தனிமையில் இருக்க. டூமனின் உடல் இன்னமும் தேரை போல நகர்ந்து கொண்டிருந்தது.
அசபு வாசலில் நின்று எட்டிப் பார்த்தான். வழக்கம் போல இருளுக்குள் ஆழ்ந்திருந்த பவனத்தின் நீண்ட வராந்தாவில் லேசான வெளிச்சத்திட்டுக்கள் ஆங்காங்கே ஒற்றியிருந்தன. வாசுதேவ னின் சிகரட் புகை வாடையெழாத பவனத்தில் மிகப் பழைய ஈரவாடை மிதந்துகொண்டிருந்தது. அசபு ஒருமுறை “அக்கா” என்றான். அவனது குரல் கிளிபோலக் கீறலுடன் வெளிப்பட்டது. டூமனைப் பற்றிக் கூறும் போது அவளது முகம் எவ்வாறு கோணிச் செல்லும் என்பதை நினைத்துப் பார்த்தான். சுவாரஸ்யமாய் இருந்தது. மீண்டும் ஒருமுறை அழைத்தான். இன்னமும் நிழலுருவம் எதுவும் அசையவில்லை.
மெல்ல சுவரில் விரல் உரசியபடி யோசனையுடன் உள்நுழைந்தான். நீளமான வராண்டாவில் மூடிக்கிடக்கின்ற ஒவ்வொரு அறைக்கதவையும் தாண்டும்போதும் உறங்கிக்கொண்டிருக்கும் ஒன்றை சப்தமில்லாமல் கடப்பதைப் போன்ற நிதானம் அவனையறியாமல் நடையில் வந்தது. லேசான இருட்டிலிருந்து, வெளிச்சத்திட்டுகளை நோக்கி வேகமாகச் செல்ல முனைந்த பொழுதில் இருளுக்குள் திரண்டெழுந்த ஒருமுகம் தனது பின்னே வெறித்தபடி தொடர்வதைப் போன்ற நடுக்கமேற்பட்டது. தீனமான குரலில் “அக்கா” என்றான். பவனத்தின் நிசப்தம் அந்த ஒலியை விரைவில் கொத்தி விழுங்கியது. ஒரு திருப்பத்திற்குப் பிறகு அந்தப் பாதையின் முடிவிலிருந்த தேக்கு நிலையிட்ட அறையின் கதவுகள் பாதித் திறந்திருந்தன. அதில் நீளவாக்கில் கிடந்த யசோதையின் கால்கள் அழுக்குத் தந்தத்தைப் போலத் துலங்கியது. அசபுவிற்கு ஒரு சிறிய சிரிப்பு அந்தப் பதட்டத்திலிருந்தும் வந்தது. அவளை நோக்கி வேகவேகமாகச் சென்றான். சுவரை உரசிய விரலிலிருந்து தீ பட்ட சூடு எழுந்தது. வாயில் வைத்து விரலை குதப்பியபடி தரையைப் பார்த்தான். சிவப்பு நிற காவி பரவப்பட்ட பழைய மொசைக் தரையின் மீது ஈரமான பாதத்தடம் சற்றுமுன் அந்த அறையை நோக்கிச் சென்றிருந்தன. அதில் இன்னமும் உறிஞ்சப் படாத நீர் கோடுகளாய் விரிந்துகொண்டிருக்க, அசபு சட்டெனச் சுவரோரமாய்ச் சாய்ந்து நிதானித்தான். வலுவாக ஊன்றிய ஒற்றைப் பாதத்தடம் அது. சுவரில் அண்டியவாறே பாதித் திறந்திருந்த அறையின் இருளுக்குள் பார்த்தான். யசோதையின் நிறைமாத வயிற்றின் கீழேவரை உடைகள் கலையப்பட்டு ஒரு சதைப்பந்தைப் போலத் திரண்டு பொங்கியிருந்த சூல்வயிறு, அவளது ஆழ்ந்த உறக்கத்தைப் பறை சாற் றியபடி விம்மித் தணிந்துகொண்டிருந்தது. அவளுக் கருகே ஈரம் வழிந்துகொண்டிருக்கும் வெளுத்த கை ஒன்று மிக மென்மையாக அவளது வயிற்றின் மீது ஊர்ந்துகொண்டிருக்க, வாழ்வில் முதல்முறையாக மோசமான அலறலோடு வலிப்பு நோய் அசபுவிடம் இறங்கியது.