இன்று எனக்குச் செய்வதற்கு ஏராளம்:
நினைவை அதன் இறுதி வரை கொல்லவேண்டும்
மண்ணைக் கல்லாக்கவேண்டும்,
எவ்வாறு வாழ்வதென்று மீண்டும் கற்கவேண்டும்.”
அக்மதோவா
அன்னா அக்மதோவா (1889-1966) என்னும் ரஷ்யக்கவி அழகியாக மிளிர்ந்து, கவிதையாக ஒளிர்ந்தவர். அழகு, காதல், கவிதை ஒருங்கிணைய அற்புத ஆளுமை யாக விளங்கியவர்.
கொந்தளிப்பான காலகட்டத்தில் அசாதாரணமான வாழ்வை கடக்க முயன்றவர். துயரத்தில் உறைந்துபோன ஒரு தேவதை.
இசையா பெர்வின் (1907-1997) என்னும் ரஷ்ய-பிரித்தானிய சமூக - அரசியல் கோட்பாட்டாளர் 1945ல் ஒரு முறை லெனின் கிராடில் (பீட்டர்ஸ்பர்க்) அன்னா அக்மதோவாவை சந்தித்துப் பேசினார்.
போரினையும் ஒடுக்குமுறையினையும் பேசத் தொடங்கிய அவர்கள். தம் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டனர்.
சிறுமியாயிருந்தபோது தன் போக்கு, கவிஞர் குமிலோவை மணந்து கொண்டது, கணவன் தூக்கிலிடப்பட்டது பற்றியெல்லாம் குறிப்பிட்ட அக்மதோவா, பைரனின் டான் யுவான் கவிதை வரிகளை அவ்வளவு வேட்கையுடன் எடுத்துரைத்தார்.
அடுத்து தன் கவிதைகளில் ஒன்றிரண்டை காட்டி, தன் சகாக்களில் ஒருவர் அரசினால் தூக்கிலிடப்பட்டதை நினைவுகூர்ந்த போது அழுதுவிட்டார். முதல் நாள் மாலையில் தொடங்கிய இச்சந்திப்பு மறுநாள் காலை 4 மணியான பின்னும் முடியவில்லை.
அப்போது தான் அவர்கள் பேச்சில் புஷ்கினும் செக்காவும் இடம் பெற்றனர். இருவரும் இவ்விரு இலக்கியவாதிகள்பற்றி உடன்பாடான கருத்துகளைக் கொண்டிருந்தனர்.
அடுத்து பெர்லினுக்குத் துர்கனேவிடம் அபிமானம் எனில், அக்மதோவாவுக்குத் தாஸ்தோயெவ்ஸ்கியிடம் ஈடுபாடு. ஒருவரின் ஏக்கத்தை/ துயரத்தை அடுத்தவர் புரிந்து கொண்டார்.
“அன்றிரவு பெர்வினது வாழ்வு, கலையின் பரிபூரணத்திற்கு அவ்வளவு நெருக்கமாக வந்துவிட்டது” என்கிறார் அவரது வாழ்க்கை வரலாற்றாளர் மினகல் இக்னேஷியஃப். பெர்வின் தன்அறைக்குத் திரும்பியது காலை 11 மணிக்கு.
“மிகவும் தகுதியான அறிவு, தரவுகளில் இல்லை மாறாகப் பண்பாட்டின் மாபெரும் படைப்புகளிலும் மானுடம் சுவீகரித்துள்ள தார்மிக, உணர்வோட்ட, இருத்தலியல் ஞானத்திலும் உள்ளது” என்று அச்சந்திப்பை விளக்குகிறார் டேவிட் ப்ரூக்ஸ் என்னும் எழுத்தாளர்.
‘பெர்வினும் அக்மதோவாவும் அத்தகைய வாழ்க்கையை மாற்றும் உரையாடலை நிகழ்த்த முடிந்தது, அவர்கள் நிறைய வாசித்திருந்ததால்; ஆன்மிக ரீதியில் வேட்கை மிகுந்திருந்ததால்; நாம் நம்மைப் புரிந்து கொண்டிருப்பதை விடவும் மேலாகப் புரிந்துள்ள மேதைகள் எழுதிய இலக்கியத்தை அவர்கள் பொதுமொழியாகக் கொண்டிருந்ததால்’ என்கிறார் டேவிட் ப்ரூக்ஸ்.
*******
அக்மதோவாவின் தோழியும் அவரைப் போலவே இழப்புக்கும் உள்ளான அகோவ்ஸ்கயா தன் சிநேகிதி பற்றிய உருவச் சித்திரத்தை இப்படித் தீட்டுகிறார்:
“நாளுக்கு நாள், மாதாமாதம் என் துண்டு துணுக்கான குறிப்புகள், என் வாழ்வின் மறு உருவாக்கம் என்பது குறைந்து, அக்மதோவாவின் வாழ்க்கைச் சம்பவங்களாக மாறிக்கொண்டிருந்தன.
அவளது வார்த்தைகள், செயல்கள், தலை, தோள்கள், கைகளின் அசைவுகளெல்லாம் அவ்வளவு பூரணம்கொண்டிருந்தன.
அவை இவ்வுலகில் மாபெரும் கலைப் படைப்புகளுக்கே உரியவை. இதனால் அவள்பால் ஈர்க்கப்பட்டேன்.
என் கண்களுக்கு முன்பாகவே, அவளது ஆளுமையை விடவும் மிகப்பெரிதான அவளின் விதி, இப்புகழ்பெற்ற- புறக் கணிக்கப்பட்ட, வலுமிக்க, நிராதரவான பெண்ணில் இருந்து, துயரம், தனிமை, பெருமிதம், தீரமிக்கச் சிலையைச் செதுக்கிக்கொண்டிருந்தது.”
*******
அக்மதோவாவின் 14 வயதிலிருந்து அவரை விடாப்பிடியாகக் காதலித்து வந்துள்ளவர் கவிஞர் குமிலோவ். ஆனால் அக்மதோவாவுக்கு இன்னொருவர் மீது; தன் காதல் ஏற்கப்படாத நிலையில் வருந்தி இருந்தார்.
தான் காதலிக்கப்படாத நிலையில் இரண்டொரு முறை தற்கொலைக்கு முயன்றார் குமிலோவ். இதனால் குமிலோவை மணந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகினார் அக்மதோவா. இது குறித்த அவரது பதிவு:
“என் ஒட்டுமொத்த ஆயுளுக்காகவும் நஞ்சூட்டப் பட்டிருக்கிறேன்; ஏற்கப்படாத காதலின் நஞ்சு கசப்பானது! மீண்டும் என்னால் காதலிக்க முடியுமா? முடியவே முடியாது! ஆனால் குமிலோவ் எனது விதி, நான் அதனிடம் அடி பணிகிறேன்... மகிழ்ச்சியற்ற இம்மனிதன் என்னுடன் மகிழ்ச்சியடைவான்.”
இம்மூன்று குறிப்புகளும் சுட்டிக் காட்டும் ஆளுமை, அன்பும் சிநேகமும் கலந்த அறிவுஜீவியாக இருக்கவேண்டும்; ஒரு பண்பாட்டின் மலர்ச்சியாக இருக்கவேண்டும்; ஒரு கலைப்படைப்பாகத் திகழ்ந் திருக்கவேண்டும்; காதல் என்பது உணர்வோட்ட மட்டுமில்லை, ஆக்கபூர்வமானது எனக் கவிதைகள் எழுதியது, மற்றவருக்கு வாழ்வளித்தது.
******
அக்மதோவாவுக்கு 17 வயதாயிருந்த போது, அவர் எழுதிய கவிதைகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அக்கவிதைகளைச் சகித்துக்கொள்ள முடியாத அவரது தந்தை ஆண்ட்ரெய் கோரென்கோ, தன் பெயருக்குக் களங்கம் கற்பிக்காமல் அப்பெயரில் (அன்னா கோரென்கோ) எழுதுவதைத் தவிர்க்குமாறு கண்டித்துவிட்டார்.
கலகக்குணமும் சுதந்திர மனோபாவமும் மிக்க அன்னா உடனே அப்பெயரை விட்டு விட்டு தாய்வழி கொள்ளுப்பாட்டியின் பெயரான அக்மதோவாவினை தெரிவு செய்துகொண்டார்.
இப்பெயருக்குப் பின்னே ஒரு வரலாற்றுக் குறிப்பும் உண்டு.
அவரது தாய்வழி மூதாதையர் செங்கிஸ்கான்மரபினர். அம்மரபில் வந்த தார்தாரிய குறுநில மன்னன் 1481இல் கொலையுண்ட கான் அஹ்மத். அஹ்மத்தின் விரிவாக்கமாக வந்த பெயர் அக்மதோவா.
கவிஞர் குமிலோவை 1910இல் மணந்துகொண்டார் அக்மதோவா. ராணுவத்தில் பணியாற்றிய குமிலோவ் எதிர்ப்புரட்சியாளர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.
அதற்கு முன்னரே 1918இல் அக்மதோவாவும் குமிலோவும் விவாகரத்து செய்து கொண்டனர். அவர்களுக்கு 1912இல் பிறந்த மகனே லெவ்.
1918லேயே அக்மதோவா, கவிஞரும் அஸ்ஸரிய அறிஞரும் பேராசிரியருமான ஸிலைகோவை மணந்து கொண்டார்.
1926ல் அவரிடமிருந்து பிரிந்தபின் இன்னொரு கவிஞர் நிகோலாய், நிகோலோவிச் புனினுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஏற்கனவே ஒரு குடும்பம் நடத்தி வந்திருந்தவர் புனின்.
இதற்கிடையே தேர்ந்த வரலாற்றாசிரியராக விளங்கிய லெவ், எதிர்ப்புரட்சியாளர் குமிலோவின் மகன் என்ற வகையிலேயே கைதாகி 1935-56 காலகட்டத்தில் கட்டாய உழைப்பு முகாம்களில் அடை பட்டவர்.
மகனுக்கு நேர்ந்த இச்சோகமே அக்மதோவாவை ஆட்டிப் படைத்தது. மகனைப் பார்க்க மணிக்கணக்கில் இறைவளாகங்களில் காத்திருந்தும் பதற்றப்பட்டதும் தவித்ததுமே அவரது முக்கியக் கவிதைகளுள் ஒன்றான Requiem-னை எழுத வைத்தது.
1925-ல் அவரது நூல்களெல்லாம் தடை செய்யப் பட்டன. அக்மதோவா ‘ஒரு பாதி வேசி- ஒரு பாதித் துறவுக்கன்னி’ என்ற குற்றச்சாட்டின் பேரில் ஸ்டாலின் காலத்தில் ஒதுக்கப்பட்டார்.
குறுகிய காலம் பார்த்த நூலகர் வேலையும் போனது.
சோவியத் எழுத்தாளர் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டார். எந்த வழி வகையும் இல்லாத நிலையில் நண்பர்கள் ஆதரவைக் கொண்டே பிழைத்து வந்தார்.
இவ்வளவுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டு அக்மதோவாவின் தனிப்பட்ட ஒழுக்கநெறிச் சார்ந்தது. அது அரசியல் தளத்தில் எழுமுன்பு, இலக்கியத்தரத்திலேயே எழுந்துவிட்டது.
போரிஸ் மிகைலோவிச் எய்கன்பாம் என்னும் விமர்சகரே இக்குற்றச்சாட்டினை முன்வைத்தவர். இதற்கும் அக்மதோவாவின் கவிதைகளுக்கும் என்ன சம்பந்தம்?
இரண்டாவது கணவர் ஸிலைகோ, பேராசிரியராகக் கவிஞராக அறிஞராக இருந்தபோதும், அக்மதோவா தன்னளவில் ஓர் அறிவுஜீவியாகக் கவிஞராக இயங்கு வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
White flock - தொகுதி 1919இல் மறுபதிப்பு வருவதற்கான ஒப்பந்தத்தில் அக்மதோவா தன் இரண்டாவது கணவர்பெயரைச் சேர்க்காமல், தன் பெயரிலேயே ஒப்பம் இட்டார். இதனால் ஆத்திரமுற்ற ஸிலைகோ, தன் மனைவி புதிதாய் கவிதைகள் எழுதக்கூடாது என்று சீறினார்.
அதனைப் புறக்கணித்து அக்மதோவா எழுதிய கையெழுத்துப்படிகளை எரித்துவிட்டார்.
அக்மதோவா அரசினால் ஒடுக்கப்பட்டதும் வதை பட்டதும் உண்மை. ஆனால் அதற்குத் தூபம் போட்ட தாக இலக்கியவாதி இருந்துள்ளார்.
முன்னோடித் தடையாளாராக ஒரு கவிஞர் இருந்து உள்ளார் என்பது அவ்வளவாகக் கவனிக்கப்படாத விஷயமே.
அவரிடம் உள்ள சுதந்திர உணர்வை தடை செய்பவராக அவரின் தந்தை இருந்தார் என்பது குறிப்பிடப்பட வேண்டியதாகும்.
1921இல் அக்மதோவா எழுதிய கவிதை.
வாழ்வென்பது மற்றவர்களுக்காக
உனக்கானது அல்ல
பனியின் குளிரில் கிடக்கின்றாய்
துப்பாக்கி முனைகள் செய்தவை
இருபத்தெட்டுப் புண்கள்
துப்பாக்கிக்குண்டுகள் செய்தவை
இன்னொரு அய்ந்து
புதிய துயரின் ஆடையை நெய்தேன்
என் நேசத்திற்காக
ரஷ்யபூமி நேசிக்கிறது சுவையை
நேசிக்கிறது குருதியின் சுவையை
இக்கவிதை அக்மதோவாவின் தனிப்பட்ட துயரினை வலியை வெளிப்படுத்துவதுடன் ரஷ்யக் குடியானவரின் ரஷ்ய பூமியின் அவலங்களையும் வதைகளையும் வெளிப்படுத்திவிடுகிறது.
அக்மதோவாவின் வாழ்வில் 1936-41 காலகட்டம் கொந்தளிப்பானது. பீதியும் பதற்றமும் நிறைந்தது. அதே சமயம், படைப்பாக்க ரீதியில் வளமானதும்ஆகும். இது பற்றி அவரே சுட்டிக் காட்டியிருக்கிறார்:
“உயிர் வாழ்வோரின் பட்டியலிலிருந்து என் பெயர் நீக்கப்பட்டது... பீதி, அயற்சி, வெறுமை, மரணம் போன்ற தனிமை நிறைந்த அந்த ஆண்டுகளின் அனுபவத்தை ஏற்றுக்கொண்ட பிறகு, 1936இல் மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
ஆனால் என் கையெழுத்து மாறியிருந்தது, என் குரல் வேறுபட்டு ஒலித்தது... requiem எழுந்தது (1935-40) என் பழைய பாணிக்குத் திரும்ப வழியில்லை.
எது நல்லது, எது மோசமானது என்று நான் சொல்லக்கூடாது.
1940 உச்சமாயிருந்தது.
ஒன்றின் குதிகால்களை இன்னொன்று தொற்றியபடி விரைந்தும் மூச்சுத் திணறியும் கவிதைகள் ஒலித்தன இடையறாமல்...”
1937 ஸ்டாலின் ஆட்சியில் கட்சியினையோ ராணுவத்தையோ நம்பமுடியாத நிலையில் எவ்வளவு பேர் கைது செய்யப்படவேண்டும், எவ்வளவு பேர் நாடு கடத்தப்படவேண்டும் என்பதற்கு மண்டல ரீதியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
1937-38இல் தூக்கிலிடப்பட்டவர்கள் 6,81,692 பேர். நாட்குறிப்பில் அரசியல் நகைச்சுவையினைக் குறித்து வைத்து இருந்தால் கூடக் குற்றமாகக் கருதப்பட்டதன் உச்சபட்ச விளைவு இது.
அக்மதோவாவின் மகன் லெவ் சிறைப்பட்டதும் நண்பர் மேண்டல்ஸ்டாம் நாடு கடத்தப்பட்டதும் இக்காலக் கட்டத்தில்தான். கவிஞர் நிகோலாய் க்ளியுயேவும் தூக்கிலிடப்பட்டது இக்காலக்கட்டத்தில்தான்.
1925இல் தடைசெய்யப்பட்ட அக்மதோவா நூல்கள் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் 1940இல் தான் மீண்டும் அனுமதிக்கப்படுகின்றன.
மொழி பெயர்ப்புகள் வாயிலாக உலகமும் அப்போதுதான் விரிவாக அறிந்து கொள்கிறது.
காதலை கவிதையாக்கி கவிதையை வாழ்வாக்கிக் கொண்டிருந்த அக்மதோவா ‘வைரப்பனி’யாக ஒளிர்ந்தவர். அக்மதோவாவை இளமையில் பாரிஸில் சந்தித்த ஓவியரும் சிற்பியுமான மோதிக்ளியானி தன்னை அப்படியே மறந்து போனார்.
இருவரும் வெர்லெய்ன், பாதிலேர், மல்லார்மே போன்றவர்களின் பிரெஞ்சு கவிதைகளில் ஆழ்ந்தனர். அக்மதோவாவை எண்ணற்ற ஓவியங்களாக வடித்தார் மோதிக்ளியானி.
அவற்றில் நிர்வாண ஓவியங்களும் உண்டு. பல ஓவியங்களை அக்மதோவாவிடம் வழங்கவும் செய்தார். பெரும்பாலானவை காணாமல்போக, ஒன்றினை மட்டும் அக்மதோவா பெருமிதத்துடன் தன் அறையில் மாட்டியிருந்தார்.
பிரெஞ்சுபண்பாட்டில் வளர்க்கப்பட்டிருந்த அக்மதோவா வுக்குப் பிரெஞ்சு சூழலும் பிரெஞ்சு கவிதைகளும்மோதிக்ளியானி நட்பும் சேர்ந்து அவரை மெய்மறக்கச் செய்துவிட்டன.
இத்தகைய ஆளுமை வெடிகுண்டு தாக்குதலுக்கு ஆட்பட்டது போல, தனிப்பட்ட நிலையில் நண்பர்களும் உறவினர்களும் கொல்லப்பட்டு முதல் கணவன் தூக்கிலிடப்பட்டு, ஒரே மகன் கட்டாய உழைப்பு முகாமில் வதைபட, தன் எழுத்து 15 ஆண்டுகள் தடை செய்யப்பட்டிருக்க, அன்றாட வாழ்வுக்கான குறைந்த பட்ச வழிவகையும் பறிக்கப்பட்டு உறைநிலைக்குத் தள்ளப்பட்டார்.
என்றாலும் அவரது சக பயணிகள் போல, அதிருப்தி/ உடன்பாடின்மை காரணமாக ரஷ்ய மண்ணிலிருந்து புலம்பெயர விரும்பவில்லை. அவரது கண்ணீரும் கற்பனையும் கவிதையும் ரஷ்ய மண்ணின் வாசம் பெற்றிருந்தன.
புடம் போட்ட தங்கமாய் மீண்டெழுந்து அவர் எழுதிய Requiem, The Way of All the Earth, Poem Without a Hero என்னும் நீண்ட கவிதைகள் ரஷ்ய மண்ணின் துயரத்தை அவரது துயரத்துடன் ஊடு பாவாக்கி நெய்யப்பட்டவை.
தலைசிறந்த இக் கவிதைகள் தாந்தேயின் தெய்வீக நாடகத்தின் உத்வேகத்தில் பிறந்தவை என்பதால் உலக இலக்கிய வாசகனுக்கு எப்போதும் ஒளி பாய்ச்சும் மின்மினிகள்.
ஸ்டாலின் கால ஒடுக்குமுறை விபரங்களும் அக்ம தோவாவின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளும் அறியாத வாசகனுக்கு இக்கவிதைகள் புதிர்கள்தான். அதிலும் அக்மதோவா என்னும் ஆளுமை மர்மம்தான்.
அக்மதோவா தன் இறுதிக் காலத்தில் எழுதி வந்த குறிப்பேடுகளில் ஓரிடம். poem without a hero தொடர்பானது... ஆரம்பகட்ட மாயகோவ்ஸ்கி கணப் பருகே புகை பிடித்துக் கொண்டிருக்கவேண்டும். என்னை அங்கே காணவில்லை, ஆனால் எங்கோ ஓரிடத்தில் என்னை ஒளித்து வைத்திருப்பேன் மோதி க்ளியானி ஓவியத்தின் நெஃபெர்டிடியாக இல்லாது போனால்.
1911இல் அவர் அப்படித்தான் எகிப்திய தலையலங்காரத்துடன் என்னைப் பலமுறை தீட்டியிருந்தார். தாள்களை நெருப்பு விழுங்கிவிடக் கனவு ஒன்று அவற்றிலொன்றை என்னிடம் கொண்டு வந்து சேர்த்தது.”
அக்மதோவாவின் உணர்வுநிலையைப் பிரக்ஞையோட்டத்தை ஆன்மாவின் தவிப்பைச் சொல்வதற்கு இணையான கவிதை பிரவாகத்தை ஈழப் போர்க்களத்திலிருந்து பாயவிடுகின்றார் கருணாகரன்.
கடந்துசெல்லும் ரெயினில் யாரும்
கையசைக்கவோ
புன்னகைக்கவோ இல்லை
சாவின் அதிர்ச்சியில் எல்லோரும்
உறைந்துவிட்டனர் போலும்
இறந்தவரைப் பற்றிய துக்கமும்
மரணத்தின் கலக்கமும்
எல்லோரையும் சோர்வடையச் செய்திருக்கிறது
துக்கம் அப்பிய கணங்களில் சுரக்கும்
இரக்கத்தை முகர்ந்து பார்க்கிறேன்
வேதனையின் வேர்கள் பரவிக்கிடக்கின்றன
எல்லா இடத்திலும்
அக்கணத்தில் ஒரு மின்னலாக
குறுஞ்செய்திகளில் ஒரு முத்தத்தைப்
பகிர்ந்துகொண்டிருக்கிறாள்
ஒரு பெண்
சாவுச் செய்தியில் செருகப்பட்ட மலராகியது
அவளுடைய அந்த முத்தம்
இறந்தவனின் உடல் வாசனைத் திரவமாகி
அந்த ரெயினைக் கரைத்தது.
(குறிப்பு: இலங்கைத் தமிழர் வழக்கில் ரெய்ன் என்பது ட்ரெய்ன்)
ஆணின் அதிகாரத்தையும் அரசின் அதிகாரத்தையும் எதிர்த்த கலகக் குரல் அக்மதோவாவினுடையது. அவர்“ரகசியத்திலிருந்து வெளிப்படும் மர்மம், மர்மத்திலிருந்து அவிழும் புதிர்”.
இப்புதிரை அறிந்தவர்களாக இசையா பெர்லின் இருக்கக்கூடும், மோதிக்ளியானி இருக்கக்கூடும்.
‘சூரியன் எழுந்தது நகரில் கலகக்காரனைப் போல்’என்னும் அக்மதோவாவின் வரி அவருக்கும் பொருந்தும்.