ஃபாஸிசத்தின் கனிந்த சதைத்திரட்டு...

சம்பு

பகிரு

வரலாற்று ரீதியாக ஓர் அறிவார்ந்த சமூகத்தின் முன்பாக நிறுவவியலாத உள்ளீடுகளற்ற இந்துத்துவத்தைப் பலங்கொண்ட தத்துவமாக, ஒரு கட் புலனாகா மாயத்திரையில் வரைகிற பணியை அயராது செய்து வருகிறது பிஜேபி. அதன் வீச்சுக்கு முதலில் பலியாவது இளைஞர்கள்தான்.

முழுமுற்றாக நம் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிற அபாயகரமான சூழலில்தான், நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமென்று அவ்வளவு தீர்க்கமாக, அந்த எளிய இதயங்கள் நம்பும்படியாக ஒருபுறம் மூளைச்சலவை நடந்தேறிக்கொண்டே இருக்கிறது.

இந்த நாடு இந்துக்களாகிய நம்வசம் இருக்கப்போவதில்லை. இந்த மண்ணில் நம் எண்ணிக்கை நாள்தோறும் குறைந்து வருகிறது

இந்தத் தேசத்தைப் பூண்டோடு ஒழிக்க முஸ்லிம்கள் சதா சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்துக்களாகிய நாம் நமக்குள் பிளவுபட்டுக் கிடக்கிறோம்.

துலுக்கன்கள் நம் தலையின்மேல் ஏறி உட்காரப் போகிறார்கள், தென்னிந்தியாவைப் பொறுத்தவரை பெரிய கரிய பூதமொன்று நம்மைக் கவ்வப்போகும் விபரந்தெரியாமல் திராவிடம் முற்போக்குச் சமதர்மம் கம்யூனிசம் பேசிக்கொண்டு அவர்களது சதிக்கு உடந்தையாகி நாட்டைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறோமென்று பல்வேறு செய்திகளை ஒரு மந்திரம் போலவே பிஜேபியின் மூல அமைப்பான RSS ஓதிக்கொண்டிருக்கிறது.

இதில் செழுமையாக வெறியூட்டப்பட்ட சில இளைஞர்கள், கையில் குறுங்கத்தியை மட்டும் வைத்துக் கொள்ளவில்லையே தவிர, நெஞ்சில் அந்தத் தீயைச் சுமந்திருக்கிறார்கள். சில நேரங்களில், அந்தச்சூட்டைத் தொட்டுப்பார்த்து நான் கையை உதறியிருக்கிறேன். விடலைத்தனமான பெரும்பான்மைச் சமூகத்தின் அபிப்ராயங்களுடன் சுற்றிக்கொண்டிருக்கும் அந்தக் கூட்டத்தை ஒருங்கிணைக்கிற வகையிலும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் நாசகாரக் கருத்துகளைத் தெளிவாக ஒரு பாடத்திட்டம் போலவே RSS பாவித்து அவர்களிடத்தில் செயலாற்றுகிறது. இதன் மொத்த உருவமான எச்.ராஜாவின் கோபாவேசப் பேச்சு நமக்கு மயிர்கூச்செரியும் ஒவ்வாமையைக் கிளப்புவது உண்மைதான்.

எனினும், அந்தப் பேச்சினுள் வேறு சில அழுத்தமான உளவியல் உண்மைகளும் மறைமுக நோக்கங்களும் ஒளிந்திருக்கின்றன. அவர் போன்றவர்கள் உதிர்க்கும் கருத்துகள் போகிறபோக்கில் சொல்லப்படுகிற அல்லது வாய்தவறி வந்துவிழுகிற ஒன்றல்ல. பின்னால் திரண்டு வருகின்ற ஒரு கூட்டத்தின் முன்நின்று எப்படி லாவகமான சொற்களைப் பிரயோகித்தால் தன்பிம்பம் நிலைபெறும் அல்லது அக்கூட்டம் தூண்டப்படுமென்கிற ஆழமான உளவியல் புரிதலுடனே எச்.ராஜாவிடமிருந்து வார்த்தைகள் வருகின்றன.

“கோர்ட்டாவது மயிராவது… கோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது… நான் தரட்டுமா… லஞ்சம்… நான் தரட்டுமா… நான் தர்றேங்கறேன்…” எனச்சந்நதமேறி அவர் உறுமும்போது,“இப்படி முறையில்லாமல் பேசாதீர்கள்… இது சரியான பேச்சு இல்லை…” என அந்தப் போலீஸ் அதிகாரியும், மறுத்துக் குறுக்கிடுகிறார். ஆனால் ‘விஷயம்’ இந்த உரையாடல்களை நாம் காணும் ஒளிப்படக் காட்சியில் இல்லை.

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்திலிருந்தே பாஜக தாம் முன்வைக்கிற பத்தாம்பசலித்தனமான அடிப்படைவாதக் கோட்பாடுகளுக்கெதிராக எந்தச் சக்தி முன்நின்றாலும் - அது பொதுமக்கள், காவல் துறை, கலை இலக்கிய அமைப்புகள், அரசு - சுத்திகரிக்கப்பட்ட தனது அக்மார்க் வன்முறையினாலோ அல்லது அப்படியொன்றை நிகழும்படி தூண்டச்செய்கிற விஷவிதைகளைத் தூவுவதன் மூலமோ மட்டுமே அவ்விஷயத்தை எதிர்கொள்கிற முரட்டுச் சித்தாந்தத்தை அது கறாராகக் கடைப்பிடித்து வருகிறது.

இந்திய அளவில் பாஜக தற்போது எதிர்கொள்கிற சவால்கள், குறைத்து மதிப்பிட முடியாதவைகளாகும். அரசின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு அடாவடியான எதிர் நடவடிக்கைகளுக்கு ஆதரவான குரல்களை அது மெல்ல மெல்ல இழந்தேவிட்டது எனலாம்.

2014ல் ஊடகங்களின் ஏகோபித்த ஆதரவுடன் குதியாளம் போட்டுக்கொண்டு வண்டியேறிய பாஜகவின் தேனிலவு துவக்கம் 2018ல் ‘அதுவொரு இனிய சுவை’ என அதன் பழைய ஞாபகங்களில் நிழலாடிக்கொண்டிருக்கிறது. இன்றைய அதன் மரத்த நாவுகளுக்கு அந்தச் சுவை இனிக்கவில்லையென்பது அடக்குமுறையின் கொடுங்கரங்களுடன் அது நாவைச் சுழற்றுவதிலிருந்தே அப்பட்டமாகத் தெரிகிறது.

மிகவும் வரிந்து கட்டிக்கொண்டு ஒரு தனிநபர் பிம்பச் செதுக்கலில் இறங்கி முட்டுக்கொடுத்த ஊடகங்கள் (அவைகள் ‘உண்மை’யான ஒரு மாற்றுக்கு அப்போது ஏங்கியவையாக இருந்தாலுங்கூட) ‘உண்மையின் கோரமுகத்தை’ தற்போது தரிசித்து விழி பிதுங்குகின்றன. எனினும், ஒரு முரட்டு விலங்கால் சுற்றி வளைக்கப்பட்டஒரு இரையைப்போல இதிலிருந்து தப்பித்து ஓடவும்
கயமைத்தனத்துடன் குறுக்கு வழி தேடுகின்றன. “நள்ளிரவில், இயேசு இளம்பெண்ணை அழைத்துச் செல்கிறார்…” எனத் தமிழில் கவிஞர் இசையின் கவிதையொன்று என் ஞாபகங்களில் தற்போது நிழலாடுகிறது. காந்தி கனவு கண்ட இலட்சிய இந்தியாவில், நள்ளிரவில் ஓர் இளம்பெண் ஆபரணங்களுடன் பயணிக்கிற ஒரு தேசத்தின் பாதுகாவலராக, புதிய விடியலை முன்மொழிபவராக, துயரங்களின் மீட்பராக அய்ம்பத்தாறு இஞ்சுகள் நெஞ்சு அகலம் கொண்ட ஓர் வாழும் இயேசுவாகவே மோடி இருப்பாரென்று அன்று வீதிக்கு வீதி கூவித் திரிந்த ஊடகங்கள் இன்று கனத்த மௌனம் சாதிக்கின்றன. அதன் நீட்சியாக, அந்த மௌனம் ஒட்டுமொத்த இந்தியாவையும் பீடித்து, ஒவ்வொரு தனிமனிதரையும் நிராதரவின் கொடுந்துயரில் அமிழச் செய்துகொண்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் நான்காவது தூணாகிய ஊடகங்கள் “அது வெறுமனே அசைவற்ற தூண்கள்தான். அவை இனி வாய்திறந்து பேசப்பாவதில்லை” எனப் பிரதமர் முரசறைந்து அறிவிக்கவில்லையே தவிர யதார்த்தம் அவ்வாறே உள்ளது. இந்தியா முழுவதிலுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பொன்று சமீபத்தில் நடந்து முடிந்தது.

அச்செய்தியை ஊடகங்கள் வெட்டவெளிச்சமாக வெளியிடுவதில் காட்டிய தயக்கம் மற்றும் சமூக நிர்பந்தத்தின் பேரில், அதுவொரு இயல்பான சந்திப்பென்றே பிறகு பூசிமெழுகிய விதம் சந்தேகத்துக்குரியது.

அந்த ரகஸ்ய சந்திப்பின் புகைப்படங்களைப் பிரதமர் அலுவலகம் வலைத்தளத்தில் கசியவிடுவதன் மூலம், ஊடகங்களைத் தங்கள் வசப்படுத்திவிட்டதான தோற்றத்தை தேசம் முழுதும் கட்டமைக்க முயன்றது. உண்மையும் அதையொத்தே நம்முன் பல்லிளித்துக் கொண்டு இருக்கிறது. இதைத்தாண்டி அரசை எதிர்த்து விமர்சிக்கிற மிகச்சில ஊடகங்களின் குரல்வளையை நோக்கி அரச பயங்கரவாதத்தின் கொடுங்கரங்கள் நீளத் தயங்குவதில்லை.

இதெல்லாவற்றையும் விட, தற்போது, பிஜேபியை இயக்குகிற இந்துத்துவத்தின் தேவைகளோ மிகவும் வெட்ட வெளிச்சமானவை. நம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட துல்லியமான நகர்வுகளைக்கொண்டவை. தனது சித்தாந்த ரீதியான பலம் குறைந்திருப்பதாகக் கருதுகிற நிலங்களில் அல்லது தருணங்களில் பிரிவினையைத் தூண்டுகிற இழிந்த அரசியலையே அது முன்னெடுத்துச் செல்கிறது. அந்த அரசியலின் உடனடி சாத்தியம்
அல்லது அசாத்தியம் பற்றிய பாரதூரமான கவலைகள், அதற்கு ஒருபோதும் கிடையாது. மீண்டும் மீண்டும் விடாது கைக்கு அடக்கமான ஆயுதங்களுடன் அது நம்மை வழிமறித்து அச்சத்தையும் பீதியையையும் உருவாக்கும்.

இந்தப் பின்புலத்துடன் சேர்த்து வைத்துத்தான் எச்.ராஜா போன்றவர்களின் குரோதப் பேச்சினை நாம் புரிந்துகொள்ளவும்வேண்டும்.

ஒரு மேடையை அமைக்க அனுமதி இல்லையென மறுக்கப்படும்போது, சர்வாங்கமும் அதிர்ந்து, பிஜேபிக்கு இங்கு மேடையே இல்லையா, தாம் நம்புகிற இந்துத்துவத்திற்கு இம்மண்ணில் இடமேயில்லையா என்ற சுருதியிலான கொடுவியத்தலை (வியப்பை) ஆங்காரமாக வெளிப்படுத்துகிறது அவரது உடல்மொழி. அவ்வாறு காவல்துறை மறுப்பது, நடுவீதியில் வைத்து, தன்னையும் தனது கட்சியையும் ஒருசேர இழிவுபடுத்தும் செய்கையாகவும், ஒருகணமும் தாமதியாமல் அவ்விடத்தில் தன்னிலையின்றி எதிர்வினை புரிவதுபோல ஆனால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் இந்துத்துவத்தை இம்மண்ணில் நிலைநிறுத்த தான் எதுவும் செய்வேனென்றும், காவல் துறையினருடன், எனது இலஞ்சத்திற்குக் கட்டுப்பட நீங்கள் தயாராவென அவர் பேரத்தில் சாதுர்யம் காட்டும்போதும் அப்படியான இலஞ்சத்தின் மூலமாகவும்கூட நமது இலட்சியத்தை அடையமுடியுமென்ற நைச்சியமான செய்தியை தமது தொண்டர்களுக்கும் அவர் ஒரு குறிப்புணர்த்துகிறார்.

தான் அதிகாரத்திலிருக்கும் ஒரு தேசியக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் என்பதை ஆக்ரோசமாய் முண்டா தட்டி அறிவிக்கிறார். இதற்கு, ‘நான் சொல்வதைச் செய்… நான் சொல்வதை மட்டுமே செய்…’ என்ற கருத்தாக்கமே அடிநாதமாகும். அரசதிகாரம் கைவசப்பட்டிருக்கும் ஒரு குழுவோ அல்லது தனி நபரோ இக்கருத்தாக்கத்தை வலிந்து திணிப்பதைத்தான் ஃபாஸிசம் என்கிறோம்.

தற்போது உணர்ச்சி வேகத்தில் அச்சொற்கள் தம்மையறியாது வெளிப்பட்டதாகவும் நீதிமன்றத்தைஅவமானப்படுத்துகிற கெடு நோக்கமெதுவும் தனக்கில்லையெனக் குழைந்து நிற்கிறார். நீதிமன்றமும் சட்டத்தின் வழியல்லாமல் ஒரு நொடி அறியாமல் செய்த பாவத்திற்கு மன்னிப்பிறைஞ்சுகிற ஓர் எளிய உயிரியெனக் கருதி கலங்கி நிற்கிறது. மொத்த நீதிமன்றமுமே ஓர் பாவமன்னிப்புக் கூடாரமாகக் கணத்தில் மாறிவிடுகிறது.

நீதிபதியோ கர்த்தரின் வழி நின்று ஆசிர்வதிப்பதைப்போல மன்னிப்பை அந்தக் கெடு உள்ளத்தைச் சொஸ்தப்படுத்தி வழங்கி அமர்கிறார். எச்.ராஜாவை நீதியின் குளிர்காற்று ஒரு தென்றலென வருடிச்செல்கிறது.

நவீன பாஸிஸ்ட்டுகள் தம் அதிகாரம் நுழைய முடியாத இடமேதுமிருப்பின் அங்கு மண்டியிட்டு கால் நக்குகிற பிறகு கூடுமான இடைவெளி விட்டுத் துள்ளிக்குதிக்கிற புதிய வகைப்பட்ட அரசியல் அசைவினை முன்னெடுத்திருப்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

சுபோ மஸ்து…

“பாசிச பாஜக ஆட்சி ஒழிக…” என்ற சோஃபியாவின் ஒற்றைக்குரலுக்கு அது காற்றில் கலந்து தேயும் வரைதான் அப்போது உயிர் இருந்தது. ஆனால் அக்குரல் ஓர் புயல்வேகத்தில் சென்று தமிழிசையின் காதுகளை முழுதும் அடைத்துவிட்ட பிறகு வேறெந்த வார்த்தைகளும் அவர் செவிக்குள் நுழையவில்லை. தமிழிசை அவ்விடத்திலேயே சிலையென உறைந்து நின்றுவிட்டார். அவரால் அச்சொற்களைக் கடந்து ஒரு அடிகூட நகரவியலவில்லை.

சிலகணங்களுக்குப் பிறகுதான் தாம் யார், தம் செல்வாக்கு, பதவி அந்தஸ்து, அதிஅதிகாரம் எல்லாம் ஒலியற்ற படக்காட்சிகளைப்போல் கண்ணுக்குள் வந்துபோகிறது. உடனேயே ‘பட்’ டென்ற ஓசையுடன் அவரது செவிகள் திறப்பதற்கு முன்னரே வாய்த்திறந்துகொண்டது. பிறகு அது மூடவேயில்லை. சோஃபியாவுக்கு ஒரு வலுவான தீவிரவாதப் பின்புலமிருப்பதான அடையாளத்தை உருவாக்க முனைந்து, அந்தப் பெண்ணை அலைக்கழித்து, வழக்குப் பதிவுசெய்து, மிரட்டிக் கூச்சலிட்டு, மீண்டும் அந்தக்கூச்சலை ஊடகங்களில் நியாயப்படுத்த முயன்று முட்டிமோதி, இறுதியாக, இந்தியா முழுமைக்கும் “பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்ற கோஷத்தைக்கொண்டு சேர்த்த பிறகே அவர் கொஞ்சம் ஓய்ந்திருக்கிறார். காற்றும் சற்றே மெதுவாக வீசிக்கொண்டிருக்கிறது.

எனினும் இன்னொரு மன்னிப்பை தமிழிசைக்கும் வழங்குகிற அறக்கூடாரம் தயாராகிக்கொண்டிருக்கிறது. எனினும் நண்பர்களே, அரசதிகாரத்தில் தம் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்க்கேள்விகளும் விமர்சனங்களுமின்றித் தாம் விரும்பியபடி மட்டுமே தர்பார் நடத்தவும், எந்தவொரு மாற்றுக்குரலையும் அது வெளிப்படுகிற குரல்வளையை வெட்டுக்கை ஆணி பதித்த செருப்புக்கொண்டு நசுக்க முனைவதையும் ‘ஃபாஸிசம்’ என்ற சொல்லாலன்றி வேறு எப்படி அழைப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் அல்லது பரிந்துரைக்கிறார்கள்.

அப்படியொரு மேலான “வார்த்தை” இருப்பின் அதனைப் பாவிப்பதில் ஒருபோதும் நமக்கொன்றும் மனத்தடை இல்லையென்பதையும் சகலமானவர்களுக்கும் உரத்துச் சொல்லலாம்.

ஆமென்…

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer