ஸ்ரீநேசன் கவிதைகள்


பகிரு

உடனே கிளம்பு

சட்டென்று
நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து
இப்போது கிளம்பினாலும்
வேறெங்கோ போய்விடலாம்.

இயல்புலகு

இயற்கை இயற்கையென
பிதற்றிக்கொண்டிருக்கிறாயே
கல்லை உண்டால்
உன் குடல் செரிக்குமா என்கிறாய்
தெரியாது
ஆனால் வயிற்றினில் தங்காது
விபரீதம் ஏதும் பக்கவிளைவாக அளிக்காது
மறுநாள் காலைவரை செரிக்காது
மீந்திருந்தால் இயல்பாய் வெளியேறும்
வீண்தர்க்கம் ஏதும் இனிவேண்டாம்
சமதளத்தில் ஒரு மரமும் அருகில்லாது
நீ கட்டி எழுப்பும்
உன் வீடு
பூகம்பத்திற்கும் கூட அசையாதுதான்
ஆனால் அதோ அம்மலை
வீசும் இளங்காற்றுக்கு
அசையும் மரங்களின் பின்னணியில்
எவ்வளவு கம்பீர அழகுடன்
தானும் ஒத்திசைந்து
ஒரு பெருவிருட்சமாய்
அசைந்து நிற்கிறது காண்
காண்.

ஜம்மு தாவி

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில்
இரவும் பகலும் ஓய்வில்லாமல்
மஞ்சள் பொடியை உடுத்தியதுபோல்
அறுவடைப் பருவ கோதுமை வயல்
அதனிடையே
அந்தியைக் கருத்தரித்து விடியலில் பிரசவித்த
சூரியனாய்ச் சிவந்து பூத்தப் பாலாஷ் மரங்கள்
அதனிடை யிடையே
எங்கள் ரயில் இல்லை
நம் ரயில் இல்லை
அவர்கள் ரயில் இல்லை
உங்கள் ரயில் இல்லை
இந்த ரயிலோ
அல்லது அந்த ரயிலோ
இக்காலத்திலோ இல்லை
அக்காலத்திலோ
அல்லது காலாகாலத்திலோ
நகரிரைச்சல் நனவுகளிலும்
வயல்வெளியமைதிக் கனவுகளிலும்
விரைந்து வந்தோ
போய்க்கொண்டோ
இருக்கிறது
சபரி நல்ல உறக்கமா
நேசன் இது என்ன ஸ்டேஷன்
கண்டர் அதோ பனிமலையைப் பார்
நேரில் இல்லாது வேறெங்கோ இருப்பவர்கள்தாம் அழைக்கிறார்கள்
ஆனால் இருப்பவர்கள் எல்லோரும் அழைப்பதில்லை
எப்போதும் நண்பர்களாய் இருப்பவர்கள்தாம்
வீடென்றால் அழைப்புகளை மகன்தான் எதிர்கொள்கிறான் கட்டளைக்குப் பணியாத பணிவிடை
சமயங்களில் விளையாட்டுக் குறும்பாகக் கூடுங்கால்
ராணிதிலக் அழைத்தால் கண்டராதித்தன் ஆக்கி விடுகிறான்
குலசேகரனை ஜீ.முருகன் என்றிடுவான்
கோணங்கியின் அழைப்பு மனோன்மணியுடையதாகிறது
சுரேஷோ நீலகண்டனோ அஜயன் பாலாவாவதுபோல்
சொல்லுங்க பயணி என்றால் பாபு பேசிடுவார்
சொன்னவரோடு பேச இல்லாமல் திடுக்கிடுவதில்தான்
அத்தனை இன்பம் அவனுக்கு
இலக்கிய உலகத்தை உன்னிப்பாய் கவனிப்பதில்லை
நானதனாலும்
என்னை அழைப்பவர்களை உற்று கவனிக்கிறான்போல
சமீபத்தில் ஓர் அழைப்பு
அப்பா விக்ரமாதித்யன் காலிங் என்றான்
இம்முறை நான் திடுக்கிடவேயில்லை
அது ஞானக்கூத்தன்தான் என்று எனக்குத் தெரிந்திருந்தது.
(பாபுவின் நினைவுக்கு)

குறிச்சொற்கள்