ஸிபிக்நிஃப் ஹெர்பெர்த்தின் கவிதைகள் - தமிழில்


பகிரு

அம்மா

அவள் மாறிவிடப் போவதில்லை
என்று நான் நினைத்தேன்
எல்லாக் கதவுகளின் வாயிற்புறத்திலும்
ஒரு வெண்ணிற ஆடையோடு
நீல நிறக் கண்களோடு
எப்பொழுதுமே காத்துக் கொண்டிருப்பாள் என்று
எப்பொழுதுமே புன்னகையுடன்
கழுத்தில் அட்டிகையை அணிந்தவாறே
திடீரென்று இழை அறுந்தது
தரையின் வெடிப்புகளில்
இது முத்துகளின் கூதிர்காலம்
அம்மாவுக்குக் காஃபி பிடிக்கும்
அமைதியாக
ஒரு சூடேற்றும் கணப்பின் அருகில்
அமர்ந்து
கூரிய நாசியின் மீது
கண்ணாடியைச் சரி செய்து
என் கவிதையைப் படிக்கிறாள்
நரைத்த தலையை ஆட்டி மறுக்கிறாள்
மடிமீதிருந்து கீழே விழுந்த கவிதையை
உதடுகள் இறுக்கி அமைதி காக்கிறாள்
அது ஒன்றும் மகிழ்ச்சியான பேச்சு அல்ல
விளக்கின் அடியில் இனிமையின் ஆதாரம்
உன்னதமில்லாத துக்கம்
எந்தக் கேணியிலிருந்து இவன் நீர் பருகுகிறான்
எந்தப் பாதைகளில் இவன் நடக்கிறான்
என் கனவின் பிம்பமாயில்லாத இந்த மகன்
அன்பெனும் பாலூட்டிதான் இவனை நான் போஷித்தேன்
அமைதியின்மை அவனை வாட்டுகின்றது
வெப்பக்குருதியில்தான் அவனைக் குளிப்பாட்டினேன்
அவன் கைகள் ஏனோ கரடு முரடாய் உணர்ச்சியற்று இருக்கின்றன
உன் கண்களை விட்டு வெகு தொலைவில்
குருட்டுக் காதல் குத்தியிழுக்க
தனிமை தாங்கிக் கொள்ள எளிதானது
ஒரு வாரத்துக்குப் பிறகு
குளிர்ந்து போன அறையில்
கம்மிய குரலில்
அவளுடைய மடலை நான் படித்தேன்
ஒவ்வொரு சொல்லும் தனித் தனியே நிற்கின்றன
நேசமிகு இதயமென.

ஆங்கில மொழியாக்கம்: ஜான் ஆர். கார்ப்பென்டர் & போக்தனா கார்ப்பென்டர் (1976 ஆம் ஆண்டு ஜுன் மாத Poetry இதழில் வெளியான கவிதை)

அப்பாவை நினைத்து கொள்கிறேன்

சிறுபிராயத்து நீரின் மீது ஒரு மேகமென அவருடைய கடுமையான முகம்
என் உணர்ச்சி மிக்கக் கைகளை அவர் அபூர்வமாகவே பிடித்திருக்கிறார்
மன்னிக்க முடியாத குற்றவுணர்வைக் கற்பனையில் நாட முயன்று
அவர் கானகங்களை வேரோடு சாய்த்தார் பாதைகளைச் சமன்படுத்தினார்
இரவுக்குள் நாங்கள் நுழைந்த தருணத்தில் விளக்கைத் தூக்கிப் பிடித்தார்
அவருடைய வலது கை மீது நான் அமர்ந்திருப்பேன் என்று எண்ணினேன்
ஒளியிலிருந்து இருளை நாங்கள் பிரித்தெடுப்போமென
வாழ்ந்திருப்போரை எடை போட்டு
ஆனால் நடந்ததென்னவோ வேறாக இருந்தது
காயலாங்கடைக்காரன் அவருடைய சிம்மாசனத்தை வண்டியேற்றிக்கொண்டு போனான்
எங்கள் ராஜ்ஜியத்தின் எல்லைகள் அடகு வைக்கப்பட்டன
அவர் இரண்டாம் முறையாகப் பிறந்தார் பொசுக்கென்று மிகவும் பலவீனமாக
வெளிறிய தோலும் இல்லையோ என்று தோற்றமளித்த எலும்புகளுமாய்
தன் உடலைக் குறுக்கிக்கொண்டே வந்தார்
ஓர் அனாமதேய இடத்தில் ஒரு கல்லின் நிழலில் நான் அதைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக
என்னுள் அவர் வளர்கிறார் எங்களுடைய தோல்விகளை நாங்கள் உண்கிறோம்
நாங்கள் வெடித்துச் சிரிக்கிறோம்
பழக்கப்பட்டுப் போவது எவ்வளவு எளிதானதென்று
அவர்கள் சொல்லும்பொழுது.

ஆங்கில மொழியாக்கம்: ஜான் ஆர். கார்ப்பென்டர் & போக்தனா கார்ப்பென்டர் (1976 ஆம் ஆண்டு ஜுன் மாத Poetry இதழில் வெளியான கவிதை)

கூழாங்கல்

ஒரு கூழாங்கல் என்பது
ஒரு முழுமையான பொருள்
தனக்குத் தானே நிகராய் அதன் எல்லைகளுக்குள் இருந்துகொண்டு
துல்லியமாய்க் கல்லறிவால் நிரம்பி
வேறெதன் சாயலிலும் இல்லை
அதன் நெடி
அச்சுறுத்துவதில்லை
ஆசையைத் தூண்டுவதில்லை
அதனுடைய உத்வேகமும் ஒட்டாத தன்மையும்
நியாயமானதாகவும் கண்ணியமாகவும் இருக்கின்றன
கடுமையானதோர் குற்றச்சாட்டை நான் உணர்கிறேன்
அதை நான் கைகளில் ஏந்தி நிற்கும் பொழுது
பொய்மையான வெப்பம் ஊடுருவுகிறது
அதன் உன்னத மேனியை
கற்கள் என்றுமே அடி பணிந்து விடுவதில்லை
இறுதி வரை அவை நம்மைப் பார்க்கும்
ஒளி மிகுந்த அமைதியான கண் கொண்டு.

ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ் & பீட்டர் டேல் ஸ்காட்

கவிதை

என்ன ஆகும் 
கைகள் கவிதையிலிருந்து தாழ்ந்து விழும்போது? 
ஏனைய மலைகளில் 
நான் வறண்ட நீர் பருகும் பொழுது? 
இது ஒரு பொருட்டாகவே இருக்கக் கூடாது 
என்றாலும் இருக்கிறது 
என்னவாகும் கவிதைகள் 
மூச்சுப் பிரியும் நேரம் 
குரலினிமையும் 
நிராகரிக்கப்படும் பொழுது? 
மேஜையை விட்டு விலகி 
ஓர் இருண்ட காட்டின் அருகே 
புதிய சிரிப்பொலிகள் 
எதிரொலிக்கும் 
பள்ளத்தாக்கில் இறங்கி விடுவேனோ?

ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ்

முட்களும் ரோஜாக்களும்

வெண்ணிறத் தீப்பிழம்பாய்
ரோஜாப் புதரின் மீது தன்னைத் தானே
வீழ்த்திக் கொண்டான் புனித இக்னேஷஸ்
சதையின் இச்சைகள்ஒடுங்க
தன் கருமையான வழக்கங்களின் மணிகொண்டு
மூழ்கடிக்க விரும்பினான் அவன்
இம்மண்ணின் காயத்திலிருந்து
பீறிடும் புவியின் அழகை
ஆனால், முட்களின் தொட்டிலுக்கு
அடியில் விழுந்து கிடந்தபோது
தன் நெற்றியிலிருந்து வழிந்த குருதி
புருவங்களின் மீது ஒரு ரோஜா வடிவத்தில்
உறைவதைக் கண்டான்
முட்களைத் தேடிய
அவனுடைய அந்தகக் கைகளை
ஊடுருவிச் சென்றது
மலரிதழ்களின் இனிய ஸ்பரிசம்
ஏமாந்து போன புனிதன் அழுதான்
மலர்களின் பரிகாசத்துக்கிடையே
முட்களும் ரோஜாக்களும்
ரோஜாக்களும் முட்களும்
நாங்கள்மகிழ்ச்சியையே நாடுகிறோம்.

ஆங்கில மொழியாக்கம்: செஸ்லா மிலாஸ்

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer