வெளியேற்றத்தின் பயணப்பாதைகள் ஆலங்குடி சுப்பிரமணியன் ஓவியங்கள்

ஞா.கோபி

பகிரு

“ஓவியத்தின் முதல் நோக்கம், அவை உலகப் பொது வெளிப்பாடாக இருக்கவேண்டும்.” - பைட் மாண்ட்ரியன் (Piet Mondrian)

உலக ஓவிய வெளிப்பாட்டுத் தளத்தில் நவீன இயக்கங்களின் போக்குகள் என்பது, எல்லாக் கலைகளிலும் நேர்ந்தது போலவே, அணுசக்தி யுத்த அச்சுறுத்தலுடன் கூடிய வாழ்வின் விளிம்பில் இருந்தும், போருக்குப் பிந்தையதான வாழ்வில், அதிகாரம் கட்டியெழுப்பும் ஒரு விசித்திரமான உலகத்திற்குள் வாழ்ந்துகொண்டே தத்தமது திறவுகோலைக் கண்டெடுப்பதாகவும் தோன்றியிருக்கிறது. அதே சமயம் அரச மாளிகையை மையமிட்ட படைப்புச் சுருக்கங்களிலிருந்தும் வெளியேறி மீண்டிருக்கிறது என்பதே உண்மை. அங்கிருந்து வளர்ந்தெழுந்துகொண்டிருக்கும் பல்வேறு பாணிகளிலும் ஓவியப் படைப்புகளின் அடிப்படையிலும், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது “தன்னுள் உரையாடி, முற்றிலும் புதிய வெளிப்பாடுகளைக் கண்டெடுத்து, கண்டெடுத்ததன் அளவுகளைக் கூட்டியும் குறைத்தும் என ஒரு புதிய நிலையில் நிறுத்திக்கொள்வது எனத் தொடர்கின்றன.”

தமிழ் நிலப்பரப்பில், சென்னை ஓவியக் கல்லூரியின் பயிற்சியும் பரிசோதனை முயற்சிகளும் பல வெளிப்பாட்டு வடிவங்களை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கும் ஓவியங்களைச் சேகரிப்பவர்களுக்கும் தந்த வண்ணம் உள்ளது யாவரும் அறிந்ததே. அவ்வரிசையில், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்களும் சேர்ந்து கொள்கின்றன. ஏனைய ஓவியர்களைப் போலவே இவருடைய கல்லூரிக் காலத்தின் பயிற்சி ஓவியங்கள் வழி தன் படைப்பு மனதைக் கண்டடைந்தவராய் இருக்கிறார்.

குறிப்பாக, “நிலப்பரப்பு ஓவியங்கள், முக உருவங்கள் மற்றும் நீர்வண்ண ஓவியங்கள் எனப் பயிற்சிகள் எவ்வளவு தூரம் தன்னை அழைத்துச் சென்றதோ அதுவரை அதனுள் திளைத்துத் திளைத்து அங்கிருந்து மெல்ல வெளியேறியிருக்கிறார்”.

ஆம், “கலை மிகவும் அகநிலையின் பக்கம் சார்ந்திருப்பது, புறக்காட்சிகளைப் பார்த்து வரையும்போதுகூட, அதில் தெறித்து எழும் அகநிலைக்காரணிகளைக் கண்டுகொள்ளும்போது அத்தகைய வெளியேற்றங்கள் பல புதிய பயணப் பாதைகளையும் காண்பிக்கத் தவறுவதில்லை. அதே சமயம், இதெல்லாம் படைப்பாளிகளின் மனம் சம்பந்தப்பட்டது என, பார்வையாளர்கள் ஒதுங்கிக்கொள்ளவும் அவசியமில்லை. ஏனெனில், தொடர் ஓவியப் பார்வையாளர்களுக்கும் தான் பார்க்கும், உணரும் ஓவியங்களின்வழி தன்னிலிருந்தும் தன் நிலையிலிருந்தும் வெளியேறி வாழ்வின் புதிய பாதைகளுக்குப் பயணப்படும் சாத்தியங்களையும் உணர்வதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றன. அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் நீண்ட கால ஓவிய வரிசைகளைப் பார்க்கும்போது, அவருடைய அகநிலையில் இருந்து எழும் வண்ணங்களின் பயன்பாட்டில், இந்த வெளியேற்றச் சாத்தியங்கள் மிகவும் முக்கியமான காரணிகளாய் இருக்கிறது.

ஆலங்குடி சுப்பிரமணியனின் ஓவியங்கள் கல்லூரிக்காலப் பயிற்சி முறைகளில் இருந்து வெளியேறி தன் குழந்தைப்பருவம் அதிக அளவில் திளைத்த தன் நிலப்பரப்பின் மிக முக்கிய வெளியான ‘சித்தன்ன வாசல்’ குகையோவிய வண்ணக்கலவைகளிலும் கதை கூறும் முறைகளையும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வரிசையில், ‘அன்பு’, ‘மஞ்சள்நிறப் பெண்’, ‘தடாகம்‘, ‘தடாக மலர் சேகரிப்பவள்’, தடாக விளையாட்டு’ எனப் பாரம்பரியக் கதை சொல்லல் முறைகளில் கண்டெடுத்த முறைகளுக்குள்ளிருந்தே புதிய, அரூப வெளிகளைக் கண்டடைந்திருக்கிறது.

இந்த ஆரம்ப காலப் படைப்பு வெளிப்பாட்டில் இவரிடமிருந்த கதை சொல்லும் முறைகளிலிருந்து ஒரு நேரத்தில் மாறுபட்டு, அதிலுள்ள அரூபப் பாடல்களைக் கண்டெடுக்கத் தொடங்கியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாகவே, உருவங்களைத் தவிர்த்த ஒரு புதிய இசைகளைப்போல ‘புனிதமான உணர்வின்பம்’ எனும் தொகுதிக்கான வெளிகளைக் கண்டடைந்திருக்கிறார்.

இத்தகைய வெளிப்பாட்டுப் பாதைகள் பற்றி ஓவிய உலகம் என்ன பொருள் கொண்டுள்ளது என்பதைக் கண்டுகொள்வதும் மேலதிக புரிதல் உணர்விற்கு உகந்தது. அதாவது, தன்னைச் சுற்றி ஒலிக்கும் ஓசைகளை உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஒரு புதிய இசையை உருவாக்குவது என்பதாகச் சொல்லலாம். ஓவியங்களில் ‘அரூபப் பாடல்கள்’ என்பது சுயத் தோற்றத்தை வரையறுக்கும் ஒரு சொல், ஓவிய உலகில் இன்னும் தலைமுறைகளாக அதன் தோற்றம் மற்றும் பொருள் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்கக் கலை சேகரிப்பாளர் லாரி ஆல்ட்ரிச் 1969 இல் ‘லிரிக் கல் அப்ஸ்ட்ராக்ஷன்’ (Lyrical Abstraction) எனும் இந்த வார்த்தையைப் பயன்படுத்தினார், அதைத் தொடர்ந்து பிரெஞ்சு கலை விமர்சகர் ஜீன் ஜோஸ் மார்கண்ட், 1947 இல், அமெரிக்காவில் அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசத்தைப்போன்ற ஓவியத்தில் வளர்ந்து வரும் ஐரோப்பியப் போக்கைக் குறிப்பிட, ’அப்ஸ்ட்ராக்ஷன் லிரிக்’ (Abstraction Lyric) என்ற சொல்லின் மாறு பாட்டைப் பயன்படுத்தினார். இந்த வார்த்தையின் இரண்டு பயன்பாடுகளும் புறநிலை யதார்த்தத்துடன் தொடர்பில்லாத புதியதொரு உணர்ச்சிகரமான, தனிப்பட்டதொரு புதிய வெளிப்பாடுகளால் வகைப்படுத்தப்படும் கலைவெளியைக் குறிக்கின்றன.

அவ்வகையில், ஆலங்குடி சுப்பிரமணியனின் இந்த ஆரம்பகால அரூப ஓவியங்களில் என்ன அர்த்தம் இருக்கும் என்பது எனக்குத் தேவையில்லை என்ற கண்ணோட்டத்தில் அந்த வண்ணவெளிகளையும் அதனுள் அசையும் உருக்களையும் அணுகினோமெனில். அழகியல் அல்லது புறநிலை உலகம் பற்றிய முன்முடிவுகள் இல்லாமல், சுதந்திரமாக ஓவியம் வரைவதன் மூலம், தெரியாத ஒன்றைத் தன் படைப்பின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அவற்றைக்காணும் நம்மிடமும் புதிய புதிய சுதந்திர வெளிகள் திறவுகொள்வதன் சாத்தியங்களையும் கண்டுணர முடியும். இதைத்தான், மிகவும் செல்வாக்கு மிக்க கலை விமர்சகர்களில் ஒருவரான ஹரோல்ட் ரோசன்பெர்க் (Harold Rosenberg), “இன்று, ஒவ்வொரு கலைஞரும் தன்னைத்தானே கண்டுபிடித்துக் கொள்ளவேண்டும்.

நம் காலத்தில் கலையின் அர்த்தம் சுய உருவாக்கத்தின் இந்தச் செயல்பாட்டில் இருந்து பாய்கிறது.” என்கிறார். இவ்வகையில்தான், ஆலங்குடி சுப்பிரமணியனின் வண்ணப்பிரவாக ஓவிய வரிசைகளை நாம் காண முடிகிறது. முன்முடிவுகளற்ற இந்தப்பயணங்களின் வழி முன்னர் தானும் பார்வையாளர்களும் பழக்கப்பட்ட அனுபவங்களில் இருந்து வெளியேறி வண்ணங்களின் செயல்பாட்டில் ஏற்படும் ஒருவித நிர்வாணத் தன்மையின் பயணப் பாதைகளைக் கண்டடைய வேண்டுமென உழைத்திருக்கிறார். அதை அவர் சென்றடைந்ததன் வழி அவ்வோவியங்களைக் காணும் நமக்கும் புதியதொரு அனுபவத்தைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறார். குறிப்பாக, அத்தகைய படைப்புகளில் ததும்பும் மென்மையான மற்றும் துடிப்பான வண்ணங்களில் உள்ள உணர்வுப்பூர்வமான, அன்பின் மடிப்புக்கள் எல்லாம் கலைஞரின் தொடுதலின்போது எழுந்த மனநிலைகளின் அசைவு உண்மைகள்தான் எனினும் இந்த வகை ஓவியங்களில் எப்போதும் தெரியும், ‘தன்னுள் நீடித்திருக்கும் பிடிமானங்களைத் துறத்தல்’ என்பதன் வழி மனித வாழ்வின் பேருண்மைகளாக எழுந்து நிற்கின்றன. இந்தப் படைப்புகளை ஒரு செயல் ஓவியங்களுடன் தொடர்புபடுத்தலாமா? எனும் கேள்வி எழும் போதே, இவரது வண்ணக் குழைவு ஓவியங்கள் மயக்கஅணுகுமுறையோடு இயைந்த மாய உணர்வுச் செயல்பாட்டுடன் தொடர்புடையது என்ற பதில் நம்மை வந்தடைகிறது. அதுபோல் இவருடைய ஒற்றை வண்ண ஓவிய வரிசைகளும் கவனிக்கத்தக்கதாகவே இருக்கின்றன. பொதுவாக ஒற்றை வண்ணங்களில் உடல்களைத் தேடியெடுக்கும் முயற்சியாக இவ்வோவியங்களைக் காணமுடிகிறது. அத்தகைய தேடல் நம்மிடம் வந்து சேரும்போது, நமக்குள் அர்த்தமுள்ள ஆற்றல் மற்றும் பால் பாகுபாடற்ற காட்சி அல்லது மனோதத்துவ நுண்ணறிவு ஆகியவற்றின் உணர்வை வழங்கத் தொடங்குகின்றன. குறிப்பாக, நேரடிக் கருத்துகளைக் கூறுவதற்கு மாறாக, மூளை அலைகளால் உருவாக்கப்பட்ட வடிவங்களின் வித்தியாசம் இவ்வரிசை ஓவியங்கள் எனவும் சொல்லலாம். இப்படி, ஆலங்குடி சுப்பிரமணியன் தனது சொந்த மனதின் காட்சி ஆய்வுக்குத் தன்னைத்தானே உட்படுத்திக்கொள்வதே அவருடைய தற்காலப் படைப்புகள் எனலாம். இவருடைய கடந்த இரண்டு ஆண்டு காலப் படைப்புகளில் மனிதர்கள் புழங்கும் இயற்கையின் உருவங்கள், வடிவங்களில் இவர் ஈர்க்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது, சிறிய அளவிலான படைப்புக்கள் என்றாலும், புதிய பாதைகளில் தெரியும் பல காட்சி மொழியை உருவாக்கித் தருகிறார், அவ்விதம் அப்படைப்புகளில் பரிணாமத்தைக் கடந்த காலத்துடன் ஒரே நேரத்தில் தொடர்பையும் நவீன உலகத்தின் மனநிலையிலிருக்கும் சந்தேகத்தையும் வெளிப்படுத்தி, அவர் ஒரு அழகியல் நிலையை நமக்குக் காணத் தருகிறார். இவ்விதம் படைப்புகள் வரிசையில், ஒவ்வொன்றிலிருந்தும் வெளியேறி தற்போது முற்றிலும் புதிய முறைகளில் வினைபுரிந்து கொண்டிருக்கும் ஆலங்குடி சுப்பிரமணியன் தனது பார்வையைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக, “சுவாரசியமான தொடர்ச்சியுடன் என் படைப்பு வெளியேற்றம் மனிதர்களின் வளர்ந்து வரும் யதார்த்த உணர்விற்குச் சாட்சியமளிக்கிறது. வாய்மொழியாகச் சொல்ல இயலாத காட்சி அசைவுகளை வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்கிறேன். அதன் யதார்த்த ஆவலே என் கலையில் பிரதிபலிக்கிறது” என்று சொல்கிறார்.

தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் மற்றும் பல இலக்கிய வடிவங்களின் அட்டைப்படங்கள் என இவரது ஓவியங்கள் பரவலாகப் பயணப்பட்டு வருவது ஒருபுறம் இருப்பினும் கண்காட்சிகளுக்காகத் தொடர்ந்து பல வரிசை முறைகளை உருவாக்குவதே தனக்கான செயல் கணங்கள் என இயங்கி வருகிறார். இவருடைய தற்கால ஓவியங்களின், மேற்பரப்புகளில் பல உடல்களின் அசைவு அடையாளங்களைக் காணமுடிகிறது. அதே சமயம் அந்த உடல்கள் எவ்வாறு நகர்கிறது, அது அவ்வாறு நகர்வதற்கு என்ன காரணம்? உடல் எவ்வாறு மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது? எதனால் பார்க்கும் நமது மனக்கிடக்கையின் உட்பரப்புடன் தொடர்பு ஏற்படுகிறது? என்ற கேள்விகள் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. காரணிகளைத்தேடி நேரம் கூட்டி அவ்வோவியங்களுக்குள் செல்வோம் எனில், சில உணர்வுப் புரிதல்கள் நம்மை வந்து சேருகின்றன. அதாவது, வண்ணங்களின் பிரயோகக் குறியீடுகளில்தான் இவர் படைப்பின் சாராம்சம் இருக்கிறது. அதுதான், இவரது ஒவ்வொரு படைப்பிலிருந்து எழும் உடல்களின் குறியீட்டு இயக்கங்கள். ஓவியரின் அக உள்ளிருப்பின் சாரத்தைத்தான் தேர்ந்தெடுக்கும் படைப்புவெளியின் மேற்பரப்பில் தெரிவிக்க, வினையாற்றும் கணங்களின் மாயமே, படைப்பு ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு நுட்பமான அடையாளத்தை விளைவித்திருக்கிறது. ஒரு குழப்பமான குறியீடு வண்ணங்களின் மதிப்பீட்டில் அவ்வுடலின் குழப்பத்தை நமக்கு விளைவிக்கிறது. விரக்தியான உடல்கள் வெற்றிடமான அடையாளங்களைக் காட்சியின் சலனத்தால் நமக்குள் ஏற்படுத்துகின்றன. இதற்குப் பேருதாரணமாக 2015ஆம் ஆண்டிலிருந்து தற்போது 2021 வரையிலான இவரது படைப்பு வரிசைகளைச் சுட்டலாம். அதில் வண்ணங்களும் ஒரு நிறப் படைப்பும் அடங்கும். ஆலங்குடி சுப்பிரமணியன் எனும் ஓவியரின் இவ்வாறான மெனக்கெடல்கள், உடனடியாகச் சமூகத்தில் யாதொரு புரட்சிகர மாற்றத்தைத் தூண்டப்போவதில்லை. அதே சமயம், ஹரோல்ட் ரோசன் பெர்க்கின் வார்த்தைகளில், செல்வதானால் “அந்தச் செயல்பாட்டுக் கணங்கள் ஒரு ஓவியம் மட்டும் அல்ல, அது ஒரு நிகழ்வும் கூட” எனும் பார்வையில் பார்க்க முடியும். ஆம், ஓவியமெனும் தொடர் நிகழ்வில் திளைத்து தன்னுடல் எனும் படைப்புகளைப் படைத்துக்கொண்டிருப்பதும் மனிதவாழ்வின் புரட்சிகரப் பக்கங்களில் ஒன்றுதான். அதனால்தான், வாழ்க்கையின் ஆற்றலையும் இயக்கத்தையும் கேன்வாஸில் தெரியும் வகையில் தொடர்ந்து வழங்கி வருகின்றார்.

படைப்பின் முன் பயணங்களிலிருந்து வெளியேறி, தற்போது ஆலங்குடி சுப்பிரமணியன் திறந்திருக்கும் பாதை புதியது. ‘பொருட்களற்ற பொருட்களின் உறைநிலை’ எனும் வரிசையில் வரைந்துகொண்டிருக்கிறார். இதில் இவரது முந்தைய படைப்பின் உருவங்கள் மற்றும் நிலப்பரப்புகளை விட்டுவிட்டு, ‘பல வடிவங்களின் கூட்டு’ எனும் நிலையைக் காண்கிறார். இவ்வரிசையின் முதல் ஓவியத்தில், வெதுவெதுப்பான சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடது புறத்தில் இருந்து வரும் விசித்திரமான கருப்பு நிலை மற்றும் கீழ் பகுதியில் நீல நிறத்தின் துலக்கமான சுழல்களால் சிதைக்கப்படுகின்றன. மங்கலான விளிம்புகள், பிரிக்கப்பட்ட வண்ணத் தொகுதிகள் மற்றும் செவ்வகப் பதிவேடுகளின் தொடக்கங்கள் ஆகியவற்றை வடிவங்கள் வண்ணங்களாகக் கூடுவதைக் காணலாம், அதே போல் வண்ணப் பிரயோக அளவு மற்றும் தளத்தின் அளவுடன் சில சோதனைகளையும் தொடங்கியிருப்பதைக் காணமுடிகிறது. இவை முற்றிலும் பிரதிநிதித்துவமற்ற ஓவியத்திற்கான முன்னேற்றத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையைக் குறிக்கிறது. அது முற்றிலும் தீர்க்கமான விஷயத்துடன், அவர் தனது வாழ்க்கையின் சிந்தனைக்குரிய அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது: செங்குத்து மற்றும் கிடைமட்ட வடிவங்களுக்கு இடையே இடம் மாறும் உறவு; முக்கியமாக இருண்டதொரு பிரகாசமான நிறத்தின் கண்களால் சிறப்பிக்கப்பட்டிருக்கிறது. உருவம் முற்றிலும் மறைந்துவிட்டது, ஒரு விசித்திரமான, வெடிக்கும் வண்ணத் துறைகளைத் தவிர இவருடைய தற்காலப் படைப்புகளில் வேறு எதுவும் இல்லை. படைப்புக்கூறுகள் என்பது - முன்புறம் மற்றும் பின்புறத்திற்கு இடையே பண்பு ரீதியாக வியத்தகு உறவுகளைக் கொண்டுள்ளது; ஒளி, இருள் - ஆலங்குடி சுப்பிரமணியன் பேச்சில் முன் வைக்கும் உடல்கள், நிலங்களின் உறவுகள், வாழ்வும் மரணமுமாய்க் கேன்வாஸின் மையத்தில் ஒன்றிணைகின்றன. இப்படைப்புகள் எல்லாம், நாம் கண்காட்சிக்கூடத்தில் இடைவெளியின் துணையுடன் நின்று ஊடுருவிச் சென்று பார்த்து அனுபவம் பெற்றுக்கொள்ளவேண்டியதாய் இருக்கின்றன. அப்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புக்களால் நம் சிந்தையில் அதுவரை காணாத புராண உலகம் திறவுகொள்வதை நம்மால் உணர முடியும். அவ்வுலகில் பிரிவினை அற்ற புனைவுகளும் உலக உடல்கள் கரைந்து போகும் பல அறிவியல் புனைகதைகளும் மோதுகின்றன, அம்மோதல்கள் நிகழ்காலத்தில் பார்வையாளர்களான நம்மை நமக்குள் எளிதாகக் கண்டுபிடிக்கும் பாதைகளை உருவாக்குகின்றன.

எனவே, வாய்ப்புக் கிட்டும்போது ஆலங்குடி சுப்பிரமணியனின் படைப்புகளைக் கண்டு உணர்ந்து இன்றைய நம்மிலிருந்து வெளியேறி, அகக்காட்சிகளின் புதிய பயணப்பாதையில் பயணிப்போம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer