வீரேந்திர சட்டோபாத்யாய கவிதைகள்

அரசர்கள் வந்து போகின்றனர்

அரசர்கள் வந்து போகின்றனர்
அரசர்கள் மாறுகின்றனர்
நீல உடை அணிகிறான்
சிவப்பு உடை அணிகிறான்
இந்த அரசன் வந்தால் அந்த அரசன் போகிறான்
ஆடைகளின் நிறம் மாறுகின்றன...
காலம் மாறவில்லை
மொத்த உலகத்தையும்  விழுங்கித்  தின்ன  விரும்பும்  அம்மணச் சிறுவன்
சோற்றுக்காக நாயுடன் போராடுகிறான், போராடுவான்...
அவன் வயிற்றினுள்ளே எரியும் நெருப்பு
எப்போதோ தொடங்கியது இப்போதும் எரிகிறது!

அரசர்கள் வருகின்றனர் 
வந்து வந்து போகின்றனர்
வெறுமனே ஆடைகளின் நிறம் மாறுகிறது
வெறுமனே முகமூடிகளின் வடிவம் மாறுகிறது
பைத்தியக்கார மெகார் அலி*
இரு கைகளையும் தட்டுகிறான்
இந்த வீதியில், அந்த வீதியில்
ஆடுகிறான், பாடுகிறான்:
“எல்லாம் பொய்! எல்லாமே பொய்! பொய்! பொய்!”

* மெகார் அலி - தாகூரின் ‘குதித் பாஸன்’ என்ற சிறுகதையில்,
அரசதிகாரத்தால் மனப்பிறழ்வுக்குள்ளாக்கப்பட்ட கதாப்பாத்திரம்.

தாயே, தாய்மண்ணே!
எல்லாவற்றையும் பார்த்தும் எல்லாவற்றையும் கேட்டும் விழியற்றவள் நீ!
எல்லாம் தெரிந்தும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டும் செவிகேளாதவள் நீ!
உன்னுடைய அம்மணச் சிறுவன்
எப்போதோ மெகார் அலி ஆகிவிட்டான்
நாயிடமிருந்து சோற்றைப் பறித்துக்கொண்டு
நாய்க்கு கைத்தட்டுகிறான்
நீயும் மாறமாட்டாய்
அவனும் மாறப்போவதில்லை!

வெறுமனே ஆடைகளின் நிறம் மாறுகிறது
வெறுமனே முகமூடிகளின் வடிவம் மாறுகிறது.

கூட்டம்

உடற்சூடாக உணர்ந்த அமைச்சர்கள்
டார்ஜிலிங் சென்றனர்
ஆனாலும் ஒரு சிக்கல்
எதைச் சாப்பிடுவது? எங்கே தூங்குவது?
கூட்டம் எழுத்தாளர்கள் கட்டிடத்தில் கூடியது
நிறைய வாதங்கள், பெருமிதங்கள், சிரிப்புகளும்
நமது மனைவியர் தமது கைவளையல்களை அவிழ்த்துத் தர
பிள்ளைகள் நைட்ரிக் அமிலத்தை அருந்துகின்றனர்.

குறிப்பு: எழுத்தாளர்கள் கட்டிடம் என்பது கல்கத்தாவில் அறிவுஜீவிகளின் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இடம்.

பிறந்தமண் இன்று


ஒருமுறை மண்ணின் பக்கம் இரு
ஒருமுறை மக்களின் பக்கம்
இப்போதும் இரவு முடிந்து விடவில்லை
இருள் இப்பொழுதும் உனது நெஞ்சின் மேல்
கடினமான பாறையைப் போல
உன்னால் சுவாசிக்க முடியவில்லை
தலைக்கு மேல் ஒரு பயங்கரமான கருப்பு வானம்
இப்போதும் புலியைப்போல கால்நீட்டி அமர்ந்திருக்கிறது
உன்னால் முடிந்தவகையில் இந்தப் பாறையை அகற்று
மேலும் ஆகாயத்தின் பயங்கரத்திடம் அமைதியான குரலில் தெரிவி
நீ பயப்படவில்லை என்பதை
நிலமும் நெருப்பாகிவிடும்
உனக்குப் பயிர் செய்யத் தெரியவில்லையெனில்
மலையை வருவிக்கிற மந்திரத்தை நீ மறந்துபோனால்
உனது மண் பாலையாகிவிடும்
பாடல் பாடத்தெரியாதவன்
பிரளயம் வரும்போது பார்வையும் பேச்சுமற்றுப் போவான்
நீ மண்ணின் பக்கம் இரு
அது காத்திருக்கிறது
நீ மக்களின் கரங்களைப் பற்று
அவை ஏதோ சொல்ல விரும்புகின்றன.

வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா (1920 -1985):
விடுதலைப்போராட்ட வீரர்,  
இடதுசாரி வங்கக் கவிஞர். 
சிரேஸ்ட கவிதா, நிர்பாசிதா கவிதா ஆகியன  இவரின்  தொகுப்புகளுள் முக்கியமானவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *