விவேகானந்தன் கவிதைகள்

பொற்காலத்தின் பாடல்கள்
நவீன சீனாவில் பொற்காலம் என்பது முற்காலத்தில் இல்லை

புரட்சியே (சகல) மூலதனங்களின் வினியோகி

ஒரு பின்நவீனக்கட்டிடத்தின் (ஆண்குறி போன்ற தோற்றமுடைய)
XX9 எண் தளத்தில் சீன அதிபருடன் அமர்ந்திருக்கிறார் மார்கோபோலோ
வெனீஸ் நகர் பற்றிய தனது அவதானிப்புகளை நிறுத்திக்கொண்டவர்
தனது கூர்பார்வையை நாடோடும் வணிகர்கள் நடமாடிக்கொண்டிருக்கும்
சதுரங்கப்பலகையின் மேல் திருப்புகிறார்
அங்கே ஒரு பொம்மை ரயில் வட்டப்பாதைகளில் சுற்றி வருகிறது
அவித்த சீன கொழுக்கட்டைகளை அமுக்கியவாறு
மல்லிகை டீயை விழுங்கிக்கொண்டிருக்கும் வெகுளி
வாடிக்கையாளர்களுக்குப்
பிரத்யேக அன்பளிப்புகள் காத்துக்கொண்டிருக்கின்றன
பதின்மூன்று கோடுகள் கொண்ட செங்கொடி
மற்றும் உலகிலேயே அதி உன்னதப் பட்டுசரிகை
போர்த்தப்பட்ட பேரரசர் மாவோவின் சின்னஞ்சிறு சிலை
கப்பல்களிலும் இருப்புப்பாதைகளிலும் தொடர்ந்துவர,
ஆயத்த நிலையிலிருக்கின்றன ஒப்பந்தமிட்ட சரக்குகள்.

புரட்சி விண்வெளிக்குப் பயணிக்கிறது (அண்டத்தொழிலாளர்களே)

என் வீட்டிற்கு எதிரே இருக்கும் கருப்புக்கட்டிடம் கருப்பாக இருக்கிறது
சீனாவில் இதுவே பெரிய விசயம்
ஒவ்வொரு இரவும் 12.15 மணிக்கு 21வது மாடியில்
மூன்று விளக்குகள் உயிர் பெறுகின்றன
சிலசமயம், என் வீட்டின் இருட்டிலிருந்தபடி என்னால் உணரமுடிகிறது
வேற்றுகிரகவாசிகளின் நடமாட்டத்தை. வேண்டுமென்றால்
அவை ஒவ்வொன்றின் எட்டு கால்களையும் என்னால் விவரிக்க முடியும்
உங்களுக்காக
இப்போது
கண்டிப்பாகச் சொல்கிறேன், இந்தக்கருப்புக்கட்டிடம் ஒரு விண்கலமேதான்
வேற்றுக்கிரகவாசிகளுடன் சேர்ந்து ஒரு இணைவினை
ஒன்று மட்டும் நிச்சயம் - 51% பங்கு சீனாக்காரனிடம்தான்.

புரட்சி இழப்பீடு செய்கிறது

ஒவ்வொரு நாளும்
ஆயியின் கிரகம் புதிய வட்டணைக்கு இடம்பெயர்கிறது
நேற்று ஆறாம் சுற்றுச்சாலை, முன்தினம் 5ஆம் சுற்றுச்சாலை
புறாக்கூண்டுகளுக்கு முகவரி உண்டா?
வட்டப்பாதைகளை விலகி அலையும் திரியும் கிரகங்களுக்கு
இணைய ஆர்டர் பொருட்களை யார் கொண்டு இறக்குவது?
பனிக்காலத்தில் ஆயி ஆறு சுற்றுத்துணி உடுத்தி வருகிறாள்
தூங்கும்போதும் தான்
ஒருவேளை அவள் ஒரு ஒட்டகமாயிருந்தால்
தனது எசமானர் வீட்டின் மையப்படுத்தப்பட்ட சூடேற்றியின் வெப்பத்தைச் 
சேகரித்திருப்பாள்
ஒரு நாள் அவளது முதுகெங்கும் வரிகள் - கானகம் நீங்கிய
வேங்கையைப்போல
பனியின் ஓநாய்ப்பற்கள் வெறுப்பின்றிப் பொசுக்கியதன் எச்சங்கள்
அதே நேரம் அன்ஹுய் மாகாணத்தில்
நெடுஞ்சாலை நீட்சிக்காகத் தரைமட்டமாகிறது அவளது சொந்த வீடு
அடுத்த நாள் அவள் ஊர் திரும்புகிறாள் இனி அவள் ஏழையில்லை
உள் நாட்டு அகதியுமில்லை
இப்போது அவள்
பலிக்குப்பின்னர் கொழுத்த கிடா.

ஆயி - அத்தை என்ற பொருள் பொதுவாக வீட்டு வேலை செய்யும் பெண்களும் அவ்வாறு அழைக்கப்படுவதுண்டு.

புரட்சி மரணம் அறியாது

இப்போது நான் சொல்வதைக் கற்பனை செய்யுங்கள்
நான்காம் இலக்கம் ஒரு மனிதனாக உருவெடுக்கிறது
இப்போது அந்த மனிதன், சீனக்கால்பந்து அணியில் ஒரு ஆட்டக்காரனாகிறான்
மரணம் அவனைத் துரத்துகிறது
ஒரு புல்பேக் ஆட்டக்காரரைப்போல், போகுமிடமெல்லாம்
களத்திற்குமப்பால்
அவனது விருந்தினர்களின் வெளிறிய முகங்கள்
ஒரு கிசுகிசுப்புதான், ஆனால் பெயரை யாரும் சொல்வதில்லை
எந்த விழாவிற்கும் வீட்டிற்கும் அழைக்கப்படாது
பாதுகாப்புணர்வின் சுண்ணாம்புக்குச்சியால் எழுதப்படும் அவன் பற்றிய குறிப்புகள்
எண்ணிடப்பட்ட சதுரங்களைத்தாண்டும் புரவிக்கு
நான்கில் ஒன்று பொய்க்கால்
சீனாவில் சதுரத்துக்கு மூன்றே பக்கங்கள்
சீன மொழியில் நான்காம் இலக்கத்தின் உச்சரிப்பும் மரணம் என்ற சொல்லின் உச்சரிப்பும் ஒரே போல
இருப்பதால் நான்காம் இலக்கம் முடிந்தவரை உபயோகப்படுத்தப்படுவதில்லை

புரட்சிக்கு அனைத்து உண்மைகளும் சொந்தம்

லியூ மாமா கடைசியாக ஒரு முறை தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார்
எங்கோ ஓர் மூலையில் ஒரு பச்சைத்தவளை
இணையத்திலிருந்து உண்ட வார்த்தைகளைச்செரித்து
வயிறு வளர்த்துக்கொண்டிருக்கிறது அந்த வார்த்தைகள் ஒருசமயம்
அதிகாரத்திடம் சொல்லப்பட்ட உண்மைகளாய் இருந்தன
இப்போது அவை சுவாரசியமான துணுக்குகள்
அந்தப்பச்சைத்தவளை தேச ஒற்றுமைக்காகவே அவ்வாறு செய்கிறது
லியூமாமாவின் கோப்பையிலிருந்து வின்னி கரடி சிரிக்கிறது
(இன்னும் சற்று நேரத்தில் வின்னி கரடியை தவளை விழுங்கிவிடும்)
அதன் சிரிப்பு அண்ட சராசரம் எங்கும் பரவுகிறது
பின் தணிக்கை செய்யப்படுகிறது
லியூ மாமாவின் பணி முடிந்தது,
இப்போது அவர் மரணிக்கப்போகிறார்
வாழ்விலும் மரணத்திலும் அவர் இனி
ஆற்று நண்டுகளால் நினைவுகூறப்படுவார்.

லியூ சியாபோ - நோபல் பரிசு பெற்றவர், மனித உரிமை ஆர்வலர், கல்லீரல் பாதிப்பால் மரணம் அடைந்தார், அவர் பத்தாண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறை வைக்கப்பட்டு இருந்தார். ஆற்று நண்டு- தனிக்கை என்ற வார்த்தையின் ஒத்த உச்சரிப்புடைய சீனச்சொல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *