‘விளக்கி மொழிதல்’ மொழிபெயர்ப்பாகுமா?

மோ. செந்தில்குமார்

பகிரு

‘பிரியாணி’ சிறுகதை மொழிபெயர்ப்பின் மீது ஓர் இடையீடு

பல்வேறுவிதமான எல்லைகளையும் இடைவெளிகளையும் தடைகளையும் கடந்து உலகத்தை ஒன்றிணைப்பதிலும் உலகளாவிய இலக்கிய வளத்துக்கு உரமூட்டுவதிலும் மொழிபெயர்ப்பின் பங்கு மகத்தானது. மொழிபெயர்ப்பு ஒரு மறுபடைப்புச் செயல் என்பதாலும் மொழி, இன, பண்பாட்டு எல்லைகளைக் கடந்து ஒரு படைப்பை அதன் உயிர்ப்புக் குறையாது எடுத்துச் செல்வதாலும் மொழிபெயர்ப்பாளனின் இருப்பு மதிப்புடையது.

மொழிபெயர்ப்பு: அடிப்படைப் புரிதல்கள்

இதுதான் சரியான மொழிபெயர்ப்பு என்று இலக்கிய மொழிபெயர்ப்புக்கு வரையறை செய்வது இயலாத ஒன்று. காரணம், மொழிபெயர்ப்பு என்பது இரண்டு மொழிகளுக்கும் இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையே நடை பெறுவது. மாறுபட்ட மொழி, கலாச்சாரத்தைக் கொண்ட மூல மொழியிலிருந்து (Source Language) ஓரிலக்கியத்தை இலக்குமொழிக்கு (Target Language) மொழி பெயர்ப்பது மிகச் சிக்கலான பணியாகும். வாசகனுக்குத் தனது தாய் மொழியில் நெருடலின்றி ஒரு படைப்பை வாசித்த அனுபவத்தைத் தரும் மொழிபெயர்ப்புச் சிறப்படைகிறது.

மொழிபெயர்க்கப்படும் இலக்கியம், படைக்கப்பட்ட பண்பாட்டின் அரசியல், பொருளாதாரம், இனம், மதம், நம்பிக்கை, சடங்குகள், முதலான மிக நுட்பமாக வினைபுரியும் சமூகக் காரணிகளையும் படைப்பாளரின் கருத்தியல் பார்வையையும் அவ்விலக்கியம் சுட்டி நிற்கும் கருத்தின் அரசியலையும் அறிந்திருப்பதோடு இலக்குமொழியின் அரசியல் சூழலையும் அந்த இலக்கியம் முன்வைக்கும் கருத்தரசியல் இலக்குமொழி வாசகனுக்கு ஏற்கனவே அனுபவப்படாத ஒன்றென்றால் அது சரியான புரிதலுக்குரியதாக இருக்கவேண்டும் என்பதையும் மொழி பெயர்ப்பாளர் நுட்பமாக உணர்ந்தவராக இருக்கவேண்டும். இது இலக்கியத்தின் படைப்புச் சூழல் சார்ந்த புற அறிவு.

அகநிலையில், அந்த இலக்கியப் பிரதியின் எடுத்துரைப்பு நுட்பம், சொற்களில் செறிவுற்றிருக்கும் உணர்வுகள், பயன்படுத்தப்பட்டுள்ள மொழி வழக்கு (பேச்சு வழக்கு/எழுத்து வழக்கு) ஆகியவற்றோடு அவ்விலக்கியத்தின் உயிர்ப்பான கரு ஆகியவற்றை நுணுக்கமாக அறிந்து சந்தேகம் கொள்ளும் இடங்களைக் குறித்து மூலமொழி எழுத்தாளனுடன்/வாசகனுடன் (வாய்ப்பு இருப்பின்) உரையாடித் தெளிவுபெற்று மொழிபெயர்க்கப்படும்போது மூலப்பிரதிக்கு நெருக்கமானதொரு மொழிபெயர்ப்பைச் செய்ய இயலும்.

நில, கால, மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள மொழிகளுக்கிடையே நிகழும் மொழிபெயர்ப்பில் இத்தகைய அடிப்படையான தன்மைகள் கவனத்தில் கொள்ளவேண்டும். அவ்வாறல்லாவிட்டால் மொழிபெயர்ப்பு ஓர் இலக்கியமாக இல்லாமல் அவ்விலக்கியத்தின் கருத்துவிளக்கமாக அமைந்துவிடவும், இலக்கியச்சீர்மையிழந்து வாசகனுக்குச் சலிப்பை உண்டாக்கக்கூடிய மொன்னையான ஒன்றாக மாறிப்போகும். அதோடு மட்டுமல்லாது மூலமொழி எழுத்தாளனுக்கும் அந்த இலக்கியப் படைப்புக்கும் மொழிபெயர்ப்புத் தீமை செய்துவிடும். ஒரு மொழிபெயர்ப்பு மூலத்துக்கு விசுவாசமாக இல்லாவிட்டாலும் நம்பிக்கைத்துரோகம் செய்துவிடக்கூடாது என்ற கருத்துக்கு ஒவ்வொரு மொழி பெயர்ப்பாளரும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

மொழியமைப்பு, பண்பாட்டு நிலைகளில் நெருக்கமான தன்மை கொண்ட மொழிகளுக்கிடையிலான மொழிபெயர்ப்பில் ஈடுபடும்போது கவனத்துடன் செயல்படவேண்டும். மேலோட்டமாக இலக்கு மொழிக்கு நெருக்கமானதாகப்பட்டாலும் மிக மெல்லிய வேறுபாடுகளையும் தனித்தன்மைகளையும் பெற்றிருப்பதாலேயே ஒரு மொழியும் பண்பாடும் தனித்து அடையாளம் காணப்படுகின்றது என்ற தெளிவோடு மூலமொழி இலக்கியத்தை அணுகவேண்டும். அவ்வாறன்றிச் செய்யப்படும் மொழிபெயர்ப்புகள் தோல்வியில் முடிகின்றன.

பிரியாணி

மலையாளம், தமிழுக்கு மிக நெருக்கமான மொழி மட்டுமல்ல தமிழின் கிளைமொழியும்கூட. மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்குப் புனைவுகளின் தனித்துவமான அடையாளங்களோடு இதுவும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் ‘பிரியாணி’ சிறுகதை கேரளத்தில் சிறப்பாகப் பேசப்பட்டது. அக்கதை 2017 இறுதியில் வாசித்ததாக நினைவு. நரம்புகள் மட்டுமே ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டிருக்கப் பிய்ந்துபோன ஓர் இலையின் வடிவத்தைக் காண்பதுபோன்று உள் நாட்டுக்குள்ளேயே மொழி, பண்பாட்டு வேறுபாடுகள் உள்ள ஒரு நிலத்துக்குப் புலம்பெயர்ந்த ஒருவனின் இருப்பையும் அதற்கு எதிர் நிலையில் பகட்டையும் நிறுத்திக் கதையாக்கியது பிரியாணி. இச்சிறுகதை, கே.வி.ஜெயஸ்ரீயின் மொழிபெயர்ப்பில் சிறு நூலாகத் தமிழில் வெளியாகியுள்ளது. இந்த ஒரு கதையை மட்டுமே தனித்த நூலாக்கியிருப்பது அந்தக் கதைக்குத் தரும் தனித்துவமான அங்கீகாரம் ஆகும். நூலின் முன்பகுதியில் பவா செல்லத்துரை எழுதிய ‘அந்தப் பின்னிரவில்’ என்ற தலைப்பிலான இருபக்கக் கருத்துரையில் “இக்கதையின் முக்கியத்துவம் கருதி இதன் பல ஆயிரம் பிரதிகளைச் சாத்தியமாக்கிய பாரதி புத்தகாலயத்தின் சமூக விரிவு நன்றிக்குரியது”. (ப.4) என்று குறிப்பிட்டிருந்தார்.

பீகாரில் கைவிடப்பட்ட நிலக்கரி நிறுவனத்தில் இருந்து நிலக்கரி எடுத்து நாற்பது கிலோமீட்டர் கொண்டுவந்து விற்று பத்து ரூபாய் சம்பாதித்துத் தனது கருவுற்ற மனைவியின் பாசுமதி அரிசி மீதான விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் ஐம்பது கிராம் வாங்கிக்கொடுத்துத் தின்ன வைத்தவன் கோபால் யாதவ். கேரளத்துக்குப் பிழைக்க வந்து வாடகை அறையெடுத்துத் தங்குவதற்கு முடியாமல் பதினைந்து ஆண்டுகளாக வறுமையில் வாடுபவன். பெரும் செல்வந்தரான களந்தன் ஹாஜியாரின் பேரன் ரிஸ்வானுக்கு நடந்த திருமண வரவேற்பு விருந்தில் மீந்துபோன பிரியாணியைக் குழி வெட்டி அதில் கொட்டி மூடுவதற்கான தற்காலிகப் பணிக்கு அழைத்துச் செல்லப்படுகிறான். கோபால் யாதவின் உயரத்திற்கு ஆழமும் அகலமும் கொண்ட குழிவெட்டப் பணிக்கப்படுகிறான். அதில் மீந்த பிரியாணியை இட்டு மூடும்போது பசியால் இறந்த தன் மகளுக்காகவும் (மகளின் பெயர் பாசுமதி) ஒரு பிடி மண் எடுத்துக் கொட்டப்பட்ட பிரியாணியின் மீது போட்டு மூடுகிறான். தன் மகளையே குழியில் இட்டு மிதித்து மூடுவதாக உணரும் கோபால் யாதவின் மனநிலையோடு கதை முடிகிறது (இது கதையின் மீதான ஒரு பார்வைக்கோணம் மட்டுமே). மீந்துபோகுமளவுக்கு விருந்துக்கான உணவைத் தயாரிப்பதும், மீந்த உணவைக் குழி வெட்டி மூடுவதும், அவ்வாறு மூடுவதைச் செல்ஃபி எடுத்து மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதுமான பணச்செழிப்பால் உண்டான பகட்டு, பசிக்கவைத்துக் கொல்லும் வறுமை என்ற இருவேறு துருவங்கள் சந்தித்துக்கொள்ளும் நிதர்சனமான மனித உலகத்தை இக்கதை உரையாடலுக்குக் கொண்டுவருகின்றது.

எடுத்துரைப்பில் தேர்ந்த ஏச்சிக்கானம், கதை சொல்லலில் உண்டாக்கியிருக்கும் இடைவெளிகளும் ஒத்திப்போடல்களும் முடிக்கப்படாது விடப்பட்டவைகளும் வாசகன் அவனுக்கான பிரதியை உருவாக்கிக்கொள்ள இடம் தருகின்றன.

மூல மொழியில் வாசித்தபோது உண்டானதும், மனதுள் அது குறித்துத் தேங்கிக் கிடப்பதுமான மன உணர்வுகளை மொழிபெயர்ப்பு முழுமையாகத் தந்துவிட இயலாது என்ற போதும் மூலத்துக்கு மிகநெருக்கமான ஒரு பிரதியை உருவாக்குவதையே மொழிபெயர்ப்பாளர் சவாலாக ஏற்றுக்கொண்டிருப்பார். கதைக்கு அடிப்படையான உயிர்ப்பும், மூல எழுத்தாளர்களின் எடுத்துரைப்பு முறைமையும் காணாமல் போனதால் பிரியாணி சிறுகதையை அதன் மூலத்தோடு ஒப்பவைத்துப் பார்க்கத்தூண்டியது. மொழிபெயர்ப்பு, மூலக்கதையின் மொழி, கதைசொல்லலின் தனித்துவமான தன்மைகள் சிதைக்கப்பட்டு விளக்கி மொழிதலாகத் தோன்றியது. “கதைப் போக்கை, மொழிநடையைச் சிதைத்து விளக்கி மொழிதல் மொழிபெயர்ப்பாகுமா?” என்ற கேள்வியை முன்வைத்துப் ‘பிரியாணி’ சிறுகதையில் முதல் ஐந்து பத்திகளை மட்டும் எடுத்துக்கொண்டு இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.

கதைப்போக்கைச் சிதைத்தல்

மூலமொழியில் எழுதப்பட்ட கதைப்போக்கை இயன்றவரை சிதைக்காது இலக்குமொழிக்குக் கொண்டுவருதல் மொழிபெயர்ப்பாளருக்கு மொழிபெயர்ப்புக்கான அறிவுக்கூர்மையும் எடுத்துக்கொண்ட இலக்கியத்தைக் குறித்த ஆழ்ந்த புரிதலும் இருப்பதை வெளிப்படுத்துவதோடு வாசகனுக்கு மூலமொழிக்கதையை அதன் உயிர்ப்புச் சிதையாமல் கொடுக்கின்ற மறுபடைப்புச் செயலாக அமைந்துவிடுகின்றது.

மூலத்தை அதன் போக்கிலேயே மொழிபெயர்த்தால் முதல் பத்தி பின்வருமாறு அமையும்.

“கதிரேசன்கூடக் கோபால் யாதவ் செருக்களையிலிருந்து இப்பத்தான் ஏறியிருக்கிறான். கூடவே மூணு வங்காளிப் பசங்களும். தீயாப் பாஞ்சாலும் பஸ்சு பொய்நாச்சியை அடையறதுக்குக் குறஞ்சது பத்திருபது நிமிசமாவது எடுக்கும்.”1

ஒரே பத்தியாக இருப்பதை மொழிபெயர்ப்பில் இரண்டு பத்திகளாக உடைத்துப் பின்வருமாறு மொழி பெயர்த்துள்ளார்.

“கோபால் யாதவ் செருக்களையிலிருந்து இப்போது தான் பஸ் ஏறியிருக்கிறான். கூடவே கதிரேசனும், மூன்றுவங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது.”

பஸ் தீயாய் பாய்ந்து வந்தாலும் பொய்நாச்சியை அடையக் குறைந்தது இருபது நிமிடங்களாவது ஆகும். (ப.9)

இந்தப் பத்தியில் முதல் வாக்கியத்தில் கதிரேசனும் கோபால் யாதவும் பிறகு வங்காளிப் பையன்களும் எதில் ஏறினார்கள் என்பது தள்ளிப்போடப்படுகின்றது. மூன்றாவது வாக்கியத்தில் அவர்கள் பஸ் ஏறியது சுட்டப்படுகின்றது.

முதல் வாக்கியத்திலேயே எதில் ஏறினார்கள் என்பதைச் சுட்டிவிட்டால் வாசகனுக்கு ஒத்திபோடலினால் ஏற்படுகின்ற எதிர்பார்ப்புக் கலைந்துபோகின்றது. அதனால், கதை செய்தியாக மாறிவிடுகின்றது. அடுத்ததாக, கதிரேசனுக்கும் கோபால் யாதவுக்கும் இடையில் எதோ ஓர் உறவு இருக்கிறது என்ற எண்ணத்தையும், கூடவே பஸ் ஏறிய வங்காளிப் பையன்களுக்கும் இவர்களுக்கும் ஏதும் தொடர்பு இருக்குமோ என்ற ஐயத்தையும் இச்சொல்லல் முறை வாசகனுக்குள் தோற்றுவிக்கின்றது. இதனாலேயே இது செய்தியாக இல்லாமல் கதை வடிவமாகின்றது.

மொழிபெயர்ப்பில் கோபால் யாதவை முதன்மைப் படுத்தி அவர் பஸ் ஏறிவிட்டதை முதல் வாக்கியத்தில் முடித்துவிடுகிறார். அவரோடு கதிரேசனும் வங்காளிப் பையன்களும் வருகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது என்று கூறுவதன் மூலம் இரண்டாவது வாக்கியத்தின் இறுதியில் உள்ள “உறுதியாகிவிட்டது” என்ற சொல் (1) வங்காளிப்பையன்களுடனான கோபால்யாதவ், கதிரேசன் உறவையும் (2) ஏதோ நடக்கப்போகிறது என்ற உணர்வையும் வாசகனுக்குக் கடத்துகின்றது. ஆனால் மூலக்கதையில் இச்சொல் இல்லாதது மட்டுமல்லாமல் அவர்களுக்கு இடையில் உறவு உண்டா இல்லையா என்பது சொல்லப்படாமல் ஒத்திப்போடப்படுகின்றது. இது கதாசிரியன் கட்டமைக்காத சொல்லல் முறையாகும்.

உண்மையில் கதையில், கோபால் யாதவ், கதிரேசன் ஆகியோரோடு வங்காளிப்பையன்களுக்குத் தொடர்பு ஏதும் இல்லை. கதிரேசனோடுதான் கோபால் யாதவுக்குத் தொடர்பு (கதிரேசனின் வீட்டுப் பின்புறத்தில் தங்கியுள்ளார்). ஆனால் மொழிபெயர்ப்பாளர் கதிரேசனுக்கும் வங்காளிப்பையன்களுக்கும் தொடர்பு இருப்பதான புரிதலை வாசகனுக்குள் கட்டமைக்கின்றார். அதோடு, அவர்கள் வருவது உறுதியாகிவிட்டது என்று கதையில் இல்லாத ஒரு கருத்தைச் சேர்க்கின்றார்.

இவ்வாறு கதைக்குச் சிறிதும் பொருத்தமில்லாத போக்கைக் கட்டமைத்து புதிர்த்தன்மையும் ஒத்திப்போடலும் அற்ற தட்டையான வேறொரு கதையை எழுதுவது மொழிபெயர்ப்பு அறத்தின் பாற்படுமா என்பதை மொழிபெயர்ப்பாளர்கள் சிந்திக்கவேண்டும்.

மொழிநடையைச் சிதைத்தல்

மொழிபெயர்ப்பாளர் மூலமொழியில் உள்ள பிரதி எத்தகைய மொழிநடையைக் கொண்டுள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஏனென்றால் ஒரு கதை அது வெளிப்படுத்தும் கருவை அதன் சொல்லல் முறையால் செழுமைப்படுத்துகின்றது. கதைப் பொருண்மையும் மொழியும் மிகச்சரியாக இணை சேர்கின்றபோது ஒரு கதை வாசகனுக்கு மிகநெருக்கமான பிரதியாக ஆகி விடுகின்றது. செம்மைப்பட்ட மொழிநடையில் கதை சொல்லல் மரபு காலாவதியாகிவிட்டது. பேச்சு மொழியின் மீதான தாழ்வு மனப்பான்மை தகர்ந்து, அதன் உயிர்ப்பு கதைக்கு அடிப்படையானதொரு கூறு என்பது புரிந்துவிட்டது மட்டுமல்ல, எல்லாவிதமான மேட்டிமைத்தனங்களையும் கடந்து எழுதுதல் மரபு சனநாயகத்தன்மையைக் கொண்டாடுகின்றது. பின்னைக்காலனியம் முன்வைக்கும் ஆதிக்க எதிர்ப்பரசியலை மிகச் சரியான திசையில் நகர்த்துவதில் தன் சொந்த மொழியை ரத்தமும் சதையுமாகக் கையாள்வதில் இருக்கின்றது. கதைப்பாத்திரங்களின் குரல்களோடு கதைசொல்லியின் மொழியையும் சந்தோஷ் ஏச்சிக்கானம் உரையாடல் தன்மையிலான பேச்சுவழக்காகக் கட்டமைத்ததன் உட்பொருளை விட்டுவிட்டு ‘பிரியாணி’ கதையை மொழிபெயர்த்துவிட முடியாது. மொழிபெயர்ப்பாளர் கதையோடு உறவாடி உறவாடி அதன் உயிர்ப்பொருளைக் கண்டடைந்து மொழிபெயர்ப்பில் அதன் வடிவும் நேர்த்தியும் சிதையாது உயிர்ப்புடன் வழங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளார். அதனால்தான் மொழிபெயர்ப்பு ஒரு படைப்புச் செயல் என்று கருதப்படுகின்றது.

மூலக்கதையில் ஒரே பத்தியாக அமைந்ததை மொழிபெயர்ப்பாளர் இரண்டு பத்திகளாகப் பிரித்துக் கொள்கிறார். ஒரு பத்தி என்பது தொடர்ச்சியான ஒரு கருத்தின் முழுமையான வடிவம். அதை இரண்டாகச் சிதைக்கவேண்டுமானால் அதில் இரண்டு தனித்த அல்லது மாறுபட்ட கருத்துக்கள் இருக்கவேண்டும். ஏச்சிக்கானம், பேருந்தில் ஏறுவதையும் அது உரிய இடத்தை அடைவதற்கு ஆகும் நேரத்தையும் தொடர்ச்சியான செயல்பாடு என்பதால் ஒரே பத்தியாக அமைத்துள்ளார். எல்லா வகைப்பட்ட எழுத்துக்குமான இயல்பு இதுதான். ஆனால் மொழிபெயர்ப்பாளர் எந்த நோக்கத்துக்காகப் பத்தியை உடைத்தார் என்பது அறியக்கூடவில்லை. உடைக்கப்பட்ட இரண்டாவது பத்தியில் “பத்திருபது மினிட்” எனப் பேச்சு வழக்கில் எழுதப்பட்டுள்ளதை ‘இருபது நிமிடம்’ என்று செம்மைப்பட்ட வழக்காக மாற்றியதோடு சுமாரான கால அளவை தீர்மானமான கால அளவாக மாற்றிக் கதையின் உயிர்ப்பான மொழி நடை சிதைக்கப்பட்டுள்ளது. இதே கதையில் வேறு இடங்களில் பேச்சுவழக்குகளை மொழிபெயர்ப்பாளர் பயன்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கதைச்சூழலும் கதைப்போக்கும் கதைக்குள் உரையாடும் பாத்திரங்களின் வாழ்முறையும் அதற்கான மொழிநடையைத் தீர்மானிக்கின்றன. இந்தத் தன்மையை முற்றாக அழித்துவிட்டு தனக்கானதொரு மொழிநடையை உண்டாக்கிக்கொண்டு கதையின் சொல்லல்முறையை முற்றாக மாற்றியமைத்து புதிய கருத்துக்களைச் சேர்த்துக் கதைப்பாங்கைச் சிதைத்து ஒரு மொழிபெயர்ப்பு உண்டாக்கப்படுமென்றால் அந்த மொழிபெயர்ப்பு அந்தக் கதையைக் கொலை செய்கிறது என்பதைத் தவிர வேறு எந்த நன்மையையும் அந்தக் கதைக்கோ வாசகனுக்கோ செய்துவிடமுடியாது.

விளக்கி மொழிதல்

முதல் பத்தியில் அறிமுகப்பட்ட கோபால் யாதவுக்கும் மூன்றாவது பத்தியில் அறிமுகப்படுத்தப்படும் கலந்தன் ஹாஜியார் குடும்பத்துக்கும் இடையேயான பொருளாதார, வாழ்விடம் சார்ந்த இருப்பின் இடைவெளிகளில் இக்கதை தீவிரம் கொண்டுள்ளதால் கலந்தன் ஹாஜியாரைக் குறித்த அறிமுகமாக அமையும் மூன்றாவது பத்தி முக்கியமானது. (இரண்டாவது பத்தி ஒரே வாக்கியம். அதைச் சரியாக மொழிபெயர்த்துள்ளார்.)

மொழிபெயர்ப்பில், “கடந்த ஜனவரியில் எண்பத்தாறு வயதைக் கடந்திருக்கும் ஹாஜியார் அக்காலத்தில் தளங்கரையிலிருந்து துபாய்க்கு மரக்கலம் ஓட்டிப்போன பலசாலி. அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது ஞாபகசக்தியை இழந்து விட்டதில் சேராது. கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது.” (ப.9)

மூலக்கதையில், “ஒரு காலத்தில் தளங்கரையில் இருந்து துபாய் வரைக்கும் மரக்கலம் ஓட்டிட்டுப்போன ஆளாக்கும். போன சனவரியோட எண்பத்தாறாச்சு. உயிரோடிருந்த நாலு பெண்டாட்டிகளில் குஞ்ஞீபிய மறந்துபோச்சுங்கறதல்லாம ஹாஜியோட நினைவாற்றலுக்கு வேற ஒரு குழப்பமும் இல்லை. கலந்தனுக்கு நாலல்ல நாற்பது பெண்டாட்டிகளைக் காப்பாத்தறதுக்கு வேண்டிய திராணி உண்டுன்னு ஊர்க்காரங்களுக்குத் தெரியும்.”3

இரண்டாவது பத்தியில், “அதுவரைக்கும் நாம கலந்தன் ஹாஜியாரைப் பற்றிப் பேசிக்கிட்டிருக்கலாம்.” என்று கூறியமையால் மூன்றாவது பத்தியில் அவரது பெயரை இரண்டு இடங்களில் முன்பாதி, பின்பாதியாகப் பயன்படுத்தியுள்ளார். இவ்வாறு பயன்படுத்துவது அந்தக் கதைப்பாத்திரத்தை வாசகனுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவரும் ஓர் உத்தியாகும்.

மூலக்கதைக்கும் மொழிபெயர்ப்புக்குமான இடைவெளியை மேற்கண்ட இரு மொழிபெயர்ப்புகளிலிருந்து தெளிந்துகொள்ளலாம். மூலக்கதையில் முதல் வாக்கியம், ஹாஜியாரின் தொழில் திறனைச் சொல்கிறது. இரண்டாவது வாக்கியம், வயதைச் சொல்வதன் மூலம் அவர் ஓய்வில் இருக்கிறார் என்பதை அறிவிக்கிறது. மூன்றாவது வாக்கியம், அவரது மனைவிமார் குறித்த கருத்தையும் உறவு சார்ந்த ஒருதலைப்பட்சமானது அவரது ஞாபக மறதி என்பதையும் எடுத்துக்காட்டி நையாண்டி செய்கிறது. இறுதி வாக்கியம் அவர் பெரும் செல்வந்தர் என்பதை ஊரே அறியும் என்பதைச் சுட்டுகிறது. இந்தக் கருத்து வைப்பு முறை, கதைப்பாத்திரம் குறித்த தொடர்புடையதும் வேறுவேறு திசைகளுக்கு வாசகனை அழைத்துச் செல்வதுமான தகவல்களை எடுத்துரைத்தலில் ஒரு முறைமை கையாளப்பட்டுள்ளதைக் காட்டுகின்றது. அடுத்தடுத்துத் தொடர்புடைய புதிய செய்திகளால் கலந்தன் ஹாஜியாரைக் குறித்த ஒரு மையக்கருத்தை வாசகனுக்குக் கடத்திவிடுகிறது இந்தப் பத்தி.

மொழிபெயர்ப்பில், முதல் வாக்கியம் முதலிரண்டு வாக்கியங்களையும் கலந்த கருத்தாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், ‘பண்டு’ என்ற மலையாளச் சொல்லுக்கு ‘அக்காலத்தில்’ என்று மொழிபெயர்ப்பைத் தந்ததன் மூலம் எக்காலத்தில் என்ற குழப்பத்தை வாசகனுக்கு விட்டுச் செல்கிறது. அடுத்ததாக, மூலநூலில் இல்லாதபோதும் ‘பலசாலி’ என்ற சொல்லை மொழிபெயர்ப்பாளர் கொண்டுவந்து சேர்த்துத் தன் விருப்பமான ஓர் அடையாளத்தை அக்கதைப்பாத்திரத்தின் மீது ஏற்றுகிறார். ‘பார்ட்டியாணு’ என்று மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளதை ‘பலசாலி’ என மொழிபெயர்க்கவேண்டிய தேவை என்ன? தமிழ்ச்சூழலில் பேச்சுவழக்கில் ‘பெரிய ஆளாக்கும்’ என்பதன் மாற்றாக ஆங்கில மொழிக்கலப்பாகப் ‘பெரிய பார்ட்டியாக்கும்’ என்று பயன்படுத்துவதைக் காண்கிறோம். மொழிபெயர்ப்பில் ‘பார்ட்டியாக்கும்’ என்றோ ‘ஆளாக்கும்’ என்றோ பயன்படுத்துவதுதான் மூலமொழியில் கூறப்பட்ட வாய்மொழி மரபுசார்ந்த எழுத்துமுறைக்குப் பொருத்தமானதாக இருக்கமுடியும்.

ஒரு கதை என்பது கதாசிரியனால் எழுதப்படுவதன்று, கதையை வாசகனும் சேர்ந்தே எழுதுகிறான். ஆகவே, எழுதப்பட்டபிறகு அது வாசகப்பிரதியாகவே இருக்க முடியும் என்று சொல்லப்படுவதன் உட்பொருள் இதுதான்.பிரதியை வாசிக்க வாசிக்க அதனுள் சொல்லப்படாத இடைவெளிகளைத் தனது கருத்தாக இட்டு நிறைத்துக் கதையை வாசித்துச் செல்கிறான் ஆகவேதான் அது வாசகப்பிரதி. அப்படியான கதையெழுதுதலில் வாசகனுக்குப் பங்குகொடுக்காத ஒரு படைப்பு படைப்பாக இருக்க முடியாது. வெறும் சக்கையாகத்தான் இருக்க முடியும். வாசகனுக்குள் ஒரு கதையை வரைவதற்கான வாய்ப்பை ஒரு தேர்ந்த படைப்பாளன் விட்டுச்செல்லவே செய்கிறான். மொழிபெயர்ப்பாளர் ‘ஓ... அவ்வளவு பெரிய ஆளா இந்த ஹாஜியார், பெரிய பலசாலிபோல’ என்பதான கருத்துக்களை வாசகன் அந்த இடத்தில் உருவாக்கிக்கொள்வதற்கு இடமளிக்காமல் தாமாக முன்வந்து ‘பலசாலி’ என்ற சொல்லை இட்டு நிறைத்து கதையை உயிர்ப்பற்றதாக ஆக்கிவிட்டார்.

அதே பத்தியில் அடுத்த வாக்கியம் ஹாஜியாரின் குடும்பம் குறித்தும் அதில் பாரபட்சமான மனநிலை கொண்டவர் என்பது குறித்தும் வெளிப்படுத்தி, வாசகனிடத்தில் ஒரு நையாண்டியான பார்வையை ஹாஜியார் மீது உருவாக்குகிறார். தற்போது நான்கு மனைவிமாரும் உயிரோடு இல்லை என்பதையும் ‘உயிரோடிருந்த’ என்ற சொல்லின் மூலம் உணர வைக்கிறார். ஆனால் மொழிபெயர்ப்பாளர் அதை இரண்டு வாக்கியங்களாக மாற்றியதோடு தாமாக முன்வந்து ஹாஜியாரைக் குறித்து வாசகர்களுக்கு இரண்டு அறிவிப்புகளைச் செய்கிறார். (1) ‘அவருக்கு நினைவு தவறிவிட்டது என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. (2) நான்கு மனைவிகளில் குஞ்ஞீபியை மறந்துவிட்டது ஞாபகசக்தியை இழந்துவிட்டதில் சேராது.’

இந்த இரண்டு அறிவிப்புகள் மூலநூலின் கதைசொல்லல் முறையைத் தலைகீழாக மாற்றிப்போடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது. மேலும், மூலக்கதையின் சொல்லல் முறையால் வாசகனுக்குள் உண்டான நகைப்புணர்வு தரும் நையாண்டித்தன்மை நீக்கம் செய்யப்பட்டு ஹாஜியாரைக் குறித்த செய்திகளைத் திரட்டிக்கொள்வது என்ற தட்டையான வாசிப்புத் தன்மையைத் தருகின்றது.

சிக்கலான கலவை வாக்கியங்களைப் பெறுமொழிக்குக் கொண்டுவரும்போது சிறுசிறு வாக்கியங்களாகப் பிரித்து அதன் பொருண்மை சிதையாதவாறு தருதல் மொழி பெயர்ப்பு அறம். ஆனால், அவ்வாறு அறுத்துச் சேர்க்கவேண்டிய தேவை இல்லாததும் கருத்துச் செறிவுடையதுமான ஒரு வாக்கியத்தை அறுத்துச் சிதைத்ததன் மூலம் மொழிபெயர்ப்பு அறம் மீறப்பட்டுள்ளது.

அந்தப் பத்தியின் இறுதி வாக்கியம், ஊரார் அவரைக்குறித்துப் பேசுவதாக அமைத்து, ‘கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு’ என்ற கருத்தை ஊரார் கொண்டிருப்பதான ஒரு பாவனையைத் தோற்றுவிக்கின்றார். இதைத் தோற்றுவிப்பதற்காகவே, “ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது” என்று மூலத்துக்குச் சற்றும் தொடர்பில்லாமல் ஊரார் பேசுவதாகவும் அதில் ஒரு நியாயம் இருப்பதாகவும் “நாட்டுகார்க்கறியாம்” என்ற மூலக்கதைக் கருத்துக்கு ஒவ்வாத விவரணையை மொழிபெயர்ப்பாளர் செய்துள்ளார். கதை விவரணையாகின்றபோது அது தன்னுடைய இயல்பை இழந்து தட்டையானதொரு கருத்துக்குவியலாக மாறிப்போகின்றது என்பதை மொழிபெயர்ப்பாளர் அறியத்தவறிவிட்டாரா?

சுய ஆவர்த்தனங்களைப் பிரதியின்மீது திணிப்பதன் வாயிலாக மொழிபெயர்ப்புச் சிறப்படையும் என்று கருதுகிறாரா என்பது கேள்வி.

ஐந்தாவது பத்தி, ஹாஜியாரின் மகள் ருகியா தன் மகன் ரிஸ்வானிடம் தந்தையின் விருப்பத்தைச் சொல்லி, அது நடக்காவிட்டால் மனதில் வடுவாகக் கிடந்துவிடும் என்பதைக் கூறியதால் அவன் வரவேற்பு விருந்து வைக்கச் சம்மதித்தான் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது. தாயின் கூற்றை மகன் வெளிப்படுத்தும் பாங்கில் கதைசொல்லியின் கூற்றாக இக்கருத்து மூலக்கதையில் அமைந்துள்ளது.

“ஒரு வரவேற்பாவது நடத்தி ஊருக்காரங்களுக்கு இத்தன பிரியாணி போடணும்னு தாத்தாவுக்கு ஒரு ஆச. எண்பத்தாறாச்சல்ல. இனி அந்த ஆச நடக்காதயே பெருசு பொணமாயிட்டுதுனா பிறகு அது மனசுல எப்பவும் ஒரு வெசனமாவே கெடக்கும்னு அம்மா  சொன்னதுக்காக ரிஸ்வான் சம்மதிச்சான். இன்னிக்கிப் பொழுதோட ஆறுல இருந்து ஒன்பதுக்குள்ள ரிஸப்ஷன்.”5 (ப. 9)

மொழிபெயர்ப்பு: “சொந்த ஊரில் பேரனுக்கு ஒரு வரவேற்பு நடத்தி ஊர்க்காரர்களுக்கு நல்ல பிரியாணி போட்டுவிட வேண்டுமென்பது ஹாஜியாரின் ஆசை. அது நிறைவேறாமப் போனா அவர் செத்ததுக்கு அப்புறமும் மனதில் அது ஒரு பேஜாராகக் கெடக்கும்னு உம்மா சொன்னதால் ரிஸ்வான் சம்மதித்தான். இன்னக்கி சாயங்காலம் ஆறிலிருந்து ஒன்பதுக்குள்ளதான் வரவேற்பு.” (ப. 10)

மூலப் பிரதியின் முதல் வாக்கியத்தை அதில் இல்லாத ‘சொந்த ஊர்’, ‘நல்ல பிரியாணி’, ‘போட்டுவிட வேண்டுமென்பது’ ஆகிய தொடர்களைச் சேர்த்து மூலத்தின் சீர்மையைச் சிதைத்துள்ளார். இரண்டாவது வாக்கியத்தை முற்றாகத் தவிர்த்துவிட்டார் (அவருக்கு வயது 86 ஆனதைத்தான் முன்பே சொல்லிவிட்டோமே என்ற தெளிவு போலும்!) ‘எண்பத்தாறாச்சல்ல’ என்ற தொடர் தாய் மகனிடம் உரையாடுகிறாள் என்ற உணர்வை வாசகனுக்குக் கடத்தும் குறிப்பை வைத்துள்ளது. அது மொழிபெயர்ப்பாளருக்குத் தேவையில்லை போலும். மூன்றாவது வாக்கியத்தில், மூலப்பிரதியில் உள்ள ‘மூப்பர்’, ‘மய்யத்து’ ஆகிய சொற்களைக் கண்டு கொள்ளாமல் மொழிபெயர்ப்பாளர் தனது வாசிப்பில் தான் உணர்ந்ததைத் தமிழ் மொழியில் தந்துள்ளார்.

மூலத்துக்கு நெருக்கமான மொழிபெயர்ப்பு என்பதற்குப் பதிலாக அதற்கு விளக்கம் எழுதுவதை மொழிபெயர்ப்பு எனக் கருதுகிறாரோ என்ற ஐயம் எழுகின்றது. அதாவது, வாசகனுக்கு வாசகன் அவனது அனுபவங்களோடு சேர்த்து உருவாக்கிக்கொள்ளும் ஒவ்வொரு வாசிப்புக்குமான தனித்துவமான பிரதிகள் உருவாகி வாசிப்பு இன்பத்தைத் தந்துவிடக்கூடாது என்பதில் மொழிபெயர்ப்பாளர் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டுள்ளார்.

அவ்வாறு ஒரு வாசகப் பிரதி உருவாகிவிட்டால் மூலமொழிக் கதாசிரியரின் மீது ஆர்வமும் மதிப்பும் உண்டாகிவிடுமல்லவா. வாசகனிடமிருந்து மூலமொழிக் கதாசிரியனை விலக்கி வைப்பதற்கு மொழிபெயர்ப்பு என்ற பெயரிலான இத்தகைய சொந்தக் கருத்துக் கலப்புப் பெயர்ப்புகள் பயன்படுகின்றன.

பிழைபட எழுதுதல்

வாக்கியப் பிழைகள், கருத்துப் பிழைகள், சொற் பிழைகள் ஒரு கதையை வாசிப்பதற்கான தடைக்கற்கள். மூன்றாவது பத்தியில், மூலமொழியிலுள்ள இரண்டு வாக்கியங்களை ஒரே வாக்கியமாகச் சேர்த்துப் பிசைந்ததில் வாக்கியப் பிழை நேர்ந்துள்ளது. ‘கலந்தன் ஹாஜியால் இன்னும் நாற்பது மனைவிகளைக்கூடக் காப்பாற்றும் திராணி உண்டு என்ற ஊர்மக்களின் பேச்சில் ஒரு நியாயமிருந்தது.’ இத்தொடரில் ‘ஹாஜியால்’ என்று மூன்றாம் வேற்றுமை உருபைச் (ஆல்) சேர்த்ததால் வாக்கியப்பிழை ஏற்பட்டுள்ளது. நான்காம் வேற்றுமை உருபைச் (கு) சேர்த்து ‘ஹாஜிக்கு’ என்று எழுதியிருக்கவேண்டும். ‘ஹாஜியால்’ என்று தொடங்கினால் ‘காப்பாற்ற முடியும்’ என்று முடித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாகத் ‘திராணி உண்டு’ என்று எழுவாய்க்கும் பயனிலைக்கும் வாக்கிய ஓர்மையின்மையை ஏற்படுத்திவிட்டார். மூலமொழி வாக்கிய அமைப்பை உள்ளவாறே பெறுமொழியில் அமைக்கும்போது கருத்துத் தெளிவில் நெருடல் இல்லையென்றால் வாக்கியத்தைச் சிதைக்கவோ பிரிக்கவோ கூடாது என்ற தெளிவின்மையால் நேர்ந்த பிழையென்று இதனைக் கருதிவிட இயலாது. தட்டச்சுப் பிழையும் அன்று.

நான்காவது பத்தி மூலத்தில், ஹாஜிக்கு ஆமினா மூலமாகப் பிறந்த மகள் ருகியா. ருகியாவோட மகன் ரிஸ்வான். அமெரிக்காவில் இருதய அறுவைச்சிகிச்சை நிபுணன். அவனுடைய கல்யாணம் போனவாரம் பெங்களூர்ல வச்சு நடந்தது.4

மொழிபெயர்ப்பில், ஹாஜியாருக்கு ஆமினாவில் பிறந்த மக ருக்கியா. ருக்கியாவோட மகள் ரிஸ்வான். அமெரிக்காவில் கார்டியாக் சர்ஜன். அவனுடைய கல்யாணம் போன வாரந்தான் பெங்களூரில் நடந்தது. (ப.10)

ரிஸ்வான் ‘மகன்’ என்பதற்குப் பதிலாக ‘மகள்’ என அச்சுப்பிழை நேர்ந்துள்ளது. அடுத்த மூன்றாவது வாக்கியத்தில் ‘அவன்’ என்ற சொல்லின் மூலம் ரிஸ்வான் ‘மகன்’ என்பதை வாசகன் யூகித்துக்கொள்ள முடியும். மேலும் ‘ரிஸ்வான்’ என்பதும் ஆண் பெயராக இருப்பதால் அச்சுப்பிழை என வாசகன் எளிதாகக் கடந்து சென்றுவிட இயலும். அந்தப் பத்தியில் முதல் வாக்கியத்திலும் இறுதி வாக்கியத்திலும் சிறு சறுக்கல்கள் இருந்தபோதும் மூலத்தின் மொழிநடையை மாறாமல் கையாண்டுள்ளார் மொழிபெயர்ப்பாளர்.

பிறமொழிச் சொற்களைக் கையாள்வதில் இடர்ப்பாடு

மூலக்கதையில் பிறமொழிச் சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளதென்றால் அவற்றை அவ்வாறே பயன்படுத்த வேண்டும் அல்லது எல்லாவற்றையும் மொழிபெயர்த்துப் பெறுமொழியில் கொடுத்துவிட வேண்டும். ஆனால் இந்த ஐந்து பத்திகளில் சிலவிடங்களில் மொழிபெயர்த்தும் சிலவற்றை மொழிபெயர்க்காதும் விட்டுள்ளார். குறிப்பாக மூலப் பிரதியில் ஒலிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தப்பட்ட ஆங்கிலச் சொற்கள் சிலவற்றை மொழிபெயர்த்தும் சிலவற்றை மொழிபெயர்க்காதும் விட்டுள்ளார்.

மிநுட் - நிமிடம்

பார்ட்டி - பலசாலி

கார்டியாக் சர்ஜன் - கார்டியாக் சர்ஜன்

பேஜார் - பேஜார்

உம்மா - உம்மா

ரிஸப்ஷன் - வரவேற்பு

‘கார்டியாக் சர்ஜன்’ என்பதை ‘இருதய அறுவைச் சிகிச்சை நிபுணர்’ என்றோ, ‘பேஜார்’ என்பதை ‘விசனம்’ என்றோ மொழிபெயர்த்திருக்கலாம். அதே பத்தியில் இஸ்லாமியர் பயன்படுத்தும் வழக்குமொழிச் சொல்லான ‘உம்மா’ என்பதை ‘அம்மா’ என மொழிபெயர்க்காமல் உள்ளவாறே ஒலிபெயர்த்ததோடு ‘பல்யுப்பாப்பன்’ (தாத்தா), ‘ஹாஜப்’ (ஆசை), ‘மய்யத்து’ (பிணம்) ஆகிய சொற்களை மொழிபெயர்க்காமலும் பயன்படுத்தாமலும் தவிர்த்துச் சென்றுள்ளார். அதேபோன்று கதையின் பின்பகுதியில் வியாபாரி ராமச்சந்திரனுக்கும் கோபால் யாதவுக்கும் இடையிலான உரையாடல் மூலப்பிரதியில் இந்தி மொழியில் அமைந்துள்ளது. அதனை மொழி பெயர்க்காது உள்ளவாறே ஒலிபெயர்ப்புச் செய்து கொடுத்துள்ளார்.

மூலமொழியின் எடுத்துரைப்பு முறைமையை மாற்றாது பெறுமொழியில் பேச்சு வழக்கில் மொழியாக்கம் செய்யும்பொழுது பிறமொழிச் சொற்கள் பொருத்தமாக அமைந்தால் அதனை உள்ளவாறே ஒலி பெயர்த்துக்கொடுப்பதில் தவறில்லை. ஆனால் பெறுமொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்து கொடுப்பதென்றால் பிற மொழிச் சொற்கள் எல்லாவற்றையும் மொழிபெயர்த்துக் கொடுத்தலே சிறந்ததாகும். ஆனால், அவ்வாறு மொழி பெயர்த்துக் கொடுக்கும்போது பேச்சுவழக்கிலான உரையாடல் தன்மையைக் கதை இழந்துவிடுமா என்பது குறித்துச் சிந்திக்கவேண்டும்.

முடிவுரை

வேறு மொழியில் இருந்து வரும் எழுத்தை வாசகன் மிகுந்த நம்பிக்கையோடு தனது தாய்மொழியில் அணுகுகின்றான். அவனுக்கு மூலமொழியில் உள்ள பிரதியின் சொல்லல் முறையோ, வாக்கியக் கட்டமைப்போ எதுவும் தெரியாது என்ற நிலையில் மொழிபெயர்ப்பாளர் கட்டமைக்கும் சொல்லல் முறை, வாக்கியக் கட்டமைப்புகள் மிகுந்த மதிப்புவாய்ந்தவையாக அமைந்துவிடுகின்றன. ஆனால், அது ஒரு கதையை வாசகப்பிரதியாக வாசகனுக்குக் கொடுக்கப்படாமல் மொழிபெயர்ப்பாளரின் விவரணைப் பிரதியாக வாசகனுக்குக் கொடுக்கப்படும்போது அதில் உயிர்ப்பற்ற ஒற்றைத்தன்மையிலான தட்டையான ஒரு பிரதியையே எதிர்கொள்கிறான். இது மொழிபெயர்ப்பின் மீது சலிப்பை ஏற்படுத்துவதோடு மூல மொழியில் எழுதப்பட்ட கதையின் உயிர்ப்பான தன்மையை அது தரும் வாழ்வனுபவத்தை வாசகன் பெறமுடியாமல் போவதோடு அந்தக் கதை குறித்தும் படைப்பாளன் குறித்தும் எந்தவிதமான கருத்தும் அற்றவனாக ஆகிப்போகின்றான். ஒரு மொழியில் சிறப்பாகப் பேசப்பட்ட கதை இன்னொரு மொழியில் சிறப்பாகப் பேசுவதற்கான தன்மை எதுவும் அற்ற சக்கையாக இருந்தால் அதை வாசிக்கும் வாசகன் மூலமொழி வாசகர்களின் பார்வைக்கோணத்தைத் தவறாகப் புரிந்துகொள்வான்.

மொழிபெயர்ப்பாளர், தான் வாசித்த பிரதியை பெறுமொழியில் தந்துள்ளாரே தவிர மூலப்பிரதியை மொழி பெயர்க்கவில்லை. ஆகவே, அது மொழிபெயர்ப்பாளரின் ஒற்றை வாசிப்பின் விளக்கி மொழிதலாக அமைந்து விட்டது.

மூல மொழியின் மொழிப்பயன்பாட்டு முறைமையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்பப் பெறுமொழியின் மொழிப்பயன்பாட்டை உறுதிசெய்வது மொழிபெயர்ப்பாளனின் கடமை என்பதை மொழிபெயர்ப்பாளர் கண்டுகொள்ளவில்லையா அல்லது மொழிபெயர்ப்பாளருக்குப் பெறுமொழியின் பேச்சுவழக்கு மொழிநடையில் பரிச்சயமில்லையா என்பது அறியக்கூடவில்லை.

மொழிபெயர்ப்பாளர் தனக்காகச் சமைத்துக்கொண்ட ஒரு பிரியாணியை ஊரெல்லாம் தின்னக்கொடுத்து அது சந்தோஷ் ஏச்சிக்கானத்தின் பிரியாணி என்று கூறிக்கொள்வது மொழிபெயர்ப்பாகுமா?

அடிக்குறிப்பு
  1. கதிரேசநோடொப்பம் கோபால் யாதவ் செர்க்களேந்நு கயறியிட்டேயுள்ளூ. கூடெ மூந்நு பம்காளி பய்யன்மாரும். கத்திச்சு விட்டாலும் பஸ்ஸுபொயிநாச்சி எத்தான் மிநிமம் பத்திருபது மிநுட்டெங்கிலும் எடுக்கும். (ப.9)
  2. அதுவரெ நமுக்கு கலந்தன் ஹாஜியெப்பற்றி ஸம்ஸாரிக்காம். (ப.9)
  3. பண்டு தளங்கரயில் நிந்நு துபாய்வரெ உரு ஓடிச்சு போய பார்ட்டியாணு. கழிஞ்ஞ ஜநுவரியில் எண்பத்தியாறாயி. ஜீவிச்சிருந்ந நாலு பார்யமாரில் குஞ்ஞீபியெ மறந்நுபோயி எந்நல்லாதெ ஹாஜியுடெ ஓர்ம்ம சக்திக்கு வேறெ ஒரு குழப்போமில்ல. கலந்தநு நாலல்ல நால்பது பார்யமாரெ போற்றாநுள்ள கழிவுண்டெந்நு நாட்டுகார்க்கறியாம். (ப.9)
  4. ஹாஜிக்காநு ஆமிநயில் உண்டாய மகள் றுகிய. றுகியயுடெ மகன் றிஸ்வான். அமேரிக்கயில் கார்டியாக் ஸர்ஜநாணு. அவன்றெ நிக்காஹ் கழிஞ்ஞ ஆழ்ச பாம்க்ளூரில் வெச்சாயிருந்நு. (ப.9)
  5. ஒரு ஸல்க்காரமெங்கிலும் நடத்தி நாட்டு கார்க்கித்திரி பிரியாணி கொடுக்காணமெந்நு பல்யுப் பாப்பய்க்கு ஒரு பூதி. எண்பத்தாறாயில்லே. இனி ஆ ஹாஜத்து நடக்காதெ மூப்பர் மய்யத்தாயால் பிந்நெ அது மநஸ்ஸிலெந்நும் ஒரு பேஜாறாயி கிடக்குமெந்நு உம்ம பறஞ்ஞதுகொண்டு றிஸ்வான் ஸம்மதிச்சு. இந்நு வைகுந்நேரம் ஆறிநும் ஒன்பதிநும் இடய்க்காணு றிஸப்ஷன். (ப.9)
பயன்பட்ட நூல்கள்

1. சந்தோஷ் ஏச்சிக்கானம். (2016). பிரியாணி. கோட்டயம், டி.ஸி. புக்ஸ்.

2. பிரியாணி (2018), (கே.வி. ஜெயஸ்ரீ, மொ.பெ.). திருவண்ணாமலை, வம்சி புக்ஸ்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer