ரைனர் மரியா ரில்கே
5. இறைவா உமது தோட்டத்தில்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

இறைவா, தமது குருட்டு மரணத்தில் இறக்கும்
வறிய விலங்குகளை விடவும் நாங்கள் வறியவர்களாய் இருக்கிறோம்
நாங்களெல்லாம் இறப்புக்குக் குறைவாய்த்தான் இறந்திருக்கிறோம்
எமது கைகளுக்குள் அந்த விலைமதிப்பற்ற நுட்பத்தை
எஸ்பாலியர் செடிகளைப் படரவிடுவது போல வாழ்வுடன்
எம் கைகளைப் பிணைத்து வழிகாட்டும் ஒருவரை
அனுப்பி வையுங்கள்
அங்கே மே மாதம் முன்னதாகவே வந்துவிடுகிறது
வருடத்தின் கனி முந்தியே விளைந்துவிடுகிறது

இறப்பது கடினமாயும் அந்நியமாயுமிருக்கிறது
அது எங்கள் இறப்பில்லை
இருந்தாலும் அது எங்களையும் எடுத்துக்கொள்கிறது
காரணம் நாங்கள் எங்களுடையதேயானதை
விளையக் கொணர முடியாது
எனவே, அது ஒரு புயலில்
கிளைகளிலிருந்து எங்களைப் பறித்துவிடுகிறது

இறைவா, உமது தோட்டத்தில்
நாங்கள் நிற்கிறோம்
ஆண்டாண்டு காலமாய்
உமது மரங்கள்
ஒரு இனிய மரணத்தைப் பேணிக்காக்க
ஆனால் அறுவடை சமயத்தில்
நாங்கள் உலர்ந்து போகிறோம்
நீர் எமக்களித்த வாக்குறுதிகளைப் பொய்யாக்கி
பயனற்று மலடியாய்ப்போவென ஆக்கிய
அந்தப் பெண்ணைப் போல்

அல்லது என் திமிர் அதிகபட்சமானதா?
இறுதியில் விருட்சங்கள் சிறந்தவையா?
மிகத் தாராளமாய் விட்டுக்கொடுக்கும் பெண்களின் கருப்பைகளும்
பால்இயல்பூக்கம் மட்டுமேதான் நாங்களா?
நிச்சயமாய் நாங்கள் நித்தியத்துவத்துடன் வேசித்தனம் புரிந்துவிட்டோம்
மேலும் குழந்தையின் படுக்கைக்கு வருகையில்
எமது மரணத்தின் இறந்துபிறந்த வளர்கருவையே கொணர்கிறோம்
வளைந்த, துயர்மிகு கரு
தனது வெற்றுக் கைகளால் மூடிக்கொள்ள யத்தனிக்கிறது
(அச்சமூட்டுகிறவற்றைப் பற்றிய அச்சத்தில்)
இன்னமும் உருப்பெறாக் கண்களுடன்

அதன் வீங்கிப் பெருத்த முன்நெற்றியில் நிற்கிறது
அது சந்தித்திரா தலைவிதியின் பீதி துயருராமலேயே
ஆகவே நாங்கள் அனைவரும் சாகிறோம்
அத்தனை வேசைகளைப் போல்
பிரசவ வலியிலும் ஆயுதப்பிரசவங்களிலும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer