ரைனர் மரியா ரில்கே
12.இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு
பார் எவ்வளவு சிறியதாய் உள்ளது
உன்னால் பார்க்க முடிகிறதா
மொழியின் இறுதி தான்ய சேமிப்புக் கிடங்கை
அதற்கும் மேலே
இன்னும் துணுக்காய் உணர்ச்சியின் கடைசிக் களஞ்சியம்
இதற்கு முன்பே பார்த்திருக்கிறாயா?
இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு
கையினடியில் கடினமான பாறை
உண்மைதான்
இங்கும் கூட ஏதோ ஒன்று மலர்கிறது
ஊமை மலையின் செங்குத்துச் சரிவில்
ஒரு அறியாமைமிகு சிறு செடி மலர்ந்து காற்றினில் பாடிக்கொண்டிருக்கிறது

ஆனால் அந்தப் பிரக்ஞை மனிதன்? ஆங், அவன் அறியத் தொடங்கி
பிறகு நிசப்தமானான், இதயத்தின் மலைகளின் மேல் சாக விடப்பட்டு
பல ஆடுகளும் மான்களும் இங்கு வருகின்றன
அவற்றின் அறிதல் முழுமையாய்
ஸ்திரமிக்கக் கால்கொண்ட பல மலை விலங்குகள்
மேய்ச்சல் நிலத்தை மாற்றுகின்றன அல்லது தங்கிவிடுகின்றன
மேலும் அந்த நன்கு பேணப்பட்ட பெரும் பறவை
சிகரத்தின் தூய மறுப்பினை வட்டமிட்டுப் பறக்கிறது
ஆனால் பேணப்படாமல், இங்கே இதயத்தின் மலைகளின் மேல் விடப்பட்டு...

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer