மாண்டியேலின் விதவை

காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்
ஆங்கிலத்தில்: ஜே. எஸ். பெர்ன்ஸ்டைன்
தமிழில்: இரா. சுகந்தன்

பகிரு

மொழியாக்கச் சிறுகதை

மாண்டியேல் இறந்தபோது, அவனது விதவையைத்தவிர ஒவ்வொருவரும் பழிதீர்க்கப்பட்டதாக உணர்ந்தார்கள். ஆனால் அவன் உண்மையிலேயே இறந்துவிட்டான் என்பதை நம்புவதற்கு ஒவ்வொருவருக்கும் பல மணிநேரங்கள் பிடித்தது. ஓரங்கள் ஒரு முலாம் பழத்தினைப்போல உருண்டிருந்த, மஞ்சள் சவப்பெட்டியில் தலையணைகளுடனும் நார்மடித் துணி விரிப்புகளுடனும் நெரிக்கப்பட்டு, புழுங்கிக்கொண்டிருந்த அறையில் இருந்த பிணத்தைக் கண்ட பிறகும் அதை பலரும் தொடர்ந்து சந்தேகப்பட்டார்கள்.

மிக நேர்த்தியாக மழிக்கப்பட்டு, வெள்ளை உடை அணிவிக்கப்பட்டு, காப்புரிமை - பெற்ற தோல் பூட்சுகளுடன் இருந்தான், மேலும் அந்தக்கணத்தில் அத்தனை உயிர்த்துடிப்பாக உள்ளதைப் போன்று ஒருபோதும் காணப்பட்டிருக்காத அளவுக்கு அத்தனை நேர்த்தியாக இருந்தான்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் திருப்பலி பூசையின்போது இருந்ததைப் போன்ற அதே திரு.சேப்பே மாண்டியலாக இருந்தான் அவன், அவனது சவாரி சாட்டைவாருக்குப் பதிலாக அவனது கையில் ஒரு சிலுவையைக்கொண்டிருந்தான் என்பதைத் தவிர்த்து. அவன் இறந்ததாக நடித்துக்கொண்டிருக்கவில்லை என்று மொத்த நகரமும் நம்புவதற்கு சவப்பெட்டி அடைப்பின் திருகாணி மறை ஏற்றவும் பகட்டான குடும்ப கல்லறை மாடத்தில் அவனை வைத்து பூசி அடைக்கவும் வேண்டியிருந்தது.

அவனது விதவையைத் தவிர்த்த மற்ற அனைவருக்கும் நம்பமுடியாததாக இருந்த ஒரே விஷயாக இருந்தது சவ அடக்கத்திற்குப் பிறகும், ஹோசே மாண்டியேல் ஓர் இயற்கையான மரணத்தைத்தான் அடைந்தான் என்பதுதான். ஒரு பதுங்கித் தாக்குதலில் முதுகில் சுட்டுக் கொல்லப்படுவான் அவன் என்று ஒவ்வொருவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு வயதேறிய கிழவனாக அவனது படுக்கையில், பாவமன்னிப்பு கோரியவாறு, அப்புறம் ஒரு நவீனகால புனிதரைப் போன்று வேதனையற்று அவன் இறப்பதை காண்பாள் என்பதில் நிச்சியம் கொண்டிருந்தாள். ஒரு சில பகுதிகளை மட்டுமே அவள் தவறாகப் புரிந்துகொண்டவளாக இருந்தாள். 1951ம் ஆண்டு ஆகஸ்டு இரண்டாம் நாள், பிற்பகல் இரண்டு மணிக்கு தனது ஹேம்மக்கில் இறந்தான் ஹோசே மாண்டியேல் - மருத்துவர் கூடாதென்று தடைசெய்துவிட்டிருந்த கோபத்தின் வெடிப்பின் விளைவாக.

ஆனால் மனைவியோ மொத்த நகரமும் இறுதிச்சடங்கில் பங்குகொள்ளும் என்றும் மலர்கள் அனைத்தையும் கொள்வதற்கு வீடானது மிகவும் சிறிதாக இருக்கும் என்றும் கூட நம்பிக்கொண்டிருந்தாள். இருந்தபோதிலும் அவனது சொந்தக்கட்சி உறுப்பினர்களும் அவனது மத சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்களும் மட்டுமே பங்கெடுத்தனர், அப்புறம், அவர்களுக்கு கிடைத்த மலர்வளையங்கள் நகராட்சி அரசாங்கத்தைச் சேர்ந்தவையாக மட்டுமே இருந்தன. ஜெர்மனியில் இருந்து, அவனது துணைத்தூதரகப் பணியில் இருந்த அவனது மகனும் பாரீசிலிருந்து அவனது இரண்டு மகள்களும் மூன்று பக்க தொலைத் தந்திகளை அனுப்பினார்கள்.

தொலைத்தந்தி அலுவலகத்தின் அபரிமிதமான மையினால் அவர்கள் அவற்றை நின்றுகொண்டு எழுதினார்கள் என்பதையும், இருபது டாலர்கள் பெறுமதியான வார்த்தைகளைக் கண்டடைவதற்கு முன்பு பல்வேறு தொலைத் தந்திப் படிவங்களைக் கிழித்துப்போட்டனர் என்பதையும் ஒருவரால் காணமுடியும்.

அவர்களில் எவரொருவரும் திரும்பி வருவதாக வாக்களிக்கவில்லை. அந்த இரவில், அறுபத்திரண்டு வயதில், தன்னை சந்தோஷப்படுத்திய மனிதனின் தலை ஓய்வெடுத்துக்கொண்டிருந்த தலையணையின் மீது அழுதுகொண்டிருந்தபோது, மனக்கசப்பின் சுவையை முதன்முறையாக மாண்டியேலின் விதவையானவள் அறிந்தாள். என்றென்றைக்குமாக என்னை பூட்டிக்கொண்டு இருந்துவிடுவேன், என்று அவள் நினைத்துக்கொண்டிருந்தாள். என்னைப் பொறுத்தவரை, ஹோசே மாண்டியேலுடையதைப் போன்ற அதே பெட்டியில் என்னை அவர்கள் போட்டு விட்டதைப் போலத்தான். இந்த உலகைப் பற்றிய அதிகமான வேறெதனையும் நான் அறிவதற்கு விரும்பவில்லை.

அவள் நேர்மை வாய்ந்தவளாக இருந்தாள், மூடநம்பிக்கையினால் உள்ளம் புண்படுத்தப்பட்ட அந்த நொய்மையான பெண், முப்பது அடிக்கும் குறைவான தொலைவில் காண்பதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒரேயொரு மண இணைவனுக்கு அவளது பெற்றோர்களால் இருபது வயதில் மணம் முடித்து வைக்கப்பட்டாள். யதார்த்தத்துடன் ஒருபோதும் நேரிடையான தொடர்பில் இருந்ததே இல்லை அவள். மூன்று நாட்கள் கழித்து அவளது கணவனின் உடலை அவர்கள் வீட்டின் வெளியே எடுத்தபோது, அவளது கண்ணீரின் வழியாக அவள் சாந்தமும் சமநிலையும் அடையவேண்டும் என்று புரிந்துகொண்டாள், ஆனால் அவளது புதிய வாழ்வின் திசைவழியை அவளால் கண்டுபிடிக்க இயலவில்லை. தொடக்கத்திலிருந்தே தொடங்கவேண்டும் அவள்.

ஹோசே மாண்டியேல் கல்லறைக்குழிக்குள் தன்னுடன் எடுத்துச் சென்றுவிட்ட எண்ணிலடங்கா இரகசியங்களுக்கு இடையே பாதுகாப்பு பணப் பெட்டகத்தை திறப்பதற்கான இரகசிய எண் சேர்மானமும் இருந்தது. மேயர் இந்தப் பிரச்சினையை கவனத்தில் எடுத்துக்கொண்டார். பெட்டகத்தை உள்முற்றத்தில், சுவருக்கு எதிராக வைக்க உத்தரவிட்டார், அப்புறம் இரண்டு போலீஸ்காரர்கள் அவர்களது சுழல் துப்பாக்கிகளை வைத்து பூட்டைச் சுட்டார்கள். காலைநேரம் முழுவதும் விதவை படுக்கையறையிலிருந்து மேயரின் கூவல்களால் படிப்படியாக உத்தரவிடப்பட்ட முணுமுணுப்பான துப்பாக்கி ஒலிகளைக் கேட்டாள்.

இதற்கு மேல் தாங்கவே முடியாது, என்று அவள் எண்ணிணாள். துப்பாக்கிச் சூட்டை நிறுத்துவதற்காக கடவுளிடம் முறையிட்டவாறு மூன்று வருடங்கள் செலவாயின, அப்புறம் எனது வீட்டில் சுட்டுக்கொண்டிருப்பதற்காக நான் இப்போது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அந்நாள், சாவை அழைப்பதற்கான ஒருமுகப்பட்ட முயற்சியை மேற்கொண்டாள், ஆனால் எவரொருவரும் பதிலளிக்கவில்லை. வீட்டின் அஸ்திவாரங்களை ஒரு மிகப்பெரிய வெடித்தல் உலுக்கியபோது அவள் உறக்கத்தில் வீழத் தொடங்கியிருந்தாள். பாதுகாப்புப் பெட்டகத்தை அவர்கள் வெடிவைத்துத் தகர்க்க வேண்டியிருந்தது.

மாண்டியேலின் விதவை ஒரு பெருமூச்சினைவிட்டாள். அக்டோபர் அதன் நிறுத்தலே இல்லாத சதுப்புநில மழைகளுடன் இருந்தது, அப்புறம், குழப்படி மிக்கதாகவும் நம்பவொண்ணாததாகவும் இருந்த ஹோசே மாண்டியேலின் பெரும் பண்ணையில் திசை வழியற்று பயணம் செய்தவாறு அவள் தொலைந்துபோனதாக உணர்ந்தாள். ஒரு கிழவனும் கடின உழைப்பாளியுமான திரு. கார்மிக்கேல், பண்ணையின் பொறுப்பை ஏற்றிருந்தான். அவளது கணவன் இறந்துவிட்டான் என்ற அப்பட்டமான மெய்மையை அவள் கடைசியாக எதிர்கொண்டபோது, வீட்டை கவனித்துக்கொள்வதற்காக மாண்டியேலின் விதவை படுக்கையறையிலிருந்து வெளியே வந்தாள். வீட்டின் அலங்காரங்கள் அனைத்தையும் உரித்து எடுத்தவள், துக்கம் அனுஷ்டிக்கும் நிறங்களை வைத்து மேசை இருக்கைகளை மூடினாள், அப்புறம் அனைத்து சுவர்களிலும் தொங்கிக்கொண்டிருந்த இறந்த மனிதனின் உருவப்படங்களில் இழவு துணிப்பட்டைகளை மாட்டினாள். சாவுச்சடங்கின் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, அவளது நகங்களைக் கடிக்கும் பழக்கத்தைப் பெற்றாள். ஒரு நாள் - அத்தனை அதிகம் அழுததினால் அவளது கண்கள் சிவந்தும் வீங்கியும் இருந்தபோது - திறந்த குடையுடன் திரு.கார்மிக்கேல் வீட்டின் உள்நுழைந்து கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.

“திரு.கார்மிக்கேல், அந்தக் குடையை மடக்குங்கள்”, என்று அவரிடம் அவள் கூறினாள். “நாம் அனுபவித்த துரதிருஷ்டம் அனைத்திற்கும் பிறகு, நமக்கு தேவைப்படுவதெல்லாம் உங்களது குடையைத் திறந்தவாறு இந்த வீட்டின் உள்நுழைவதைத் தானா.” திரு.கார்மிக்கேல் குடையை மூலையில் வைத்தார். பளபளக்கும் தோலுடன், வெண்ணிற உடையணிந்து, அவரது கால் பெருவிரல் வீக்கங்களின் அழுத்தத்தைத் தணிப்பதற்காக தனது ஷூக்களில் சிறு பிளப்புகளை ஒரு கத்தியினால் உண்டாக்கியிருந்த ஒரு வயதான நீக்ரோ அவர்.

“அது உலர்ந்துகொண்டிருக்கும்போது மட்டும் அதை விரித்து வைத்திருக்கிறேன்”

அவளது கணவன் இறந்த பிறகிலிருந்து முதன்முறையாக, விதவை ஜன்னலைத் திறந்தாள்.

“அத்தனை அதிகமான துரதிருஷ்டமும், அதனுடன் சேர்த்து இந்தக் குளிர்காலமும்” என்று தனது நகங்களைக் கடித்தவாறு அவள் முணுமுணுத்தாள்.

“இது ஒருபோதும் தெளியாது என்பதைப் போலவே தோன்றுகிறது.” “இன்றோ அல்லது நாளையோ அது தெளியாது” என்றார் நிர்வாகி. “கழிந்த இரவு எனது பெருவிரல் வீக்கங்கள் என்னைத் தூங்கவிடவில்லை.” திரு.கார்மிக்கேலின் பெருவிரல் வீக்கங்களின் சூழ்நிலை அனுமானங்களை அவள் நம்பினாள்.

ஆளற்ற சிறு சதுக்கத்தை, ஹோசே மாண்டியேலின் சவ அடக்கத்திற்கு முகம் கொடுக்காது கதவுகள் மூடியிருந்த நிசப்தமான வீடுகளைக் குறித்து சிந்தித்துப்பார்த்து, அப்புறம், அவளது நகங்களுடன், அவளது வரம்பற்ற நிலங்களுடன், அப்புறம் அவளது கணவனிடமிருந்து பெற்றிருந்த அவளுக்கு ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாதததுமான எண்ணிலடங்கா கடப்பாடுகளுடனும் ஆற்றொணா துயருற்றாள்.

“உலகம் மொத்தமும் தவறாக இருக்கிறது” என்றாள் விம்மியவாறு.

அந்த நாட்களில் அவளைக் காணச் சென்றவர்களுக்கு அவள் பைத்தியமானாள் என்று எண்ணுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால் அவள் அப்போது இருந்ததைத் போன்று தெளிவானவளாக ஒருபோதும் இருந்ததில்லை. அரசியல் படுகொலை தொடங்குவதற்கு முன்பு தொட்டு, மரித்தவர்களின் பால் அனுதாபம் கொண்டவாறும் கடவுள் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுத்திருக்கவில்லை என்றால் அவருக்கு உலகத்தை இன்னும் நேர்த்தியாக முடிப்பதற்கான நேரம் கிடைத்திருக்கும் என்று எண்ணியவாறும் துயர்மிகுந்த அக்டோபர் காலை நேரங்களை அவளது அறையின் ஜன்னலின் முன்பாக இருந்தவாறு செலவிட்டாள். “முடிக்கப்படாத காரியங்களை செய்துமுடிக்க அந்த நாளை அவர் பயன்படுத்தி இருக்கவேண்டும்” என்று சொல்வதை அவள் வழக்கமாகக்கொண்டிருந்தாள். “எல்லாவற்றிற்கும் மேலாக ஓய்வெடுப்பதற்கான முடிவற்ற காலத்தை அவர் கொண்டிருந்தார்.” அவளது கணவனின் மரணத்திற்குப் பிறகான ஒரேயொரு வேறுபாடு, இதுபோன்ற இருண்ட எண்ணங்களை கைக்கொள்வதற்கான ஒரு ஸ்தூலமான காரணத்தை இதன்பிறகு அவள் கொண்டிருந்தாள் என்பதே.

அப்படியாக, மாண்டியேலின் விதவை விரக்தியில் தன்னைத் தானே தின்றுகொண்டிருந்தபோது, திரு. கார்மிக்கேல் உடைந்து சீர்குலைவதை தடுக்க முயன்றார். விஷயங்கள் நன்றாக நடக்கவில்லை. பேரச்சத்தின் மூலமாக உள்ளூர் வியாபாரத்தை தனிப்பட்டதாக ஆக்கிய ஹோசே மாண்டியேலின் அச்சுறுத்தலிலிருந்து சுதந்திரமாக விடுபட்ட நகரம், பழிவாங்கல்களை மேற்கொண்டிருந்தது. ஒருபோதும் வராத வாடிக்கையாளர்களுக்காக காத்திருந்தபடி, முற்றத்தில் சாடிகளில் வரிசையாக வைக்கப்பட்டு இருந்த பால் புளித்துப் போனது, அப்புறம் தேன்கூடுகளில் தேனும் கெட்டுப்போனது, அப்புறம் சேமிப்பு மனையில் இருண்ட நிலைப்பெட்டிகளில் பாலாடைக் கட்டி புழுக்களைக் கொழுக்க வைத்தது.

மின்சார குமிழ்விளக்குகளாலும் போலி - பளிங்கு தலைமைத் தேவதூதர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அவனது கல்லறை மாடத்திலிருந்து, ஆறு வருடங்களின் படுகொலைகள் மற்றும் ஒடுக்குதல்களுக்கு பரிகாரம் செய்துகொண்டிருந்தான் ஹோசே மாண்டியேல். நாட்டின் சரித்திரத்தில் எவரொருவரும் இத்தனை குறுகிய காலத்தில் இத்தனை பணக்காரராக ஆனதில்லை. சர்வாதிகார ஆட்சியின் முதல் மேயர் நகரத்தை வந்தடைந்தபோது, தனது அரிசி ஆலையின் முன்பாக உள்கால் சராயுடன் அமர்ந்து இருந்தவாறு தனது வாழ்வின் பகுதியைச் செலவிட்டிருந்த அனைத்து நடப்பாட்சிகளின் போதும் முன்விழிப்புடன் செயலாற்றும் ஓர் ஆதரவாளனாக இருந்தான் ஹோசே மாண்டியேல். ஒரு நேரத்தில் அவன் ஓர் அதிர்ஷ்டக்காரனாகவும், அப்புறம் ஒரு நல்ல விசுவாசியாகவும் ஒரு குறிப்பிட்ட நற்பேறினைப் பெற்றிருந்தான், ஏனென்றால் அவன் பரிசுச்சீட்டினை வெல்வான் எனில் புனித யோசப்பின் ஓர் ஆளுயர படிமத்தை கிறிஸ்தவ தேவாலயத்திற்குத் தருவான் என்று உரத்த குரலில் வாக்குறுதி அளித்தான், அப்புறம் இரண்டு வாரங்கள் கழித்து ஒரு கொழுத்த பரிசினைப் பெறவும் வாக்கினை காப்பாற்றவும் செய்தான்.

முதன்முறையாக அவன் ஷூக்கள் அணிந்து காணப்பட்டது ஒரு மிருகத்தனமானவனும், கீழ்நிலை காவல்துறை சார்ஜண்டும் ஆன புதிய மேயர் எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவதற்கான விரைவான உத்தரவுகளுடன் வந்து சேர்ந்தபோதுதான். அவனது நம்பிக்கைக்குரிய காட்டிக்கொடுப்பவனாக இருப்பதிலிருந்து தொடங்கினான். மிகச்சிறிய மனவுளைச்சலைக் கூட ஒருபோதும் தூண்டியிருக்காத அந்தக் கொழுத்த மனிதனின் நகைச்சுவையுணர்வுடனிருந்த அந்த சாதாரண வியாபாரி, தனது எதிரிகளைப் பணக்காரர்களாகவும் ஏழைகளாகவும் பிரித்தான். ஏழைகளை பொதுச்சதுக்கத்தில் வைத்து காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

பணக்காரர்களுக்கு நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு இருபத்து நான்கு மணிநேரங்கள் தரப்பட்டது. அவனது மனைவி இறந்தவர்களோடு அனுதாபம் கொண்டிருந்தபோது,  ஹோசே மாண்டியேலோ மேயருடன் அவனது மூச்சுத்திணற வைக்கும் அலுவலகத்தில் நாட்கணக்கில் அடைத்துப் பூட்டி இருந்துகொண்டு படுகொலையைத் திட்டமிட்டவாறு இருந்தான். மேயர் அலுவலகத்தை விட்டு நீங்கியபோது, அவளது கணவனின் வழியை மறிப்பாள். “அந்த மனிதன் ஒரு கொலைகாரன்” என்று அவள் சொல்வாள். “அரசாங்கத்தில் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கினைப் பயன்படுத்தி அவர்கள் அந்தக் கொடுவிலங்கினை திருப்பி அழைக்க ஏற்பாடு செய்யுங்கள்; நகரத்தில் எந்த ஒரு மனித ஜீவனையும் அவன் உயிரோடு விடப்போவதில்லை.” அப்புறம், அந்த நாட்களில் மிகவும் பரபரப்பானவனாக இருந்த ஹோசே மாண்டியேல், அவளை உண்மையிலேயே பார்க்காமல் விலக்கியவாறு “இத்தகைய ஒரு முட்டாளாக இருக்காதே” என்றான். உண்மையில், அவனது வியாபாரம் ஏழைகளைக் கொல்வதல்ல. ஆனால் பணக்காரர்களை வெளியேற்றுவதுதான். மேயர் அவர்களின் கதவுகளை துப்பாக்கிச் சூட்டினால் சல்லடையாக்கி அப்புறம் நகரத்திலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு இருபத்து நான்கு மணிநேரம் கொடுத்தபிறகு, ஹோசே மாண்டியேல் அவர்களின் நிலங்களையும் கால்நடைகளையும் அவன் வைத்த விலைக்கு வாங்கிக்கொண்டான். “இத்தனை அற்பனாக இருக்காதே” என்று அவனது மனைவி அவனிடம் கூறினாள். “அவர்கள் வேறு ஏதோவிடத்தில் பசியினால் செத்துவிடாதிருக்கும்படிக்கு நீ அவர்களுக்கு உதவி செய்து உன்னையே நீ நாசமாக்கிக்கொள்கிறாய், அப்புறம் அவர்கள் உனக்கு ஒருபோதும் நன்றி சொல்லக்கூட மாட்டார்கள்.” அப்புறம், புன்னகைப்பதற்குக்கூட நேரம் இல்லாதவனாக இருந்த ஹோசே மாண்டியேல், அவளை ஓரமாக ஒதுக்கிவிட்டு, “உனது சமையலறைக்குச் செல்.

அப்புறம் என்னை இத்தனை அதிகம் தொல்லைப்படுத்தாதே” என்கிறான். இந்த வேகத்தில் போனால், ஒரு வருடத்திற்கு சற்றுக் குறைவாகவே எதிர்ப்பாளர்கள் ஒழித்துக்கட்டப்படும், அப்புறம் ஹோசே மாண்டியேல்தான் நகரத்திலேயே மிகவும் பணக்காரனுமாகவும் மிகவும் சக்திவாய்ந்தவனாகவும் இருப்பான். அவனது மகள்களை பாரீசுக்கு அனுப்பினான், தனது மகனுக்காக ஜெர்மனியின் ஒரு துணைத்தூதரக வேலையைக் கண்டுபிடித்துக் கொடுத்தான்.

அப்புறம் தனது சாம்ராஜ்ஜியத்தை உறுதிப்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டான். ஆனால் அவனது மட்டுமீறிய செல்வத்தை அனுபவிப்பதற்கு அவன் ஆறு ஆண்டுகள் கூட வாழவில்லை. அவனது சாவின் முதல் நினைவுதினத்திற்குப்பிறகு, கெட்ட செய்தி வந்து சேர்வதுடன் மட்டும் படிக்கட்டுகள் கிறீச்சிடுவதைக் கேட்டாள். எவரோ ஒருவர் பொழுதுமயங்கும் வேளையில் எப்பொழுதுமே வந்தார். “மீண்டும் அந்த கொள்ளைக்காரர்கள்” என்று அவர்கள் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். “ஐம்பது கிடாரிகளின் ஒரு மந்தையை அவர்கள் நேற்று உடன் ஓட்டிச் சென்றனர்.” அவளது ஆடும் நாற்காலியில் அசைவற்றவாறு, அவளது நகங்களைக் கடித்தபடி, மாண்டியேலின் விதவை மனக்கசப்பை அல்லாத வேறொன்றையும் உண்ணவில்லை. “ஹோசே மாண்டியேல் நான்தான் சொன்னேனே உன்னிடம்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள், தன்னுடனே பேசிக்கொண்டவாறு. “போற்றுதலற்ற ஒரு நகரம் இது. உங்களது கல்லறையில் நீங்கள் இன்னும் கதகதப்பாக இருக்கிறீர்கள், அப்புறம் ஏற்கனவே ஒவ்வொருவரும் அவர்தம் பாராமுகங்களைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள்.”

எவரொருவரும் வீட்டிற்குத் திரும்பி வரவில்லை. மழை பெய்வது நிற்காத அந்த முடிவுறா மாதங்களின்போது அவள் கண்ட ஒரே மனித ஜீவன், ஒருபோதும் தனது குடையினை மடக்காமல் நுழைந்த பிடிவாதமிக்க திரு.கார்மிக்கேல் மட்டும்தான். காரியங்கள் அத்தனை சீராக நடந்துகொண்டிருக்கவில்லை.

ஹோசே மாண்டியேலின் மகனுக்கு பல்வேறு கடிதங்களை எழுதினார் திரு.கார்மிக்கேல். விவகாரங்களுக்குப் பொறுப்பேற்றுக்கொள்வதற்காக அவன் வந்தால் வசதியாக இருக்கும் என்று யோசனை கூறினார். விதவையின் உடல்நலத்தைப் பற்றி சில தனிப்பட்ட அவதானிப்புகளைச் செய்வதற்கும் கூட அவர் தன்னை அனுமதித்துக்கொண்டார். எப்பொழுதும் மழுப்பலான பதில்களையே அவர் திரும்பப் பெற்றார். கடைசியாக, அவன் வந்தால் சுட்டுக்கொல்லப்படுவான் என்பதனாலேயே அவன் வரத்துணியவில்லை என்று வெளிப்படையாக பதிலளித்தான் ஹோசே மாண்டியேலின் மகன் அப்புறம் திரு. கார்மிக்கேல் விதவையின் படுக்கையறைக்குச் சென்று அவள் பாழாகிப் போனாள் என்பதை அவளிடம் வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டியதானது.

“அப்படி இருப்பதும் நல்லதுதான்” என்று அவள் பதிலளித்தாள். “பாலாடைக் கட்டியுடனும் ஈக்களுடனும் நான் என் பொறுமையின் எல்லைவரை இங்கேயே இருக்கிறேன். நீ விரும்பினால், உனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு என்னை சமாதானமாகச் சாகவிடு.” அப்போதிருந்து, வெளி உலகினுடனான அவளது ஒரே தொடர்பாடல், ஒவ்வொரு மாதக் கடைசியிலும் அவளது மகள்களுக்கு எழுதிய கடிதங்களாக இருந்தது. “இது ஒரு கொடும்பழியுற்ற நகரம்” என்று அவர்களிடம் சொன்னாள். “எப்போதைக்குமாக அங்கேயே இருங்கள், அப்புறம் என்னைப் பற்றிக்கவலைப்படாதீர்கள். நீங்கள் சந்தோஷத்துடன் இருப்பதை அறிவதில் நான் சந்தோஷமடைகிறேன்.”

அவளது மகள்கள் அவளுக்கு முறைவைத்து பதில் போட்டார்கள். அவர்களது கடிதங்கள் எப்போதும் சந்தோஷம் மிக்கவையாகவே இருந்தன, அப்புறம் அவை கதகதப்பான, நன்கு ஒளியூட்டப்பட்ட இடங்களில் இருந்து எழுதப்பட்டன என்பதையும் அப்புறம் அவர்கள் சிந்திப்பதை நிறுத்தியபோது பெண்கள் பல்வேறு கண்ணாடிகளில் தாம் பிரதிபலிக்கப்படுவதைக் கண்டார்கள் என்பதையும் ஒருவரால் காண முடியும். அவர்களும் கூட திரும்பிவர விரும்பவில்லை. “இதுதான் நாகரிகம்” என்று அவர்கள் சொல்வார்கள். “அங்கே, மற்ற வசத்தில், எங்களுக்கான நல்ல சூழ்நிலைமை இல்லை. அரசியல் காரணங்களுக்காக மக்கள் கொல்லப்படும் அளவிற்கு அத்தனை காட்டுமிராண்டித்தனமான ஒரு நாட்டில் வாழ்வது என்பது சாத்தியமில்லாதது.’ கடிதங்களை வாசிக்கும்போது, மாண்டியேலின் விதவை மெச்சப்பட்டதாக உணர்ந்தாள், அப்புறம் ஒவ்வொரு சொற்றொடரையும் சம்மதம் தெரிவித்து தலையை ஆட்டி ஆமோதித்தாள்.

ஒரு குறிப்பிட்ட தறுவாயில், பாரீசில் உள்ள இறைச்சி வெட்டுக் கடைகளைப் பற்றி அவளது மகள்கள் அவளுக்கு எழுதினார்கள். அங்கே கொல்லப்பட்டு, அப்புறம் கதவுவழிகளின் எதிரே, மலர் வளையங்களாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு முழுவதுமாக தொங்கவிடப்பட்ட இளஞ்சிவப்புநிற பன்றிகளைப் பற்றியும் அவளுக்குக் கூறினார்கள். கடிதத்தின் கடைசியில் அவளது மகள்களின் கையெழுத்துக்கு மாறான ஒன்று கூட்டிச்சேர்த்தது இவ்வாறு, “கற்பனை செய்யுங்கள்! மிகப்பெரியதும் மிக அழகானதுமான கார்னேஷன் மலரை அதன் குண்டியில் வைத்தார்கள்.”

இந்தச் சொற்றொடரைப் படித்து, இரண்டு வருடங்களில் முதன்முறையாக மாண்டியேலின் விதவை புன்னகைத்தாள். வீட்டின் விளக்குகளை அணைக்காமல் படுக்கையறை வரை சென்றதுடன், படுப்பதற்கு முன்பாக சுவற்றில் இருந்த மின்விசிறியைப் போட்டாள். அப்புறம், இரவு மேசை இழுவறையில் இருந்து சில கத்தரிக்கோல்களை, காயத்திற்கு ஒட்டும் பிளாஸ்திரியின் ஒரு தகரக்குவளையை, அப்புறம் ஒரு ஜெபமாலையை எடுத்தாள். அவளது நகம் கடித்தலால் எரிச்சலூட்டுவதாக இருந்த வலதுகைப் பெருவிரல் நகத்தைக் கட்டுப்போட்டாள். அதன்பிறகு அவள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினாள். ஆனால் இயேசுநாதரின் இரண்டாவது வாழ்க்கை நாடகத்தின்போது ஜெபமாலையை அவளது இடக்கைக்கு மாற்றினாள், ஏனென்றால் புண்கட்டில் இருந்து மாலையின் முத்துகளை அவளுக்கு உணரமுடியவில்லை. ஒரு கணத்திற்கு தொலைதூர இடியோசையின் அதிர்வைக் கேட்டாள் அவள். அதன் பிறகு அவளது மாரில் அவளது தலை கவிழ்ந்து கிடந்தவாறு உறக்கத்தில் ஆழ்ந்தாள். ஜெபமாலையுடன் இருந்த கை அவளது அருகே விழுந்தது, அதன் பிறகு அவள் ஒரு வெள்ளை துணிவிரிப்புடனும் மடியில் ஒரு சீப்புடனும், தனது பெருவிரல் நகங்களால் பேனை நசுக்கிக்கொண்டிருந்த பெரிய அம்மாவை உள்முற்றத்தில் கண்டாள்.

அவளிடம் இவள் கேட்டாள்:

“நான் எப்போது இறக்கப் போகிறேன்?”

பெரிய அம்மா தனது தலையை உயர்த்தினாள்.

“சோர்வு உனது கையில் தொடங்கும்போது”.

Montiel’s widow by Gabriel Garcia Marquez. English translation: J.S. Bernstein.

From: Gabriel Garcia Marquez: Collected Stories (Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Jonathan Cape, 1991.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer