மதிக்குமார் தாயுமானவன் கவிதைகள்


பகிரு

உன் நினைவின் தினவுகளைக்
குமிழியாக வனைந்து
காற்றின் நதியிலே மிதக்கவிட்டேன்

இப்பேரண்டத்தின் கூச்சம்பட்டு
உடைந்த குமிழி இன்னொரு
பால்வெளியாய் விரிந்தது

அதில் நாம் பழகிய பொழுதுகளைத்
தெளித்துச் சென்றோம்
திரும்பிப் பார்க்கையில்
அவை வனாந்திரங்களாக வளர்ந்திருந்தன

உன் வனப்புகளில் கொஞ்சம் பிட்டு
ஆங்காங்கே குன்றுகள் அமைத்தேன்

கதழும் அருவியொன்று கண்டால்
காட்சி முழுமையாகும்தான்

அனிச்சையாய் தொடுதலை ஈந்து
அதையும் நிறைத்தாய்

இருண்ட குகைக்குள்ளே நம்
மௌனத்தை ஏற்றி வைத்தோம்

இரு மனதின் ஓசையை அப்படியே
ஒத்திருக்கிறது அருவியொலி

அர்த்த மண்டபச் சிலையின்
சிதைந்த மார்பில் இன்னொரு
மார்பைப் பின்னுகிறது சிலந்தி

நீளும் இக்காலத்திலேயே
முயங்கிக் கிடப்போம்

தயைகூர்ந்து மீண்டுமந்த
ஆப்பிளை மட்டும் கடித்துவிடாதே
திருமதி தோழி.
துள்ளும்
ஒவ்வொரு முறையும்
சொட்டு ஓடையையாவது
எடுத்துச் செல்கிறது மீன்

அத்துளி நேரத்திலும்
மீனின் பிம்பத்தை விடாது
ஏந்திக்கொள்கிறது ஓடை

மற்றபடி வேறொன்றுமில்லை.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer