பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
பிறகு பிறந்தோர்க்கு

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

1
நிஜத்தில் நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன்.
நேர்மையான சொல் முட்டாள்தனமானது.
மிருதுவான நெற்றி உணராத்தன்மையை தெரிவிக்கிறது.
சிரிக்கும் மனிதன் இன்னும் பயங்கர செய்தியைக் கொண்டவனில்லை.

என்னவிதமான காலங்கள் இவை
மரங்களைப் பற்றிப் பேசுவது ஏறத்தாழ குற்றமாகிறது?
காரணம் அது பல்வேறு பயங்கரங்களைப் பற்றிய மௌனத்தை உணர்த்துவதுதானா?
அதோ வீதியை அமைதியாகக் கடந்து செல்லும் மனிதன்
ஏற்கனவே தனது உதவி தேவைப்படும் நண்பர்களின் அணுகுதலுக்கு
அப்பால் சென்றுவிட்டான்?

நான் என்னைப் பேணும் உணவை இன்னும் சம்பாதிக்கிறேன்
ஆனால், என்னை நம்புங்கள், அது ஒரு விபத்து மாத்திரமே.
நான் செய்யும் எதுவும் நிறைவான உணவை உண்ணும் உரிமையை
எனக்களிப்பதில்லை.
சந்தர்ப்பவசமானக நான் பிழைத்திருக்கிறேன்
(என் அதிர்ஷ்டம் முறிந்தால் நான் தொலைந்து விடுவேன்)

அவர்கள் என்னிடம் சொல்கின்றனர்: சாப்பிடு, குடி.
அவையெல்லாம் கிடைத்திருப்பது பற்றி சந்தோஷப்படு.
நான் உண்பதைப் பட்டினியில் கிடக்கும்
ஒருவரிடமிருந்து பிடுங்கிக்கொள்ளும்போது
நானெப்படி உண்ணவும் குடிக்கவும் இயலும்
மேலும் அந்த கண்ணாடித் தம்ளர் குடிநீர்
தாகத்தினால் சாகும் ஒருவருக்கு சேர வேண்டியதாய் இருக்கையில்?
இருப்பினும் நான் உண்ணவும் குடிக்கவும் செய்கிறேன்.

நான் அறிவார்ந்தவனாய் இருக்க விரும்புவேன்.
புராதனப் புத்தகங்களில் விவேகம் என்னவென்று சொல்லப்பட்டிருக்கிறது:
இந்த உலகின் சச்சரவுகளைத் தவிர்த்தல்
மற்றும் உங்கள் குறைந்த காலத்தை பயமின்றி வாழ்தல்
மேலும் வன்முறையின்றி ஒத்து வாழ்தல்
தீவினைக்கு நல்வினையைப் பதிலாய்த் தருதல்
உங்கள் விழைவுகளை நிறைவேற்றிக்கொள்ளாது
மாறாக அவற்றை மறந்துவிடுல்.
இவை எல்லாம் புத்திசாலித்தனம் எனக் கருதப்பட்டது.
இவற்றை என்னால் செய்யவியலாது:
நிஜமாய், நான் இருண்ட காலங்களில் வாழ்கிறேன்.
2
நான் நகரங்களுக்கு வந்தது
ஒரு சீர்குலைவின் காலத்தில்.
அப்போது அங்கே பசி அரசோச்சியது.
நான் மனிதர்களுக்கிடையே வந்து சேர்ந்த சமயம்
கலகக் காலம்
மேலும் நான் அவர்களுடன் இணைந்து கலகம் செய்தேன்.
இவ்வாறு எனக்கு இந்த பூமியில் அளிக்கப்பட்ட
என் காலத்தைக் கழித்தேன்.

போர்களுக்கிடையே நான் என் உணவினை உண்டேன்.
உறங்குவதற்கு நான் கொலைகாரர்களுக்கிடையில் படுத்துக்கொண்டேன்.
காதலை நான் கவனமின்றிக் கையாண்டேன்.
மேலும் இயற்கையை நான் பொறுமையின்றி நோக்கினேன்.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தைப்
போக்கினேன் இவ்வாறு.
3
என் காலத்தில் எல்லா சாலைகளும் சகதிக்குள் இட்டுச்சென்றன.
கசாப்புக்காரர்களிடம் என் நாக்கு என்னைக் காட்டிக்கொடுத்தது.
என்னால் செய்யவியன்றதெல்லாம் சொற்பமே.
ஆனால் அதிகாரத்தில் இருந்தவர்கள் அமர்ந்திருந்தனர்
நானின்றிப் பாதுகாப்பாய்:
அது என் நம்பிக்கையாய் இருந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
கழித்தேன் இவ்வாறு.
எமது படைப்பிரிவுகள் பலவீனமாய் இருந்தன.
எமது நோக்கம் தொலைவில் கிடந்தது.
என்னால் அதனை அடைய சாத்திமற்றிருந்தும்
அது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.
எனக்கிந்த உலகில் அளிக்கப்பட்ட காலத்தை
போக்கினேன் இவ்வாறு.
4
வெள்ளத்திலிருந்து வெளிப்படப்போகிற நீங்கள்
அதில் நாங்கள் மூழ்கிப்போனோம்.
நினைவிருக்கட்டும்
எமது தோல்விகள் பற்றிப் பேசுகையில்
இருண்ட இருண்ட காலத்திலிருந்தும் கூட
நீங்கள் தப்பித்துவிட்டீர்கள்.

காரணம் எம் காலணிகளை மாற்றுவதைவிட அடிக்கடி
நாங்கள் நாடுகள் மாறினோம்.
வர்க்கங்களின் யுத்தங்களின் ஊடாய்
வெறும் அநீதி மாத்திரமே இருந்தபோது நம்பிக்கையிழந்தோம்
மேலும் கலகம் ஒன்றுமில்லை.

இருப்பினும் நாங்கள் அறிவோம்:
வெறுப்பு, கீழ்மையைப் பற்றியது கூட
தோற்றக்கூறுகளை கோணல்மாணலாக்குகிறது.
அநீதிக்கு எதிரான கடுங்கோபம் கூட
குரலைக் கரகரப்பாக்குகிறது.
ஓ
நட்பார்ந்த தன்மைக்கான அடித்தளத்தைத்
தயார் செய்ய விரும்பிய
நாங்களே நட்புடன் இருக்க இயலவில்லை.

ஆனால் நீங்கள்
ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கான உதவியாளனாய்
மாறும் காலம் வரும்போது
எம்மைப் பற்றி எண்ணிப்பாருங்கள்
பொறுமையுடன்.

Svendborg Poems (1939)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer