பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
செம்படை வீரன் ஒருவனின் பாடல்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

1
நமது நிலம் ஒரு களைப்புற்ற சூரியனுடன் உண்ணப்பட்டதால்
அது துப்புகிறது எம்மை இருண்ட நடைபாதைகளின் மீதும்
உறைந்த கற்பொடிகளைக் கொண்ட நாட்டுப்புற பாதைகளின் மீதும்.
2
வசந்தகாலத்தில் ராணுவத்தை உருகும் சகதி கழுவியது
அது கோடை சிவப்பின் குழந்தை.
பிறகு அக்டோபரில் திரள்பனி விழத் தொடங்கிற்று
ஜனவரியின் காற்றுகளில் அதன் மார்பு உறைந்து மரித்தது.
3
அந்த வருடங்களில் விடுதலை பற்றிய பேச்சு வந்தது
கெட்டிப்பனியால் வெடித்துப்போன உதடுகளிலிருந்து
புலியினுடையதை ஒத்த தாடைகளுடன்
மேலும் பலரை நீங்கள் கண்டீர்கள்
சிவப்பு மற்றும் மனிதமையற்ற கொடியைப் பின்தொடர்ந்து.
4
வயல்களின் ஊடாய் நிலா சிவப்பாய் நீந்தியபொழுது
ஒவ்வொருவரும் தம் குதிரைகளின் பக்கவாட்டில் ஓய்வுகொண்டனர்
வந்து கொண்டிருக்கிற காலங்களைப் பற்றி
அவர்கள் அடிக்கடி பேசினர்
பிறகு குதிரைச் சவாரியால் சோர்ந்து உறங்கிப் போயினர்.
5
மழையிலும் இருளார்ந்த காற்றிலும்
உறங்குவதற்கு சிறந்ததாய்த் தோன்றியது கடினப் பாறை.
மழை எமது அழுக்கடைந்த கண்களைக் கழுவி
வேறுபட்ட பாவங்களிலிருந்தும் அசுத்தங்களிலிருந்தும் சுத்தமாக்கியது.
6
இரவில் அடிக்கடி வானம் சிவப்பாயிற்று
சிவப்பு விடியல் மீண்டும் வந்துவிட்டதென அவர்கள் எண்ணினர்.
அது ஒரு தீ, ஆனால் விடியலும் கூடவே வந்தது.
விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை.
7
எனவே, அவர்கள் எங்கே இருந்தபோதிலும்
சுற்றிலும் பார்த்து கூறினார்கள் : இது நரகம் என்று.
காலம் கடந்து சென்றது.
இருப்பினும் சமீப நரகம்
என்றுமே இறுதியான நரகமாய் இருக்கவில்லை.
8
அவ்வளவு நரகங்கள் இன்னும் வரவிருந்தன.
விடுதலை என் குழந்தைகளே என்றுமே வரவில்லை.
காலம் கடந்து போகிறது. ஆனால் சொர்க்கம் இப்பொழுது
வருமானால்
அந்த சொர்க்கங்களும் எந்த வேறுபாடுமின்றி இருக்கும்.
9
களைத்துப் போன இதயத்துடன் எம் உடல் உண்ணப்பட்டவுடன்
ராணுவம் எம் சருமத்தையும் எலும்புகளையும்
சில்லிடும் குளிரிலும் ஆழமற்ற குழிகளிலும் உமிழ்ந்துவிடுகிறது.
10
மழையினால் விறைத்துப்போன எமது உடல்களுடன்
பனிக்கட்டியால் வடுபட்ட எம் இதயங்களுடனும்
ரத்தக்கரை படிந்த எமது வெறுங்கைகளுடனும்
நாங்கள் உமது சொர்க்கத்திற்குள் இளித்தபடி வருகிறோம்.

From Bertolt Brecht's Domestic Breviary (1927)

குறிச்சொற்கள்