பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
படிக்கும் ஒரு தொழிலாளியிடமிருந்து கேள்விகள்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

தீப்ஸ் நகரத்தின் ஏழு நுழைவாயில்களைக் கட்டியது யார்?
புத்தகங்களில் நீங்கள் அரசர்களின் பெயர்களைக் காண்பீர்கள்.
பாறைகளின் திரள்களை அரசர்கள் இழுத்து மேலேற்றினார்களா?
மேலும் பாபிலோன் பல முறை இடிக்கப்பட்டபோது
அத்தனை முறை அதை மீட்டுயர்த்தியது யார்?
என்னவிதமான தங்கமுலாம் பளபளக்கும் லிமா வீடுகளில்
கட்டிடத் தொழிலாளர்கள் வாழ்ந்தார்கள்?
சீனப்பெருஞ்சுவர் கட்டி முடிக்கப்பட்டபோது
கொத்தனார்கள் அந்த மாலை எங்கே சென்றனர்?
மகத்தான ரோம் நகர்
வெற்றி வளைவுகளால் நிறைந்துள்ளது.
அவற்றை எழுப்பியவர்கள் யார்?
யாரை எதிர்த்து வெற்றிபெற்றனர் சீசர்கள்?
பாடல்களில் புகழப்பட்ட பைஸாண்ட்டியம்
அதில் வசித்தவர்களின் மாளிகைகளாய் மட்டுமே இருந்ததா?
கட்டுக்கதைகளின் அட்லாண்ட்டிஸில் கூட
அதை கடல் கொண்ட இரவில்
மூழ்கியவர்கள் தமது தமது அடிமைகளுக்காக
இன்னும் கூக்குரலிட்டனர்.

இளம் அலெக்ஸாண்டர் இந்தியாவை வென்றார்.
அவர் தன்னந்தனியனாய் இருந்தாரா?
கால் தேசத்தவர்களைத் தோற்கடித்தார் சீஸர்.
அவருடன் ஒரு சமையல்காரர் கூட இருக்கவில்லையா?
ஸ்பெயின் தேசத்தின் ஃபிலிப் அரசர்
அவரது போர்க்கப்பல் மூழ்கியபோது அழுதார்.
அழுதது அவர் மாத்திரம்தானா?
ஃபிரெடரிக் ஏழு ஆண்டுகளின் போரில் ஜெயித்தார்.
அவர் தவிர வேறு யார் அதை ஜெயித்தது?

ஒவ்வொரு பக்கமும் ஒரு வெற்றியாக இருக்கிறது.
வெற்றியாளர்களுக்கு விருந்து சமைத்தவர்கள் யார்?
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு மாமனிதன்.
பணத்தைச் செலுத்தியவர்கள் யார்?

அத்தனை அறிக்கைகள்
அத்தனை கேள்விகள்.

From The First Years of Exile 1934-1936

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer