காற்று துன்புறுத்தும் தீபமென
தட்டுத்தடுமாறி அந்தப் பாறையின் உச்சியில் ஏறிநின்றேன்
எல்லோரின் காமிராக்களையும் ஒருசேர இடைமறித்தபடி
எல்லோரின் கவனத்தையும் என்பக்கம் திருப்பியபடி
நடுக்கடலில் பிரம்மாண்டமாய் நிறைவடையும் அந்தியோடு
சிலர் என்னையும் சேர்த்தே படம்பிடித்தனர்
இன்னும் சிலர் அவர்களின் சட்டகத்தில் நானிருப்பதை விரும்பாது
கீழிறங்கச் சொல்லி சத்தமிட்டனர்
அச்சமயம் அனைவரின் கண்முன்பும் வந்திறங்குகிறேன்
சூரியனிலிருந்து
சிறகு மடக்கி வானிலிருந்து
காற்றாலைகள் ஈனும் கடலலைகள்
கரை எங்குள்ளதென இறந்தவர்களுக்கு மட்டும்தான் வழி சொல்லுமாம்
பாறையின் கிண்ணங்களில் அருந்தப்படாமல் வழிகிறது
பல கோடித்துளிகளின் தொகுப்புருவம்
ஈருடல்களை ஒரு தலையில் இணைக்கும் இளஞ்ஜோடிகளாய்
நானும் அவளும் இதன் பொருட்டே காத்திருந்தோம்
ஆழியின் மடியினுள் அங்கே காணிக்கையாகச் செலுத்தப்படுகிறது
உலகின் மாபெரும் நாணயம்
நானோ யாருக்கும் கேட்காதபடி சத்தமாக வேண்டிக்கொண்டேன்
நீரிலிருந்து ஜனித்து மீண்டும் நீருக்குள் புதையும் தினங்கள்
திரும்பத் திரும்ப வருகின்றன
நானும் கூட
நேற்று பார்த்த அதே மனிதர்களை இன்றும் பார்த்துவிடுகிறேன்
மேலும் அவர்கள் என்னைக் கடந்துசெல்ல
ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறேன்
ஆழ்கடல் ரகசியங்களோடு
அதிகாலையில் கூண்டிலிருந்து தப்பிச் சென்ற ஒளிமிருகத்தை
நடுவானில் சுட்டு வீழ்த்திய மதிமயக்கமாலை இது
இழுபறிக்கும் காற்றில்
தூரத்திலிருந்து பிரார்த்திக்கும் தேவாலயத்தின் ஒலிப்பெருக்கிகள்
என்னை மட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டு
கொஞ்சம் சொல்லி கொஞ்சம் விழுங்கிக்கொள்கின்றன
மறுநாள் உயிர்த்தெழுவதற்கான வாசகங்களை
கரையின் தனிமையில் காத்திருக்கும்
எங்கள் இருவரின் பாதங்களையும்
தழுவிச் செல்லும் அதே அலைகளைக்கொண்டு
கூழாங்கற்கள் ஒவ்வொன்றும் தம்மை நனைத்துக்கொள்கின்றன
தனித்தனியாக
ஆகையால் தம்முள் மொத்தமாகவும்.
திடீர்வருகை
நண்பரொருவரின் வருகையை
முன்னதாகவே அறிந்து கொண்ட பதற்றத்தில்
மடிக்கப்படாத ஆடைகளை அவசர அவசரமாக
அலமாரிக்குள் நுழைக்கின்றேன்
மும்முரமாக நடைபெற்ற வாக்குவாதங்களைத்
தற்காலிகமாய் ஒத்தி வைக்கின்றேன்
பார்த்ததும் தெரிந்துவிடும் சுவரின் சிதிலங்களை
என்னென்னவோ செய்து சரிசெய்கின்றேன்
பண்டங்களின் கையிருப்பைக் கணக்கிடுகின்றேன்
எவ்வளவு எடைவரைத் தாங்குமென்று
எல்லா இருக்கைகளிலும் அமர்ந்து பரிசோதிக்கின்றேன்
மேலும் நான் என்பது இதுதான், இவ்வளவுதான் என
வரையறுக்கும் பொருட்களையெல்லாம்
தேடித்தேடி மறைத்து வைக்கின்றேன்
பத்துநிமிடத்தில் முடிந்தவரை பழுது பார்க்கப்பட்ட வீட்டில்
எல்லாம் தயார் நிலையிலிருக்க
நேர்த்தியானவை அனைத்தும் இயல்பானதா என அறியேன்
ஆனால் இயல்பாகவே என்வீடு
இதைவிட நேர்த்தியானது என
வந்திருந்த நண்பரிடம் காட்டிக் கொண்டிருந்தேன்.
தினங்களின் பாடல்
ஒரு இசை நாற்காலியைச் சுற்றிவரும்
அந்தக் காதுகேளாத நபர்தான்
இன்று புதிதாகக் கண்டறியப்பட்ட துணைக்கோள்
விரும்பிய இடத்தில் மூச்சை நிறுத்தி, மீண்டும்
விரும்பிய இடத்திலிருந்து சுவாசிக்கத் துவங்கும்
பாடல்கள் யாவும்
யாரைத் தக்கவைப்பது
யாரைச் சீக்கிரம் தீர்ந்துபோகச் செய்வதென்பதில்
பாரபட்சம் எதையும் காட்டுவதில்லை
ஆனால் தனிப்பட்ட முறையில் இந்தப் பாடல்களுக்கு
எப்போதும் சில பொறுப்புகளுண்டு
நடுவானில் தோல்வியுற்ற எனது எத்தனையோ தினங்களைப்
பலமுறை பத்திரமானத் தரையிறக்கியதுண்டு
தனிமையைத் தியானிக்கச் செய்யும் ஒலிகேட்பிகளால்
என் செவிகளுக்கும் பார்வை உண்டென நிரூபித்ததுண்டு
இருக்கையைத் தேடித்தேடி அமர்வதும்
பிறகு போதுமென்று எழுவதுமாய்
ஆட்களோ மாறிக்கொண்டே இருக்கின்றனர்
நாற்காலியும் ஆசைக்குச் சற்றுநேரம்
ஆறுகால்களில் அமர்ந்து பார்க்கிறது.
விமோசனம்
பூரணமாய்க் குணமடைந்தேன் என்பது
நான் காத்திருந்து காத்திருந்து எய்திய
நிம்மதியின் பெருமூச்சு
மெதுமெதுவாய் பயணப்பட்டு அடைந்த
நிறைவின் பொற்கணம்
அப்படியொரு கணத்தில்தான்
தேன்கூட்டை நோக்கி எறியும்
சிறுகல்லும்
உடனுக்குடன் சாபம் நீங்கித்
திரும்ப வருகிறது
தேனீக்களாய்.