பெரு.விஷ்ணுகுமார் கவிதைகள்


பகிரு

அழைத்தலும் ஆமே

மன்னித்து விடுங்கள்
சற்றுமுன்பு உங்களை அழைக்கவேண்டியவன் நான்தான்
ஏதோ கர்வத்தில் மறந்துவிட்டேன்
ஆனால், நான் அழைக்காதபோதும் திரும்பினீர்களே
உங்களுக்குப் பெரிய மனது

மன்னிக்கவும்
திரும்பியது தங்களுக்காக அல்ல
உங்களுக்குமுன் அழைத்தவனுக்காக
முன்பு எப்போதோ ஒருமுறை அழைத்தவனுக்காக
கவலை வேண்டாம்
உங்களுக்காகவும் ஒருமுறை திரும்புவேன்
நிச்சயம் திரும்புவேன்
சென்று வரிசையில் வாருங்கள்.

ஒரு துளி வையம்

அவ்விருவருமாய் இணைந்து அருந்துகிற
கடைசிக் குளிர்பானம் அது
நிரம்பி வழியும் கோப்பை
பீங்கான் நதியென மேசைமீது நின்றிருந்தது
உறிஞ்சுக்குழலால் உள்ளிழுத்துக் குடிக்க
தூரத் தெரியும் நீர்வீழ்ச்சியொன்று
மேல்நோக்கிப் பாய்கிறது

அருந்தியிருக்கவேண்டிய அந்தக் கடைசித் துளி
என்ன காரணமோ
உற்சாகமாய்ச் சர்ர்ரெனக் கீழிறங்குகிறது
உண்மையில் அது
இனி தனக்கு யாரும் இல்லையென்ற சோகத்தில்
தயங்கித் தயங்கி மெதுவாக வந்திருக்கவேண்டும்
அல்லது கோப்பைக்கு வெளியே குதித்தாலும் சரி
ஒரு துளி பெய்தாலும்
மழை மழைதானே.

பெரியம்மைநோய் உருவான காதை

வீதியில் விழுந்துகிடந்தவனின் மீது மழைபெய்தபோது
பூமியின் ஒருபகுதி நனையாமலிருந்தது
ஒவ்வொரு துளியாய் உடலோடு ஒட்டவைப்பதற்கு
மென்ற மந்திரத்தில்
நனைக்க மறந்த நீர் உருண்டைகள்
அவன்மேல் அசையாமல் நின்றன
ஆச்சரியக்குறிகளாய் பெய்தது மழையல்ல
எழுதிக்கொண்டிருப்பவனின் பேனா
திடீரெனத் திக்கி உதறியதால்
தெரியாமல் அவன்மேல் விழுந்திருக்கலாம்
தளர்ந்து தொங்கிய தேகத்தை ஆங்காங்கே குவியலாக்கி
முடிச்சிட்டு வைக்க
திருவிழா காலத்தில் உடலெங்கும் கட்டிவைத்த
சீரியல் விளக்குகள் திடீரெனப் பியூஸ்போனது
அவ்வளவு சொல்லியும் கேட்காமல்
சிவப்பு - நிறத்தில் சிவனேயென்று
எரிந்துகொண்டிருந்ததை
எருக்கன் பூவைப் போல
சப்தம் வருமென யாரோ பிதுக்கியிருக்கிறார்கள்
இப்போது அவன் - உடலை ‘ரிமோட்’ எனப் பாவித்தால்
அதோ தூரத்தே விழுந்து கிடக்கிறானே
அவனை இங்கிருந்தே இயக்கலாம்
ம்ம்ம்ம்ம்… எழு, நட, குதி, விழு, இற
மீண்டும் பிற
பற… பற.

தோற்றப்பிழை

தூரப்பார்வைக் கண்ணாடியில்
முட்டிய கல் சிறியதாகத் தெரிகிறது
கோபத்தில் நீ அவனை
எத்தனையோ முறை வீசியெறிந்தும்
சிறிய கல் என்பதாலேயே தப்பித்திருக்கக்கூடும்
நினைவிருக்கிறது
ஒருமுறை அம்மாடியிலிருந்து குதித்தபோதும்
அணிந்திருந்த கண்ணாடியில்
தூரத்திலிருந்த தரைத்தளம்
அருகே வந்துவிட்டதுபோல் தெரிய
லேசான காயங்ளோடு உயிர் தப்பினான்
தொலைவிலிருக்கும் யாவற்றையும்
அருகில் நிகழ்வதுபோல் கொண்டுவரும்
என் இருசக்கர வாகனத்தின் கண்ணாடியே
என்னையும் அப் - பெண்ணையும்
அருகருகே கொண்டுவர
ஒரே ஒரு காரணம் கூறேன்

வேண்டுமெனில்
உன்னை இப்போது எதிலாவது மோதச் செய்யவா…?

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer