பெருந்தேவியின் கவிதைகள்
பரிணாமம் அடைந்த உயிரி பெருந்தேவியின் கவிதைகள் குறித்து...

தூயன்

பகிரு

மதிப்புரை

ஒரு வெள்ளிக்கிழமை கதை

ஒரு வெள்ளிக்கிழமை இரவு ஒருவன் / தன் கனவில் / தெரியாத ஒருத்தியின் பாதத்தை / நக்கிக்கொண்டிருந்தான் / அதே இரவு ஒருத்தி / தன் கனவில் / தெரியாத ஒருவனுக்காக / ஒரு மலையுச்சியிலிருந்து குதித்துக்கொண்டிருந்தாள் / அக்கணமே அனைத்தும் அறிந்த முகநூல் செயலி / ஸ்ட்லெட்டோ அணிந்த பெண்ணொருத்தி / மலையுச்சியிலிருந்து குதிக்கும் விளம்பரத்தை / இருவர் நேரக்கோட்டிலும் பகிர்ந்தது / அக்கணமே அவர்கள் / ஸ்ட்லெட்டோவை மலையுச்சியைத் / தேடத் தொடங்கினார்கள் / அக்கணமே முகநூல் செயலி / இருவர் நேரக்கோடுகளிலும் / ஸ்ட்லெட்டோ வகைகளை / மலைவாசஸ்தல பேக்கேஜ்களைக் / கொட்டிக் குவித்தது / அடுத்த வெள்ளிக்கிழமை ஒரு ஸ்ட்லெட்டோவைக் / கட்டியணைத்துக்கொண்டு தூங்கினான் அவன்/ அதேநாள் ஒரு மலையுச்சியிலிருந்து / அவள் குதித்து டிவி சானல்களில் செய்தியானாள் / இப்போது அவன் நேரக்கோட்டில் / நாவறட்சிக்கான மருந்துகளை / நிரப்புகிறது செயலி / அவள் நண்பர்களின் நேரக்கோடுகளில் / ஆவிகள் சம்பந்தமான காணொளிகளை நிரப்புகிறது / யாரும் திறக்காவிட்டாலும் பார்க்காவிட்டாலும் / அவை எல்லாவற்றிலும் அவள் / விழுந்த இடத்திலிருந்து / உச்சிக்கு ஏறிக்கொண்டிருக்கிறாள் (விளையாட வந்த எந்திரபூதம்)

பரிணாமம்

மனித உயிரினம் பரிணாமம் அடைந்ததைப் பற்றிய கேள்வி ஒன்று எப்போதும் உண்டு. ஹோமா எரக்டஸ் ஹோமோ ஹெபலிஸ் என்ற உயிரிகளிடமிருந்து ஹோமோ செபியன்ஸாக மனிதன் உருவானதற்குப் பின்பு ஏன் அடுத்தக்கட்ட பரிணாமத்தை அவன் அடையவில்லை? பரிணாமத்தை எது தீர்மானிக்கிறது?

உயிர்வாழத் துவங்கியப் போராட்டத்தின் நிர்பந்தம், சூழலின் தனித்துவப்பண்பு, உயிரின் தகவமைப்பைத் தீர்மானித்ததன் விளைவு (Environmental Pressure) விலங்குப் பண்பை மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்த்துக்கொண்டதன் முடிவு இன்றைய மனித இனம்.

இனி அவனுக்கு இயற்கையோ பிற இனங்களின் அச்சுறுத்தலோ பருவச்சூழலோ அவனது வாழ்வு குறித்த போராட்டத்தை மாற்றப் போவதில்லை. அதாவது (Environmental Pressure) சூழல் அழுத்தம் அவனுக்கு இனி கிடையாது. ஆக,

மனிதனின் பரிணாமம் முடிவுக்கு வந்துவிட்டது. அதாவது பௌதீகப் பரிணாமம்தான் physical Pressure) முடிவுக்கு வந்துள்ளதே தவிர, மூளைப் பரிணாமம் (Mind pressure) இன்னும் முடியவில்லை. சூழல் அழுத்தம் உடற்செயலியலின் பரிணாமத்தைப் பாதித்ததுபோலவே தொழில் நுட்ப அழுத்தம் (Technological Preesure) மூளையின்
பரிணாமத்தை மாற்றும் காரணியாக இருக்கிறது.

உடல் சார்ந்த மனிதனின் பரிணாமத்தை இனி மாற்றும் காரணிகள் அவனைச் சுற்றி இல்லை என்பதே நிதர்சனம். பிறகு, இப்போது நடந்துகொண்டிருப்பதெல்லாம் மூளையின் பரிணாமம் மட்டுமே. இத்தனை நூற்றாண்டுகளாக அது தனது பரிணாமச் சிருஷ்டியை மூளைக்குள் செய்துகொண்டிருக்கிறது.

இனி அதன் இயக்கத்தை நிறைவு(நிறுத்த?) செய்யும் அளவுக்குரிய (தொழில்நுட்ப) தகவமைப்பு உருவாக வாய்ப்பு இல்லை. சூக்கும இருப்புக்கு அழிவு இல்லை யென்று நமக்குத்தெரியும் (மூளையின் செயல்பாடுகள் இங்குச் சூக்குமம்). மேலும் இந்தச் சூக்கும இருப்பே தூல இருப்பை நிர்வகிக்கிறதென்கிற சித்தாந்தத்தைச் சொல்லித்  தெரியவேண்டியதில்லை.

மூளை பரிணாமத்திற்கு இயைந்து தனது சிருஷ்டிக்குள் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் வைத்துக்கொண்டிருக்கிறது. இன்று அவ்வித பரிணாமத்தின் உச்சம் என்னவென்றால் அது தன்னை மனித இனம் என்கிற பழைய நின்றுபோன பௌதீகப் பரிணாமத்தை அசைத்தேவிட்டது.

அதாவது தன் நிறைவு அடைந்த மனித உயிரின் தூல இருப்புக் கொஞ்சம் கொஞ்சமாக மூளையின் பரிணாமத்தின் சிருஷ்டி  நிலைக்கு  ஏற்ப  மாறியுள்ளது.

மூளை பரிணாமத்தின் விளைவால் மனிதன் எனும் உயிரின் “பண்புகள்” மாறத் துவங்கியிருக்கின்றன. முன்பு இத்தன்மையை நாம் எந்திரன் அல்லது ரோபாட்டிக் சென்ஸ் என்று உலகமயமாக்கலின் துவக்கத்தில் அழைத்துக்கொண்டோம்.

மனித யந்திரங்களின் வருகையால் நாம் அவ்வாறு அழைத்துக் கொள்வது ஒருவித கலாச்சார வழக்கமாக இருந்தது. ஏனெனில் ரோபோக்களின் பரிணாமம் அப்போது நிகழ்ந்துகொண்டிருந்தது. இன்று எந்த ரோபோவும் நமக்குத் தேவை இல்லை.

பொருள்களின் இருப்பே நமக்குத் தொந்தரவாக உள்ளது. நம்முடைய பிரக்ஞையின் விழிப்பு (attention) நம்மைத் தொந்தரவு செய்கிறது. நீங்கள் அனுபவிக்கவேண்டும் ஆனால் அதற்காக அதைச் சுமந்துகொண்டு திரியலாகாது.

நினைக்கும்போது கண்முன் வரவேண்டும் வேண்டாம் என்றதும் அது தனது இடத்தைக் காலி செய்து கொள்ளக்கூடிய “இருந்தும் மறைந்துமான” உயிரியாக வேண்டும்.

இன்றைக்கு நம்முடைய அன்றாடங்களை வெளியே நின்று கவனித்தால் அந்த இருந்தும் மறைந்துமான  உயிரியின்  தடயங்கள்  புலப்படும்.

இந்தப் பகுதியைத் தற்காலிகமாக இங்கு நிறுத்தி விட்டு அன்றாடத் தடயங்களின் சுட்டிகளைக் கவனித்துவிட்டு வரலாம். நாம் சக நண்பர்களுடன் உரையாடும் விதம் மாறியிருக்கிறது. நீண்ட வாக்கியங்களுக்கு நமது குறுஞ்செய்திகளில் இடமில்லை.

ஹாட்டினும், ஸ்மைலியும் அதை எடுத்துக்கொண்டு விட்டன. ஒரு கேள்வியைச் சில குறிப்பான்களால் உருவாக்குகிறோம். உதாரணத்திற்கு, பழைய ஃபோர்ன் இணையத்தைவிட வேறு என்ன உன்னிடம் இருக்கிறது என்பதைச் சில எமோஜிகளைப் பயன்படுத்திக் கேட்கிறேன்.

பதிலுக்கு அங்கிருந்து நண்பர் உபயோகிக்கும் புதிய இணையத்தின் படம் வருகிறது. அது எப்படிப்பட்டது என்று சில ஸ்மைலிகள் அனுப்புகிறேன் அவரிடமிருந்து நாக்கைத் தொங்கப்போட்ட நாய்க்குட்டி வருகிறது. அவ்வளவுதான் உரையாடல்.

குரல் பதிவு செய்திகள் இன்னும் நேரத்தைக் குறைத்திருக்கிறது. இறந்து விட்டதைத் தெரியப்படுத்த, காதலை அறிய, வெறுப்பை உமிழ என அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்த வாட்ஸ் அப் ஸ்டேடஸ் இருக்கிறது. நம்மைச் சுற்றி நிறைய செயலிகள் உள்ளன. நாம் செயலிகளுடன் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இன்றைக்கு ஒருவரது தனிமை என்று ஒன்று இல்லவே இல்லை. தனிமைக்குள் இந்தத் தொழில் நுட்பங்களெல்லாம் வருகின்றன. இவற்றின் இருப்பையும் சேர்த்தே தனிமைப் பொருள் கொள்ளப்படுகிறது. காதலிக்கப் பிறிதொரு உயிர் தேவையில்லை இணையம் போதும். புணர்ச்சிக்கு செயற்கைத் தொழில்நுட்பத்துடன் கூடிய செயலி போதும்.

தர்க்க உரையாடல் நிகழ்த்த தரவிறக்கம் செய்த நுண்ணறிவு மென்பொருள் சாதனம் இருக்கிறது (Intellectual Debate software). இந்த சாத்தியங்களின் உச்சம்தான் செயற்கை நுண்ணறிவு ஏஐ Artificila Intelligence - AI..

இளம் பெண் ஒருத்தியிடம் நீங்கள் அவளது தனிமைக்குக் காரணம் என நீங்கள் அடுக்கும் துயரமா, பரிவா, ஆற்றாமையா, காதலா, மகிழ்ச்சியா, அமைதியா என்று எதைக் கேட்டாலும், பதில் உதட்டைச் சுழித்து தோள்களை உதறிக்கொள்வாள்.

இந்த செய்கைக்கு விளக்கம் காண, அதற்கு மேலே கூறிய தொழில்நுட்பங்களின் உதவிகள் வேண்டும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒன்று புலப்படலாம் மனித உணர்வுகள் ஒரு செயலியைப் போன்றும், தகவல் தொழில்நுட்பங்களுடனும் எவ்வாறு பரிபாலிக்கிறது?

இப்படிச் செயல்படக்கூடாதென்றும் இப்படிச் செயல்பட வேண்டுமென்றும் அதை எது நிர்வகிக்கிறது?

பதில், நிச்சயம் ஒரு செயலியை, செயற்கை நுண்ணறிவுத் திறனுள்ள உயிரிரை அனுபவிக்க, புரிந்துகொள்ள அதுபோன்ற இன்னொன்றால்தானே சாத்தியம்!

பெருந்தேவியின் கவிதைகள் இந்த பரிணாமத்தைத்தான் காட்டுகின்றன. “நீ ஒரு பரிணாமம் அடைந்த புதிய உலகத்தின் உயிரி” என்பதாக நம்மை நோக்கிச் சொல்கிறது, கூடவே தன்னையும் அவ்வாறு அடையாளப்படுத்தவும் செய்கிறது.

மானுட யத்தனம், மானுட தரிசனம், மானுட கீழ்மை, பரிவு, துக்கம், ஏக்கம், ஆற்றாமை, அபத்தம், காதல், காமம் இதெல்லாம் “மானுடத்தைக்” குறித்து இக்கவிதைகள் பேசவில்லை மாறாக, பரிணாமம் அடைந்த இப்புதிய யுக உயிரியின் நிலைபாட்டுடன்தான் நடத்துகிறது.

இந்தப் பரிணாம உயிரியைச் சாட்சிப்படுத்தும் கவிதை ஒன்று

எனக்கு எப்போதுமே வேலைகள் இருக்கின்றன
கற்பனையான ஒட்டகச்சிவிங்கியின் மீது ஏறப் பார்ப்பது பகலில் 
ஒவ்வொரு நட்சத்திரத்தையும் தேடி விசாரிப்பது இரவில் 
மேக மூட்டம் கவிந்த இரவில் காதலனோடு சண்டைப் போடுவது 
ஒரு மூட்டைத் தவறுகளைக் கண்டுபிடித்திருக்கிறேன் 
எதையும் சரி செய்துகொள்ளாதவன் 
சொல்ல மறந்துவிட்டேன் 
அவனைப் பின்  தொடர்வது மூன்றாவது வேலை 
ஒருநாள் ஃபேஸ்புக்கில் எழுபத்தெட்டு பேருக்கு ஆர்ட்டின் போட்டான் 
நான் கத்தியைக் கையிலெடுத்தபடி மின்திரையைப் 
பார்த்துக்கொண்டிருந்தேன் 
இன்னும் ஒன்று நீ தொலைந்தாய் 
நான்காவது வேலை தெருவில் அலைவது 
பையத்தியக்காரர்களால் 
வீடற்றவர்களால் பார்க்கப்படுவது 
அவர்களது கண்களுக்குள்தான் உட்கார்ந்திருக்கிறது உலகம் 
அவர்களிடம்தான் தெரிந்துகொள்கிறேன்
அது எத்தனை துப்புக்கெட்டதென்று
தோற்றவர்கள் இருக்கும் இடத்தில்
ஜெயித்தவராக ஒருத்தர் இருக்க வாய்ப்பில்லையென்று
ஐந்தாவது வேலை பின்னிரவில் அழுவது
அதைச் செய்யாதவர்கள் இருக்கலாம் செய்ய நினைக்காதவர்கள் இருக்கவே முடியாது.

அழுவதும் துக்கப்படுவதும் இங்குப் பாடுபொருள் அல்ல. மாறாக அதுவும் அன்றாடத்தின் ஒரு வேலை. ஏனெனில் கவிதை சொல்லிக்கு ஆயிரம் வேலைகள் இருக்கின்றன.

பைத்தியக்காரர்களும் வீடற்றவர்களும் இங்கே பரிணாமத்துக்கு உட்படாதவர்களாக வருகிறார்கள். இந்த உயிரிக்கு அவர்கள்மீது வாஞ்சை இல்லை, பரிவு கிடையாது. ஏக்கம் அறவே இல்லை (அது எத்தனை துப்புக்கெட்டதென்று)

மனிதனும் இயற்கையும் நேருக்கு நேராக எதிர்கொள்ளும் உலகம் அல்ல இந்த கவிதைசொல்லியினுடையது. மனிதன் அவன் உருவாக்கிய தொழில்நுட்ப உலகத்தின் கடைசிக்கு வந்துவிட்டான்,

இயற்கை சின்னஞ்சிறு புள்ளியாக கரைந்து பின் கண்ணுக்குப் புலனாகாத நுண் தகவல்களாக உருமாறி காலம் கடந்துவிட்டது. மெய்நிகர் உலகம் மெட்டாவர்ஸ்கள் இயற்கையின் இடத்தை பதிலீடு செய்துகொண்டிருக்கின்றன.

நிஜ உலகத்தில் இருக்கும் உங்களுக்கு மெட்டாவர்ஸ் உலகில் வேறொரு குணம், உருவம், கனவு, கற்பனைகள், ஆசைகள், குரோதம், காமம் என மெய்நிகரின் ‘அவதாருக்காக’ நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும் (அதுதான் வசதியும்கூட). உங்கள் அவதார் உங்களை இன்ஃப்ளூயன்ஸ் செய்யத் தொடங்கும்.

இவ்விதமான உலகத்திலிருந்து இக்கவிதைகளை வாசிக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அது இன்னொருவிதமான வாசிப்பை அளிக்கும்.

இன்னொரு கவிதை இந்த மனிதன் இயற்கை என்கிற துவந்தத்தை உதறிவிடுவதைக்  காணலாம்.

நாம் மனிதர்களாக இருந்தாலும்
மனிதர்களில்லை
நாம் தவளைகள்
ஒரு மந்திரத் தொடுகை நடந்தால்
இதோ இளவரசர்களாகிவிடுவோம்
சொகுசாகக் கனவு காண்கிறோம்
ஒரு பெரிய குட்டையை
நம்முடைய பாசிலோகத்தை
பூச்சிகள் புழுக்கள்
ஏழு சந்ததி தலைப்பிரட்டைகள்
பரவசத்தோடு கத்தும்போது
ஒரு நகரும் வாய்
நம்மை விழுங்குகிறது
நம் பிதுங்கிய முழி  முழித்துப் பிதுங்குகிறது.

Update and Restart, Exhast, wired, Hang, Hangover, virtual world இந்தச் சொற்களெல்லாம் இப்போது சொல்லாடல்களாக நம்முடைய உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன இவை நமது மொழிக் கிடங்கிற்கு (Langue) போய்விட்டன..

நாம் அனைவரும் ஒவ்வொரு முறையும் ‘அப்டேட் ரீஸ்டார்ட்’ செய்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. மிகப்பெரும் துக்கமோ, ஏமாற்றமோ, இழப்போ ஒரு பெரு மூச்சில் வெளியேறுவதற்கு, கவனிக்கவேண்டும் பெருமூச்சிற்கு நிகரான இன்னொரு செயல் இக்காலக்கட்டம் நமக்கு அளித்த இச்சொற்கள்.

இவை வெறும் சொற்களாக இல்லாமல் உணர்வாக, கதையாக மாற்றம் பெறும் கவிதை ஒன்று.

யார் யாரோ வருகிற இரவு கனவில்

ஒருமுறை தபால்காரர் வந்தார்
தாத்தாவின் நண்பர் என்று சொல்லிக்கொண்டு
ஒருமுறை முகம் தெரியாத மொட்டைத் தாத்தா வந்தார்
காப்பி ஷாப்பில் கல்லாவில் இருப்பவர்
பிள்ளையார் கோவிலில் செருப்புகளைப் பார்த்துக்கொள்பவர்
போத்தீஸில் திடகாத்திர புஜ அழகைக் காட்டும்
Mannequin கூட வந்திருக்கிறான்
நேற்று காதலனின் மனைவி வந்தாள்
இன்று அவளுக்குப் போட்டியாகக்
காதலனின் அம்மா வந்தாள்
வந்தவள் இரு கையால் எனக்குத் திருஷ்டி சுற்றிப் போட்டாள்
அவளைவிட என்னை ஆதரிக்கிறாள் போல
காதலனும் வருகிறான் எப்போதாவது
கலைந்த தலையோடு
சமயத்தில் அடையாளத்தை மாற்றிக்கொண்டு
என் இன்னொரு காதலனின் tuck in செய்யாத சட்டையோடு
மூன்றாமவனின் செல்லத் தொந்தியோடு
கலைந்த தலையைக் கோதியவுடன் சிரித்தான்
எப்படியிருக்கிறாய் என்றேன்
சந்தோஷமாக இருக்கிறேன் என்றான்
இந்தக் காலை
எனக்கும் அவனுக்கும் உவப்பான
ஒரு பொய்யோடு தொடங்கியிருக்கிறது.

சியர்ஸ்

பெருந்தேவியின் கவிதையம்சங்களில் பொதுவாக வெளிப்படும் ஒரு பாவனை இருக்கிறது. அது கொண்டாட்ட செயல். பாய்ஸ் திரைப்படத்தில் வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றுக்கும் (அபத்தம், வெற்றி, தோல்வி, சந்தோஷம் இத்தியாதி) ட்ரீட் கேட்கும் நண்பர்களின் ரசனைத்தனம் உண்டு.

அதாவது, நடந்ததைப் பற்றிய கவலையைத் துறந்துவிட்டு இந்த தருணத்தை அனுபவிக்கலாம் வா என்று. கிட்டத்தட்ட இன்றைய கேயாஸ் உலகத்தில் இந்த அனுபவம்தான் நமது இருப்பை கொஞ்சமாவது நோய் பீடிப்பதிலிருந்து ஆற்றுபடுத்தும் மருந்து. நிகழ்காலத்தில் உறைந்திருக்கும் அத்தகைய தருணத்தை அக்கணமே அனுபவிக்கும் கவிதை மனநிலை அலாதியானது.

பெருந்தேவி அவற்றை கடப்பதைக் கவனிக்கும்போது  சில இடங்களில் வெளிப்படையாகவும் சில இடங்களில் மௌனமாகவும் எல்லாவற்றுக்கும் சியர்ஸ் கேட்கிறார்.முதலில் சியர்ஸ் என்கிற தலைப்பிட்ட பெருந்தொற்று காலக் கவிதை இப்படி முடிகிறது.

இன்று 
சாவுக்கணக்கைக் கேள்விப்படும்போது
உயிரோடிருக்கும் கணக்கில்
நானிருப்பது உறுதியாகிறது
உயிரோடுக்கும் கணக்கில் நானிருப்பதை
உறுதி செய்துகொள்ளாமல்
நாளின் முதல் தேநீரை
என்னால் அருந்த முடியாது

பெருந்தொற்று நமக்கு அளித்த நிச்சயமின்மையை உறுதி செய்துகொள்ளும் மனநிலையைக் கொண்டாடுகிறதென்றால் இன்னொரு கவிதை அபத்தத்தை ரசிக்கும் ஒரு நாளும் முட்டாளும் என்கிற கவிதையிலிருந்து

சில வரிகள்.
முட்டாள்கள் காலைகளில் அழுகிறார்கள்
சில செம்பருத்திகள் தண்டுகளற்றுப்
பூக்க முயல்கின்றன
முட்டாள்கள் மாலைகளில் அழுகிறார்கள்
யார் யாரோ யார் யாருக்காகவோ
பொறுமையின்றிக் காத்திருக்கிறார்கள்
முட்டாள்கள் நள்ளிரவுகளில்
கண்களைத் துடைத்துக்கொள்கிறார்கள்
தண்டுகளின்றிப் பூக்கப் போகும்
செம்பருத்திகளாகத்
தங்களை நினைத்துக்கொள்கிறார்கள்

இந்தக் கவிதையில் வரிசைப்படுத்தப்படும் முட்டாள்களில் - இரவுக்குரியவர்கள் கண்களை துடைத்து கொள்கிறார்கள் என்று முடிக்கும் முன் வெளிப்படும் ஒருவித பரிகாசம் உணர்வும் சரி அடுத்தக் கவிதையில் வெளிப்படும் அங்கே பகல் இங்கே இரவை மாற்றிவிடப்போவதில்லை என்றும் முடிகிறபோது எதுவும் எதுவுமே என்னும் தனிமையின் ஓசையும் சியர்ஸை மௌனமாக உயர்த்திப் பிடிக்கின்றன.

இன்னொரு கவிதை இங்கே இரவாகும்போது அங்கே பகலாகிறது என்கிற கவிதை.

குளியல் தொட்டியிலிருந்து
எழுந்து நின்ற அவள்
தன்னைப் பார்த்துக்கொண்டாள்
சில புதிய மச்சங்கள் சில பெரிய சிவப்புப் புள்ளிகள்
உடல் மாறிவிடவில்லை
வயது எங்கோ தூரத்தில்தான் குலைகிறது - கொன்றைகள் வாடிவிடவில்லை
உடையணியும் முன்
தன் இலையை இடப்பக்கம் சாய்த்து
ஒரு செல்ஃபி எடுத்தாள்
வேறொரு கண்டத்தில்
ஒரு கடலில் நத்தைகள்
மெதுவாகக் கடலேறின
ஒரு மல்லிகைப்பந்துக்கும்
இன்னொன்றுக்குமாக
அவள் கை அலைந்தது
குளியலறைக் கண்ணாடியில் வழக்கம்போல
தனியாகச்
சிதையில் இறங்கினாள்
அங்கே பகல் இங்கே இரவை/ மாறிவிடப்போவதில்லை எதுவும்
எதுவும்

எதுவும் எதுவும் என்கிற சொற்கள் மௌனமாக சியர்ஸ் என்பதை உயர்த்திப் பிடிக்கும் உணர்வுகளை அளிக்கின்றன. பிரிவு பிரிவாகவும் துக்கம் துக்கமாகவும் ஏமாற்றம் ஏமாற்றமாக பெருந்தேவியின் கவிதைகளில் வருவதில்லை.

அப்படியான சொற்கள் அர்த்தமிழக்கின்றன, பதிலாக அவை கொண்டாட்டமாக மாறுகிறது. ஆனால் இதுமட்டுமே இக்கவிதை சொல்லியைப் பரிணாமம் அடைந்த உயிரி என முடிவுக்கு வந்துவிட அனுமதிப்பதில்லை. மாறாக இக்கவிதைசொல்லி கொண்டிருக்கும் மற்றவர்களுடனான துவந்தத்தையும் பார்க்கலாம்

இரு தரப்பினர்

இக்கவிதை சொல்லிக்கு இரண்டே தரப்பினர்களுடன்தான் துவந்தம்.

1. முதல் தரப்பினர் தன்னைப்போன்று பரிணாமம் அடைந்த சக புதிய யுக உயிரிகள். அவர்களுடன் இவர் நட்புப் பாராட்டுகிறார், ஆதுரமாக அரவணைக்கிறார், காதல் வயப்படுகிறார், பரிவு காட்டுகிறார். “நீங்கள் இந்த யுகத்திற்கு வந்துவிட்டீர்கள் நன்றி. இங்கு சில நிபந்தனைகள் உண்டு. நாம் நிபந்தனைகளோடு வாழ்வைத் தொடங்குவோம். தகுதிகளை உறுதி செய்வோம். கனவுகள் இருக்கின்றன. அக்கனவுகளை இடம் பெயர்த்துவோம்.”

2. இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (அது அவர்களது தரப்பு). “நீங்கள் ஏன் இன்னும் மாறவில்லை. பரிணாமத்தின் காலம் முடிந்துகொண்டிருக்கிறது. முடிந்துவிட்டால் பின் உங்களுக்கு இடம் மியூசியம்தான். அங்கும் ஒன்றும் சிறப்பான வாழ்க்கை  அமைந்துவிடாது. அதில் தொல்பொருளாகிவிடுவீர்கள்” என்று அவர்களை எச்சரிக்கிறார், பகடி செய்கிறார்.

முதல் தரப்பினர்

முதல் தரப்பினரை அடையாளப்படுத்தும் சில கவிதைகளிலிருந்து ஒரு சில வரிகள்

ஒரு மல்லிகைப் பந்துக்கும்
இன்னொன்றுக்குமாக
அவள் கை அலைந்தது
குளியலறைக் கண்ணாடியில்
வழக்கம் போல்
தனியாகச்
சிதையில் இறங்கினாள்
அங்கே பகல் இங்கே இரவை
மாற்றவிடப்போவதில்லை
எதுவும்
எதுவுமே

இதே போன்று இறந்தவனின் நிழலோடு தட்டாமாலை ஆடும்போது கவிதைத் தொகுப்பில் கலவிக்குத் தயாராகும் கவிதையில் எல்லா உறுப்புகளும் தனித்தனியாகக் கழட்டப்பட்டு கலவிக்குத் தயாராதல் நிலையைச் சொல்லும் கவிதை இருக்கிறது. இந்தக் கவிதை உருவாக்கும் சித்திரமே அபாரமானது.

இங்குக் கவனிக்க வேண்டியது இரு மனங்களும் தனித்தனியாகத்தான் இருக்கின்றன. அதாவது, கலவிக்கு மனம் பெரிதாகத் தேவைப்படுவதில்லை. இதுமட்டுமின்றி இவ்வாறு முதல் தரப்பினாராக வகைப்படுத்த சில கவிதைகளும் இருக்கின்றன. ( இன்னும் தொள்ளாயிரம் உண்டு, முட்டைக்கோஸாக )

இரண்டாம் தரப்பினர்

இரண்டாம் தரப்பினர் முன்னமே கூறியதுபோல இன்னும் பரிணாமம் அடையாத உயிரிகள். அதாவது தங்களை Anti-evolutionist ஆக காட்டிக்கொள்பவர்கள் (எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் வெளியே போ, ஒன்றைப் போன்றவர்கள், விஷேசச் சலுகை... போன்ற கவிதைகள்)

சில கவிதைகளிலிருந்து வரிகள் இங்கே...

உன் உதடுகள் கோணுகின்றன
உன்னை நினைத்துக்கொள்ள
யாராவது இருக்கிறார்களா
உன்னில் நீயென எதுவும் மிச்சமில்லை
ஒரு பெருமூச்சு எழும்புகிறது

உன்னை நினைத்துக்கொள்ள யாராவது இருக்கிறார்களா என்கிற இக்கவிதை கடைசியில் இவ்வாறு முடிகிறது

....
உனக்குத் தெரியும்
சில மணி நேரங்களுக்குப் பின்னர்
ஒரு பொய்யான காலை
கிறுக்குப் பிடிப்பதிலிருந்து
உன்னைக் காப்பாற்றிவிடும்

பிரவுனிய இயக்கம்

பொதுவாக கவிதையின் பண்பு என்பது அது தன்னை யாருடனும் ஒட்டிக்கொள்ளாது. அது தனது ஒத்தப்பிரிவு எனச் சுட்டும் பிறிதொன்றிலிருந்தும் தன்னை விலக்கிக்கொள்ளும். காரணம் கவிதை இயங்கிக்கொண்டிருக்கும் காலத்தை நம்மால் துல்லியமாகப் பிடித்துவிட முடியாது. அதில் காலத்தொடர்ச்சி இருக்காது.

அதாவது, கால வரிசைப் பற்றிய பிரக்ஞைக் கிடையாது. ஓர் இயக்கம் காலவரிசையில் இருக்கும்போது மட்டுமே அது மற்றதுடன் இயங்கியல் தன்மை கொண்டிருக்கும். கவிதை செயல்படும் நிகழ்காலம். பிரவுனிய இயக்கம் மாதிரி.

அனைத்து திசைகளிலும் சீர்மையற்ற இயக்கத்தை அது பதிவு செய்ய நினைக்கும் நிகழ்காலத்துடன் தொடர்புப்படுத்துகிறது. அதனாலயே கவிதையை இங்கு பிரவுனிய இயக்கம் என உதாரணத்துடன் சுட்டுகிறேன்.

எப்படியென்றால், கவிதை தொழிற்பட்ட உடனே, நீரில் மகரந்தத் தூள்கள் கொட்டியதும் அங்குமிங்கும் அவை நீர் மூலக்கூறுகளால் மோதப்பட்டு அலைவதைப்போல கவிதை அந்த நிகழ்காலத்தில் வெவ்வேறு திசைகளில் மோதிப் படிமங்களையும் பெயர்களையும் பொருட்களையும் சில சமயம் வேறொரு காலத்தையுமே (இங்கு அதுவும் இன்னொரு வஸ்துவாக) தனது இயக்கத்தில் இணைத்துக்கொள்கிறது. பிரவுனியன் இயக்கத்தில் மகரந்தத் தூள் நீர் மூலக்கூறுகளை உடைப்பதுமில்லை நீர் மூலக்கூறுகள் மகரந்தத் தூளைச் சிதைப்பதுமில்லை. கவிதை அவ்வாறுதான் நிகழ்காலத்துக்குள் செயல்படுகிறது.

இன்றைய உலகத்தின் நிகழ்கால மனநிலையையும் அதேநேரம் எதிர்காலத்தின் நிழலையும் துல்லியமாக பிரதிபலிக்கும் சமகாலத்தில் அரிதினும் அரிதான கவிதையில் மாறிய போக்கிற்கு பெருந்தேவியின் கவிதைகள் முன்னோடி என நிச்சயமாகச் சொல்ல முடியும்.

(இவை பெருந்தேவியின் பெண் மனசு ஆழம், விளையாடவந்த எந்திர பூதம், தட்டாமாலை ஆடும்போது, உன் சின்ன உலகத்தைத் தாறுமாறாகத்தான் புணர்ந்திருக்கிறாய் ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புகளை எடுத்துக்கொண்டு வாசிக்கப்பட்டு எழுதப்பட்டது)

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer