‘புழுத்த நாய் குறுக்கே போகாது’

பெருமாள்முருகன்

பகிரு

கு.அழகிரிசாமி எழுதியுள்ள பல சிறுகதைகள் தனித்தன்மையான இயல்புடைய பாத்திரங்களை மையப்படுத்தியவை. அவற்றுள் ஒன்று ‘தியாகம்.’ இக்கதை 1965ஆம் ஆண்டு ‘சுதேசமித்திரன் தீபாவளி மலரில்’ வெளியானது. ‘கோவில்பட்டி மளிகைக் கடை கதிரேசன் செட்டியார்’ என்னும் பாத்திரத்தைப் பற்றிய கதை இது. அவருடைய கடையில் சில பையன்கள் வேலை செய்கிறார்கள். ‘பயல்கள்’ என்பது செட்டியாரின் மொழி. அப்பையன்களின் வயது பற்றிக் கதையில் நேரடிக் குறிப்பில்லை. ‘பையன்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொள்ளும் போது’ (ப.869) என்று ஓரிடத்தில் எழுதுகிறார். அதன் மூலம் அவர்கள் அனேகமாகப் பதினைந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்றே தோன்றுகிறது. அவர்களை எந்நேரமும் திட்டிக் கொண்டேயிருப்பது தான் செட்டியாரின் இயல்பு. அப்படி அவர் திட்டுவதை ‘வசை(ப்) புராணம்’ என்கிறார் கு.அழகிரிசாமி.

‘இனி வசை புராணத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்! எதைச் சாக்காக வைத்துக்கொண்டு ஆரம்பிக்கலாம் என்று ஒரு கணம் யோசித்தார். ஒரே ஒரு கணம் தான். சாக்குக் கிடைத்துவிட்டது’ (ப.866)

‘...அவருடைய வசை புராணத்தை ஏதோ வழக்கொழிந்த ஓர் அந்நிய பாஷையில் இயற்றப்பட்ட காவியமாகக் கருதி ஒதுக்கித் தள்ளிவிட்டார்கள்’ (ப.869)

‘செட்டியார் தம் ஓய்வொழிச்சலற்ற வசை புராணத்தை நிறுத்தி “அண்ணாச்சி, வாங்க” என்று புன்னகையோடு அவரை வரவேற்றுவிட்டு, “மதுரைக்கு நேத்துத்தானே போனீங்க” என்று ஆச்சரியத்தோடு கேட்டார்’ (ப.870)

என மூன்று இடங்களில் ‘வசைப் புராணம்’ வருகிறது. தொடர்ந்து திட்டுவதை ‘அர்ச்சனை’ என்று சொல்லும் மக்கள் வழக்கு இன்றுமுள்ளது. அதையும் கு.அழகிரிசாமி பயன்படுத்தியுள்ளார். செட்டியாரின் நண்பர் சோமசுந்தரம் பிள்ளை என்பவர் வந்ததும் திட்டுவதற்குக் கொஞ்சம் ஓய்வு கொடுப்பார். அதைக் கீழ் வருமாறு சொல்கிறார்:

‘...அவரோடு பேசிக் கொண்டிருக்கும்போது செட்டியார் சஹஸ்ரநாம அர்ச்சனையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிடுவார் என்பது அவர்களுக்குத் தெரியும்’ (ப.868)

‘ஷண்முகம் பிள்ளை அதைப் பார்த்து, “அப்படின்னா, நித்தியப்படி அர்ச்சனை நடக்கும்ணுதான் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார் (ப.873).

அவர் பயன்படுத்துபவற்றை ‘இழிசொற்கள்’  (ப.869) என்று ஓரிடத்தில் சொல்கிறார். சரி, அப்படி அவர் கூறும் வசைச்சொற்கள் எவை? கதை நெடுகிலும் வரும் வசைச்சொற்கள்: தடிப்பயல்கள், பரதேசிகள், எருமை மாட்டுப் பயல்கள், பிச்சைக்காரப் பயல், தரித்திரம் பிடிச்ச பயல்கள், நாய், கஞ்சிக்கில்லாமல் செத்த பயல்கள், கழுதை, அறிவு கெட்ட பயல்கள், முடிச்சுமாறிப் பயல், பேய், தீவட்டித் தடியன் ஆகியவை.

செட்டியார் பயன்படுத்துபவற்றில் வசைத் தொடர்கள் பலவற்றையும் கு.அழகிரிசாமி பதிவு செய்துள்ளார். ‘அடி செருப்பாலே’, ‘ஜோட்டாலே அடிச்சு வெளியே பத்தும் இவனை’, ‘செருப்படி வாங்கிக்கிட்டுத்தான் இந்தக் கடையை விட்டுப் போகப்போறே’, ‘ஒங்களைக் கட்டிக்கிட்டு மாரடிக்கறதுக்கு ஒரு குத்துக்கல்லைக் கட்டிக்கிட்டு மாரடிக்கலாம்... தொலஞ்சி போங்கடா’, ‘வாயிலே என்ன கொளக்கட்டையா இருக்கு?’ முதலிய பல தொடர்கள் கதையில் இருக்கின்றன.

வசையின் தொனியை எழுத்தில் கொண்டு வருவது அத்தனை எளிதல்ல. இக்கதையில் கு.அழகிரிசாமி அதை முயன்றிருக்கிறார். வசைச்சொற்கள், வசைத் தொடர்கள், வசைத்தொனி எல்லாம் இணைந்த ஒரு பத்தி இது:

“அடி செருப்பாலே! நாயே! வாயைத் தொறக்கறியா நீ? (கணக்குப் பிள்ளையைப் பார்த்து) பார்த்தீரா சோமசுந்தரம் பிள்ளை? பயல் எதுத்தில்ல வெவகாரம் பண்றான்? ஜோட்டாலே அடிச்சு வெளியே பத்தும் இவனை! நமக்குச் சரிப்படாது. கஞ்சிக்கில்லாம செத்த பயல்களை எரக்கப்பட்டுக் கடையிலே வச்சது என் முட்டாள்தனம், சோமசுந்தரம் பிள்ளை...” (ப.866).

திட்டுதலில் இருவகை உண்டு. பொதுவிடத்தில் புழங்கும் சொற்களைக் கொண்டு திட்டுதல் ஒரு வகை. இதைக் கையாளாதோர் இல்லை. பொதுச் சொற்களை அதாவது பொதுவிடத்தில் தயக்கமின்றி அனைவரும் பேசும் சொற்களைக் கொண்டு திட்டுதல் முதல் வகை. அறிவு கெட்ட பயல், தீவட்டித் தடியன் முதலிய வசைகளில் வரும் சொற்கள் எல்லாம் பொதுவிடப் புழக்கத்தில் உள்ளவை. ‘அறிவு’ என்பதைத் தனியாகவோ பிற சொற்களுடனோ பயன்படுத்தும்போது அது வசையாவதில்லை. ‘அனைவருக்கும் அறிவு வேண்டும்’ என்கிறோம். ‘கெட்ட சகவாசம் கூடாது’ என்கிறோம். ‘பயல்கள் எங்கே விளையாடுகிறார்கள்?’ என்கிறோம். இவற்றில் அறிவு, கெட்ட, பயல் ஆகிய சொற்கள் வசையல்ல. இவை ‘அவைக் கிளவிகள்.’ அதாவது பொதுவிடத்தில் விலக்கப்படாதவை. இம்மூன்றும் இணைந்து ‘அறிவு கெட்ட பயல்’ என்று ஒருசொல் நீர்மைத்து ஆகும் போது அது வசைச்சொல் தன்மை பெறுகிறது. இத்தகையவற்றை ‘நல்ல சொற்களைக்’ கொண்டு திட்டும் ‘நாகரிக வசை’ என்று சொல்லலாம். இவையும் கேட்பவர்களைப் பாதிக்கும் என்றாலும் பொதுவிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை.

விலக்கப்பட்ட சொற்களை அதாவது பொதுவிடத்தில் பயன்படுத்தக் கூடாது என்று விலக்கி வைக்கப்பட்டுள்ள சொற்களைக் கொண்டு திட்டுதல் இரண்டாம் வகை. இவற்றைத் தமிழ் இலக்கணம் ‘அவையல் கிளவி’ என்று கூறும்.

பலர் கூடியுள்ள அவையில், பொதுவிடத்தில் சொல்லத்தகாத சொற்கள். ‘அவையல் கிளவி மறைத் தனர் கிளத்தல்’ என்பது தொல்காப்பிய நூற்பா. பொதுவிடத்தில் சொல்லத்தகாத சொற்களை விட்டுவிட்டுப் பேசவேண்டும் என்பது பொருள். சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் அச்சொல்லை விட்டுவிட்டு வேறு சொற்களைப் பயன்படுத்திச் சொல்ல வேண்டும்.

பிற்கால இலக்கண நூலாகிய நன்னூல் இதை ‘இடக்கர்’ என்று சொல்லும். இடக்கர் சொற்களை மறைத்து அதற்குப் பதிலாகப் பயன்படுத்தும் சொற்களுக்கு ‘இடக்கர் அடக்கல்’ என்று பெயர். பீ என்பதை மக்கள் வழக்கில் ‘ஆய்’ என்கிறோம். பீ என்பது இடக்கர்; ஆய் என்பது இடக்கரடக்கல்.

இந்த அவையல் கிளவி அல்லது இடக்கர் சொற்களையே ‘கெட்ட வார்த்தைகள்’ என்று சொல்கிறோம். பொதுவாகப் பாலுறுப்புகள், பாலுறவு தொடர்பான சொற்கள் இவ்வகையில் அடங்கும். காரணம் அவற்றைப் பொதுவிடத்தில் பயன்படுத்துவதில்லை. பயன்படுத்துபவரை இழிவாகக் கருதுகிறோம். பாலுறுப்புச் சொற்களைத் தனியாகப் பயன்படுத்தினாலே அவை வசையாகின்றன. ‘போடா சுண்ணி’ என்றால் அது வசையாகிறது. முறையற்ற பாலுறவு என்று கருதப்படுபவற்றைக் குறிக்கும் வசைச்சொற்கள் பல உள்ளன. ‘தாயோலி’ உள்ளிட்ட சொற்கள் அப்படியானவை.

கு.அழகிரிசாமியின் ‘கதிரேசன் செட்டியார்’ முதல் வகையான ‘நாகரிக வசை’ பாடுபவர். ‘நல்ல சொற்களைக்’ கொண்டு அவர் திட்டினாலும் கேட்பவருக்குக் கஷ்டத்தைக் கொடுக்கத்தான் செய்கிறது. கடையில் வேலைக்குச் சேர்ந்து பதினைந்து நாட்கள் ஆன புதுப்பையன் ஒருவனால் அந்தச் சொற்களைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் பதிலுக்குப் பதில் பேசுகிறான். அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. உள்ளூரக் குமுறுகிறான். சொல்லாமல் கொள்ளாமல் கடையைவிட்டு ஓடி விடலாம் என்று தோன்றுகிறது. பழைய பையன்களுக்குப் பிரச்சினையில்லை. அவர் திட்டுவதைக் கேட்டு அவர்களுக்குச் சிரிப்புத்தான் வருகிறது. காரணம், திட்டுவதைக் கேட்டுக் கேட்டுப் பழகிப் போய்விட்டது. அவர் இயல்பு இதுதான் என்பது அவர்களுக்குப் பிடிபட்டு விட்டது. அவர் திட்டும் சொற்களுக்கெல்லாம் நேரடி அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது அவர்களுக்குப் புரிந்திருக்கிறது. ‘செட்டியாரின் வார்த்தைகளுக்குப் பொருள் கிடையாது என்று மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள்’ (ப.869) என்கிறார் கு.அழகிரிசாமி.

இடைவிடாமல் வசை பாடினாலும் கதிரேசன் செட்டியார் நல்ல குணம் உடையவர். பிற கடைகளில் கொடுப்பதைவிடச் செட்டியார் அதிகச் சம்பளம் கொடுப்பார். தீபாவளிக்குப் புதுத்துணிகள் எடுத்துத் தருவதோடு கையில் ரொக்கமும் தருவார். வீட்டு வேலை செய்யச் சொல்வதில்லை. வீட்டுக்குப் போனால் ‘ஐயா, ராசா’ என்று அன்பாகப் பேசுவார். சாப்பாடும் போடுவார். என்ன புகார் வந்தாலும் யாரையும் தாமாக வேலையை விட்டு அனுப்பமாட்டார். பையன்கள் தனிக்கடை வைத்தால் உதவி செய்வார். அவர்கள் வாலிபர்களாகிக் கல்யாணம் செய்து கொண்டால் கணிசமான தொகை கொடுப்பார். இப்படியெல்லாம் உயர்ந்த குணங்கள் கொண்ட செட்டியார் ஏன் பையன்களை இடைவிடாமல் திட்டுகிறார்? இந்தக் கேள்வியை அவரது நண்பர் மூலமாகக் கேட்டுப் பதில் பெற்று நமக்கும் தெரிவிக்கிறார் கு.அழகிரிசாமி.

கதிரேசன் செட்டியாரும் தம் சிறுவயதில் மளிகைக் கடை ஒன்றில் வேலை பார்த்தவர்தான். அவருடைய முதலாளி பெரும் கொடுமைக்காரர். செட்டியாரின் தாய், தகப்பன், பாட்டன் என்று உறவுகள் எல்லோரையும் கேவலமாகப் பேசுவார். முதலாளி பேசும் வசைகளைக் கேட்டால் ‘புளுத்த நாய் குறுக்கே போகாது’ என்கிறார் செட்டியார். ‘புழுத்த’ என்பது பேச்சு வழக்கில் ‘புளுத்த’ என்றாகியுள்ளது. உடலெல்லாம் புண்பட்டு புழு வைத்த நாய்கூட அவர் பேச்சைக் கேட்டால் முன் செல்லாமல் ஓடி ஒளிந்துகொள்ளும் என்று அர்த்தம். அப்படியானால் செட்டியாரின் முதலாளி ‘அவையல் கிளவி’யைப் பயன்படுத்தித் திட்டும் இரண்டாம் வகையினர். ‘அவர் திட்டுவதில் பத்திலே ஒரு பங்குகூட நான் பேசியிருக்க மாட்டேன்’ என்றும் செட்டியார் சொல்கிறார்.

இடைவிடாமல் திட்டும் செட்டியாரின் இயல்பு அவருடைய முதலாளியிடமிருந்து சுவீகரித்துக்கொண்டது எனத் தெரிகிறது. முதலாளி நிலையிலிருந்து ஒருவர் திட்டும் போது கீழிருப்பவருக்கு மனக்கஷ்டம் ஏற்படுகிறது. அந்தக் கீழிருப்பவர் முதலாளி நிலைக்கு உயரும்போது ‘திட்டக்கூடாது’ என்று கருதுவதில்லை. ‘திட்டினால்தான் தம்மை முதலாளியாக ஏற்பர்’ என்று கருதியோ முதலாளி நிலை என்பது திட்டுதலை உள்ளடக்கியது என்று எண்ணியோ தாமும் தம் முதலாளியைப் போலவே ஆகிவிடுகின்றனர். இதை எல்லா நிலைகளிலும் காணலாம். மாணவர்களிடம் இருக்கும் ‘பகடி வதை’ தொடர்வதற்குக் காரணம் வதையை அனுபவித்தவரே அடுத்த ஆண்டில் வதைப்பவராக மாறுவதுதான்.

செட்டியார் தம் முதலாளியின் பாணியைப் பின்பற்றித் திட்டுவதை இயல்பாக்கிக் கொண்டார். தம் முதலாளி அப்படியெல்லாம் திட்டியும் அடித்தும் ‘வசக்கி’த் தமக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்ததால்தான் தாம் இப்போது முதலாளியாக இருக்க முடிகிறது என்றும் கருதுகிறார். ‘அப்படியெல்லாம் வசக்கிவிடப் போய்த்தான் நானும் கடைண்ணு வச்சு, யாவாரம் பண்ணி, இவ்வளவு காலமும் ஒருத்தன் பார்த்து ஒரு கொறை சொல்றதுக்கு இடமில்லாமே நிர்வாகம் பண்ணிக்கிட்டு வர்றேன்’ (ப.872) என்பது செட்டியார் கூற்று. திட்டினால்தான் ‘பயல்கள் விருத்திக்கு வருவார்கள்’ என்பது செட்டியாரின் நம்பிக்கை. ஆகவே அவ்வியல்பை மாற்றிக் கொள்ள இயலாத நிலையில் செட்டியார் இருக்கிறார்.

அக்கூற்றில் உடன்பாடில்லாதவர் நண்பர் ஷண்முகம் பிள்ளை. பையன்களிடம் ‘கொஞ்சம் அன்பா ஆதரவா இருக்கலாமில்லை?’ என்று கேட்கிறார். ‘ஒங்க மேலே தப்பில்லே; ஒங்க மொதலாளியைச் சொல்லணும். ஒங்களுக்கு நல்லாத்தான் பாடம் சொல்லிக் குடுத்திருக்காரு’ என்று சொல்கிறார். ‘ஒங்களைப் பாக்க எனக்கு உண்மையிலேயே பாவமா இருக்கு. இப்படிக் கத்தினா மொதல்லே ஒங்க ஒடம்புக்கு ஆகுமா’ என்றும் கேட்கிறார். ஆனால் செட்டியார் கேட்பதாக இல்லை. கத்திக் கத்தித் தம் தொண்டை கட்டிக் கொண்டாலும் திட்டுவதைவிட அவர் தயாராக இல்லை. திட்டுவது தேவை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளார். அப்படித் தொண்டை வற்ற தாம் கத்தித் திட்டுவது ‘பயக நல்லபடியாத் தலையடுக்கணும்’ என்பதற்காகத் தாம் செய்யும் தியாகம் என்று அவர் கருதுகிறார்.

ஷண்முகம் பிள்ளை சொல்வது நியாயமானதாகவே தோன்றுகிறது என்றாலும் அதை ஒப்புக்கொள்வது சுயநலம் என்று செட்டியார் கருதினார். ‘பொதுநலம்’ என்று கருதித் தியாக உணர்ச்சியோடு ஒரு செயலைச் செய்பவரை மாற்ற முடியுமா?

இக்கதையில் கதிரேசன் செட்டியார், கடைப்பையன்கள், கணக்குப்பிள்ளை வேலை செய்யும் சோமசுந்தரம் பிள்ளை, செட்டியாரின் நண்பர் ஷண்முகம் பிள்ளை ஆகியோர் பாத்திரங்கள். செட்டியார் கடையில் நடக்கும் காட்சிகளும் கதையில் முதல் பகுதி. நண்பரோடு பேசியபடி நடந்து செல்லும் பாதைக் காட்சி இரண்டாம் பகுதி. செட்டியாரின் இயல்பைக் கதையின் முதல் பகுதி ஆழக்காட்டுகிறது. இரண்டாம் பகுதி அவ்வியல்பைப் பற்றிய விவாதமாக அமைகிறது. இதில் ஒவ்வொரு பாத்திரத்தையும் மிகச் சில சொற்களில் செம்மையாகக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி. கடைக்குப் புதிய பையன் ஒருவன் வேலைக்கு வந்திருக்கிறான். அவனால் செட்டியாரின் இயல்பை ஏற்றுக்கொள்ள இயலவில்லை. அறியாமல் அவன் கேட்கும் கேள்விகள், கொள்ளும் கோபம், அவன் மனநிலை, நிர்பந்தம் ஆகியவற்றை வெளிப்படுத்த பத்துத் தொடர்கள் போதுமானவையாக இருக்கின்றன.

செட்டியாரையே மையமாகக் கொண்ட இக்கதையை எழுதியிருந்தாலும் அவர் பக்கம் கு.அழகிரிசாமி இல்லை. ஷண்முகம் பிள்ளையின் பக்கமே கு.அழகிரிசாமி நிற்கிறார். ஷண்முகம் பிள்ளையின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை. அவர் மிகவும் மென்மையானவராகத் தோன்றுகிறார். தம் கருத்தைக்கூடச் செட்டியாருக்கு வலிக்காமல் முன்வைக்க விரும்புகிறார். தம் கருத்துக்கு ஏற்பில்லாத போதும் அதை வலியுறுத்த அவர் முயலவில்லை. தம் சிரிப்பால் எல்லாவற்றையும் கடக்க முயல்பவர் அவர். ‘ஷண்முகம் பிள்ளை சிரித்தார்’ என்றும் ‘ஷண்முகம் பிள்ளை செட்டியாரின் வார்த்தைகளைக் கேட்டுச் சிரிக்க நினைத்தார். ஆனால் அப்புறம் சிரித்துக் கொள்ளலாம் என்று அதை அடக்கிக் கொண்டு...’ என்றும் ‘ஷண்முகம் பிள்ளை சிரித்துக்கொண்டே சொன்ன புத்திமதி’ என்றும் ‘என்று சொல்லிவிட்டு உரக்கச் சிரித்தார்’ என்றும் தொடர்ந்து சொல்லி ஷண்முகம் பிள்ளையின் இயல்பைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.

தம் கதைகளில் முரண்களைக் கையாளும் கு.அழகிரி சாமி அவற்றை ஒருபோதும் மோத விடுவதில்லை. மோதிக் கொள்வதால் நன்மை விளைவதில்லை. மாறாக, உறவில் சிடுக்குகள் உருவாகின்றன. ‘முரண்களின் இயைபு’தான் வாழ்க்கை என்பதையே தம் கதைகளில் முன்வைப்பவர் கு.அழகிரிசாமி. தமக்கு ஏற்பில்லாத ஒன்றை மையப்படுத்திய இக்கதையிலும் அப்படித்தான் அவர் செயல்பட்டுள்ளார். இது சிறந்த கதையாக உருப்பெற கு.அழகிரிசாமியின் இப்பார்வையே முதன்மைக் காரணம் என்று சொல்லலாம்.

---

கு.அழகிரிசாமியின் ஊர்க்காரரும் நெருங்கிய நண்பருமாகிய கி.ராஜநாராயணன் எழுதிய முக்கியமான கதை ‘நிலை நிறுத்தல்’ (கணையாழி, அக்டோபர், 1981). அது கிராமத்துக் கதை. மிகுதியான நிலம் வைத்திருக்கும் ‘பெரிய முதலாளி’, கிட்டத்தட்டக் கு.அழகிரிசாமியுடைய செட்டியாரின் மறுவார்ப்புத் தான். அல்லது செட்டியாரின் முதலாளியுடைய மறு வார்ப்பு என்றும் சொல்லலாம். ‘தியாகம்’ கதை நடக்கும் களம் கோவில்பட்டி நகரம். கி.ரா.வின் கதைக் களம் கிராமம். நிலக்கிழாருக்குப் பெயரில்லை; ‘பெரிய முதலாளி’ என்றே வருகிறது. அவரை அறிமுகப்படுத்திக் கதை தொடங்குகிறது.

‘மூதேய் மூதேய், வெறுவாக்கலங் கெட்ட மூதேய்...’ எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய முதலாளிக்கேன்னு உள்ள கெட்ட வார்த்தை வசவுகள் இருக்கு. புழுத்த நாய் குறுக்கே போகாது அதைக் கேட்டால்’ (கொத்தைப் பருத்தி, ப.104) என்று அவ்வறிமுகம் சொல்கிறது. ‘புழுத்த நாய் குறுக்கே போகாது’ என்னும் தொடர் இருகதைகளிலும் பயன்பட்டுள்ளது. செட்டியார் அவைக்கிளவி வசவாளர்; செட்டியாரின் முதலாளி அவையல் கிளவி வசவாளர். கி.ரா.வின் ‘பெரிய முதலாளி’யும் அவையல் கிளவி வசவாளர்தான். அதனால்தான் செட்டியாரின் முதலாளியின் மறுவார்ப்பாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

வசைபாடும் செட்டியாரை மையமாக்கிக் கு.அழகிரிசாமி கதை எழுதியது போலப் பெரிய முதலாளியை மையப்படுத்திக் கி.ராஜநாராயணன் எழுதவில்லை. செட்டியாரின் மளிகைக் கடையில் வேலை செய்யும் ‘பயல்களில்’ ஒருவனை எடுத்துக் கிராமத்துக் களத்தில் வைத்துக் கி.ரா. எழுதியுள்ளார். அதாவது கு.அழகிரிசாமியின் செட்டியாரிடம் வேலை செய்யும் ‘பயல்களில்’ ஒருவனை மையப்படுத்தி எழுதினால் எத்தகைய கதை கிடைக்குமோ அதுதான் ‘நிலைநிறுத்தல்.’ கு.அழகிரிசாமி காட்டும் பையன்களுக்குப் பெயரில்லை; அதாவது பெயரைச் சொல்லவில்லை. ‘ஒரு சிப்பந்தி’, ‘அந்தப் பையன்’, ‘கடைப் பையன்கள்’ என்பன போலத்தான் அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். கி.ரா. காட்டும் பையனுக்குப் பெயர் ‘மாசாணம்.’ மளிகைக்கடைப் பையன்களின் சாதி தெரியவில்லை. செட்டியார் சாதிக்காரர்கள் என்றே ஊகிக்கலாம்; பிள்ளை சாதியினரும் இருக்கலாம். மாசாணத்தின் சாதி பற்றியும் தெளிவான குறிப்பில்லை. அவர் பரம்பரையினர் ‘சாமி கொண்டாடிகள்’ என்பது தெரிகிறது.

பெரிய முதலாளியிடம் மாசாணம் வந்து சேரும் போது அவனுக்குப் பதின்மூன்று, பதினான்கு வயது தான். அவன் தோற்றம், படிமானம் எல்லாவற்றைப் பற்றியும் விவரணை உண்டு. அவனைத் தன் பண்ணையில் வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறார் பெரிய முதலாளி. வருசத்துக்கு ஒரு ஜோடி வேட்டி; சாப்பாடு போக மாதம் மூன்று ரூபாய் சம்பளம். பல வருடம் அவரிடமே வேலை செய்கிறான். பின்னர்ப் படிப்படியாக அவன் தன்னை எப்படி நிலைநிறுத்திக் கொள்கிறான் என்பதைக் கதை விவரிக்கிறது. அவன் குடும்பம் பரம்பரைச் சாமியாடிகள் என்னும் குறிப்புத்தான் கதையின் பின்பகுதியை நகர்த்துகிறது. பெரிய முதலாளியிடமிருந்து விலகி வெவ்வேறு பண்ணைகளில் வேலை செய்கிறான். பஜனைக் கோஷ்டியில் சேர்ந்து பாடவும் செய்கிறான். திருமணம் செய்து கொள்கிறான். அவன் மனைவி பெயரும் ‘மாசாணம்.’ கணவன் மனைவி இருவரும் ஒரே பெயரைக் கொண்டிருப்போர் நீவி விட்டால் கைகால் சுளுக்குக் குணமாகிவிடும் என்னும் நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது. அதனால் அவனுக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அவன் வீடு தேடி எண்ணெய்க் கிண்ணத்துடன் ஆட்கள் வருகிறார்கள். அவன் கைராசி பரவுகிறது.

அதிகம் பேசாத, எதற்கும் எதிர்வினை புரியாத அவன் குணம் மனைவிக்குப் பிடிக்கவில்லை. ‘ஆடுண்ணா ஒரு சுறுகுப்பால் கொடுக்கணும். கிடாண்ணா ஒரு முட்டாவது முட்டணும்’ என்று சாடை பேசுகிறாள். ஆனாலும் அவன் இயல்பு மாறவில்லை. ‘சின்ன முதலாளி’க்கு உடம்பு சரியில்லை என்று விபூதி போடச் சொல்லி அவனைத் தேடி வருகிறார்கள். அவனும் சென்று திருநீறு போடுகிறான். சாமியாடியின் இயல்புகளோடு அவன் இருக்கும் கோலத்தின் முன்னால் தவிர்க்க இயலாமல் பெரிய முதலாளியும் குனிந்து திருநீறு வாங்குகிறார்.

இப்படிச் சில ஏற்புகள். ஒருவருசம் அவ்வூரில் மழையின்றிப் பஞ்சம் வருகிறது. உணவுக்கு வழியில்லை. அப்படிப் பசி மிகுந்த நாளொன்றில் பார்வதி அம்மன் கோயில் முன்னால் வந்து மாசாணம் உட்கார்ந்து கொண்டான். ‘மழை பெய்கிற வரை இங்கேயே அம்மனுக்கு முன்னால் உட்கார்ந்து வயணம் காக்கப் போவதாகவும் மழை பெய்யாமல் போனால் பட்டினி இருந்து இங்கேயே உயிரைவிடப் போவதாகவும்’ சொன்னான். ஊரே வியந்து பார்த்தது. வயணம் என்பது உண்ணாநோன்பு.

உட்கார்ந்த நிலையில் அப்படியே இருக்கிறான் மாசாணம். பால் கொடுத்தாலும் குடிக்கவில்லை. ஒரு சொட்டு நீர் கூட அவன் தொண்டையில் இறங்க வில்லை. மூன்றாம் நாள் மழை வந்துவிட்டது. அப் போதுதான் மாசாணம் கண்ணைத் திறந்து பார்த்தான். ‘ஈஸ்வரீ’ என்று சொல்லிக்கொண்டே ஆலங் கட்டி ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான். அவனைக் கைத்தாங்கலாக ஊரே அழைத்துக் கொண்டு அவன் வீடு நோக்கிச் செல்கிறது. அதில் பெரிய முதலாளியும் ஒருவர். வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டவர்கள் அவனுக்குப் பால் கொடுக்கிறார்கள். எப்போதும் அண்ணாந்து குடிக்கும் மாசாணம் இப்போது சப்பிக் குடிக்கிறான். ‘போதும்’ என்று சொல்கிறான். ‘இன்னும் கொஞ்சம்’ என்று பெரிய முதலாளி சொல்கிறார். உடனே எல்லோரும் ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்’ என்று வற்புறுத்துகிறார்கள். அத்தோடு கதை முடிகிறது.

‘புழுத்த நாய் குறுக்கே போகாத’ அளவு இடைவிடாமல் மாசாணத்தை வைதவர் பெரிய முதலாளி.

அவனை அடிக்கவும் செய்திருக்கிறார். அப்பேர்ப் பட்ட முதலாளி அவனிடம் குனிந்து திருநீறு வாங்கும் படியும் டம்ளர் பாலை வைத்துக்கொண்டு ‘இன்னும் கொஞ்சம்’ என்று கெஞ்சும்படியும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டான் மாசாணம். கு.அழகிரிசாமி காட்டிய பையன்களில் ஒருவனை எடுத்துக் கிராமக்களத்தில் வைத்து அவனுக்குப் பெயர் சூட்டி அவன் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பாங்கைக் கி.ரா. வின் கதை விவரிக்கிறது. இருவரின் கதைகளும் சிறந்தவையாகவே விளங்குகின்றன.

‘தியாகம்’ கதையில் கு.அழகிரிசாமி செட்டியாரைப் பின்தொடர்ந்து செல்வதால் வசைச்சொல் பதிவு மிகுதி; பெரிய முதலாளியில் தொடங்கினாலும் அவரை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு மாசாணத்தைக் கி.ரா. பின்தொடர்வதால் ‘நிலைநிறுத்தல்’ கதையில் வசைச்சொல் பதிவு மிகக் குறைவு. கி.ராஜநாராயணனும் இன்னும் கொஞ்சம் வசையைத் தாராளமாக விட்டிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

---

பயன்பட்ட நூல்கள்:

பழ.அதியமான் (ப.ஆ.), கு.அழகிரிசாமி சிறுகதைகள், 2011, நாகர்கோவில், காலச்சுவடு பதிப்பகம்.

கி.ராஜநாராயணன், கொத்தைப் பருத்தி, 1985, சிவகங்கை, அன்னம் (பி) லிட்., இரண்டாம் பதிப்பு.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer