பிரதியூடகவெளியில் படைப்பிலக்கியமும் கோட்பாடும்

பகுதி-1

அறிமுகம்

தமிழ் இலக்கியச் சூழலில் கோட்பாட்டுச் சிந்தனைக்கும், கோட்பாடுகளுக்கும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி, படைப்பிலக்கியத்திற்கு எதிரானதாகக் கோட்பாட்டை முன்வைக்கும் வாதமே. (கட்டுரையில் பயன்படுத்தப்படும் கோட்பாடு என்ற சொல் இலக்கியக் கோட்பாடு என்பதையே குறிக்கிறது.) கோட்பாடு ஒரு படைப்பியக்கமாகவோ, செயலியக்கமாகவே பார்க்கப்படுவதில்லை. மாறாக, கோட்பாடு இலக்கிய உலகிலும், கோட்பாட்டுச் சிந்தனை வெகுசன உலகிலும் தீண்டத்தகாத ஒன்றாகவும், தேவையற்ற சிந்தனையாகவும் தமிழ்ச்சூழலில் கட்டமைக்கப்படுகிறது.

காரணம் கோட்பாட்டுப் பார்வையும், கோட்பாடுகளும் படைப்பிற்கான ஊற்றை அடைத்துவிடும் என்கிற படைப்பு சார்ந்த ‘சுயம்புலிங்க’ உற்பத்திக் கோட்பாடே. கோட்பாடின்றிப் படைப்பு சாத்தியமில்லை என்பதே இவர்களுக்குப்புரிவதில்லை. கோட்பாட்டையும், இலக்கியத்தையும் ஒன்றாகப் பார்ப்பதும், இரண்டிற்கும் இடையிலான உறவையும் சிந்திக்கும் நிலையும் இங்கு மிகக்குறைவே. கோட்பாடு அறிவின் விளைபொருளாகவும், இலக்கியம் உணர்ச்சி வெளிப்பாடாகவும் உருவமைந்துள்ளதே காரணம். இது குறித்து இறுதியில் விளக்கப்பட்டுள்ளது.

கோட்பாடு, பல்கலைக்கழகங்களின் ஆய்விற்கான கருப்பொருளாகவும், இலக்கிய, வெகுசன சூழலில் தேவையற்றது என்கிற மனநிலையுமே உள்ளது.

காரணம் கோட்பாடு ஒரு ஆய்வுப்புல செல்நெறியாக, அறிவுத்துறை முறையியலாக, அரசியல் சார்ந்ததாகப் புரிந்துகொள்ளப்பட்டிருப்பதே. அதாவது, அன்றாட வாழ்விற்குப் பயனற்ற ஒன்று என்ற மனநிலையும், தினவாழ்வு கோட்பாடற்ற நிலையில் தன்னிச்சையாக வாழப்படுகிறது என்ற புரிதலுமே.

இப்புரிதலுக்கான அடிப்படை கோட்பாடு குறித்த பொது புத்தி சார்ந்த அறிதலும், மனநிலையுமே. கோட்பாடு என்ற சொல்லை தமிழ் அகராதிப்படி பிரித்தால்,

கோட்பாடு = கோள்-> கொள் + பாடு -> கோட்பாடு.

செந்தமிழ் சொற்பிறப்பியல் அகராதி பாகம்-3, பக். 297-ல் ‘கொள்கை (doctrines), நடத்தை (சிலப்பதி.16. அரும்.) (Conduct), கடைப்பிடிப்பு (adherence, adhesion), நிலைமை (state, condition), கொண்டிருக்கும் தன்மை (state of having)’ என்ற பலபொருள்கள் தரப்பட்டுள்ளது. இவற்றினடியாக ‘கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்படும் கூற்று Tenet, Conclusion, Thesis எனக்கோட்பாட்டை வரையறுக்கலாம்’ என்கிறது.

இதனை விரிவுபடுத்தினால் கோட்பாடு ஒரு குறிப்பிட்ட கொள்கைகளை அடிப்படையாகக்கொண்டு நிறுவப்படும் அல்லது நிறுவனமயப்படும் கூற்று. அது உருவாக்கும் கருத்தாக்கத்தை ஒட்டிய நடத்தைகளைக் கடைபிடிப்பதற்கான சமூக நிலைமைகளைக் கொண்டிருக்கும் தன்மை எனலாம். ஆகவே, கோட்பாடு சமூகத்தை வழிநடத்தக்கூடிய ஒருவகைச் சொல்லாடல் மற்றும் கூற்று எனலாம்.

இருபதாம் நூற்றாண்டைக் கோட்பாட்டுக் காலம் (Age of theory) என்று அறிஞர்கள் வரையறுக்கின்றனர் என்று சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் அ.அ. மணவாளன் (இருபதாம் நூற்றாண்டு இலக்கியக் கோட்பாடுகள், பக். 14). இதற்கு முன்பு கோட்பாடுகள் இல்லையா? என்றால் அவை தத்துவமாக, சிந்தனைப் போக்காக, கருத்தாக அறியப்பட்டிருந்தன.

அவற்றைக் கோட்பாடு என்ற வடிவில் உருவமைக்கும் ஒரு முறையியல் நவீனக்காலம் சார்ந்ததே. சான்றாக, தொல்காப்பியத் திணை சார்ந்த சிந்தனையை ஒரு கோட்பாடாக வளர்த்தெடுத்து புரிந்துகொண்டது நம் நூற்றாண்டு அறிதல் வழியாகவே. திணைக் கோட்பாடு சங்ககாலச் செய்யுள் உத்தியாகவும், வாழ்வியல் சார்ந்த ஒன்றாகவும் இருந்தது. அதை ஒரு முறையியல் சார்ந்த கோட்பாடாக இன்றைய நவீன சிந்தனைகள் வழியாகவே புரிந்துகொள்கிறோம்.

கோட்பாடு கறாரான தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு படைப்பிலக்கியத்தினை, பொதுபுத்தி சார்ந்த மனநிலையினை விமர்சனச் சிந்தனை (Critical thinking) அடிப்படையில் ஆராய்ந்து அதன் உள்ளார்ந்துள்ள தர்க்கத்தை வெளிப்படுத்தவதும், புதியதொரு தர்க்கமாக வடித்தெடுப்பதுமே கோட்பாடு. எல்லாவற்றினது உள்ளார்ந்துள்ள கருத்தியலை (Ideology) அதாவது வாழ்க்கைப் பார்வையை (அ.அ. மணவாளன் ஐடியாலஜி என்பதை வாழ்க்கைப் பார்வை என்றே குறிக்கிறார், அதனைப் பொதுவாக உலகப்பார்வை என்றும் குறிக்கலாம்), வெளிப்படுத்தும் ஒரு ஆய்வியக்க நெறிமுறையே கோட்பாடு.

ஆனால், கருத்தியலை தனது ‘ஜெர்மானியக் கருத்தியல்’ என்ற நூலில் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தவறான பிரக்ஞை (false conscious) என்கிறார்கள். அதாவது இந்த உலகு பற்றிய தலைகீழான புரிதலைத் தரக்கூடியது என்று விவரிக்கிறார்கள். இவ்வுலகு வர்க்கநலன் கொண்டது என்பதை மறைத்து, எல்லோருக்கும் பொதுவானது என்ற ஒரு பார்வையைத் தருகிறது.

இதை வேறுவிதமாகக் கூறினால், முதலாளியம் இன்றைய உலகை உருவாக்கி, அதை அப்படியே உண்மையாக நம்பவைக் கிறது. ஒவ்வொரு தனிமனிதனும், முதலாளியக் கண்கொண்டு இவ்வுலகை பார்ப்பதாக அல்லது 17-ஆம் நூற்றாண்டு துவங்கி மறுமலர்ச்சிவாதம், நவீனத்துவம் மற்றும் காலனியம் ஆகியவற்றால் உருவமைக்கப்பட்ட உலகமே இன்று நாம் வாழும் உலகு என்று இதை விரிவுபடுத்தலாம்.

அதாவது நவீனத்துவப் பகுத்தறிவு சார்ந்த கருத்தியல் இந்த உலகை உள்வாங்குவதற்கான, அறிவதற்கான ஒரு பார்வை நிலையாக உள்ளது. ஒரு மதவாதக் கருத்தியலைக் கொண்டவன்கூட, இவ்வுலகை பகுத்தறிவுசார் மதவாதக் கண்ணோட்டத்தில்தான் காண்கிறான். ஆகப் பொதுவானதாகக் கருதப்படும் புறயதார்த்தம், உண்மைகள், வாழ்க்கை, உணர்வு, அறிவு அனைத்தும் ஒரு கருத்தியலால் கட்டப்பட்டது.

மதவாதம், பகுத்தறிவு, பிழைப்புவாதம், அரசுவாதம் இன்னபிற கருத்தியல்களை வெளிப்படுத்தி, ஒரு இலக்கியப் படைப்பு என்கிற பிரதியை, மக்கள் தினவாழ்வை தீர்மானிக்கும் நிகழ்வுகள் அதன் பின்னணிகள் அனைத்தையும் விசாரணைக்கு உட்படுத்துவதே கோட்பாடு சார்ந்த திறனாய்வு. இலக்கியக்கோட்பாடோ இலக்கியத்தைப் படைப்பதற்கான கருத்தியலை உள்ளடக்கிய ஒன்றாகவும், இலக்கியப் படைப்பிற்குள் பதிவாகியுள்ள கருத்தியலைச் சார்ந்ததாகவும் அமைகிறது.

கோட்பாடு படைப்பை வழி நடத்துவதாகவும் திறனாய்வு செய்வதற்கான கருவியாகவும் உள்ளது.

பகுதி-2

தமிழ் இலக்கியச் சூழலில் கோட்பாடு எதிர்கொள்ளல்

ஆங்கிலத்தில் ‘தியரி’ என்றழைக்கப்படும் கோட்பாடு 20-ஆம் நூற்றாண்டில், குறிப்பாக மொழி குறித்து உருவான குறியியல் மற்றும் அமைப்பியல் வாதத்துடன் உருவாகி புழக்கத்திற்கு வந்த ஒன்று. மார்க்சியம், நவீனத்துவம், அமைப்பியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவம், பின் காலனியம் ஆகியவை ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவமான கொள்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இன்றைய கோட்பாடுகளுக்குச் சான்றாகக் காட்டலாம்.

முன்பு சிந்தனையாக, கருத்தியலாக அறியப்பட்டவை எல்லாம் கோட்பாடு என்கிற புதிய வடிவத்தைப் பெற்றன. கோட்பாடு தத்துவம் (Philosophy), கருத்தாக்கம் (concept), கருத்தியல் (Ideology) எல்லாவற்றோடும் குழப்பப்பட்டு, பொதுபுத்தியில் இவை எல்லாமே தினவாழ்விற்கும் யதார்த்தத்திற்கும் பொறுத்தமற்றவை என்ற எண்ணம் வலுப்பெற்றுவிட்டது.

காரணம் தினவாழ்வு யதேச்சைத்தன்மை கொண்டது என்கிற கண்ணோட்டமும், அது தன்னிச்சையாக நிகழ்ந்துகொண்டிருக்கும் என்ற ஒருவகை மாறாநிலைவாத (metaphysics) சிந்தனையுமே காரணம். மேலே சான்றுகாட்டிய அனைத்து கோட்பாடுகளும் இந்த மாறநிலைவாதத்தைத் தகர்த்து உருவானவையே. தற்காலத் தமிழ் இலக்கியச் சூழலில் படைப்பும் கோட்பாடும் எதிரானது என்ற கருத்தாக்கம் புழக்கத்தில் மாறாநிலைவாதத்தின் ஓர் ஆதிக்கக் கருத்து நிலையாக, மனநிலையாகக் கட்டப்பட்டுள்ளது.

படைப்பாளி என்பவன் கோட்பாட்டை வாசிக்கவோ பின்பற்றவோ அவசியமில்லை. அதற்கும் ஒருபடி மேலாக, கோட்பாட்டை வாசித்தால் படைப்புத்திறன் அழிந்துவிடும் என்கிற ‘துர்ப்பிரச்சாரமும்’ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழில் ஒரு பிரபலமான மூத்த படைப்பாளி, வளரும் இளம் படைப்பாளியின் கையைப்பிடித்து, தான் இறந்த பிறகும் தமிழ் படைப்புலகை காப்பாற்றும் பொறுப்பை ஒப்படைத்து விட்டுக்கூறினாராம், “கோட்பாடுகளை வாசிக்காதே, கோட்பாட்டாளர்களைப் பின்பற்றாதே அவை படைப்பூக்கத்திற்கு எதிரானது” என்று ஒரு வாய் மொழிக்கதை தமிழ் இலக்கிய வட்டாரத்தில் உண்டு.

அந்தக்கதை அப்படியே காற்றில் பரவி இன்று எந்தப் படைப்பாளியும், எந்தக் கோட்பாடுகளையும் படிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, அதைப் படிக்காததை ஒரு படைப்பிற்கான பண்பாகக் கொண்டியங்குகிறார்கள். அதாவது கோட்பாட்டை வாசிக்காத தங்கள் அறியாமைக்கு அரிதாரம் பூசிக்கொள்கிறார்கள். ஒரு படைப்பாளி கோட்பாடுகளைப் படிக்க வேண்டியதில்லை.

ஏனெனில் ஒரு படைப்பாளி பிரதியூடகம் (textual medium) எனப்படும் மொழியால் கட்டப்பட்ட பிரதிகளின் ஊடாட்ட வெளியில்தான் புழங்குகிறார். அதாவது, படைப்பிலக்கியம் பிரதியூடகம் என்கிற, பன்னெடுங்காலப் பிரதிகள் மற்றும் அதன் வழி ஊடாடி உருவாகும் நிகழ்காலப்பிரதிகள் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, ஒரு மொழிவெளியின் ஊடாட்டம் வழியாக ஆசிரியனால் நெய்யப்படுவதே. அது அந்த மொழியின் இன்னபிற பிரதியோடு கொள்ளும் உறவில் உருவாக்கும் மற்றொரு பிரதியே என்கிறது ஊடிழைப் பிரதிகோட்பாடு (inter-textual theory). அதன் அடிப்படையில், தனது நிகழ்கால மற்றும் கடந்த காலப்படைப்புகளை வாசிப்பதே ஒரு படைப்பாளிக்கு போதுமானது.

ஆனால், அவர் வாசிக்கும் பிரதி இறுதியானதோ, அறுதியானதோ அல்ல. அது அம்மொழியில் உருவான அனைத்து படைப்புகளின் ஒரு தொடர்ச்சியாக அமைவதே. இந்தத் தொடர்ச்சியின் ஒரு நனவிலி விளைபொருளே அவரது படைப்பு. இந்தத் தொடர்ச்சியை வெளிப்படுத்துவதே கோட்பாட்டின் பணி. அப்படி வெளிப்படுத்துவதன் வழியாகப் படைப்பிற்கான உள், வெளி தளங்களை விரிவுபடுத்தவும், விகசிக்க வைப்பதுமே கோட்பாட்டாளனின் பணியாக உள்ளது. ஆக, இலக்கியப்படைப்பும், கோட்பாடும் ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவை.

ஒரு படைப்பாளி அறிந்தோ அறியாமலோ ஒரு கருத்தியல் வழிநடத்தும் கோட்பாட்டுப் பின்னணியில்தான் படைக்கிறான். அந்தக் கருத்தியலை வெளிப்படுத்துவது கோட்பாட்டுத் திறனாய்வின் பணியாகிறது. கோட்பாட்டு பார்வையால் திறனாயப்படாத படைப்புலகம் தேக்க நிலையையே அடையும். புதியதொரு பார்வையை, சமூக இடையீட்டை உருவாக்காது. கோட்பாடுகளை வாசித்த ஒரு படைப்பாளி தனது விமர்சனப் பார்வையால் புதிதான சித்தரிப்புகளை உருவாக்கக் கூடியவனாக, புதிய சோதனை முயற்சி கொண்ட படைப்புகளைப் படைப்பவனாக இருக்கிறான்.

இப்படியான புதிய புதிய சோதனை தளங்களைத் திறப்பது கோட்பாட்டு அடிப்படையிலான விமர்சனச் சிந்தனை ஊடாகவே நடைபெறுகிறது. பொதுபுத்தியை விமர்சன சிந்தனைக்கொண்டு ஊடுறுவும் ஒரு படைப்பு மனதானது, தனக்கானதொரு மெய்யியல், கருத்தியல், கருத்தாக்கத்தைக் கொண்டே அமைகிறது என்பது ஒரு படைப்பாளியின் ஓர்மையில் (பிரக்ஞையில்) தெரிவதில்லை. அது படைப்பாக உருவாகுதலில் தன்னை உள்ளமைப்பாகக் கட்டமைத்துக்கொள்கிறது. ஒரு இலக்கியப் படைப்பாளி தனக்கு முன்னுள்ள மொழியில் தனது படைப்பை உருவாக்குகிறார்.

அம்மொழியானது பல்வேறு தத்துவ, கருத்தியல், கோட்பாட்டுச் சிந்தனைகள் வழியாக உருவமைக்கப் பட்டதே. அதனால் எந்த ஒரு இலக்கியப் படைப்பும் கோட்பாடுகளில் இருந்து விலகிநிற்க முடியாததாக உள்ளது என்பதைவிடக் கோட்பாடே இலக்கியப் படைப்பை உருவமைப்பதாக உள்ளது என்பதே சரியானது. அடுத்து, கோட்பாடு படைப்புத்திறனை அழித்துவிடும் என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது.

படைப்பாளி என்பவன் எப்பொழுதும் உணர்வில் திளைத்து, உணர்வில் இயங்குபவன் என்பதால், அறிவை, தர்க்கத்தை முதன்மையாகக் கொண்ட கோட்பாட்டாளர்கள், திறனாய்வாளர்களைத் தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கும் போக்கு ஒரு எழுதாக்கிளவியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. படைப்பாளி, கலைஞன் அனைத்தையும் தாண்டிய சுயம்புவாக ஆற்றல் பெற்ற காளியினால் நாக்கில் கீறப்பட்ட காளிதாசன் என்கிற பிம்பமும் இதற்கு ஒரு காரணம்.

படைப்பு உள்ளொளி, தரிசனம், பொறிபோன்ற மின்சாரத்துறை சொற்களால் விளக்கப்படுதல், கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்கிற படைப்பு அனுபூதி நிலையை அடைந்த அதாவது வேதியியலில் சொல்லப்படும் தெவிட்டியநிலையை (saturation point) அடைந்தவர்கள் என்ற ஒரு அப்பாலை ஏகத்துவ ‘சத்வ’ நிலையும், அனுபவமே முதன்மையானது என்ற அனுபவமுதல் வாதப் போக்கும் நிலவுகிறது. படைப்பாளிகளும்- பதிப்பக மாபியாக்களும் இணைந்து கோட்பாட்டைத் தீண்டத்தகாததாக, புறக்கணிப்பதும், இருட்டடிப்பு செய்வதாகவும் ஒரு நிலை அதன் தொடர்ச்சியாக உள்ளது.

மற்றொருபுறம் கோட்பாட்டு வாசிப்பை புறக்கணிப்பதால், அதன் வாசக எல்லையும் மட்டுப்படுத்தப்படுகிறது இதன்பின் ஒரு அரசியல் உள்ளது. ஒருபுறம் நல்ல திறன்மிக்க வாசகரை உருவாக்கிவிடாமல் பாதுகாத்து, தனது படைப்பை நுகரும் சந்தை சார்ந்த நுகர்வாளனாக, மந்தையாக வாசகளை வைத்துக்கொள்ளவும் இந்தக் கோட்பாட்டுத் தீண்டாமை இலக்கியப்புலத்தில் கடைபிடிக்கப்படுகிறது. தான் படைப்பதில் கோட்பாடு இல்லை என்றும். அதனால் கோட்பாடு அவசியமற்றது என்ற நிலையைத் தக்க வைப்பதன் வழியாகத் தங்களது வாசக மந்தைகளை வளர்த்து, சந்தைகளைப் பாதுகாத்துக்கொள்கிறார்கள்.

அடிப்படையில் இலக்கியம் நுகர்விற்கு எதிரானது. அது வாசக மந்தைகளையும், வாசிப்பு சந்தைகளையும் உருவாக்கும் ஒரு அச்சு எந்திர தொழிற்சாலை அல்ல. அது ஒரு சமூக உற்பத்தி என்ற வகையில் ஒவ்வொரு தன்னிலையிலும் படைப்பூக்கத்தை உருவாக்க முனைவது. அதனால்தான் மார்க்சியம், முதலாளியம் மனிதர்களின் படைப்பாற்றலை அழித்து அவர்களை, அவர்களது உயிர்த்தலில் இருந்து அந்நியப்படுத்தி வெறும் உற்பத்தி சக்திகளாக மாற்றுகிறது என்பதைக் கண்டறிவித்தது.

ஆதலினால், ஒரு படைப்பை அதன் உணர்வு மற்றும் அறிவுத்தளத்தில் வாசகர்கள் இடையீடு செய்யக் கோட்பாடுகளே வாயிலாக அமைகின்றன. இதையே தொல்காப்பியம் ‘உணர்ச்சி வாயில் உணர்வோர் வலித்தே’ (தொல். சூத். 876) என்கிறது. உணர்வோர் என்பதை வாசகராகக் கொண்டால், வாசகரைப் பொறுத்தே உணர்ச்சி வாயில் உருவாக முடியும். படைப்பிற்கு முன்னிபந்தனையாக வாசகர்கள் உள்ளார்கள். வாசகர்களைப் பயிற்றுவிப்பது கோட்பாட்டு திறனாய்வே. இது வாசகரின் இடையீடு (interpret) பற்றிப் பேசுகிறது.

வாசகர்களை மந்தைகளாக மாற்றாத படைப்புக் குறித்துத் தொல்காப்பியம் ‘பொருட்குத் திரிபில்லை உணர்த்தவல்லின்’ (தொல். சூத். 876) என்று கூறுகிறது. அதாவது பொருள் என்பதை இங்குப் படைப்பு எனக்கொண்டால் இச்சூத்திரம், உணர்த்த வல்லவரால் பொருளை உணர்த்திவிட முடியும் என்கிறது. அதாவது, இலக்கியக் கோட்பாட்டு ஆசிரியன் உணர்த்த வல்லவன் ஆயின் மொழிவெளியில் ஊடாட (mediate) முடியும் என்பதே.

இன்றைய நவீனத்துவப் பொது வழக்கில் அடிக்கடி ஒரு கேள்வி எழுப்பப்படும். இலக்கியத்திற்குதான் இலக்கணமே, தவிர இலக்கணத்திற்கு இலக்கியம் இல்லை என்று. அதாவது இலக்கியமே முதன்மையானது, அதன்பின் இலக்கணம் வருகிறது என்பதே இதன் பொருள். அடிப்படையில் இலக்கணம், இலக்கியங்களின் உள்ளார்ந்துள்ள விதியமைப்புகளை ஆய்ந்து, அதன் உள் அமைப்பை, உள்சட்டகத்தை விதிகளாக வெளிப்படுத்துவதே.

இன்றைய மொழியில் சொன்னால் அதைக் கோட்பாட்டு செயல்பாடு என்று கூறலாம். சான்றாக, தொல்காப்பிய இலக்கணம் அதற்கு முந்தைய இலக்கியங்களிலிருந்து இலக்கணத்தை உருவாக்கியதாகக் கொண்டால், அந்த இலக்கியங்கள் அதற்கு முந்தைய மொழிகளில் பதிந்துள்ள எழுத்து முறைக்கான விதிமுறைகளில் இருந்தே உருவாக்கியிருக்க முடியும்.

அதாவது தெரிதாவின் மொழியில் சொன்னால் இலக்கணம் என்பது பேச்சிற்கு முந்தைய தொல் எழுத்தாக (Arche writing) இருந்திருக்கவேண்டும். தமிழ் இலக்கணம் தொல்காப்பியரால் ஆராய்ந்து தொகுத்து உரைக்கப்பட்டாலும், அன்றைய சமூகத்தின் பொதுச் சங்கேத அமைப்பிற்கான மொழியியல் விதிகள், குறியீட்டு முறைகள் முன்பே இருந்திருக்க வேண்டியது அவசியம். அதாவது இலக்கணம் அன்றைய சமூகப் பேச்சின் உள்ளார்ந்து அமைந்து விதிகளாக எழுதப்படாத பொதுக்குறியமைப்பாகப் புழக்கத்தில் இருந்திருப்பது அவசியம். அப்படி இல்லாவிட்டால் அந்தச் சமூக அமைப்பே ஒரு மொழிக் குறியமைப்பிற்குள் இயங்க முடியாது.

ஒருவர் பிறரை அறிய ஒரு பொது விதிமுறைகளைக்கொண்ட அல்லது இலக்கணம் என்று நாம் சொல்லும் ஒன்று இயக்கத்தில் இருந்திருக்கும். அந்த ஒன்றை தனது ஆய்வுகள் வழியாக விதிகளாக, வாய்ப்பாடுகளாக (சூத்திரங்களாக) வகுத்துரைத்ததே தொல்காப்பியம். இதை வேறுவிதமாகக் கூறினால், இலக்கியத்திற்கு முன்பே இலக்கணம் உள்ளது என்பதே. அல்லது படைப்பிற்கு முந்தையது கோட்பாடு என்பதே. உடனடியாக எழும் கேள்வி இலக்கணம் அற்ற புதுக்கவிதையை எப்படிப் புரிந்துகொள்வது என்பதே.

அடிப்படையில் புதுக்கவிதை இலக்கணத்தை மறுத்தது அல்ல, யாப்பை மறுத்து உருவானதே. கவிஞர் சி.மணி கூறுவதைப்போல “யாப்புடைத்த கவிதை, அணையுடைத்த காவிரி” என்பதே. ஆக, இலக்கணத்திற்கு முந்தையது இலக்கியம் என்பது இலக்கிய முதன்மைவாதமே தவிர தர்க்கரீதியான வாதம் அல்ல.

பகுதி-3

கற்பனாவாதம் (ரொமாண்டிசிசம்)

எனும் படைப்புக் கோட்பாடு புரியாமல் எழுதுவதும், பேசுவதும் கோட்பாட்டாளர் வேலை என்று கூறி எளிமை என்ற பெயரில் மந்தைகளையும் பண்டங்களையும் படைப்பாக முன் வைக்கும் போக்கே இந்தக் கோட்பாட்டு எதிர்மனநிலையைப் பொதுபுத்தியில் பதிய வைத்துள்ளது வாசகனைப் பயிற்றுவிப்பதும், படைப்பாளியைச் செறிவடைய வைப்பதும் கோட்பாடே. வாசகனை சுதந்திரமாக, தனக்கான பிரதியைக் கட்டுபவனாக அமையும் படைப்புகளே விமர்சன சிந்தனையை வளர்க்கக் கூடியவையாக இருக்கும்.

அவையே வாசகனுக்கும் படைப்பாளிக்குமான ஒரு ஊடாட்ட வெளியாகப் பிரதியை முன்வைப்பதாக இருக்கும். ஆக, திறனாய்வையும், கோட்பாடுகளையும் இவர்கள் மறுத்தாலும் புறக்கணித்தாலும் இவர்களுக்குள் அது இயங்குகிறது என்பதே யதார்த்தம். இப்படிக் கோட்பாட்டை நிராகரிக்கும் போக்கு ஒரு வகைப் படைப்புக் குறித்த கற்பனாவாதம் என்கிற ரொமாண்டிசிச கோட்பாட்டால் ஆளப்படுவதே.

சிந்தனையில் கற்பனாவாதமும் (ரொமாண்டிசிசமும்), படைப்பில் யதார்த்தமும் (ரியலிசமும்) என்பதே தமிழ் படைப்பாளிகள் பின்பற்றும் கோட்பாடு. கற்பனாவாதம் ஒரு கலைஞன், எழுத்தாளன் தனது உணர்வுகளைத் தடைகளின்றித் தன்னிச்சையாக வெளிப்படுத்துவதே கற்பனாவாதத்தின் இயல்பு. கலைஞன் தனக்கான சட்டகத்தின் அடிப்படையில் இயங்குபவன். தனது உணர்வுகளை ஆற்றலுடன் வெளிப்படுத்தவேண்டும் என்பதே கற்பனாவாதத்தின் கோட்பாட்டு அடிப்படையாகும்.

இதன்படி ஒரு எழுத்தாளன் தனது உணர்வுகளில் தோன்றுவதைக் கற்பனைகளை அப்படியே எழுதுகிறான். கலைஞன், எழுத்தாளன் சுதந்திரமானவன் என்பதே. அவனை எதுவும் கட்டுப்படுத்தாது. இதன் ஒரு உச்ச வெளிப்பாடு எழுத்தாளன் தன்னிச்சையானவன் (சுயம்பு). அவனது படைப்பும் தன்னிச்சையாக வெளிப்படுகிறது என்பதே. அவன் தன்னிச்சையாக ஓர்மையற்ற (பிரக்ஞையற்ற) நிலையில் படைப்பதே படைப்பு. தன்னோர்மையில் (சுயப்பிரக்ஞையில்) வெளிப்படும் திட்டமிட்ட வெளிப்பாடு, அல்லது வருவிக்கப்பட்டு வெளிப்படுவது படைப்பாகாது. ஒருவரது தனித்துவமான (சுயமான) குரலையே வாசகன் கேட்கிறான். கலைஞனோடு தன்னை அவன் அடையாளம் காண்கிறான்.

கலைஞனின் குரலை தனது குரலாகக் கேட்கிறான். அதில்தான் அவன் இலக்கிய இன்பத்தை அடைகிறான். இப்படியாக, கற்பனாவாதக் கோட்பாடு, படைப்பாளியை ஒரு கடவுள் நிலையிலும், வாசகனை ஒரு பக்தன் நிலைக்கும் ஆட்படுத்தியது. இதன்வழியாக வாசகன் ஒரு ரசிகனாக உருவாகும் போக்கு வளர்ந்தது. இது படைப்பாளியை மையம் கொண்ட ரசிகப் பட்டாளமாக வாசகர்களை மாற்றியது.

‘சுயத்துவம்’, ‘உணர்தல்’, ‘ஒன்றிணைதல்’, ‘கற்பனை’, ‘அனுபவம்’, ‘தெய்வநிலை’,  ‘புனித விகசிப்பு’ ஆகியவையே கற்பனாவாத (ரொமாண்டிக்) யுகத்தின் சொல்லாடல்களாகும். ஒரு படைப்பை உற்பத்தி செய்வதற்கான, வாசிப்பதற்கான, ஆய்வதற்கான கோட்பாட்டுக் கருவிகளாக இத்தகைய சொல்லாடல்களே அமைந்தன. இவ்வாறாக, செவ்வியல்காலத்தில் இருந்த கடவுளின் இடத்தைப் படைப்பாளி கைப்பற்றினான் கற்பனாவாத சமூகத்தில்.

அதன் ஒரு நீட்சியே தமிழ்ச் சூழலில் படைப்பாளி ஒரு கடவுள் போன்ற தன்னிச்சைகளின் உற்பத்தி மையம் என்ற நிலை உருவானது. படைப்பு சுயம்புவாக உருவாதல் என்ற இந்திய மதவாதக் கோட்பாடு இதற்கான அடிப்படை தத்துவ நோக்குகளை அளித்தது. எனவே, கலைஞன் கட்டற்றவன். அவன் யாரும், எதுவும் கட்டுப்படுத்தமுடியாத ஒரு சுயம்பு. அதனால், “ஒரு கலைஞன் தான்தோன்றியாக வாழலாம். ஒழுக்கம் மீறலாம். அதற்கான உரிமை அவனுக்கு உண்டு. அவனை அவனது கலைத்திறமைக்காகக் கொண்டாடவேண்டும்.

என்றெல்லாம் ரொமாண்டிசிசம் தனது கோட்பாடுகளை விரிவுபடுத்திக்கொண்டே போயிற்று. கலைஞனின் தலைக்குப் பின்னே ஒளி வட்டம் சுழன்றது.” என்று இந்தச் சூழலை விளக்குகிறார் எம்.ஜி.சுரேஷ் “அனைத்து கோட்பாடுகளும் அனுமானங்களே” என்று வல்லினம் இணைய இதழில் எழுதிய தொடர் கட்டுரையில்.

அவரது வருணனை அப்படியே தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தக்கூடியது. ஆக, கற்பனாவாதச் சூழலைத் தாண்டாத ஒரு நிலையே தமிழ் படைப்பிலக்கியச் சூழலாக உள்ளது. ஆனால், தமிழில் பாரதிக்குப் பின் உருவான நவீனத்துவம் கொண்டுவந்த யதார்த்தவாதம் என்கிற இலக்கிய உத்தி, வடிவம் இவர்களால் கையாளப்பட்டாலும், நவீனத்துவச் சிந்தனை குறைவே. பொதுவாகத் தமிழ் படைப்பிலக்கியச் சூழல் சிந்தனையில் கற்பனாவாதமும், வெளிப்பாட்டில் யதார்த்தவாதமும் கொண்ட ஒன்றாகவே உள்ளது.

காரணம் படைப்பு குறித்த அடிப்படை சிந்தனையே இங்கு மதவாத தன்மை கொண்டதாக, மாறாநிலைவாதத்தால் ஆளப்படுவதாக உள்ளது. இப்படியான மதவாத படைப்புக் கோட்பாட்டை அமைப்பியல், குறியியல், பின்அமைப்பியல், பின்நவீனத்துவக் கோட்பாடுகள் கீழ்கண்டவகையில் மாற்றியமைத்தது.

படைப்பாக்கம் = உற்பத்தி, படைப்பு = பிரதி, கர்த்தா = ஆசிரியன் இந்த மாற்றத்தை கறாரான தர்க்க அடிப்படையில் நிறுவிய 20 ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய சிந்தனை உலகில் உருவானதே கோட்பாடு (தியரி). அரசியல்,

உளவியல், அழகியல், அறவியல், இலக்கியம், சமூகவியல் என அனைத்து துறைகளிலும் இந்தக் கோட்பாடு குறித்த சிந்தனை பரவலாகியது.

பகுதி-4

பொதுபுத்தியும் கோட்பாடும்

ஒரு குறிப்பிட்ட கருத்தியலின் வழியாக உலகை அணுகுவதற்கான, உள்வாங்குவதற்கான, புரிந்துகொள்வதற்கான ஒரு முறையியலே கோட்பாடு என்கிறோம். இவ்வாறு கோட்பாடுகள் வழியாகவே உலகம் உள்வாங்கப்படுவதால்தான் அதைத் தமிழில் கொள்-பாடு அதாவது கோட்பாடு என்று சொல்கிறோம்.

கோட்பாட்டு அடிப்படையிலான வாசிப்பு, ஒரு பிரதியின் கட்டமைப்பு விதிகளை ஆராய்வதாக, அதனோடு வெளிப்படும் கருத்தியலை அறிவதாக, அதை நடைமுறையில் உணர்ந்து பார்ப்பதாக உள்ளது. கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் உள்ள உறவு ஒரு தொடர் இயங்கியல் உறவு.

அது கருத்தியல் - கோட்பாடு - நடைமுறை - பொது புத்தி -> புதிய கருத்தியல் - புதிய கோட்பாடு - புதியநடைமுறை என்ற முடிவற்ற இயக்கத்தைக்கொண்டது.

ஒரு சமூகத்தில் அதாவது ஒரு தலைமுறையில் குறிப்பிட்ட ஆதிக்கக் கருத்தியலின் அடிப்படையில் அமைந்த கோட்பாட்டின் வழி நிறுவப்பட்ட உண்மைகள், அடுத்தமைந்த சமூகத்தில் அல்லது தலைமுறையில் நடைமுறையில் செயல்பட்டுப் பொதுபுத்தியாக மக்களிடம் கட்டமைந்துவிடுகிறது. பின் சமூகவளர்ச்சிக்கேற்ப புதிய கோட்பாடு, பொதுபுத்தியை இடையீடு செய்து அதன் கருத்தியலை வெளிப்படுத்துகிறது. ஆக, கோட்பாடு என்பதும் ஒரு நடைமுறையே, செயல்பாடே. அதை எதிராக நிறுத்துவது அனுபவமுதல்வாதமே.

கோட்பாடு பொதுபுத்தியை சிதைக்கிறது, எதிர்காலத்திற்கான பொதுபுத்தியை கட்டமைக்கிறது இது ஒரு தொடர் நிகழ்வு என்பதையே மேலே விளக்கினோம். இதன்படி, இன்றைய படைப்பிலக்கியங்கள் நேற்றைய கோட்பாடுகளால் உருவானவை. இன்றைய கோட்பாடு நாளைய படைப்பிலக்கியங்களை உருவாக்கும்.

அதாவது, பொதுபுத்தியைத் தகர்ப்பதும், புதிதாக ஆக்குவதும், வடிவமைப்பதுமே கோட்பாடு எனலாம். அதற்கு,

1. பொதுபுத்தியை விமர்சிப்பதற்கான விமர்சன சிந்தனை உருவாகவேண்டும். சான்றாக, யதார்த்தவாத இலக்கியங்கள் உண்மையைப் பிரதிபலிப்பவை

என்ற பொதுபுத்தி சார்ந்த மனநிலை, உண்மை குறித்த மதவாதக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்டது. அந்த மதவாதக் கருத்தியலை மறைப்பதே யதார்த்தவாத இலக்கியத்தின் மொழி. இது மதத்திற்குக் கடவுள் போல, இலக்கியத்திற்குக் கர்த்தாவை அதாவது படைப்பாளியை மையப்படுத்தும். அந்த மையம் மொத்த படைப்பையும் உண்மையாக வாசிக்க நிர்பந்திக்கும். இந்த நிர்பந்தத்தை மீறி, படைப்பை ஒரு மொழிப்பிரதியாக ஆய்வு செய்வதற்கான உத்தியை தருவது கோட்பாடே.

2. கோட்பாடு வழி பெறப்படுவதே விமர்சன சிந்தனை (கிரிட்டிக்கல் திங்கிங்). கோட்பாடு எந்த ஒன்றையும் விமர்சன கண்கொண்டு பார்ப்பது, அணுகுவது. விமர்சன சிந்தனையை மறுப்பதே இன்றைய தமிழ் படைப்பிலக்கிய உலகின் மிகைப்போக்காக அமைந்துள்ளது. கோட்பாடுகளை, கோட்பாட்டு திறனாய்வுகளை மறுப்பதும், விமர்சனம் என்ற பெயரில் ரசனை சார்ந்து உருவாக்கப்படும் புகழுரைகள் அல்லது இகழுரைகளுமே விமர்சனமாக, திறனாய்வாக அமைகிறது. அதனை மட்டுமே முன்வைக்கும் போக்கு அதிகரிக்கிறது.

ஒரு பிரதியின் உருவாக்கம், அது சமூகத்தில் உருவாக்கும் இடையீடு, வாசகர்களைப் பயிற்றுவிப்பது, அதன் வழியாக மொழிக்குள் உருவாக்கும் வினைகள், இவை உருவாக்கும் பொதுபுத்தி சார்ந்த நிலைபாடுகள் ஆகியனவே இதுவரையான சமூக உருவாக்கத்திற்கான பங்களிப்பை செய்வதாக உள்ளது. இவ்வாறாக, இலக்கியம் ஒரு சமூகத்தின் நனவிலியாக இருக்கிறது. கோட்பாட்டுத் திறனாய்வுகள் உருவாக்கும் விமர்சன சிந்தனைதான் அந்த நனவிலியை சமூகத்தின் மாற்றத்திற்கானதாகக் கட்டமைப்பது. அல்லது இலக்கியம் உருவாக்கும் சமூக நனவிலியை சீர்தூக்கி பார்த்து அடுத்தத் தலைமுறைக்கான, வரப்போகும் சமூகத்திற்கான புதிய மக்களைக் கட்டமைக்க முயல்வது.

3. அடுத்து, விமர்சன சிந்தனை சொல்லாடல்கள் வழி இவ்வுலகு எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. உண்மைகள், மெய்யிருப்பு, யதார்த்தம் உள்ளிட்டவை பற்றிய புதிய பார்வைகள், சொல்லாடலால் கட்டப் படுகிறது. அதாவது மதவாத சமூகத்தில் மாயமாகக் கருதப்பட்டவை, பகுத்தறிவு சமூகத்தில் மூட நம்பிக்கையாகக் கருதப்படுகிறது.

இவ்வாறாக ஆதிக்கம் வகிக்கும் சொல்லாடல் வழியாகப் புற உலகு உணரப்படுகிறது. ஒரு இலக்கியம் உருவமைக்கும் உலகின் வழி ஆதிக்கச் சொல்லாடலின் கருத்தியல் வெளிப்படுத்தப்படுகிறது. சொல்லாடல் குறித்துப் பூக்கோ முக்கியமான இரண்டு கருத்துக்களை முன்வைக்கிறார்.

1. முக்கிய மாகச் சமூகத்தில் வாழும் மக்களின் கருத்துக்கள், பொருட்கள் ஆகியவற்றினை வரையறுத்து யதார்த்தமானதாகக் காட்டுவது.

2. அறிவுபூர்வமாக என்ன சிந்திப்பது, எதைச்சிந்திக்கக்கூடாது என்பதை நிறுவனமயப்படுத்தப்பட்ட வழிகளில் பேசுவது அல்லது எழுதுவதன் வழியாக உலக யதார்த்தத்தைத் தீர்மானிப்பது.

பூக்கோ இதைத் தனது பாலியல் வரலாறு பற்றிய ஆய்வில் “பாலியல்” என்ற சொல்லாடல் எப்படி அடிப்படையில் வேட்கை, ஆசை, இன்பம், உள்ளார்ந்துள்ள சுயம் பற்றி நமது சிந்தனைகளை மாற்றியமைத்தது என்பதை எழுதுகிறார்.

பாலியல் என்கிற சொல்லாடல் மனித அடையாளங்களைப் பற்றிய முன்பே உள்ள அடிப்படை உண்மையைக் கண்டறியவில்லை, மாறாக அது அதிகாரத்தின் / அறிவின் குறிப்பிட்ட நடைமுறைகளால் உருவாக்கப்பட்டது என்கிறார். எனவே, சொல்லாடல் யதார்த்தத்தை வரையறுத்து காட்டு வதன் வழியாக, ஒரு மனித உடலின் அனைத்து நடவடிக்கைகள், சிந்தனைகள், உணர்வுகள், அறிவு ஆகியவற்றைப் பொதுபுத்தியாகக் கட்டமைத்து தனிமனித வாழ்வைக் கட்டுப்படுத்துகிறது.

பொதுபுத்தி முந்தைய சமூகத்தால் அல்லது தலைமுறையால் உருவாக்கப்பட்ட கோட்பாடுகளால் நிரூபணமான அல்லது நிர்ணயிக்கப்பட்ட உண்மைகள், கருத்துக்கள், சிந்தனைகள் ஒரு வழக்காக மாறி ஆதிக்கச் சிந்தனையாகவும், வாழ்க்கை முறைகளை வழி காட்டுவதாகவும் அமைவதே

பகுதி-5

கோட்பாட்டு அறிவும் படைப்பின் உணர்வும்

இலக்கியப் படைப்பு உணர்வை அடிப்படையாகவும், கோட்பாடு அறிவை அடிப்படையாகவும் கொண்டதான ஒரு முரண் பரவலாக முன்வைக்கப்படுகிறது. அடிப்படையில் இவற்றை முரணாகப் பார்க்க முடியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று உறவுகொண்டு இயங்குபவையே. உணர்வு கருத்தியலோடு இணைந்து பதப்படுத்தப்பட்ட சொல்லாடலாக மாறுவதே அறிவு. அதாவது உணர்வை பதப்படுத்தப்படாத அறிவு என்றும், அறிவை பதப்படுத்தப்பட்ட உணர்வு என்றும் வரையறுக்கலாம். உணர்வின் ஒரு தர்க்கவடிவமே அறிவு.

அறிவின் ஒரு அதர்க்க வடிவமே உணர்வு. ஆகையால் அதர்க்க வடிவமான உணர்வே படைப்பிலக்கியம். அதைத் தர்க்கவடிவில் வெளிப்படுத்தும் அறிவே கோட்பாடு எனலாம். ஆக, படைப்பிலக்கியமும், கோட்பாடும் ஒன்றிலிருந்து ஒன்று உருவாகி, ஒன்றை ஒன்று நிறைவு செய்துகொள்ளும் முரணியங்கியலின் வேறுபட்ட வடிவங்களே. அதனால், இலக்கியம் உணர்வுடன் உறவு கொண்டது என்பதால் அது ஒருவகைக் கோட்பாட்டு அறிவின் அதர்க்க வடிவமாக உள்ளது.

அதேபோல் கோட்பாடு அறிவுடன் உறவு கொண்டது என்பதால், அது ஒருவகை இலக்கிய உணர்வின் தர்க்க வடிவமாக உள்ளது. இந்த உறவின் நுட்பம் அறியாதவர்களே இலக்கியத்தையும் கோட்பாட்டையும் எதிரெதிராக நிறுத்துகிறார்கள். தமிழ்ச்சூழலில் அப்படி நிறுத்துவதுடன், எதிரான ஒரு மனநிலையையும் கட்டமைக்கிறார்கள். காரணம், கோட்பாடு தர்க்க அறிவின் பயில்நெறி சார்ந்தும், பல்துறை சார்ந்தும் அமைந்துள்ளது, இலக்கியம் ஒரு தனிமனித உணர்வு சார்ந்தும் அமைவதால், அது சமூகத்தின் உணர்வு சார்ந்த எதிர்வினையாக அமைகிறது.

படைப்பு நனவிலி நிலையில் செயல்படும் ஒன்று என்றும், கோட்பாடு நனவுநிலையில் செயல்படும் ஒன்று என்றும் நம்பப்படுகிறது. யதார்த்தத்தில் கோட்பாடே நனவிலி நிலையில் செயல்பட்டுப் படைப்பை நனவு நிலையில் உற்பத்தி செய்கிறது.

ஒரு இலக்கியப் படைப்பு மொழி வழி கட்டப்பட்ட மரபுகளால் நெய்யப்பட்ட முந்தைய பிரதிகளுடன் உறவுகொண்டே வடிவம் கொள்கிறது. இதனையே பிரதியூடகம் என்று குறித்தோம். பிரதியூடகம் என்பது பிரதிகளின் ஒரு ஊடாட்டவெளி. பிரதியூடக வெளி பிரதி, ஆசிரியர், வாசகர் என்று மூன்றின் நெசவில் ஊடாடி உருவாகும் ஒன்று. அந்த வெளியே படைப்பிற்கான வெளியாக அமைகிறது. அவ்வெளிக்குள் நிகழும் ஒரு படைப்பானது காலத்தோடு உறவு கொண்ட நனவுநிலை செயல்பாடால் சமகாலத்தன்மை பெறுகிறது.

சங்ககாலம் முதல் நவீன காலம் வரை தமிழ் படைப்பிலக்கிய மரபு ஒரு பிரதியூடக வெளியாக இயங்கிக்கொண்டிருக்கிறது. இவ்வெளியே படைப்பு உருவாக்கத்திற்கான புறமாகவும், தற்காலம் படைப்பின் அகமாகவும் உள்ளது. இந்த வெளிக்கு வெளியில் நின்று ஒரு படைப்பு சாத்தியமில்லை. இதனை எளிமையாகப் புரிந்துகொள்ள இலக்கணம் எப்படி ஒருவரது மொழியின் விதிகளாக உள்வயப்படுத்தப்பட்டுள்ளதோ, அதைப்போன்றதே கோட்பாடும் படைப்பில் உள்வயப்படுத்தப்பட்டு உள்ளது.

இலக்கணம் (தொல்காப்பியம் உட்பட) என்பதே ஒரு கோட்பாடுதான் என்பதை முற்பகுதியில் விவரித்துள்ளோம். இங்குப் படைப்பிற்குள்ளே கோட்பாடு இருப்பதில்லை. படைப்பின் உள்வயமாகக் கோட்பாடு உள்ளது என்பதாகப் புரிந்து கொள்ளவேண்டும். உள்ளிருப்பு என்பதையும், உள்வயம் என்பதையும் நுட்பமாகப் பிரித்தறியவேண்டும். சான்றாக, உள்ளிருப்பு என்பது ஒரு நீர் நிரம்பிய கண்ணாடிக் குவளையில் கிடக்கும் கல் நமது கண்ணிற்குக் காட்சியாவதைப் போன்றது.

உள்வயம் என்பது அதே நீர் நிரம்பிய ஒரு கண்ணாடிக் குவளையில் போடப்பட்ட உப்போ அல்லது சக்கரையோ போன்றது. அது நீரில் கரைந்து கண்ணிற்குப் புலனாகாது. அப்படித்தான் கோட்பாட்டைப் படைப்பு மொழிவழியாக உருவாகி வந்துள்ள பிரதியூடகம் வழியாக உள்வயப்படுத்திவிடுகிறது. இலக்கணம் ஒரு மொழிக்குள் கரைந்து புலனாகாதவகையில் உள்வயப்படுத்தப்பட்டிருப்பதைப்போல.

அதனால் ஒரு படைப்பாளி தன்னளவில் அல்லது நனவுநிலையில் எந்தக் கோட்பாட்டையும் உணர்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை. ஆனால், அவர் தான் புழங்கும் மொழிவழியாக உருவான பிரதியூடகத்தினால் கோட்பாட்டை உள்வயப்படுத்திக்கொண்டிருக்கிறார் என்பதுவே இங்கு விளக்க முனைவது. மேற்கண்ட உருவகத்தில் கோட்பாடு கல்போன்று நிலைத்த தன்மை கொண்டது அல்ல, உப்பு, சக்கரைப் போன்று கரைந்து அலைவுறும் இயக்கத்தன்மை கொண்டது என்பதே முக்கியம்.

எளிமையாகச் சொன்னால், ஒரு படைப்பு அதற்கான கோட்பாட்டை அதன் நனவிலியில் கொண்டமைந்திருக்கும் என்பதே. அந்த நனவிலியை ஊடுறுவி அதனை வெளிப்படுத்துபவராகக் கோட்பாட்டுத் திறனாய்வாளர் இருக்கிறார். ஒரு படைப்பாளி கோட்பாடுகளை வாசிப்பதன் மூலம் தன்னுணர்வுடன் ஒரு படைப்பை உருவாக்க முடியும். கோட்பாடு அறியாத படைப்பாளி தன்னுணர்வற்ற நிலையில் கோட்பாட்டால் வழிநடத்தப்பட்டுப் படைப்பவராக இருக்கிறார். ஒற்றை வரியில் சொன்னால் கோட்பாடு படைப்பின் நனவிலியாகச் செயல்படுகிறது என்பதே.

எனவே, இலக்கியமும் கோட்பாடும் ஒன்றோடொன்று உறவுகொண்டவை. அவற்றைப் பிரித்துப்பார்ப்பதிலும், மேல், கீழாக வைப்பதிலும் ஒருவகை அதிகாரம் செயல்படுகிறது. அந்த அதிகாரம் இலக்கியவாதியின் எதேச்சதிகார போக்காகவும், தன்னிச்சை மனப்போக்காகவும் வெளிப்படுகிறது. இதைதான் முதலில் சிந்தனையில் கற்பனாவாதமும், செயலில் யதார்த்தவாதமும் கொண்டவர்களாகத் தமிழ் படைப்பாளிகள் உள்ளனர் என்று கூறினோம்.

எனவே ஒரு திறனாய்வாளர் விமர்சன சிந்தனையிலிருந்து கோட்பாட்டாக்கம் நோக்கி தனது ஆய்வை எடுத்துச் செல்வதன்மூலம், ஒரு படைப்பிலக்கியத்தின் பொதுபுத்திசார்ந்த சிந்தனைகளைக் கட்டு உடைத்து அதன் பின் உள்ள கோட்பாட்டை அகழ்ந்தெடுக்கிறார். ஒரு படைப்பிலக்கியவாதி கோட்பாடுகளைப் புரிந்துகொள்வதன் மூலம் தனது படைப்பை தன்னுணர்வுடன் படைப்பவராக இருக்கிறார்.

பகுதி-6

கோட்பாட்டின் தேவை

மொழி உலகை எல்லைப்படுத்துகிறது. அதாவது உலகைக் கட்டமைக்கிறது. உலக யதார்த்தம் மொழியால் கட்டமைக்கப்பட்டுக் காட்சியாவதே. மொழி யதார்த்தத்தை, புறநிலையைப் பதிவதில்லை, மாறாக, அதை உருவாக்குகிறது, ஒழுங்கமைக்கிறது. அதனால் மொழியால் உருவாக்கப்படும் ஒரு இலக்கியப் பிரதி கோட்பாட்டின் வழியாக மட்டுமே அதன் பன்முகச் சாத்தியப்பாட்டை வெளிப்படுத்த முடியும்.

தெரிதா கூறியதைப்போல எல்லாமே பிரதி “பிரதிக்கு வெளியில் ஏதுமில்லை” என்பதால், பொருளாக்கம் (அர்த்தம்) வாசிப்பாளனின் நெசவில் உருவாகும் அதாவது பிரதியில் உருவாகும் ஒன்றாக உள்ளது. அர்த்தங்களின் எதேச்சதிகார சாராம்சத்தன்மை, மாறாநிலை என்பதைக் கோட்பாடு மறுக்கிறது. எந்த ஒன்றிற்கும் ஒற்றை அர்த்தம் சாத்தியமில்லை. பல அர்த்தங்களும், அர்த்தங்களை ஒத்திப்போடுதலும் நிகழ்கிறது.

எனவே படைப்பாளி, தான் முன்வைக்கும் பொருளையே வாசகரும் பெறவேண்டும் என்று நினைப்பதும், அப்படித் தனது படைப்பை உருவாக்கி பரப்புவதும் யதேச்சதிகாரம். மாறாக, படைப்பு வாசகரினாலும் நெய்யப்படுகிறது என்பதே படைப்பிற்கான பன்முகத்தன்மையை உருவாக்க கூடியதாகவும் உள்ளது.

பொதுபுத்தியின் பின் உள்ள தர்க்கமுறை சாராம்சவாத தன்மை கொண்டது. அது இருமை எதிர்வை அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக இந்த இருமை எதிர்வு மையத்தைக் கொண்ட சாராம்சவாதமே ஒரு விமர்சனப் பார்வையாக வெளிப்படுகிறது. மாறாக, பன்மைத்துவம் பிரதியின் இந்த இருமை எதிர்வையும், சாராம்சவாத மையத்தையும் கட்டவிழ்த்துவிடுகிறது. அதனால் பிரதியானது மையமற்ற ஒன்றாக மாற, அதன் கருத்தியல் உள்ளழுத்தங்களில் இருந்து விடுபட்டுப் பலதிசைகளில் பன்முக அர்த்தங்களை வெளிப்படுத்துவதாக அமைகிறது.

அடிப்படையில் சாராம்சவாதம் ஒரு வன்முறையை உறையவைக்கும் மையம். சாராம்சவாதத்தை எதிர்ப்பது புதிய கோட்பாட்டின் அடிப்படையாக உள்ளது. இது முற்றும் முழுதான உண்மையை மறுக்கிறது. சார்புத்தன்மை வாய்ந்ததாக உண்மையை ஏற்கிறது. உயர்ந்தது, அதிசயமானது போன்ற “கிரேட்நெஸ்” எதற்கும் இல்லை. எல்லாம் சமூக-அரசியல் நிலைகளால் தீர்மானிக்கப்படுவது. மனித இயல்பு (Human nature) ஒரு வகைச் சாராம்சவாத தொன்மம். அது இனம், பாலினம், வர்க்கம் உள்ளிட்ட பல சமூகஅரசியல் கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்டது. அது ஒரு ஐரோப்பிய-மையவாத, ஆணாதிக்கக் கருத்தாக்கம்.

ஒரு பிரதியின் முற்றான அர்த்தம் அதைப் பெருங்கதையாடல்களுடன் இணைப்பதன் வழியாகவே உருவாக்கப்படுகிறது. இவ்வாறாக, உருவாகும் சிறுகதையாடல்கள், பெருங்கதையாடல்களுடன் இணைந்து அர்த்தமுள்ளவையாக ஆக்கப்படுகின்றன. விடுதலை, மோட்சம், சுதந்திரம், மனித உரிமை, மதம் உள்ளிட்ட பெருங்கதையாடல்கள் மோத்தத்துவ எதேச்சதிகாரத்தை உருவாக்கக் கூடியவை என்ற புரிதலுடன் கையாளப்பட வேண்டும்.

பகுதி-7

முடிவுரை

சான்றாக, தமிழர் வாழ்வியல், இலக்கியம் எல்லாம் தொல்காப்பிய திணைக் கோட்பாட்டு அடிப்படையில் உருவாகி வளர்ந்ததே. அதனால் கோட்பாடற்ற வாழ்வும், இலக்கியமும் சாத்தியமில்லை. வேண்டுமானால் கோட்பாடுகளைத் தேர்வு செய்வதும், தெரியாமல் அதில் புழங்குவதும் வேண்டுமானால் படைப்பிலக்கியவாதிகளின் நிலையாக இருக்கலாம். ஆக, படைப்பாளி சுயம்பு என்ற உயர்பிம்பக் கட்டமைப்புக்களைத் தகர்ப்பதன் வழியாகப் புதிய கட்டமைப்புகளை உருவாக்க புதிய கோட்பாடுகளே வழி நடத்தும். ஒரு படைப்பாளி தன்னைத் தகர்ப்பமைப்பு செய்வதே தமிழ்ச் சூழலுக்கான புதிய கோட்பாடாக அமையும். படைப்பிலக்கியவாதிகள் அதற்கான இலக்கியப் பிரதிகளின் உற்பத்தி நோக்கி பயணிக்க வேண்டுமே தவிர, தன்மையவாத, தன்முனைப்புவாதத்தில் சிக்கி தமிழ் சமூகத்தை மீண்டும், மீண்டும் பழகிய நுகர்வுப்பண்பாட்டு சகதிக்குள் தள்ளி, வாசக மந்தைகளையும் அதனால் தங்களது வாசக சந்தைகளையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்தக்கூடாது.


மேற்கண்ட தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கல்லூரி ஒன்றிலும், 07-09-2018 அன்று தஞ்சை சிம்ளி இலக்கிய இயக்கத் தொடக்க விழாவிலும் பேசிய குறிப்புகளைக் கட்டுரையாக மாற்றி எழுதப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *