பிரதாப ருத்ரன் கவிதைகள்


பகிரு

குணச்சொல் மறந்த பெருந்திணைக் கலப்பை

நீளும் நாளின் சந்தான சேதம்
பாசி உலர் கற்களின் நீர்முகக் கனவில்
செல்லச் சலனநதியின் மடல் நீட்டும்
தாழைதேசக் கவிஞனின் வேட்டுவக் கவனம்
நான்காவது தினுசில்
தூரத்துச் சங்கீதம் பாடும் பல்லாண்டு
தேர் கண்டு நேர் கொண்டு
கரைபிடிக்கும் கடல்மரம்
ஜன்யத்தில் குறைவுற்ற மத்திம ராகம்
தூரத்தை அருகழைத்துக் கேள்
எங்கே அந்த மாய மனச் சரணம்
வெய்யிலாடிய இலைகள்
நிழல்பெறும் கிளைநேரம்
யுவதிகளின் ஏழு நிர்வாணம் பார்
கபால வடிவ மந்தகாசம்
மரம் வெட்டும் சொல்
கசப்பு நடுங்கும் எல்லாம்
உள்மனக் காலம் கேள்வியில் வளைய
உயிர்ச்சொல் தேடும் வளர்ப்புப் பிராணி
குணச்சொல் மறந்த கலப்பை
மலர்ந்து நாறா தீம்பெயல் கொன்றை
பெருந்திணையின் ஒன்பதாவது ஜாலசூத்திரம்
சினைக்கயல் பெருங்கடல்
நிகர் பகரும் பெயர்மேகம்
நீல்நிறச் சிவப்பில் வைகறைமலர் வாடும் மேற்கில்
துறந்ததெனத் துறந்த சமுத்திரக் கானல்பறவை
பரிபாலன நாதனின் அபயத் தருணம்
ஒரு நூறு ஒளிக்காலக் கனிவு
சிற்பித்து முடிந்த ஏழாம்நாள்
சிற்பகனுக்கு விடுமுறை
புத்தியில் ஊனமில்லை
விழி பார்க்கும் வழியில்
உறக்கத்தின் ஆகம எடை ஒரு கல்முலை.

அதிசயத் தாளம்

ஆரஞ்சு ஓட்கா
அக்குவாஃபீனா
மசால்பூரி
டம்ளர் மஞ்சள்பூ
சப்பாத்திக்கள்ளி
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு சிகரெட்
பழக்கமில்லை
சிறு வனக்குரங்கு மனம்
செங்கல்குதிரை
நவீனனின்
சவாரித் தாவல்
ஜோடிப் பறவை
நுனிக்கிளை ஊஞ்சல்
நகுலன் : சுசீலா
யூக்கலிப்டஸ் காக்கைகள்
இடம் சேர
பை நிறையா சூரியமேற்கு
எதைப்போல் சொல்வது?
செத்தவனுக்கு
பஞ்சாங்கச் சிரிப்பு
இருந்து
இருந்து
இப்படி ஆகிவிட்டது
விருந்து வரக் கரைந்த காக்கை
பசலைத் தின்ன
பகுதி மலர்ந்தது மலர்மரம்
சர்ப்பம்
சற்றே பெரிய புழு
என்றது அகவல்பறவை
மழையின் மூளையில்
ரகசியம் பேசும்
காற்றின் காலொடிந்த கடிகை
சமுத்திரக் கண்கள்
பூ உதிர்க்க
அதிரும் பூனை
சங்குமனிதன்
புராதன உறக்கம்
மார்புவரை வளர்ந்த தாடி
பலம் பரிட்சிக்கும்
வாசகமில்லா கல்லறை
தளிருடல்
அதிசய தாளம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer