பால் புதுமைக் கவிஞர்களின் கவிதைகள்

தமிழில்: காளிங்கராயன்

பகிரு

I. கொலீன் டன் கவிதைகள்

பாலிலி

இவ்வுடை எனக்குப் பொருத்தமற்றது
இதுவென் உடலோடு ஒட்டிக்கொள்கிறது
எவற்றையெல்லாம் நான் எப்பொழுதும்
மறைக்க முற்படுகிறேனோ
உடலின் அந்த வளைவுகளை
இவ்வுடை அப்பட்டமாக
வெளிப்படுத்தி விடுகிறது
எனது பரந்த தோள்களால்
அந்தப் பிங்க் நிற சரிகைக் கழுத்துப் பட்டையின்
பாரத்தைச் சுமக்க முடியாது
இவ்வுடை எனக்குப் பொருத்தமற்றதாயிருக்கிறது
ஏனெனில்
இதுவொரு பெண்ணின் உடை
மேலும் “பெண்” எனக்குப் பொருந்தாது
“ஆண்”- ம் கூடத்தான்
எனது பிறழ்வுற்ற, உடைந்த, வித்தியாசமான
வெறிகொண்ட இந்த உடலுக்கு
எதுவும் பொருத்தமானதாக் தெரியவில்லை
வினோதமான முரண் என்னவெனில்
அவர்கள், அவர்களுடைய,
அவர்களுக்கு...
போன்ற சொற்கள்
இலக்கணப் பிழையானவை என வாதிடும் எவரொருவருக்கும்
ze, zir, Ze’s ... போன்றவை குறித்து எந்த அக்கறையுமில்லை
உண்மையில் என்னைக் குறிப்பதற்கான
எந்த மாற்றுப் பெயர்ச் சொல்லும்
என் மொழியில் இல்லை
நீ கேள் எனது பாலினம் என்னவென்று
ஆண் அல்லது பெண் ... ?
நான் இரண்டுமல்ல
மேலும் உங்கள் அடையாளக்கூடுகள்
மேலும் உங்கள்
முத்திரைக் குத்தல்கள்
எதுவும் என்னைத் தடைசெய்ய இயலாது
நான் நேர்மையுடன் ஒப்புக்கொள்கிறேன்
எனது பாலினம் எதுவொன்றுமில்லை
அதுவும் இதுவுமல்லாத
சார்புநிலையற்ற
இன்மையே அது.

ze, zir, Ze’s ...: அவன், அவள், அவர் - க்கு மாற்றாகப் பால்புதுமையினரைச் சுட்டும் விளிச்சொற்கள்

சுழற்சி

வெகுகாலம் முன்பே வீசியெறியப்பட்டு
அழுகத் தொடங்கிய - ஓர்
கழிவுப் பொதி நான்
எனது விலைமதிப்பற்ற
வண்ணங்கள் யாவுமே
ஒளியிழந்து மங்கிப்போயின
தோலின் மேற்புறமெங்கிலும்
கீறல்கள்
மேலும் வளைவுகள்
சுருங்கிப் பள்ளங்களாகி விட்டன
நாம் மறைந்துபோகும் அந்நிகழ்வினை
எவரொருவரும் திரும்பிப் பார்ப்பதில்லை
கவனிப்பதுமில்லை
இப்படித்தான்
ஓர் வழிப்போக்கனால்
அலட்சியமாகக் கசக்கிக்
குப்பைத்தொட்டியில் திணிக்கப்படக் காத்திருக்கும்
கழிவுப் பொதியாக நாம் மாறிப்போனோம்
இவ்வாறுதான் - இங்கு
நாமனைவரும்
செத்துப்போகவிருக்கிறோம்.

நிறுத்தற்பொறிகள்

எனது எலும்புகள் சொன்னது
போகட்டும் விட்டுவிடு
ஆனால் என் விரல்கள் சுருண்டு
மூர்க்கமான உறுதியுடன் பற்றிக்கொண்டன
மேலும் எனது எலும்புகள் சொன்னது
நீ ஆற்றல் வாய்ந்தவள்/ன்
ஆனால் என்னுடல்
பலவீனம் அடைந்திருந்தது
எனது எலும்புகள் சொன்னது
நாளையைக் குறித்துக் கவலை கொள்ளாதே
எல்லாம் சரியாகிவிடும்
எனது எலும்புகள் சொன்னது
எம்மை விடுதலை செய்யுமாறு
ஆனால்
இந்தத் துருவேறிய பொறிகள்
எம்மைப் போகவிடாது.

II. ஏசியன் டேப் வாட்டர் கவிதைகள்

நான் மாற மாட்டேன்

உனக்கென்ன வேண்டும் சொல்
நீ விரும்பியவண்ணம்
என்னை அழைத்துக் கொள்
நான் மாற மாட்டேன்
நீ என்ன சொன்னாலும் கவலையில்லை
நீ சொல்வதை
நான் பொருட்படுத்த மாட்டேன்
அவர்கள் சொல்வதையும்
மூடத்தனமான
அந்த நூலின் எழுத்துகளையும்
பொய்ப் பரப்புரைகளையும்
நீ அவ்வாறு காண்பாயெனில்
நான் இச்சைகள் நிறைவேறா
ஏமாற்றத்திற்கு உள்ளான
ஓர் நபராகயிருப்பேன்
நீ அவ்வாறு நம்புவாயெனில்
நானொரு சாத்தானின்
அடியாராக இருப்பேன்
ஆனால் இப்பொழுது
அது முக்கியமல்ல
நீ அந்தப் பொய்களைப்
பரப்புரை செய்தவாறு இரு
போலிக் கடவுளரை
நம்பியவாறு இரு
நீ என்ன செய்தாலும்
உனக்காக நான் மாற மாட்டேன்.

படகோட்டி

ஒரு முறை படகோட்டியொருவர்
படகில் ஆன்மாக்களைச் சுமந்தவாறு
ஆற்றைக் கடந்து செல்வதை
நான் கண்டேன்
அவரது முகத்தில் பிணக்களை வடிந்தது
அவர் குரலில் கொடுங்காற்றின் ஓலம்
அவரது கண்கள் புராதனத்தில் மூழ்கியிருந்தன
அந்தப் படகோட்டியை
நானொருமுறை சந்தித்தபொழுதில்
அவர் என் அம்மாவைப் பற்றி
என்னிடம் சொன்னார்
அம்மாவின் மனவுறுதி; மகிழ்ச்சி
மரணத்திற்குப் பின் மறுமையில்
அவரது இருப்பு... என
அம்மா இறந்த அந்நாளில்
நாங்கள் சேர்ந்தே
எங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டோம்
ஓர் உறுதியான விடைபெறலினூடாக
அவர் தன் வழியில் செல்வதற்கு முன்பு
கடவுளர் வெளியேறிய அந்நாளில்
அலைகளுக்குக் கீழே
வீழ்ந்து மறைந்திடும் முன்பு
ஓர் புன்னகையை வீசிச் சென்ற
அந்தப் படகோட்டியை
நான் நினைவு கூர்கிறேன்.

முகமூடிகள்

நான் முகமூடியை உற்று நோக்குகிறேன்
அது என் கைகளில்
வசதியாகவும் இல்லை; பொருத்தமாகவும் இல்லை
ஆனால் எந்த நிலையிலும்
அதை வைத்திருப்பேன்
நான் இந்த முகமூடியை அணிய விரும்பவில்லை
அல்லது உண்மையில் எந்த முகமூடியையும்
ஆனால் முகமூடியின்றி அவர்கள் என்னைப் பார்த்தால்
என்ன நினைப்பார்களோ என
அச்சப்படுகிறேன்
என்னை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
என்னை அவர்கள் வெறுப்பார்களா?
நான் அந்நிகழ்வினை எதிர்கொள்ளத் தயாராக இல்லை
என்னிடம் வேறு முகமூடிகளும் உள்ளன
அவற்றில் சில மற்றவைகளைக் காட்டிலும்
மிக வசதியானவை
ஆனால் நான் அவற்றை அணிய விரும்பவில்லை
எனக்கு எந்த முகமூடியும் வேண்டாம்
நானல்லாத ஏதோவொன்றின் பின்னே
நான் ஏன் மறைந்துகொள்ள வேண்டும்?
மற்றவர்களின் எண்ணங்கருதி
நான் ஏன் மறைந்திட வேண்டும்?
நான் எனது முகமூடியைக் கழற்றி வீச விழைகிறேன்
ஆனால் என்னால் தானாக
அதனைச் செய்ய முடியவில்லை
ஒருவேளை அதற்குச் சரியான தருணம்
இதுவல்லவோ
ஆனால்
அத்தருணம் என்றேனும் வருமா?

அவன்

எனது கனத்த மார்பும்
ஓசையில் அதிரும் குரலும்
என்னுடலோடு பொருந்தாததால்
நான் என்றும் நானாகவே இருந்ததில்லை
நான் “அவன்” ஆகவே
இருக்க விழைகிறேன்
நான் நானாகவே இருக்க விழைகிறேன்
நான் “அந்த வித்தியாசமான எதிர்பால் அடையாளமுள்ள
திருநங்கையாக” இருக்க மாட்டேன்
நான் ஓர் அவள் ஆக இருக்கவே மாட்டேன்
ஓர் நாளில்
உங்கள் பார்வைக்கு முன்னே
நான் யாராக இருக்க விரும்புகிறேனோ
அவ்வாறே இருப்பேன்
தட்டையான மார்பும்
ஆழமான குரலும்
எனது உடலோடு பொருந்திட
இறுதியாக
நான் நானாகவே இருப்பேன்
நான் “எதிர்பால் அடையாளமுள்ள திருநர்” ஆக
இருக்கமாட்டேன்
எனக்கு ஓர் பால்புதுமை
அடையாளம்கூடத் தேவையில்லை
நான் அவனாக மட்டுமே இருப்பேன்
நான் நானாகவே இருப்பேன்.

All poetry. com இணையத் தளத்திலிருந்து...

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2023 Designed By Digital Voicer