ந.ஐயபாஸ்கரன் கவிதைகள்


பகிரு

கருப்பை முட்டையுள் பறவைகள் பல நிறம் கலந்த சித்திரம்
நவநீதம் சொல்கிறது. பல வண்ணக் கோபுரம் உடைந்து சிதறி
இறுதியில் ஒரே வெண்மையில் உறைந்து நிற்பதை நாஸ்திகரான
ஷெல்லி பாடுகிறார். தத்துவமும் கவிதையும் அரைகுறையாய்த்
தெரிந்த உலோக வியாபாரி மஞ்சள் என்ற ஒரு வர்ணத்தையே
சேமித்து வைத்திருக்கிறான். மங்கலம், அசுத்தம், ஆபாசம் எனப்
பல அர்த்த அடுக்குகள் உடைய வர்ணமான மஞ்சளைப் பித்தளை
வெண்கலத் துயர் மஞ்சளுடன்தான் அடையாளப்படுத்திக் கொள்
கிறான் அவன். வின்சென்ட் வான்கோவைக் கடைக்கு அழைத்
திருந்தால், பித்தளைத் திருவாட்சி சித்திரை வெயிலைப் புணரும்
கணத்தில் அவருக்குப் புதிய மஞ்சள் சேர்க்கை கிடைத்திருக்கக்
கூடும் என்றும் நினைத்துக்கொள்கிறான்.
கடை செயலாக இருந்த காலத்தில், நகுலன் வரைந்த
யுவ - கஞ்சா - கவிஞர் சாயலில் இருந்த இரண்டு
இளைஞர்கள் கடைக்கு வந்து, உங்கள் பெயரைப்
பார்த்து இளையவராக இருப்பீர்கள் என்று நினைத்து
வந்தோம் என்றார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு விதத்
தில் துரோகம் செய்துவிட்டது போல் இருந்தது அந்த
கணத்தில். கடைக்கு வெளியில் வரிசை போட்டிருந்த
கறுத்துப்போன பித்தளை அண்டாக்களைக் காண்பித்து
அவை என்னைவிட வயதானவை என்றேன் சிரிக்காமல்.
மதுரை வெயிலின் உக்கிரம் அன்று சற்றுக் குறைவாக
இருந்ததாகச் சொன்னார்கள் அவர்கள் சமாதானமாக.
மதுரை தெற்கு வெளி வீதி வியாபாரியின் மனைவி உலகறியாத
மாணவனை ஏமாற்றிக் கற்பழித்தது ஏன் என்று வினவுகிறான்.
ப. சிங்காரத்தின் பாண்டியன். தெற்கு வாசல் பித்தளைப் பட்டறையில்
சோட்டா வியாபாரிக்கு நேர்ந்தது வேறு வித அனுபவம் என்றாலும்
ஒரு வகையான கன்னிமை கழிப்புதான் அது. அழகிரிப் பத்தர்
பட்டறையிலிருந்து பித்தளைக்குடம் தீர்ந்து வரத் தாமதம் ஆனதால்
வேவு பார்க்க அனுப்பப்பட்டுப் பள்ளிப் பிராயத்தில் தெற்கு வாசல்
போன அனுபவம் அது. ‘சரக்கு வரலேன்னு சின்ன மொதலாளியை
அனுப்பி வச்சாங்களோ, எல்லாம் சப்ஜாடா அடுத்த வாரம் கடைக்கு
வந்துடும்’ என்று நக்கல் குரலில் புத்தர் சொன்னதைக் கூச்சத்துடன்
கேட்டு வந்து கடையில் ஒப்பித்த கணம் நினைவில் இருக்கிறது.
கண்காணிக்கப் போனவன் தீர்ந்த சரக்கு, வார், வில்லை இருப்பு
எல்லாவற்றையும் ஒரு பார்வையில் கவனித்து வந்து சொல்லத்
தெரியாத கூறு இன்மைக்காகக் கணக்குப்பிள்ளையிடம் வாங்கிக்
கட்டிக்கொண்டதும் மறக்கவில்லை. யோசித்துப் பார்க்கும்போது
இருப்பு எப்பொழுதுமே உதைத்துக்கொண்டுதான் இருக்கிறது என்று
தோன்றுகிறது.
பற்றுக்கணக்கை வரவு ஏட்டில் வைத்தால் இருப்புத்
தொகை உதைக்கும் என்ற எளிய தகவலைக் காமத்
தின் வழியே கண்டறிகிறார் ஆ. மாதவனின் சாலைக்
கம்போளக் கணக்குப்பிள்ளை இளைஞன். கணித
மும் காமும் எங்கோ ஒரு புள்ளியில் சந்திக்கத்தான்
செய்கின்றன. அதைக் கற்றுக் கொடுத்த கடைத் தெரு
தான் பற்றும் வரவும் ஆக உறவுகளைப் பிரித்துப்
போடவும் சொல்லிக் கொடுத்திருக்கிறது. பார்க்கப்
போனால் முகமூடி உறவு சுயத்தின் விலக்கம் எல்லா
வற்றையும் பெருந்தொற்றுக் காலத்துக்கு முன்பே
கற்றுக் கொடுத்துவிட்டது கடைத்தெரு. மறக்க
வில்லை எதுவும் கடையை விட்ட பிறகும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer