நூல் மதிப்புரை
கொழுத்த காலமும் பொல்லையான கூடுகளும் மதிப்புநீக்கம் செய்யப்பட்ட தீவிர பாவங்கள்

பிரவீண் பஃருளி

பகிரு

றாம் சந்தோஷின் ‘சொல் வெளித் தவளைகள்’ தொகுப்பு குறித்து.


செவ்வுணர்வு, அழகியல், மகத்துவம் போன்ற நித்திய மதிப்புகளை ரத்துசெய்துவிட்டு கவிதையை அதன் எதிர்த்தன்மைகளின் விளையாட்டாக மாற்றும் ஒரு இயல்பூக்கம் கொள்கின்றன றாம் சந்தோஷின் ‘சொல் வெளித் தவளைகள்’.

ஒருவித தொந்தரவும், நிலைகொள்ளாமையும் சூழ்ந்த இயல்பிலேயே அவை வாசிப்பையும் அசௌகரியப்படுத்துகின்றன. அழகியல்பேறு, கவித்துவத் துய்ப்பு என்பதற்குப் பதிலாக இத்தொகுப்பு அளிப்பவை ஒருவித தொந்தரவும் ஒவ்வாமையும். முகப்பிலேயே “கவிதை, கவிதை என்று சொல்லவும், கவிதை கவிதை என்று ஓதவும், கவிதை காண்பீர் மாயமே…” என்ற ஒரு முன்னோதலுடன் கவிதையுடன் பிணைக்கப்பட்ட மகத்துவங்களைக் காலி செய்து, அதனை ஒரு டிவைசாக, செய்கருவியாக, கேலிச்சித்திரமாக, எள்ளலாக முன்வைக்கும் குறிப்பிலேயே, இக்கவிதைகளுக்குள் பொதிந்துள்ள கொடு பற்கள் எல்லா பெருமதிப்புகளையும், பீடங்களையும் ஒரு பாவனைக்கும் நாடகத்தன்மைக்கும் இழுத்து வந்து நன்கு புடைக்கப்போவது தெரிகிறது. இச்செய்யுளை எழுதியது றாமானந்த சித்தன். கவிதை காண்பீர் மாயமே!, எல்லாம் மாயை என்பதான ஒரு வேடிக்கையைக் கவிதை என்னும் வடிவம் நோக்கியும் வீசுகிறார்.

கவிதை ஒன்றும் அத்தனை பேறுநிலைகளோ பேரொளி கொண்ட இடமோ அல்ல அது ஒரு பாவனை, மொழி விளையாட்டு அவ்வளவுதான், வேடிக்கை செய்வோம் வா, என்ற கலைத்துப்போடலுடன்தான் அந்த முகப்பு செய்யுளே திறக்கிறது.

வரலாற்றால் முழுமையாக வெறுமையாக்கப்பட்டிருக்கும் மனிதன், இன்று ஒரு நுகர்வு மெய்ம்மையாகிப்போன அதன் வெற்று இருப்பு இக்கவிதைகளின் ஆடுகளம். மையமற்ற காலம், உள்ளீடற்ற வஸ்துகள், சகலமும் ஒரு பண்டமதிப்புக்குள் சூழப்பட்டிருக்கும், சித்தாந்தம், இலட்சியம், இயக்கங்கள் உள்ளிட்ட எல்லா மகாசூரியன்களும் அலங்கார பல்புகளாக மதிப்பிறக்கப்பட்ட, பின் நவீனத்துவத்துக்கும் பிந்தையதான உணர்திறன்களுடன் கோபம், எரிச்சல், ஒவ்வாமைப் புரட்டல் எல்லாம் பகடியாக, வசைகளாக, நகலெடுப்புகளாக, கேலிப்பாவனைகளாக உருமாற்றம் கொண்ட கவிதைகள் இவை. இவற்றில் செயல்படும் பகடியும் சலிப்பும் அந்நியப்படுதலிலிருந்து அல்லாமல் சுயத்தைப் பொதுவில் எறிவதாக இருக்கிறது.

சுய இருப்பு என்ற சுமையிலிருந்து விடுவித்துக்கொண்டு, ‘தன்னிலை’ என்பது இக்கவிதைகளில் உரிப்பொருளாக இல்லை, கருப்பொருள்களின் கூட்டத்தில் அதுவுமொரு வேடிக்கை பொம்மையாக இருக்கிறது. இவ்விடத்தில்தான் கவிதையில் தன்னிலை / சுயம் கரைந்து விடாமல் புறவயப்பட்டு நிற்றலின் அறிவார்த்த கூறு வலுவாக இருக்கிறது அறிவு நிலையும் விமர்சனமும் தீர்க்கமாக இயங்குதலிலேயே இக்கவிதைகள் விழிப்புற்று இருக்கின்றன. கவிதை செய்யப்பட்டிருக்கிறது, அது ஒரு செயல், நிகழ்வு அல்ல, கவிதை ஒரு உடல்வினை என்ற போதம் இக்கவிதைகளைத் தனித்து இருத்துகிறது. நான் என்பது பல கூட்டு நான்களின் சமன்பாட்டில் ஒரு வெற்றிடமாக ஒரு கவிதையில் முன்வைக்கப்படுகிறது.

எதிலும் நிலைகொள்ள முடியாத வெறுப்படைந்த தொந்தரவுபட்ட அலைக்கழிப்பு இத்தொகுப்பின் ஒரு மனமாக இருக்கிறது. இந்தத் தொந்தரவடைந்த சிதறலான மனநிலைதான் எதிலும் ஒருமை கொள்ளமுடியாத, எந்தப் புள்ளியிலும் உட்காரமுடியாத தாவிக்கொண்டே இருக்கும் சொல் வெளித்தவளைகளாக, தவளைத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன.

மரபு ஒரு சாதுர்யமான செய்நுட்பமாக இக்கவிதைகளில் வரிக்கப்பட்டுள்ளது. செவ்விலக்கியப் பழந்தமிழ் கூறுகள் பிரதியிடைத் தழுவலாக வருகின்றன. மரபு என்ற மேற்படலம் இங்கு, சமகாலத்தை நையப் பகடிப்பதற்கான ஒரு சூட்சமம்தான். ஒரு பாவனைதான். தலைவன் தலைவி உள்ளிட்ட செவ்வியல் மாந்தர்கள் தலைகீழாக்கம் செய்யப்பட்ட பின்நவீன பொம்மைகளாக வருகிறார்கள்.

நீட் தேர்வெழுதச் செல்லும் தலைவன் தலைவி சித்திரம் புறநானூற்று வீறுணர்வியத்தைச் சம கால அரசியல் தமிழ் சமூக வெளியில் பிணைத்து, கூரிய அங்கதப் பிரதியாக நிகழ்த்திக் காட்டுகிறது. செவ்விலக்கிய வீறுணர்விலிருந்தும், செவ்விய காதலிலிருந்தும், பிறகான நவீனத்துவ இருப்பிலிருந்தும் கழற்றப்பட்ட உடல்கள், சந்தைப் பொருளாதார மண்டலங்களின் நுகர்வியக் குறிகளின் கேளிக்கைப் பிரதியாகிய உடல்களின் புதிய குருதியையும் நோய்மைகளையும் மரபையும் சமகாலத்தையும் வெட்டி ஒட்டிய சொல்லாக்கங்களில் விளையாடிக் காட்டும் பல கவிதைகள் இருக்கின்றன. ‘தலைவன் தலைவி செய்யத் தேவையான பொருட்கள்’, ‘தொல்காப்பியம் லேட்ட்ஸ்ட் வெர்ஷன்’ போன்ற கவிதைகளை இங்குச்
சுட்டலாம்.

இத்தொகுப்பில் உடல் ஒரு முக்கிய ஆடுகளமாக இருக்கிறது. உலகமயப் பொருளியல் சுரண்டல் ஸ்தலமாக உடலென்பது ஒரு ஆயுத நிலமாக, நமது குடல்பாதை மீது நிகழ்த்தப்பட்டுள்ள அரசியல் வணிகச் சதியாட்டங்கள் நோக்கி மிகுந்த எரிச்சலுடனும் உமட்டலுடனும் அக்கவிதைகள் வாதையுறுகின்றன. இக்கவிதைகளில் உடல் தொடர்ந்து நோய்மையுற்றும் வீழ்த்தப்பட்டும் சிதைந்து கிடக்கிறது. உடலை பண்பாட்டிலிருந்தும் வரலாற்றிலிருந்தும் அதன் பூட்டிவைக்கப்பட்ட தன்மையிலிருந்தும், ஒரு நுகர்தொகுதியாக்கும் சமகாலத்திலிருந்தும் உடைத்து வெளியேற்ற, தப்பித்தோடும் அழுத்தத்தை எள்ளலாகவும் வசையாகவும் பகடிச் செய்யுளாக்கும் பல கவிதைகள் உள்ளன. ஒரு கவிதையில் பூங்காவில் சந்திக்கும் தலைவனும் தலைவியும் குறிகளைக் கழற்றி எறிந்து அவை தனித்து வினை புரிந்து கொண்டிருக்கக் குறிகளற்ற இருவரும் கொக்கென்றும் மீனென்றும் மாறி விளையாடத் தொடங்குகின்றனர்.

நமது குறிகளை, புலன்களை ஓயாது வீங்க வைக்கும் நுகர்விய அழுத்தங்களில், அவற்றை வெளியே வீசிவிட்டு உடலை அதன் வரலாற்று வார்ப்பிலிருந்து மீட்டு அதன் இயல்பூக்கத்தில் அந்தரக் களிப்பாடும் விளையாட்டு அதிலுண்டு. இதே ஒரு த்வனியில் ‘இந்தத் தலைவன் தலைவிக்கு லீவு விட்டால் தேவலை’ என்ற சலிப்புடன் ஒரு கவிதை முடிகிறது. மொழிவயப்பட்ட, கலாச்சாரப் பிரதியாக்கப்பட்ட உடலை அக்கவிதைகள் ஒரு ஆவேசத்தில் கலைத்துப் பார்க்கின்றன.

இத்தொகுப்புக் கவிதைகளின் ஓசை தொனி யாப்புச் செய்யுள்களை மிமிக் செய்பவையாக உள்ளன. மரபோசையை நகலாக்கம் புரிவதன் வழிதொடர்ந்து எள்ளலான ஒரு இயல்பை, பேச்சோசை சார்ந்த ஒரு இயங்குநிலைதன்மையை எல்லாக்கவிதைகளும் தக்க வைத்துக்கொள்கின்றன. காளமேகம், ராமச்சந்திர கவிராயர் போன்ற தனிப்பாடல் கவிஞர்களின் வேடிக்கையும் வசையும் எள்ளலுக்குமான ஓசையும் மொழியுமான ஒரு சாயலை அவை வரித்துக்கொண்டுள்ளன. நவீன கவிதையின் ஓசையமைதியும் உரைநடையும் ஒருவித தீவிர பாவத்தைக்கொண்டு வருவதை இதன் வழி இவை தவிர்த்து விடுகின்றன. ஒரு வகையில் நவீனத்துவத் தீவிர பாவங்கள் அல்லது காலாவதியான தேய் வழக்குகள், சென்ற நூற்றாண்டு பேரியக்கங்களின் இன்றைய அரசியல் சரிநிலைகள், உள்ளீடு காலியான அடையாளங்கள், எல்லாவற்றையும் சொல் வெளித் தவளைகள் கேலி செய்கின்றன. பூனையைத் தேய்வழக்குகளின் குறியீடாக்கி எழுதப்பட்டுள்ளது ஒரு கவிதை. எலியைத் தின்னாது, பிஸ்கோத்து உண்ணும் நாகரிகமடைந்த அந்த ‘வார்த்தைப் பூனை’ நமது சௌகரியமாகப் பழக்கிக்கொண்ட நவீனத்துவத் தேய்வழக்குகள் அரசியல் சரித்தனங்களின் மீதான விமர்சனமாகவும் வாசிக்கலாம். எலி தின்ன வேண்டிய பூனை தன் இயல்பு பிறழ்ந்து பிஸ்கோத்துக்குப் பழக்கப்பட்டுள்ளது. நம் சொற்கள் கொழுத்துள்ளன. உள்ளே சாரம்சம் காற்றாடுகிறது. இந்தக் கவிதைக்கு நெருக்கமாகப் பிளாஸ்டிக் சுவைத்தலும், சுவை கூட்டல் உத்திகளும் கவிதையையும் வாசிக்கலாம். எழுத்து தன் முரட்டுத்தனம் இழந்து நல்லியல்பான ஒழுங்குடன், உற்பத்தி கதியில் கேளிக்கை, நுகர்விய கார்பரேட் மதிப்புகளில் பெருக்கெடுப்பதும், நமது உணவு, அரசியல், கலை, மொழி, பயன்பாட்டு வஸ்துகள், எல்லாம் பொல்லையான வெற்றுக்கூடுகளாகியுள்ளதையும், நமது கருத்தியல் வாழ்தளங்கள் யாவும் ஒரு பிளாஸ்டிக்தன்மை அடைந்திருப்பதும், இக்கவிதைகளினூடாக விசாரணைக்குள்ளாவதையும் சமகால எழுத்தின் சௌகரியமண்டலங்கள் நொறுக்கப்படுவதையும் கண்டுகொள்ளலாம்.

மார்க்ஸ் வளர்க்காத பூனை
றாம் சந்தோஷ்
ஒரு டாக்கிங் டாமை கூட வளர்க்காத நீங்கள்
எத்தனை கொடூரமானவர்கள்
ப்ராணிகள் மீதான விருப்பமில்லாத உங்களுக்கு
அதன் அடிமைத்தனம் குறித்து
விழிப்புணர்விருப்பதில்லை.
உண்மையில் ஒரு டாக்கிங் டாம்
உச்சாவந்தாலும் கூட
பாத்ரூமில் மட்டுமே போகும்
அதுவரையிலும் குறிபொத்தி
அவஸ்திக்கும் சுகாதாரமானது
மிகவும் வித்யாசமான அது
உடையிட்டுக் கொண்டே குளிக்கும்
அடித்தால் நொ நோ சொல்லும்
கேளாமல் அடித்தால் தொப்பென்று விழும்
மீண்டும் அடிவாங்கும்
(நீங்கள் சில நேரங்களில்
அதற்குத் தடவியும் கொடுக்கலாம்)
முக்கியமாய் அது
பெரிய சைஸ் குச்சி மிட்டாய் சாப்பிடும்
அதனால்தான் சொல்கிறேன்
எத்தனை நல்லது ஒரு டாக்கிங் டாம்.

மார்க்ஸ் வளர்க்காத பூனையில் வரும் டாக்கிங் டாமும், கத்தரிக்காய் புரட்சியின் வடிவமும் இடதுசாரியத்தின் அரசியல் சரிநிலைகள், சடங்குத்தன்மைகள், மூடுண்ட கோட்பாட்டுவாதம் குறித்த அங்கதமாக வெளிப்பாடு கொண்டுள்ளது. டாக்கிங் டாம் சித்தாத்தங்களின், அமைப்புகளின் நிறுவனத்தன்மை உள்ளியக்கமற்ற படைபூக்கமற்ற பிளாஸ்டிக்தன்மை எனப் பல அர்த்ததளங்களைக் குறியீடாக்கக்கூடியது. திராவிடக் கட்சி அரசியல், அதன் மையநீரோட்ட அரசியல் அதிகார நிறுவன சடங்குத்தன்மைகள், ரொமாண்டிக் மொழிவாதம் குறித்தும் கடுமையான வசைபாடல்களும் பகடிகளுமான கவிதைகளும் உள்ளன. இதுபோன்ற தன்மைகளை ஞானக்கூத்தன் போன்றவர்களிடம் ஏற்கனவே கண்டுள்ளோம். ஆனால் அவ்வியக்கங்களின் சமூகக் குறுக்கீட்டின் வழிதான் நவீன எழுத்துக்குள் பலவித சூத்திர, அல்வருணக் குருதிகள் புகுந்து புத்துருவாக்கியதன் சனநாயகத்துவச் சமூக அறிவியங்கியலைப் பரிசீலித்துக் கடந்து வரும் விமர்சனப்பாதை தேவை. ஒரு பின்நவீன அல்லது உண்மைக்குப்பிந்தைய சமூகத்தின், நுண்மையான பன்மைகளை, விலகல்களை உள்வாங்கத் தவறிய, சென்ற நூற்றாண்டின் விடுதலை, சமத்துவம் சார்ந்த நீதிமொழிபுகள் வாக்குறுதிகள் உள்ளீடிழந்து இடதுசாரி பொதுபுத்தி, திராவிடக் கட்சி பொதுபுத்தி முற்போக்குப் பொதுபுத்தி என்ற சரித்தன்மைகளில், எளிமைப்பாடுகளில் அதிகாரக் கேந்திரங்களாக எதிர்ப் பரிணாமமடைந்ததை இக்கவிதைகள் விமர்சனம் புரிகின்றன எனலாம்.

நமது இருப்பும் நிலவரமுமோ உண்மைக்குப் பிந்தைய ஒரு சமூகத்தில். உண்மை என்ற இடத்தைத் தகவல்கள் என்பவை பதிலீடு செய்துவிட்ட காலம். அறியப்படும் உண்மையன்றி நுகரப்படும் தகவல்கள் சூழ்ந்த காலம்.

இவ்விடத்தில்தான் இத்தொகுப்பின்; ‘மது வேண்டார்ப் பரணி’ கவிதை, சொல்பவனுக்கு ஒரு நா சுத்தமாய்ப் போதாது, கேட்பவனுக்கோ ஒருநாள் போதவே போதாது; ‘டீவி பார்ப்போம் பொதுவாய் அறிய’ என முடிகிறது.

உண்மையைக் கடந்து வந்துவிட்ட, வரலாறுகள் வெற்றிடத்துக்கு வந்துவிட்ட, பின்நவீனத்துக்கும் பின்னான காலத்தில்தான், நவீனத்துவ அறிவொளியில் காலி செய்யப்பட்ட ‘கடவுள்’ ஒரு அங்கதக் கேலிச் சித்திரமாக, சுவாரஸ்யமான புனைவு மாந்தராக மீண்டும் கவிதைகளுக்குள் நடமாடத்தொடங்குகிறார்.

றாம் சந்தோஷில் அவர் சாத்தானின் முகநூல்பக்கத்தை அட்மின் செய்கிறார். தனது ‘கடவுள் பதவியை’ எப்போதோ ராஜினாமா செய்துவிட்டதாக நிம்மதி அடைகிறார். கவிஞனின் அனுமதியோ விருப்பமோ இன்றியே அவனது பிரதிக்குள் குறுக்கும் நெடுக்குமென வந்துவிடும் கடவுள் பெரிய தொந்தரவாக, சென்ற நூற்றாண்டின் மகத்தான மக்கா குப்பையாக இருக்கிறார்.

பாடுபொருள் சார்ந்து எந்த ஒரு மையத்திலும் இத்தொகுப்பு பிணைத்துக்கொள்ளாது, எந்த ஒரு அழகியல் தளத்திலும் வரம்பிட்டுக்கொள்ளாது, ஒரு சுதந்திரத்தன்மையை, தக்கவைத்துள்ளது. எது பற்றியும் பாடுவேன், எந்த முறையிலும் சொல்லாடுவேன் என்ற ஒரு போக்கிரிக்குணம் அதன் சாகசமாகிறது. மாட்டரசியல், நீட், பணமதிப்பு நீக்கம், Anti இந்தியன் உள்ளிட்ட சமகால அரசியல் விவாதக் கருக்கள் பலவற்றையும் இந்தக் கவிதைகள் அதே போக்கிரித்தன்மையுடன் தயக்கமின்றி எள்ளலும் விமர்சனமும் முயங்கிய ஒரு மொழியில் புரட்டிப் போடுகின்றன. இத்தொகுப்பில் எள்ளல்தான் அடிப்படையான ஒரு பார்வையாக இருக்கிறது. பேச்சுதொனி, மரபுக் குறிகளை மிமிக் செய்தல், விமர்சனத்தீர்க்கம், அபாரமான அறிவுத்தனமை, மொழிச்செய்நுட்பம் போன்றவை அந்த எள்ளலை ஒரு
கவித்துவ அறிதலாக, ஞானமாக மேலெழுப்புகின்றன. அனேகமாக எல்லாக் கவிதைகளுமே எள்ளலின் எதிர்மறைச் சொல்லாடுதலில் இருந்து ஒலிக்கின்றன.

விமர்சனமும் வசையும் தீவிரம் கொண்டு ஒரு அழகியலை வார்த்தெடுக்கின்றன. எள்ளலின் மேற்தளத்துக்கு அப்பாற்பட்டதான அக்கவிதைகளின் உள்மறைந்த சாத்தியங்களான பள்ளத்தாக்குகளும் கடல்களும் குறித்தும் நாம் திறந்து பார்க்கும் நுழைவுகள் வேண்டும். எள்ளலும் செய்யுள்தன்மையும் பேச்சோசையும் தொடர்ந்து நிகழ்தலை சற்று மெலிதாக்கியும் வெவ்வேறு மாறுபட்ட பாதைகளில் நுழைந்து பார்க்கவுமான சாத்தியங்களை இத்தொகுப்பு தன்முன் கொண்டுள்ளது. அப்பாதை தீவிரப்பட வேண்டும்.

மகத்துவங்கள் எல்லாம் நொறுங்கிவிட்ட பின்னும் கவிதை தொடர்ந்து அசாதாரணங்களை, மதிப்புகளை நோக்கி எம்பிக்கொண்டிருக்கும், சிதைவிலிருந்தும் ஆக்கத்திற்கும் பேரூஞ்சல் ஆடும், ஒளிபடர் வெளிகளைச் சொல் வெளித் தவளைகள் விழைவுகொள்ளும் குறிகள் உள்ளன.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2021 Designed By Digital Voicer