நூறு சதவீதத் தனிமையும் உடலோடான உரையாடல்களும்
ரா. செயராமன் கவிதைகள்

வாழ்வெனும் இந்தப் பெருவெளியில் நமக்கு வந்து வாய்த்த ஐந்து புலன்களுமே, பாரதியார் வார்த்தைகளை வாங்கிச் சொல்வதென்றால், “விண்டுரைக்க முடியாத விந்தைகள்”தான். கூடவே புலன்களின் இயங்கு தளமாக அமையும் உடம்பு, விந்தையிலும் விந்தை என்றும் சொல்ல வேண்டும்; இவற்றிற்கெல்லாம் இன்னும் மேலாக, இந்த ரூப உடம்பின், இயங்கியலில் உற்பத்தியாகும் அரூபமான மனமெனும் ஒன்றும் (அது ஒன்றா?) பேராச்சரியம்; பெரு வியப்பு. அதனாலேயே இதை நவீன ஆய்விற்கு உட்படுத்திய நரம்பியல் மருத்துவர் சிக்மண்ட் பிராய்டு, கப்பலையே கவிழ்த்துவிடக்கூடிய, கடலுக்குள் மறைந்து கிடக்கும் மாபெரும் பனிமலை என இதை உருவகப்படுத்தினார்.

இவ்வாறு அதிசயத்தக்க இந்த மனம்தான் மானிடர்க்கு மாபெரும் தீர்க்க இயலாத பிரச்சினையாக முன் நிற்கிறது. மானுட சமூகமென்ற இரண்டாவது இயற்கையில் வந்தமைந்த குடும்பம், மதம், கல்வி, அரசு, நீதி, கலை இலக்கியம், சடங்கு, திருவிழா முதலிய அனைத்துமே மனமெனும் அடங்காப் பிடாரியை ஒழுங்குபடுத்த முயலுகிற மனித தந்திரங்களின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றன. மனம் அப்படி என்னதான் செய்கிறது?

பாரதி சொல்லுகிறார்

மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கு இசையாய்
பாவி நெஞ்சே, பார்மிசை நின்னை
இன்புறச் செய்வேன்

என்று உறுதிமொழி கொடுக்கிறவர், தொடர்ந்து மனத்தோடு உரையாடுகிறார்; நெஞ்சே! உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிலை நிறுத்திடத் தீயிடைக் குதிப்பேன்; கடலுள் வீழ்வேன்; வெவ்விடம் உண்பேன்; மேதினி அழிப்பேன்; ஏதுஞ் செய்து உனையிடரின்றிக் காப்பேன்; மூடநெஞ்சே,முப்பது கோடி மு றையுனக்கு உரைத்தேன்; இன்னும் மொழிவேன்;வலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே; ஏது நிகழினும் ‘நமக்கேன்’ என்றிரு; பராசக்தி உளத்தின் படியுலகம் நிகழும்; நமக்கேன் பொறுப்பு? “நான் என்றோர் தனிப்பொருள் இல்லை; நான் எனும் எண்ணமே வெறும் பொய்” என்றான் புத்தன்; இறைஞ்சுவோம் அவன் பதம். இனி எப்பொழுதும் உரைத்திடேன்; இதை நீ மறவாது இருப்பாய், மடமை நெஞ்சே! கவலைப்படுதலே கடுநரகமம்மா! கவலையற்று இருத்தலே முக்தி; சிவனொரு மகன் இதை (இந்தப் புத்தியை) நினக்கு அருள் செய்கவே!” என்று விநாயகரை வேண்டுவது போன்ற ஒரு பாவனையில் தன் சொல் பேச்சுக் கேட்கா மனத்தோடு மன்றாடுகிறார் பாரதியார்.

இப்படித்தான் இங்கே தன் மனத்தோடு மன்றாடிய அனைத்தையும் ஒன்றுவிடாமல், தனக்கேயுரிய தனித்துவமான மொழியினால், படபடத்துக் கூக்குரலிட்டு ஓடும் முட்டைக்கோழியின் பின்னாலேயே ஓடிப்பிடிப்பது போலப் பிடித்து நமது வாசிப்பிற்குத் தந்திருக்கிறார். ரா.செயராமன். ஒரு தொகுப்பு அல்ல; மூன்று தொகுப்பு. மொத்தம் 397 தலைப்பில் கவிதைகள். ‘இருளின் குரல்’, ‘எனது உடலும் நான்களும்’, ‘வெற்றுக்கருவறையும் நிறைந்த சந்நிதியும்’ - ஆகிய மூன்று தொகுப்பும் ‘சிற்றேடு’ இதழ் வழியாக வந்துள்ளன. முறையான தமிழ்க் கல்வி கற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர்; இலக்கணப் புலமை செறிந்தவர். மாணவராக ஆய்வு செய்துகொண்டிருக்கும்போதே பிரமிள், ரமேஷ் - பிரேம் ஆகியோர் பாணியில் கவிதை மோகம் கொண்டு தொகுப்பு கொண்டுவந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக, கவிதை சமைப்பதற்குத் தேவைப்படும் நூறு விழுக்காட்டுத் தனிமையில் தன்னை தள்ளிக்கொண்டவர்; துண்டு துண்டாக நறுக்கிக் கொன்றுபோடும் தனிமை, வெறுமை, ஐயம், அச்சம், நம்பிக்கையின்மை, சுயவெறுப்பு, தாழ்வுணர்ச்சி, நிறைவின்மை, நிராகரிப்பு, காம வேட்கை, விடை அற்ற வினா, குறியில்லாத் தேடல், ஆற்றாமை, அமைதியின்மை, தேவையின்மை, போதாமை, தன்னைத் தனிவகையான உயிரியாக உணர்தல், பிளவுண்டு சிதறுதல், பேரழுத்தம், தன் இருப்பைப் பருஞ்சுமையாய் உணர்தல், இறப்பை நேசித்தல், கருத்துகளின் கொடூரம், பாதுகாப்பற்ற நிலை,சும்மா இருக்க இயலாமை, ‘நான்’ நடத்தும் லீலை, சலிப்பு, அன்பெனும் தந்திரம், நிச்சயமற்ற தன்மை, அறிதல் தரும் வலி, எண்ணங்களின் ஆக்கரமிப்பு, அனாதை நிலை, நன்மை x தீமை; ஒளி x இருள்; மையம் x விளிம்பு - முதலிய முரண்களுக்கு வெளியே தாவும் பேராசை முதலிய உணர்ச்சிகள் தன் மனமெனும் நாடக அரங்கில் நிகழ்த்தும் கூத்துகளை எல்லாம் தனக்கென்று எந்தப் பார்வையும் இல்லாத ஒரு பார்வையாளர்போல நுட்பமாகப் பார்த்து தன்மொழிக்குள் இடப்பெயர்ச்சி செய்துள்ள திறம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. அவர் மொழிதான் அவரை எழுதுகிறது எனப்பட்டது.

சென்னையில் 2017 - ஜனவரி - ஒன்றாம் தேதி, ஒரு தனி அறையில் இருந்து வாசிக்கத் தொடங்கியவன் ஒரு வாரமாக அந்த வாசிப்பைத் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கிறேன். “நான் பிறந்த நாளும், ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்று என்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக’’ என்றொரு வசனம் பைபிளில் வரும். இப்படித்தான் துடிக்கிறார் செயராமன். நினைத்த நேரமெல்லாம் நம்முடைய காமத்தை தீர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக, இன்னொரு உடம்பை குடும்பம் என்ற பேரில் ஏற்படுத்திக் கொடுக்கும் இந்தச் சமூக அமைப்பிற்கு வெளியே, தனியாய், தனித்தனியாய், தன்னந்தனியாய் வாழ்ந்து, தன் ஒரு உடம்பால் மட்டுமே வாழ்வில் நேரும் அனைத்தையும் எதிர்கொண்டு வாழ்ந்து தீர்க்குமாறு வந்து அமைந்த ஒரு வாழ்வு தரும் வலியையும், வதையையும் இந்த அளவிற்கு தமிழில் மொழிப்படுத்தியவர்கள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. தன் தனிமையை, இப்படியான ஒரு மொழியில் உரையாடுகிறார்

ஒரு சிறு சுடரை ஏற்றிப்
பணிந்து தொழுது வணங்கத் தொடங்குகிறேன்
திரியைச் சற்று உயர்த்தி
சுடரையும் சற்றுப் பெரிதாக்கித் தொழுகிறேன்
நெய்யைக் கொஞ்சம் ஊற்றிச்
சுடரை வலுவாக்கிச் செழிப்பூட்டுகிறேன்.
ஒரு நீண்ட செந்நாக்குப்போல
சுடர் துலாவித் துலாவி எரிந்துகொண்டிருக்கிறது
ஒரு அகலை வாங்கி வந்து
பெருஞ்சுடரை ஏற்றித் தொழுகிறேன்.
நான் எரிந்துகொண்டிருப்பது
எனக்குப் போதாமல் இருக்கிறது
இப்படிப் போகும் கவிதை இவ்வாறு முடிகிறது
எரிவதற்கு முன்பாகவே
எரிந்த பின்பு மிஞ்சும்
கரிக்கட்டையைப்போல உணர்கிறேன். (ப. 18)

தனிமைக் கொடூரம் இப்படியொரு கவிதையைத் தருமானால், அந்தக் கொடுமையும் விரும்பத்தக்கதே என்றுபட்டது இதை வாசிக்கும்போது. (இரசிகமணி டி.கே.சி - யின் மகன் இறந்து, துக்கத்தில் இருக்கும்போது, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை ‘இரங்கற் கவிதை’ எழுதி டி.கே.சி-க்கு அனுப்பினாராம். அதைப் படித்து அந்தக் கவிதைச் சுவையில் மூழ்கிய டி.கே.சி ‘என் மகன் இறக்காவிட்டால்’ இப்படியொரு நல்ல கவிதை எனக்கு வாசிக்கக் கிடைத்திருக்காதே’ என்று மகிழ்ந்தாராம். என்னவொரு குரூரமான இரசனை வெறி!)

தனிமையில் எரியும் இந்த உணர்வுநிலையை, எரிந்து ஆவியாகும் தன்மையோடும் இணைகிறார்; ஆவியாகி, காற்றில் கலந்திருக்கும் ஒலியாகிவிடுகிறது உடல் அந்நிலையில் “மெல்ல எழுந்து சுழன்று நெளி யும், ஒரு நடன அசைவுபோல மென்மையான” கணத்தில் ‘ஒவ்வொரு உறுப்பின் வழியும் கிளர்ந்து எழும் அதீத இன்பத்தை’ அனுபவித்தாலும், அந்த “பேரின்பத்தைப் பொறுத்துக்கொள்ள முடியாத பலவீனனாக இருந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார். இந்த பலவீனம் மீண்டும் உடலை திருப்பிக்கொண்டு வருகிறது. ஆனால்,

“எரியும் தீயிலிருந்து விலகிவிடாதபடி 
ஒரு விறகை தள்ளிச் சேர்ப்பது போல 
என் உடலை நான் நெருக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறேன்’’ (ப - 38)

என்கிறார். இவ்வாறு தனிமையில் எரியும் இந்த மனநிலை, சுற்றியிருக்கும் எல்லாவற்றிலிருந்தும் தன்னை அந்நியமாக்கிக்கொண்டு அநியாயத்திற்கு அவலங்களில் கிடந்து வறுபடுகிறது. நிலவு, காற்று, சூரியன் கூட அந்நியமாகிவிட்ட நிலையை இப்படி எழுதுகிறார்.

போதும் என்று இருக்கிறது 
நேற்றுப் பார்த்த அதே நிலவு
இன்று பார்க்கிற அதே சூரியன்
நாளைக்கும் அதுவேதான் வரப்போகிறது
சுவாசித்த காற்றுதான்
அதை மீண்டும் சுவாசிப்பது.
எல்லோருடைய எச்சிலையும் தின்பதுபோன்றிருக்கிறது. (ப - 6)

இவ்வாறு எழுதிவிட்டு, “இல்லாதபோது தேடும் அக்கறையுள்ளவர் என ஒருவரைக்கூட மனதால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை” என்கிறார்; “யாருக்கும் பயனில்லாது போயிருக்கிற என்னை, எதைச் செய்து மதிப்புக்குரியதாக்குவது” என்று கேட்டுக்கொண்டு, “பேரிடியைப்போலக் கிளர்ந்து, உள்ளிருந்து புறம் எழும் இறப்புக்காகக் காத்திருக்கிறேன். மரண தண்டனைக் கைதியைப்போல எப்போது தூக்கிலிடப்படுவேன் எனத் தெரியாதிருக்கிறது” என முடிக்கிறார்; மற்றோர் இடத்தில்,

என்னைக் காயப்படுத்தி
ஒரு துளிக் குருதியை எடுத்துச் சுவைக்காமல்
என்னை விட்டுவிடமாட்டேன் போலிருக்கிறது. (ப - 39) 

என்பவர்,

எங்கெங்கேயோ செல்லக் கருதிவிட்டு
எனக்குள்ளேயே சுழன்று அடித்துக்கொண்டிருக்கிறேன்.
என்னை உணர உள்ள
மேலும் ஒரு நிமிடத்தை வெறியோடு விரும்புகிறேன்.
எதுவுமாக இல்லாதிருந்துகொண்டு
எதாவது அறிவதும்
எதாவதாக இருந்துகொண்டு
எதுவுமாக இல்லாததை அறிவதும் என
நான் சிதைவும் பிளவும் பட்டிருக்கிறேன். (ப - 39)

என்று முடிக்கிறார். படைப்பாளி, இப்படிப் பிளவு படுதல் குறித்து, நோபல் பரிசு பெற்ற ஓரான் பாமுக் கூறியது நினைவுக்கு வருகிறது

“ஆளுமைப் பிளவு உங்களை அறிவுக்கூர்மையுடையவராக்குகிறது… ஆளுமைப் பிளவிற்காக கவலைப்படக்கூடாது. உங்களில் ஒரு பாதி, மற்றொரு பாதியை கொலை செய்வதைப் பற்றி அதிகம் கவலைப்பட்டால் உங்களிடம் ஒரேயொரு ஆன்மா மட்டுமே மிச்சமிருக்கும்; இது வியாதி வந்திருப்பதைவிட மோசமானது” (தீராநதி, சூன்,2008, ப - 47)

இப்படிப் பிளவுண்ட மனத்திற்குள்ளிருந்து உயிர் சுமக்கும் உன்னதங்களை எடுத்துத் தருகிறார் கவிஞர்.

இதற்கு மேலும் ஒரு இழிவு இருக்கிறது என
நினைக்க முடியாதபோதும் அந்த இழிவை நாடுகிறேன்
எது அழிக்கிறது எனக் கருதுகிறேனோ
அதனிடம் என்னை காத்துக்கொள்வதற்காக வீழ்கிறேன்
எனது ஆக்கங்களை
எனக்கு நேரும்
சிறு சிறு அழிவுகளிலிருந்து உருவாக்குகிறேன்
துன்புறுத்தலையும் வலியையும் தவிர
வேறு ஒன்றை என்னால் தேடிப்போக முடியாது.
ஒவ்வொரு அங்கமாக நீ பிய்த்து உண்ணும்போது
அடைத்துக்கொண்ட மலம் வெளியேறும் நிம்மதி கிடைக்கிறது.(ப - 83)

இவ்வாறு அழிவுகளிலிருந்து உயிர்ப்படையும் கவிஞர், மற்றொரு இடத்தில்,

‘உயிரோடு இருப்பது எதற்கோ செய்யும்
ஒரு பெரும் அநியாயம் என உறுத்துகிறது’ (ப - 75)

என்கிறார். தனிமையின் உக்கிரத்திற்குள் சிக்கிக்கொண்ட ஓர் உயிரின் அத்தனை வலிகளையும் வாதைகளையும்
வார்த்தையாக்கியுள்ளார். இவ்வாறு தன்னை வாட்டுவதைக் காட்சியாக்கும் கவிஞர், வெளியே புற உறவுகளோடான உறவையும் எப்படி சிதைத்து விளையாடுகிறது தனிமை என்பதையும் அவதானித்துப் பதிவுசெய்கிறார்.

தன் மேலான வெறுப்பின் உச்சத்தில் “எந்தச் சூழலிலும் ஒதுக்கிவிடாத, நூறு சதவீதம் தன்னைத் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டிருக்கிற, தன்னை எப்போதும் வெறுத்துவிடாத, தன் அழகற்ற வடிவத்தைக் கணக்கில் கொள்ளாமல் கொள்ளை ஆசை கொள்ளும் ஒருத்தர் கனவிலாவது கிடைக்கமாட்டாரா” என ஏங்குகிறார். இப்படி ஏங்குவது தனிமையின் ஒரு குணம், அதே நேரத்தில் நீரோடை போல ஓடிக்கொண்டே இருக்கும் தீவிர மனநிலையில், உறவு என்ற பேரில் ஓரிடத்தில் எப்படி நிலைபெற முடியும்? எனவும் கேட்கிறார்.

கூடவே, தன்னோடு உறவாடும் ஒருத்தர், நாலு பேருக்கும் நல்லவராக உறவாடுவதை தாங்கிக்கொள்ள முடியாத மனத்தின் கூறையும் அடையாளம் காணுகிறார்.

பலரையும் கட்டுவதற்கான தகுதிகளை
நீ நிறைய கொண்டிருப்பது
நமக்கு இடையில்
எந்த அழுத்தமான உறவும் இல்லாமலிருக்கக் காரணமாகிறது. (ப - 63)

என்கிறார். தொடர்ந்து தனக்கும் மனிதர்களுக்கும் இடையே நடக்கும் உறவுமுறைகளின் விசித்திரங்களையெல்லாம் நுட்பமாக அவதானித்து மொழிக்குள் கொண்டுவருகிறார் :

‘என் உடலின் நெருக்கத்தை
யாரும் விரும்பியிருக்க மாட்டார்கள்’
அந்த நெருக்கம் நிகழ்ந்தபோதெல்லாம் என்னை
வேறு எதுக்காகவோ சகித்துக்கொண்டவர்களாக இருந்தால்
என்னை ஏற்றுக்கொள்ளச் செய்கிற நெருக்கடியை
யாருக்கும் உருவாக்குவது எனக்கே வலிதருகிறது. (ப - 3)

என்று எழுதும்போது,

நூறு விழுக்காடு தனிமனித வாழ்வு
வாழ்வதற்கான ஒரு சமூகம் எங்கே இருக்கிறது (ப -52)

என்ற அவர் கேள்விக்கு, அவரே பதிலாக நூறு விழுக்காடு தனிமனித வாழ்வைப் பெற்றுவிட்டாரோ என்று கருதத்தோன்றுகிறது. இதை எப்படிச் சாதித்தார்? அவரே சொல்லுகிறார்

உறவுகளுக்கான தேவையற்று இருக்க
எனக்கான வழிகளை உருவாக்கி வந்திருக்கிறேன்.
என்னுடன் பிறந்த பசுந் தாவரங்களையும்
என்னுடன் பிறந்த நான்கு கால் விலங்குகளையும்
என்னைவிட மேன்மையடைந்த பறவைகளையும்
எனக்கான உறவுகளாக்கத் தவித்துக்கொண்டிருக்கவில்லை.

என்கிறார்; மேலும்,

எதனுடனான நெருங்குதலும்
என்னைப் பகிர்ந்து எடுத்துக்கொண்டுவிடக்கூடும். (ப - 20)

என்று யார்முகம் பார்த்தாலும் ஐயத்தில் தவிக்கிறார்.

உனக்கு நானும் எனக்கு நீயும்
பயன்படப் போகும் முறையில் நம் உறவு இருக்கப்போகிறது
நட்பும் அறிதலும்
ஒரு பாசாங்கு போலத்தான் இளிக்கத் தொடங்குகின்றன. (ப - 21)

என்றுதான் அவரால் இந்த உறவுமுறைகளை புரிந்துகொள்ள முடிகிறது. “வல்லுறவு தன்னியல்பாகவும், அன்புறவு திட்டமிடப்பட்ட வன்முறையாகவும்” மாறிவிட்ட சூழலில், ‘தீமையும்’ தேவைதான் போலும் எனக் கருதுகிறார் :

கயமைகளை எதிர்கொள்வதற்கு
கொஞ்சம் நஞ்சும் வன்மமும் தேவை
சுற்றிலும் நிறைந்திருக்கிற கேடுகளால்
கருகி உதிர்ந்துவிடாமல் இருப்பதற்கு
துளி நஞ்சாகவாவது
இருந்துகொண்டுதான் இருக்கவேண்டியிருக்கிறது. (ப -61)

இவ்வாறு மனித உறவுகளின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் தன் தனிமை விசாரணை என்ற நோக்கில் நின்று மொழியாக்கிவிடுகிறார். தன்னையே தொல்லையாகக் கருதும் ஒரு மனத்திற்குச் சுற்றியுள்ள உறவுகளும்
‘பிச்சிப் புடுங்கலாகத்’ தெரிவதில் ஆச்சரியமில்லைதான். எனவே,

என்னைக் கைவிட்டுவிடுவதன் மூலமே
என்னுடையவைகளின் பிடுங்கல்களிலிருந்தும்
தொல்லைகளிலிருந்தும்
நான் விடுபட முடியும் எனத் தீர்மானிக்கிறேன்
ஒரு அனாதைக் குழந்தையைப்போல
என்னை யாருக்கும் எட்டாத ஒரு இடத்தில்
தூக்கி எறிந்துவிடுவது நிம்மதி தருவதாக இருக்கலாம். (ப - 120)

இவ்வாறு பிரதி முழுவதும், ஓர் அரண்மனைவாசி தனக்குள்ளே உரையாடி உரையாடி அரண்மனைக்கு வெளியே மாணிக்கவாசகராக மாறியது போல, இங்கே ஒரு பல்கலைக்கழகவாசியான செயராமனும், “வலிப்பு நோயால்
கடிக்கப்பட்ட பல்போல்”, ஒரு துளியையும் உள்ளே நுழைத்துவிடாமல் கண்காணித்துக்கொள்ளும் தனிமைக்குள் தன்னை தள்ளிக்கொண்டு மாணிக்க வரிகளை வானவெளியில் பறக்கவிடுகிறார்.

தனிமைக்குள் தணியாத சோகம் எங்கிருந்து ஊற்று எடுக்கிறது என்று பார்த்தால் நேற்று, இன்று, நாளை என்ற முக்காலத்தையும் இணைத்துக்கொண்டு மூர்க்கத்தோடு ஒரு சிறிதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் பேரிரைச்சலோடு அலை அலையாய் வந்த வண்ணம் இருக்கும் எண்ண ஓட்டங்களே ஆகும்.

எனவேதான் ஜே.கிருஷ்ணமூர்த்தி போன்ற தத்துவவாதிகள் எண்ணங்களிலிருந்து விடுதலை; அறிந்ததிலிருந்து விடுதலை; நினைவுகளிலிருந்து விடுதலை; கணங்களில் வாழ்தலென உரையாடுகின்றனர்.

தன்னையே அருவருப்பாகப் பாவித்து வெறுமை நெருப்பில் வறுபடும் இந்தக் கவிஞரும், எண்ணங்களில் இருந்து விடுபடலுக்கான எத்தனிப்பில் படாத பாடுபடுகிறார்.

தன்னைத் தானே துன்புறுத்தியும் தன்னைத் தானே நிராகரித்தும்
எதிலும் மன அமைதி இல்லாமல் இருக்கிறது.
…. …. …. ….
ஓட்டம் எடுப்பதா, நிற்பதா
புதைந்து போவதா, சிதைந்து போவதா
ஒன்றும் செய்யமுடியாது மயங்கி விழுகிறேன்
ஒரு விலங்காக உருமாறி
காட்டுக்குள் ஓடி எண்ணங்களிடமிருந்து தப்பிக்க நினைக்கிறேன். (ப - 113)

என்றெழுதுகிறார்;

எண்ணங்களே இல்லாமல் மன நோயாளியாய் மாற விரும்புகிறார்; ‘என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்யத் தெரிந்த ஒரு கருவியாகிவிடத்தான் விரும்புகிறேன்’ (ப - 41) என்கிறார்.

மேலும்,

நட்டுவைத்த ஒரு கல்லைப்போல
இயல்பாய் இருந்துகொண்டிருக்கிற ஒரு பாறை போல
அப்படிக் கிடந்துகொண்டிருக்கலாம் போலிருக்கிறது
எங்கேயும் போகவேண்டாம் என்றும்
யாரையும் போய் பார்க்கவேண்டாம் என்றும் இருக்கிறது
இருந்துகொண்டிருக்கவேண்டுமா என்ற கேள்வி
எண்ணங்கள் இல்லாமல் போய்விடட்டும் என்ற ஒரு கருத்து
தன்னியல்பில் உருவாகிக்கொண்டிருக்கிறது. (ப - 40)

என்கிறார்;

‘கடந்த கால உழைப்பு, சேமிப்பு, உறவு, உடைமை, நினைவு என எல்லாவற்றையும் இழக்க விரும்புகிறேன்’ (ப - 98) என்கிறார். ‘சும்மா இருக்கும் மனம், சாத்தானின் விளையாட்டு மைதானம்’ என்று பைபிளில் வரும்; அந்தச் சாத்தான் வேறு யாருமல்ல; இந்த எண்ணம்தான்; இது தனிமையில் மாட்டிக்கொண்ட யாரையும் என்ன செய்யும், ஏது செய்யுமென்று யார்தான் கணித்துவிட முடியும்? சாத்தான்களின் கைதான் எப்பொழுதும் ஓங்கியபடி நிற்கிறது; பாவம், இந்த மனிதஜீவிகள்.

‘இருளின் குரல்’ என்ற இந்த கவிதைத் தொகுப்பிற்கு, “புறவுரை” என்று இரண்டு பக்கம் தொடக்கத்தில் எழுதியுள்ளார். அதில் எழுதுகிறார்

“உடலின் மைய உணர்வு அதிகாரமா, காமமா என்பது கேள்வி.. காமம் தன்னை ஒத்த உடல்களை உருவாக்குகிறது. அதிகாரம் தன்னை ஒத்த உடல்களை தனது எல்லைக்குள் கொண்டுவருகிறது. இரண்டும் அதிகாரமாக இருக்கின்றன… இரண்டுக்கும் உடல்கள் தேவை… இறையருள் ஒரு புணர்ச்சியாக உடலில் வழிந்தோட ஏங்குகிறது. மனிதச் சேர்க்கை சிற்றின்பமாகிவிடுகிறது. விந்து கழிவுப்பொருளாகிவிடுமா. அதுவே பேரருளின் ஐக்கியத்திற்கான பயணத்தில் ஊர்தியாக இருக்கிறது. ஆனால் கண் இமைகளில் தெரியும் அன்புக்கான ஏக்கத்துடன் திரிவது ஒரு அவலம்; தெருநாயைப்போலத் தன் இயல்பு இழந்து யார் பின்பும் போக அது காத்துக்கொண்டிருக்கிறது. திரிந்து கொண்டிருக்கிறது.”

கவிதைக்கு வெளியே வெளிப்படும் இந்த தற்கூற்றில் ஓஷோ போல காமத்தை இறையெனும் பேரின்ப அனுபவத்தோடு இணைத்துப் பார்ப்பதாகத் தெரிகிறது. ஆனால் உடலெனும் அற்புதத்திலிருந்து உற்பத்தியாகும் அதிகபட்ச சுவையான காமத்தை, மனித சமூகம் எதிர்கொள்ளும் முறைமை சொல்லும் தரத்தில் இல்லை என்கிறார். அதற்காகத் தனது ஒற்றை உடலை மட்டும் கொண்டு இந்தக் கடலைக் கடப்பது
என்பதும் அவ்வளவு எளிதாக இல்லை என்பதைதான் இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் பலவும் பலவாறு பேசுகின்றன எனத் தோன்றுகிறது.

தனிமையோடு இரவு நேரமும் சேர்ந்துகொண்டால் மனிதத் தன்னிலைகளைத் துவட்டி எடுக்கும் இந்தக் காமமெனும் அடங்காப் பேரிச்சை படுத்தும் பாட்டை, உலகக் கலை இலக்கியங்கள் பலவும் பதிவு செய்துகொண்டேதான் வருகின்றன; ‘நான் படும் இந்த காமநோயைப் பற்றிப் பொருட்படுத்தாமல் ஊர் தூங்கும் இந்த இரவில், முட்டுவென் கொல், தாக்குவென்கொல் ஆ! ஒல்! எனக் கூவுவேன் கொல்!’ எனத் துடிக்கிறாள் சங்க இலக்கியப் பெண் ஒருத்தி (ஔவையார், குறுந். பா 28); இடைக்காலத்து ஆண்டாள் “கோவர்த்தனைக் கண்டக்கால், கொள்ளும் பயனொன்றில்லாக் கொங்கை தன்னைக் கிழங்கொடும் அள்ளிப்பறித்திட்டு அவன் மார்பில் எறிந்தென் அழலைத் தீர்வேனோ” - என்கிறாள். டால்ஸ்டாயின் கதைமாந்தர் (துறவியின் மரணம்) ஒருவர், பெருக்கெடுத்துக் கண்ணை மறைக்க முயலும் காம உணர்வைத் திசை திருப்பிவிடும் பொருட்டு, விரலை வெட்டி இரத்தம் பீச்சிடச் செய்யும் காட்சியைப் பார்க்கிறோம், கத்தோலிக்கப் பாதிரியாகப் பயிற்சி எடுக்கச் சேர்ந்த வாலிப உள்ளங்கள் எண்ணத்தாலும் காமம் தொட்டுத் தன்னை கர்த்தரின் விசுவாசத்தில் இருந்து விலக்கிவிட எத்தனிக்கிறதே என்று, சாப்பிடப்பயன்படும் முள் கரண்டியால் தொடைகளில் குத்தி இரத்தம் பீச்சிடச் செய்வதன் மூலம் தன் தூய்மையைக் காப்பாற்றிக் கொள்ளும் கதைகளையும் கேள்விப்படுகிறோம். இந்தக் கவிஞர், இந்தத் தொகுப்பு முழுக்க, தனி உடலாய் சிக்கிக்கொண்ட தன்னைப் பாடாய்ப்படுத்தும் காம உணர்வின் திருவிளையாடல்களைத்தான் கவிதையாக்கிப் பார்க்கிறார். அரிஸ்டாட்டில் கூறியது போல, இலக்கியம் இங்கே கலங்கும் மனத்தை தூய்மைப்படுத்தப் பயன்படுகிறது. கவிதைப் படைப்பினால் உறுப்பை வெட்டித் தூர எறிவதில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்.

என் உடலும் நானும் தனித்திருக்கிற
இந்த அந்தகாரக் குகையில்
காமத்தை உண்டு காமத்தையே சுவாசித்து
காமத்தையே கண்டு காமத்தையே தொட்டு
வேறு எதுவும் தெரியாதிருக்கிறேன்
என்னை வேட்டையாட வெறியோடு அலையும்
அதன்முன் என்னைப் பலியிட்டு அமைதியடைகிறேன். (ப - 30)

என்கிறார்; ஆனால் அமைதி அடைய முடிந்ததா என்றால் இல்லை.

ஒரு புற்றுநோயைப்போலக்
காமம் என் உடல் எங்கும் பரவியிருக்கிறது
… … …
என்ன பேசினாலும் என்ன செய்தாலும்
வேறு எதிலும் ஈடுபட முடியாதபடி
என் உடல் காமத்தால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறது. (ப -16)
இப்படி வீழ்த்துகிற அதே காமம்தான் உயிர்ப்பு தருகிற ஒன்றாகவும் மாறுகிறது.
எதையும் பார்க்க முடியாததும்
தன்னை மறுதலிக்கிறதுமான ஒரு மனச்சோர்வு வரும்போது
மூலாதார நெருப்பு என காமம்தான் கிளர்ந்தெழுகிறது.இறப்பு எனும் பெரும் சவக்குழிக்குள்
விழுந்துகொண்டிருப்பதாக உணரும்போதும்
நான் என் காமத்தால் ஏந்தி மேலே கொண்டுவரப்படுகிறேன்.(ப - 46)

என்று காமத்தைக் கரையேற்றும் பேரருளாகப் பார்க்கிறார்; மேலும் “காமம் அற்று இருப்பது பெரிய விடுதலை” என்றாலும், அற்று இருக்க இயலாதே! என்ன செய்வது? காமமே காமத்தை அகற்றும் வழி என உணர்ந்து சரணடைந்துவிடுவதே வழி என்கிறார். ஆனால் “சலனப்படுத்தும் காமத்தை, சமநிலைப்படுத்தும் ஒரு உணர்வு கண்டுபிடிக்கப்படவில்லை; முயன்று விரைந்து எழும்போதெல்லாம், அது என்னை பக்கவாட்டில் திருப்பிவிடுகிறது; அல்லது ஒரு புழுவைப்போலக்கிடத்திவிடுகிறது” (ப - 44) என்கிறார்; இது மட்டுமா?

நஞ்சு சுரக்கும்போதெல்லாம்
அதைக் கக்காமல்
படிப்படியாக விழுங்கி துவண்டுபோகிறேன்.
யாரையும் என் வெறிக்கு இரையாக்காமல்
அது தின்ன என்னையே காவு கொடுக்கிறேன். (ப -75)

என்கிறார்; நாற்பது விழுக்காட்டு மனிதர்கள் தனி உடம்பாகவே வாழ்ந்து தீர்க்கும் பணக்கார மேலை நாடுகளில், இந்த அளவிற்கு இந்தக் காமம் படுத்துமா என்பது தெரியவில்லை; இங்குள்ள பண்பாட்டுப் பின்புலம் ஈவு இரக்கமற்றது; இளகும் தன்மையை இழந்தது. எனவே இத்தகைய கவிதைகள்தான் காப்பாற்றக் கைகொடுக்கின்றன போலும்:

இவ்வாறு காமத்தை ஒடுக்குவது தன்னையே தின்னக் கொடுப்பது என்பதை உணர்ந்த நிலையில், காமத்தால் கண்டு அடையும் உடல் புணர்ச்சி என்பது ‘ஒரு தவம்’ என கண்டுகொள்கிறார்.

வேறு எதையும் விட விலை மிகுந்தது என்ற போதும்
உடல்கள் ஒரு மருந்தாகப் பொருந்துகின்றன
… … …
உடல் எங்கும் படர்ந்து கிடக்கையில்
நான் எனது எல்லாவிதமான
நடுக்கங்களிலிருந்தும் மீட்சிபெறுகிறேன்.
பிதற்றல்களில் எல்லாவிதமான
அழுத்தமும் நெருடலும் கரைந்துவிடுகின்றன
புணர்ச்சியே ஒரு தவமாக இருக்கிறது
தசைகளின் தொடுதலில் மென்மையும்
மேனியிலிருந்து கிளர்ந்து எழும் மணமும்
துளிர்க்கும் வியர்வையின் சுவையும்
சிதறிக் கிடக்கிற என்னை
ஒரு மையத்திற்குள் ஈர்த்துக் குவிக்கின்றன
வேறு எந்த ஒரு இசையை விடவும்
உடல்கள் உராயும் ஓசை
மனம் ஒன்றிக் கேட்கத் தக்கதாயிருக்கிறது. (ப - 128)

இவ்வாறு காமத்தை, வாழ்வைக் கடந்து விடுதலை அடைவதற்கான ஒரு நெறிமுறையாகக் கண்டுகொள்ளும்போது, மனதில் உடல்கள் எதுவும் இல்லை

அங்கும் ஒரு ஒலி இசையாகக் கேட்டுக்கொண்டேயிருக்கிறது
அது மனதில் அன்புகளாகத்தான் இருக்கிறது (ப - 124)

இவ்வாறு இறுதியில் ‘இங்கே உங்களுக்கு வேலை, அன்பு செய்தல்தான் கண்டீர்’ என முடிக்கும்போது அவரது ஒற்றை உடல் வாழ்க்கை, அவருக்குள் ஒளியேற்றித்தான் இருக்கிறது எனக் கண்டுகொள்கிறோம். அதனால்தான் “நான் எரிந்துகொண்டிருப்பது, எனக்கு போதாமல் இருக்கிறது” என்று எழுதியவர் தொடர்ந்து,

மேலும் பெரிதாக
உயர்ந்து அகன்று எரிய ஆவலாக இருக்கிறேன்.
இருள் சூழ்ந்த நிலத்திற்கு
ஒளிதரும் பெருந்தீயாக
தொலைவு தெரியாத பெருவெளிக்கு
ஒளிதரும் பெருங்கோளமாக எரிய ஆவலாக இருக்கிறேன். (ப - 18)

என்ற நிலையை எட்ட முடிந்திருக்கிறது. செயராமன், வாழ்வு தனக்கு விதித்த தன் தனிமைச் சேற்றை, நீருற்றி கால்களால் மிதித்துப் பிசைந்து சக்கரத்தில் வைத்து உருட்டி அற்புதமான ஒரு கொள்கலமாக வடிவமைத்துவிட்டார்; அந்தக் கொள்கலன் முழுக்கப் பிரகாசிக்கும் கவிதைகள் பொங்கி வழிகின்றன. தனித்துவமான இந்தக் கவிதைகள் தமிழுக்குப் புதுவரவு. இவை நிறையப் பேசப்படவேண்டும். பார்ப்போம்.


நூல் விவரம் : ரா. செயராமன், இருளின் குரல், (2016) சிற்றேடு,
பெங்களூர் - 85. பக் - 134. விலை : 110.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *